நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 13

மகேஷ் அருணின் ரத்தம் கசியும் முகத்தையும் அங்கிருந்த மற்றவர்களையும் பார்த்தான்.
"ஏய்.. யார் நீ..?" குடிப்போதையோடு எழுந்து வந்து கேட்டவனின் கன்னத்தில் மகேஷ் பளீர் என ஒரு அறை விட்டதில் அவன் அங்கேயே சுருண்டு விழுந்து விட்டான்.

"படிக்கிற வயசுல நீங்க சூதாடுறதே தப்பு. இதுல நீங்க தோத்ததுக்கு அப்பாவி பையனை வேற அடிக்கிறிங்களா..?"

"நீ... நீ அந்த ரவுடி மகேஷ்தானே..?" என்று ஒருத்தன் பயத்தில் கேட்டதில் அங்கிருந்த அனைவருக்கும் போதை தெளிந்தது.

"இந்த ரவுடிக்கு நான் பயப்பட மாட்டேன்.." என கர்ஜித்தபடி ஒருவன் வர ஒரே நொடியில் ஓடி வந்தவனின் காலை இழுத்து அவனது முதுகை தரைக்கு அடித்தான் மகேஷ். கீழே விழுந்து கிடந்தவனின் முகத்தில் மகேஷ் ஒரே ஒரு குத்து விட அவன் அங்கேயே மயங்கி விட்டான்.

மற்றொருவன் தயக்கத்தோடு நின்ற இடத்திலேயே நிற்க அவனருகில் சென்று அவனது தாடைக்கு ஒரு குத்து விட அவன் தடுமாற்றத்தோடு மகேஷின் பாதையிலிருந்து விலகி நின்று கொண்டான்.

அருணை அடித்துக் கொண்டிருந்தவன் தன் கண் முன் நடப்பதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனருகில் வந்து விட்ட மகேஷ் அவனது கையை பிடித்து திருகி அவனை தன் முன் மண்டியிட வைத்தான்.

"படிக்கிற வயசுல படிக்கறத தவிர மத்த எல்லா ஆணியை புடுங்கறதுதான் உங்க வேலையா..?" தன் முன் வலியோடு முனகியபடி மண்டியிட்டிருந்தவனின் கன்னத்தில் நான்கைந்து அறைகளை விட்டான் மகேஷ்.

"அ... அவன் தோத்ததால எங்க காலேஜ்க்கே அவமானம்.." அவனது கன்னத்தில் மற்றோரு அறை விட்டான் மகேஷ்.

"அவன் ஜெயிச்சி காலேஜ்க்கு பெருமை சேர்த்த போது நீ அவனை கொண்டாடுனியா..? ஐம்பது மேட்ச்ல ஜெயிச்ச அவன் ஒரு மேச்சுல தோத்தா தப்புன்னு சொல்லுற நீ உன் காலேஜ் பேரை காப்பாத்த இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்க.. நீயும் ஒன்னும் செய்ய மாட்ட.. அடுத்தவன் ஏதாவது செஞ்சா அதையும் ஏத்துக்க மாட்ட... தண்டசோறு நீ... ஆனா அவனை அடிக்கற..." பேசியபடியே இன்னும் ஒரு அறையை விட்டான். அடி வாங்கியவன் எழுந்து நிற்க கூட சக்தியில்லாமல் கீழே விழுந்தான். மகேஷ் ரத்த காயங்களோடு இருந்த அருணை அங்கிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

காருக்குள் அமர்ந்திருந்த அருணின் அக்கா இவர்களை கண்டதும் இறங்கி ஓடி வந்தாள். "அருண்... பாவி பசங்க எப்படி அடிச்சிருக்காங்க..." கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓட தன் தம்பியை தோளோடு அணைத்துக் கொண்டாள் அவள்.

அவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் மகேஷ் சேர்த்த போது இரவு நடுநிசியை தாண்டியிருந்தது. அவர்களது வீட்டில் இருந்தவர்கள் மகேஷிற்கு தங்களின் வாய் ஓயாமல் நன்றியை சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிளம்ப முயன்றான் மகேஷ்.

அருணின் அக்கா தன் முகத்தை துடைத்த படி மகேஷ் அருகில் வந்தாள். "நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணியிருக்கிங்க... உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல... உங்களுக்கு டைம் இருந்தா நாளைக்கு எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்களேன்... ப்ளீஸ்..."

மகேஷ் யோசித்து விட்டு "சரி... நாளை மதியம் வரேன்..." என்றான்.

சக்தி காலையில் எழுந்த போதே தலைவலி மண்டையை பிளப்பதை உணர்ந்தாள். தலைவலியை பொறுத்துக்கொண்டு அவள் ஸ்டேசனுக்கு வந்த உடன் அவளின் கண்கள் தேடியது வனஜாவைதான்.

சக்தியை கண்டதும் ஓடிவந்தாள் வனஜா.

"என்ன சக்தி ஆச்சி..? ஏன் முகமெல்லாம் வாடியிருக்கு..? கழுத்துல என்ன காயம்..?"

"ஒரு வழிப்பறி பொறுக்கி கத்தியோட நேத்து வந்துட்டான்க்கா... அவனை அடிச்சி துரத்திட்டேன்... ஆனா என்னவோ காலையில எழுந்ததில இருந்தே தலைவலி உயிரை வாங்குது.."

"மாத்திரை ஏதாவது வாங்கிட்டு வரட்டா..?"

"பரவால்லக்கா... இந்த தலைவலியை கூட சமாளிக்கலன்னா எப்படி இந்த வாழ்க்கையை வாழ முடியும்..? நீங்க அந்த அன்புசெல்வி அப்பாவோட சுத்து வட்டாரத்தை விசாரிச்சிங்களா..?"

"விசாரிச்சிட்டேன் சக்தி.. அன்புசெல்வி அப்பாவுக்கு பரம எதிரி கோபாலன். அவருக்கு அன்புசெல்வி அப்பா மேல கொலை காண்டு. அதனால் கண்டிப்பா நீ நினைச்ச மாதிரி சாட்சி கிடைக்கலாம்.."

"சரிக்கா... நீங்க போய் உங்க வேலையை பாருங்க... நான் அந்த கோபாலன் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்.."
சக்தி கிளம்ப முயன்றபோது கையிலும் தலையிலும் கட்டுப் போட்டபடி உள்ளே வந்தனர் ஐந்து இளைஞர்கள்.

அதிலிருந்த ஒருவன் சாடையாக பார்க்கையில் இனியனை போலவே இருந்தான்

"என்னப்பா ஆச்சி..? எங்க விழுந்திங்க..?" என கேட்டபடி அருகில் வந்தாள் வனஜா. "இப்படி உட்காருங்கப்பா.." அருகிலிருந்த பெஞ்ச் ஒன்றை கை காட்டினாள்.

நொண்டியபடியே சென்று பெஞ்சில் அமர்ந்தனர் அனைவரும். சக்தி அருகிருந்த நாற்காலியை இழுத்து அவர்களருகே போட்டு அமர்ந்தாள்.

"மேடம் நாங்க கீழே விழல... ஒரு பைத்தியக்காரன் எங்களை அடிச்சிட்டான்.. நாங்க அவன் மேல கம்ப்ளைண்ட் தரோம்... ப்ளீஸ் ஆக்சன் எடுங்க.." இனியனை போல் சாடையடித்தவன் சொல்ல சக்திக்கு தன் மகனே சொல்லுவது போலிருந்தது.

"உன் பேர் என்ன..? உங்களை யார் அடிச்சது..?"

"என் பேர் முகில் மேடம்.. காலேஜ் தேர்ட் இயர் படிக்கிறேன்... எங்க ஜீனியர் அருணை நாங்க அடிச்சிட்டோம்ன்னு சொல்லி நேத்து நைட் எங்களை அடி பின்னிடாரு ரவுடி மகேஷ்... ஆனா அந்த அருண் மேல் எங்க சுண்டு விரல் கூட படலங்கறதுதான் உண்மை மேடம்... தயவு செஞ்சி அந்த மகேஷை பிடிச்சி ஜெயில்ல போடுங்க மேடம்.."

மகேஷ்தான் இதில் சம்பந்த பட்டிருக்கிறான் என தெரிந்ததும் சக்திக்கு தலைவலி இன்னும் அதிகமானது.

'மகேஷோட இம்சை இல்லாத நாளே இருக்காதா..?'

"அக்கா இவங்ககிட்ட கம்ப்ளைண்ட் எழுதி வாங்குங்க.."

"அந்த அருண் மேலயும் கேஸ் போடுங்க மேடம்.. அவன் பணக்கார வீட்டு பையன்கற ஒரே காரணத்துக்காக தப்பே பண்ணாத எங்களை அடிக்க மகேஷை அனுப்பியிருக்கான்.."

"சரிப்பா... கண்டிப்பா.." என்ற சக்தியின் அருகே வந்த வனஜா "சக்தி அவங்க சொல்லுற அருண் கோபாலனோட பையன்.." என்றாள். சக்திக்கு முதலில் குழப்பமாக இருந்தது. பின்னர் அது கோபமானது. 'அவனால மட்டும் எப்படி எல்லா சைடும் கோல் போட முடியுது..? அருணை அரெஸ்ட் பண்ணா அன்புசெல்வி கேஸ்ல கோபலன்கிட்ட உதவி கேட்க முடியாது..'

"அருணையும் மகேஷையும் நான் கூட்டி வந்து விசாரிக்கிறேன்... நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.." அவர்கள் சென்றதும் சலிப்போடு நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள் சக்தி.

"எப்படி வனஜாக்கா அவனை மட்டும் என்னால எதுவும் பண்ண முடியல..?"

"ஏனா அவன் ரவுடியா இருந்தாலும் நல்லவன்.." என்றபடி ஸ்டேசனுக்குள் வந்தாள் ஹெட் கான்ஸ்டபிள் ஜீவா. சக்தியை விட பன்னிரெண்டு வருடம் பெரியவளான ஜீவா மகேஷின் கலாரசிகையாக இருந்தாள். ஜீவா ஒவ்வொரு முறையும் மகேஷிற்கு பரிந்து பேசுவதும் அதை கண்டு சக்தி கடுப்பாவதும் எப்போதும் நிகழ்பவை. இன்றும் அப்படிதான் அவளை கடுப்புடன் பார்த்தாள் சக்தி.

"அவனுக்கு வக்காலத்து வாங்கறதை நீங்க நிறுத்துங்க அக்கா.." என்று எரிந்து விழுந்தாள்.

"நீ அவனை உன் எதிரியா பார்க்கறதை நிறுத்து.. அவன் ஒரு சமூக சேவகன்.. இந்த ஊர்ல பிரச்சனைகள் வராம இருக்கவே அவன்தான் காரணம்.. இந்த ஸ்டேசன்ல கைதிங்க யாரும் இல்லாத காரணமும் அவன்தான்.." இதை கேட்டதும் சக்தியின் கோபம் எல்லை மீறியது.

"அவன் சமூக சேவகன் இல்ல.. சமூக விரோதி.. இந்த ஊர்ல தப்பு நடக்காம இருக்க காரணம் அவன் இல்ல... இங்க நடக்கற எல்லா தப்பையும் செய்யுறதே அவன்தான்.. இந்த ஸ்டேசன்ல கைதிங்க இல்ல.. ஆனா அவன் இங்கே கைதியாக வந்து நிக்காத நாளே இல்ல.. வனஜாக்கா வாங்க நாம கோபாலன் வீட்டுக்கு போகலாம்.." அவள் விடுவிடுவென வெளியே நடக்க அவளை தொடர்ந்து ஓடினாள் வனஜா.

அவள் ஸ்டேஷன் வாசலுக்கு வந்த போது அவளின் ஃபோன் ஒலித்தது. ஃபோனில் குமரன் இருந்தார்.

"சொல்லுங்க ஸார்.."

"நீ உடனே கிளம்பி என் ஆபிஸ்க்கு வா.." அவரது குரலில் இருந்த அவசரம் கண்டு குழம்பிய சக்தி வனஜாவை அங்கேயே விட்டுவிட்டு குமரனை பார்க்க சென்றாள்.

நேராக அவரை தேடி சென்று அவர் முன் நின்று வீர வணக்கம் வைத்தாள்.

"எதுக்கு ஸார் என்னை கூப்பிட்டிங்க..?"

"இன்னும் இரண்டு நாள் கழிச்சி மகாராஷ்டிராவிலிருந்து மந்திரி மேகரீஸ் இங்கே வராரு.. அவர் கூட பாதுகாப்பு அதிகாரிங்க நிறைய பேர் வராங்க.. ஆனா அவர் இங்கே வந்த காரியத்தை முடிச்சிட்டு போற வரை நம்ம சைட்லயிருந்து ஒரு போலிஸ் ஆபிசராவது அவர் கூட இருந்தாகனும்.. நீதான் சாதிக்க விரும்பற ஆளாச்சே.. அதனால் அவருக்கு பாதுக்காப்பா உன்னைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கேன்.. உனக்கு சரிதானா..?" கடமைகளை கண்ணென நினைக்கும் சக்திக்கு இது பெரிய வேலையாக தெரியவில்லை.

"சரிங்க சார்.."

"அப்புறம் ஒரு விசயம்.. அந்த மந்திரி நம்ம மகேஷ் வீட்டுலதான் தங்க போறாரு.. நீயும் அந்த மந்திரி எங்கேல்லாம் இருக்காரோ அங்கேதான் இருக்கனும்.." சக்திக்கு தன்னையே நொந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

"அவரை கவர்மெண்ட் கெஸ்டவுஸ்ல தங்க வைக்கலாமே ஸார்..!?" அவளை உற்று பார்த்தார் குமரன்.
"மேகரீஸும் மகேஷும் நண்பர்கள். அதனால அவர் மகேஷ் வீட்டுல தங்க போறாரு.. மந்திரியா இருந்தாலும் அவரும் மனுசன்தான்.. அவருக்கும் குடும்பம் நட்புன்னு இருக்கும்..‌ நாம ஒரு கவர்மெண்ட் சர்வண்ட்... நம்ம கவர்மெண்டை நடத்துற ஒருத்தருக்கு உதவி செய்ய நாம் எப்போதும் தயாராக இருக்கனும்..உன் சொந்த விருப்பு வெறுப்பை காட்டவா இந்த போலிஸ் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்த..?"

குமரனிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லையென புரிந்து கொண்டாள் சக்தி. எத்தனையோ சோதனைகளை கடந்தவள் இதை கடக்க மாட்டாளா..?

"சரிங்க சார்.. வரப்போற மந்திரியோட நிழலாக இருந்து அவரை நான் பத்திரமா பார்த்துக்கிறேன்.. இப்போ நான் வரேன் சார்.." வீரவணக்கம் ஒன்றை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் ஸ்டேஷனுக்கு கூட செல்லாமல் நேரடியாக கோபாலனின் வீட்டிற்கு சென்றபோது மகேஷும் அதே சமயத்திற்கு அங்கு வந்து சேர்ந்தான்.

சக்தியை கண்டதும் புன்னகையோடு அருகே வந்தான். ஆனால் அவளது கழுத்திலிருந்த காயம் கண்ட மறு நிமிடமே அவன் முகம் இருளடைந்து போனது.

"கழுத்துல என்ன காயம்..?" அவளின் கை அனிச்சையாக சென்று கழுத்திலிருந்த காயத்தை மறைத்தது.

நண்பர்களே... கதை பிடித்திருந்தால் மறக்காமல் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க. Share பண்ணுங்க...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN