சுவாசம் - 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 13

ஒரு பெண்
தனக்கு கணவன் வரும்வரை
அவளது எதிர்காலத்தைப்
பற்றி வருந்துவாள்..
ஆனால் ஒரு ஆண்
தனக்கு மனைவி வந்த பின்
அவளது எதிர்காலத்தைப்
பற்றி வருந்துவான்!

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சிற்பி வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து அவனைப் பார்க்க வந்த ரேஷ்மாவின் தந்தையை அவன் வரவேற்றுப் பேச

“சார்! நான் ரேஷ்மாவோட அப்பா. வெளிநாட்டுல வேலை பார்க்கிறேன். என் மகளுக்கு நடந்த அநியாயத்துக்கு நீங்க தான் எங்க சார்பா வாதடுறதா என் மனைவி சொன்னா. வேணாம் சார்.. எங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வேணாம். எங்களுடையது பெரிய குடும்பம் சார். அங்க அவங்க கேட்குற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல. இந்த விஷயத்தினால் என் சொந்த பந்தம் முன்னாடி என்னால தலை நிமிர்ந்தும் நிற்க முடியல”

இதுவரை அமைதியாக இருந்தவன் “இதில உங்க பொண்ணு தவறு என்ன சார் இருக்கு நீங்க தலை குனிய?” என்று கேட்க

“உண்மை தான் சார்.. ஆனா இந்த அப்பார்ட்மெண்ட்ல வேலை செய்ற பதினெட்டு பேரும் என் பொண்ணு கேஸ்ல சம்மந்தப்பட்டு இருக்கிறதாலே பில்டர்ஸோட பெயர் கெடக் கூடாதுனு பதிமூன்று வயதா இருந்தாலும் என் மகள் தான் சம்மதித்து விருப்பப்பட்டு நடந்ததா கதை கட்டுறாங்க. அதற்கு அவங்க வைக்கிற காரணம் இது உண்மைனா ஏன் என் மகள் முன்னாடியே சொல்லலனு என்ற கேள்வி”


இதுவரை பொறுமையாய் இருந்து கேட்ட ரதியால் இனியும் இருக்க முடியாமல் அடக்கி வைத்த கோபத்துடன்..

“அது அவளைத் தப்பா படம் எடுத்து வைத்து மிரட்டினதால தானங்க அந்த குழந்தை பயத்துல வாயைத் திறக்காம இருந்து இருக்கா?” என்று ரதி கேட்க

“என்ன சார் பேசுறிங்க நீங்க.. இங்க லிப்ட் வேலையில இருந்த அந்த அறுபத்தியிரண்டு வயது கிழவன் மேல ஏற்கனவே ஐந்து வருஷத்துக்கு முன்னே அவன் பக்கத்து வீட்டுல இருந்த ஐந்து மாத கைக்குழந்தைக்கும் இதே மாதிரி பாலியல் தொல்லை கொடுத்திருக்கான். இதை எப்படி விசாரிக்காம இவங்க இங்க வேலை தரலாம்? இதை தான் நான் கோர்ட்டுல கேட்டேன். என்னால கேள்வி கேட்டு தண்டனை தான் வாங்கித் தர முடியும். அதுக்கு உங்களை மாதிரி ஆளுங்க எனக்கு துணையா இருக்காம இப்படி பின்வாங்கினா நான் என்ன சார் செய்ய முடியும்?” என்று சிற்பி கடித்த பற்களுக்கிடையே அவரிடம் கேட்க

“என்ன வேணும்னாலும் சொல்லிக்கங்க சார். என் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. நீங்க என்ன தான் தண்டனை கிடைக்கும்னு சொல்லி கோர்ட்டுல கத்தினாலும் நியாயமோ தண்டனையோ கிடைக்காது. இந்த பில்டர் அவன் மேல இருக்கிற தப்பை மறைக்க அவர்களை வேலைக்கு அனுப்பின ஏஜென்சியை கை காட்டுவான். அந்த ஏஜென்சியை வைத்து நடத்தறவன் யாரோ அரசியல் வாதியோட பினாமியாம். சோ அவனும் அவன் மேல இருக்கிற தப்ப மறைக்க என் பொண்ணு மேல தான் திருப்புவான். வாய் பேசவும் காது கேட்கவும் முடியாத நிலையில் இருக்கிற என் பொண்ணு தான் எல்லோருக்கும் காட்சிப் பொருளா ஆகனும். அதுவும் இல்லாம இன்னும் இரண்டு வயது வந்த பொண்ணுங்க எனக்கு இருக்காங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை நான் அமைத்துக் கொடுக்கனும்.

இன்று தான் நான் வெளி நாட்டுல இருந்து வந்தேன். என் அனுமதி இல்லாம என் மனைவி கேஸ் கொடுத்துட்டா. இனி கேஸ் வேணாம் நாங்க வாபஸ் வாங்கிடறோம். இதற்கு மேல் என் மனைவியோ மகளோ எங்கும் வர மாட்டாங்க. அதை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்” என்று சொல்லி அவர்களின் பதிலை எதிர் பார்க்காமலே அங்கிருந்து வெளியேறினார் மெத்த படித்தாலும் கேவலமான இந்த சமூகத்திற்குப் பயந்து ஓடி ஒளியும் கோழை தந்தையான அவர்.

இன்று தான் ரதிக்கே தெரியும் தன் கணவன் ரேஷ்மாவுக்காக வாதிடுகிறான் என்று. ஆனால் என்ன பயன்? இப்படி ஓடி ஒளிபவர்களை வைத்து யார் தான் என்ன செய்ய முடியும்? அதுவே கணவன் மனைவி இருவருக்குமே பெரும் துயரத்தைத் தந்தது.

ரேஷ்மா விஷயம் தான் இப்படி என்றால் வர்ஷினி விஷயமோ இதை விட கொடுமையாக இருந்தது. தன் மகளுக்கு நடந்த அநியாயத்துக்கு வர்ஷினியின் பெற்றோர் முழு வீச்சாக அந்த கயவனுக்குத் தண்டனை வாங்கித் தர சிற்பிக்குப் பெரும் உதவியாக இருக்க ஆனால் வசந்த்தின் பெற்றோரோ மகன் செய்த குற்றத்திற்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் தங்கள் பண பலத்தால் அவனை ஜாமீனில் எடுக்க முயற்சி எடுத்தனர். எந்த காலத்திலும் பணம் பத்தும் செய்யும். அப்படிப் பட்ட பணமா வசந்த்தை வெளியே எடுக்காது?

காவல்துறையினர் காலதாமதமாகவும் வலுவில்லாத பிரிவுகளிலும் வழக்கைப் பதிவு செய்து மிகவும் மெத்தனமாக அவர்கள் நடந்து கொண்டதால் வசந்த்தின் வக்கீல் இதையே காரணமாக காட்டி நீதிமன்றம் செல்லும் முன்பு காவல்நிலையத்திலேயே அவனை ஜாமீனில் வெளியே எடுக்க அதை தெரிந்து கொண்டு வர்ஷினியின் தந்தை சிற்பி வீட்டிற்கு வந்து தன் மகளுக்கு நியாயம் கேட்டு கண்ணீர் விட்டு கதறிவிட்டுப் போக ரேஷ்மா விஷயத்தில் அமைதியாக இருந்த ரதியால் இப்போது அமைதி காக்க முடியாமல் கணவன் வந்ததும் அவனிடம் வந்தவள்

“என்ன பரிகாரமா? இது அன்று வர்ஷினிய தேடாம விட்டு கொன்னதற்கா இல்ல எனக்கு செய்த பாவத்திற்கா?” என்று அவன் வர்ஷினிக்காக வாதிடுவதை வைத்து அவள் கேட்க

காலையில் வேறு ஒரு கேஸ் விஷயமாக இவன் வாதிட்டு வெளிய வர அப்போது தான் வசந்த்திற்கு ஜாமீன் கிடைத்த விஷயமே அவனுக்குத் தெரிய வந்தது. இவன் குற்றவாளிகளை உள்ளே வைப்பதும் அவர்களை சக வக்கீல்கள் வெளியே எடுப்பதும் அவனைப் பொறுத்தவரை வாடிக்கையான விஷயம் தான். ஆனால் இன்று ஒரு பச்ச மண்ணையே ஒருவன் நாசம் செய்து எரித்துக் கொன்றிருக்கிறான். அதையும் அவன் ஒத்துக் கொண்ட பிறகும் எப்படி கொஞ்சம் கூட மனிதநேயமே இல்லாமல் இந்த வக்கீல்கள் வாதிட வருகிறார்கள் என்று ஆத்திரத்தின் உச்சியில் இருந்தவன் இப்போது மனைவி தன்னை நக்கல் பேச்சால் குத்திக் குதறவும் அவளைத் திரும்பி ஒரு வெறுமையான பார்வை பார்த்தவனோ மேற்கொண்டு தன் வேலைகளைப் பார்க்க..

“என்னவோ பெருசா அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப் போனீங்களே பெரிய சண்டியர் மாதிரி! இப்ப என்னாச்சு? சட்டம் என்றைக்கு நீதிக்கும் நேர்மையானவர்களுக்கும் உதவி இருக்கு? அதான் சட்டம்னாலே பலப்பல ஓட்டைகள் இருக்கே! அதில் பண முதலைகளும் அதிகாரம் படைத்த திமிங்கிலங்களும் ஈவு இரக்கமற்ற சுயநலவாதி ஓநாய்களும் தங்கள் உடலுக்கு ஏற்ற அளவுக்கு அந்த ஓட்டைகளை பெரிசு பண்ணி வெளிய வரத் தானே பார்க்கும்?

மக்களுக்காக என்று நீங்கள் சொல்லும் சட்டமும் வக்கீல் என்ற போர்வையில் நீங்கள் படித்த படிப்பும் அதற்குத் தானே இருக்கு? பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்னு எங்களுக்காக பாரதி பாடினான். பாவம்! அவன் மட்டும் இன்று இருந்திருந்தா நீங்கள் எல்லாம் இந்த உலகத்தையே ஆண்டாலும் சரி உங்களுக்கு எல்லாம் இந்த பாலியல் கொடுமையில் இருந்து விடிவே இல்லனு நொந்து இப்படி பட்ட இனத்தில் நானும் பிறந்தனேனு தலை கவிழ்ந்து இருப்பான்.

அவன் மட்டுமா? இந்த உலகத்திற்கு அடிப்படையான அடுத்த தலைமுறைகளைக் கொடுக்க தாய்மைக்காக என்று இப்படி ஒரு உடல் அமைப்புகளை எங்களுக்கு தந்தானே அந்த கடவுள் அவனும் இல்லை வெட்கித் தலை குனிவான்? இதை எல்லாம் பார்த்து உங்களுக்கு வெட்கமா இருக்கோ இல்லையோ ஆனா உங்களை எல்லாம் நல்ல அண்ணனா தம்பியா தோழனா குருவா பார்த்த எங்களுக்கு தான் உங்களோடு கை கோர்த்ததற்கு வெட்கமா இருக்கு..

ஒருத்தன் தன் அடுக்கு மாடி வீட்டைப் பார்த்துப் பார்த்து கட்டினானாம். ஆனால் அஸ்திவாரத்துககு முக்கியத்துவம் தரலயாம். விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் வாங்கி உள்ளே வெச்சு அழகு பார்த்தனாம். அடுத்து அடிச்ச புயல் காத்துல ஒட்டு மொத்த வீடும் இடிஞ்சி தரைமட்டமான பிறகு கதறி அழுதானாம்.. அந்த முட்டாள் மனுஷனுக்கு தெரியல கட்டடத்துக்கு அஸ்திவாரம் தான் முக்கியம்னு. அது வலிமையா இல்லாதப்ப எத்தனை மாடி கட்டி என்ன பிரயோஜனம்?

அது போல் தான் இருக்கு உங்கள் செயலும் சட்டமும். முதல்ல சட்டத்தின் ஓட்டைகள அடைங்க. பிறகு தண்டனை வாங்கிக் கொடுங்க. அதை விட்டுட்டு கேஸ் என்ற பெயரில் அந்த குற்றவாளி நாய்களுக்கு பதினைந்து வருஷம் இருபது வருஷம் சோறு போட்டு உயிரை வளர்க்காதிங்க” என்று கணவனை கேலி செய்கிறோம் என்ற பெயரில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த..

அவளையும் அவள் பேச்சையும் ஒருவித சுவாரஸ்யத்துடனும் நிமிர்வுடனும் பார்த்து இருந்தவனோ “சபாஷ் டி பொண்டாட்டி!” என்று கை தட்டியவன் “இதுக்கு தான் உன்னை மாதிரி அறிவாளி மனைவி எல்லாம் என்ன மாதிரி முட்டாள் கணவனுக்குத் துணையா இருக்கனும்” என்றவன் தன் சஞ்சலம் எல்லாம் மறைய சட்டென அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கி விட

அவனின் வார்தையைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தவள் கூடவே அவன் செயலில் கோபம் வர
“என்ன இப்போ நீங்க என்ன நக்கல் பண்றீங்களா?” என்று அவள் கேட்க

“நிஜம் தான் டி.. அவனுக்கு பெயில் கிடைத்ததில் இருந்து இதற்கு தீர்வே இல்லையானு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எவ்வளவு ஈஸியா தீர்வ சொல்லிட்ட!”

“என்ன இப்போ விளையாடறிங்களா?”

“இல்ல.. நீ சொன்ன ஓட்டைகள அடைக்கிறதுக்கான வழிகள் என்னனு பார்க்கலாம்னு இருக்கேன்” என்று அவன் நம்பிக்கையுடன் சொல்ல அவள் நம்பாத பார்வையைப் பார்க்கவும்

“ஆமா! என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அதை செயல்படு…”

“நடக்கிறதை பத்தி மட்டும் பேசுங்க” என்றாள் ரதி சுரத்தையே இல்லாமல்

“அப்படி நான் நடத்திக் காட்டிட்டா நீ என்ன தருவ?” இவன் மனைவியை மடக்க அவளோ நம்பிக்கையில்லா பார்வையுடன் அங்கிருந்து விலக நினைக்க

“என்னால முடியும். இப்படி ஒரு தப்பை செய்தா இந்த மாதிரி தண்டனை கிடைக்கும் என்ற பயத்துலேயே மேற்கொண்டு அவனுங்க யோசிக்காமலும் போக மீறி செய்தால் அதற்கான தண்டனையும் வாங்கித் தர என்னால முடியும். ஆனால் இதற்கு எல்லாம் பதிலா நீ என்ன தர?” என்று அவளிடம் பதில் வாங்குவதிலேயே அவன் குறியாக இருக்க, அதில் கடுப்பானவள்

“என்ன நீ.. திரும்பத் திரும்ப என்ன தர என்ன தரனு கேட்கற.. ஒருவேளை பின் தூங்கி முன் எழும் மனைவியாய் இருந்து நீ செய்யும் செயலுக்கு எல்லாம் ஆமா சாமி போட்டு உனக்கு முதுகு தேய்த்து கை கால் பிடித்து விட்டு இறுதியா கட்டில்ல உன் கூட படுத்து உருள சொல்றியா? நெவர்.. முடியாது.. அதுவும் நான் உனக்கு அப்படி ஒரு மனைவியா இருக்க மாட்டன். ஏன் இது மட்டும் தான் ஒரு பொண்ணுக்கான வாழ்க்கையா என்ன?” என்று ரதி வெடிக்க

“அடச் சீய்! அப்படி எல்லாம் யோசிக்கிறவன் நான் இல்லை” என்றவன் பின் கண்ணில் குறும்பு தவழ “அதுக்காக நான் ஆசைப்படாமலேயே இதெல்லாம் கிடைச்சா வேணாம்னு சொல்றவனும் நான் இல்லை” என்று ஒரு கண்சிமிட்டலுடன் சொன்னவன் “இது தான் ஒரு பெண்ணுக்கான வாழ்க்கையானு கேட்டியே இதுவும் ஒருவிதமான நிறைவான வாழ்க்கை தான். அதாவது கணவனும் உண்மையா அந்த நிறைவுகளை தன் செயலால் மனைவிக்கு கொடுக்கும் போது” என்று எடுத்துரைத்தவன்

“அதே மாதிரி நான் உன் கிட்ட என்ன தரனு கேட்டது உன்னைத் தர சொன்னது எல்லாம் நீ ஆசைப்பட்ட படிப்ப படிச்சி சாதிக்கணும்னு நினைத்ததை சாதித்து வெற்றி பெற்று உனக்கு நடந்ததை மறந்து என்ன விட்டுப் பிரியணும்னு நினைச்சாலும் பிரிந்து நீ விரும்பற ஆணோட உனக்கான வாழ்க்கைய அமைச்சிக்குவியா?” அவன் முடிப்பதற்குள்

“இதைத் தான் சாத்தான் வேதம் ஓதுறதுனு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்”

“எதுவோ ஒன்னு.. சொல்லு டி செய்றனு?” அப்போதும் அவன் விடாமல் கேட்க

“அப்பா! என்ன ஒரு அதிகாரம்?”

“அது கூட பிறந்தது. அப்படி தான் இருக்கும்” என்று அவன் வலது கையால் தன் தலை கோதி பெருமைப் பட

“போதும் போதும்.. ரொம்பத் தான் பெறுமை படாதிங்க. நீங்க இவ்வளவு தூரம் சொன்னதால என் படிப்புக்கு நான் ஒத்துக்கிறேன்” என்றவள் அங்கிருந்து விலகிச் செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தவளோ பின் நின்று அவன் புறமாக திரும்பி

“ஆனா அந்த படிப்ப உங்க காசுல நான் படிக்க மாட்டேன். ஏன்னா சுயகவுரவம் என் கூடவே பிறந்தது” என்று அவனை போலவே சொல்லிக் காட்டி கூடவே ஒரு தலை சிலுப்புடன் அங்கிருந்து விலகிச் சென்றாள் ரதி.

அவளின் செயலில் லேசாக புன்னகையைத் தன் உதட்டோரம் சிந்தியவன் பின் மனைவி வேறு ஒரு வாழ்விற்கான அவன் கேள்விக்கு மட்டும் பதில் தராததால் மனதுக்குள் ஒரு முடிவுடன் நிறைவான புன்னகையுடன் தூங்கச் சென்றான் சிற்பி.


அவளைப் படி என்று வாய் வார்த்தையாய் சொன்னது மட்டும் இல்லாமல் அதற்கான முயற்சியையும் சீக்கிரமே எடுத்தான் சிற்பி. ஒரு நாள் மாலை ரதியைப் பார்க்க வீட்டுக்கு வந்த மைதிலி அவளை அவள் லட்சிய படிப்பை படிக்கச் சொன்னவர் அதற்கான செலவைத் தான் செய்வதாக கூற

முன்பாவது ரதி அவர் வீட்டில் வேலை செய்தாள் அதனால் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இன்று எதுவும் இல்லாமல் அவள் எப்படி அதை ஏற்பாள். அதனால்

“எனக்கு என் லட்சிய படிப்பு வேணும் தான். அதை நான் படிக்கவும் செய்வேன் தான். ஆனா அது இப்போ வேணாம் மா. பாப்பா ரொம்ப குழந்தையா இருக்கா. அவளுக்கு ஒரு ஐந்து வயதாவது முடியட்டும் மா. பிறகு நான் படிக்கப் போறேன்” இந்த ஐந்து வருடத்திற்குள் தன் படிப்புக்கான பணத்தை சம்பாதிக்க முடியாதா என்ற எண்ணத்தில் ரதி மறுக்க

“இப்போ இந்த குழந்தையை காரணம் காட்டுற நீ நாளைக்கு இன்னோர் குழந்தை பிறந்தா அப்பவும் இதையே தான் சொல்லி மறுக்கப் போற. உனக்கு நாங்க செலவு செய்யறது பிடிக்கலை. அப்படி தானே? உன்ன என் மருமகளா ஆக்கி..” என்று சொல்ல வந்தவர் இப்போது இன்னொருத்தன் மனைவியான அவளை எப்படி பேச்சுக்கு கூட அந்த வார்த்தையை சொல்வது என்று தயங்கியவர்
“இப்போ உன்னை நான் என் மகளா தான் டா பார்க்கிறேன். அதனால தயங்காம வாங்கிக்க” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம்..

“இப்பவும் அவ உங்களுக்கு மருமக தான் மா!” என்ற சொல்லுடன் வீட்டின் உள்ளே நுழைந்த சிற்பி கூடவே “என்னையும் உங்க மகனா ஏற்றுக்கோங்க. பிறகு ரதி உங்க மருமக தானே?” என்று அவன் அவர் தயக்கத்தையும் ஏக்கத்தையும் இலகுவான முறையில் சரிசெய்ய, அவன் கூற்றில் சிறிதே தயக்கம் இருந்தாலுமே அதை நீக்கியவர்

“ஆமா.. வர்மாவும் என் மகன் தான். அப்போ நீ என் மருமக தான். அதனால என் மருமகளுக்கு நான் செய்றேன். அதை எப்படி நீ வாங்க தயங்கலாம்?” என்று அவனுக்கு ஒத்துப் பேசியவர் இறுதியாக அவள் பெயரில் முன்பே அக்கவுண்ட் ஆரம்பித்து அவள் படிப்புக்கு வேண்டிய பணத்தைப் போட்டிருந்தவர் அதன் ஏ.டி.எம் மற்றும் பின் நம்பரை அவளிடம் தந்து படிப்புக்கான பணத்தை இதிலிருந்து தான் எடுத்து செலவு செய்ய வேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் திரும்பிச் சென்றார் அவர்.

இதெல்லாம் உன் பணத்தில் நான் படிக்க மாட்டேன் என்று சொன்னதற்காக யார் பணம் தந்தால் நான் ஏற்றுக்கொள்வேன் என்பதை அறிந்து கணவனின் வேலை தான் என்று தெரிந்தாலும் ஒரு வார்த்தை கூட இதைப் பற்றி அவனிடம் பேசவில்லை ரதி.

நாட்கள் கடந்ததே தவிர ரதியால் இயல்பு நிலைக்கு மாற முடியவில்லை. என்னதான் அவள் சிரித்துப் பேசி வலம் வந்தாலும் ஏன் அன்று அவளை சிற்பி படிக்க சொன்னபோது கூட துடுக்காகப் பேசியவள் அதன் பிறகு வந்த மைதிலியிடமும் நன்றாகப் பழகியவள் சில சமயங்களில் எங்கோ வெறித்துப் பார்த்த படி அவள் மொபையிலில் ஒரு பாட்டை மட்டும் அடிக்கடி வைத்து கேட்டு கொண்டு இருப்பதும் கூடவே

“வீடாளும் பெண்மை இங்கே

நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும்
ஓயாமல் கண்ணீர் சிந்தும்!
ஏனென்று கேட்கத்தான்
இப்போதும் ஆளில்லை..”


என்ற வரிகளை மட்டும் தன்னை மீறி முனுமுனுக்க ஆரம்பித்தாள் ரதி. இப்படி ஒரு நிலையில் மனைவி
அமர்ந்திருப்பதைக் கண்ட சிற்பிக்கு கவலையாக இருந்தது. வர்ஷினி மற்றும் ரேஷ்மாவின் விஷயம் அவளைக் குடைந்து கொண்டே தான் இருந்தது. எனவே டாக்டர் சொன்னது போல் இடமாற்றம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவன் அதை செயல்படுத்தவும் செய்தான் சிற்பி.

தன் மாமாவிடம் பேசி தாங்கள் டெல்லி போவதாகவும் அங்கே தான் செய்யவிருக்கும் பணிகளையும் விளக்கிக் கூறியவன் தன் தாத்தாவிடமும் பேசி டெல்லியில் தன் குடும்பமே தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்ல அதன்படியே அனைத்தும் நடந்து முடிய இறுதியாக தாங்கள் டெல்லி வரப்போவதை அவன் நிரல்யாவிடம் சொல்ல

“டேய் நிஜமா டா? அப்போ நீங்க எல்லோரும் வர்றது கன்ஃபார்ம் ஆகிடுச்சா? ஏய்.. ஜாலி ஜாலி!” என்று குதூகலித்தவள் பின் மென்மையாக

“இங்கே எனக்கும் கூட கல்யாணம் முடிவாகிடுச்சு வர்மா. அப்பாவோட பிஸினஸ் பாட்னர் சேதுராமன் அங்கிளோட சன் ரிஷி! இவ்வளவு நாள் லண்டன்ல இருந்தானே..” என்று சொல்லும் போதே நறுக் என்று பக்கத்தில் நின்று இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பத்மா அவள் தலையில் கொட்ட “ஸ்ஸ்… அம்மா!” என்று தலையைத் தடவியவள்

“அவர் தான் ரிஷி.. லண்டன்ல இருந்தார் இல்ல.. அவரும் அவங்க வீட்டுல இருக்கறவங்களும் இன்னைக்கு தான் பேசி முடிவு பண்ணிட்டுப் போனாங்க. இன்னும் மூணு மாதத்துல கல்யாணம்” என்று சிறு வெட்கத்துடன் சொன்னவள் “இரு வர்மா இதெல்லாம் அம்மா உன் கிட்ட மறுபடியும் சொல்லனுமாம்” என்ற சொல்லுடன் அவன் சொன்ன வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு தன் தாயிடம் போனை கொடுத்து விட்டு தனது அறைக்கு ஓடினாள் நிரல்யா.

இதோ நாளைக்கு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்ற நேரத்தில் சிற்பியை தனியே அழைத்த அவன் மாமா

“உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் வர்மா!..” என்று எந்த பீடிகையும் இல்லாமல் ஆரம்பித்து தான் கேட்க வந்ததை அவர் கேட்க அதற்கு நேர் கொண்ட பார்வையுடன் எதையும் மறைக்காமல் அதற்கான பதிலை அவன் சொல்லவும் அதை கேட்டு கண் கலங்க அவனை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்தவரோ

“நீ போய் வா டா ராசா! இங்கே இருக்கிற விஷயத்தை உன் இடத்திலிருந்து நான் பார்த்துக்கிறேன்” என்று உறுதி அளித்தவர் கூடவே அவன் கன்னம் தாங்கி “சீக்கிரமாவே அடுத்து ஒரு பொண்ணோ பையனோ பெற்று என் கையில கொடுத்துடு டா ராஜா!..” என்று கண்ணில் ஒருவித வலியுடன் அவர் கேட்க, முகத்தில் சிரிப்பு தவழ சரி என்ற சொல்லுடன் விலகிச் சென்றான் சிற்பி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN