சுவாசம் - 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 20

ஒரு ஆண்
தன் கனவுகளை
யாருக்காகவும் ஒருபோதும்
சிறைப்படுத்துவதில்லை..
ஆனால் தன்னைச்
சார்ந்தவர்களுக்காக
தன் கனவுகளைத்
தூக்கியெறிவதற்கு சற்றும்
தயங்குவதேயில்லை!..

அதன் பிறகு பாட்டி தான் காலையில் உணவுக்கு உட்கார்ந்த கணவனிடம்
“அவனுக்கு அரசியல் வேணாம்னு சொன்னா கேட்குறீங்களா? நேற்று என்னமோ அவன் குழந்தைய தூங்கி வச்சிட்டு நான் இறந்தா எனக்கு காரியம் பண்ணுவியானு ஏதேதோ அந்த குழந்தை கிட்ட உளறிகிட்டு இருக்கான். நீங்க என்னனு கொஞ்சம் பாருங்க” என்று பேரனை பற்றி எடுத்துச் சொல்ல

“என்ன ஈஸ்வரி? நீயே இப்படி பேசற.. அவனுக்கு என்ன அரசியல் புதுசா? அப்பவே என் கூடவே வந்து இளைஞர் அணியில இருந்தான். பின் தலைவனா மாறினான். ஏதோ கொஞ்ச நாள் போறாத காலம் விலகி இருந்தான். இப்போ மறுபடியும் வந்து சேர்ந்தவன் ஏதோ தலைவர் கிட்ட தனியா பேசவோ அவரும் அவனை சேர்த்துகிட்டு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரா பதவி கொடுத்திருக்கார். அதை நினைத்து சந்தோஷப்படாம ஏதேதோ பேசிகிட்டு இருக்க. அதெல்லாம் அவனை நான் பார்த்துக்கறேன்” என்று அவர் முடித்து விட

இதையெல்லாம் சமையலறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரதிக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம். ‘கணவனுக்கு அரசியலே பிடிக்காதுனு நிரல்யா சொன்னதாக ஞாபகம். பிறகு ஏன் இது?’ என்று யோசித்தவள் உடனே கணவனைத் தேடி மேலே தங்கள் அறைக்குச் சென்றவள்

“சிற்பி நீ அரசியல்ல இருக்கியா?” என்று எடுத்தவுடனே கேட்க

ஏதோ வேலையாக இருந்தவன் மனைவியை திரும்பி பார்த்து ஒரு சின்ன சிரிப்புடன்
“கணவன் என்ன வேலை பார்க்கறானு கூட தெரியாம ஒரு மனைவி..” என்று அவன் சீண்ட, அதை தவிர்த்தவள்

“சொல்லு சிற்பி.. உண்மையா? உனக்கு தான் அரசியலே பிடிக்காதே?”

“உண்மை தான். அதே மாதிரி எனக்கு இப்பவும் பிடிக்காது தான்”

“பிறகு ஏன்?”

“ஏன்னா என் மனைவிக்கு வாக்கு கொடுத்திருந்தேன் ஒரு சிலதை செய்து காட்டுறேனு. அதற்கு தான்” என்று அவன் அலட்டிக்காமல் பதில் சொல்ல கணவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்

“அது தான் ஏன்?” என்று மறுபடியும் கேட்க

“உனக்கு தெரியாதா?” என்று தன் ஆழ்ந்த குரலில் அவன் பதில் கேள்வி கேட்க, அவளிடம் பதில் இல்லை. உடனே அங்கிருந்து அவள் விலக நினைக்க

“இதை பரிகாரம்னு நினைத்தாலும் சரி இல்ல நான் என் மனைவி மேல வைத்திருக்கிற காதல்னு நினைத்தாலும் சரி. ஆனா என்னுடைய நோக்கம் என் மனைவி பழசை மறந்து அவளுக்குனு இருக்கிற வாழ்க்கைய வாழணும். அதற்காக தான் நான் இவ்வளவு செய்றேன்” என்று அவன் சர்வசாதாரணமாக ஒத்துக்கொள்ள, தனக்கு தெரிந்த விஷயத்தை கணவன் அவன் வாயால் கூறவும் அவனைத் திரும்பியும் பாறாமல் அங்கிருந்து விலக நினைத்தவளை

“ஒரு நிமிடம்..” என்று தடுத்தவன் “இதெல்லாம் என் பிரச்சனை. இது எதையும் நீ உன் மண்டையில் போட்டு உழப்பிக்காம உனக்கான படிப்பையும் நாம ஆரம்பிச்சிருக்கிற அமைப்பை பற்றி மட்டும் யோசி” என்று அவன் முடித்து விட

“இப்படி எல்லாம் எனக்காக பார்த்து பார்த்து செய்தா எப்படி யோசிக்காம இருப்பாங்களாம்?” என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து சென்று மறைந்தாள் ரதி.

பிறகு சிறிது நாட்களிலேயே நிரல்யாவின் திருமணம் வர பாட்டி ரதியைக் கூப்பிட்டு “இங்க பாரு.. அங்க கல்யாணத்திற்கு வர்றவங்க எல்லாம் பெரிய இடம். அதுவும் இல்லாம இது நம்ம பொண்ணு வீட்டுக் கல்யாணம். அதனால சும்மா ஒதுங்கி ஒதுங்கி நிற்காமா யாருக்கு என்ன வேணும் என்றதைப் பார்த்து செய்” என்று சொல்லி முன்பே ரதியை இந்த திருமணத்திற்கு தயார் படுத்த ஆனால் அங்கு நடந்ததோ வேறு. நிரல்யாவுடன் சேர்த்து ரதி சிற்பிக்கும் அன்றே திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் பத்மாவதி.

“பத்துமா! என்ன இது? எங்களுக்கு தான் ஏற்கனவே திருமணம் நடந்திடுச்சே பிறகு எதற்கு மறுபடியும்?” என்று சிற்பி மறுக்க

“டேய்! அது அங்க உங்க மாமா ஊர்ல நம்ம தமிழர் முறைப்படி நடந்துச்சி. இது இங்க டெல்லியில உன் நண்பர்களுக்காக இவங்க முறைப்படி நடக்குது. அதனால எந்த மறுப்பும் சொல்லாம இருவரும் எல்லா சடங்குக்கும் தயாராகுங்க. பாப்பாவை நாங்க எல்லோரும் பார்த்துக்கிறோம்” என்று அவர் முடித்து விட அவனோ மனைவியைப் பார்க்க அவளோ தலை கவிழ்ந்த படி நின்றிருந்தாள்.

அவன் வேண்டாம் என்று மறுக்கக் காரணம் மனைவி இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பதற்காகத் தான். ஆனால் அவள் அமைதியாய் இருக்கவும் உடனே அவளுக்கான உடையைத் கொடுத்தவன் தானும் கிளம்பி வந்தான். அதன் பிறகு நடந்த எல்லா சடங்குகளிளுமே ரதி ஒருவித ஆர்வத்துடனே கலந்து கொண்டாள். இதெல்லாம் அவளுக்குப் புதிது இல்லையா? அதிலும் மருதாணி சடங்கில் பெண்ணின் கையில் மறைமுகமாக மாப்பிள்ளையின் பெயரை எழுத அதை சரியாக மாப்பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும்.

அப்படி ரதி முழங்கையில் இருந்து விரல் நுனி வரை இருக்கும் மருதாணியில் தன் பெயரை முதலிலேயே சிற்பி கண்டுபிடித்தாலும் மனைவியிடம் விளையாடிப் பார்க்க நினைத்தவன் வேண்டும் என்றே தன் விரல் நுனியால் அவள் கை எங்கும் அவன் கோலமிட காது மடல்கள் சிவக்க தன்னுள் நிகழும் குறுகுறுப்பைத் தடுக்க ரதி தன் கால் கட்டை விரலை பூமியில் அழுந்த அமர்ந்திருக்கவும் அதைப் பார்த்தவன் வேண்டும் என்றே

“இதுவா? இல்ல இல்ல.. இது இருக்காது. அப்ப இதுவா?” என்று சிற்பி சீண்ட ரதியால் வாய் திறக்க முடியாத மவுனம். பின் மனைவியின் நிலையை உணர்ந்தவனோ இறுதியாக தன் பெயரைக் காட்டி முடித்தான் சிற்பி.

சங்கீத் விழாவிலும் இப்படி தான் இருவரும் கை கோர்த்து தோள் அணைத்து ஆட எதற்கும் ரதி மறுப்பு தெரிவிக்கவில்லை.

எல்லாவற்றையும் விட அக்னி வளர்த்து மனைவிக்கு மறுபடியும் தாலி கட்டி அவர்கள் அதை வலம் வந்த போது ஒரு திருப்தியை உணர்ந்தாள் ரதி. அதே நேரத்தில் நிரல்யா ரிஷி திருமணமும் இனிதே முடிந்தது. இரவு குழந்தையோடு ரதி தங்கள் அறையில் இருக்க உள்ளே நுழைந்த பத்மாவதி

“தேவி! நிரல்யா ரூம்ல உனக்கு ஒரு புடவை வச்சிருக்கேன். குளிச்சிட்டு அதை கட்டிக்கோ. இன்று ஒரு நாள் பாப்பா என் கூட தூங்கட்டும்” என்றவர் அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் தூங்கி விட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார் அவர்.

அவர் சொன்ன படியே அனைத்தையும் செய்து விட்டு வந்து அவள் கட்டிலில் அமர்ந்திருக்க அப்போது உள்ளே நுழைந்தான் சிற்பி. கணவன் வந்தது தெரிந்தும் அவள் அமைதியாக இருக்கவும்

“என்ன பெண் புலி எதுவும் வாயே திறக்காம இருக்கீங்க?” என்று இவன் சீண்ட, காதே கேட்காதவள் போல் தலை குனிந்த படி அமர்ந்திருந்தாள் அவள். அதில் அவளிடம் வந்தவன் மனைவியின் கன்னத்தைக் கிள்ள

“ஸ்… ஆ…” என்ற கத்தலோடு அவள் கணவனை முறைக்க

“இல்ல டி.. நீ என் உண்மையான மனைவி தானா இல்ல நீ இப்படி அமர்ந்திருப்பது கனவானு டெஸ்ட் பண்ணேன் டி” என்று அவன் சின்ன சிரிப்புடன் சொல்ல அதற்கு எதிரொலியாக அவள் முகத்திலும் சன்னமான ஒரு சிரிப்புடன் மறுபடியும் தலை கவிழ்ந்தாள் அவள்.

சிற்பிக்கு அதைப் பார்த்ததும் முதல் இரவு அன்று ரதி பேசிய வார்த்தையும் அவள் நடந்து கொண்டதும் தான் நினைவுக்கு வந்தது. இப்போது எவ்வளவு மாற்றம் என்று எண்ணியவன் பின் கட்டிலின் மறுபக்கம் வந்து அமர்ந்தவனோ இவ்வளவு மாற்றம் வந்திருக்குனு தெரிஞ்சிருந்தா பேசாம ரிஷி கூடவே ஹனிமூனுக்கு டிக்கெட் போட்டு இருப்பனே?” என்று முணுமுணுத்தவன்

“சரி இப்போ மட்டும் என்ன? பேசாம டார்ஜிலிங் சுவிட்சர்லாந்துனு ஆன்லைன்ல புக் பண்ணுவோம்” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்து நோண்ட சட்டென கணவன் முன் வந்து நின்றவள்

“அடேய் இடி மாடு! உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா டா? ஒன்றரை வயசுல கையில குழந்தைய வச்சிகிட்டு ஹனிமூன் போறாராம் ஹனிமூனு..” என்று போனைப் பிடிங்கிய படி அவள் நொடிக்க

“இதுல என்ன டி தப்பு இருக்கு? நாளைக்கு என் பொண்ணுக்கு கல்யாணமாகி என் மகளும் மாப்பிள்ளையும் ஹனிமூன் போகும் போது கூட நான் இந்த பக்கம் என் மனைவியோட ஏதாவது ஒரு ஊருக்கு ஹனிமூன் போவேன் டி”

“போவிங்க போவிங்க.. அப்படி மட்டும் நடந்தா நம்ம மாப்பிள்ள இவரு என்ன விவஸ்த கெட்ட மாமனாரா இருக்காறேனு உங்கள நினைப்பார்!”

“அவர் என்னை மட்டுமா நினைப்பார்? விவஸ்த கெட்ட மாமியாருனு உன்னையும் தான டி நினைப்பார்!” என்று சிற்பி எடுத்துச் சொல்ல

“அட! ஆமாம் இல்ல?” என்ற படி ரியாக்ஷன் கொடுத்தாள் ரதி.

அதில் கவரப் பட்டவனோ மனைவியை இழுத்துக் கொண்டு கட்டிலில் உருள இருவரும் எதிர்காலத்தில் இப்படி ஒன்று நடந்திடுமோ என்ற எண்ணத்தில் ரதி சங்கடத்தையும் சிற்பி சந்தோஷத்தையும் இன்றே அனுபவித்தார்கள்.

இன்றைய இரவு இருவருக்குள்ளும் கூடல் இல்லை என்றாலும் அதன் பிறகு ஏற்படும் மனதிருப்தியை உணர்ந்தார்கள்.

அன்று கணவன் சொன்னது போல் அதன் பிறகு வந்த நாட்களில் அமைப்பில் அவள் கவனத்தை செலுத்த அங்கு பல வகையான பெண்களின் பிரச்சனைகள் வந்தது. தாய் தந்தையரே பணத்திற்காக அவர்கள் மகளைத் தனக்கு பிடிக்காத இரவு நேர கிளப் டான்சில் விடுவதாக ஒரு பெண் வந்தாள்.

இன்னொருத்தியோ ஒரு பணக்காரனுடன் விருப்பப் பட்டு பழகி விட்டு ஏதோ மனவேறுபாட்டின் காரணமாக பொய்யாக நியாயம் கேட்டு வந்திருந்தாள். இதையெல்லாம் விட ஒரு பள்ளி ஆசிரியை தன்னுடைய பதினோராவது வகுப்பு மாணவர்களில் இரண்டு பேர் சரியாகப் படிக்காததால் தான் கண்டித்ததை மனதில் வைத்துக் கொண்டு தன் வீட்டு குளியலறை ஜன்னலில் கேமராபோன் வைத்து அவருக்கே தெரியாமல் அவர் குளிக்கும்போது வீடியோ எடுத்து அதை அவர் போனுக்கே அனுப்பி மிரட்டி அசிங்கப் படுத்துவதாக வந்து சொல்லி தீர்வு கேட்க அவருக்கு உதவ இவர்கள் அமைப்பு முழு மூச்சாய் இறங்குகிறது என்று தெரிந்த உடனே அந்த பசங்களின் பெற்றோரை விட அந்த பள்ளி நிர்வாகி தான் ரதிக்கு அதிகம் தொல்லை கொடுத்தார்.

இந்த வயதில் அந்த மாணவர்கள் கெட்டுப் போவது ஒன்றும் பெரிதில்லை போலவும் தன் பள்ளி ஆசிரியைக்கு நடந்த அநியாயமும் பெரிதில்லை என்பது போலவும் நடந்து கொண்டார். இந்தியாவிலேயே தலை சிறந்த பள்ளியாக விளங்கும் தங்கள் பள்ளியின் மதிப்பையும் பெருமையையும் காப்பாற்றத்தான் துடித்தார்கள் தவிர எந்த விதத்திலும் ரதிக்கு அவர் உதவ தயாராக இல்லை.

அதனால் கொதித்த ரதி ‘இப்படி இருந்தால் குற்றங்கள் எப்படி குறையும்? பிறகு நாளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னவாகும்?’ என்று யோசித்தவள் அந்த நிர்வாகத்துடன் சரிக்கு சமமாக போராட அவர்களின் கடைசி ஆயுதமாக அந்த ஆசிரியையின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக ரதியிடம் இருக்கும் ஆதாரங்களை கொடுக்கச் சொல்லி மிரட்ட வேறு வழியில்லாமல் கணவனுக்குத் தெரியாமல் அந்த ஆசிரியைக்கு பதில் அதை எடுத்துக்கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றாள் ரதி.

அங்கு அவர்கள் பிள்ளையை விட்டு விட்டாலும் ரதியைத் தாக்க நினைக்க அதில் மயங்கி விழப் போனவளை எங்கிருந்தோ வந்து காப்பாற்றினான் சிற்பி. பின் அங்கு வந்த போலீஸிடம் அவர்களை ஒப்படைத்து விட்டு மனைவியைத் தூக்கி காரில் படுக்க வைத்து அவள் மயக்கத்தை தெளியவைக்க கண்ணைத் திறந்து பார்த்தவள் ‘இவன் எப்படி இங்கே?’ என்று முழிக்கவும் மனைவியைத் தூக்கி இறுக்கி அணைத்தவனோ

“ஏன் டி இப்படி செய்த? நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா உன் நிலைமை என்னவாகி இருக்கும்?” என்று அவன் பரிதவிக்க

“என்ன? செத்துப் போய் இருப்பேன்..” என்றாள் மனைவி அவன் கை அணைப்பில் இருந்து கொண்டே. அதில் உடல் நடுங்க இன்னும் அவளை இறுக்கி அணைத்தவனோ

“சாகு டி சாகு.. கூடவே நானும் சாகறேன். இந்த ஜென்மத்துல நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழத் தான் முடியல. சேர்ந்தாவது சாகுவோம்” என்று அவன் சொல்ல

கணவனின் காதலில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் போனாள் ரதி. ‘இவன் சொன்ன இந்த வார்த்தை பொய் இல்லை. இந்த பரிதவிப்பு இந்த நடுக்கம் இந்த அணைப்பு எதுவுமே பொய் இல்லை. அப்போ இவன்..’ என்று யோசித்தவள் அதை தொடர பிடிக்காமல்

“நீங்க எப்படி இங்க வந்திங்க? நான் தன்ராஜ் ஸாரை தானே என்னை ஃபாலோ பண்ணச் சொன்னேன்?” என்று அவள் பேச்சை மாற்ற

“என் மனைவியோட உயிரக் காப்பாற்றச் சொல்லி யாரோ ஒரு தன்ராஜ் கிட்ட விட்டுட்டு என்னை வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்கச் சொல்றியா? ஆமா.. அந்த டீச்சரையோ இல்ல வேற யாரையோ தானே இதற்கு அனுப்புறேனு சொன்ன?” என்று அவன் கோபப் பட

“அந்த டீச்சர் அவங்க போறதுக்கும் இல்ல வேற யாரையாவது அனுப்பவும் ரொம்ப பயந்தாங்க. அதான் நானே வந்தேன்” என்று அவள் சிறு குரலில் முடிக்க இன்னும் இன்னும் தன்னவளை இறுக்க அணைத்துக் கொண்டான் சிற்பி.

இப்படியே நாட்கள் அதன் போக்குக்கு செல்ல மனைவியிடம் சொல்லியது போலவே அரசியலிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏதேனும் பெரிதாக நல்லது செய்ய நினைத்தான் சிற்பி.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இப்படி பாலியல் வன்முறை என்ற பெயரில் சித்திரவதை செய்யும் ஆண்களுக்கு அதே தண்டனை என்ற பெயரில் கடுமையான சித்திரவதையைக் கொடுக்க நினைத்தான்.

அதற்காக மரண தண்டனை கொடுக்கவோ மனித பிறப்பில் ஆண் என்பதற்கு அடையாளமாக இறைவன் அவர்களுக்குப் படைத்த பாகத்தை வெட்டி எறியவோ சிற்பிக்கு விருப்பம் இல்லை. அதெல்லாம் ஒரு நொடி சித்தரவதை தான். அதை விட பெரிய தண்டனையாக அவன் யோசித்ததில் பண்டைய காலத்தில் கொடுக்கப்படும் தண்டனையான கழுமரத்தில் அந்த நாய்களை இப்போதும் ஏற்ற வேண்டும் என்று யோசித்தான்.

கழுமரம் ஏற்றுதல் என்பது நல்ல மரத்தை தேர்ந்தெடுத்து அதை ஒரு ஆள் உயரத்துக்கு வெட்டி செதுக்கி பட்டை தீட்டி எண்ணை தடவி நன்றாக மொழுமொழுவென்று இருக்கும் படி தயார் செய்து அதன் அடிப்பாகம் பெருத்தும் அப்படி யே மேலே செல்லச்செல்ல சிறுது சிறிதாக சிறுத்து நுனிப் பாகமோ கூர்மையாக இல்லாமல் அதற்கும் குறைவாக சிறுத்துப் போய் இருக்கும்.

அந்த நுனிப் பகுதியை தண்டனை பெற்ற ஆணின் ஆசன வாய் வழியாக உள் செல்லும் படி அவனை அதில் அமர வைக்க அவனுடைய பாரத்தை தாங்க முடியாமல் அவனின் உடலானது சிறிது சிறிதாக கீழ் நோக்கி இறங்கும். கீழே செல்லச்செல்ல மரத்தின் அளவுகள் பெருத்துக் கொண்டே போவதால் அவனின் உடலை கிழித்துக் கொண்டு உள்ளே இறங்க இறங்க கடுமையான வலியையும் வேதனையையும் தரும்.

இறப்பும் உடனே நடக்காது குறைந்தது மூன்று தினங்களாவது ஆகும். ஆனால் அதற்குள் வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு வலியும் வேதனையும் சித்திரவதையும் அனுபவிப்பான். இப்படி ஒரு தண்டனை கிடைத்தால் தான் எந்த ஒரு ஆணும் பெண்களைத் தப்பான நோக்கத்தில் பார்க்கக் கூட பயப்படுவான். ஆனால் இதையெல்லாம் தனி ஒருவனான சிற்பியால் அவ்வளவு சீக்கிரத்தில் செய்ய முடியாதே? அதனால் அவன் தாத்தாவின் துணையோடு கட்சித் தலைவரைப் பார்த்து அவன் இதை பற்றி சொல்ல

“யோசிக்கறதுக்கு இதுல எதுவுமே இல்ல வர்மா! நாளைய சமுதாயம் நல்லா இருக்கனும்னா இதை கொண்டு வந்து தான் ஆகணும். ஆனா இது அவ்வளவு சுலபம் இல்ல. நான் பி.எம்.கிட்ட இதப் பற்றி பேசறேன். பார்க்கலாம்..” என்று சொன்னவர் ஏனோ அவனை விட முடியாமல் அடுத்த இரண்டு வருடத்திலேயே வந்த எம்.பி தேர்தலில் நிற்க அவனுக்கு சீட்டு தந்து அதில் ஜெயித்த அவனுக்கு சட்டத்துறை இலாக்காவையும் கொடுத்தார். அப்போதும் அவனால் அந்த சட்டத்தை சுலபமாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. முதலில் இது ஜனநாயக நாடு. இங்கு இது போல் மனித உயிர்களை வதைக்க யாருக்கும் உரிமை இல்லை என்றார்கள்.

“எது ஜனநாயகம்? ஒரு மனிதன் இன்னோர் மனிதனைக் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாது அவன் உணர்வுகளை மதிக்கனும் என்றது தான் ஜனநாயகம்? அப்போ இந்த நாட்டில் வாழும் பெண்கள் குழந்தைகள் யாரும் மனுஷிகள் இல்லையா? அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் மட்டும் உங்கள் ஜனநாயக நாட்டில் நடக்கலாமா? ஒரு நிரபராதியை நாம இங்கு தண்டிக்கல. உண்மையா தப்பு செய்தவனை நேர்மையான முறையில் விசாரித்து வழக்கை விரைவாக முடித்து அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு தான் இந்த சட்டம்” என்று சிற்பி எதிர் வாதிட

இவர்கள் ஆட்சியில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் இன்னும் பத்து வருடத்திற்கு இவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என்ற எண்ணத்தில் எதிர்கட்சினர் பாராளுமன்றத்தில் கூச்சம் குழப்பம் வெளிநடப்பு என்று பல பிரச்சனைகளை அவர்களும் தங்கள் பங்குக்கு தந்தனர்.

“இப்படி எல்லாம் ஒரு சட்டத்தை பொசுக்குனு போட முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை” என்றான் ஒருத்தன்.

“மனிதர்களே தன் சக மனிதர்களை ஜாதி என்ற பெயர்ல அடிமைப்படுத்திய போது டாக்டர் அம்பேத்கர் ஐயா அவர்கள் ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்வாதாரம் உயர சட்ட நுணுக்கங்களை அறிந்து சட்டம் இயற்றினாரே? அது இன்றளவும் இருக்கும் போது நாமும் ஏன் அப்படி ஒரு சட்டத்தை இயற்றக் கூடாது?” என்று கேள்வி கேட்டு எல்லோருடைய வாயையும் அடைத்தான் சிற்பி.

பிறகு சபாநாயகர் மற்றும் பிரதமர் ஒப்புதலை அடுத்து மக்களவையில் இவர்கள் கட்சி தான் பெரும்பான்மை என்பதால் இங்கு சுலபமாக மசோதா நிறைவேறியது.

ஆனால் மாநிலங்களவையில் சிறிது பிரச்சினை இருந்தாலும் எப்படியோ அனைவரையும் சரிகட்டி ஒப்புதல் வாங்கி அங்கும் நிறைவேற்றச் செய்தான் சிற்பி. இறுதியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட கெஸட்டில் வெளியிடப்பட்டு பின் சட்டமாக இயற்றப்பட்டது.

அன்று முழுக்க கணவனைக் கட்டி கொண்டு கண்ணீர் விட்டாள் ரதி.
“எவ்வளவு பெரிய விஷயத்த இப்படி நடக்கவே நடக்காதானு நாங்க எல்லாம் ஏங்கின விஷயத்த இப்படி முடிச்சிட்டு வந்து நிற்கிறியே சிற்பி! இதற்கு நீ எவ்வளவு போராடி கஷ்டப்பட்டு இருப்ப?” என்று முதன் முதலாக கணவனுக்காக அவள் பேச, மனைவியின் தலை வருடியவனோ

“இதுல கஷ்டம் இல்லனு சொல்ல மாட்டேன். கஷ்டம் தான்.. ஆனா அது சாதாரண ஜனநாயக மக்களுக்கு தான். என்னை மாதிரி அரசியல்வாதிகளுக்கோ சட்டம் தெரிந்தவர்களுக்கோ பணக்காரர்களுக்கோ அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை. ஆனால் இதை செய்யத் தான் அவர்கள் யாருக்கும் மனசு இல்லை. மனசு இருப்பவர்கள் கையில் அதிகாரம் இல்லை. எனக்கு ரெண்டும் இருந்தது. அதான் நான் முடிச்சேன்” என்று இன்றைய உண்மையை சாதாரணமாகக் கூறினான் சிற்பி.

இப்படி தலைவரின் மனதில் இடம் பிடித்து சிற்பி வெற்றி பெற்றதால் அவன் அரசியல் எதிரிகள் அவன் உயிரைப் பறிக்க நினைக்க அதன்படியே ஒரு நாள் சரமாரி கத்திக் குத்துடன் ரோட்டில் சரிந்தவனை அவனுடைய பாதுகாவலர்கள் மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்க்க மனைவி மகளைப் பார்க்கும் வரை டாக்டர்களைத் தனக்கு முதலுதவி செய்ய விடாமல் தடுத்தான் அவன். கண்கள் சிவந்து போய் முகம் வீங்க கண்ணீருடன் வந்து தன் முன் நின்ற மனைவியைப் பார்த்ததும் அவன் மனதினுள் ஒரு திருப்தி பரவ

“எனக்கு வாக்கு கொடு ரதி. நான் போனாலும் உனக்கான வாழ்க்கைய நீ அமைச்சிக்கிறேனு. நான் தான் உயிருடன் இருந்து உன்னை வாழ விடாம பண்ணிட்டேன். இனியாவது நீ உன் வாழ்க்கைய வாழணும். எனக்கு வாக்கு கொடு ரதி” என்று அந்த நிலையிலும் மனைவி மகளின் எதிர்கால வாழ்க்கைக்காக மனைவியிடம் சரளமாகப் பேசியவன் “பிரதாப்பை இங்க வரச் சொல்லு. நான் அவன் கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று அவன் முடிக்க

அதை கேட்டு உள்ளுக்குள் எரிமலையின் சீற்றத்துடன் இருந்தவள் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு
“ஏன் டா? ஏன் இப்படி என்ன உயிருடன் கொல்ற? நான் முதன் முதல்ல பார்த்த வில்லனாகவே நீ இருந்திருக்கலாம் இல்ல? இடையில் அப்படி ஒரு நல்லவனா மாறிட்டு இப்போ ஏன் என்ன விட்டுப் போகனும்னு நினைக்கிற? நான் உன்னை விரும்பறேனானு கேட்டா எனக்கு தெரியாது. ஒரு கணவனுக்கான உரிமையை உனக்கு கொடுப்பேனானு கேட்டா நிச்சயம் இல்ல.

ஆனா இதே மாதிரி நான் கடைசிவரை இருப்பேனு சொல்ல மாட்டேன். இன்று உன்னை என் தோழனா பார்ப்பது போல் ஒரு நாள் நிச்சயம் உனக்கான மனைவியா நான் மாறுவேன். அதுவரை நாம இப்படியே சண்டை போட்டுகிட்டே இருப்போம் சிற்பி. அதற்கு நீ உயிருடன் இருக்கனும்.. இருப்ப! அன்று நீ சொன்னது தான்.. இந்த பிறவியில் நாம சேர்ந்து வாழ முடியலனாலும் சேர்ந்தே ஒரு நாள் செத்துப் போவோம்” என்று ரதி கணவன் கையைப் பிடித்துக் கொண்டு குமுறவும் கண்ணில் நீர் வழிய காதலுடன் மனைவியைப் பார்த்த படியே சிற்பி மயக்கத்திற்குச் செல்லவும்

“ஐயோ! டாக்டர்..” என்று கத்திய படி மயங்கி விழுந்தாள் ரதி.

பின் அவள் கண் விழிக்கும் போது அவள் கணவனுக்கு ஆபரேஷன் நடப்பதாக சொன்னார்கள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிய இனி அவன் உயிருக்கு ஆபத்தில்லை என்று சொல்ல மனைவியின் மனதை அறிந்ததாலோ என்னமோ சிற்பியின் உடலில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

.
ஒரு வருடம் கழித்து
சிற்பி தன் கட்சித் தலைமையிலான ஒரு கூட்டத்தில் இருக்க சைலண்ட் மோடிலிருந்த அவன் பர்சனல் நம்பருக்கு மெசேஜ் வந்து கொண்டேயிருந்தது. இவனும் தலைவருக்குத் தெரியாமல் அவர் பேச்சைக் கவனிப்பது போல் இங்கு அதற்கேற்ற பதில்களைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அது ஒன்றும் முக்கியமான மெசேஜ் இல்லை தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை தன் மனைவியிடமிருந்து வந்த மெசேஜ் என்பதால் முக்கியம் தான்.

இந்த கம்மலா அந்த கம்மலா என்று முதலில் வந்த இமேஜ் மெசேஜ்கு உரிய பதிலைத் தந்தவன். பிறகு அதே மாதிரி கழுத்துக்கு என்று ஆரம்பித்து பிறகு விரலில் இடும் நெயில் பாலீஷில் இருந்து படிப்படியாக காலில் போடும் செருப்பு வரை மனைவி கேட்ட அனைத்திற்கும் தகுந்தார் போல் பதில் தந்தவன் இறுதியாக ‘மாமாவைக் கொஞ்சம் வேலை பார்க்க விடு டி..’ என்று கெஞ்ச ‘சரி சரி.. பிழைத்துப் போ’ என்றாள் அவன் மனையாள். இதெல்லாம் மெசேஜில் தான் நடந்தது.

ரதி நடத்தி வரும் நிகரிலா வானவில் அமைப்பின் மூலம் பல பெண்களுக்குத் தீர்வு கண்டதைப் பாராட்டும் பொருட்டு சென்னையில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனம் அடுத்த வாரம் சென்னையிலேயே அவளைக் கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய அதற்கு அவள் என்னவெல்லாம் போட வேண்டும் என்பதை கணவனிடம் கேட்கத் தான் இவ்வளவு கூத்தும். இத்தனைக்கும் காலையில் கிளம்பும் போதே விழாவிற்கான புடவையை செலக்ட் செய்து கொடுத்துவிட்டுத்தான் சிற்பி வந்தான்.

கூட்டம் முடிந்ததும் மனைவிக்குப் போன் செய்தவன் அங்கே அவள் எடுத்ததும்
“ஏன் டி ஒரு எம்.பி பொண்டாட்டி மாதிரியா டி நீ நடந்துக்கிற?” என்று இவன் கோபம் என்ற பெயரில் சன்னமாகக் கேட்க

“யார் சொன்னா நான் எம்.பி பொண்டாட்டினு? அதெல்லாம் இல்ல.. நான் எப்போதும் ரவுடி பொண்டாட்டி தான்!” என்று இவள் எகிற, அதில் சின்ன சிரிப்புடன்

“உன்னைய வீட்டுக்கு வந்து வச்சிகிறன் டி” என்ற சொல்லுடன் மொபைலைத் துண்டித்தான் சிற்பி.

வீட்டிற்கு வந்தவன் தங்கள் அறையில் உள்ள அலமாரியில் மனைவி ஏதோ வேலையாக இருக்கவும் பூனை நடையிட்டு அவளிடம் நெருங்கியவன் அவள் இடையில் கரம் பதித்து பின்புறமாவே அவளை அணைத்து கூடவே அவள் கழுத்து வளைவில் இதழ் பதிக்க

“ஐயோ இடி மாடு! காலையிலிருந்து இதை அதை நான் எடுத்து வைக்கிறதால என் உடம்பு முழுக்க வியர்வை. இப்போ போய் இப்படி பண்ற?” என்று திரும்பாமலே தன் வேலையில் கவனமாக இருந்து கொண்டே கணவனைப் பொய்யாக அவள் கண்டிக்க

“அது எப்படி டி நான் தான்னு திரும்பாமலே சொல்ற?”

“அடேய் மக்கு புருஷா.. என்னை இந்தளவுக்கு உரிமையா உன்னைத் தவிர வேற யாருடா தொட முடியும்?” என்று திரும்பி ஒற்றைப் புருவம் உயர்த்தி அவள் கேட்கவும்

முதலில் எல்லாம் அவன் இதழ் பதித்தாலே நடுங்குபவள் இப்போதெல்லாம் அவன் முத்தத்தை சகஜமாவே ஏற்றுக் கொண்டாள். அதாவது முத்தம் வரை இருவரும் முன்னேறி இருக்கிறார்கள் என்பது தான் அதன் அர்த்தம் மனைவியின் கூற்றில்.

“அப்புறம் ஏன் டி இந்த மக்கு புருஷன் கிட்ட காலையில் இருந்து இதைப் போடவா அதைப் போடவானு கேட்ட?”

“அது அப்படி தான். என் புருஷன் மக்கா இருந்தாலும் அவன் எடுக்கிற முடிவு எல்லாம் சரியா இருக்குமே!” என்று அவனைக் கேலியாய் வாரியவள்

“இப்போனு இல்லை.. இன்னும் எட்டு ஒன்பது வருடத்தில உங்க மனைவி அவ கனவை நனவாக்குற மாதிரி விண்வெளியில் கால் பதிக்கப் போறாளாம். அப்பவும் உங்களைக் கேட்டு தான் எல்லாம் செய்வாளாம்” என்று கண்ணில் கனவு மின்ன அவள் சொல்ல மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டான் சிற்பி.

உண்மை தான்! அவள் கனவான விண்வெளிக்கான மேல்படிப்பைப் படித்து முடித்தவள் இப்போது பெங்களூரில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் வேலையில் சேர்ந்திருக்க இன்னும் கொஞ்ச நாளில் குடும்பமே அங்கே குடித்தனம் போகப் போகிறார்கள். பத்து வருடம் கழித்து இந்தியா தன் நாட்டிற்காக அனுப்பும் ராக்கெட்டில் தலைசிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களுடன் தன் திறமையை அவர்களுக்கு சமமாக வளர்த்துக் கொண்டு நம் கதையின் நாயகி ரதியும் போகப் போகிறாள்.

பின் மனைவியுடன் சேர்ந்து அவனும் தங்களுக்கு வேண்டியதை எடுத்து வைத்தவன்
“சென்னையில ஒருவாரம் தங்கப் போறோம். உனக்கு ஹேப்பியா? நீ யாரை எல்லாம் பார்க்கணும்னு ஆசைப்படுறியோ எல்லோரையும் பார்த்திடு. ஆனா தாயே அங்கே போயும் குந்திகினியா நாஷ்டா துன்னுகினியானு உன் சுந்தர தமிழ்ல பேச ஆரம்பிச்சிடாதமா. என் பதவியையும் நாளைக்கு நீ வகிக்கப் போற பதவியையும் நியாபகம் வைத்து பேசுடி செல்லம்” என்று கணவன் அவள் பேசும் குப்பத்து தமிழை கேலி செய்யவும், ரோஷம் வந்தது ரதிக்கு.

“நீங்க மட்டும் இல்ல எல்லோருமே சென்னைத் தமிழ் பேசறவங்களப் பார்த்தா கேலி செய்றீங்க.
ஏன்னா இந்த பாஷைய பேசறது முழுக்க முழுக்க ரிக்க்ஷா ஓட்றவங்க ஆட்டோ ஓட்றவங்க கூலி வேலை செய்றவங்க குப்பத்துல இருக்கறவங்க தான். அதனால தான் அந்த பாஷைய எல்லாரும் ஒதுக்குறாங்க. அந்த தமிழை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

அதோட அழகே வேகமும் எளிமையும்தான். கஷ்டப்பட்டு பேசாம அலட்டிக்காம இயல்பா அன்றாட வாழ்க்கையில உணர்வு பூர்வமா பேசுற பாஷை இது.

நீங்க நெனைக்கிற மாதிரி இது ஒண்ணும் தனி மொழி இல்ல. செந்தமிழ், இங்கிலிஷ், அரபி, தெலுங்குனு பல மொழிகள் கலந்தது தான் சென்னைத்தமிழ். நாஷ்டா, பேமானி, சோமாரி, அசால்ட், அப்பீட்டு, கஸ்மாலம், பேஜார்னு எல்லாமே அப்படி பட்ட வார்த்தைகள் தான்.

எவ்ளோ பெரிய சென்டன்ஸா இருந்தாலும் அதை சுருக்கி அசால்டா ஒரே ஒரு வார்த்தையில சொல்வோம் தெரியுமா?
‘இட்டாந்துடு’ அப்டினா இங்க கூட்டிகிட்டு வானு அர்த்தம்.

அந்த காலத்துல தமிழ் நாட்டுக்கு கப்பல்ல வந்து இறங்கின வெள்ளக்காரங்களை இப்போ ஆட்டோகாரங்க சவாரிக்கு கூப்பிடற மாதிரி அப்போ துறைமுகத்துக்கு வெளியில் இருந்த ரிக்க்ஷாகாரங்க அவர்களைப் பார்த்து ஐயா துரை சவாரிக்கு வாங்க வாங்கனு கூப்பிடுவாங்களாம்.

அதற்கு வெள்ளக்காரன் நம்ம ரிக்க்ஷா ஓட்ற ஆளுங்ககிட்ட சொன்ன don’t badger me என்ற வரியில் இருந்து நம்மாளுங்க புடிச்சிகிட்ட வார்த்தை தான் சும்மா ‘பேஜார்’ பண்ணாம போமான்றது.
.
அவ்ளோ ஏன்? ஜூஜூபினு அந்த காலத்தில் இங்கிலாந்துல ஒரு மிட்டாய் இருந்ததாம். வாயில் போட்டால் உடனே கரைந்து போயிடுமாம்.. இதைத்தான் நம்மாளுங்க ஒன்றுமில்லாத சின்ன விஷயத்துடன் அதை கம்பேர் பண்ணி இதெல்லாம் எங்களுக்கு சும்மா ‘ஜூஜூபி மேட்டர்’னு பேசினாங்க. உண்மையிலே இதுல அவர்களோட அறிவுத்திறன் பற்றி தான் நாம் யோசிச்சுப் பார்க்கணும்.

ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு இதைப் பற்றி பேச. எனக்கு என்னனா இந்த தமிழை மற்றவர்கள் ஒதுக்கலாம். ஆனால் அதே குப்பத்தில் பிறந்த நீங்களுமா சிற்பி?” என்று மனைவி ஆதங்கப் பட

“சூப்பர் ஸ்பீச்! ஆனா இதை எதையும் நடைமுறைக்கு ஏத்துக்க முடியாது” என்று சிற்பி முடித்து விட

‘சரி தான் போ டா’ என்பது போல் லுக் விட்டாள் மனைவி.

இதோ சிற்பி குடும்பம் சென்னை வந்து விட பகலில் தன் குடும்பத்துடனும் மதி மகன் சரத்துடனும் நேரம் கழித்தவள் இரவு கணவன் தோள் சாய்ந்து கண்ணீர் விட்டாள் ரதி.

போன வருடம் நடந்த ஒரு கார் விபத்தில் பிரதாப்பின் தாய் மைதிலியும் தந்தையும் ஒன்றாக இறந்து விட அதற்கு வந்து போனவள் தான். அதன் பிறகு இன்று தான் வருகிறாள். ஒருவருடமே என்றாலும் அவளுக்குப் பழைய நினைவில் இன்றும் கண்ணீர் வந்தது.

“சரி விடு.. அவங்க நேரம் முடிஞ்சிடுச்சி போய்டாங்க. இன்னும் எத்தனை நாளைக்கு அதையே நினைப்ப?” என்று இவன் தேற்ற

“எப்படி சிற்பி நினைக்காம இருக்க முடியும்? நான் வளர்ந்ததே அங்க தானே? சின்ன ஐயாவுக்கு கல்யாணம் ஆகியிருந்தா கூட நான் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனா அவர் தான் கல்யாணமே வேணாம்னு இருக்காரே..” என்று அவள் கவலைப் பட

சிற்பிக்குத் தெரியும் பிரதாப் ஏன் திருமணம் வேண்டாம் என்கிறான் என்பது. ஆனால் ரதிக்கு இன்று வரை அவன் தன்னை விரும்பியது தெரியாது. அன்று கூட மைதிலி தான் ரதியைத் தன் வீட்டு மருமகள் என்று கூறினார். ரதி அவனை விரும்பவில்லை என்றாலும் ரதியை அன்று அவன் விரும்பியது விரும்பியது தான். அந்த இடத்தில் அவளைத் தவிர அவன் வேறு யாரையும் வைத்துப் பார்க்கத் தயாராக இல்லை. அதனாலேயே தான் இங்கிருந்து யாருடைய வாழ்விற்கும் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்ற முடிவில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக இந்த வயதில் தன் மீதி வாழ்வை கழிக்க முடிவு செய்து அங்கு சென்று விட்டான் பிரதாப்.

இதோ அவளுக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவிற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள் ரதி. புடவைக்கு அவள் மடிப்பு வைத்துக் கொண்டிருக்க அந்த அழகான பெங்காலி காட்டன் புடவையோ சரியாக நிற்பேனா என்றிருக்க அதனிடம் போராடியவள்

“சிற்பி இங்க கொஞ்சம் வாங்களேன்” என்று இவள் படுக்கை அறையிலிருந்து கணவனை அழைக்க தங்கள் டிரஸ்ஸிங் ரூமில் துணி மாற்றிக் கொண்டிருந்தவனோ

“என்ன டி? இதோட என்னை முன்னூற்றி நாற்பத்தி ஐந்தாவது தடவையா கூப்பிட்டுட்ட. அதுக்கு தான் நான் இங்கேயே இருக்கேன் டி னு சொன்னாலும் வேணாம்னு துரத்துற. சரி தான் போ டி. இந்த முறை நான் வரமாட்டேன்” என்று சலித்தபடி அவன் குரல் கொடுக்க

“அடேய் இடி மாடு! உன் பொண்டாட்டி இன்றைய விழாவில ஐம்முனு இருக்கணும்னு மட்டும் சொல்லத் தெரியுது இல்ல? அப்போ அதற்கு நீ தான் டா உதவி செய்யணும்? பிளீஸ் சிற்பி! கொஞ்சம் வா டா..” என்று கணவனைத் தாஜா பண்ணி இவள் கெஞ்ச
வேறு வழியில்லாமல்

“என்ன டி?” என்று வந்து நின்றான் சிற்பி.

“இந்த புடவையில மடிப்பு ஒழுங்காவே வைக்க முடியல. கீழ உட்கார்ந்து கொஞ்சம் சரி பண்ணி விடு” என்று இவள் கேட்க

“என்னது கீழ உட்கார்ந்தா? அதெல்லாம் முடியாது பேண்ட் கசங்கிடும்” என்று சொல்லி இவன் மறுக்க

“ஐய! அப்படியே கசங்காம வருவாராம் இவரு.. கார் ஓட்டும் போது எப்படியோ கசங்கத் தானே போகுது? அதே இங்க பொண்டாட்டிக்காக கசங்கினா என்னவாம்? என்று அவள் சலித்துக்கொள்ள, இப்போதும் வேறு வழியில்லாமல் மனைவி முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் புடவையை சரி செய்தவன்

“பார்லர் போய் புடவை கட்டிக்க டினு சொன்னா கேட்காம இப்போ இங்க பிடி அங்க பிடினு மனுஷன் உசுர வாங்க வேண்டியது” என்று அவன் முணுமுணுக்க

“பார்லர் போனா அழகா தான் கட்டி விடுவாங்க. ஆனா இப்படி என் புருஷன் அம்சமா எனக்குப் பார்த்து பார்த்து செய்யற மாதிரி வருமா?” என்றவள் குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதிக்க, அதை பெற்றுக் கொண்டவன்

“இதெல்லாம் ஒரு முத்தமா டி?” என்று மனைவியை வெறுப்பேற்ற

“உங்களுக்கு இன்னோர் முத்தம் வேணும்னா கேட்டு வாங்கிக்கங்க அதுக்காக எல்லாம் என் முத்தம் சரியில்லனு சும்மா சப்பகட்டு கட்டாதிங்க” என்று அவள் நொடிக்க

“அப்படி யா? அப்போ இப்போ மறுபடியும் கொடு டி பார்க்கலாம்” என்று அவன் சொல்ல, முன்பு போலவே கணவனின் நெற்றியில் இதழ் பதிக்க அவள் குனியும் நேரம் சிற்பி தன் தலையை மட்டும் சற்றே பின்னுக்குத் தள்ள அப்போது ரதியின் இதழ் என்னமோ நெற்றிக்கு பதில் கணவனின் இதழில் பதிந்தது.

வெட்கம் கலந்த சின்ன சிரிப்புடன் சற்றே நிமிர்ந்தவள்
“ஃபிராடு! தெரியும் டா உன்னைப் பற்றி” என்று சிணுங்க

“தெரிஞ்சும் ஒவ்வொரு முறையும் நீ தானே டி என்ன கூப்பிடற?” என்று மனைவியை மடக்கினான் அவன்.

நிஜம் தான்! இது தினம் தினம் நடக்கும் விளையாட்டு தான். ஆனால் கணவன் மனைவி இருவருமே ஏதோ இன்று தான் முதல் முறையாக இது நடப்பது போலவே கொஞ்சிக் கொள்வார்கள்.

அங்கே விழா நடந்தது ஒரு கல்லூரி வளாகம் என்பதால் நிறைய பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தார்கள். ரதி நடத்தி வரும் அமைப்பைச் சொல்லி அவள் படித்த படிப்பையும் சொல்லி அவளைப் பாராட்டியவர்கள் இறுதியாக அவளைப் பேசச் சொல்ல

ஒரு கம்பீரத்துடன் அங்கு குழுமி இருந்தவர்கள் முன் நின்றவள்
“எல்லோருக்கும் வணக்கம்! என்னைப் பெண்ணியம் பற்றிப் பேசச் சொன்னா நிறைய பேசுவேன் பேசியும் இருக்கேன். அது என் கணவருக்கு மட்டும் தெரியும். அதனால நான் இங்கு கொஞ்சமே சில விஷயங்கள உங்க எல்லார்கிட்டையும் பகிர்ந்துக்கலாம்னு வந்திருக்கேன். நான் வைத்து நடத்துற அமைப்பு பற்றி ஒரு சில பேருக்கு இங்கு தெரியும்.

என்னைக் கேட்டா இப்படி ஒரு அமைப்பு எதிர்காலத்துல வேணாம்னு தான் நான் சொல்லுவேன். இந்த உலகத்தில் இரண்டு இனம். அதில் ஒன்று பெண் இன்னொன்று ஆண். அப்படிப் பட்ட பெண் இனத்தைப் பாதுகாக்க வந்த ஆண்களான நீங்களே இப்படி பெண்களைச் சின்னாபின்னமாக்கி அழிக்கலாமா என்பதை நாளைய சமுதாயாமான நீங்களாவது சிந்தித்துப் பாருங்கள். பெண்கள் இந்நாட்டின் கண்கள்னு சொன்னான் பாரதி. அது ஏன் தெரியுமா?” என்று இவள் கேட்க

“ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதினால்” என்று சிலர் கோரசாக சொல்ல


“அது வெறும் குழந்தையைப் பெற்றெடுப்பதால் மட்டும் இல்லை. இந்நாட்டின் நாளைய சமுதாயத்தை உருவாக்குவதால் தான். அதேபோல் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் போர் ஏற்பட்டால் அந்த நாட்டை பலம் இழக்க வைத்து அடிமைப்படுத்த அன்று முதல் இன்று வரை கையாளப்படும் ஒரே விஷயம் என்ன தெரியுமா?
சிறிது இடைவேளை விட்டவள்
அந்நாட்டின் பெண்களின் கற்பை அராஜகமாக சூறையாடுவது. அது தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை அழிக்கக் கூடிய ஆயுதம்.

ஒரு நாட்டிற்குப் பெண் எப்படி முக்கியமோ அப்படி தான் ஆண்களின் பலம் கொண்ட உழைப்பும், புத்திக் கூர்மையும். இவை இரண்டும் அந்நாட்டை வல்லரசாக மாற்ற உதவும். அதை தேவை இல்லாத சில செய்யக் கூடாத விஷயங்களில் செலுத்தி வீண் ஆவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

அப்புறம் இன்னோர் விஷயம் சொல்லணும். நம்ம வீட்டுல நாம சின்ன வயசா இருக்கும் போது அக்கா தம்பிய அடிக்க துரத்திகிட்டு ஓடுவா இல்லனா இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சி உருண்டு அக்கா தம்பிய கண்ணு மண்ணு தெரியாம அடிப்பா. அதுகூட விளையாட்டுக்கு தான். அப்போ அம்மா ஒரு வார்த்தை சொல்லுவாங்க கேட்டு இருக்கிங்களா? டேய் பார்த்து விளையாடுங்கடா தம்பிக்கு படாத இடத்துல பட்டுடப் போகுது டினு தன் பெண் கிட்ட சொல்லி மிரட்டுவாங்க. அது என்ன அடி படக் கூடாத இடம்? அப்படி பட்டா என்ன ஆகும்னு உடனே பசங்க கேட்பாங்க.

அப்போ அம்மா அந்த இடத்தை சொல்லி அங்க அடி பட்டா தம்பிக்கு வலிக்கும் அவன் செத்துடுவான்னு சொல்லிக் கொடுப்பாங்க.

நான் கேட்கிறேன் அப்படி ஆண் பிள்ளைகளோட வலியைப் பற்றி பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற அம்மா ஏன் அதே பெண் பிள்ளைகளுக்கும் அப்படி அடி படக் கூடாத பாகம் உடல்ல இருக்கு. அங்கு அவளுக்கு ஏதாவது நேர்ந்தால் வலியுடன் கூடிய சித்திரவதையை அவ அனுபவிப்பானு ஏன் ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க மாட்டேன்றாங்க?” ஒரு தாய் சொல்ல முடியாத அளவிற்கு இதில் என்ன அசிங்கம் கூச்சம் இருக்கு?” என்று இவள் கேட்க அந்த அரங்கம் எங்கும் கரகோஷத்தால் நிரம்பி வழிந்தது.

“சொல்லிக் கொடுங்க.. நாளைய சமுதாயமான நீங்களாவது உங்கள் மகளுக்கு குட் டச் பேட் டச் கத்துக் கொடுக்கிறதை விட உங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி நடத்த வேண்டும் அவர்களின் வலி வேதனைகள் என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்த்துப் பாருங்க.. நிச்சயம் கொஞ்சமாவது மாற்றம் வரும்!

அதே மாதிரி கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன். பெண் பிள்ளைகளுக்கு இப்போ இருக்கும் பெற்றோர் எவ்வளவோ சுதந்திரத்தை கொடுத்து இருக்காங்க அதை தவறா பயன்படுத்தாதீங்க. பெண் தானே இவ என்ன பெரிய இவளா என்று நினைத்த காலம் போய் ஆண் தானே இவன் என்ன பெரிய இவனா என்று நினைக்காதீங்க. இருவரும் சேர்ந்து கை கோர்த்து முன்னேருங்கள். பிறகு அந்த நாட்டின் வளர்ச்சியை நீங்களே கண்கூடாகக் காணலாம். இனி ஒரு விதி செய்வோம். ஜெய்ஹிந்த்!” என்ற சொல்லுடன் தன் இறுதி உரையை முடித்துக் கொண்டாள் ரதி.

வீட்டிற்கு வரும்போதே வழியில் “எப்படி என் பேச்சு?” என்று அவள் கணவனிடம் கேட்க

“சூப்பர் டா!” என்றான் அவன்.

அங்கு மேடையில் அவள் பேச்சைக் கேட்டு எல்லோரும் ஆமோதிக்க மனைவியைப் பார்த்துப் பெருமையாக இருந்தது சிற்பிக்கு.

கிஷோர் என்னும் அரக்கனால் தன் சுயத்தை இழந்து கல்லாக சமைந்து போனவளை இன்று ரதி என்னும் அழகான உயிருள்ள சிற்பமாக இன்று சிறுகச் சிறுக செதுக்கி இருக்கிறான் சிற்பிவர்மன்!

அவள் மேலுள்ள காதலில் அவளை இழக்க விரும்பாமல் இன்று தங்களுக்குள் நடக்கவிருக்கும் தாம்பத்தியத்தையே விட்டுக் கொடுத்து வருகிறான்.

ஏதோ ஒரு வகையில் அவளுக்கு உண்மை தெரிய வர கடமைக்கென்று தன்னுடன் அவள் கூடி விட்டு பின் தனிமையில் அவள் தன்னைத் தானே வெறுக்கக் கூடாது என்பதற்காக சாகும் வரை வேறு யார் மூலமாகவும் அந்த விஷயம் வெளிவராத படி பார்த்துக் கொள்ள உறுதி எடுத்திருந்தான் ரதியின் காதல் கணவனான நம் கதையின் நாயகன் சிற்பிவர்மன்!

ஆனால் ரதி சொன்னது போல் சிற்பியுடன் தாம்பத்தியத்துடன் கூடிய அந்நியோன்ய வாழ்வு வாழும் அளவுக்கு ஒருநாள் அவள் மனதை சிற்பியின் காதலும் காலமும் மாற்றும். அதுவரை ரதி சுவாசிக்கும் காற்றாய் அவனிருந்து அவளுள் கலந்து அவள் உயிரின் உயிராக இருப்பான் ரதியின் அடாவடி காதலன்….

இக்கதை இன்று வரை உறவுகளுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்யும் ஆண்களுக்கு சமர்ப்பணம்!

நன்றி!

முடிவுற்றது!
 

UMAMOUNI

Member
உண்மையில் ரதி தேவியை செதுக்கிய சிற்பி நம் வார்சா தான் பெண்மை மதிப்பு கொடுத்து ரதியை அவளது குணங்களுடன் ஏற்றுக் கொண்டு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் வாழும் வாழ்வு மிகவும் அருமை
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உண்மையில் ரதி தேவியை செதுக்கிய சிற்பி நம் வார்சா தான் பெண்மை மதிப்பு கொடுத்து ரதியை அவளது குணங்களுடன் ஏற்றுக் கொண்டு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் வாழும் வாழ்வு மிகவும் அருமை

நன்றிங்க உமா சிஸ்💝💝💝💝💝 u always support me sis🤗🤗🤗🤗🤗🤗 அதை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு💕💕💕💕💕😍😍😍😍😍😍😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN