என் நெஞ்சுநேர்பவளே -4

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
4

காலை நேரம்.... கோவில் வளாகம் முழுதும் நீரில் குளித்திருக்க, காற்றில் கரைந்து வந்த விபூதி கற்பூர வாசத்தினை இழுத்து தன் நாசிக்குள் அடைத்து கொள்ள ஆர்வமாய் பெரு மூச்சு ஒன்றை உள் இழுத்தாள் ஆரதி....

"அடியே வழிய அடைச்சிகிட்டு ஏன் இப்படி புஷ் புஷ்ன்னு மூச்சு வாங்கற.. " என்று ஆரதியை விலக்கி விட்டுட்டு உள்ளே வந்தாள் சுரபி.....

"ம்க்கும்... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை... "என்று கூறி மீண்டும் மூச்சை உள் இழுத்தாள்...

"அதான்டி... உனக்கு மட்டும் எப்படி தெரியுதுன்னு யோசிக்கிறேன்... "என்று யோசிக்கும் பாவனையில் சுரபி நின்றவளை முறைத்த ஆரதி

"நீ தாண்டி கழுதை.... "என்று அவள் மேல் பாய

"நீயும் தாண்டி கழுதை ..... "என்று இவள் மேல் பாய்ந்தாள் சுரபி..

"பாத்தியா உன்னையும் நீயே கழுதைன்னு ஒத்துக்கற.... "

"பின்ன உன்கூட பொறப்பெடுத்தா கழுதயா தான இருக்கனும்..... "

"இல்லைனா மட்டும் ஐஸ்வர்யாராய் க்கு அக்கா மகளா பொறந்திருப்ப... போ...... டி......... "

மீனா "ஏய் இங்க வந்தும் ஆரம்பிச்சுடீங்களா... "

சுரபி "இவ என்னய கழுதைன்னு சொல்றாம்மா.... "

ஆரதி "இல்லமா இவ தான் "

"ரெண்டு பேருமே கோவேறு கழுதைங்க...வாய் தானே தவிர வேலையில் ஒன்னும் இல்ல.... இப்ப பேசாம வரல பிள்ளையாருக்கு நூறு தோப்புக்கரணம் போட வச்சிருவேன்... "என்றதும் இருவரும் வாயை மூடிக் கொண்டனர்....

மீனா அங்கபிரதக்ஷணம் செய்வதாக வேண்டியிருந்ததால் அதற்கு தான் காலையிலேயே வந்திருந்தனர்... முத்துசாமியும் திருவும் வெளி வேலையாக எங்கோ சென்றுவிட சிவகாமி சமையல் வேலையை கவனித்துக் கொண்டதால் இவர்கள் மூவர் மட்டும் வந்திருந்தனர்....

ஈர சேலையுடன் மீனா வேண்டுதலை ஆரம்பிக்க, சுரபி அவரை திருப்பி விட்டுக்கொண்டே வர, ஆரதி குடத்தில் நீர் ஊற்றிக் கொண்டே வந்தாள்.... இரண்டு சுற்றுகள் முடிந்து மூன்றாவது சுற்று வரும் போது தான் கோவிலின் உள்ளே வந்த ஆதிரனை கவனித்தாள்....

அவனும் இவளை பார்த்தான்.. அவள் முகத்தில் முந்தைய நாள் தான் பூசிய மஞ்சளின் நிறம் இன்னும் மிச்சம் இருந்ததை கண்டான்.... ஏனோ கைகள் குறுகுறுக்க இறுக மூடிகொண்டவன் பார்த்தும் பாராமல் செல்வது போல கடந்து செல்ல முயன்றான்...

ஆரதிக்கோ மனதில் புரியாத பதட்டத்தின் வெளிப்பாடாய் கைகள் சற்று நடுங்க கவனம் சிறிது சிதற, ஏற்கனவே வளுவளுப்பாய் இருந்த தரை இவளது காலை வாரி விட முயன்றதில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள காலை எசகு பிசகாய் வைத்ததில் காலும் சுளுக்கி கொண்டது.. அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்து விட்டாள்...

அவள் கையில் இருந்த குடம் நீரோடு தள்ளி போய் விழுந்தது.....கீழே விழுந்த ஆரதியை தூக்கி அமர வைத்தாள் சுரபி..

வலியில் ஆரதி காலை பிடித்துக்கொண்டு அழுதாள்....

"அச்சோ ரதி என்னாச்சு... "என்று பதட்டத்துடன் எழ முயன்ற மீனாவை அருகில் இருந்த பெண்மணி வேண்டுதலை பாதியில் நிறுத்த கூடாது என்று சொல்ல, வலியில் அழுது கொண்டிருந்த ஆரதியை பார்த்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர்.....

கோவிலுக்கு வந்ததால் கைபேசியை எடுத்து வரவில்லை.... வீட்டிற்கு இங்கிருந்து இந்நிலையில் ஆரதியை நடக்க வைத்து அழைத்து செல்ல முடியும் என்று தோன்றவில்லை....

"அக்கா.. நான் இப்படியே கொஞ்ச நேரம் உக்காந்து இருக்கேன்.... நீங்க சுத்தி முடிச்சதும் போலாம்... "என்று அவள் வலியை மறைத்துக் கொண்டு சொல்ல,

"இல்ல ரதிம்மா.. நீ எவ்ளோ நேரம் வலியில் இருப்ப.... இரு வெளியே போய் யாராச்சும் வண்டி வச்சுருக்காங்களான்னு பார்த்துட்டு வரேன்.... "என்று சொல்லி எழ முயன்றார் மீனா....

"ஆன்ட்டி நான் வண்டி கொண்டு வந்துருக்கேன்... நான் இவங்கள உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்... நீங்க உங்க வேண்டுதலை முடிச்சுட்டு வாங்க.... "என்று அவர்கள் முன் வந்து நின்ற ஆதிரனை பார்த்தவர்,

"தம்பி நீங்க.... "

"நான் மணியக்காரர் பையனோட பிரண்டு ஆன்ட்டி... திருவிழாக்காக வந்துருக்கேன்..... "

இன்னும் அவர் சந்தேகமாய் பார்ப்பதை அறிந்தவன் வெளியே ஓடி சென்றான்.. சிறிது நேரத்தில் மணியக்காரர் மனைவியை அழைத்து வந்தான்...

"மீனா.... இந்த பையன் தெரிஞ்ச பையன் தான்.. அனுப்பி விடு... "என்று அவர் சொல்ல சரியென்று சம்மதித்தார்....

அவரும் சுரபியும் சேர்ந்து ஆரதியை வெளியில் இருந்த காரில் அமர வைத்தனர்.... தானும் வருவதாக சொன்ன சுரபியை மீனாவுடன் இருக்குமாறு அனுப்பி வைத்தாள் ஆரதி.... ஆதி காரை ஓட்ட ஆரதி பின்னால் அமர்ந்து இருந்தாள்..... அத்தனை வலியிலும் அவன் அருகாமை பதட்டம் தருவதை உணர்ந்தாள்...... இறக்கி விடப்பட்ட ஜன்னல் வழி காற்று துளைத்து எடுத்தாலும் முத்து முத்தாய் மேலண்ணத்தில் வியர்ப்பதை தடுக்க இயலவில்லை.....

இதற்கு காரணம் ஆனவனோ தனக்கு எதுவும் இல்லை என்பதை போல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..... ஏனோ அவன் பாராமுகம் உறுத்துவது போல் இருக்க தன்னையும் மீறி கண்கலங்கியவள் கண்களை துடைத்து கொண்டாள்.....

அவள் அறியாமல் அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு வந்தவன், அவள் கண்ணீரை துடைப்பது கண்டு "என்னாச்சு...... ரொம்ப வலிக்குதா.... "என்று கேட்க

அவன் மேல் இருந்த கோவத்திலும் வலியின் ஆதிக்கத்திலும் "இல்ல... குளுகுளுன்னு இருக்கு... "என்று தன்னையும் மீறி கத்தி விட்டிருந்தாள்...

அவள் சொன்ன பாவனையில் ஆதிக்கு சிரிப்பு வர லேசாய் புன்னகைத்தான்.... அதற்குள் வீடும் வந்திருக்க காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிவகாமியை அழைத்து வந்தான்.....

"என்னாச்சு தங்கம்... எப்படி விழுந்த.... பார்த்து வரக்கூடாதா.... "

"அம்மாச்சி.....நான் என்ன வேணும்னேவா போய் விழுந்தேன்... கால் வழுக்கி விட்டுருச்சு.... "

"சரி சரி கோவப்படாத தங்கம்... "என்று அவளை மெல்ல கைபிடித்து எழுப்பி விட காரை விட்டு வெளியில் வந்தவள் அதற்கு மேல் நடக்க முடியாமல் காரின் மேல் சாய்ந்து நின்றுவிட்டாள்....

"என்னால நடக்க முடில அம்மாச்சி... "என்று வலியில் கண் கலங்க கூறினாள்...

"இன்னும் கொஞ்ச தூரம் தான் தங்கம்.... தம்பி ஒரு கை பிடிங்க உள்ள கூட்டிட்டு போலாம்..... "அவன் தயங்கிய படி நிற்க,

அதைப் பார்த்தவள் "அம்மாச்சி நானே நடந்து வரேன்.... "என்று நடக்க ஆரம்பித்தவள் வலியில் நடக்க முடியாமல் அமர போனவளை கை பிடித்து தடுத்தான்....

'ஹய்யோ இதுக்கு வலியே பரவாயில்லை போலவே.... போச்சு போச்சு... கண்ணெல்லாம் இருட்டிட்டு வருது..... 'என்று மனதிற்குள் வியர்த்து கொண்டிருந்தாள்...

ஆதிரன் சிவகாமியுடன் சேர்ந்து அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தனர்..... 'ஹப்பா இவன் கிட்ட வந்தாலே மூச்சு முட்டுது.. 'என்று எண்ணி ஆசுவாசமாய் சோபாவில் கால் நீட்டி அமர்ந்தாள்... கீழே அமர்ந்து சிவகாமி அவள் காலை பிடித்து இப்படியும் அப்பிடியும் அசைக்க,

"ஐயோ அம்மாச்சி என்ன பண்ற.... "

"எங்க சுளுக்கி இருக்குனு பாக்குறேன் தங்கம்..... "

"நீ ஒன்னும் பண்ண வேண்டாம்... நான் இப்படியே படுத்து தூங்கறேன். தூங்கி எழுந்ததும் சரியா போயிரும்..... "

"இல்ல தங்கம்.... கால் வீங்கிக்கும்... "என்றவர் ஆதிரன் புறம் திரும்பி "தம்பி உள்ள மாடத்துல ஒரு எண்ணை டப்பா இருக்கும் எடுத்துட்டு வாங்க "

"இதோ போறேன் பாட்டி.... "

உள்ளே சென்றவன் அந்த பாட்டிலை எடுத்து வந்து அவரிடம் குடுத்தான்... எண்ணை பூசுவதற்காக அவள் பாவாடையை முழங்கால் வரை சுருட்ட,

"ஐயோ அம்மாச்சி என்ன பண்ற "என்று பாவாடையை சட்டென இறக்கி விட்டுவிட்டு ஆதிரனை பார்க்க , அவனோ திரும்பி நின்றிருந்தான்...

'அப்பாடி பாக்கலை.... 'என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்...

"எதுக்கு தங்கம் பாவாடையை இறக்கி விட்ட.. இப்ப எப்படி எண்ணை பூசுறது.. பாவாடை எல்லாம் ஆகிரும்.... "

"அம்மாச்சி.. ப்ளீஸ்..... "

"தங்கம் சொன்னா கேளு.. காலு இப்பவே வீங்க ஆரம்பிச்சுருச்சு.... "

அவள் சங்கடத்தை உணர்ந்தவன் "பாட்டி நீங்க பார்த்துக்குங்க.. நான் போய்ட்டு வரேன்... "

"இருங்க தம்பி.. அவ கையை கொஞ்சம் பிடிச்சுக்குங்க... சுளுக்கு எடுக்கும் போது ரொம்ப வலிக்கும்.... "

"இல்ல பாட்டி.... "

"புடி தம்பி......நேரம் ஆக ஆக வலி அதிகம் ஆகும்.. " என்று சொல்ல வேறு வழியின்றி அவள் இரு கைகளை பிடித்து கொண்டான்...

அமர்ந்திருந்தவளை நோக்கி குனிந்திருந்த அவன் முகத்தில் எந்த வித பாவமும் இல்லை... ஆனால் ஆரதியின் நிலை தான் தரையில் கிடைக்கும் மீன் சுவாசத்தை வேண்டி தவிப்பது போல் சிறு மூச்சுக்கு கூட சிரமப்பட்டு போனாள்...

பதின்பருவ ரசாயன மாற்றங்கள் முழுதும் அவன் வசம் ஆகி போனது...இவ்வளவு நேரம் அவள் பார்வையை தவிர்த்தவன் ஏதோ ஒரு உந்துதலில் அவள் கண் நோக்கி விட, அதன் மாற்றங்கள் கண்டு திகைத்தான்...

அதுவரை குனிந்து அவள் கையை பற்றிக் கொண்டிருந்தவன் கீழே மண்டியிட்டு அமர்ந்து பிடித்துக் கொண்டான்....

சிவகாமி துணியை சுருட்டும் போது, தன்னிச்சையாய் கைகளை உருவி துணியை இறக்கி விட முயற்சி செய்ய, அவள் கையை இறுக பிடித்தவன்

"சங்கடப் படாத.... நான் திரும்பி தான் உக்காந்துருக்கேன்.... "என்று சொல்ல ரசாயன மாற்றத்தையும் தாண்டி தனக்குள் அவன் செல்வதை அவளால் உணர முடிந்தது....

சிவகாமி காலை அழுத்தி நீவி விடுகையில் வலி தாங்காமல் கத்தி விட அவன் பிடியும் அதிகம் ஆகியது... ஏனோ அது தரும் உணர்வை தாங்க இயலாதவள் அவனிடம் மெதுவாக,

"ப்ளீஸ் கையை விடறீங்களா.... நிச்சயமா நான் தடுக்க மாட்டேன் "என்று சொல்ல, அவள் முகத்தில் என்ன கண்டனோ, அவள் கையை மெதுவாய் விடுவித்தான்....

வலியில் முகத்தை அழுந்த மூடிக்கொள்ள, அவள் கை இடுக்குகளின் வழி கண்ணீர் இறங்கியது... அதைக் கண்டவன் "அழாதடா.... அவ்ளோ தான் சரி ஆகிடும்.... "என்று பரிவுடன் அவள் தலையை கோத,

அவள் இதய சாரங்களில் காற்றினை போல் புகுந்து நெஞ்சம் நிறைய வியாபித்து இருந்தான் ஆதிரன்....


சிவகாமி நீவி விட்டதில் வலி மட்டுப்பட்டிருக்க லேசாய் கண்மூடி தலை சாய்ந்தாள்... அதை பார்த்த ஆதிரன்

"அச்சோ பாட்டி... இவ மயங்கிட்டா... "என்று பதட்டத்துடன் அவரிடம் சொல்ல,

"இல்லப்பா அவ தூங்கிட்டா.. இது இவ பழக்கம்... ஏதாச்சும் ரொம்ப வலி வந்தா, அந்த வலி குறைஞ்சதும் இப்படி தான் தூங்கிருவா.... நீ பயப்படாத.... சரி உன் பேரு என்ன தம்பி.... பாத்தா புதுமுகமா இருக்க... யார் வீட்டுக்காவது விசேஷத்துக்கு வந்துருக்கியா... "

"என் பேரு ஆதிரன் பாட்டி... மணியக்காரர் மகன் என்னோட பிரண்டு... அவங்க வீட்டுக்கு தான் திருவிழாவுக்கு வந்துருக்கேன்.... "

"ஓ.... கார்த்தி கூட படிக்குறாப்புலயா... சேரி தம்பி... இருங்க காபி கொண்டு வரேன்.... "

"இல்ல பாட்டி... காபி டீ லாம் குடிக்கறது இல்ல.... நான் போய்ட்டு வரேன் பாட்டி... "

"இருப்பா.. வீட்டுக்கு வந்த புள்ளைய சாப்பிடாம எப்படி அனுப்பறது... இரு கம்மங்கூழ் இருக்கு கொண்டு வரேன்..."என்றவர் அவன் பதிலை எதிர் பாராமல் உள்ளே சென்று விட்டார்....

அவர் சென்றதும் அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.... சோபாவில் அமர்ந்தவாறே உறங்கி கொண்டிருந்த ஆரதியை பார்த்தான்....

"ஏனோ உன் மனசை என்னையும் அறியாமல் சலன படுத்தறேன்னு நினைக்கிறன்.... இதை தொடர விடவும் கூடாது..... "என்று மனதில் நினைத்துக் கொண்டான்.....

சிவகாமி கூழ் கொண்டு வர, அதை குடித்து விட்டு அவரிடம் விடை பெற்று வெளியில் வந்தான்..... காரில் ஏறி அதை கிளப்பியவன் கண்கள் கண்ணாடி வழியாக பின்னிருக்கையை நோக்கியது... ஏனோ அவள் நினைவுகள் அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தது... அதை காதல் என்று எண்ணவில்லை... ஒரு வகை ஈர்ப்பு என்றே எண்ணினான்...

ஆனால் அவளிடம் தன் கொள்கைகள் தடம் மாறி போவதை தடுக்க இயலவில்லை... 'அவள் இன்னும் சிறு பெண்.... என்மேல் உள்ள ஈர்ப்பால் தடுமாறுகிறாள்... இதை பேசி தான் சரி செய்ய வேண்டும் என்று எண்ணினான்...


இயற்கை மாற்றங்களை
தாண்டி
மெல்லிய காதல் பூத்து விட்டது
அதை
முகிழ்ந்து மணம் வீச காத்திருக்கும்
அவள் காதலே
அவனுக்கு உணர்த்தட்டுமே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN