நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 17


சக்தி அந்த பெண் ரியாவை தனது வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைத்து விட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள்.

ரியா முகத்தை திருப்பி ஜன்னலின் வெளியே பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் இன்னமும் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. சக்தி அவளை கவலையோடு பார்த்தாள்.

"அந்த பையன் நல்லவன் இல்லன்னு நான் உனக்கு சொன்னேனே.. நீயும் என் பேச்சைக் கேட்டுதானே உன் பெத்தவங்களோடு போக சம்மதிச்ச.."

ரியா சக்தி சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நம்பிதான் தன் பெற்றோரோடு சென்றாள். ஆனால் இவளும் அன்புசெல்வியும் தோழிகள் என்பதால் ரியா சக்தி மேல் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் உடைந்து சிதறிவிட்டன. கணவனோடு சிறு மனஸ்தாபம் ஏற்பட பிறந்த வீட்டிற்கு வந்தவளுக்கு அன்புசெல்வி சொன்ன விசயம் சஞ்சலத்தை தந்து விட்டது.

தனது காதல், அதனால் அவளுக்கு ஏற்பட்ட தடைகள், மகேஷின் மூலம் உயிரோடு தப்பி டெல்லிக்கு சென்றது வரை அனைத்தையும் அலைபேசியில் சொல்லிவிட்டாள் அன்புசெல்வி. அதை கேட்டதிலிருந்து ரியாவின் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு. சக்தி குறுக்கிடாமல் இருந்திருந்தால் தனது காதலும் கை கூடி இருக்குமோ என்ற நப்பாசை அவளை தூங்க விடவில்லை. அதனால்தான் நியாயம் கேட்க சக்தியை தேடி அவளே வந்து விட்டாள்.
சக்தி ஒரு கையால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு தன் மறு கையை ரியாவின் கை மீது வைத்தாள். ரியா சட்டென தன் கையை அவளிடமிருந்து நகர்த்தி கொண்டாள்.

"அந்த பையன் கெட்டவன் ரியா.."

"அவன் அப்படி என்ன கெட்டதை செஞ்சிட்டான்.." என்றாள் கோபமாக ரியா.

"நீ சொல்லு.. அவனை பத்தி உனக்கு என்னவெல்லாம் தெரியும்ன்னு..?"

"அவ.. அவன் ஒரு ராங்க் கால் மூலமா அறிமுகமானவன்.. ஒரு வருசத்துக்கு மேல நண்பர்களாதான் இருந்தோம்.. அதுக்கப்புறம் நேர்ல சந்திக்கலாம்ன்னு முடிவு பண்ணினோம்..‌ நேர்ல பார்த்தவுடனே இரண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சி போச்சி.. அப்புறம் காதலர்களாக ஆறு மாசம் பழகிட்டு இருக்கும் போதுதான் எங்க வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாங்க.. அதனால்தான் உதவிக்காக நானும் அவனும் உங்களை தேடி வந்தோம்.."

சக்திக்கு அவளை பார்த்தாள் முட்டாளின் சிகரம் போல தோன்றியது.. 'கால்தான் ராங்காயிடுச்சே.. அதுக்கப்புறம் பேச வேண்டிய அவசியம் என்ன..? ஒரு சில ராங்கால் காதல் ஒன்னு கூடியிருக்குதான்.. ஆனா நேர்ல பார்த்து பழகி வர காதல் போல அதுலயும் முழு நம்பிக்கை இருக்குமா..? இந்த காலத்து பசங்கள புரிஞ்சிக்கவே முடியலையே..'

"உன் வீட்டுகாரரை பத்தி சொல்லு.."

ரியா சற்று நேரம் தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள். "அவன்... அவன் எங்களோட ஃபேமிலி பிரெண்டோட பையன்.. சின்ன வயசுலயிருந்து அவனுக்கு என் மேல் லவ்.. எனக்கும் கூட கொஞ்சம் ஈர்ப்புதான்.. ஆனா சின்ன வயசுல நான் செய்யாத தப்புக்கு என்னை பழி சொல்லிட்டான்.. அதுலயிருந்து அவனை எனக்கு சுத்தமா பிடிக்காம போயிடுச்சி.. இந்த காதல் பிரச்சனையில் எருமை மாடு மாதிரி குறுக்க வந்து எங்க அப்பாக்கிட்ட சம்மதம் வாங்கி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்..." என்றாள் எரிச்சலுடன்.

"உன் வீட்டுகாரனோட பெத்தவங்களை பத்தியும் அவனோட நண்பர்களை பத்தியும் சொல்லு.."

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு..?"

"சும்மாதான்.. நாம் போய் சேர வேண்டிய இடம் கொஞ்சம் தூரமா இருக்கு.. அது வரைக்கும் டைம் பாஸ் ஆகனும் இல்ல..?"

ரியாவிற்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை. ஆனால் ஏற்கனவே நொந்திருந்த மனம் அவளது விருப்பு வெறுப்புகளை கவனிக்கும் நிலையில் இல்லை. அதனால் தனது கணவனின் சுற்றம் நட்பு என தெரிந்தது அனைத்தையும் சொன்னாள். அவள் சொல்லி முடித்ததும் தனது அடுத்த கேள்வியை கேட்டாள் சக்தி.

"உன் காதலனோட சொந்த பந்தம் நட்பு இதை பத்தி சொல்லு.." ஆனால் இம்முறை அவளிடமிருந்து பதில் வராமல் போகவும் சக்தி ரியாவின் திசையை திரும்பி பார்த்தாள். அவள் இவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"நீங்க எனக்கு என்ன ப்ரூஃப் பண்ண பார்க்கறிங்க..? எனக்கு என் ஹஸ்பண்ட் பத்தி எல்லாம் தெரியும்.. ஏனா சின்ன வயசுலயிருந்து அவனை நான் பார்த்திருக்கிறேன்.. என் காதலனோட பேமிலியை பத்தியும் பிரண்ட்ஸ் பத்தியும் எனக்கு அவ்வளவா தெரியாதுதான்.. அதுக்காக எங்களோட லவ் தப்பாகிடாது.. எங்க காதல் புனிதமானது.."

"புனிதமானதா..? உன் காதலால் புனிதத்துக்கு இருந்த சிறப்பு போயிடும் போல.. கண்ணால் பார்ப்பது பொய்.. காதால் கேட்பதும் பொய்.. இது உனக்கு புரியவே இல்லை.. உன் ரூட்லயே வந்து சில உண்மைகளை கண்ணால் பார்க்க வைக்கிறேன்.. அப்போதாவது திருந்துவியான்னு பார்க்கலாம்.."

"மேடம்.." கோபத்தோடு ஆரம்பித்தவளிடம் கை காட்டி நிறுத்தினாள் சக்தி. வாகனத்தை நிறுத்தியவள் "இடம் வந்துருச்சு இறங்கு.." என்றாள்.

ரியா கீழே இறங்கி தன் முன்னால் இருந்த வீட்டை பார்த்தாள். மாளிகை போல் உருவத்தில் பெரியதாக இருந்தது அந்த வீடு. வீட்டை சுற்றிலும் நிறைய ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

சக்தி முன்னால் நடக்க அவளை பின் தொடர்ந்து ஓடினாள் ரியா. "எதுக்கு மேடம் இங்கே வந்திருக்கோம்..?"

"இதுதான் நீ லவ் பண்ண லட்சணம்.." என தனக்குள் முனகினாள் சக்தி.

சக்தியை கண்டதும் நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்தார். "சக்தி.. வாம்மா.. இந்த பக்கமெல்லாம் நீ முன்ன மாதிரி வரதே இல்லை.. எங்களையெல்லாம் மறந்துட்டியா..?"
என்றவரை கண்டதும் சக்தியின் முகத்தில் புன்னகை தானாக வந்தது.

"உங்களை எப்படி மறப்பேன்ப்பா..?"

அவர் அவளுக்கு பின்னாலிருந்த ரியாவை பார்த்தார். "யார் அந்த பொண்ணு..?"

"தெரிஞ்சவங்க பொண்ணுப்பா.. சீனு உள்ளேதான் இருக்கானா..?"

"ஆமாம்மா.. ஏன்..?"

"சும்மாதான் கொஞ்சம் வேலைப்பா.. இருங்கப்பா வந்து பேசுறேன்.." என்றவள் ரியாவின் கையை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

"யார் சீனு..? நாம் ஏன் அவங்களை பார்க்கணும்..?" ரியா கேட்கவும் சக்தி அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள்.
"நீ ஒருவேளை நீ என் பொண்ணாயிருந்திருந்தா இன்னேரம் உனக்கு நான் சாப்பாட்டுல விஷம் வச்சி உன்னை கொன்னிருப்பேன் தெரியுமா..?" என்ற சக்தியை மிரட்சியோடு பார்த்தாள் ரியா.

"ஏன்டி.. ஒருத்தி காதலனோட வீடு எதுன்னு தெரியாம இருந்தா கூட பரவாயில்லை.. அநியாயம் அவன் பேர் கூட தெரியாமலா லவ் பண்ண..?" கோபமாக கேட்ட சக்திக்கு அவளை அறைய வேண்டும் போல இருந்தது. ஆனால் ரியாவோ அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள்.

"அவன் பேர் பிரசாத் மேடம்.." ரியாவிற்கு மொத்த உடம்பும் நடுங்கியது. இது உண்மையாக இருக்க கூடாது என வேண்டிக் கொண்டது அவளின் சிறு இதயம்.. ஆனால் அவளின் அறியாமையின் மீது நெருப்பை கொட்டுவதை போல அவளின் காதலனே தூரத்தில் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.

ரியாவிற்கு இது அத்தனையும் கனவாக இருக்க வேண்டும் போல இருந்தது. "சக்தி ஆன்டி.." என வந்ததும் சக்தியின் கழுத்தை கட்டிக் கொண்டவனை ரியா கண்ணீரோடு பார்த்தாள். தனது முட்டாள் தனத்தை நினைத்து முதல் முறையாக அழுதாள்.

அவனை தள்ளி நிறுத்தினாள் சக்தி. "என்னை தொட்டு பேசாதன்னு எத்தனை முறை சொல்றது சீனு..?" எரிச்சலாக கேட்டாள். அவளுக்கு சீனுவை எப்போதுமே பிடிக்காது. ஆனால் அவனோ சுத்தமான பொம்பளை பொறுக்கி.. கல்லுக்கு புடவை சுத்தியிருந்தால் கூட அதையும் கட்டிப்பிடிக்க நினைப்பவன்.

சீனு சக்தியை விட்டு விலகி நின்றான். அப்போதுதான் அவன் ரியாவையே பார்த்தான். எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என யோசித்தவனுக்கு அவனது மூளையை கடினமாக்கி யோசித்த பிறகே ரியாவை பற்றிய நினைவுகள் வந்தது.

"ரியா.. நீயே என்னை தேடி வந்திருக்கியா..? என் காதல் தேவதை என்னை தேடி வந்திருக்கு.." என்று கரகரப்புடன் சொல்லியவனின் கண்கள் ஈரத்தோடு மின்னின. அவளது கையை பற்றி அவளை ஆவல் நிறைந்த கண்களோடு பார்த்தான்.

"உன் குரலுக்கும் உன் கண்ணுலயிருந்து சிந்துற கண்ணீருக்கும் எவளா இருந்தாலும் விழுந்துடுவா சீனு.. நான் இவ்வளவு நேரம் ஏமாந்துட்டியேன்னு அந்த பெண்ணை திட்டிக்கிட்டிருந்தேன்.. ஆனா உன் நடிப்புக்கு ஏமாறலன்னா அவ மனுஷியே இல்லடா.. அவ்வளவு ஏன்.. உன்னை பத்தி முன்ன பின்ன தெரியாம இருந்திருந்தா நான் கூட விழுந்திருப்பேன்டா.." என்றவளை முறைத்தான் சீனு.

"உங்களுக்கு ஏன் காதலை கண்டு இவ்வளவு பொறாமை..?"

"அந்த வார்த்தையை கேவலபடுத்தாம உன் காதலிங்களை கூப்பிடு.. ரியா அவங்களை பார்க்கதான் வந்திருக்கா.."

ரியாவிற்கு இதயம் ஒரு நொடி நின்று போனது. 'இவனுக்கு காதலி இருக்காங்களா..? சக்தி மேடம் காதலிங்கன்னு பன்மையில் இல்ல சொன்னாங்க..' அவள் யோசனைக்கு இடம் தராமல் பெண்கள் மூவர் இவர்களை நோக்கி நெளினமாக நடந்து வந்தனர். அவர்களையும் அவர்களது உடைகளையும் ஆராய்ந்த ரியாவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது.

சக்தி ரியாவின் தோளில் கை வைத்து அவளை ஆறுதலோடு தன்னருகே நிறுத்தியபடி உண்மைகளை சொல்ல ஆரம்பித்தாள். "இவன் ஒரு விபசாரன் போல.. எந்த பொண்ணாவது அவன் வலையில் விழுந்துட்டா போதும்.. அவர்களை தன் இன்ப ராணியா மாத்திப்பான்.. அவனுக்கு இது வரைக்கும் அஞ்சி காதலிங்க இருக்காங்க.."

"இல்ல ஆறு.." என்ற சீனுவை எரிச்சலோடு பார்த்தாள் சக்தி.

"கல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சி.." என்றவனை முறைத்து விட்டு ரியாவின் பக்கம் திரும்பினாள் சக்தி.

"ஆறு காதலிங்க.. ஆறு பேரும் பணத்துக்காக மட்டும் இவன் கூட வாழுறாங்க.. உன்னை மாதிரி இல்லம்மா அவங்க.. ஆறு பேரும் விருப்பப்பட்டு இவனோடு வாழுறாங்க.. அதனால் யாரும் எதுவும் பண்ண முடியாது.. ஏனா இங்கே பணம் இருந்தா போதும்.. கலாச்சாரம், கண்ணியம்ன்னு எதையும் பாலோவ் பண்ண தேவையில்ல.. இதுக்கும் மேலயும் அவனை உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு நானே உன்னை இவனோடு விட்டுட்டு போறேன்.."

ரியா கண்ணீரோடு சீனுவை பார்த்தாள். அவன் தொலைந்துபோன நாய்க்குட்டி போல அப்பாவியாக இவளை பார்த்தான். "நான் உன்னை என் உயிரா நேசிக்கிறேன் செல்லம்.. நீ இல்லன்னா நான் வாழுறதே வேஸ்ட்.. என் கூடவே இருந்துடேன் ப்ளீஸ்.." அவன் கன்னத்தில் ஒரு அறையை விட்டுவிட்டு சக்தியிடம் திரும்பினாள் ரியா.
"என் முட்டாள்தனம் இப்போது புரிஞ்சது மேடம்.. என் கண்ணை திறந்து வச்சதுக்கு ரொம்ப நன்றி.. நீங்க அன்னைக்கு ஆயிரம் முறை சொல்லியும் நம்பாம போனதுக்கு இப்போது வருத்தப்படுறேன்.." என்றவள் அங்கிருந்து வெளியே நடந்தாள்.

சக்தி சீனுவை வெறுப்போடு பார்த்தாள். "நீ ஒருநாள் என்கிட்ட வசமா மாட்டுவ சீனு.. அன்னைக்கு உன்னை கஞ்சி காச்சிடுறேன் இரு.." என்றவள் ரியாவை தொடர்ந்து ஓடினாள்.

ரியா இன்னும் பலமாக அழுதபடி சக்தியின் வாகனத்தில் ஏறினாள். சக்தி வாகனத்தை ஓட்ட ஆரம்பித்ததும் முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் ரியா. சக்தி அவளை சமாதானம் செய்யும் முயற்சியோடு அவளது முதுகை தொட்டாள்.

"என்னை கொஞ்ச நேரம் இப்படியே விடுங்க மேடம்.. அந்த நாயை நம்பியதுக்கு அழுது தொலைச்சாதான் எனக்கு என் மேல் இருக்கற கோபம் போகும்.. நீங்க எல்லா காதலர்களையும் பிரிச்சிடுறிங்கன்னு கேட்டவுடனே என் காதலை கூட அப்படி பிடிக்காமதான் பிரிச்சி வச்சிட்டங்களோன்னு நினைச்சிட்டேன்..."

"நான் எல்லா காதலர்களையும் பிரிக்கறது கிடையாது.. எந்த இடத்துல காதலர்கள் சேர்ந்தால் அது அவங்களுக்கே வினையா மாறுதோ அந்த இடத்துல மட்டும்தான் பிரிக்கறேன்.. ஜோடியா சேர்ந்த பிறகு அவங்க பெத்தவங்க கையால் கொலை செய்யபடுறவங்களை மட்டும்தான் நான் பிரிச்சிதான் வைக்கிறேன்.. ஏனா கொலை பண்ணவங்களை அரெஸ்ட் பண்ணிட்டா செத்தவங்க உயிரோடு வர போறதும் கிடையாது. அடுத்த ஆணவ கொலை நடக்காம இருக்கப் போறதும் கிடையாது.. ஆனா அந்த காதலர்கள் பிரிஞ்சி வாழுறதால் அவங்க காதல் ஒன்னும் செத்துட போறதில்லையே.. அட்லீஸ்ட் அவங்களாவது உயிரோடு இருப்பாங்க இல்லையா.. அவங்க புத்திசாலிதனமாக செயல்பட்டா பத்து வருசத்துக்கு பிறகாவது அவங்க காதல் ஒன்னு சேர வாய்ப்பிருக்கு இல்லையா..? ஆனா உன் காதலை பிரிச்சதுக்கு காரணம் சீனு கெட்டவன் என்கிற காரணம்தான்.. அவன் என் பிரெண்ட் கலையோட அண்ணன் மகன்.. அவனை டின் கட்டணும்ங்கறது என் ரொம்ப நாள் ஆசை.. "

"மகேஷ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே..?" அவளையும் மீறி கேட்டு விட்டாள் ரியா.

அவளை ஒரு மாதிரியாக பார்த்தாள் சக்தி. "அவனே ஒரு ரவுடி.. அவன் எதுக்கு இவனை கவனிக்க போறான்..? அதுவுமில்லாம சீனுவை பத்தி அவனை நெருங்கி இருப்பவங்களை தவிர இங்கே வேற யாருக்குமே தெரியாது.. கிட்டத்தட்ட சீனு ஒரு இன்விசிபல் பெர்சன் மாதிரி.. அவனை தூக்கி போட்டு மிதிக்க வாய்ப்பு கிடைக்காட்டியும் உன்னை அவன் வலையிலிருந்து காப்பதியதே போதும்ன்னு நினைக்கிறேன்.. எல்லாம் தெரிஞ்சி பணத்துக்காக அவனோடு சேர்ந்து பாழும் கிணத்துல விழுற பொண்ணுங்களை என்னால் ஒன்னுமே பண்ண முடியாது.. எவளாவது ஒருத்தி அவனுக்கெதிரே நிற்க கூடாதா..!?" ஆதங்கத்தோடு கேட்டாள் சக்தி.

"ஸாரி மேடம்.. நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன்.."

சக்தி வாகனத்தை ரியாவின் வீட்டின் முன்னால் நிறுத்தினாள்.

ரியா முகத்தை துடைத்துக் கொண்டு கீழே இறங்கினாள். அவளது கணவன் எங்கிருந்தோ வந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"எங்கடி போன லூஸு..? நீ காணாமா போயிட்டன்னு உங்க அம்மா ஃபோன்ல சொன்னப்ப உயிரே போயிடுச்சி.. எங்கேயாவது போனா வீட்டுல சொல்லிட்டு போகணும்ங்கற அறிவு கூடவா இல்ல‌..?" என்றவனின் வார்த்தையில் அவளை மயக்கும் நளினம் இல்லை. அவனது கண்மூடித்தனமான கோபம்தான் தெரிந்தது.
ஆனால் கோபத்தின் பின்னால் அவனது காதல் வானை விட உயரமாக வளர்ந்திருப்பது தெரிந்தது.

"ஸாரி.. ஆனா நீ எருமை மாடு மாதிரி என்னை இப்படி கட்டிப் பிடிச்சா நான் மூச்சடைச்சே செத்துடுவேன்.." அவள் சொன்னதை அவன் காதிலேயே வாங்கவில்லை.

சக்திக்கு இவர்களை கண்டதும் மனதிலிருந்த பாரம் குறைந்தது போலிருந்தது. தனது வாகனத்தை திருப்பிக் கொண்டு ஸ்டேசனை நோக்கி கிளம்பினாள்.

சக்தி ஸ்டேசனுக்கு வந்த போது அவளை எதிர் பார்த்து காத்திருந்தது போல ஓடி வந்தான் மகேஷ். சக்தியின் கண்களுக்கு சந்தியா வந்து போனாள். நினைத்து நினைத்து களைத்து போனவளாக ஸ்டேசனுக்குள் செல்ல முயன்றாள் சக்தி.

அவளுக்கு முன்னால் பாய்ந்து வந்து நின்றான் மகேஷ். "வழி விடு மகேஷ்.. எனக்கு நிறைய வேலை இருக்கு.."

"உனக்கு என்ன ஆச்சின்னு முதல்ல சொல்லு.. காலையில வரைக்கும் என்னை கோபமா பார்த்த கண்ணுல இப்போது ஏன் வெறுப்பாவும் நம்பிக்கை இல்லாமலும் பார்க்கறன்னு சொல்லு.. தப்பு எங்கே நடந்ததுன்னு சொல்லாம இருந்தா நான் எப்படி அதை சரி செய்யுறது..?"

சக்தி கோபமாக அவனை பார்த்தாள். "உன்னை நான் காதலிக்கறதே தப்புதான்.. உன்னை பைத்தியம் போல நேசிக்கறதே தப்புதான்.." தன் வார்த்தைகளில் நிகழ்காலத்தை பயன்படுத்தி கொண்டிருப்பதை கவனிக்கவே இல்லை சக்தி. மகேஷிற்கு அது ஒரு புதிதான விசயமும் இல்லை. ஏனெனில் அவள் நேசிப்பதைதான் அவன் ஏற்கனவே அறிவானே.

"விசயத்தை சொல்லு சக்தி.." என்றான் அவளது கலங்கும் கண்களை பார்த்தபடியே.

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு எனக்கேன் சொல்லவே இல்ல மகேஷ்..?" என்றவளின் கன்னத்தில் ஒற்றை கண்ணீர் துளி உருண்டது.

மகேஷிற்கு ஒன்றுமே புரியவில்லை. தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. என் பொண்டாட்டி நீதான்.. அது உனக்கும் தெரியும்.. ஏனா நீ கண்ணை திறந்திருக்கும் போதுதான் நான் உன் கழுத்துல தாலியை கட்டினேன்.. நீ கழட்டி தந்த தாலியிலிருந்த மஞ்சள் கொம்பை இன்னமும் நான் பத்திரமாதான் வச்சிருக்கேன்.." என்றவன் தன் கழுத்திலிருந்த சங்கிலியை எடுத்து வெளியே காட்டினான். மஞ்சள் கொம்பு ஒன்று அதன் ஓரங்களில் தங்கத்தால் மெருகேற்றபட்டு அவனது கழுத்து சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்தது.

'இதை ஏன் இன்னும் வச்சிருக்க..?' என கேட்க நினைத்தது சக்தியின் மனம்.

"நான் இதை சொல்லல.. என்கிட்ட கூட சொல்லாம இன்னொரு கல்யாணம் பண்ணி அசப்பில் உன்னை மாதிரியே ஒரு பெண் பிள்ளையை பெத்து வச்சிருக்கியே.. அதை கேட்டேன்.."

இப்போதுதான் மகேஷிற்கு விசயம் புரிந்தது. அவளது முகத்தை பார்க்கையில் குபீரென சிரிக்க தோன்றியது அவனுக்கு.

800 ரீட்ஸ் தாண்டிருச்சி.. ஆனா இன்னும் ஒரு லைக் ஒரு கமெண்ட் கூட வரல.. கதை பிடிக்கலன்னா கூட அதை கமெண்ட்ல சொல்லுங்க நட்புக்களே.. இரண்டு லைக்காவது வந்தாதான் அடுத்த அத்தியாயம் அப்லோட் பண்ணலாம்ன்னு இருக்கேன்.. நன்றிகளோடு உங்கள் தோழி செவ்வந்தி.
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Sis online story னாலே.. நிறைய பேர் படிச்சிட்டு மட்டும் போய்டுவாங்க சிஸ்...
அதே full story complete ஆன பிறகு பாருங்க... Response இருக்கும்...

கதை நல்லா போய்ட்டு இருக்கு நீங்க continue பண்ணுங்க சிஸ்
 
OP
Sevanthi durai

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Sis online story னாலே.. நிறைய பேர் படிச்சிட்டு மட்டும் போய்டுவாங்க சிஸ்...
அதே full story complete ஆன பிறகு பாருங்க... Response இருக்கும்...

கதை நல்லா போய்ட்டு இருக்கு நீங்க continue பண்ணுங்க சிஸ்
ஓகே.. நன்றிகள் நட்பே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top