சுவாசம் - 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 16

அக்கா
எனும் வார்த்தையில்
தாய்மையை
முதன் முதலாய் தந்து
என் கண்ணீரிலே
மொத்த உயிரையும்
வைத்தவன் அவன்..
என் தம்பி!


தூங்காமல் நீண்ட நேரம் ஏதோ யோசனையுடன் இருக்கும் மனைவியைப் பார்த்த சிற்பி

“என்ன ரதி அப்படி என்ன பலத்த யோசனை?” என்று கணவன் இயல்பாய் விசாரிக்க

“ஒன்றும் இல்லை” என்று மனையாள் மழுப்ப

“சும்மா சொல்லு ரதி நாம ஆரம்பிக்கப் போற அமைப்பை பற்றித் தானே யோசிக்கிற?” என்று அவன் எடுத்துக் கொடுக்க, சட்டென்று தன் மனதைத் திசை திருப்பியவள்

ஆமாம் என்று ஒற்றுக் கொண்டவள் “ஒரு பொண்ணு தனக்கு இருக்கிற பிரச்சனையை நம்பி நம்ம கிட்ட வந்து சொல்லி தீர்வு கேட்கிறாள்னா அந்த அளவுக்கு நாம அவளுக்கு நம்பிக்கை கொடுக்கனும். ஏன்னா நம்ப கிட்ட வர்றவங்க ஸ்கூல் படிக்கற பெண்களிலிருந்து கல்யாணம் ஆனவங்க வரை வருவாங்க. அவங்க விஷயங்கள் ரகசியம் காக்கப் படனும்.

ஒருவருக்கு நம்மால் தீர்வு கண்ட பிறகு அவங்க சம்பந்தப்பட்ட சிடியை உடைத்துப் போடனும். ஹார்ட் காப்பி சாப்ட் காப்பி எல்லாம் ரிமூவ் பண்ணனும். வாய்ஸ் ரெக்கார்ட் எல்லாம் அழிக்கப் படனும். அவங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்த பிறகே இதையெல்லாம் செய்யனும். நாளைக்கு நம்மிடம் வேலை செய்பவர்கள் யாரும் இந்த விஷயங்களை வைத்து அரசியல் பண்ணவோ பிளாக்மெயில் பண்ணி அப்பாவி பெண்களிடம் பணம் பறிக்கவோ இல்லை அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கவோ கூடாது.

அதற்கு நம்பகமானவங்களை நமக்கு கீழ வேலைக்கு வைக்கனும். தன் அக்கா தங்கைகளோட வரம்பு மீறி நடந்தவனோட கையை வெட்டியவன் தன் மகளின் மானத்திற்காக அந்த கயவர்களின் உயிரை எடுத்த தாய் தந்தையர் மாதிரி இந்த பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்ல எத்தனையோ பேர் ஒரு வெறியோட இந்த பிரச்சனைக்கு தீர்வு வேணும்னு துடித்து இருப்பாங்க. அவங்க எல்லோரையும் ஒன்று சேர்த்து அதில் தகுதியானவர் யாருனு தேர்ந்தெடுத்து அவர்களை இங்க வேலைக்கு நியமிக்கனும்.

மொத்தத்தில் ஒரு நாட்டின் ராணுவ ரகசியத்தைக் காப்பது போல நாம ரகசியமா காக்கனும். அதுக்கு சரியான ஆள தேர்ந்தெடு சிற்பி. ஹாங்.. ‘நிகரிலா வானவில்’. இந்த பெயர் எப்படி இருக்கு சிற்பி?” என்று ரதி ஆர்வத்துடன் கேட்க

தான் அப்போது கேட்ட தங்கள் அமைப்புக்கான பெயரை மனைவி இப்போது சொல்கிறாள் என்பதை உணர்ந்தவன் “ஹேய்.. சூப்பரா வித்தியாசமா இருக்கு ரதி. ஆமா.. பெண்கள் உண்மையிலேயே நிகரில்லாத வானவில் தான்! பெயரளவுல மட்டும் வித்தியாசம் காட்டாம கண்டிப்பா நாம இந்த அமைப்பின் மூலம் நெறைய நல்லது செய்யணும். அதுவும் வாழ்நாள் முழுக்க. அதுதான் என் நோக்கம். ஆனா நீ இதுல எனக்கு எப்போதும் உறுதுணையா இருக்கணும். இருப்பியா ரதி?” என்று சிற்பி ஆவலோடு கேட்க

