சுவாசம் - 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 18

பெண்களின் காதல்
பூவிலுள்ள பனித்துளி போல்
அழகானது!
ஆண்களின் காதல்
வேரிலுள்ள நீரைப் போல்
ஆழமானது!!!


இரவு மகளைத் தன் மார்பு மீது போட்டுத் தலை வருடி தூங்க வைத்த பிறகும் கூட ஏனோ அவளை மெத்தையில் இட மனம் வராமல் தன் மீதே வைத்திருந்தவனின் பார்வை எங்கோ இருக்க அவனை அப்படி பார்த்த ரதிக்கு ஏதோ அவனுக்குள் சஞ்சலம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதை என்னவென்று அவளால் கணவனிடம் கேட்க முடியாமல் எதுவோ தடுக்க தன்னை மீறி கண்ணயர்ந்தாள் அவள்.

மனைவி தூங்கி விட்டாள் என்பதை உறுதி செய்தவனோ தன் மேலிருக்கும் மகளுடனே நகர்ந்து மனைவியிடம் சென்று அவளை மென்மையாக அணைத்து “உன் வாழ்க்கையை அழித்து உன் எதிர்காலத்தை சிதைத்தவனுக்கு ஏதோ என்னால் முடிந்த தண்டனையைக் கொடுத்து அவனை உரு தெரியாமல் சிதைச்சிட்டேன்..

ஆனா உன்னை மட்டும் என்னால மீட்க முடியலையே டி.. என்றைக்கு நீ எனக்கு என் பழைய ரதியா திரும்ப கிடைப்ப? பழசை மறந்து உனக்கான வாழ்க்கையைப் பற்றி நீ யோசிப்ப படி கண்ணம்மா? அது நான் உன் வாழ்வை விட்டு போனா தானா? அதையும் நான் செய்ய சித்தமா தான் டி இருக்கேன்” என்று தூக்கத்தில் கூட தான் சொல்லும் வார்த்தைகள் மனைவிக்கு கேட்டு விடக் கூடாது என்று தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவனின் எண்ணங்கள் அனைத்தும் ரதியை அவன் திரும்பவும் சந்தித்த காலங்களை நோக்கிச் சென்றது..

ரதியை முதல் முறையாக பார்க்கும் போது அவனுக்கு அவள் மேல் கோபம் இருந்தது. அது கூட அந்த வினாடி தான். அதுவே பத்து வருடம் கழித்து அவளே தான் என்று தெரியாமலே திரும்ப பார்க்கும் போது அதிலும் பத்து வருடமாக அவள் தன்னைத் தேடினாள் என்று சொன்ன போது அவளிடம் அவனுக்கு ஒரு சுவராஸ்யம் பிறந்தது.

அதிலும் அவள் தன் நெஞ்சில் காலை வைப்பேன் என்று சொன்ன போது கோபத்திற்கு பதில் அவனுக்கு அவளிடம் விளையாடி வம்பிழுக்கும் ஆர்வமே வர. அதனாலேயே அவளை நாஸ்தி பண்ணிடுவேன் என்ற வார்த்தையை அவன் சொன்னது.

அன்றே தன் நண்பர்கள் மூலம் அவளைப் பற்றி அறிந்து கொண்டவனுக்கு அவள் மேல் இனம் புரியாத ஒரு உணர்வு மனதில் வர. அதுவே ஒரு நாள் இரவு அவளுக்கு முத்தமிடும் போது தான் தெரிந்தது அவளை அவன் தன் காதலியாகக் கூட பார்க்கவில்லை மனைவியாகத் தான் நினைக்கிறான் என்று. இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் அது அவனுக்கே தெரியாது.

ஆனால் ரதி தான் மனைவி என்பதில் உறுதியாக இருந்தான். அதனால் தான் அவனையும் மீறி அவன் வரம்பு மீறி நடந்தது. அவன் செய்தது தப்பு தான். ஆனால் தன் காதலை அவளிடம் சொல்லி புரிய வைப்பதை விட இரு வீட்டிலும் பேசி மனைவியாய் ஆன பிறகு சொல்ல இருந்தான்.

ஆனால் இதையெல்லாம் அவள் உணராமல் சிற்பியை போலீஸில் பிடித்துக் கொடுத்து விட எந்த அளவுக்கு அவள் தன்னை வெறுத்தால் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னை போலீஸில் மாட்டி விடுவாள் என்ற எண்ணம் தோன்ற. அதனாலேயே என்னமோ அவனுக்கு அவள் மேல் கோபம் கூட வரவில்லை. பிறகு எங்கு அவளை அவனுக்குப் பழிவாங்கத் தோன்றும்..

நாம் நேசித்த ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்றால் உடனே அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் பிறகு அது எப்படி உண்மையான நேசம் ஆகும்? நாம் விரும்புவது போல் அவள் தன்னை விரும்பவில்லை என்பதை உணர்ந்தவன் அன்று அனைவரிடமும் சொன்ன மாதிரியே அவன் தாத்தா வந்து இவனை ஜாமீனில் எடுத்த பிறகு இங்கிருக்க பிடிக்காமல் இரண்டு வருடம் வெளிநாட்டில் கழித்தான்.

அதன் பின் அவன் பாட்டி திருமணத்தைப் பற்றி பேசவும் எங்கோ அவன் மனதின் ஆழத்தில் பூட்டி வைத்திருந்த ரதியின் நினைவு அலை அலையாய் அவனுள் எழும்ப எதற்கும் கடைசியாக ஒருமுறை அவளிடம் நேரில் தன் நேசத்தை சொல்லி அதற்கு அவள் வாயாலேயே அவள் மறுப்பு தெரிவித்து விட்டால் பிறகு தன் வாழ்வைப் பற்றி யோசிக்கலாம் என்றிருந்தான் சிற்பி.

அதன்படியே ஒரு நாள் ரதியின் குப்பத்து நண்பனிடம் அவளைப் பற்றி அவன் விசாரிக்க அவன் தலையில் விழுந்ததோ பேர் இடி! யாரை இன்று வரை தன் இதய சிம்மாசனத்தில் மனைவி என்று அமர வைத்து எதிர்காலத்தில் அவளைத் தன் கண்ணுக்குள்ளே வைத்துக் காக்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ அப்படிப் பட்ட ரதியை யாரோ சீரழித்து விட அதில் வயிற்றில் எட்டு மாத கருவுடன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத மனநிலையில் அவள் இருப்பதாக சொல்ல அந்த வினாடியே ஸ்தம்பித்துப் போனான் சிற்பி.

ரதியுடைய துணிச்சலுக்கும் தைரியத்துக்கும் அவள் எங்கோ எப்படியோ மேன்மையான வாழ்வு தான் வாழ்வாள் என்று அவன் நினைத்திருக்க. ஏன் ஒருபக்கம் அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் கூட நடந்திருக்கும் என்று நினைத்தவனுக்கு. ஒருவேளை அவளுக்கு திருமணம் நடக்காமல் இருந்தால் என்ற எண்ணத்தில் தான் அவன் கேட்டது.

அப்போது தான் அவளுக்கு நடந்தது அவனுக்குத் தெரிய வர ஒரு துளி கூட அவளை அவன் வெறுக்கவும் இல்லை விட்டு விலக நினைக்கவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவளை முன்பை விட பல மடங்கு அதிகமாக விரும்பினான்.
இப்போது கூட அவளைத் திருமணம் செய்து அவள் பாதங்கள் கூட தரையில் படாதபடி தன் கையில் வைத்து அவளைத் தாங்க அவன் மனம் துடித்தது. ஆனால் அதற்கு எல்லாம் முன்பு தன் மனைவியை இப்படி செய்தவனை யார் என்று கண்டுபிடித்து அவன் உயிரை வாங்கிய பிறகே ரதியைத் திருமணம் செய்வது என்ற முடிவை எடுக்க.

அதனால் ரதிக்கு மருத்துவம் பார்த்த டாக்டரிடம் தானே நேரில் சென்று அவளைப் பற்றி விசாரிக்காமல் தனக்கு தெரிந்த டாக்டர் மூலம் இயல்பாக அவள் உடல்நிலை பற்றிய தகவல்களைச் சேகரித்தான். அதில் வக்கீல் என்ற முறையில் அவனுக்கு கிடைத்த ஒரே தகவல் யாரோ போதை மருந்துக்கு அடிமையானவன் தான் ரதியை நாசம் செய்திருக்கிறான் என்பது.

முதலில் இது கூட்டு பலாத்காரமாக இருக்குமோ என்று அவன் கேட்க மருத்துவர் இல்லை என்றார். பிறகு இது தற்செயலாக இருக்குமோ என்ற ரீதியில் யோசிக்க அதற்கும் வழியில்லாமல் அவளுக்கு அதிக போதை மருந்தைக் கொடுத்து தன் முகம் மறைத்து இதை செய்து இருக்கிறான் என்றால் நிச்சயம் ரதியைப் பழி வாங்கத் தான் இருக்கும்.

இப்படி பழி வாங்குகிற அளவுக்கு ரதிக்கு யார் எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் அவன் தேட விடை என்னமோ பூஜ்ஜியம் தான். பின் அந்த மருத்துவர் சொன்ன தகவலை வைத்து இறுதியாக ரதி சென்றது கல்லூரி விழா என்பதால் அவன் அங்கு தன் மூளையை செலுத்தி ஆராய அங்கும் ஒரு விடையும் கிடைக்கவில்லை. அதிலும் அந்த கல்லூரி ஒழுக்கத்தில் இருந்து சுத்தம் மற்றும் நேரந்தவறாமை என்று அனைத்திலும் தலை சிறந்து விளங்கியது.

இத்தனைக்கும் அந்த கல்லூரி இறந்த எம்.ஏல்.ஏ ரத்தினசபாபதி பெயரில் அவர் மகனான ரத்தினவேல் என்பவரால் நடந்தப்படுகிறது. அரசியலில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க வந்தவர் தான் ரத்தினசபாபதி. அவர் மகனும் அதையே பின்பற்றுபவர். தன் தந்தை பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து பல ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை அவர் வழங்குவதால் தான் அரசாங்கமே இப்போது பாதி கல்லூரியைத் தன் கட்டுப்பாட்டுல் வைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது.

எங்கு சுற்றியும் ரதியின் நிலைக்கு விடை கிடைக்காததால் இறுதியாக ரதியின் வீட்டை அவர்களுக்கே தெரியாமல் கண்காணிக்க ஒரு ஆளை வைத்திருந்தான் சிற்பி.

திட்டமிட்டு ரதியைப் பழி வாங்கி இருந்தால் அவள் தெளிந்த பிறகோ இல்லை குழந்தை பிறந்த பிறகோ எங்கே ஏதோ ஒரு முயற்சியில் அவளை யார் இப்படி செய்தார்கள் என்று காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற பயத்தில் நிச்சயம் யாராவது தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில் சிற்பி ஆள் வைக்க

அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. ரதியின் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஐஸ் வண்டியில் பிள்ளைகளுக்கு ஐஸ் விற்பவன் போல் அந்த குப்பத்திற்கு வந்த ஒருவன் அதிகம் ரதி வீட்டையே நோட்டம் விட்டவன் பிறகு ரதியின் பிரசவத்திற்குப் பிறகே அங்கு வர ஏற்கனவே சிற்பியிடம் இதை சொல்லி இருக்கவே அன்றே அவனிடம் மாட்ட அதில் அவனை அடித்து உதைத்தில் ரதி படித்த கல்லூரியில் கேன்டீன் நடத்துபவனை அவன் கை காட்ட நேரம் காலம் பார்த்து அவனிடம் விசாரித்ததில் ரதிக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்தது தான் தான் என்பதை ஒப்புக் கொண்டவன் அதை செய்ய சொன்னது அந்த காலேஜ் எச்.ஓ.டி. திருமதி ரேணுகா தேவி என்றான்.

சிற்பிக்கு கிடைத்த தகவல் படி நாற்பத்தி ஐந்து வயது ரேணுகா தேவி பத்து வருடத்திற்கு முன்பே கணவன் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து ரத்தினவேலுவுடன் அங்கீகாரமில்லாத மனைவியாக வாழ்ந்து வருகிறாள். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்பதால் இது குறித்து பெரிய விமர்சனம் எதுவும் வெளியே எழவில்லை. நிச்சயம் ரேணுகா தேவிக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று அறிந்தவன் அது யார் என்று யோசிக்க பதில் என்னமோ ரத்தினவேலிடமே வந்து நின்றது.

ஆனால் அது சாத்தியம் இல்லை என்றே அவன் உள்மனது சொல்ல பட. ஒன்று ரத்தினவேல் ஐம்பத்தி எட்டு வயதுக் கிழவன். அதையும் மீறி அவன் ஒரு ஆஸ்துமா நோயாளி. எனவே அவன் சொல்லி வேறு யாரோ தான் இதை செய்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் பட. ஆகமொத்தம் ரத்தினவேல் தான் குற்றவாளி என்று ஆனதால் எதற்காக இந்த பழிவாங்கல் என்று அவன் ஆராய அதில் கிடைத்த தகவல்கள் தான் இவைகள்.

என்ன தான் ரத்தின சபாபதி நேர்மையாக இருந்தாலும் அவன் மகன் ரத்தினவேல் அப்படி இல்லை. தந்தை கவுன்சிலராக இருக்கும் போதே கள்ளக்கடத்தலில் ஈடுபட்டவன் சிறுக சிறுக இந்த தொழிலுக்கு வந்து இன்று உலகளவில் கடத்தல் செய்பவர்களில் இவனும் ஒருவன்.

உலக அளவில் கடத்தல்காரத் தலைவர்களுக்கான சந்திப்பு இவன் இடத்தில் நடந்தால் அவர்களைத் திருப்திபடுத்த அவன் கல்லுரியில் படிக்கும் ஏழை இளம்பெண்களை மிரட்டி உருட்டி மார்க்கில் கை வைத்து விடுவேன் என்றெல்லாம் பிளாக்மெயில் செய்து அந்தப் பெண்களை அவனுக்குத் தயார் செய்வது எச்.ஓ.டி. ரேணுகா தேவியின் வேலை. அந்த கடத்தல் காரர்களுக்கு மட்டுமில்லாமல் பல அரசியல்வாதி பல தொழில் அதிபர்களிடம் காரியம் சாதிக்க இது தான் நடந்தது.

மதிப்பெண்ணுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் பயந்து எத்தனையோ பெண்கள் இதற்கு சம்மதிக்க மானம் தான் பெரிது என்று உயிரை விட்ட பெண்களும் இருக்கிறார்கள். இது தான் ரத்தினவேலுவின் மறுமுகம். வக்கீலான சிற்பி இவை எல்லாம் தெரிந்து கொண்டான். ஆனால் இது எதையும் வெளி உலகத்திற்கு தெரியாமல் ரத்தினவேல் நேர்த்தியாக மறைக்க எந்த இடத்திலுமே ஒரு சிறு தவறைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அந்த இடத்தில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள் என்றும் தான் செய்யும் தவறுகளை மறைக்கிறார்கள் என்பதையும் கூட வக்கீலான சிற்பியின் மூளை கண்டுபிடிக்கவில்லை.

ரேணுகா தேவி சம்மந்தப்பட்டு இருக்கிறாள் என்றால் நிச்சயம் பெரிய ஆள் தான் ரதி விஷயத்தில் பின்னால் இருக்க வேண்டும் என்று நம்பிய சிற்பி நேரம் பார்த்து ரேணுகாதேவிக்கு கிடுக்குப் பிடி போட்டு அவளைத் தன் கீழே வளைத்துப் பிடித்துக் கேட்க பல பல உண்மைகளைக் கக்கினாள் அவள். கிஷோர் ரத்தினவேலுவின் ஒரே மகன். அப்பன் பதினாறு அடி பாய்ந்தால் மகன் முப்பத்தியிரண்டு அடி பாயக் கூடியவன்.

சாதாரணமாக உள்நாட்டில் கடத்தல் தொழில் செய்யும் தந்தைக்குப் பக்கபலமாக இருந்து வெளிநாட்டில் படிக்கப் போகிறேன் என்ற பெயரில் போதை மருந்து கடத்துவதற்கு அவன் வழி செய்ய அதற்கு அவர்கள் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்க வழி செய்து அவர்கள் எடுத்துச் செல்லும் பொருளோடும் இன்னும் சில நேரத்தில் அவர்கள் உடலில் கூட போதை பொருட்களை வைத்துக் கடத்த வழி செய்தான் இவன்.

இப்படி செய்யும்போது கூட யாரும் வெளியில் மாட்டவில்லை. ஆனால் வெளி நாட்டில் கடத்தல் தொழில் செய்யும் டாக்டர் படித்திருக்கும் நண்பன் ஒருவன் இன்னொரு விபரீத மருத்துவ வியாபாரத் திட்டம் ஒன்றை அவனுக்கு விளக்கினான். போதை மருந்தையே மூலப் பொருளாகக் கொண்டு மனித உடலுக்கு எதிரான மருந்தை தயாரித்தவன் அதை கர்ப்பிணி பெண்களுக்கு முழுதாக ஐந்து மாதம் முடிந்து ஆறாவது மாதத்திலிருந்து செலுத்த வேண்டும்

அந்த மருந்தின் தாக்கம் உடனே காட்டாது. சிறிது சிறிதாக குழந்தைக்கு செலுத்த அது கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து குழந்தை பிறந்த ஐந்தாவது மாதத்திலிருந்து தன் வேலையை முழுமையாக காட்டும். முதலில் மூளையில் தாக்கி அதன் வளர்ச்சி இல்லாமல் செய்யும். பிறகு உடல் வளர்ச்சி இல்லாமல் குழந்தை சிறுத்துப் போகும். ஆனால் இதற்கு உடனே மாற்று மருந்தையும் கண்டுபிடித்தவன் அந்த மருந்தை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஐந்து வயது வரை கொடுத்து வர ஏதோ கொஞ்சம் தீர்வு காணலாம்.

இதையெல்லாம் கண்டுபிடித்த அந்த நாற்பது வயது ஆண் மகனான டாக்டருக்கு பணத்தின் மீது அவ்வளவு மோகம். குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து உலகில் நம்பர் ஒன் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை. இதை நண்பனான கிஷோரிடம் அவன் சொல்ல அதற்கு அவர்கள் தேர்தெடுத்த இடம் தான் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு. இதை செயல்படுத்த கிஷோர் தன் தந்தையிடம் சொல்லி புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனைக்கு அடித்தளம் போட தன் டாக்டர் நண்பருடன் இந்தியா வந்தவன் முதலில் அந்த மருந்தின் சோதனை ஓட்டத்தை ஒரு ஏழை கர்ப்பிணிக்குப் பார்க்க எண்ண அதற்கு அவர்கள் தேர்தெடுத்தது தான் அவர்கள் கல்லூரியில் லெக்சரராய் இருக்கும் நந்தினி.

நந்தினி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். அப்பா கிடையாது அம்மா வீட்டு வேலை பார்ப்பவர் பயந்த சுபாவம் கொண்டவர். மெரிட்டில் ரத்தினவேல் நடத்தும் கல்லூரியில் சேர்ந்து படித்து இன்று அங்கேயே லெக்சரராய் வேலை செய்கிறாள். ரத்தினவேல் மேல் பக்தி அபிமானம் அதிகம் உண்டு. ஒரே தங்கை அவளும் அதே கல்லூரியில் ரதியுடன் படிப்பவள். தாய் தந்தையர் யாருமற்ற நந்தினியின் கணவன் இப்போது தான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றான்.

நான்கு மாத கருவான லேசாக மேடிட்டிருந்த தன் வயிற்றுடன் அவள் ஒரு ஃபைலுடன் ரத்தினவேலுவைப் பார்க்க வர அங்கிருந்த கிஷோர் கண்ணில் விழுந்தாள் அவள். தன்னுடைய சோதனைக்கு இவள் தான் சரி என்று நினைத்தவன் அதை தந்தையிடமும் சொல்லி அவளுக்குப் பேறுகால விடுப்புடன் இலவசமாக மருத்துவத்தையும் தாங்களே பார்ப்பதாகச் சொல்ல ரத்தினவேலுவின் நல்ல மனதை வாய் ஓயாமல் சொல்லிப் பூரித்தாள் நந்தினி.

கிஷோர் நினைத்தபடியே அவர்கள் சொன்ன மருத்துமனையிலேயே நந்தினிக்கு ஸ்கேனில் குழந்தையின் குறையான வளர்ச்சியை மறைத்து பொய்யான ரிப்போர்டை தந்தார்கள். அவர்கள் செய்ய நினைத்தது எல்லாம் செய்ய குறை பிரசவத்தில் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் நந்தினி தான் பிரசவத்திலே இறந்து விட்டாள். இதை கிஷோரின் டாக்டர் நண்பன் கூட எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நினைத்தது போலவே ஐந்தாம் மாதத்திலிருந்து குழந்தையின் உடம்பில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்க வெளியில் வேறு எங்கும் காட்டாமல் அதே மருத்துமனையிலேயே காட்டச் சொன்னார் ரத்தினவேல் நந்தினியின் அம்மாவிடம்.

ஆனால் அவரோ மனம் கேட்காமல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேச்சைக் கேட்டு வேறு இடத்தில் காட்ட அப்போது தான் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே இந்த பிரச்சனை இருந்திருக்கும் என்றார்கள். இது என்ன மாதிரி நோய் என்றே தெரியவில்லை இந்த நோய்க்கு மாற்று மருந்தும் இல்லை என்றும் சிலர் சொல்ல ‘ஐயோ! அதற்கு இந்த குழந்தை உயிருடன் இருப்பதை விட செத்தே போயிருக்கலாம்’ என்று தான் தோன்றியது நந்தினியின் அம்மாவுக்கு.

இதற்கிடையில் ஒரு நாள் நந்தினியின் டைரி அவள் தங்கைக்கு கிடைக்க அதை கொண்டு வந்து ரதியிடம் கொடுத்தவள்

“எனக்கு முன்பே அக்காவோட சாவிலும் காலேஜ் அட்மின் மேலேயும் ஒரு சந்தேகம் இருந்தது டி. அது இப்ப அக்காவோட டைரிய படிச்சப் பிறகு ஊர்ஜிதம் ஆகிடுச்சி. இதை நான் அம்மா கிட்ட கூட சொல்லல தேவி. ரொம்ப பயந்த சுபாவம் அவங்க டி” என்று இவள் அழ

“அப்போ அக்காவ சாகடித்தது ரத்தினவேல் ஐயானு சொல்றியா?”

“இல்ல இல்ல.. அக்காவோட மரணம் இயற்கை தான். ஆனா அவ பல மனஉளைச்சலிருந்து எதையும் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளுக்குள்ள புழுங்கியே செத்திருக்கா” என்று கண்ணீர் விட்டவள் கையிலிருந்த டைரியை தேவியிடம் கொடுத்து படிக்கச் சொல்ல

பிரித்துப் பார்த்ததில் முதல் பக்கத்திலே நாள் தள்ளிப் போய் இருந்தது டெஸ்ட் பண்ணதில் பாசிட்டிவ் என்றும் கூடிய சீக்கிரம் என் அப்பா வந்து தனக்குப் பிறக்கப் போகிறார் என்றும் எழுதி முத்தங்களால் சந்தோஷங்களாலும் நிரப்பி இருந்தது அந்த முதல் பக்கம் மட்டும் தான் அதன் பிறகு இருந்தது எல்லாம் அவள் உடலாலும் மனதாலும் ஏற்பட்ட மாற்றங்களும் வலியும் வேதனையும் தான்.

ஒவ்வொரு முறையும் குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்க சந்தோஷமாக ஸ்கேனுக்குப் போனவள் திரும்ப வீட்டுக்கு வந்தாலோ தலையை சம்மட்டியால் அடிப்பது போல் துடிப்பாள். எப்போதும் ஒருவித மயக்கத்திலே இருந்தாள். மயக்கம் இல்லாமல் தெளிவாக இருக்கும் நேரத்தில் எல்லோரையும் இழுத்து வைத்து அடிக்க வேண்டும் என்று அவளுக்கு வெறி வரும். புடவை துணிமணி எல்லாம் கிழிக்கத் தோன்றும்.

சில நேரங்களில் இந்த குழந்தையே வேண்டாம் என்று எதாவது ஒரு கல்லை எடுத்து தன் வயிற்றில் இடித்துக் கொள்ளத் தோன்றும். கூடவே அவளுக்கு தற்கொலை எண்ணத்தையுமே கொடுத்தது. ஆனால் இதையெல்லாம் அவளால் வெளியில் சொல்லி அழவோ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணவோ முடியாமல் தன் தாய் தங்கைக்காக தன் சுயத்திலிருந்து தனிமையில் அமர்ந்து இதையெல்லாம் எழுதி போக்கிக் கொண்டாள் நந்தினி.

இது எதனால் என்று அவளே சுயசோதனை செய்ததில் அவளுக்கு கிடைத்த பதில் சத்து ஊசி என்று ஆஸ்பிடலில் போடும் அந்த ஊசியால் தான் என்று அறிந்தாள். அந்த ஊசி போட்ட பிறகு மூன்று நாட்களும் அவளுக்கு அப்படி தான் இருக்கும். பிறகு எப்போதும் போல் அவள் சாதாரணமாக இருக்கிறாள். அதையும் உணர்ந்து தான் இருந்தாள் அவள்.

அந்த மருத்துவமனையில் ஏதோ தவறான சிகிச்சை ரத்தினவேல் ஐயாவுக்கு தெரியாமல் நடப்பதாக நினைத்தவள் அதை அவரிடம் சொல்ல நேரம் பார்த்திருக்க அந்த நேரம் தான் ஒரு மாணவி எச்.ஓ.டி.ரேணுகாதேவி மார்க்கில் கை வைத்துவிடுவேன் என்று மிரட்டி ஒரு தொழில் அதிபரிடம் போகச் சொல்லி தன்னை மிரட்டுவதாக வந்து சொல்லி கண்ணீர் விட்டவள் இதுவரை எத்தனையோ பெண்களுடைய வாழ்வு பறிபோனதாகச் சொல்ல இதிலிருந்து வெளியே வரமுடியவில்லை என்றால் தான் சாகவும் தயாராக இருப்பதாக நந்தினியிடம் வந்து சொல்லி அவள் கதற நிறைமாத கர்ப்பிணியான நந்தினியால் என்ன தான் செய்ய முடியும்?

அப்படி இருந்தும் விடாமல் அவரிடம் இதை பற்றி சொல்ல நினைத்து இவள் ஒரு அறையில் காத்திருந்தவள் அங்கு சற்று அவளுக்கு மூச்சடைப்பது போல் இருக்கவும் அந்த அறையை ஒட்டிய பால்கனியில் இவள் நின்று கொண்டிருக்க அப்போது அதே பால்கனியை ஒட்டிய இன்னோர் அறையில் இருந்து ரத்தினவேல் மற்றும் ரேணுகாதேவியின் பேச்சுக் குரல் கேட்டது.

“வர வர இப்போ எல்லாம் பொண்ணுங்க ரொம்ப முரண்டு பண்றாளுங்க. முன்ன மாதிரி எதற்கும் பயப்படுறதே இல்ல. இப்படி இருந்தா நாம எப்படி தொழில் பண்ணி நிம்மதியா சுகமா வாழறது?” என்று ரேணுகா குறை பட

“ரொம்ப முரண்டு பண்ணா சொல்லு நம்ம கிட்ட போதை மருந்து இருக்கு. அதை அவளுங்களுக்கு கொடுத்தா தனக்கு என்ன நடக்குதுன்னே தெரியாது. பிறகு எங்க எதிர்க்கிறது?” என்று ரத்தினவேல் பெருமைப் பட, இதை கேட்ட நந்தினிக்கு இந்த உலகமே தலைகீழாய் சுற்றியது போலிருந்தது. இவனை நம்பியா சொல்ல வந்தோம் என்று அவள் நினைக்கும் நேரம்

“அதை விடு.. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க. நம்ப புது தொழிலை இன்னும் கொஞ்ச நாளில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்” என்று ரத்தினவேல் விஷச் சிரிப்பு சிரிக்க

“அதான் தெரியுமே! அந்த டாக்டரை வைத்து புது நோயை நாமளே உருவாக்கி அதற்கு மருந்தும் நாமளே கொடுக்கறது தானே?” ரேணுகாதேவி மிகவும் சகஜமாக பதில் கொடுக்க

“அதே தான்.. அதை இப்போ நம்ப ஸ்டாப் நந்தினியோட வயிற்றில் வளரும் குழந்தைக்கு கொடுத்து சோதனை பண்ணி இருக்கோம். அது மட்டும் நாங்க நினைத்த மாதிரி சக்ஸஸ்னா பிறகு இந்த இந்தியாவிலேயே நான் தான் பெரிய பணக்காரன்” என்று உல்லாசமாக ரத்தினவேல் கூற அங்கேயே மயங்கி விழாத குறை தான் நந்தினிக்கு. அதன் பிறகு உள்ளே இருப்பவர்களிடம் பேச்சே இல்லை.

எல்லாம் அறிந்த பின் இவர்களை சும்மா விடவும் மனமில்லாமல் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு தவித்தவள் பின் தன் மெடிக்கல் ரிப்போர்ட் தன் நோயின் தாக்கம் அவளுக்கும் அவள் குழந்தைக்கும் நடந்த அநியாயம் நாளைக்கு தங்கள் இருவர் உயிருக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் ரத்தினவேல் தான் காரணம் என்று தன் கைப்பட எழுதி அதில் ஒரு காப்பியை கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் எடுத்து வைத்தவள் கூடவே அங்கு கல்லூரியில் நடக்கும் அநியாயத்தையும் ஒரு சில மாணவிகள் கைப்படவே எழுதி வாங்கி வைத்திருந்தாள் நந்தினி.

இப்போதே வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் பிரசவத்தை வைத்து அவர்கள் பயந்து விடுவார்கள் என்பதால் பிரசவத்திற்குப் பிறகே அந்த நாய்களை கணவனின் உதவியுடன் அவள் ஒரு கைப்பார்க்க நினைக்க ஆனால் இதை யாரிடமும் சொல்லாமல் எதையும் செய்யவும் முடியாமல் இறந்தே போனாள் நந்தினி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN