சுவாசம் - 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 11

ஆண்கள் எப்போதுமே அடிமை தான்!
ஆனால் எங்கே அதிகாரம் இல்லாமல்
அன்பும் அரவணைப்பும் இருக்கோ
அங்கே மட்டும் தான்…!

அதன் பிறகு வந்த நாட்களில் கணவன் மனைவி இருவரும் தன் வீம்புகளைக் கை விட்டு

“பாப்பாவுக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு? குழந்தைக்கு மூன்று மாதம் தான் ஆகிடுச்சே பாலைத் தவிர வேற ஆகாரம் தரலாமா…. என் டாக்டர் பிரண்ட் ஒருத்தி வெளிநாட்டுல கான்ஃபிரன்ஸ் முடிச்சி வந்துட்டா. நீயும் பாப்பாவும் ரெடியா இருங்க நான் வந்து அவளோட ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போறேன்” என்று இப்படியான உரையாடல் சிற்பியிடமும்

“இந்த மருந்த கொடுத்தும் வாந்தி நிற்கலனா டாக்டர் திரும்ப பாப்பாவ அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. நீங்க வந்து கூட்டிட்டுப் போறீங்களா?.. கொஞ்ச நேரம் பாப்பாவப் பார்த்துக்கங்க நான் குளிச்சிட்டு வந்திடறேன்..” இதுபோன்ற வார்த்தைகளை ரதியும் பரிமாறிக் கொண்டாள்.

இப்படி பேசுவதால் எல்லாம் ரதி பழசை மறந்து சிற்பியுடன் ஒன்றி வாழ நினைத்து விட்டாள் என்பது கிடையாது. அவளுக்கு இன்னமுமே கோபம் வெறுப்பு ஆத்திரம் எல்லாம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் என்ன செய்ய தன் தந்தைக்காவும் தன் மகளுக்காகவும் அவள் வாழ்ந்து தானே ஆகணும்?

அப்போதும் குழந்தையின் உடல் நிலை சரியான பிறகு தானும் மகளும் யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் வாழத்தான் நினைத்தாள். ஆனால் அப்படி அவள் எண்ணத்தையே தவிடு பொடியாக்கியது கூடப்பிறந்த தங்கையான அறிவுமதியின் வாழ்க்கை.

ஒரு நாள் மகள் தூங்கியதும் இவள் ஏதோ வேலையில் இருந்த நேரம் மணிமாறன் என்பவன் அவளைப் பார்க்க வந்திருப்பதாக சிற்பியின் மாமா சொல்ல ‘யார் இவர்?’ என்ற எண்ணத்தில் ரதி அவனை வரவேற்கவும், வந்தவனே

“என் பெயர் மணிமாறன். சொந்த ஊர் சேலம் அங்க ஒரு தனியார் ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி வாத்தியாரா இருக்கேன். வயசு 26 அப்பா அம்மா இல்ல. என்ன வளர்த்தது பாட்டி தான். எனக்குக் கூடப் பிறந்தவங்களும் இல்ல. இன்னும் கொஞ்ச நாள்ள ஒரு காலேஜில என் திறமைய வச்சி எனக்கு லெக்சரர் போஸ்ட் கிடைக்கப் போகுது. நாங்க நடுத்தரக் குடும்பம் தான். ரொம்ப வசதி எல்லாம் இல்ல..” என்று அவன் ரதி வந்ததும் அவள் கேள்வி கேட்க இடமே கொடுக்காமல் சொல்லிக் கொண்டே போக

“இதையெல்லாம் ஏன் முன்னப் பின்னத் தெரியாத என்கிட்ட சொல்றீங்க?”

“என்ன உங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா உங்க தங்கை அறிவுமதிக்கு என்னைத் தெரியும்” என்று வந்தவன் நேர்கொண்ட பார்வையில் சொல்லவும் அவன் பொய்யுரைக்கவில்லை என்பதை உணர்ந்தவள்

“ஓ…. அப்படியா? இங்க உட்காருங்க. என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க? அறிவு எதாவது சொல்லி அனுப்பினாளா? என்ன சாப்பிடுறீங்க?” என்று இப்போது ரதி வந்தவனைப் பேச விடாமல் உபசரிக்க

“எனக்கு எதுவும் சாப்பிட வேணாங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். நான் சொல்றத கேட்டு நீங்க எப்படி எடுத்துக்குவீங்கனு தான் தெரியல…” என்று இவ்வளவு நேரம் இல்லாமல் இப்போது அவன் தடுமாற

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க…”

நானும் உங்க தங்கை மதியும் ஒரே காலேஜ்ல தான் படிப்ப முடிச்சோம். ஆனா நான் முன்னாள் மாணவன். எங்க காலேஜிலேயே படிச்சி இப்ப லெக்சரர் ஆகப் போறேன்றதால என்னை அந்த காலேஜ்ல அடிக்கடி ஸ்பீச் குடுக்கறதுக்காக கூப்பிடுவாங்க. அப்ப தான் உங்க தங்கை மதி எனக்குப் பழக்கமானா. அதிகம் பேசாத அவள எனக்குப் பிடிச்சிருந்தது. என் காதலை அவகிட்ட நாகரீகமா சொன்னேன். முன்னாடி மறுத்தவ பிறகு அந்தஸ்து பேதம் பார்த்து பயந்தா. அதனால நான் அவள தொந்தரவு பண்ணல. அப்புறம் என் உண்மையான காதலப் பார்த்து அவளும் என்ன காதலிக்க ஆரம்பிச்சா...” இதை கேட்கும் போதே ரதி சற்று துணுக்கிடவும், அதைப் பார்த்து

“நாங்க காதலிச்சோமே தவிர வரம்பு மீறி நடந்துக்கலங்க” என்று அதே நேர்பார்வையில் சொல்லியவன் தொடர்ந்து “உங்களுக்குத் திருமணம் முடிந்ததும் எங்க விஷயமா உங்க வீட்டுல வந்து பேசறேனு மதி கிட்ட சொல்லி இருந்தன். ஏன்னா என் பாட்டிகிட்ட முன்பே எங்க காதல சொல்லி சம்மதம் வாங்கி இருந்தோம். அவங்களுக்கு முழுசா சம்மதம் இல்ல தான். அந்தஸ்து பேதத்த விட ஜாதிய வச்சி தான் முதல்ல அவங்க மறுத்தாங்க. அதுவும் மதிய பார்க்கற வரை தான். பிறகு மதிய பிடிச்சிப் போய் அவங்க அதையும் தளர்த்திட்டாங்க. எல்லாம் எங்க காதலுக்காக. கல்யாணத்திற்கும் ஒத்துக் கிட்டாங்க. ஆனா…” என்று இழுத்தபடி அவன் சற்றே தலைகுனியவும்

“என்ன ஆச்சி? உங்க பாட்டி நிறைய வரதட்சணை கேட்குறாங்களா?” என்று நாங்களும் காதலுக்கு எதிரி இல்லை என்பது போல் ரதி கேட்க

“அது கேட்கறாங்க தான். ஆனா அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஆனா இது வேற….”

“எதுவா இருந்தாலும் என்னனு சொன்னா தான என்னால எதாவது செய்ய முடியும்?”

“உங்களால முடிய கூடியது தான். ஆனாலும் நான் இப்போ சொல்ல வர்றது உங்க சம்மந்தப்பட்டது என்றதால தான் கொஞ்சம் தயங்குறேன்” என்று வந்தவன் புதிர் போட

‘என் விஷயமா?’ என்று யோசித்தவள்
“சரி எதுவா இருந்தாலும் சொல்லுங்க. அப்போ தான சரி பண்ண முடியும்?”

“உங்களுக்கு அநியாயம் நடந்ததது எப்படியோ என் பாட்டிக்குத் தெரியப் போய்…” என்றவன் அவன் தலை குனிந்த படி தயங்கவும்

“ம்…. சொல்லுங்க பாட்டிக்குத் தெரியப் போய்..”

“உங்க வாழ்க்கைய வைத்து மதிய வேணாம்னு சொல்லிட்டாங்க”

“எனக்கு நடந்ததுக்கு நானே பொறுப்பில்ல என்னும் போது அவ…. ச்சு…… சரி மேற்கொண்டு சொல்லுங்க”

“எனக்கெல்லாம் தெரியுங்க. ஒரு ஆணால உங்களுக்கு நடந்த கொடுமைக்கு இப்படிப் பட்ட ஆண் வர்க்கத்துல நானும் பிறந்துட்டேனு எனக்கு அசிங்கமா கூட இருக்குங்க.

உங்களுக்கு நடந்ததற்கு எதுக்குமே நீங்க பொறுப்பு இல்லனு நானும் மதியும் எவ்வளவோ சொல்லி பாட்டிய சமாதானப்படுத்தினோம். அதுக்கு அவங்க இறுதி முடிவா சொன்னது உங்கள வீட்டை விட்டு அனுப்பிட்டு எந்த உறவும் உங்க குடும்பத்தோட இல்லாம அறுத்து எறிஞ்சா தான் பெண் கேட்க அவங்க வருவாங்கனு சொல்லிட்டாங்க.

இதைக் கேட்டதும் ரதியின் முகம் போன போக்கைப் பார்த்தவன் “என் பாட்டிய தப்பா நினைக்காதிங்க. அவங்க நல்லவங்க தான். என்ன கொஞ்சம் பழமை வாதி அவ்வளவு தான்” என்று ஒரு பேரனாக தன் பாட்டிக்குப் பேசியவன் அன்று நடந்ததைச் சொன்னான்..

“பாட்டி எங்க அக்காவுக்கே தெரியாம மயக்கத்துல நடந்த ஒரு விஷயத்துக்கு அவங்க எப்படி பாட்டி பொறுப்பாக முடியும்” என்று அறிவுமதி தன் அக்காவுக்காக நூறாவது முறையாக வாதிட

“அடி போடி போக்கத்தவளே! தூக்கத்துல ஒரு எறும்பு ஊறுனா கூட பொண்ணுங்களுக்குத் தெரியும். இங்க இம்புட்டு நடந்திருக்கு உங்க அக்காவுக்குத் தெரியலையாமா?!”

“தூக்கத்துல தெரியும் பாட்டி. மயக்க மருந்து கொடுத்திருந்தா எப்படி தெரியும்?” என்றவள்

‘ஐயோ! தெய்வமே இவங்களுக்கு எப்படி சொல்லிப் புரிய வைக்க?’ என்ற எண்ணத்தில் மதி தன் காதலனான மாறனை ஒரு உஷ்ணப் பார்வை பார்க்க, அவனோ

‘ப்ளீஸ் மதி ப்ளீஸ்.. கொஞ்சம் பொறுமையா இரு டா. எல்லாம் நம்ம காதலுக்காகத் தான் டா’ என்று தன் பாட்டியின் பின்புறமாக நின்று கொண்டு கண்ணால் கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன். மதி அமைதியாக இருக்கவும் பாட்டியே

“ஒன்னு நல்லா தெரிஞ்சிக்க புள்ள. ஊசி எடம் குடுக்காம நூல் நுழையாது. அது தான் நெசம். உங்க அக்காவுக்கு அவன் கூட பழக்கம் இருந்திருக்கு. ஏன்? காதலா கூட இருக்கலாம். அதுல கல்யாணத்துக்கு முந்தியே கொஞ்சம் அப்படி இப்படி பழகிட்டாங்க. அவன் வேலை முடிஞ்சதும் ஓடிப் போய்ட்டான். எல்லாரும் என் பேரன் மாதிரி நல்லவனா இருப்பாங்களா? எல்லாம் நான் வளர்த்த வளர்ப்பு டி! இதெல்லாம் வெளியில தெரிஞ்சா தனக்கு அசிங்கம்னு தான் உங்க அக்கா எல்லாத்தையும் மறைச்சி பொய் சொல்றா” என்று அந்த வயதானவர் வாய்க்கு வந்ததைப் பேச

“இன்னும் எத்தனை காலத்துக்கு பாட்டி இந்த வார்த்தையே சொல்லி பெண்கள் மேல பழி போடுவீங்க? காலங்காலமா நாங்க வாங்கிட்டு வந்த சாபம்னு நாங்க நினைக்கிறது இப்படிப் பட்ட பெயர்கள் தான் பாட்டி. ஆனா இப்படிப்பட்ட வார்த்தைகளை ஒரு ஆண் தான் செய்த தப்பிலிருந்து தப்பிக்க சொல்றத விட ஒரு பெண்ணா அதுவும் வயது முதிர்ந்த உங்கள மாதிரியானவங்க எங்கள இழிவுப் படுத்துறது தான் எங்களுக்கு தாங்கிக்க முடியாத வலியையும் வேதனையும் தருது. சரி என் அக்கா வயதுப் பெண் என்பதால தான் அவ நடவடிக்கைய வச்சி இவ்வளவு சொல்றிங்க ஆனா இப்படி பட்ட பாலியல் வல்லுறவு என்பது பிறந்த ஐந்து மாத குழந்தைக்கு கூட நடக்குதே அப்போ அதுக்கு என்ன சொல்ல வரீங்க?” என்று அவர் கூற்றுக்கு இவள் எதிர்த்து வாதிட

“அம்மாடியோ அம்மா! வாய் செத்த பூச்சியா இருந்துட்டு இப்போ என்னமா பேசுற நீ! இப்பவும் ஆம்பளைங்க செய்யறது சரினு நான் சொல்ல வரல. அவன் கெட்டவனு தெரிஞ்சும் உன் அக்கா ஏன் பழகுனானு தான் நான் கேட்கறன்”

‘தன்னை சிதைத்தது யாருனே தெரியாத நிலையில் அவள் பழகினாளா பழகலையா என்பது இங்கு எங்க வருது?’ என்று கேட்டு கத்த வேண்டும் போல் எழுந்த எண்ணத்தை அடக்கியவள்.

“இப்போ முடிவா நீங்க என்ன தான் பாட்டி சொல்றீங்க?”

“நான் எப்போதும் சொல்றது ஒன்னு தான். உங்க அக்காவ வீட்டை விட்டு அனுப்பிடுங்க. அப்புறம் வந்து நான் சம்மதம் பேசுறேன்”

“அப்படி செய்யலனா?”

“இந்த கல்யாணம் நடக்காது. என் பேரனுக்கு எங்க சாதி சனத்திலே பொண்ணுங்க நிறை…”

“அப்போ அதுல யாராவது ஒருத்திய பார்த்து உங்க பேரனுக்குக் கட்டி வைங்க பாட்டி. என்ன ஆனாலும் எங்க அப்பாவே என் அக்காவ விட்டாலும் சரி நான் அவங்கள விட மாட்டன் பாட்டி. சாகறவரை என் அக்கா எங்க கூட தான் இருப்பாங்க. நான் வரேன் பாட்டி” என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவள் மாறனை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினாள் அறிவுமதி.

“ஓ… ஓ…. னானா! என்னா பேச்சி பேசிட்டு போறா பார்த்தியா இந்த பொட்ட கழுத! பார்க்கும் போது புள்ளபூச்சியா இருந்துட்டு எப்படி பொரிஞ்சி தள்ளுரா பாரு.. டேய் மணி இவ இல்லனா என்ன டா நான் உனக்கு வேற ஒரு பொண்ணப் பார்த்து முடிக்கிறேன் டா….”

அவர் சொல்லிக் கொண்டிருப்பது எதையும் கேட்கவில்லை அவன். பாட்டியை எதிர்த்துப் பேசவும் முடியாமல் போகும் மதியைத் தடுக்கவும் முடியாமல் தவித்து நின்றவன் மறுநாளே மதியை சந்தித்துப் பேசினான்

“என்ன மதி இப்படி அவசரப்பட்டு வார்த்தைய விட்டுட்ட?”

“… “அவள் அமைதியாக இருக்கவும்

“சரி இதுக்கு நான் ஒரு வழி சொல்றேன் அதையாவது செய். நீ வீட்டை விட்டு வந்துடு. நான் பாட்டி கையில கால்ல விழுந்தாவது நமக்குக் கல்யாணம் பண்ணி வைக்கக் கேட்கறேன்” சட்டென நிமிர்ந்து அவன் முகத்தை ஒரு வினாடி பார்த்தவள்

“அதையே நீங்க செய்தா என்ன மாறன்?” என்று நிதானமாக கேட்க

“ஏய் என்ன விளையாடறியா? என் பாட்டிக்கு பதினோரு பிள்ளைங்க. அதுல என் அம்மா மதம் மாறித் திருமணம் செய்ததால கூடப் பிறந்தவங்க எல்லோரும் அவங்கள ஒதுக்கிட்டாங்க. பிறகு என் அம்மா அப்பா விபத்துல இறந்த பிறகு என்னையும் ஒதுக்கினாங்க. அப்போ அவங்க எல்லார்கிட்டையும் சண்டை போட்டு என்னை வளர்த்தது பாட்டி தான். இப்படி ஒரு நிலையில எப்படி மதி நான் அவங்களை விட்டு வர முடியும்?

“அப்படி பார்த்தா அம்மா இல்லாத என்னையும் தான் எங்க அப்பா வளர்த்திருக்கார். சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நாம இரண்டு பேருமே வீட்டை எதிர்த்துக் கல்யாணம் பண்ணி எங்கேயாவது போய் வாழலாம் இப்பவே வாங்க”

“அது முடியாது”

“ஏன் மாறன்? என் அக்காவுக்கு நடந்ததை எல்லாம் சொன்ன போது அப்படி கோபப்பட்டிங்க துடிச்சீங்க! ச்சீ.. இப்படிப் பட்ட ஆண் சமுதாயத்துல நானும் ஒரு ஆணா பிறந்துட்டேனு சொல்லி ஆவேசப் பட்டீங்க! அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா?” என்று அவள் குத்திக் காட்ட

அதில் அவனோ “நான் மட்டும் இல்ல டி. இந்த உலகத்துல இருக்கிற எல்லா ஆண்களும் இப்படித் தான். முதல்ல எங்களுக்கு குடும்பம் பந்தபாச உறவும் கூடவே எங்களுக்கான கடமை தான் முக்கியம். பிறகு தான் சமூக அக்கறை எல்லாம்” என்று அவன் நிதர்சனத்தைப் பேச

“அப்ப என்ன விட்டுடுங்க மாறன். நாம இனிமே சந்திக்க வேணாம்” என்ற சொல்லுடன் மதி விலகிச் செல்ல

‘போடி போ! உனக்கே இவ்வளவு இருந்தா எனக்கு இருக்காதா?’ என்று மனதில் பதில் கோபத்துடன் நின்றிருந்தான் மணிமாறன்.

ரதியிடம் அன்று நடந்தது அனைத்தையும் சொல்லாமல் தவிர்த்தவன் மதி தன் அக்காவுக்காகத் தங்கள் காதலையே விட்டுப் போனதை மட்டும் சொன்னவன் உங்க வாழ்க்கைகாகத் தான் மதி தன் வாழ்க்கைய அமைச்சிக்கிறது பத்தி ரொம்ப யோசிச்சா. இப்போ உங்களுக்கு உங்க வாழ்க்கை சரியானதால இனிமே மதி மறுக்க எதுவும் இல்ல. சோ எங்க திருமணத்தைப் பற்றி பேச வந்தேன். நீங்க சரினு சொன்னீங்கனா உங்க அப்பா கிட்ட என் பாட்டியோட வந்து பேசறேன்” என்று தன் முடிவை சொல்லி விட்டு அவன் சென்று விட

அதன் பிறகு ரதிக்கு என்னென்னமோ கேள்விகள் எழுந்தது. முதலில் மதி காதலித்தாளா என்பதே அவளுக்குக் பெரும் கேள்வியாக இருந்தது. பிறகு தன் வாழ்க்கைக்காக அவ காதலை விட்டு கொடுத்தாளா என்ற கேள்வி. இப்போது வந்தவர் தன் பாட்டியைப் பற்றி முழுமையாகச் சொல்லவில்லை என்றாலும் தன் வாழ்வை வைத்து ஏதோ மதியை மறுக்கிறார் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. முதலில் இந்த மணிமாறன் நல்லவரா என்று விசாரிக்க வேண்டும். பிறகு அறிவுமதியிடம் பேச வேண்டும். அதற்கு தான் சிற்பியுடன் இங்கிருக்க வேண்டும். தன்னுடைய சுயநலத்திற்காக சிற்பியின் வீட்டை விட்டுப் போய் மதியுடைய வாழ்விற்கு சிக்கலை தேடித் தரக் கூடாது என்ற முடிவைத் தான் ரதி இறுதியாக எடுக்கவேண்டியதாக ஆகியது.

இரண்டு தினங்கள் கழித்து ஒரு நாள் கையில் இனிப்பு டப்பாவுடன் வீட்டிற்கு வந்த சிற்பி
“மாமா நான் ஒரு பெரிய கம்பெனியில லீகல் அட்வைசரா ஜாயின் பண்ணியிருக்கேன். அவங்களே எனக்கு குரோம்பேட்ல தங்க ஒரு பெரிய ஃபிளாட் ரெடி பண்ணித் தர இருக்காங்க. இன்னும் இரண்டு நாளில் நாம எல்லோரும் அங்கே குடி போய்டலாம் மாமா” என்று அவன் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள…

“சந்தோஷம் வர்மா! நீ நல்லா வருவேனு எனக்குத் தெரியும். அவ்வளவு பணபலம் அரசியல் பலம் உள்ள உன் தாத்தாவை வேணாம்னு சொல்லிட்டு உன்னுடைய உழைப்பினாலேயும் திறமையினாலும் இவ்வளவு தூரம் உயர்ந்து இருக்கியே! இன்னும் வருவ வர்மா. ஆனா நான் எங்கும் வரல டா. எனக்கு இங்கேயே பழகிடுச்சி. நீ உன் மனைவி பிள்ளையோட அங்கு போய் நல்லா இரு. மாதத்துல ஒரு நாலு நாள் வந்து உன் கூட தங்குறேன்” என்று சொல்லி அவர் மறுத்து விட அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று சிற்பிக்கு ஆசை இருந்தாலூம் அவருடைய விருப்பதிற்கு மதிப்பு கொடுத்தான் அவன்.

“பால் காய்ச்சி குடித்தனம் போற அன்னைக்கே பாப்பாக்கும் பெயர் வைக்கலாம்னு இருக்கேன் மாமா”

“ரொம்ப நல்லது அதை செய் வர்மா சீக்கிரம்” என்று அவர் மகிழ, இதையெல்லாம் தங்கள் அறையிலிருந்து ரதி கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். இருந்தாலும் ஒரு கணவனாக உள்ளே வந்த சிற்பி

“எனக்கு குரோம்பேட்ல ஃபிளாட் கொடுத்திருக்காங்க. வர்ற புதன் எல்லோரையும் அழைத்துப் பால் காய்ச்சி அன்றே பாப்பாக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன். உனக்கு அன்னைக்கு வசதிப்படுமா?” என்று கேட்க கணவன் வசதிப்படுமா என்று கேட்பது எதை வைத்து என்று உணர்ந்தவள் “ம்…” என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே பதிலாகத் தர

“உனக்கு பாப்பாக்கு வீட்டுக்கும் என்ன என்ன வேணும்னு லிஸ்ட் எழுதி வை. இன்னைக்கு சாயந்திரம் போய் வாங்கிட்டு வந்திடலாம்” என்று குடும்பத் தலைவனாய் அவன் சொல்ல அதற்கும் “ம்…” என்ற பதில் மட்டும் தான் வந்தது.

அந்த அப்பார்ட்மெண்டில் மொத்தம் பதினைந்து மாடி உள்ள கட்டிடத்தில் இவர்கள் வீடோ ஐந்தாவது மாடியில் இருந்தது. சகல வசதிகளுடன் கூடிய மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஃபிளாட் அது.

விழாவுக்கு நிரல்யா குடும்பத்தைத் தவிர ரதி குடும்பம் இன்னும் சிற்பியின் சில நண்பர்கள் வந்திருந்தார்கள். எல்லோரையும் விட பிரதாப்பின் தாய் மைதிலி வந்தது தான் ரதிக்கு சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்தது.

அன்றொரு நாள் “நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு தான். அதை நானே ஒத்துக்கிறேன். அதுக்கு ரதிய ஏன் ஒதுக்குறீங்க? சின்ன வயதுலயிருந்து இன்று வரை அவளை உங்க பொண்ணா வளர்த்துட்டு இன்று அவ பொண்ணான எங்க மகளுக்கு பெயர் சூட்டு விழா வைத்திருக்கோம். அதுக்கு நீங்க வரலனா எப்படி? உங்க விஷயத்துல அவ ஏதோ குற்ற உணர்ச்சியில தவிக்கிறானு நினைக்கிறேன். நீங்க வந்தா நிச்சயம் அந்த குற்ற உணர்ச்சி இருக்காது சந்தோஷமும் படுவா. அதனால நிச்சயம் நீங்க வரணும்” என்றெல்லாம் சொல்லி ரதியின் கணவனாய் தன் மகளின் விசேஷத்திற்கு ஒரு தந்தையாய் மைதிலியை முன் நின்று அழைத்திருந்தான் சிற்பி. மைதிலி மட்டும் தான் விழாவிற்கு வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ரதி உணர்ச்சி வசத்தில் கட்டிக்கொண்டு கண்ணீர் விட அவருக்கும் கண் கலங்கத் தான் செய்தது.

மகளுக்கு தன் தாயின் பெயரான சந்திரவதியை மாற்றி சந்திரவதனி என்று பெயர் சூட்டினான் சிற்பி. ஏதோ ஒரு தண்ணார்வ தொண்டு நிறுவன உதவியால் இப்போதெல்லாம் சக்கரநாற்காலி வண்டியை உபயோகித்தார் கந்தசாமி.

விழா முடிந்ததும் அன்றே தனக்குத் தெரிந்த ஒருவர் இருப்பதாகச் சொல்லி தங்கை அறிவுமதியின் திருமணத்தைப் பற்றி ரதி அவள் எதிரிலேயே தன் தந்தையிடம் பேச

“இப்போ என்ன க்கா என் கல்யாணத்திற்கு அவசியம் இருக்கு? எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமே இல்ல க்கா…”

“நைனா எந்த பொண்ணு தான் உடனே கல்யாணத்திற்கு ஒத்துகினு இருக்கா இவ ஒத்துக்க? எல்லாம் நாம பார்த்து சரினு சொன்னா பிறகு ஏத்து நடந்துப்பா. அதால எதைப் பத்தியும் யோசிக்காத நைனா” என்று தங்கையின் மறுப்புக்கு ரதி முற்றுப்புள்ளி வைத்து விட, மதி தான் இந்த திருமணத்தை மறுபடியும் என்ன சொல்லி மறுப்பது என்றிருந்தவள் கிச்சனில் யாரும் இல்லாமல் ரதி மட்டும் தனிமையிலிருந்த நேரம் பார்த்து

“அக்கா நான் மெய்யாலுமே தான் சொல்றன் எனக்கு கல்யாணம் வேணாம் க்கா. நான் கடைசி வரை நைனா கூடவே இருந்துக்கிறேன்…”

“நாங்க என்ன செஞ்சாலும் அது உன் நல்லதுக்குத் தான் செய்வோம் அறிவு. அதனால எதுவும் பேசாம வந்து மணவறையில உட்காரு. அத்த மட்டும் நீ எங்களுக்கு செய். அது போதும்” என்று ஒரு தாயாய் அவளை அதட்டி அடக்கி விட்டாள் ரதி.

அன்று மாலையே மணிமாறனை வீட்டிற்கு வரச் சொல்லி அனைவருக்கும் அறிமுகப் படுத்தியவள் அவன் போனதும் தங்கையிடம் சம்மதத்தைக் கேட்க ரதியின் மடியில் தலை சாய்த்தவள்

“என்ன மன்னிச்சிடு க்கா. நான் செய்தது தப்பு தான். அதையும் உங்க கிட்டயிருந்து மறைச்சதும் பெரிய தப்பு தான் க்கா” தன் அக்காவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற எண்ணத்தில் மதி மன்னிப்பு கேட்க

“நீ செய்தது தப்பு தான் அறிவு. இந்த வயசு காதலுக்கான வயசு இல்லதான். ஆனா நீ தேர்ந்தெடுத்த ஆண் நல்லவர் என்றதால இந்த கல்லாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்று சொல்லி ஒரு பொறுப்புள்ள அக்காவாக ரதி நடந்து கொண்டாள்.

அதன் பிறகு அடுத்த மாதமே திருமண வேலைகள் நடக்க தங்களுடைய கவுரவத்திற்காக கொஞ்சம் நகைகளும் சீர்வரிசையில் டிவி ஃபிரிஜ் என்று மாறன் பாட்டி கேட்க அதில் பாதியை தானே ஏற்றுக் கொண்ட மாறன் மீதியை ட்ரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்தான்.

திருமணமும் இனிதே நடந்து முடிய அன்று நீயும் வேணாம் உன் காதலும் வேண்டாம் என்று பிரிந்த இருவரும் பிறகு திருமணத்தை சாக்காக வைத்து கூட மதியும் மாறனும் பேசிக் கொள்ளவில்லை. இதோ இன்று தான் தங்கள் காதலில் இருவரும் வெற்றி பெற்று குடும்ப பந்தத்தில் கணவன் மனைவியாய் நுழைந்த பின் அவர்களுக்கு என்றிருக்கும் இந்த முதலிரவு அறையில் தான் தன் மனைவியிடம் பேசுவதற்காகக் காத்திருந்தான் மாறன்.

அதே நேரம் க்ளிக் என்ற சத்ததுடன் கதவைத் திறந்து கொண்டு பால் சொம்புடன் உள்ளே வந்த மதி கட்டிலில் அமர்ந்திருந்த கணவனை நிமிர்ந்தும் பாராமல் அங்கிருந்த மேஜையில் சொம்பை வைத்தவள்

“கொஞ்சம் எழுந்திருங்க” என்று கணவனுக்குக் கட்டளையிட ஏதோ மனைவி தன் காலில் விழத் தான் எழுந்திருக்கச் சொல்கிறாள் என்ற எண்ணத்தில்

“கால்ல விழற ஃபார்மாலிடிஸ் எல்லாம் வேணாம் மதி. இப்படி என் பக்கத்துல வந்து உட்காரு” என்று அவன் அழைக்க

“நான் உங்களை எழுந்திருக்கத் தான் சொன்னேன்” என்று மதி சற்று அழுத்திச் சொல்லவும் அவன் எழுந்து நிற்க

மெத்தை விரிப்பின் மேலிருந்த பூக்களை கையில் வாரி அங்கிருந்த குப்பைக் கூடையில் போட்டவள் பிறகு விரிப்பை உதறி தரையில் விரித்து ஒரு தலையனையுடன் அவள் படுத்து விட

‘ஏதோ பூ கசங்கிடக் கூடாதுனு இவ்வளவும் செய்தாள்னு பார்த்தா இப்படி சட்டுனு தரையில் படுத்துட்டாளே!’ என்ற எண்ண ஓட்டத்துடன்

“மதி!” என்று கணவன் அழைக்க, அவளிடம் எந்த சலனமுமில்லை. சற்றே முன்னேறி அவள் தோளைத் தொட்டு

“மதி!” என்று மறுபடியும் இவன் அழைக்க அவன் கையைத் தட்டி விட்டு சட்டென எழுந்து அமர்ந்தவள்

“இங்க பாருங்க.. என் அக்கா சொன்னாள்னு தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மற்ற படி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல” என்று கூறி படுத்தவள்

‘அது மட்டும் தான் காரணமா?’ என்று அவன் மனதில் நினைக்கும் போதே மறுபடியும் எழுந்து அமர்ந்தவள்

“அது மட்டும் காரணமில்ல. நீங்க என்ன விரும்பலைனாலும் நான் உங்களை உண்மையா தான் விரும்பினேன். அதனால தான் உங்களத் தவிர வேறொருத்தர கல்யாணம் பண்ணச் சொல்லி என் அக்கா மறுபடியும் யாரையாவது நிறுத்த நான் அவன மறுத்து அப்படி ஒரு தர்மசங்கடமான நிலை வர வேணாம்னு தான் உங்களையே பண்ணிக்கிட்டேன். அதுக்காக நமக்குள்ள எல்லா கணவன் மனைவி மாதிரி சுமூகமான உறவு வந்துடிச்சினு எல்லாம் கனவு காண வேணாம். நான் இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு இன்றைக்கு நடக்க வேண்டியது தான் வேணும்னா அதுக்கும் நான் தயார் தான்” என்று இறுதியாக அவள் குரல் விரக்தியின் விளிம்பில் ஒலிக்க

“நான் உன் கிட்ட பேசத் தான் எழுப்பினேன் மதி”

“இனிமே நமக்குள்ள பேச ஒண்ணுமில்ல. அதே சமயத்துல நீங்க பேசி நான் கேட்கவும் தயாரா இல்ல” என்று அவன் முகத்திலடித்த மாதிரி சொல்லி விடவும்

“சரி தூங்கு மதி. இனி நான் உன்னை தொந்தரவு பண்ணல” என்ற வாக்குறுதியுடன் விலகிச் சென்று கட்டிலின் மறுபக்கத் தரையில் ஒரு தலையணையுடன் படுத்து விட்டான் மாறன்.

தன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மணப்பேன் என்று சொன்ன தன் முன்னாள் காதலனிடம் இப்போது ஒரு நண்பன் என்ற உறவில் கூட மதி பேசத் தயாராக இல்லை. தான் சொல்ல வருவதைக் கூட கேட்கத் தயாராக இல்லாத இவளிடம் இனி நான் என்ன பேசி புரியவைக்க என்ற எண்ணத்தில் மாறன் இருந்து விட

எத்தனை நாளைக்கு இந்த வீம்பும் பிடிவாதமும்? ஒரு நாள் என்னைத் தொட்டுத் தான் ஆக வேண்டும். அப்போது இருவரில் முதலில் என்னைத் தொடுவது யாரென்று பார்க்கத் தான் போகிறேன் என்று மௌனமாய் பேசியபடி ஒரு பார்வையாளராய் அவர்களைப் பார்த்துச் சிரித்தது அவர்களுக்காக அலங்கரித்திருந்த கட்டில்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN