நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

16. என் மனசின் சிறகே..

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
16. என் மனசின் சிறகே..

மைவிழி திடீரென அணைத்ததில் திகைத்து போய் நின்றான் கதிர். என்ன செய்வதென்று யோசிக்க மறுத்தது மூளை. ஆனால் இந்த அணைப்பு அவன் மனதிற்கு பிடித்தது.

கூடு தேடி பறந்த பறவை தன் கூட்டோடு சேர்த்து தன் ஜோடி பறவையையும் கண்டுபிடித்தது போல மகிழ்ந்தது அவன் மனம். ஆனால் மூளையின் ஒரு ஓரத்தில் இது ஒரு பாதாளம்.. இதில் வீழ்ந்தால் உனக்கு விடிவு கிடையாது என்ற குரலும் ஒலித்தது.

கதிருக்கு அவளை விலக்கி நிறுத்த மனம் இல்லை. இருந்தாலும் இது தன் விவாகரத்திற்கு முட்டுக் கட்டையாகி விடுமோ என்ற பயத்தில் அவளை தள்ளி நிறுத்த நினைத்து அவளது தோளில் கை வைத்தான்.

"இது ஜஸ்ட்... நான் வெறும் ஆறுதலுக்காகதான் ஹக் பண்ணியிருக்கேன்.. செழியன் இங்கே இல்ல.. அதனால்தான் உன்னை அணைச்சிட்டேன்.. ஸாரி.. வேற எந்த எண்ணமும் எனக்கும் கூட இல்ல.." என்றவள் அவளாகவே விலகினாள்.

அவளது வாடிய முகம் கண்டு கதிருக்கு கஷ்டமாக இருந்தது. யோசிக்காமல் அவளை தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டான்.‌

"ஏதாவது பிரச்சனையா..?"

இல்லை எனும் விதமாக தலையசைத்தாள். அவளது மனதில் ஏதோ வருத்தம் உள்ளதை கதிரும் அறிந்தான்.
ஆனால் அவளிடம் எதையும் மீண்டும் கேட்கவில்லை. ஆறுதலுக்காக அவளது முதுகை வருட சென்ற அவனது கை பாதியிலேயே நின்றது. அதற்கு பதிலாக அவளது கையை மேலும் கீழுமாக வருடி விட்டான்.

மைவிழிக்கு அவனது செய்கையால் என்னவோ ஆகி விட்டது போலிருந்தது. மூச்சு தடுமாறியது.

"அப்படி பண்ணாத.. என்னை தொடாதே.. என்னவோ போல இருக்கு.." அவள் இதை சொன்னவுடன் சட்டென தனது கையை விலக்கி கொண்டான் கதிர்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு மைவிழியே அவனை விட்டு விலகி நின்றாள்.

"தேங்க்ஸ்.." என்றாள் மெல்லிய குரலில். கதிர் மொத்தமாக தலையசைத்தான்.

அவள் முகம் அன்று முழுக்க சோர்ந்து போயிருந்ததை கதிர் கவனித்துக் கொண்டேதான் இருந்தான்.

"குட்நைட்.." என சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்ல முயன்றவளின் கை பிடித்து நிறுத்தினான் கதிர்.

"உன்னோட பிரச்சனை என்னன்னு சொல்ல வேண்டாம்.. ஆனா ஏதாவது உதவி வேணும்ன்னா மறக்காம கேளு.." அவள் சரியென தலையசைத்தாள்.

மறுநாள் கல்லூரியில் செழியன் இவளை பார்த்த மறு வினாடியே என்ன பிரச்சனையென கேட்டான்.
அவனிடமும் பிரசாத்தை பற்றி சொல்லாமல் மழுப்பி விட்டாள்.

கதிர் நேற்று இரவு மைவிழிக்கு என்ன நடந்திருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தான். அவன் ஏதேச்சையாக கேட்டபோதுதான் வீட்டின் பாதையிலிருந்த அந்த பொட்டல் வெளியருகே நேற்று இரவு அவளோடு யாரோ பேசிக் கொண்டிருந்ததாக அந்த தெருவின் கூர்க்கா சொன்னார்.

அவளோடு பேசிக்கொண்டிருந்தது யாராக இருந்திருக்கும் என குழம்பியது அவன் மனம். யாரையும் காதலித்தது இல்லை என சொன்னாளே.. பிறகு யாராக இருக்கும்.. ஒருவேளை கொள்ளைகாரனாக இருக்குமோ என யோசித்தான். கொள்ளைக்காரனாக இருந்திருந்தால் சொல்லியிருப்பாளே..! என நினைத்தான். அதை பற்றி அவளிடம் கேட்கவும் மனம் வரவில்லை. ஆனால் இதை நினைத்து தன்னைதானே குழப்பிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளவும் முடியவில்லை அவனால்.

அந்த வாரம் முழுக்க மைவிழி பிரசாத்தை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.

அன்று சனிக்கிழமை இரவு. வீடு வந்ததிலிருந்தே மைவிழிக்காக காத்திருந்தான் கதிர்.

அன்று பிரசாத் நின்றிருந்த இடத்தை ஒவ்வொரு முறையும் கடக்கும் முன்பே மைவிழிக்கு மனதுக்குள் ஏதோ இருள் கவ்வுவதை போலிருக்கும். இன்றும் கூட அப்படிதான் இருந்தது அவளுக்கு. ஆனால் அந்த பொட்டல் வெளியோரம் இருந்த பாதையருகே புதிதாக இருந்த மின் விளக்கு கம்பத்தை பார்த்தவுடன் அவளுக்குள் வழக்கமாக வரும் இருள் இன்று வரவில்லை. அந்த இடத்தில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு மின்விளக்கு கம்பத்தை அண்ணாந்து பார்த்தாள். இன்றுதான் நட்டிருக்கிறார்கள்.

மைவிழிக்கு புதிதாக ஒரு சந்தோசம் உண்டானது. அதே மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தாள். கதிர் அவளது முகத்தை பார்த்தான். ஒரு வாரமாக வாடியிருந்த அவளின் முகம் இன்று பழைய புத்துணர்வோடு இருப்பதை கண்டு அவனுக்குள்ளும் ஒரு புத்துணர்வு உண்டானது.

உணவை முடித்துக் கொண்டு இருவரும் டிவியின் முன்னால் அமர்ந்தனர். கதிர் செய்தி சேனல் ஒன்னை இயக்கினான். மைவிழி அவன் அருகே அமர்ந்து அவன் கையிலிருந்த ரிமோட்டை பறித்தாள். அவன் திரும்பி பார்த்து முறைக்க அவனை கண்டுக் கொள்ளாமல் கார்ட்டூன் சேனல் ஒன்றை மாற்றினாள்.

"நீ என்ன குழந்தையா..?" என்றான் கதிர்.

"உன் நியூஸ் சேனலுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல தெரியுமா..?" என்றவள் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.

கதிர் அவளிடம் போட்டியிட விரும்பாமல் டிவியை பார்க்க ஆரம்பித்தான். கார்ட்டூன் நன்றாகத்தான் இருந்தது. சிரிப்பு மடை தாண்டி வரும் வெள்ளம் போல வந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்தனர். கதிர் கார்ட்டூன் கேரக்டர்களில் தன்னை தொலைத்து விட்டிருந்தான்.

வெகு நேரத்திற்கு பிறகு டிவியிலிருந்து கண்களை திரும்பினான். மைவிழி அவன் அருகில் உறங்கி போயிருந்தாள். மணியும் நள்ளிரவை தாண்டி விட்டிருந்தது. டிவியை அணைத்துவிட்டு அவளை அலுங்காமல் தூக்கி சென்று அவளது அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தான்.

தூக்கம் கண்களை சோர்வடைய செய்தது கதிருக்கு. தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி ஹாலில் வீசியவன் தனது அறைக்கு வந்த மறு நிமிடமே உறங்கி விட்டான். அவனது கனவுகளை முழுக்க மைவிழியே கொள்ளையடித்திருந்தாள்.

மறுநாள் காலையில் கண் விழித்த மைவிழி தான் தனது கட்டிலில் உறங்குவதை கண்டு குழம்பினாள். இரவு ஸோபாவில் உறங்கி விட்டது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. கதிர்தான் தன்னை இங்கு உறங்க வைத்திருப்பான் என புரிந்து கொண்டவளுக்கு சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. எதற்காக இப்படி அவன் முன் இவ்வளவு இயல்பாக இருக்கிறோம் என தன்னை தானே கேட்டுக் கொண்டாள். அவன் மீதும் அவளுக்கு கோபம் வந்தது. எழுப்பி விட்டிருந்தால் நானே வந்து உறங்கியிருப்பேனே என எண்ணினாள்.

தனது காலை வேலைகளை முடித்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் மைவிழி. மணி ஆறரையை கடந்திருந்தது. கதிரின் அறை நிசப்தமாக இருந்தது. இன்னும் அவன் உறங்குகிறான் என புரிந்து கொண்டவள் கிச்சனுக்கு வந்தாள். பிரிட்ஜில் பால் பாக்கெட் தீர்ந்து போயிருந்தது. கடைக்கு சென்று வரவும் சலிப்பாக இருந்தது அவளுக்கு.

தண்ணீரை மட்டும் ஒரு டம்ளர் குடித்தவள் ஹாலுக்கு திரும்பி வந்த போது அவளது காலில் தட்டு பட்டது கதிரின் சட்டை. "இதை ஏன் இங்கே வீசியிருக்கான்..?" என்றபடி சட்டையை கையில் எடுத்தாள். அவளது துணிகளை துவைக்க வேண்டிய வேலை இருந்தது அவளுக்கு. "இதையும் சேர்த்து துவைச்சி தருவோம்.. பிரண்ட்ஸா செய்யுற உதவிதானே.!?"

அவள் துணிகளை துவைத்து காய வைத்துவிட்டு தானும் தயாராகி தனது வேலைக்கு கிளம்பி சென்றாள்.

வெயில் உச்சிக்கு வரும் நேரத்தில்தான் கதிர் கண்களையே திறந்தான். கொட்டாவி விட்டுக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தான். வீடு அமைதியாக இருந்தது. "இவ ஒருத்தி.. ஞாயித்து கிழமை கூட வேலைக்கு போறா.. இவ என் லவ்வரா மட்டும் இருந்திருந்தா இவளை வீட்டு வேலை செய்ய கூட விட்டிருக்க மாட்டேன்.." கிச்சனில் உணவு தயாராக இருந்தது. ஜன்னல் வழியே பார்த்தான். செடிகளுக்கு கூட தண்ணீர் விட்டிருந்தாள் மைவிழி.

"இவளோட சுறுசுறுப்பை பார்த்தா எனக்கே பக்குன்னு இருக்கு.." என்றவனின் பார்வை அப்போதுதான் கயிற்றில் காய்ந்துக் கொண்டிருந்த தன் சட்டைக்கு சென்றது. அவனது இதயம் சட்டென நின்றது. அவசரமாக தனது நெஞ்சின் மீது கை வைத்தான். சட்டையும் இல்லை. அதனுள் இருக்கும் நாணயமும் இல்லை.

வெளியே ஓடியவன் கயிற்றிலிருந்த தனது சட்டையை உருவினான். பதட்டமாக அதன் பாக்கெட்டுக்குள் கை விட்டான். அதனுள் அவனது நாணயம் இல்லை. அவனது பதட்டம் மேலும் அதிகமானது. சட்டை காய்ந்திருந்த இடத்தின் கீழ் நாணயம் விழுந்திருக்குமோ என்று அங்கு தரை முழுவதையும் தேடினான். ஆனால் நாணயம் அவனது கண்களுக்கு தட்டுபடவேயில்லை. சட்டையை அங்கேயே வீசி விட்டு வீட்டுக்குள் ஓடி வந்தான்.
வீட்டின் தரை முழுவதையும் ஆராய்ந்தான். ஆனால் நாணயம்தான் கிடைக்கவேயில்லை.

அந்த தனியார் மருத்துவமனையின் வரவேற்பில் அமர்ந்தபடி கணியை தட்டிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அவளுக்கு உதவியாக அவள் சொல்வது அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தாள் மைவிழி.

"மைவிழி இந்த பைலை கொண்டு போய் ரேகா மேடத்துக்கிட்ட கொடுத்துட்டு வா.."

மைவிழி அவள் தந்த பைலை வாங்கிக் கொண்டு ரேகாவின் அறைக்கு சென்றாள். ரேகா ஒரு மகப்பேறு மருத்துவர். செழியனுக்கு பெரியப்பா மகள் இவள். ரேகாவிற்கு மைவிழியை மிகவும் பிடித்திருந்தது. மைவிழியிடம் வம்பிழுப்பதையே தன் பொழுதுபோக்காக வைத்திருந்தாள் அவள். ரேகாவின் பரிந்துரையால்தான் மைவிழி இங்கு வேலை செய்கிறாள்.

ரேகாவின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள் மைவிழி.

"இந்த பைலை கொடுக்க வந்தேன் மேடம்.." அவள் எதிரே இருந்த டேபிள் மீது பைலை வைத்தாள் மைவிழி.

"நீ மேடம்ன்னு கூப்பிட்டா எனக்கு நாராசமா கேட்குது.. எப்பவும் போல அக்கான்னே கூப்பிடேன் செல்லம்.." ரேகா இப்படி சொல்லவும் அந்த அறையிலிருந்த செவிலியர் மைவிழியை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு அந்த அறையிலிருந்து வெளியே சென்றாள்.

மைவிழி பொய் கோபத்தோடு ரேகாவை பார்த்தாள். "ஹாஸ்பிட்டல்ல டாக்டருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. அதை கெடுத்துக்காம இருங்களேன்.."

"இதுல என்ன மரியாதை கெட்டு போச்சி.. நான் ஆம்பளயா இருந்திருந்தா உன்னைத்தான் கட்டியிருப்பேன் தெரியுமா..?" அவள் அப்படி சொல்லவும் மைவிழி அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தாள். நல்ல வேளையாக அந்த அறையில் வேறு யாரும் இல்லை.

"எனக்கு வேலை இருக்கு.. வரேன்.." என்றாள் கதவை நோக்கி நடந்தபடி.

"வெட்டி சீன் போடாத.. அங்கே சும்மா ரிசப்சனிஸ்டுக்கு ஷெல்ப்பாதானே இருக்க.. இங்கேயே இரு.. நாம் இரண்டு பேரும் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசலாம்.."

மைவிழி நெற்றியில் அறைந்துக் கொண்டாள். அதை கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் ரேகா. அவள் மீண்டும் மைவிழியை வம்பிழுக்கும் முன் அவள் பரிசோதிக்க வேண்டிய அடுத்த கர்ப்பிணி பெண் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள். ரேகா தன் முகத்திலிருந்த குறும்பு சிரிப்பை மறைத்துவிட்டு மென்மையான புன்னகையோடு அந்த பெண்ணை உள்ளே அழைத்தாள். அவளது மருத்துவர் தொனியை கண்டு தனக்குத்தானே சிரித்துக் கொண்டு வெளியே வந்தாள் மைவிழி.

ரிசப்ஷனில் இருந்தவள் இவள் வந்ததும் முறைத்தாள். "ஒரு பைலை கொடுத்துட்டு வர இவ்வளவு நேரமா..? ரெகமன்டேசன்ல வேலைக்கு சேர்ந்தா இப்படிதான்.." என்றாள் சிடுசிடுப்பாக.

மைவிழிக்கு கோபம் வந்தது. பரிந்துரையால் வேலைக்கு சேர்ந்திருந்தாலும் அவள் தன் வேலைகளை குறை இல்லாமல்தான் செய்துக் கொண்டிருந்தாள். அவளை திட்டி தீர்க்க தோன்றியது மைவிழிக்கு. ஆனாலும் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் தந்த அடுத்த வேலையை கவனித்தாள். அவள் அடிக்கடி மைவிழியிடம் சிடுசிடுத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் தன் கோபத்தை காட்டாமல் இன்றைய நாளை முடிக்க வேண்டும் என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டு தனது வேலைகளை செய்தாள் மைவிழி.
மருத்துவமனையில் தனது கோபத்தை கட்டுப்படுத்தியவளால் வீட்டின் கோலம் கண்டதும் அதே போல கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வீடு மொத்தமாக தலைகீழாக திருப்பி வைக்கப்பட்டதை போலிருந்தது. அலங்கோலமாக இருந்த வீட்டின் நடுவே பைத்தியம் போல அமர்ந்திருந்தான் கதிர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top