“கண்டிப்பா சிற்பி! உங்களுக்காக இல்லனாலும் சாதிக்க துடிக்கிற மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் கடைசி வரைக்கும் என்னால முடிஞ்சத செய்வேன். அதற்காகவே உங்களுக்கும் உறுதுணையா இருப்பேன். நிச்சயம் இதுல நாம ஜெயிக்கனும்!” என்று உணர்ச்சி வேகத்தில்

ஒரு நாட்டை ஆளும் அரசருக்கு மதி மந்திரி போல் எதிர்கால திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவள் கூடவே முதல் முறையாக இருவரையும் சேர்த்து வைத்து செய்யும் செயலில் ஜெயிப்போம் என்று அவள் சொல்லியிருக்க அதை உணர்ந்தவனோ மனதில் சந்தோஷம் குமிழிட மனைவி அமர்ந்திருந்த கட்டிலிலேயே அவளுக்கு எதிர்புறமாக வந்து அமர்ந்தவன்

“சபாஷ் டி பொண்டாட்டி! இந்த தைரியம் தன்னம்பிக்கை துணிச்சல் தான் டி எனக்கு பிடிச்சிருக்கு. என் மனைவி இப்படி தான் இருக்கனும்” என்று சொல்லி அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்ட

‘ஆனா அதையெல்லாம் என் கிட்டயிருந்து அழிச்சவனே நீ தானே?’ என்ற எண்ணம் ரதிக்கு வந்தாலும் அதை இப்போது அவள் வெளியே சொல்லத் தயாராக இல்லை. ஏற்கனவே ஒரு வார்த்தை தான் சொல்லி இவன் அந்த ஆர்ப்பாட்டம் பண்ணி கையில் கட்டுப் போட்டு உட்கார்ந்து விட்டான். திரும்பவுமா? என்ற அவள் எண்ணத்தை இடை வெட்டியது தூக்கத்தில் “பப்பா நீ எங்ங்க இக்க?” என்று கேட்ட மகளின் குரல். மனைவியை விட்டு ஒரு அங்குலம் கூட நகராமல்

“இங்கே தான் டா” என்று மகளுக்கு பதில் தரவும், கண்விழித்து தந்தையின் குரல் வந்த திசையைப் பார்த்தவளோ

“பப்பா ஒம்ப கை வயுக்குதா? என்று கேட்டபடி மகள் எழுந்து அவனிடம் வர

“இப்போது இல்ல டா” என்றவன் மகளை ஒரு கையால் வாரி அணைத்து தங்கள் இருவருக்கும் இடையில் அமர வைத்துக் கொண்டான் அவன். கையில் பெரிதாக பாதிப்பு இல்லையென்றாலும் சதை பிரண்டு இருப்பதால் டாக்டர் அதிகம் அசைவு கொடுக்கக் கூடாது என்று கையை அவன் கழுத்திலே கட்டித் தொங்க விட்டிருக்க அதை பார்த்ததிலிருந்து அழ ஆரம்பித்திருந்த மகளை இப்போது தான் கொஞ்சம் தூங்க வைத்திருந்தான். இதோ தந்தையைத் தேடி மறுபடியும் எழுந்து கொண்டாள் அவனின் அம்மூமா.

என்ன தான் தந்தை வலி இல்லை என்று சொன்னாலும் “வயுக்குதா? நா ஊது பப்பா” என்றவள் சொன்ன மாதிரியே தன் உதட்டைக் குவித்து கட்டு கட்டியிருந்த அவன் கையில் ஊதினாள்.

இது சிற்பி செய்வது தான். தோட்டத்தில் விளையாடும் போது அவள் விழுந்து விட்டால் இப்படி தான் அவளுக்கு ஊதி விட்டு சமாதானப் படுத்துவான். அதை தான் இன்று மகள் அவன் கட்டுப் போட்டு வந்ததிலிருந்து செய்கிறாள். கண்ணில் நீர் தேங்க ஊதியவள் கூடவே தந்தையின் கைக்கு முத்தம் வைக்க

“அம்மூமா! அப்பாக்கு வலி இல்ல டா” என்றவன் மகளை வாரி எடுத்து தன் இடது தோளின் மேல் சாய்த்துக் கொள்ள, இதெல்லாம் ரதி கண்டும் காணாதது போல் தான் அமர்ந்திருந்தாள்.

வீட்டிற்கு வரும் போதே ஆஸ்பிட்டல் சென்று கைக்கு டிரஸ்ஸிங் செய்திருந்தாலும் திருநீலகண்டனுக்கு பேரனின் உடல்நிலையில் அக்கறை இருப்பதால் தன் குடும்ப டாக்டரை அழைத்து சோதிக்க அதில் அந்த டாக்டர் பரிசோதித்து ஊசி மட்டும் போட அதற்கு மகள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரையே கூட்டிவிட்டாள். ரதி எவ்வளவு சமாதானப் படுத்தியும் அவள் அடங்கவில்லை.

“என் பப்பாக்கு வயுக்கும். ஊச்சி வேண்ணா.. ஊச்சி வேண்ணா” என்ற மந்திர சொல் தான் அழுகையின் ஊடே அவள் வாயிலிருந்து வந்தது. அம்மூமா! ஊசி போட்டா தான் அப்பாவுக்கு சீக்கிரம் குணம் ஆகும் டா” என்று சிற்பி சொல்லவோ தான் அனுமதித்தாள். அப்போது கூட குத்தும் போது அவனுக்கு பதில் “என் பப்பாக்கு வயுக்கும்” என்று இவள் தான் அலறினாள்.

இது மட்டுமா? ஊசி போட்ட இடத்தை தன் பிஞ்சு விரலால் தடவி விட்டுக் கொடுத்தவள் ஏதோ தன் கைக்கு வரும் ஒன்றிரண்டு பருக்கையான உணவைக் கூட தன் தந்தைக்கு நான் தான் ஊட்டி விடுவேன் என்று அப்பப்பா இப்படி எத்தனை ஆர்ப்பாட்டம்! இப்போது தந்தைக்கு இப்படி அடிபட்டதால் மட்டும் இல்லை.

ஒருமுறை சந்திராவுக்கு ஜூரம் வந்து இரண்டு நாள் படுத்திருந்த போது கூட தாயை விட்டு தந்தையைத் தான் அதிகம் தேடினாள் அவள்.

“அம்மூமா! அப்பாவுக்கு வேலை இருக்கு டா. அம்மூ செல்லம் ல? அடம் பண்ணாம சாப்பிடுங்க டா” என்று எதற்கும் அவன் மகளை கெஞ்ச வேண்டியிருந்தது. இதில் அவன் மட்டும் என்ன? மகளுக்கு ஜூரம் என்றதும் அவன் துடியாய் துடிக்க பாட்டி தான் இடம் மாற்றத்தாலும் குழந்தைக்கு ஒரு வயது முடியப் போகுது என்பதால் இப்படி உடல்நிலை ஆவது சகஜம் என்று சொன்ன பிறகு தான் சற்று அமைதியானான் சிற்பி.

ஒரு காலத்தில் கணவனையும் மகளையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தவள் தான் ரதி. ஆனால் இன்று அவள் கண்ணெதிரே அவளால் மட்டும் இல்லை யாராலும் பிரிக்க முடியாத பந்தம் ஆகிப் போனார்கள் இருவரும். அதில் அவர்கள் உலகத்தில் கலந்து சஞ்சரிக்கவும் முடியாமல் விட்டு விலகி இருக்கவும் முடியாமல் இப்போதெல்லாம் தவித்துத் தான் போனாள் ரதி.

அங்கு நிலவிய அமைதி மறுபடியும் மகளை தூக்கத்திற்கு கொண்டு செல்ல

“சரி.. என் அம்மூ செல்லதுக்கு தூக்கம் வந்துடிச்சாம். இப்போ சமத்தா படுத்து தூங்குவாங்களாம் என் செல்லம்” என்று அவன் சொல்ல

“பப்பா பத்து” என்று கட்டளை இட்டது அந்த மொட்டு.

“நானும் தான் டா” என்றவன் மகளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு “என்ன ரதி, நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேனே? நிம்மதியா தூங்கு டா” என்று மனைவிக்காக அவன் கரிசனப் பட

“ம்ம்ம்…” என்ற சொல்லுடன் மறுப்பில்லாமல் படுத்தாள் ரதி.

எப்போதும் தந்தையின் மார்பு மீது தூங்கிப் பழகிய மகளுக்கு இப்போது சிற்பியின் கை கட்டு இடைஞ்சலாக இருக்க அப்போதும் விடாமல் தந்தையின் வயிற்றில் தலை வைத்தும் மெத்தையில் கை கால்களைப் படர விட்டும் தூங்கினாள் அவனின் குட்டி ராட்சசி.

மகள் தூக்கத்தில் அசையும் போது எல்லாம் கைகள் இடிபட அதில் “ஸ்…. ஆ….” என்று தூக்கத்திலே முணங்கினான் சிற்பி.

இதையெல்லாம் தூங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரதிக்கு என்ன தோன்றியதோ மகளைத் தூக்கி கணவனின் இடது பக்கமாக அவனை அணைத்தார் போல் படுக்க வைத்தவள் அவ்வளவு பெரிய கட்டிலை தந்தை மகளுக்கு என்று விட்டு விட்டு கீழே படுத்து தூங்க முயன்றாள் ரதி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN