நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

14.என் கனவின் கருவே..

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
14. என் கனவின் கருவே..

கதிரின் கண்கள் மைவிழியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. செழியன் கதிரின் தோளை தொட்டான். அவனை என்னவெனும் விதமாக பார்த்தான் கதிர்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அப்படி போகலாமா..?"

அவன் தலையசைத்துவிட்டு செழியனோடு நடந்தான். மரத்தடியிலிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தான் செழியன். கதிர் அவனுக்கு அருகே அமர்ந்தான்.

"என்கிட்ட என்ன சொல்லணும்..?"

"உங்களுக்கு ஏன் விழியை பிடிக்கல..?"

"இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன..?"

செழியன் கசப்பாக புன்னகைத்தான். "ஒருத்தரை பத்தி எதுவுமே தெரியாம எப்படி இப்படி இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுத்துக்கறிங்கன்னுதான் தெரியல.. உங்க வீட்டு பெரியவங்க காரணம் இல்லாம உங்களை சேர்த்து வைக்கல.."

"காரணம் என்னவாக இருந்தாலும் சரி.. எனக்கும் அவளுக்கும் நடுவுல காதல் வராது செழியன்.."

"உங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் வர கூடாது.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. அவளை நீங்க மிஸ் பண்ணிட்டா அதுக்கப்புறம் ரொம்ப வருத்தபடுவிங்க.."

கதிர் தூரத்தில் விஷ்வாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மைவிழியை பார்த்தான். அவள் மீது சிறு ஈர்ப்பு உள்ளதை அவனும் அறிவான். ஆனால் அது காதல் இல்லை என்பதையும் நன்றாகவே அறிவான்.

"அவளுக்கு யாரையாவது பிடிச்சி போயிட்டா அவங்களை சாகற வரை மறக்க மாட்டா.. நீங்க அவளை லவ் பண்ணலனாலும் பரவால்ல.. ஆனா அவ உங்களை லவ் பண்ற மாதிரி பண்ணிடாதிங்க.. அப்புறம் அவதான் ரொம்ப கஷ்டபடுவா.."

கதிர் மென்மையாக நகைத்தான். "நாங்க இரண்டு பேரும் பிரெண்ட்ஸா இருக்க முடிவு பண்ணியிருக்கோம்.. அதனால் அவளோட மனசை நான் காயப்படுத்துற மாதிரி எதையும் செய்ய மாட்டேன்.. இதை நீங்க தாரளமா நம்பலாம்.."

செழியன் புரிந்து கொண்டவனாக தலையசைத்தான்.

செழியனும் விஷ்வாவும் பூங்காவிலிருந்து நேராக அவர்கள் வீட்டிற்கே கிளம்பி விட இவர்கள் இருவரும் தங்களின் வீடு நோக்கி நடந்தனர்.

இருள் மெல்ல மெல்ல சூழ்ந்தது. சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. கதிர் தன்னுடன் நடந்த மைவிழியின் கரத்தை பற்றி தன்னோடு நடக்க வைத்தான். மைவிழி அவனை கேள்வியாக பார்த்தாள்.

"வண்டி அதிகம் வருது.. என் கூடவே நட.."

அவள் மறுத்து ஏதும் சொல்லவில்லை. அவனது கையோடு பொருந்தியிருக்கும் தனது கையை பார்த்தபடியே நடந்தாள்.

பிளாட்பாரத்து கடையில் சோளக்கதிர் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே சமயத்தில் அங்கு நடந்தனர். அவர்களது செயல் கண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆளுக்கொரு சோளக்கதிரை வாங்கிக் கொண்டு நடந்தனர்.

"எனக்கு கதிரை பிடிச்சிருக்கு.." என மைவிழி சொல்ல கதிர் புரை ஏறிய தன் தலையை தட்டியபடியே அவளை பார்த்தான்.

அவள் அவனது பார்வை புரிந்தவளாக "நான் இந்த சோளக்கதிரை சொன்னேன்.." என்றாள். அவன் அமைதியாக தலையாட்டி விட்டு நடந்தான்.

அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது அங்கே வாசலில் காத்திருந்தாள் ருத்ரா.

"வாங்க அக்கா.." அன்போடு அழைத்த மைவிழிக்கு சிறு சிரிப்பை தந்தவள் தன் தம்பியின் கையை பிடித்து வீட்டின் பின்னால் இழுத்துச் சென்றாள். வீட்டின் பின்னால் வந்த பிறகு மைவிழி தொடரவில்லை என அறிந்தபிறகு தன் தம்பியை திரும்பி பார்த்து நெருப்பாக முறைத்தாள்.

"என்ன வேணும் உனக்கு..?" என கேட்டவனிடம் தன் கைபேசி திரையை காட்டினாள்.

"பாலாவோட ஹஸ்பண்டுக்கு இந்த பிக்சரை நீயா அனுப்பின..?" கதிர் அதை பார்த்ததும் அலட்சியமாக உதட்டை சுழித்தான்.

"நான்தான் அனுப்பி வச்சேன்.. இது அவ என்னை விட்டுட்டு போனதுக்கான தண்டனை.."

"நீ மிருகத்தை விட ரொம்ப மோசம் கதிர்.. உன்னை அவ காதலிச்சதுதான் அவ பண்ண பெரிய தப்பு.. உன்னை அவ விட்டுட்டு போயிட்டான்னு நான் கூட இவ்வளவு நாளா அவளை திட்டிக்கிட்டு இருந்தேன்.. ஆனா உன்னோட வாழ வேண்டிய தண்டனை அவளுக்கு கிடைக்கலன்னு நினைச்சி இப்போ சந்தோச படுறேன்.. உன்னோடு எந்த பொண்ணுமே சந்தோசமா வாழமாட்டா.. மைவிழியோட வாழ்க்கையை நினைச்சி நான் ரொம்ப வருத்தப்படுறேன்.."

"உன்னை மாதிரி ஒரு அக்கா கிடைச்சதுக்குதான் நான் வருத்தப்படுறேன்.. என்னை பாலா அனாதையா விட்டுட்டு போனா.. அன்னைக்கு நீ எனக்கு சப்போர்ட் பண்ணல.. இன்னைக்கு அவளோட தப்பே அவளுக்கு தண்டனை தரும்போதும் என்னையே குறை சொல்ற.. மைவிழி விசயத்துல கூட நான் எனக்கு கல்யாணமே வேண்டாம்ன்னுதான் சொன்னேன்.. நீங்கதான் வலுக்கட்டாயமா கட்டி வச்சிங்க.. இதுக்கும் இப்போ என்னையே குறை சொல்ற.."

"நாங்க பண்ண பெரிய தப்பு அதுதான்டா.. அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டோம்.. குரங்கு கையில் தந்த பூமாலை ஆயிட்டுச்சி அந்த பொண்ணோட கல்யாண வாழ்க்கை.."
என்றவளை கசப்பாக பார்த்தான் கதிர்.

"உன் அறிவுரையும் என்னால கேட்க முடியல.. உன் பழிச்சொல்லையும் என்னால கேட்க முடியல.. என் பக்கம் நீ சப்போர்ட் பண்ணலனாலும் பரவால்ல.. இனிமே இப்படி கரிச்சி கொட்டுறதுக்காக இந்த வீட்டு பக்கம் வராத.."

கதிர் சொன்னதை கேட்டு மனம் நொந்தது ருத்ராவிற்கு. ஆனால் அதை வெளிக்காட்டாமல் "நீயே கூப்பிட்டாலும் இனி நான் இங்கே வரமாட்டேன்டா.." என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
மைவிழி ருத்ராவிற்காக சுடசுட காஃபி போட்டு எடுத்து வந்தாள். வீட்டுக்குள் கதிர் மட்டும் வரவும் ருத்ராவை தேடினாள் மைவிழி. ருத்ரா காம்பவுண்ட் கதவை தள்ளிக் கொண்டு வேகமாக வெளியேறினாள்.

"அவங்க ஏன் அதுக்குள்ள போயிட்டாங்க.. நீ அவங்களை நைட் சாப்பாட்டுக்கு இருக்க சொல்லியிருக்கலாம் இல்ல..?" என்றாள் அவன் எதிரில் நின்றபடி. கதிருக்கு ருத்ரா சொன்னது மட்டுமே காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது காதல் தோல்வியின் வலியை பாலாதான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் ருத்ரா கூட புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கோபமாக அவனை கொன்றுக் கொண்டிருந்தது.
கதிர் பதில் ஏதும் பேசாமல் அவளை தாண்டி சென்றான். "போட்ட காஃபி வேஸ்டாயிடுச்சே.. கதிர் நீ குடிக்கிறியா இதை..?" என கேட்டபடி அவனது வேக நடைக்கு சமமாக நடந்தபடி கேட்டாள் மைவிழி.

"கொஞ்சம் பேசாம இருந்து தொலைக்கறியா..? எதுக்கு இப்படி பேசி பேசி டார்ச்சர் பண்ற..?" எரிச்சலாக கேட்டபடி கையை வீசியபடி அவன் திரும்பினான். அவனுக்கு நெருக்கமாக வந்துக் கொண்டிருந்த மைவிழியின் கையிலிருந்த காஃபி கோப்பை அவன் கை தவறுதலாக பட்டதில் கீழே விழுந்தது. அதுவும் சரியாக மைவிழியின் காலின் மீதே விழுந்தது.

காலில் சுடசுட காஃபி கொட்டி விடவும் வலியோடு அங்கேயே அமர்ந்து தன் காலை பிடித்தாள் மைவிழி. சூடு பட்டு கால் எரிந்தது அவளுக்கு.

கதிருக்கு தான் தனது அஜாக்கிரதையால் செய்து விட்ட தவறு புரிந்தது. அவளுக்கு முன்னால் அமர்ந்து அவளது பாதத்தை எடுத்து தன் மடி மீது வைத்து காயம் பட்ட இடத்தை ஊதி விட்டான். மைவிழி தனது காலை பின்னுக்கு இழுக்க முயன்றாள்.

"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா..? யாராவது சுடு காபியை இப்படி அஜாக்கிரதையா கையில் வச்சிருப்பாங்களா..? ஏற்கனவே எனக்கு எக்கச்சக்க டென்சன்.. அதனால்தான் தெரியாம கை மோதிட்டேன் ஸாரி.."

"என் காலை விடு.. நானே பாத்துக்கிறேன்.. எனக்கொன்னும் உன்னை டார்ச்சர் பண்ணணும்ன்னு ஆசை இல்ல.." அவள் வலுக்கட்டாயமாக தனது காலை அவனின் பிடியிலிருந்து இழுத்துக் கொண்டு எழுந்து நடந்தாள்.

கதிர் தன்னை தானே மனதுக்குள் திட்டிக்கொண்டான். அவளோடே சேரந்து எழுந்தவன் விலகி சென்றவளின் கை பிடித்து நிறுத்தினான். அவள் திரும்பி பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

அவளது மௌனம் அவனது மனதில் அவன் பாதுகாத்து வைத்திருக்கும் வெறுப்பெனும் கண்ணாடியின் மீது கருங்கல்லை எடுத்து வீசிவிட்டது. அவனுக்கு அந்த நொடி வரை தெரியாது அவள் மீது அவனுக்கு வந்திருக்கும் ஈர்ப்பின் ஆழம் பற்றி. அதெப்படி அவ்வளவு விரைவில் ஒருவர் மீது இவ்வளவு ஈர்ப்பு வரும் என அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

மைவிழிக்கு தெரியும் தனக்கும் கதிருக்கும் இடையில் துளிர்த்த நட்பு கோடையில் முளைத்த பயிர் போலென்று. ஆனால் இந்த ஒரு வார காலத்தில் அவனோடு உடனிருந்த காரணமோ என்னவோ அவன் மீது ஏற்பட்டிருந்த அந்த சிறு ஈர்ப்பு இன்று அவன் கோபப்படவும் பெரியதொரு எதிர்ப்பார்ப்பாக மாறிவிட்டது புரிந்து போனது. தனது மனம் தன்னிடமே மாய விளையாட்டை ஆட ஆரம்பித்து விட்டதை உணர்ந்து கொண்டாள் மைவிழி. அவன் அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தன் விவாகரத்து கனவு சிறு சிறு துகளாக உடைந்து உதிர்வதை இன்று அவள் தெரிந்துக் கொண்டாள்.

மைவிழி தன்னை பற்றியிருக்கும் அவனது கையை பார்த்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது கண்கள் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. விளையாட்டாக கூட அவனிடம் தன் மனதை பறி தந்து விட கூடாதென்று வேலை செய்ய மறுத்து கொண்டிருந்த தனது மூளையிடம் கட்டளையிட்டாள்.

"நான் உன்னை ஒன்னும் டார்ச்சர்ன்னு சொல்லல.." கதிர் அவளின் கண்களை பார்த்து சொன்னான். அவள் தன் கண்களில் சோகத்தை தேக்கி வைத்திருப்பது போலிருந்தது அவனுக்கு.

"ஸாரிப்பா.. ஏதாவது பேசு.. விவாகரத்து பண்ற வரைக்கும் நாம இரண்டு பேரும் பிரெண்ஸா இருக்க முடிவு பண்ணியிருக்கோம்.. இப்படி சின்ன சின்ன தப்புக்கெல்லாம் கோபப்பட்டா எப்படி..?"

மைவிழி தன் சிறு இதயத்தை சுற்றி ஓராயிரம் வேலிகளை போட்டு வைத்திருந்தாள். அந்த வேலிகளை மீறிக் கொண்டு அவனது வார்த்தைகள் உள்ளே நுழைந்தன.

மைவிழி தன் கோபம் மறந்து புன்னகைத்தாள். அவனுக்கு புரியவில்லை அப்போது.. தனக்கு வெகு விரைவில் பைத்தியம் பிடிக்க போவதற்கான முதல் விதை அவளது சிரிப்பின் மூலம் விளைந்ததை.

அவளை அழைத்து சென்று அமர வைத்து அவளது சூடு பட்ட காலுக்கு மருந்து தடவினான். அவனது செய்கையையே விழி அசைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் மைவிழி. அவன் கைவிரல் தீண்டிய தன் கால்களை முதல் முறையாக நேசித்தாள் அவள். அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கண்டதும் அவன் மனதுக்குள் சிறு வண்ணத்துப்பூச்சி சிறகே இல்லாமல் பறந்தது.

அவன் தன்னை பார்ப்பதை கண்டவுடன் தன் நாணத்தை மறைக்க தரையை பார்த்தாள் அவள். எழுந்து நின்றாள். சமையலறை நோக்கி நடந்தாள். அவளை பிடித்து நிறுத்தினான் கதிர்.

"நானே சமைக்கிறேன்.." என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று சமைத்து முடித்தான்.

அதன்பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

அவள் தன் அறைக்கு செல்ல நடந்தாள். சூடு பட்ட காலை உதறிக் கொண்டே அவள் அடுத்த அடியை எடுத்து வைக்க கதிர் அவளின் பின்னால் இருந்தபடி அவளை சட்டென தூக்கினான். இந்த தீடீர் செய்கையால் அவள் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது. கீழே விழுந்து விடாமல் இருக்க அவளது இடது கை அனிச்சையாக அவனது கழுத்தை சுற்றிக் கொண்டது. அவனது முகத்திற்கு வெகு அருகில் தன் முகம் இருப்பதை கண்டு அவளுக்கு முகம் வெட்கத்தில் சிவந்தது. அவளது வெட்க முகம் கண்டதால் அவனுக்கு இப்போது இதயம் படபடவென அடித்துக்கொண்டது. 'என்ன ஆச்சி எனக்கு..?' அவன் தன்னை தானே கேட்டுக் கொண்டான்.

கதையோடு இணைந்திருந்த நட்புள்ளங்களுக்கு நன்றிகள்..

கதை பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top