நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 12


தன் கழுத்தை உரசியபடி நின்ற கத்தியை கண்டு தன் நடையை நிறுத்தினாள் சக்தி. அவளின் பின்னாலிருந்து நகர்ந்து வெளிச்சத்தில் வந்து நின்ற உருவத்தை கண்டதும் சக்திக்கு ஒரு நொடி மூச்சி நின்றது போலிருந்தது.

"மூ...மூர்த்தி.." சக்தியின் குரலில் பதட்டம் தெரிந்தது.

அவளது கழுத்தில் கத்தி சற்று அழுந்தவும் கத்தி பட்ட இடத்திலிருந்து கசிந்தது ரத்தம். "ஸ்ஸ்.." வலியோடு கூடிய எரிச்சலில் தன்னையும் மீறி முனகினாள்.

"என் பேரை சொல்லுற அளவுக்கு தைரியம் வந்துருச்சா உனக்கு..? எப்படி இருபது வருசமா என் மச்சான் பின்னாடி வராம இருந்துயோ அப்படியே இருக்க வேண்டியதுதானே..? உனக்கு இப்ப மறுபடியும் எதுக்குடி இந்த வேண்டாத சேர்க்கை.."

"நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நானும் மகேஷூம் விலகிதான் இருக்கோம்..." என்றவள் கத்தி மீண்டும் அழுத்தத்தோடு பதியவும் உதட்டை கடித்து வலியை கட்டுப்படுத்தினாள்.

"விலகி இருக்கறவங்க ஒன்னு சேர்ந்து மாஞ்செடி நடக்கூடாது. ஒன்னா ஓட்டலுக்கு போய் சேர்ந்து சாப்பிட கூடாது..."

"அதெல்லாம் ஒரு ஆக்ஸிடென்ட் மாதிரி..."

"என்னடி கதை விடுற..? அன்னைக்கு என் கையிலிருந்து உயிர் பிழைச்சிட்டா இன்னைக்கும் அதே மாதிரி உயிரோடு விட்டுருவேன்னு நினைக்கிறியா..?"

சக்திக்கு பழைய நினைவுகள் வந்து பயத்தை தந்தன. அதை விட அதிகமாக கோபம் வந்தது.

"நான் இன்னும் அதே பழைய சக்தி கிடையாது. உன் இஷ்டத்துக்கு ஈஸியா என் கழுத்தையும் அறுத்தர முடியாது... நான் இப்போ போலிஸ் இன்ஸ்பெக்டர்... என்னை கொல்லவும் உன்னால முடியாது. கொன்னுட்டா தப்பிச்சிடவும் முடியாது.."

"நீ போலிஸ்ன்னா உனக்கு என் மச்சான் மட்டும்தான்டி பயப்படுவான்... நீ போலிஸ் மட்டுமல்ல கலெக்டராவே ஆனாலும் எங்க சாதி மரியாதை உனக்கு கிடைக்காது... நீ என் கால் தூசுக்கு சமம்..." சக்திக்கு கோபத்தில் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. அவனது கையை பற்றி மடக்கி அவன் கையிலிருந்த கத்தியை அவனது கழுத்துக்கு குறி வைத்து அழுத்தினாள்.

"நான் பழைய சக்தி இல்ல இது முதல் விசயம்.. நான் என் நேசத்தை மனசுக்குள்ளயே வச்சி மறைச்சிகிட்டு அவன் முன்னாடி வெறுப்பா நடந்துக்கறதுக்கு காரணம் உன் மிரட்டல் இல்ல.. அவனோட அம்மாவோட கண்ணீருக்காக... இது இரண்டாவது விசயம்.. மூணாவதாவும் ஒன்னு இருக்கு... எனக்கு சாதி மரியாதை தேவை கிடையாது... எனக்கு நான் என் சொந்த முயற்சியால வந்து சேர்ந்த இந்த வேலை தர மரியாதை போதும்... இதுக்கும் மேலயும் உன் வெட்டி மிரட்டலுக்கு பயப்படுவேன்னு நினைக்காத..." அவன் கழுத்திலிருந்து கத்தியை எடுத்தாள்.

"நீங்க கீழ்சாதின்னு சொல்ற நாங்கதான்டா உழைக்கும் வர்க்கம்... இந்த நாட்டுல உழைப்பு இல்லன்னா எவனுமே சுய மரியாதையோடு வாழமுடியாது... இன்னைக்கு இந்த கீழ்சாதிகாரி உனக்கு உயிர் பிச்சை தரேன்... பொழைச்சி போ..." அவனை விட்டு விலகி நடந்த சக்தியின் மனம் புயல் அடித்து ஓய்ந்தது போல சலனமற்று இருந்தது.

சக்தி அவளது வீடு நோக்கி நடக்க மூர்த்தி என்ன செய்வதென தெரியாமல் அருகிலிருந்த வீடுகளின் சந்து ஒன்றில் மறைந்து போனான்.

வீட்டின் திண்ணையிலேயே காத்திருந்தார் சக்தியின் அப்பா. இவளை கண்டதும் வாசலுக்கு எழுந்து வந்தார்.
"ஏம்மா இவ்வளவு நேரம்..?" அருகில் வந்தவரின் முகம் இருளடைந்தது போல இருந்தது.

"கழுத்துல என்னம்மா வெட்டுக்காயம்..?" அவரின் குரலில் இருந்த திகிலை கண்டு பெருமூச்சு விட்டவள் தன் உள்ளங்கையை கழுத்திலிருந்த வெட்டுக்காயத்தின் மீது அழுத்தினாள்.

"வழிபறி ஒருத்தன வர வழியில கவனிக்க வேண்டியதா போச்சி... இது சின்ன காயம்தான்... சீக்கிரம் ஆறிடும்.."

"பார்த்து பத்திரமா நடந்துக்கம்மா.." அவர் தன் கட்டிலை தட்டி விட்டு தலை சாய்ந்தார்.

"இனியன் உங்ககிட்ட பேசுறேன்னாம்ப்பா..." செல்போனை அவரிடம் கொடுத்துவிட்டு தன் காயத்திற்கு மருந்து வைக்க சென்றாள்.

கண்ணாடியின் பிம்பத்தில் தெரிந்த தன் முகத்தில் சிறு கர்வம் தோன்றியதை அவளால் மறைக்க முடியவில்லை. தன்னால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு புது தெம்பை தந்தது.

மகேஷ் வீட்டிற்கு வந்தபோது அவனின் கண்கள் முதலில் தேடியது சந்தியாவைதான். "சந்தியா.." இவனது குரலுக்கு தனது அறையிலிருந்து ஓடி வந்தாள் அவள்.

"என்ன மாமா..?"

"என் ரூமுக்கு வா.." அவள் அறைக்குள் வந்ததும் அவளை அமர சொல்லி சைகை காட்டினான்.

"சக்தியை பத்தி உனக்கெப்படி தெரியும்..?"

சந்தியாவிற்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. அவளுடன் ஒன்றாக படிக்கும் ரகு வெகுநாட்களாக அவளை ஒருதலையாக காதலிப்பதாக கூறி அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு அவள் தனிபாதை ஒன்றில் தன்னந்தனியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது அவளை பின்னாலிருந்து பின்தொடர்ந்து வந்தான் அவன். எதிர்பார்க்காத நேரத்தில் சந்தியாவின் கையை பற்றி விட்டான் ரகு. அவள் என்ன செய்வதென தெரியாமல் குழம்பி பயந்து நின்ற நேரத்தில் அங்கு எதேச்சையாக வந்தாள் சக்தி.

சக்தியை கண்டு ரகு ஓடி விட்டான். ஆனால் சக்தி 'பெண்பிள்ளை தனியாக செல்லக் கூடாது' என சொல்லி அவளை ஊர் வரை வந்து விட்டுச் சென்றாள்‌. அப்படிதான் அவளுக்கு சக்தியை பற்றி தெரியும். சக்தி யாருடனோ போனில் பேசியதை கேட்ட பிறகுதான் சாமிநாதனுக்கும் தன் மாமாவிற்கும் ஏதோ தொடர்பு இருப்பது அவளுக்கு தெரியும். ரகுவை பற்றி சொன்னால் என்ன நடக்குமென சந்தியா அறிவாள். ரகுவிற்கு இருக்கும் சிறு சலனத்திற்காக அவனை தன் மாமாவிடம் பலிக் கொடுக்க அவள் விரும்பவில்லை.
"அன்னைக்கு ஒரு நாள் நான் தனியா நடந்து வந்துட்டு இருந்த போது அவங்கள பார்த்தேன். துணைக்கு ஊர் எல்லை வரைக்கும் வந்தாங்க... அவங்க ஃபோன் பேசிட்டிருந்தத கேட்டதாலதான் சாமிநாதன் சித்தப்பா பத்தி எனக்கு தெரியும்.." மகேஷ் யோசனையோடு நெற்றியை தேய்த்தான்.

"சக்திக்கு நீ யாருன்னு தெரியுமா..?"

"ம் தெரியும்.. என் பேர் கேட்டாங்க சொன்னேன்.." இது அவன் எதிர்பார்த்த பதில் இல்லை.

"நான் உன் மாமான்னு அவளுக்கு தெரியுமா..?"

"ம்கூம்.." என் தலையசைத்தாள். "அவ இவன்னு சொல்லுறிங்க அவங்கள... அவங்க போலிஸ் இன்ஸ்பெக்டர்..."

'அவ மத்தவங்களுக்கு மட்டும்தான் போலிஸ் இன்ஸ்பெக்டர். எனக்கு இல்ல.‌' என் நினைத்துக் கொண்டான்.

"சரி அப்படின்னா நீ தூங்க போ.."

ம்மா அந்த என்னவள் சக்தி மேடமா..?" காலையில் அவன் போனில் என்னவள் என்ற வார்த்தையை பார்த்ததிலிருந்தே அவளுக்குள் பல சந்தேகம். இன்று முழுக்க தன்னுடன் படிப்பவர்களோடு விசாரணை நடத்தி தன் மாமாவிற்கும் சக்திக்கும் இடையில் இருந்த காதல் கதையை அறிந்துக் கொண்டாள். ஆனாலும் அதை தன் மாமா வாய் வார்த்தையாக கேட்டுக் கொண்டால் ஒரு மன திருத்தியடைவாள்.

"ஆமா... ஏன்..?" என்றவனை முறைத்தாள்.

"என்கிட்ட ஏன் இவ்வளவு நாளா சொல்லவே இல்லை..?" சந்தியாவை கேள்வியாக பார்த்தான்.

"ஏன் சொல்லனும்..? நீயே ஒரு நண்டு... உனக்கெதுக்கு பெரியவங்க விசயம்..?" மகேஷின் தோளில் செல்லமாக அடித்தாள் சந்தியா.

"நான் நண்டு இல்ல... பெரிய பொண்ணு... நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா இன்னேரம் உங்களை நான் சேர்த்து வச்சிருப்பேன்..." அவளின் காதை பிடித்து திருகினான் அவன்.

"எத்தனை காதல் ஜோடியை நான் கொன்னிருக்கேன் தெரியுமா..? என்னாலயே அவளை கட்டுக்கு கொண்டு வர முடியல... நீ என்ன பெரிய பருப்பா..?" சந்தியாவின் முகம் இருளடைந்தது.

"நீங்க காதல்ல சேர் முடியலன்னு இருக்கற காதலர்களையும் கொல்லுறிங்க... நீங்க ரொம்ப கெட்டவங்க..."

அவள் திட்டி விட்டு செல்ல அவன் தன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கியப்படியே கட்டிலில் விழுந்தான்.
மகேஷை உறக்கம் தழுவிய நேரத்தில் வீட்டின் காலிங்பெல் ஒலித்தது‌. அதை கண்டுக் கொள்ளாமல் தூங்க முயன்றவன் சில நிமிடங்கள் கழித்து தனது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு சலிப்போடு எழுந்தமர்ந்தான்.
"உன்னை பார்க்க வந்திருக்காங்க.." என்று உள்ளே வந்தாள் அம்மா.

"என் ரூம்க்குள்ள வராதிங்கன்னு எத்தனை முறை சொல்றது..?" என கேட்டபடி தன் அம்மாவை தாண்டி சென்றான்.

ஹாலில் கண்ணீரோடு நின்றுக் கொண்டிருந்த வாலிப பெண்ணொருத்தி இவனை கண்டதும் அருகில் வந்தாள். "காலேஜ் போன என் தம்பி அருண் இன்னும் வீட்டுக்கு வந்து சேரல... அவனோடு கூட படிக்கிற பசங்கள கேட்டபோது அவனை சிலர் கடத்திட்டு போயிட்டாங்கன்னு சொல்றாங்க.‌‌.. என்ன பண்றதுன்னே தெரியல.. தயவு செஞ்சு அவனை காப்பாத்துங்களேன்..." முழு மூச்சில் கூறி விட்டு கண்ணீர் விட்டவளை கண்டதும் மொத்த தூக்க கலக்கமும் மறைந்து விட்டது மகேஷிற்கு.

அவளது நிலைமை அவனுக்கு நன்றாகவே புரிந்தது. "உன் தம்பியோட பிரண்ட்ஸ் ஃபோன் நம்பரை சொல்லு..." அவள் சொன்ன எண்ணுக்கு உடனடியாக அழைத்தான்.

"ஹலோ.. யார் பேசுவது..?"

"நான் மகேஷ்வரன் பேசுறன்‌... உன் பிரெண்ட் அருணை யார் கடத்திட்டு போனாங்கன்னு சொல்லு..." எதிர் முனையில் வெகு நேர தயக்கத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தான் அவன்.

"எ... எனக்கு தெரியாது..." அவன் மட்டும் நேரில் இருந்திருந்தால் அவனது பொடனியிலேயே இரண்டு போட்டிருப்பான் மகேஷ்.

"தூக்க கலக்கம் இல்லாம முதல் ரிங்க்லயே ஃபோன் எடுத்திருக்கியே அப்பவே தெரியும் நீயும் உன் பிரெண்டை நினைச்சி தூங்காம இருக்கன்னு.. அவனை காப்பாத்த நினைச்சா உண்மையை சொல்லு.."

"அது... அது.. இன்னைக்கு ஸ்டேட் லெவல்ல நடந்த வாலிபால் மேட்ச்ல எங்க காலேஜ்லயிருந்து கலந்துக்கிட்ட அருண் டீம் தோத்துடுச்சி.. அவன் மேலயும் டீம் மேலயும் பெட் கட்டியிருந்த சீனியர் பசங்க டீம் தோத்த கோபத்துல அருணை அடிச்சி இழுத்து கூட்டிட்டு போயிட்டாங்க..."

"அவங்க அவனை கூட்டிட்டு போன இடம் எதுன்னு தெரியுமா..?" தயங்கியபடி அவன் இடத்தை கூற மகேஷ் அழைப்பை துண்டித்தான். அந்த பெண்ணை அழைத்து கொண்டு அவன் அங்கு சென்றபோது மணி ஒன்றை தாண்டியிருந்தது.

வேலி போட்டிருந்த தென்னந்தோப்பின் இடையே வெளிச்சத்தை கண்டு காரிலிருந்து கீழே இறக்கினான் மகேஷ்.

"நீ இங்கேயே இரும்மா..." வேலிகளின் இடையே தெரிந்த கேட்டை தள்ளி உள்ளே நுழைந்தான்.

"என்னை விட்டுடுங்கடா... ப்ளீஸ்.." உடம்பெல்லாம் ரத்த காயத்தோடு கெஞ்சிய அருணின் முகத்தில் குத்து விட்டான் அருகிலிருந்த ஒருவன்.

"அவனை விட்டுட்டு இங்க வாடா மச்சி.. இல்லன்னா உன் சரக்கு எல்லாத்தையும் முகிலே அடிச்சிடுவான்.." அருணின் சீனியர்கள் ஐந்து பேர் வட்டமாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

"இருடா கொஞ்சம்... இந்த நாயை நம்பி நான் அந்த ராகவ்கிட்ட என் மொத்த காசையும் பெட் கட்டியிருந்தேன்... இவனால் எனக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா..? இந்த பொறம்போக்கு தோத்து போனதும் இல்லாம நாம இவன் மேல பெட் கட்டியதை பத்தி பிரின்சிபால்கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கு... இவனை இப்படியே விட்டா நம்ம கெத்து என்னாகும்..?"

"இது ஒரு சாதாரண கேம்... இதுக்கெல்லாம் எதுக்குடா என் மேல பெட்டை கட்டுறிங்க...? நீங்க குடிப்போதையில பெட் கட்டி விளையாட என்னை ஏன்டா யூஸ் பண்றிங்க..?" கோபத்தோடு கேட்டான் அருண்.

"அது சாதாரண கேம்தானே... அப்புறம் என்னதுக்குடா தோத்த..?" என எரிந்து விழுந்தபடியே அருணின் காலுக்கு உதை விட்டான் அவன். அருண் வலி பொறுக்காமல் கத்தவும் மீண்டும் காலிலேயே உதைத்தான்.

"ரொம்ப தப்பு பண்றிங்க..." மகேஷின் குரல் கேட்டு மொத்த பேரும் திரும்பி பார்த்தனர்.

சக்தியோடு தைரியம் உங்களுக்கு பிடிச்சிருக்கா..?

கதை பிடித்திருந்தால் மறக்காமல் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க.

எனது மற்றொரு நாவலான கை பிடித்த கண்ணாலா நாவலை படிக்க தவறாதீர்கள் நண்பர்களே...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top