சுவாசம் - 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 15

ஆண்களுக்கு அன்பின்
அர்த்தம் தெரிவதில்லை
என தவறாக
எண்ணி விடாதீர்கள்..
அவன் நேசிக்க ஆரம்பித்தால்
அன்னையின் அன்பையும்
தோற்கடித்து விடுவான்!!!

இதோ சிற்பி முடிவு செய்த படி டெல்லிக்கு வந்தாகிவிட்டது. ஆனால் இங்கு வருவதற்குள் ரதியிடம் படாத பட்டு விட்டான் அவன். தான் எந்த தேசத்துக்கு சென்றாலும் சரி தான் வாழ்ந்த குப்பத்தையும் அங்கு பேசிப் பழகிய மொழியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற உறுதியில் இருந்தவள் ரதி. அதெல்லாம் விட சிறுவயதிலேயே தன் தந்தைக்கும் குடும்பத்திற்குமே தாயாய் இருந்ததால் அவர்களை விட்டுப் போகக் கூடாது என்று வாழ்ந்தவள்.

ஆனால் இன்று விதியோ சிற்பி மூலமாய் அவளுக்கு அந்த பிரிவைத் தந்தது. அதை கூட தாங்கிக்க முடியாமல் தன்னை ஒரு நெருக்கடியில் வைத்து தன்னை அழித்தவனையே அவள் தந்தை திருமணம் செய்த சொன்ன பிறகு கூட தன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தாளே தவிர தன் வீட்டார் யாரையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை ரதி.

வாரத்திற்கு இரண்டு முறை என்று இப்போதும் தன் தந்தை வீட்டிற்குப் போய் அவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து வருபவளுக்கு கணவன் திடீர் என்று டெல்லிக்கு கிளம்பச் சொல்லவும் அவனை மட்டும் போகச் சொன்னவள் தானும் குழந்தையும் இங்கேயே இருப்பதாக சொல்லி ரதி மறுக்க சிற்பியின் எந்த பிடிவாதமும் இம்முறை அவளிடம் எடுபட வில்லை.

பிறகு அவளின் தந்தை தான் அவளிடம் பேசி ஒருவழியாக சம்மதிக்க வைத்து தாங்களும் கொஞ்ச நாளில் அங்கு வருவதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் கந்தசாமி. டெல்லி வந்த சிற்பி குடும்பத்தை போ என்று விரட்டவில்லை அவன் தாத்தா. எனக்கு பிறகு என் அரசியல் வாழ்வுக்கு நீ இருப்பேன் என்றால் மட்டும் வா என்ற நிபந்தனையை மட்டும் வைத்தார் அவர்.

அவர் மனைவி கங்கேஷ்வரியோ அவருக்கும் ஒரு படி மேலே போய் வெளி உலக பகட்டு வாழ்விற்காக ஆரத்தி சுற்றி இவர்களை வரவேற்று ரதிக்கும் குழந்தைக்கும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கிக் கொடுத்தவர் அதன் பிறகு தன் கடமை முடிந்தது போல் விலகிக் கொண்டார்.

ரதி மேற்கொண்டு படிக்கப் போகிறாள் என்ற போது கூட தனக்கு லேடிஸ் கிளப் மீட்டிங் இருப்பதாகவும் வெளி வேலைகளைப் பார்க்கவே சரியாக இருக்கும் என்பதால் குழந்தையை கிரஷ்ஷில் சேர்த்துவிட்டுப் போ என்று அவர் சொல்லி விட.

பத்மாவதி தான் நிரல்யாவின் திருமணம் முடிந்த பிறகு சந்திராவை தான் பார்த்துக் கொள்வதாக நம்பிக்கை தர அப்போது தான் ரதியாலும் சிற்பியாலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

இங்கு வந்ததும் சிற்பி பார்த்த முதல் வேலை தன்னுடன் படித்த வக்கீல்களோடு சேர்ந்து இனி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பதிவாகும் எந்த வழக்கிலும் அந்த அயோக்கியர்களுக்கு சாதகமாக வாதாடுவதில்லை என்ற வக்கீல்களின் உறுதிமொழியுடன் ஒரு அமைப்பையும் அமைத்து அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான் அவன்.

அதுமட்டும் இல்லாமல் ஒரு நாள் சிற்பி வேலை முடித்து சற்று முன்னதாகவே வீட்டுக்கு வந்தவன் “ரதி சீக்கிரம் கொஞ்சம் ரெடி ஆகு. நாம இப்போ வெளிய போகனும்” என்று பரபரப்புடன் அவளிடம் சொல்ல

அவன் பரபரப்பு புரிந்தாலும் எங்கு என்று கேட்காமல் ஒரு அலட்சியத்துடன் “நான் வரலை எனக்கு வேலை இருக்கு நீ மட்டும் போங்க” என்று இவள் சொல்ல

“ஓய்…. அப்படி என்ன டி பெரிய வேலை? நான் எவ்வளவு பெரிய வேலைய முடிச்சிட்டு வந்து இருக்கேன். நீ என்னடானா ரொம்ப சலிச்சுக்கிற. நான் ஒண்ணும் டைம் பாஸ் பண்ண உன்ன கூப்பிடல. நீ யோசிச்சி உன்னால் செய்ய முடியுமானு கேட்ட விஷயத்த நெனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கேன். அது என்னனு நீயே வந்து பாரு” என்று அவன் விடாபிடியாக நிற்க இவ்வளவு தூரம் அவன் பேசியதால் சிறிது யோசித்தவள்

“பாப்பா தூங்குறா..” என்று அவனுக்கு நினைவு படுத்த

“நான் சொர்ணா பாட்டியை (வேலைக்கார பாட்டி) பார்த்துக்க சொல்றேன்” என்று அவன் அதற்கும் வழி சொல்ல அதன் பிறகே சம்மதித்து கிளம்ப ஆரம்பித்தாள் ரதி. எப்போது அவனிடம் தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டினோலோ அன்றிலிருந்து இப்போது எல்லாம் அதிக பிடிவாதத்தை தவிர்த்திருந்தாள் ரதி.

காரில் கொஞ்ச தூரம் சென்றதும் பெரிய அடுக்குமாடி கட்டிடம் வர அதனுள்ளே அழைத்துச் சென்றவன் லிப்டிலிருந்து அவர்கள் இறங்க வேண்டிய தளம் வந்ததும் இறங்கவிருந்த மனைவியைக் கை பிடித்து தடுத்தவன் ஒருவித எதிர்பார்ப்புடனும் டென்ஷனுடனும் “ரதி!” என்றழைக்க

இப்படி கணவனை ஒருவித டென்ஷனுடனும் தவிப்புடனும் அவள் பார்ப்பது இது தான் முதல் முறை. ஏதோ அவன் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவள் நின்று என்ன என்பது போல் பார்க்க

“ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. ஆனா அத உன்னோட கைய பிடிச்சு கிட்டு போய் காமிக்கணும்னு ஆசைப்படறேன்” என்றவன் அவள் அனுமதி தருவதற்கு முன்பே மனைவியின் இடது கை விரல்களைத் தன் வலது கை விரல்களோடு கோர்த்தவன் அங்கிருந்த ஒர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றவன் உள்ளே ஓர் அறையில் ஒரு சுழல் நாற்காலியில் அமரவைத்து விலக அவளோ தன் கண் எதிரில் பார்த்த காட்சியில் கண்கள் விரிய மெய் மறந்து அமர்ந்து விட்டாள்.

“ரதி! எப்படி இருக்கு?” அவனிடம் ஒரு எதிர்ப்பார்ப்பு

“சிற்பி! என்ன போய் எம்.டி யா ஆக்கி இருக்க.. நான்..”

“உன்னால மட்டும் தான் ரதி இதை சரியான முறையில் வழி நடத்த முடியும். அதற்கான தகுதி டெடிக்கேஷன் வில் பவர் எல்லாம் உன் கிட்ட தான் இருக்கு” என்று அவன் உறுதிபடவும் பெருமையாவும் சொல்ல,..

அவனிடமிருந்து பார்வையை விலக்கியவள் அந்த அறையிலிருந்த சுவர்களைப் பார்வையிட அங்கு சுவர் முழுக்க முதல் பெண் மருத்துவராய் இருந்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டியின் புகைப்படம் அவருடைய பெயர் மேலும் அவருடைய சாதனை என்று ஆரம்பித்து ஒவ்வொரு பெண்ணாக இன்று வின்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லா வரை இருந்தது. அதெல்லாம் பார்த்து அவளுக்கு கொஞ்சம் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்க அதை அவள் முகத்திலிருந்தே அறிந்தவன் அதைப் போக்கும் பொருட்டு

“இந்நேரம் நீ கொஞ்சமாவது யூகித்து இருப்பனு நினைக்கிறேன். ஆமா.. இது பெண்களுக்காக நடத்தப் படுற அமைப்பு. பல துறைகள்ல பல திறமைகள் இருந்தும் சரியான வழிகாட்டுதலோ பொருளாதார உதவியோ இல்லாம கஷ்டப்படற பெண்களுக்கானது இந்த மையம். அதுகூட சேர்த்து பாலியல் துன்புறத்தலோ அல்லது அது சம்பந்தமா வேற எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பெண்கள் நம்ம கிட்ட தொடர்பு கொள்ளலாம்.

நாம அவங்கள கோர்ட் கேசுனு அலைக்கழிக்காம அவங்க பத்தின விபரங்களை ரகசியமா வச்சிருந்து அவங்கள பாதுகாத்து பிரச்சினையைத் தீர்த்து வைத்து நீதி வாங்கித் தரதும் முக்கியமான வேலை. முதல்ல இந்த அமைப்புக்கு சந்திரா பெண்கள் பாதுகாப்பு மையம்னு தான் பெயர் வைக்கலாம்னு நெனச்சேன். ஆனால் அது ரொம்ப சாதாரணமா ஏதோ பத்தோட ஒன்னா மத்த மாதர் சங்கம் மாதிரி இதையும் மத்தவங்க நெனைக்க கூடாதுனு யோசிக்கிறேன். நீயே ஒரு நல்ல பெயரா சொல்லேன் ரதி” என்று ஆர்வத்துடன் சிறு பிள்ளையென அவளிடமே அவன் கேட்க

“இப்படி திடீர்னு கேட்டா எப்படி சொல்ல? சரி.. கொஞ்சம் டைம் குடு சிற்பி.. யோசிச்சு சொல்றேன்” எனவும்

“ஒன்னும் அவசரம் இல்ல.. நீ நிதானமா யோசிச்சு சொல்லு.. உனக்கு வேற ஒன்னு காமிக்கிறேன் வா” என்றவன் இப்போது அவள் கையைப் பிடித்து மீண்டும் அந்த அலுவலகத்தின் முகப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மாட்டியிருந்த சிறிய துணியை விலக்க அங்கு ‘for the women by the women of the women’ என்ற பெயர்ப் பலகை இருந்தது. கூடவே கதவில் பித்தளை தகட்டில் ‘managing director’
கீழே திருமதி. க. ரதிதேவி சிற்பிவர்மன் என்று இருக்க அவள் கை விரல்களாலேயே அந்த எழுத்தை வருடியவன்

“உனக்கு உயிர் கொடுத்து இந்த உலகத்தோடு நீ வாழ வழி செய்து, எதிர்காலத்தில் நீ பல சாதனைகள் படைக்க தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தந்த உன் அப்பாவின் முதல் எழுத்தே உனக்கு இனிஷியலா இருக்கட்டும். அதன் பிறகு உனக்கு சகலத்திலேயும் துணையா இருக்க கணவனா வந்த நான் உன் பெயருக்கு பின்னாடியே இருக்கேன்...” என்று அவன் பெயர் பலகையில் உள்ளதை சொல்லி விளக்க ரதியால் அந்நேரம் மெய்மறந்து அவன் முகத்தைப் பார்க்கத் தான் முடிந்தது. அதில் அவனுள் ஏதேதோ மாற்றங்கள் நடந்தாலும் அதையெல்லாம் தவிர்த்தவன் பிறகு அவளை உள்ளே அழைத்துச் சென்று

“இப்போ இந்த அமைப்பை பற்றி சொல்கிறேன் நல்லா கேட்டுக்க” என்று சொல்ல ஆரம்பித்தான்.

“பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்குப் போகும் பெண்கள் அதே போல் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு ஏதாவது தெரிந்த மற்றும் தெரியாத ஆண்களால் பாலியல் துன்புறத்தல் மூலம் பேச்சாலோ செயலாலோ தொல்லை அனுபவித்தால் அதை பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்ல முடியாத பட்சத்தில் அதாவது அவர்களின் போட்டோ வீடியோ என்று அந்த ஆணிடம் சிக்கியிருந்தால் அவர்கள் நேரடியாக நம்மிடம் தொடர்பு கொண்டு நாம் கொடுக்கும் ஆலோசனைப் படி வழி நடக்கலாம்.

அவர்களின் இரகசியம் இங்கு காக்கப்படும். கூடவே அவர்கள் பெயர் வெளியே தெரியப்படுத்தாமல் அந்த அயோக்கியர்களுக்கு தக்க தண்டனை வாங்கி தரப்படும். இது தான் அவங்க நமக்கு கால் பண்ண வேண்டிய நம்பர்” என்று ஒரு போர்டை எடுத்து அதில் உள்ள நம்பரை காட்டியவன் “இங்கு முழுக்க முழுக்க ரிட்டயர் ஆன ஐ.பி.எஸ் மற்றும் மிலிட்டரி ஆபிசர்ஸ் வேலைக்கு வைக்கலாம்னு இருக்கேன்.

“இதே மாதிரி சென்னையிலும் ஒரு ஆபிஸ் பில்ட் பண்ண போறேன். அங்கே மைதிலிம்மாவ பார்த்துக்க சொல்லிட்டேன். மாதத்துக்கு ஒரு முறை சில முக்கிய இடங்கள்ல கேம்ப் போட்டு விழிப்புணர்வு வார்த்தைகள எடுத்துச் சொல்லப் போறோம். ஸ்கூல்ல கட்டாயம் தற்காப்பு கலையும் செக்ஸ் கல்வி அவசியம்னு வலியுறுத்தப் போறோம்.

ஏதோ நம்மால் முடிந்த சின்ன விதை ரதி. இதுவே பிற்காலத்தில் வேறூன்றி பல இடங்களில் பெரிய விருட்சமாக வளர்ந்து எல்லோருக்கும் நன்மை செய்யட்டுமே” என்று அவன் உற்சாகமாகச் சொல்ல

“ஏன் சிற்பி அப்போ நாங்க எத்தனை பிறவி எடுத்தாலும் எங்கள நாங்களே தற்காப்புக் கலைகளைக் கற்றுப் பாதுகாக்கவும், ரோட்டில் இறங்கி விழிப்புணர்வு என்ற பெயரில் மனிதச்சங்கிலி போட்டுக்கனும்னா அப்போ ஆண்களான நீங்க திருந்த வழியே இல்லையா? உங்களுக்கு உயிர் கொடுத்து நீங்க பிறக்க ஒரு தாயா, சாகறவரை உங்க இன்ப துன்பங்களில் பங்கேற்று உங்க வம்சத்துக்கு அடுத்த தலைமுறையைத் தர ஒரு மனைவியா, உங்களை அன்பு பாசத்துல திளைக்க வைத்து கனவுகளை நனவாக்க மகளா நாங்க இருக்கோம். இதையெல்லாம் விடவா உங்க காம வெறிகளை தீர்த்துக் கொள்ள கழுகா எங்களை வட்டம் இடறீங்க? ஆனா அதுக்குத் தான் நாங்க விரும்பியும் விரும்பாமலும் விபச்சாரி என்ற தொழிலை செய்றோமே... அங்க போய் தீர்த்துக்க வேண்டியது தானே?” என்று அவள் கனத்த இதயத்துடன் கேட்கவும்

இதுவரை அவனிடமிருந்த உற்சாகமெல்லாம் வடிய மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முதன் முறையாக தடுமாறினான் சிற்பி.

இதற்கு சிற்பி மட்டும் இல்லை எந்த ஆணால் தான் பதில் சொல்ல முடியும்? அதையே யோசித்தவள் “ச்சு..” என்ற சலிப்புடன்.

“இதெல்லாம் தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு அறிந்து கூடவே தனக்கு என்ன நடக்கப் போகுதுனு தெரிந்தவங்களால தான் சுயநினைவோட இருந்து நம்மை அணுக முடியும். அதே நீ எனக்கு போதை மருந்து கொடுத்த மாதிரி யாராவது எந்த பொண்ணுக்காவது கொடுத்து அநியாயம் செய்திருந்தால்?..” என ரதி கண்ணில் கனலோடு அவன் செய்ததை நினைவு படுத்திக் கேட்கவும்

மனைவி சொன்னதைக் கேட்டு ஒரு வினாடி தன் கண்களை மூடித் திறந்தவனின் கண்ணில் அவளை விடவும் கனலோடு கூடவே பரிதவிப்பு குற்றயுணர்ச்சி கையாலாகாத தனம் என்று இப்படி ஏதேதோ பாவங்கள் அவள் பார்வையில் பட அதை அவள் யோசிக்கும் போதே ஒரு முடிவுடன் தன் வலது கையை சிற்பி வேகமாக அங்கிருந்த சுவற்றில் மோதிக் கொள்ள

விருப்பமே இல்லாமல் சிற்பி செய்த அநியாயத்தையும் மீறி தந்தை சொன்ன ஒரே வார்த்தைக்காக சிற்பியைக் கல்யாணம் செய்தவள் தான் ரதி. அவன் அவளிடம் தவறாக நடந்துக்க மாட்டேன் என்று சொன்ன படியால் இன்றுவரை இப்படிப் பட்ட பேச்சுகளை அவள் பேசியது இல்லை.

அன்று ரேஷ்மா சுவாதி விஷயத்தில் தன்னை மீறி கத்தியதோடு சரி. அதன் பிறகு இன்று தான் அவன் செய்ததை எல்லாம் பேசி குத்திக் காட்டுகிறாள். தான் நின்ற நிலையிலேயே ஒருவித அதிர்ச்சியுடன் அவள் அவன் செய்கையையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ எவ்வளவு ஓங்கி அடித்தும் உடைந்து துவளாத தன் கையின் மேல் ஆத்திரம் கொண்டவனோ அந்த அறையை கண்ணில் வெறியுடன் சுற்றித் தேடிப் பார்க்க ஒரு மூலையில் அவனுக்கு சாதகமான பொருளான கனமான இரும்பு கம்பி இருக்கவும் தாவிச் சென்று அதை எடுத்தவன் தன் இடது கையால் ஓங்கித் தன் மணிக்கட்டை அவன் குறி பார்க்கவும், அப்போது தான் தன் பிரம்மையில் இருந்து வெளி வந்தவளோ “ஐயோ!” என்ற கூவலுடன் கணவன் கையில் இருப்பதை பிடுங்க நினைக்க அந்த பிடிவாதக்காரனோ விடவே இல்லை.

“சொன்னா கேளு சிற்பி. அதைக் கீழ போடு” என்று கெஞ்சி போராடியவள் அவன் இன்னும் பிடிவாதத்துடன் இருந்து அவளைத் தள்ளி விடவும் அவன் கையை இறுக்கப் பிடித்த படி அவன் மார்பில் சாய்ந்தவள்

“இனிமே அப்படி சொல்ல மாட்டேன். சத்தியமா சொல்ல மாட்டேன். இது நம்ப பொண்ணு மேல் சத்தியம்” என்று சொல்லி கேவ அப்போது தான் தன் கையிலிருந்த இரும்புக் கம்பியைக் கீழே போட்டான் சிற்பி.

“இது.. இது தான் டி உன் குணம்! உனக்கு அநியாயம் செய்த எனக்கே உன் கண்ணெதிரே ஏதாவது ஒன்னுனா துடிக்கிற பாரு.. இது தான் உன் உண்மையான குணம்! வீணா என்ன குத்திக் காட்டி என்னை சாகடிக்கிறதா நினைத்து இன்னும் நீ அதையே நினைத்து உன் இயல்பை மாற்றிக்காதே.இனி ஒருமுறை உன் வாயில் பழைய விஷயங்கள் வந்தது.. பிறகு நான் எதைச் செய்யவும் தயங்க மாட்டேன்!” என்று அவன் எச்சரிக்க அந்த குரலே நான் சொன்னதை செய்வேன் என்பதை பட்ட வெளிச்சமாய் அவளுக்கு உணர்த்தியது. உடலில் ஒருவித நடுக்கத்துடன் அவன் மார்பிலே முகம் புதைத்திருந்தவள்

“இல்லை.. சொல்ல மாட்டேன்” என்பதாக தலை அசைக்க மனைவியின் நிலை உணர்ந்து அவளை இறுக்க அணைத்து அடிபட்ட கையால் அவள் முதுகை அவன் வருட அதில் தெளிந்தவளோ அவனிடமிருந்து பிடிவாதமாக விலகி

“ஏன் சிற்பி இப்படி பண்ணின? பாரு.. சதை பிஞ்சி எப்படி ரத்தம் வருதுனு..” என்று ஏதோ அது அவனுக்குத் தெரியாது என்பது போல் சிறு குழந்தை என இவள் எடுத்துச் சொல்ல

‘இப்படி ஒரு குழந்தை மனசு படைச்சவளை போய்.. ச்சே…’ என்று மனதுக்குள் உறுமியவன் “அதான் சொன்னனே.. நீ அப்படி பேசினா இனி இப்படி தான்!” என்று மீண்டும் சர்வசாதாரணமாக அவன் அதை வலியுறுத்த, ஒரு நிமிடம் வாயடைத்துப் போய் நின்றாள் மனைவி. அடுத்த வினாடியே

“சரி வா ஆஸ்பிட்டலுக்குப் போகலாம்” என்று அழைக்க

“ஏய்.. இதெல்லாம் ஒரு அடியா? எல்லாம் பிறகு போகலாம். அப்போ என்ன சொன்ன? ம்ம்ம்… மயக்க மருந்து கொடுத்தாலோ குழந்தைகளையோ வயதானவர்களையோ குறி வைத்தால் அவங்க எப்படி சொல்ல முடியும்னு தான?” என்று வெகு தீவிரமாகக் கேட்டவன்

“அதற்கும் நிச்சயமா ஏதாவது வழி செய்யுறேன் ரதி. என்ன நம்பு” என்று அவளுக்கு நம்பிக்கை ஊட்ட “ம்ம்ம்…” என்று கணவனின் வார்த்தையை அப்போதைக்கு அரை மனதாக ஒத்துக் கொண்டவள் அவனை விடாப்பிடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கைக்கு சிகிச்சை செய்தாள் ரதி.

இது தான் ரதியின் இயல்பு. தனக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் ஒன்று என்றால் துடிப்பது. அதற்காக சிற்பி மீது காதல் எல்லாம் இல்லை. ஒருமுறை அவனுக்கு காலில் அடிபட்டு வந்த போது கூட என்ன ஏது என்று கேட்காமல் திரும்பிப் பார்க்காமல் போனவள் தான். ஆனால் இன்று அவள் கண்ணெதிரே எனும் போது அவளால் துடிக்காமல் இருக்க முடியவில்லை.

சிறுவயதில் அவளுடைய இயல்பை மீறி நடக்கக் காரணம் தாயின் நடத்தையோடு தங்களை ஒப்பிட்டுப் பேசியதால் தான். இப்போதோ இந்த சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பார்த்து கேட்டு தன் இயல்பை இழந்தாள் ரதி.

வீட்டிற்கு வந்த பிறகு கூட அவன் சொன்ன வார்த்தையிலிருந்து அவளால் வெளிவர முடியவில்லை.

‘என்னை அப்படி சொல்ல வேண்டாம்னு என் வாயை அடைக்கிறாரே தவிர மன்னிப்பு கேட்கனும் என்ற எண்ணம் அவருக்கு வரவே இல்லையே?’ என்று மனதால் கேள்வி கேட்க இன்னொரு மனமோ ‘அவன் மன்னிப்பு கேட்டா மட்டும் நீ மன்னிச்சிடுவியா? அப்படிப் பட்ட தப்பையா அவன் செய்திருக்கான்?’ என்று போர்க் கொடி தூக்க ‘ம்ஊம்…. மன்னிக்கவே மாட்டேன்’ என்றவள் பிறகும் இதே யோசனையாகவே இருக்க தூக்கமும் வர மாட்டேன் என அடம்பிடிக்க இமை மூடாமல் விழித்திருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN