என் நெஞ்சுநேர்பவளே -3

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
3

செவ்வந்தி புதூரில் இருக்கும் அவர்கள் வீடு அந்த கால பணியில் சுண்ணாம்பு மற்றும் மண்ணை வைத்து கட்டப்பட்டது..... சதுர வடிவில் சுற்றிலும் ஓடுகள் வேய்ந்திருக்க நடுவில் மழை வெய்யில் படும் பொருட்டு முற்றம் மட்டும் வேயாமல் இருந்தது .....

நிலை கதவை தாண்டி உள்ளே சென்றால் அந்த கதவை ஒட்டி திண்ணை போன்ற அமைப்பு இருபுறமும் இருந்தது.. வலது இடது புறங்களில் அறைகள் இருந்தது.... நிலை கதவுக்கு நேர் எதிரே அறை போன்ற அமைப்பில் இல்லாத திறந்தவெளி வரவேற்பறை போல் இருந்தது... அதன் இடையில் பின்புறம் செல்லும் கதவு... அந்த கதவின் வழி சென்றால் ஒருபுறம் சமையல் அறை, மறுபுறம் சாப்பிடும் மேஜை போடப்பட்டிருந்தது..

அதற்கும் வெளியே கொல்லைப்புறத்தில் கழிவறை குளியல் அறை இருக்கும்.... குளியல் அறையில் பித்தளை அண்டா பதிக்கப்பட்டு அதை வெளியில் இருந்தே விறகு வைத்து எரிக்கும் அமைப்பில் இருக்கும்... ஒரு முறை சூடாகி விட்டால் நாள் முழுதும் தண்ணி சூடாகவே இருக்கும்...

வெறும் சுண்ணாம்பு மண் ஓடக்கல்லை
வைத்து மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது...

அம்மன் சிலையை வீடு வீடாக கொண்டு வருபவர்கள் இப்போது அவர்கள் வாசலுக்கே வந்து விட்டிருக்க, அவர்களுடன் வந்த இளையவர்கள் வீட்டிற்குள் வந்து அனைவர் மேலும் மஞ்சள் நீரை ஊற்றி மஞ்சளை கொஞ்சம் முகம் கைகளில் பூசி விட்டனர்...

சமையல் அறையில் சிவகாமி அம்மனுக்கு மஞ்சள் அரளியும் துளசியும் சேர்த்து மாலை கட்டி வைத்திருந்தார்.. அதை எடுத்துக்கொண்டு வந்த ஆரதி தன் மேல் ஒருவன் மஞ்சள் நீரை ஊற்ற வர கண்களை இறுக மூடிக் கொண்டாள்...

கார்த்தி அனைவர்க்கும் பொட்டு வைத்துக் கொண்டிருக்க அந்த பாத்திரத்தை வைத்திருந்த ஆதிரன் எதேச்சையாய் திரும்ப அவன் கண்ணில் விழுந்தாள் ஆரதி.....

இலைப்பச்சை நிறைய பாவாடை சட்டை.... எலுமிச்சை மஞ்சள் தாவணி... இரு புறமும் வழிந்த பின்னலில் ஒரு பக்கம் மட்டும் முல்லைச்சரத்தை கொத்தாக தொங்க விட்டிருந்தாள்....கை நிறைய பூக்களை வைத்துக் கொண்டு இறுக கண்மூடி அவள் நின்ற தோற்றம் அவன் மனதை என்ன செய்ததென்று அவன் அறியான்....

மற்றோருவன் அவள் மேல் நீரை ஊற்றும் முன் இடையில் புகுந்திருந்தான் ஆதிரன்... நீரை ஊற்ற வந்தவன் அதையெல்லாம் கவனிக்க வில்லை... வந்தோமா ஊற்றினோமா அடுத்த வேலையை பார்த்தோமா என்று சென்று விட்டான்....

'என்ன இன்னும் நாம நனையாம இருக்கோம்' என்று மெல்லிதாய் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள் முன் நின்ற ஆதியை பார்த்து விழி விரித்தாள்.... "அட இது நம்ம அதிசயம்... " என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க, அவள் பார்வை பாவங்களில் தன்னை அறியாமல் தொலைந்து கொண்டிருந்தவன் பாத்திரத்தில் இருந்த குழைத்த மஞ்சள் சந்தனத்தை கை நிறைய எடுத்து அவள் இரு கன்னங்களிலும் பூசி விட்டிருந்தான்....

சந்தனத்தின் ஜில்லிப்பை மீறி அவள் நினைவில் சற்று முன் கோவிலில் அவன் உதித்த வார்த்தைகள் நினைவில் மோத இமை மூடும் யோசனை கூட இன்றி அவனை பார்த்திருந்தாள்... அவன் கண்களில் கண்ட லயிப்பில் அவள் மனதோ தலை சுற்றி குப்புற விழுந்த உணர்வில் தவித்து நின்றிருந்தாள்.....

பூஜை ஆரம்பித்ததற்கான அறிகுறியாக வானில் வானம் (ஒரு வகை பட்டாசு... ) வெடித்த சத்தத்தில் தன் நினைவு மீண்டவன் தலையை சிலுப்பி கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்...

அவன் சென்ற பின் "ஏய் அங்க பூஜை ஆரம்பிச்சுட்டாங்க.. பூவை கொண்டு வராம இங்க நின்னுட்டு இருக்க... வா போய் சாமி கும்பிடலாம்.. "என்று அவளை அழைத்து சென்றார் மீனா....

வெளியே வாசலில் அம்மனை வைத்திருக்க தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தனர்... ஆரதியின் கண்கள் ஆதியை தேடி களைத்து போனது... இறுதியில் அம்மனை தன் மனதில் நிரப்பி தனக்கு நல் வழி கட்ட வேண்டி சரணடைந்தாள்.....

அவள் எண்ணத்தின் நாயகனோ அங்கிருந்து வேக வேகமாக சென்று கொண்டிருந்தான்... அவன் பின்னாலே துரத்து வந்தான் கார்த்தி.....

"டேய் எங்கடா போற.... இரு நானும் வரேன்.... "என்று கேட்டுக்கொண்டே அவனிடம் இணைந்து கொண்டான்..

"ப்ச்... நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.... "

"ஆமாமாம்... காதல்ல விழுந்தா முதல் மாற்றம் தனிமையில் இனிமைதான்... "என்ற கார்த்தியின் பேச்சில் சட்டென நின்று விட்டான் ஆதிரன்...

"என்னடா உளர்ர.... "

"உண்மையை சொன்னேன்டா... "

"எதுடா நாயே உண்மை... "

"ம்ம்ம்... இந்த அநியாயத்துக்கு நல்லவன் அந்த மஞ்ச காட்டு மைனா மேல காதலில் விழுந்துட்டான்னு சொல்றேன்.... "

"அப்பிடியே அறைஞ்சேன்னு வையி இங்கிட்டு இருக்க கடவாய் பல்லு அந்த பக்கம் போய் ஒட்டிக்கும்....லூசு மாதிரி காதல் கீதல் பேசிட்டு திரிஞ்ச அஞ்சு ரூபா பெவிகுயிக் வாங்கி ஒட்டி புடுவேன் ஜாக்கிரதை..... "என்று மிரட்டி விட்டு விறுவிறென்று சென்று விட்டான்....

"இவன்தான் பொண்டாட்டியை தவிர யாரையும் தொட மாட்டேன்னு வசனம் பேசிட்டு அந்த புள்ள மோகத்துல ஒரு குண்டா மஞ்சளை அப்பிட்டு வரான்..... இதை காதல்னு சொல்லாம என்னனு சொல்றது... இனி இவன்கிட்ட விளக்கம் கேட்டா வாயை ஒட்டி புடுவானே..... ஐயோ அப்புறம் சோறு எப்படி சாப்பிடுவேன்.. எப்படியும் கத்திரிக்காய் முத்தி தானே அவனும்... அப்போ இருக்கு அவனுக்கு... "என்று கருவிக் கொண்டே சென்றவன் அங்கு போடப் பட்டிருந்த மோர் பந்தலில் இரண்டு கப் மோர் வாங்கி குடித்த பின் அடுத்த வேலையை பார்க்க சென்றான்...

ஆதிரன் கார்த்தியின் வீட்டிற்கு சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டான்... பாத்ரூமிற்கு சென்று முகத்தில் நீரை அடித்து கழுவியவன், முகம் துடைத்து விட்டு படுக்கையில் விழுந்தான்...

அவன் நினைவில் ஆரதி முகம் வந்து போக சட்டென எழுந்து அமர்ந்தவன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.....

"என்ன காரியம் ஆதி பண்ணி வச்சுருக்க... லூசு மாதிரி இப்படி பண்ணிட்டு வந்துட்ட...உன்னோட கொள்கை எல்லாம் என்ன ஆச்சு... "என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க அமைதியாய் இருந்தான்...

"என்னவோ அந்த பொண்ணை பார்த்த ஒடனே ஒரு பீல்..... சம்திங் மேஸ்மரைஸ் பண்ணுன மாதிரி என்னையும் அறியாமல் பூசி விட்டுட்டேன்... "என்று அவன் மூளை பதில் அளித்தது....

"இதுக்கு பேர் என்ன... காதலா... "என்று அவன் மனம் ஆராய

"அதெல்லாம் இல்லை... அது ஜஸ்ட் ஒரு இன்பாக்ச்சுவேஷன்... அவ்ளோ தான்.... "என்று குழம்பிய மனதை சமாதானம் செய்தது அவன் மூளை....

இங்கே ஆரதியோ அவன் பூசி விட்ட மஞ்சளின் ஈரம் காய்ந்த போதும் கழுவும் மனம் இன்றி கொல்லைபுரத்தில் இருந்த துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து இருந்தாள்.... அங்கு வந்த சுரபி

"ரதி போய் முகம் கழுவிட்டு வா... அம்மாச்சி சாப்பிட கூப்பிட்டாங்க.... "

"கழுவியே ஆகணுமா... "

"ஏன் இதுல என்ன பிரச்சனை உனக்கு "என்று அவள் மீது ஆராய்ச்சி பார்வை வீசிக் கொண்டே சுபி கேட்க, அவளிடம் இருந்து தப்பிக்க வேண்டி குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்....

முகம் கழுவ தண்ணீரை கைகளில் அள்ளி மஞ்சளுக்கும் வலிக்குமோ என்கிற ரீதியில் மெதுவாய் கழுவ ஆரம்பித்தாள்... முழுதாய் கழுவி முடிக்கையில் ஆழமாய் அவள் மனதில் பதிந்து போனான் ஆதிரன்....

கோவிலில் அவன் பேச்சை கேட்காமல் இருந்திருந்தால் இதை எல்லாவற்றையும் சாதரணமாக எடுத்து கொண்டிருப்பாள்.. ஆனால் அவன் பேச்சை கேட்டிருந்தவளால் அவனின் இந்த செய்கையை சாதாரணமாய் எண்ண முடியவில்லை.... மெல்லமாய் காதல் அவள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது...

பிறகு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.. தலைவாழை இலை போட்டு மீனாவும் சிவகாமியும் பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டுகொண்டிருந்தனர்... வடை பாயசம் அவியல் பொரியலுடன் சமையல் ஜோராக இருக்க இலையில் மிச்சம் வைக்காமல் ஆரதி சாப்பிட்டு முடிக்க,(நமக்கு சோறு தான் முக்கியம்னு நீங்க நினைக்கறது எனக்கு கேட்ருச்சு.. ஈஈஈஈ.... )

"என்னடி... இலையை இப்படி கழுவி வச்சுட்ட"என்று சுரபி கேலி செய்தாள்...

"நாளைக்கு உனக்கு இதுலையே சாப்பாடு போட்டு ஒரு இலையை மிச்சம் பண்றதுக்கு தான்... "என்று விஷமமாய் சிரிக்க,

"ஆத்தாடி..... நான் இனிமேல் இலையில் சாப்பிடவே மாட்டேனே.... "
என்று சாப்பிட்ட இலையை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள் சுரபி.....
அதைக் கண்டு சிரித்தவள் முத்துசாமியின் இலை அருகில் இருந்த பாயச டம்ளரை பார்த்தாள்...

"அப்புச்சி உனக்கு சுகர் இருக்கு தான..."

"இந்த ஒடம்பு ராகியும் கம்பும் சாப்புட்டு வளர்ந்தது பாப்பு.... எனக்காவது சுகராவது..... "

"இனிமேல் வந்துச்சுனா... "என்று இழுக்க

"அடியே... உனக்கு பாயசம் வேணுமுன்னா உள்ள போய் இருக்கு.. போய் குடி.. அதை வுட்டுட்டு சுகர் அது இதுன்னு வம்பிழுத்துட்டு கிடக்க... "

"ஈஈஈஈஈஈ... " 'இந்த மீனு கண்டு பிடிச்சுருச்சே.... 'என்று நினைத்தவள் பார்வை மீண்டும் முந்திரி திராச்சை நிறைய இருந்த அவர் பாயாசத்திலேயே பாய, அவளை கண்ட முத்துச்சாமி

"இந்தாபாப்பு நீ இதை குடிச்சுட்டு போய் அப்பூச்சிக்கு வேற ஊத்திட்டு வா.... "என்று சொல்லி அவளிடம் தந்தார்... மீனா முறைப்பதை லூசில் விட்டவள் ரசித்து ருசித்து குடித்து விட்டு

"என் செல்ல அப்புச்சி... என்று மீசையை பிடித்து கொஞ்சியவள் உள்ளே சென்று கைகழுவிவிட்டு பாத்திரத்தில் இருந்த பாயசத்தில் இருந்த முந்திரி திராச்சை எல்லாம் நிறைய போட்டு பெரிய டம்ளரில் கொண்டு வந்து முத்துசாமியிடம் தந்தாள் ஆரதி....

"என் பாப்புனா பாப்பு தான்.... "

"இதையும் பிடுங்கி குடிச்சுரும் முன்னாடி குடிச்சுருங்க மாமா "என்று திரு சொல்ல அனைவரும் சிரித்தனர்...

"என்னை பார்த்தால் எப்படி தெரியுது.. "என்று அனைவரையும் முறைத்தவள் திருவிடம் சென்று அவர் இலையில் இருந்த இரண்டு வாழைக்காய் பஜ்ஜியை எடுத்துக்கொண்டு "இது சும்மா ஸ்னாக்ஸ் ஓகே "என்று விட்டு உள்ளே வர அனைவர் சிரிப்பும் ஆரதியை தொடர்ந்தது ...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN