சுவாசம் 14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் 14

கணவனின் சிறந்த தோழியாக
மனைவியும்,
மனைவியின் சிறந்த தோழனாக
கணவனும் மாறும்போது
அவர்கள்
சிறந்த தம்பதியாகிறார்கள்!...

அங்கு ரதியின் வாழ்வில் இப்படி ஒரு மாற்றம் வந்தது என்றால் இங்கு தங்கையான மதியின் வாழ்வில் வேறு ஒரு மாற்றம் நடந்தது.


அன்று திருமண இரவில் கணவனிடம் பேசியதிலிருந்து இன்று வரை மதியின் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழ வில்லை.

எப்போழுதும் மதி காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்து கணவனுக்கு நேரத்திற்கு உணவு கட்டிக் கொடுத்து வழி அனுப்பிய பின் பாட்டியுடன் அரட்டை பேச்சுகளுடன் சிறு சிறு வேலைகளை முடித்து விடுவாள். இப்போது வேலைக்கு வேண்டாம் குழந்தை பிறந்து கொஞ்ச நாள் கழித்து அவளை பாட்டி வேலைக்கு போகச் சொல்ல அதையும் தட்டாமல் ஏற்றுக் கொள்ள.. அதனால் மாலை நேரத்தில் அங்கிருக்கும் தெரு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பதும் மீத நேரத்தை தன் மேல் படிப்பிற்காக சில தகவல்களை சேகரிப்பதும் என்று அவள் வழக்கம் ஆனது.

கூடவே தன் கணவனை முன்பு காதலித்ததை விட பல மடங்கு காதலித்தாள். அவன் வர சிறிது நேரமானாலும் பலமுறை அவன் போனுக்கு அழைத்து என்ன ஏது என்று தவித்து விடுவாள். ஒரு நாள் அவன் மழையில் நனைந்து வர பாட்டி இருக்கிறார்கள் என்று கூட பாராமல் ஓடிச் சென்று தலை துவட்டி விட. அன்றே அவன் காய்ச்கலில் படுத்து விட ஒரு தாயாக இருந்து அவனுக்கு சகலமும் செய்து பார்த்துக் கொண்டாள் மதி. மற்றொரு நாள் இரவு அவன் படிக்கும் நேரத்தில் ஒரு தோழியாக இருந்து ஊக்கம் அளித்தாள்.

அதே மாதிரி அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் அவன் அவளுக்காக செய்வதை தடுக்கவோ மறுக்கவோ மாட்டாள். வெளியிடங்களில் கணவனுடன் கை கோர்த்து சுற்ற உறவுக்கார விழாக்களில் சிரித்த முகமாக அவனிடம் அரட்டை அடிக்க உரிமையுடன் அவன் சட்டைப் பையில் உள்ள பணத்தை எடுத்து செலவு செய்வதில் இருந்து பூவில் இருந்து தனக்கு வேண்டியதை சிணுங்களுடன் கேட்டு வாங்கிக் கொள்வது வரை இருப்பாள் அவள்.

ஏன் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தந்தையைப் பார்க்க ஊருக்குச் செல்லும் போது கூட இரண்டு நாள் தான் அங்கிருப்பாள். ஒருவாரம் இருந்து வா என்று மாறன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கணவனைக் காண ஓடோடி வந்து விடுவாள். ‘நான் உன்னைக் காதலித்தேன் இப்போதும் காதலிக்கிறேன் நாளையும் நான் சாகும் வரை உன்னைக் காதலித்துக் கொண்டு தான் இருப்பேன்’ என்று கணவனுக்குத் தன் சொல்லாலும் செயலாலும் தொடுகையாலும் பாசத்தாலும் உணர்த்திக் கொண்டு தான் இருந்தாள் மதி.

இப்படி எல்லாம் தன் காதலை பல வகையில் வெளிப்படுத்தும் மதி கணவனுக்கு தாம்பத்தியத்துடன் கூடிய காதலை மட்டும் தர மறுத்தாள்..

அவளிடமிருந்து தாய்மையுடன் கூடிய காதல் கிடைப்பதினாலேயே அவள் தர மறுக்கும் தாம்பத்தியத்துடன் கூடிய காதலை வலுக்கட்டாயமாக பெற அவன் விரும்பவில்லை. இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மாறனும் மதியும் கோவிலுக்கு செல்ல கணவன் அர்ச்சனை தட்டு வாங்கி வருவதற்குள் மதி மட்டும் சற்று ஒதுங்கி கோவில் வாசலில் நிற்க அந்த நேரம் மூன்று நான்கு பெண்கள் என தன் தோழிகளுடன் அந்த கோவிலுக்கு வந்த ஒரு பெண் மட்டும் மதியை நெருங்கி சற்று யோசனையுடன் எதையோ அவளிடம் கேட்க வந்தவள் பின் ஒரு தலை அசைப்புடன் விலகிச் செல்ல மதிக்கு தான் குழப்பமாகிப் போனது. ‘யார் இந்த பெண்? எதற்கு என்னிடம் எதையோ கேட்க வந்தவள் பின் தயங்கி விலகிப் போனாள்?’ என்ற யோசனையுடன் நின்றிருந்தவளை கணவனின் குரல் கலைத்தது.

பின் கணவன் மனைவி இருவரும் தங்கள் பூஜைகளை முடித்து கோவில் குளக்கரை படிக்கட்டில் அமர்ந்திருக்க.. அதே நேரம் வாசலில் பார்த்த அந்த பெண்களின் கூட்டம் இப்போது கீழ் குளக்கரை படியிலிருந்து மேலேறி வர அதில் மதியை யோசனையுடன் பார்த்த பெண் இப்போது இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்தவள் தன் தோழிகளை முன்னே அனுப்பி விட்டு இவர்களிடம் வந்தவள்

“ஹாய் மணிமாறன்! எப்படி இருக்கீங்க? நான் அப்பவே அறிவுமதியை வெளியே பார்த்திட்டு இவங்க நீங்க சொன்ன அறிவுமதி மாதிரி இருக்காங்களேனு நினைத்து பேச போனேன். ஆனா அவங்க தனியா நிற்கவோ பேச தயங்கினேன். உங்க கூட பார்த்திருந்தா நிச்சயம் பேசி இருப்பேன்” என்று அங்கு மாறன் பேச வழியே கொடுக்காமல் பேசிக் கொண்டே போனவள்

“ஹாய் அறிவு! ஐ யம் சுவாதி.. எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்?” என்று அவள் மதி முன் கை நீட்டி தன்னை அறிமுகப் படுத்த, மதி பதிலுக்குக் கை நீட்டி சுவாதியின் கையை குலுக்கும் போதே

“நாங்க நல்லா இருக்கோம் சுவாதி. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல ஆன்ட்டி அங்கிள் எப்படி இருக்காங்க?” என்று மாறன் பதிலுக்கு விசாரிக்க

“எல்லோரும் நல்லா இருக்கோம். எப்படியோ உங்க பாட்டியை சமாதானப் படுத்தி உங்க கல்யாணத்தை நடத்திட்டீங்க போல” என்றவளை இவர்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியுடன் மதி சுவாதியைப் பார்க்கவும்

சுவாதியோ “அச்சோ! உங்க கிட்ட நான் யாருனு சொல்லாமலே பேசிட்டே போறனே.. என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை தான். ஆனா உங்களை எனக்குத் தெரியும்” என்றவள்

“என் கல்யாணத்திற்காக வீட்டுல மாப்பிள்ளை பார்க்கும் போது தரகர் மூலமா இவர் போட்டோவும் ஜாதகமும் வந்தது. அதனால மேற்கொண்டு பேசலாம்னு என் அப்பா இவர் கிட்ட பேச, பிறகு இவரு என் நம்பரை எப்படியோ வாங்கி தனியா என் கிட்ட பேசனும் சொல்ல அப்படி பேச போன போது தான் உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை என்றும் சீக்கிரமா பாட்டியை சமாதானம் செய்து உங்களையே கல்யாணம் பண்ணுவேனு சொன்னார்.

இவருக்கு தெரியாம இவர் பாட்டி ஜாதகம் கொடுத்துட்டாங்னு விளக்கம் சொன்னார். அப்போ தான் அவர் பர்சுல வைத்திருந்த உங்க போட்டோ காட்டினார். அதனால தான் உங்களை எனக்குத் தெரியும்” என்று விளக்கம் சொன்னவள் கூடவே “ஹேப்பி மேரீட் லைஃப்” என்ற சொல்லுடன் விலகிச் சென்றாள் அந்த பெண்.

கணவன் தன்னை காதலிக்கிறான் என்று மதிக்கு தெரியும். ஆனால் தங்கள் காதலை மதித்து அதை திருமணத்தில் முடிக்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லையே என்பது தான் மதிக்கு கோபம். இப்போது கூட அக்கா வாழ்க்கை சரியாகவே தானே பாட்டியிடம் பேசி தன்னை திருமணம் செய்தான் இல்லை என்றால் அவர் பாட்டி சொன்ன பெண்ணை தானே மணந்திருப்பார் என்ற எண்ணத்திலும் கோபத்திலும் தான் அவள் அவனை விட்டு விலகி இருந்தாள்.

ஆனால் ‘இப்போது இந்த பெண் சொல்வதைப் பார்த்தால் என்னைத் தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று தானே சொல்லி இருக்கிறார்? பிறகு ஏன் அன்று என்னை வேணாம்னு சொன்னார் எதாவது காரணம் இருக்குமோ’ என்று கொஞ்சமே கொஞ்சம் தங்கள் காதலுக்காக கணவன் செய்த செயலை யோசித்து மகிழ்ந்தவள் , அடுத்த வினாடியே அந்த மகிழ்ச்சியை துடைப்பது போல் ‘ஆமா.. பெருசா பாட்டி பார்க்கிற பொண்ணுங்க கிட்ட எல்லாம் மதி தான் என் மனைவினு சொன்னாரே தவிர இந்த ஜென்மத்துல மதி மட்டும் தான் என் மனைவினு பாட்டி கிட்ட சொன்னாரா? அன்னைக்கு பேசும் போது தான் சொல்லலை. அதற்கு பிறகாவது சொல்லி இருக்கலாம் இல்ல? என்ன விட்டு கொடுத்துட்டார் தானே?’ என்று பழைய குருடி கதவைத் திறடி என்ற பாணியில் யோசித்து மறுபடியும் மனதால் துவள ஆரம்பித்தாள் அவள்.

வீட்டிற்கு வந்தும் இதே யோசனையாகவே இருந்தவள் ஒருவேளை அப்படி கணவன் சொல்லி இருந்தால் என்று எண்ணி அதை கணவனிடமே கேட்க நினைத்தவள் அன்று அவர் ஏதோ சொல்ல வரும்போது கேட்க மறுத்து விட்டு இன்று எப்படி கேட்பது என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியாமல் தவித்தவள் இறுதியாக பாட்டியிடமே கேட்பது என்ற முடிவுக்கு வந்தவள் அன்று இரவு உணவைத் தயார் செய்யும் போது உதவிக்கு வந்த பாட்டியிடம்

“உங்க பேரனுக்கு பொண்ணு பார்த்திங்களாமே யாரோ சுவாதினு! அவங்களை இன்னைக்கு கோவில்ல பார்த்தேன். சுவாதியே வந்து எங்க கிட்ட பேசினாங்க. அப்போ உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க” என்று இவள் அவருக்குத் தூண்டில் போட...

“அது யாருடி சுவாதி? அவ மூஞ்சை பார்த்தேனா இல்லை நான் மொகரையத் தான் பார்த்தேனா? யாரோ போலீஸ்காரன் மவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்கனு தரகர் மணியோட ஜாதகத்தை வாங்கிட்டுப் போனான். அவ்வளவு தான்..

இது எப்படியோ உன் புருஷனுக்கு தெரிஞ்சி கையோட அங்கே போய் அவங்க கிட்டயிருந்து ஜாதகத்த வாங்கிட்டு வந்தவன் அதை என் கையில கொடுத்து இந்த ஜென்மத்துல மதி தான் என் பொண்டாட்டி. முடிஞ்சா அவள பண்ணி வைங்க இல்லனா கடைசிவரை இப்படியே இருந்துட்டு போறேன். அதனால வேற பொண்ணு எல்லாம் பார்க்காதிங்கனு இல்ல என் பேரன் சொல்லிட்டுப் போனான்? இதுல நான் என்னமோ அவளுக்கு பூ வச்சி பரிசம் போட்ட மாதிரி இல்ல அவ சொல்லி இருக்கா..” என்று இவர் கோபப்பட

“ஐயோ பாட்டி! அவங்க சாதாரணமா தான் விசாரிச்சாங்க” என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவளின் இதயமோ ஆனந்த குத்தாட்டம் போட்டது. ‘ஆயிரம் எங்களுக்குள் நடந்தாலும் எங்க காதல அவர் விட்டுக் கொடுக்கல தான?’ என்ற எண்ணம் தான் அதற்கு காரணம்.

தன் கணவனின் காதல் புரிந்ததாலேயோ என்னமோ அவனை நெருங்குவதற்கு சிறு பள்ளமாக இருந்த தடையும் இப்போது விலகி விட முன்னை விட பல மடங்கு பெருகியிருக்கும் தன் காதலை அவனிடம் எப்படி சொல்வது என்று தவித்தவள் இரவு உணவுக்குப் பிறகு எப்போதும் கணவன் டிவி பார்த்து விட்டு தங்கள் அறைக்கு வருவதற்குள் தூங்கி விடுபவள் இன்று கட்டிலில் அமர்ந்து கொட்ட கொட்ட விழித்த படி நகம் கடித்துக் கொண்டிருந்தாள் மதி.

வழக்கமாகத் தான் உள்ளே வரும் நேரத்தில் தூங்காமல் விழித்திருக்கும் மனைவியைப் பார்த்தவன்

“என்ன விஷயம் மதி?” என்று அவன் கேட்க அவளிடம் பதில் இல்லை குனிந்த தலையை நிமிர்த்தவும் இல்லை. அவள் நெற்றியில் கை வைத்தவன்

“உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” என்று அவன் கேட்க, நெற்றியில் இருந்த அவன் கையை இறுக்கிப் பிடித்தவள் பின் அதை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தியபடி அவன் மார்பில் சாய்ந்து

“என்னை மன்னிச்சிடுங்க மாறன். எங்கே நம்ப காதலை விட்டுக் கொடுத்திட்டிங்களோனு நினைத்து என்னையும் வருத்திகிட்டது மட்டும் இல்லாமல் உங்களுக்கும் கஷ்டம் கொடுத்துட்டேன்” என்று அவள் நைந்த குரலில் சொல்ல

“நம்ம காதலை விட்டுக் கொடுக்கிறதா? அது உன்னால முடியுமா மதி?” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்கவும் அவன் மார்பிலிருந்து முகத்தை எடுக்காமலே இல்லை முடியாது என்பதாக தலையாட்டினாள் மதி.

“அப்போ என்னால மட்டும் எப்படி மதி முடியும்? அதுவும் உன்னை பார்த்ததிலிருந்து உன் நினைவா உன்னை சுற்றி சுற்றி வந்து உன்னிடம் என் காதலைச் சொல்லி அதை நீ ஏற்றுக் கொள்ளும் வரை காத்திருந்தவனான என்னால் எப்படி அதை செய்ய முடியும்? எதை வைத்து அப்படி நினைச்ச? அந்த அளவுக்கு உனக்கு என்மேல அவநம்பிக்கையா?” என்று குரலில் வலியை காட்டி கேட்டவன் “இறுதியாக நாம் பேசும் போது பாட்டி காட்டுற பெண்ணையே நான் கட்டிக்குவேனு சொல்லிட்டு வந்தனே அதை வைத்தா?” என்று அவன் சற்று கோபப் பட

அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஆமாம் என்று தலையாட்டினாள் அவள்.

“அடி லூசுப் பெண்ணே! இதையா இத்தனை நாள் மனசுல போட்டு வெச்சிருந்த? அது.. பாட்டியும் புரிஞ்சிக்காம நீயும் புரிஞ்சிக்காம என்னைப் பற்றி இரண்டு பேரும் யோசிக்காம வார்த்தைகளை விடறிங்களே என்ற கோபத்துல உன் கிட்ட அப்படி பேசிட்டேன் டி. ச்சே… அதை போய் நம்பிட்டு.. இப்போ மட்டும் எப்படி? ஓ…. இன்று சுவாதி சொன்னதால வந்த ஞானோதயமா இது?” என்று அவன் கடித்த பற்களுக்கிடையே கேட்கவும்

“சாரி சாரி.. ஐயம் ரியலி சாரி மாறன்!” என்று கெஞ்சியவள் அன்று அக்காவோட விஷயமா நானும் ரொம்ப ஒடிஞ்சி போய் இருந்தேன். அதுல பாட்டி கூட சேர்ந்து நீங்களும் அப்படி சொல்லவோ நான் உண்மைனு நம்பிட்டேன். அக்கா விஷயம் சரியாகலைனா நிச்சயம் நீங்க அதை செய்து இருப்பீங்கனு நினைச்சேன்” என்று அவள் தன் தவறை ஒத்துக் கொள்ள, அவள் கூறியதைக் கேட்டு இறுக்கி அணைத்தவனோ

“இந்த பிறவியில் என்னால் அதை செய்ய முடியாது டி கண்ணம்மா..” என்று அவன் உருக

“இப்போ எனக்கு அது தெரியுது மாறன்..” என்று அவளும் உறுக சற்று நேரத்திற்கு இருவரும் எதுவும் பேசாமல் இருவரும் மற்றவர் கை அணைப்பில் இருந்தனர். அந்த அணைப்பில் இருந்து முதலில் விலகிய மதி

“நான் இதை பற்றி அன்றே கேட்டிருந்தா நீங்க சொல்லி இருப்பிங்க இல்ல? நான் மட்டி மக்கு.. பேச வந்த உங்களையும் பேச விடாம பண்ணிட்டேன்” என்று அவள் குறை பட, மனைவியைக் கட்டிலில் உட்கார வைத்து அவள் பக்கத்தில் அமர்ந்தவன்

“அவ்வளவு வெறுப்பு என் மேல” என்று அவன் கஷ்டப் படவும்

“அதை ஏன் வெறுப்புனு சொல்றிங்க? உங்கள யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத உரிமையால் வந்த ஆதங்கம்னு சொல்லுங்க” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவள்

“ஏன் மாறன் நான் சொல்ல வேணாம்னு சொன்னா அப்போ கடைசி வரை எதையும் சொல்லாமலே இருப்பிங்களா? என்னை இழுத்து நாலு அறை விட்டு நான் சொல்றதை நீ கேட்டு தான் டி ஆகணும்னு சொல்லி இருக்க மாட்டீங்களா?” என்று மதி கணவனிடம் குறுக்கு கேள்வி கேட்க

“அடிக்கிறதா? அதுவும் என் மதியையா? ஏன் அன்பாவோ அதட்டியோ சொன்னா நீ கேட்க மாட்டியா என்ன? என்னால் அதை செய்திருக்க முடியும். ஆனா வேணாம்னு தான் நான் விட்டுட்டேன்.

சின்ன வயசுலேயே எனக்கு அப்பா அம்மா இல்ல மதி. பாட்டி தான் என்னை வளர்த்தாங்க. இதுவரை தான உனக்கு தெரியும்? ஆனா அவங்க என்ன வளர்த்தது என் சொந்தகாரர்களுக்கு பிடிக்காம பாட்டி இருக்கிறப்போ அன்பா இருக்கிற மாதிரி நடிக்கறவங்க பாட்டி இல்லாதப்போ என்ன கரித்து கொட்டி ச்சீ… ச்சீனு விரட்டுவாங்க. அதையெல்லாம் அப்போ பாட்டி கிட்ட வந்து சொல்லுவேன். உடனே பாட்டி சண்டை போடுவாங்க. நான் அவங்க கிட்ட எல்லாம் பார்த்தியா எனக்கு என் பாட்டி இருக்காங்கனு பெறுமையா சொல்லி சந்தோஷப்படுவேன் .

ஒரு வயசுக்குப் பிறகு என் சித்தி சித்தப்பா மாமா பசங்க எல்லாம் என்ன டா சொக்கு பொடி போட்ட பாட்டிக்கு அவங்களோட மற்ற பேரப்பிள்ளைகளான எங்களுக்கு பாசத்தை காட்டாம ஒரு படி அதிகமா உனக்கு மட்டும் காட்டுறாங்கனு என்ன ஒதுக்க ஆரம்பிச்சாங்க .

அதே மாதிரி தான் மாமா சித்தியும். எங்க அம்மா கிட்டேயிருந்து எங்களை பிரிக்க வந்தவன் நீ சொல்லி சொல்லியே என்ன கஷ்டப்படுத்துவாங்க. ஏன் இப்படியெல்லாம் பேசுறாங்கனு எனக்கு ஒரு வயசு வரை தெரியலை. பின் தெரிந்த பிறகு நம்மால் எதுக்கு சொந்தத்துக்குள்ள பிரச்சனைனு பாட்டியை விட்டு தூரமா போய் ஹாஸ்டல்ல தங்கி படிக்க ஆரம்பித்தேன்.

அதனால அப்பவே எனக்கு ரொம்ப பொறுமை அனுசரிப்பு விட்டுக்கொடுக்கும் பழக்கம் எல்லாம் தன்னால வந்திடுச்சு. பாட்டியோட அன்பு பாசத்தை தான் அவங்களுக்கு விட்டுக் கொடுத்துப் போனனே தவிர அவங்க கடைசி காலத்துல அவங்களை யாருகிட்டையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற முடிவில் தான் நான் இருந்தேன். அதனால தான் மதி நீயா அவங்களானு வரும்போது ஒரு வார்த்தைக்கு கூட அவங்கள என்னால விட்டுக் கொடுக்க முடியல” என்று அப்போதைய வலி வேதனையுடன் இப்போது அவன் தன்னிலை விளக்கம் கொடுக்கவும், அவனை இழுத்துத் தன் தோள் மேல் சாய்த்தவள்

“எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிங்க! எங்கேயோ ரோட்டோரம் அநாதையா இருக்க வேண்டிய உங்களை படிக்க வைத்து ஒழுக்கத்தோட இன்று ஒரு முழுமையான மனிதனா பாட்டி எனக்குத் தந்திருக்காங்களே அதுக்காகவே நீங்க அவங்கள விட்டுக் கொடுக்காம பேசினது தப்பு இல்லைங்க” என்று அவள் அவனுக்காக பேச

“அதுவும் இல்லாம நீ எனக்கு எண்ணெய் தேய்த்து விட்டு சாப்பாடு பரிமாறி என் தேவைகளைப் பார்க்கிறது எல்லாம் முன்னே என் பாட்டி எனக்கு செய்திருக்காங்க மதி. இவ்வளவு நாள் கழித்து அதெல்லாம் உன் மூலமா எனக்குத் திரும்ப கிடைக்கவும் எனக்கு நமக்குள்ள நடக்கவிருந்த தாம்பத்தியத்துக்கான காதல் பெரிசா தெரியல மதி. அன்று உன் கிட்ட நான் எல்லாத்தையும் வலுக்கட்டாயமா சொல்லி இருந்தா நிச்சயம் நமக்குள்ள புரிதல் இருந்திருக்கும் தான். ஆனா அதை விட எனக்கு இதெல்லாம் தான் தேவைனு பட்டுது” என்று இவ்வளவு பெரிய ஆண் மகனாக வளர்ந்த பிறகும் தாயின் அரவணைப்புக்கு ஏங்கும் குழந்தை என அவன் பேச

மனைவியை ஏன் பெண் என்றாலே அதற்கு மட்டும் தான் என்று பார்க்கும் சில ஆண்களின் மத்தியில் தன் கணவனை நினைத்து பெறுமை பட்டவள் கண்ணில் கண்ணீருடன் அவன் முகத்தை கைகளில் ஏந்தி முகம் எங்கும் முத்தமழை பொழிய அதை ஒரு கட்டத்திற்கு மேல் தனதாக்கியவன் பின் அவள் காதின் ஓரம் தன் உதட்டை கொண்டு சென்றவனோ

“என்ன மதி! இன்னைக்கு நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. உனக்கு ஓகேவா?” என்று அவன் கிசுகிசுத்த குரலில் கேட்க, வாடி என்று கூப்பிடாமல் அனுமதி கேட்டு இப்போதும் நின்ற கணவனை நினைத்து மனதில் சந்தோஷத்துடன் சிரிப்பும் வர

“அடேய் மாறா! நீ அநியாத்துக்கு நல்லவனா இருக்கியே.. நீ எதற்கும் சரிப்பட்டு வர மாட்ட.. நானே கோதாவில இறங்கினா தான் உண்டு” என்றவள் கணவனைப் படுக்கையில் தள்ளி அவன் மேல் சரிந்து அவன் இதழில் முத்தம் தர நினைக்க ஆனால் அவனோ ஒரே வினாடியில் அவளைப் புரட்டி கீழே தள்ளி உடனே அவள் மேல் படர்ந்து அவள் இதழ்களை தனதாக்கினான் அந்த பொறுமைக்கார மாறன் .

அந்த முத்தமே அவர்கள் இருவரின் காதலை மெருகேற்ற உதவ விடிய விடிய அதை செவ்வனே செய்தார்கள் அந்த இளம் காதல் ஜோடிகள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN