நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

12.அன்பின் பரிசே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
12. அன்பின் பரிசே

இருள் போர்த்தும் இரவில் வீடு வந்து சேர்ந்தாள் மைவிழி. தன்னிடமிருந்த சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் வந்தாள். வீடு இருட்டாக இருந்தது.

"லைட் போட்டு வச்சா இவன் குறைஞ்சிட போறானா..?" என கதிரை திட்டிக் கொண்டே விளக்குகள் அனைத்தையும் ஒளிர விட்டாள். பசி வேறு அவளை பாடாய்படுத்தியது. முகம் கை கால்களை சுத்தப்படுத்திக் கொண்டு சமையலறைக்கு வந்தவள் சமையலறை வெறிச்சோடி கிடப்பதை கண்டாள். அவள் காலையில் செய்த சாப்பாடு மட்டும் இருந்தது.

கோபத்தோடு சென்று கதிரின் அறை கதவை தட்டினாள்.

"உனக்கு சமைக்க கையாலாகாத்துன்னு காலையிலேயே சொல்லி தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே..? நான் வெளியவேவாவது எதாவது சாப்பிட்டு வந்திருப்பேனே..?" அவள் கதவை கோபத்தோடு தள்ளினாள். பூட்டாத கதவு திறந்து கொண்டது. அவனை சட்னியாக்கிவிடும் எண்ணத்தோடு உள்ளே நுழைந்தாள். மொத்த அறையும் காலியாக இருந்தது.

"கதிர்.. கதிர்.." அவனை அழைத்தபடியே வீடு முழுக்க தேடி பார்த்தாள். அவன் வீட்டிற்கு இன்னும் வரவில்லை என புரிந்து கொண்டவள் அவனை திட்டிக்கொண்டே சமையலறைக்கு வந்து உணவை சமைக்க ஆரம்பித்தாள்.

கடிகாரம் மணி பதினொன்று ஆகி விட்டதை காட்டியது. சமையலறை சன்னல் வழியே உள்ளே வந்த இருள் அவளை கொஞ்சமாக பயமுறுத்தியது.‌ மைவிழிக்கு இருளை கண்டு அவ்வளவாக பயம் இல்லாவிட்டாலும் அந்த வீட்டில் தனியாக இருப்பதில் சற்று தயக்கம்தான். பக்கத்து வீட்டு மரத்திலிருந்து ஏதோ ஒரு பறவை திடீரென கத்த இவள் இங்கே துள்ளி விழுந்தாள்.

"இந்த பிசாசு ஏன் இன்னும் வீடு வந்து சேரல..? எருமைமாடு மாதிரி வளர்ந்தா மட்டும் போதுமா..? நேரத்துக்கு வீடு வந்து சேரணுங்கற அறிவு வேண்டாமா..?" அவள் கதிரை கரித்துக் கொட்டிய நேரத்தில் கரண்ட் கட்டாகியது.

"இந்த கரண்டுக்கு என்ன வந்துச்சி..?" மைவிழிக்கு முழு பயம் வந்துவிட்டது. அவளது கைபேசி கைப்பையிலேயே இருந்தது.‌ அந்த வீட்டில் மெழுகுவர்த்தி இருக்கும் இடமும் இவளுக்கு தெரியாது. கண்களை திறக்க பயந்து இறுக்க மூடியபடி ஹாலுக்கு வந்தாள். திடீரென சன்னல் ஒன்று காற்றின் காரணமாக படீரென சாத்தி திறந்தது. மைவிழி திடுக்கிடலோடு அந்த திசையை பார்த்தாள். திறந்திருந்த சன்னல் வழியே இருட்டில் ஏதோ ஓர் உருவம் நகர்வது போலிருந்தது அவளுக்கு.

பயம் இப்போது முழுமையாக அவளை ஆக்கிரமித்திருந்தது. திடீரென அவளது தோள் மீது கை ஒன்று பட "ஆஆஆ.." வென கத்தியவளின் வாயை மூடியது அந்த கை. அவளுக்கு பயத்தில் உயிரே போவது போலிருந்தது.

"எதுக்கு இப்படி கத்துற..?" கதிரின் குரல் கேட்ட பிறகு அவளது இதய துடிப்பு சீரானது. மின்சாரம் அதற்குள் வந்து விட்டது. கதிர் தனது கையை விலக்கி கொள்ள மைவிழி தன் நெஞ்சில் கை வைத்து தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.

"கதவை தட்டிட்டு உள்ளே வர வேண்டியதுதானே..?" என எரிந்து விழுந்தபடி அவனை பார்த்தாள்.

"நீ தூங்கியிருப்பன்னு நினைச்சேன்.." தலையை திருப்பி கொண்டு பதில் சொன்னவனை சந்தேகமாக பார்த்தவள் அவனது முகத்தை பற்றி தனது பக்கம் திரும்பினாள். அவனது கன்னத்தில் கை அச்சு தெரிந்தது. உதட்டின் ஓரத்தில் சிறு வீக்கமும் ரத்த கறையும் தெரிந்தது.

"என்ன ஆச்சி உன் முகத்துக்கு..?" அவளது குரலில் அவள் அறியாமலேயே கரிசனம் கலந்து விட்டிருந்தது.

"உனக்கு தேவையில்லாத விசயத்துல தலையிடாத.." என்றவன் விலகி செல்ல அவன் கரம் பற்றி நிறுத்தியவள் "சாப்பிட்டுட்டு போ.." என்றாள்.

அவன் அவளை சந்தேகமாக பார்த்தான்.‌ "ஒரே வீட்டில எதிரியா இருக்க முடியாது.. நண்பர்களா இருப்போம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்.. நீ யார்க்கிட்டயோ சண்டை போட்டு அடி வாங்கிட்டு வந்தா அதை கேட்க வேணா எனக்கு உரிமை இல்லாம இருக்கலாம்.. ஆனா ஒரே வீட்டுல நான் சாப்பிட்டு நீ பட்டினியா படுத்தா எனக்கெப்படி தூக்கம் வரும்..?" மைவிழியின் அக்கறை அவனுக்கு சிறு ஆச்சரியத்தை தந்தது. அவன் விஷ்வாவோடு வெளியிலேயே சாப்பிட்டு விட்டுதான் வீடு வந்தான். ஆனால் மைவிழியின் அக்கறையை ஒதுக்கி தள்ள மனம் வரவில்லை. அதனால் அமைதியாக வந்து உணவு மேஜை இருக்கையில் அமர்ந்தான்.

"நாளைக்கு நீதான் இரண்டு வேளையும் சமைக்கணும்.." என்றவள் அவனோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
"நீ எவ்வளவு நேரத்துக்கு வீட்டுக்கு வந்த..?" பொழுது போக வேண்டுமே என கேள்வியை கேட்டான் கதிர்.

"அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன்.. நீ வர ஏன் இவ்வளவு லேட்..? திடீர்ன்னு கரண்ட் போயிடுச்சி.. நான் எப்படி தெரியுமா பயந்து போயிட்டேன்..?"

"ஆச்சரியமா இருக்கு.."

"ஏன்..?"

"உனக்கு பயப்பட கூட தெரிஞ்சிருக்கே..!" என்றவனின் குரலில் நிஜமாகவே ஆச்சரியம் இருந்தது.

"தனி வீடு.. நைட்டு நேரம்.. கரண்ட் வேற இல்ல.. யார்தான் பயப்பட மாட்டாங்க..? நீ எனக்கு முன்னாடி வீட்டுல இருப்பேன்னு சொன்ன.. ஆனா என்னை விட அரை மணி நேரம் லேட்டா வந்திருக்க.. நீ வர லேட்டாகும்ன்னு தெரிஞ்சிருந்தா நான் என் ஸ்டூடன்டுக்கு இன்னும் அரை மணி நேரம் டியூசன் எடுத்திருப்பேன்.."

கதிர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை பார்த்தான். "நீ டியூசன் எடுக்கறயா..?"அவனது கேள்வியால் அவனை விசித்திரமாக பார்த்தாள் மைவிழி.

"எதுக்கு இப்படி ஒரு டோன்ல கேட்கற..? டியூசன் எடுக்கறது ஒன்னும் தப்பு கிடையாது.."

"நான் அந்த அர்த்தத்தில கேட்கல.. சின்ன பொண்ணா இருக்கியே.. டியூசன் எடுக்க வேண்டிய அவசியம் என்னன்னு யோசிச்சேன்.." என்றான் அவசரமாக அவன்.

"எனக்கு காசு தேவைப்படுது.. நான் பி.ஜி கோர்ஸ் சேர்ந்திருக்கேன்.. பர்சனலாவும் காசு தேவைப்படுது.. அதனால்தான் மதியத்துக்கு மேல ஸ்கூல்ல டீச்சர் வேலை.. சாயங்காலம் அதே ஸ்கூல்ல டியூசன் எடுக்கற வேலை.. அதுக்கப்புறம் ஒரு வீட்டுல இரண்டு பசங்களுக்கு மட்டும் அவங்க ஹோம்லயே டியூசன் சொல்லித்தர வேலைன்னு சேர்ந்திருக்கேன்.." பதிலை சொல்லி விட்டு அவள் சாப்பிட்டு விட்டு எழ அவனோ அவளை எண்ணி ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தான்.‌

"காலையில மறக்காம நேரமா எழுந்து சமைச்சிடு.." என்றவள் தூங்க சென்று விட்டாள்.‌

கதிர் பாலாவின் வெட்டி செலவு செய்யும் குணத்தையும் மைவிழியின் உழைக்கும் குணத்தையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.‌ எதற்காக அவர்கள் இருவரையும் ஒப்பிடுகிறோம் என தெரியாமலேயே அவர்களை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் சொன்ன சொல் தவறாமல் சமையலை முடித்து வைத்தான் கதிர். மைவிழி அவசரத்தோடு அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். அதன் பிறகு வந்த நாட்களில் இருவருக்கும் அதிகமாக பேசிக் கொள்ள கூட நேரமில்லை.


ஞாயிற்றுக்கிழமை மணி பதினொன்று வரை உறங்கி விட்டு எழுந்து வந்தான் கதிர். மைவிழியை தேடினான். அவள் அங்கே இல்லை.

"ஞாயிற்றுக்கிழமை கூட எங்கே போனா..?" யோசனையோடு சுற்றியவன் கண்களுக்கு துண்டு பேப்பர் ஒன்று தெரிந்தது.

'எனக்கு சாயங்காலம் நாலு மணி வரைக்கும் வேலை இருக்கு.. சாப்பாடு கிச்சன்ல இருக்கு.. சும்மா இருந்தால் மறக்காம செடிகளுக்கு தண்ணீர் விட்டுடு.. இது என் ஃபோன் நம்பர்..'

'இன்னைக்கு கூட எதுக்கு வேலைக்கு போறா..?' யோசனையோடு அவளது ஃபோன் நம்பரை தன் ஃபோனில் பதிய வைத்தான்.

அடுத்த ஒரு மணி நேரம் கடந்த பிறகு செழியனும் விஷ்வாவும் அவன் வீட்டின் கதவை தட்டினர். அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து அவர்களின் எதிரே அமர்ந்தான் கதிர். இந்த ஒரு வார காலத்தில் செழியனும் விஷ்வாவும் நட்பில் நெருங்கி விட்டிருந்தனர்.

"புது மாப்பிள்ளை வாழ்க்கை எப்படி போகுது..?" ஆவலாக கேட்டான் விஷ்வா.‌

"எல்லோர வாழ்க்கையையும் போல இரவும் பகலுமாதான் போகுது.." என்றவனை‌ திருத்தவே முடியாது என்பது போல பார்த்தான் விஷ்வா.

"மாப்பிள்ளை ஸார் எங்க மாமா உங்களுக்கு எந்த மாதிரியான டூ வீலர் வேணும்ன்னு கேட்டுட்டு வர சொன்னாரு.." என்றான் செழியன்.

கதிர் புரியாமல் பார்த்தான் அவனை. "சீர் செய்யுறதுல பேசியதுதான்.." என்று புரிய வைத்தான் செழியன். கதிர் யோசனை செய்து விட்டு தனது விருப்பத்தை சொன்னான்.

மைவிழி தனது வேலையை விட்டு நான்கு மணிக்கு கிளம்பினாள்.‌ வீட்டில் தீர்ந்து விட்டிருந்த பொருட்களை காலையிலேயே பட்டியல் போட்டு எடுத்து வந்திருந்தவள் அனைத்தும் வழியிலிருந்த கடை ஒன்றில் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். அவள் காலிங்பெல்லை பல முறை அழுத்தியும் கதிர் கதவை திறக்காததால் சாவி கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கேயே நின்றுவிட்டாள். வீட்டின் சன்னல் முழுவதையும் மூடிவிட்டு டிவியில் ஏதோ ஓர் ஹாலிவுட் படத்தை அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டப்படி அமர்ந்திருந்தனர் கதிர், செழியன், விஷ்வா மூவரும். அவர்கள் எதிரே எக்கச்சக்கமான நொறுக்கு தீனி கவர்கள் காலியாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தன.

மைவிழியின் வரவை முதலில் பார்த்தவன் செழியன்தான். எழுந்து வந்து இவள் கையிலிருந்த பொருட்களை வாங்கி அருகிலிருந்த மேஜையில் வைத்து விட்டு அவளை தன்னோடு இழுத்து சென்று அவளை அமரவைத்து விட்டு அவளருகே அமர்ந்தான் அவனும்.

மைவிழியின் கண்கள் கதிரின் முகம் தேடியது. அவள் பார்த்த அதே நேரத்தில் அவனும் இவளை பார்த்தான். இருவரும் இடம் பொருள் மறந்து ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருந்தனர்.‌

"விழி இந்த படம் செமையா இருக்கு.." அவளின் தோளில் கை போட்டு அவளை தன்னருகே செழியன் இழுத்துக் கொள்ளவும் மைவிழி கதிரை பார்ப்பதை நிறுத்தி விட்டு எதிரிலிருந்த திரையில் கண்களை செலுத்தினாள். கதிருக்கு ஏனோ செழியனை முறைக்க தோன்றியது.

மைவிழி திரையில் கண்ணாயிருக்க கதிர் அவள் மீது கண்ணாயிருந்தான். அவனுக்கு வந்தது காதல் அல்ல என அவனுக்கே தெரியும். ஆனால் அவள் மீது ஒரு வித ஈர்ப்பு உண்டாகி விட்டதை அவனாலும் ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

திரையில் ஒருவன் கத்தியால் தன் காதலியை குத்திக் கொள்ளவும் மைவிழி தன்னையும் மறந்து "ஆஆ" கத்தினாள். செழியனின் கைகள் அனிச்சையாக அவளை அணைக்க அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள் மைவிழி.

"உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கறயா விழி..?" என செழியன் கேட்க அவனிடம் சரியென தலையசைத்தபடியே எழுந்து நின்றாள் அவள். செழியன் முகத்தில் குற்ற உணர்வு தோன்றியது. அவளை அணைத்தபடியே அவன் அழைத்து செல்ல கதிரின் கண்களுக்கு மைவிழியின் விழிகளோரம் ஈரம் மின்னுவது அரை இருளில் தெரிந்தது.

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க... உங்க நண்பர்களுக்கு இந்த கதையை share பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top