நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

18.என் உலகின் கருவே...

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
18. என் உலகின் கருவேமைவிழியும் கதிரும் தாங்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என முடிவெடுத்தனர். அருகிலிருந்த பூங்காவிற்கு சென்று இருவரும் கை கோர்த்தபடி ஊஞ்சலாடினர். உணவகம் சென்று பிடித்ததை உண்டனர்.

பிற்பகலில் திரையரங்கம் ஒன்றிற்குள் புகுந்தனர். கூட்டம் நிரம்பி வழிந்த திரையரங்கில் இருவரும் பின் வரிசையில் அமர்ந்தனர். மைவிழி அங்கு ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தில் தன்னை தொலைத்து விட்டாள்.
ஏற்கனவே பார்த்து விட்டு திரைப்படம் என்பதால் கதிருக்கு திரைப்படத்தில் மனம் நிற்கவில்லை. அதனால் தன் அருகிலிருந்த மைவிழியை ஏதேச்சையாக பார்த்தவன் ஆர்வத்தோடு திரையை பார்த்திருந்த அவளது கண்களில் தன் எண்ணத்தை தொலைத்து விட்டான். அங்கும் இங்குமாக திரையிலிருந்த கதாப்பாத்திரங்களை விரட்டிக் கொண்டிருந்தது அவளது விழிகள். அவளது விழிகளின் ஒவ்வொரு உருட்டலுக்கும் தன் இதயம் பூக்களால் நிறைந்த பள்ளத்தில் உருண்டோடுவதை போல உணர்ந்தான் கதிர்.

நேரம் செல்வதையே மறந்து விட்டான் கதிர். அவளருகே இருக்கும் போது அவனது உலகத்தின் செயல்பாடு நின்று விடுவதை உணர்ந்தான். ஏதோ ஓர் சுகமான அந்தகாரம் தன்னை சுற்றியுள்ளதாக உணர்ந்தான்.

கதிர் அரை இருளில் மைவிழியை ரசித்துக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ உற்று பார்ப்பதை போல ஏதோ எண்ணம் தோன்றவும் திரும்பி கூட்டத்தை பார்த்தான். அவர்களுக்கு நான்கு வரிசை தள்ளி கீழே அமர்ந்திருந்த ஒருவன் மைவிழியையும் கதிரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கதிர் அவனை சந்தேகமாக பார்த்தான். ஆனால் அவன் தனது பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை.

கதிர் மைவிழியின் தோளில் தட்டினான். என்னவெனும் பார்வையோடு திரும்பியவளிடம் தனது சுட்டு விரலை கீழிருந்த இருக்கையில் அமர்ந்திருந்வனை நோக்கி காட்டினாள்.

"அவன் நம்மளையே ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கான்.. அவன் பல்லை உடைச்சிடட்டா..?" என அவளது காதோரம் அவன் கேட்கவும் மைவிழி அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள். பிரசாத் அமர்ந்திருந்தான்.
மைவிழிக்கு ஆத்திரமாக இருந்தது. ஆனால் பொது இடத்தில் அவனிடம் தனது கோபத்தை காட்டுவது சரி வராது என்பதை அறிந்தாள்.

கதிரின் கையை பற்றினாள். "வேண்டாம் விடு.. அவனை நீ பார்க்காத.." என்றவள் தனது பார்வையை திரையை நோக்கி திருப்பிக் கொண்டாள்.

கதிர் அவளை ஆச்சரியமாக பார்த்தான். தான் அவனை கை காட்டியவுடன் அவனை பார்த்த அவளது கண்களில் கோபமும் சோகமும் ஒரு சேர வந்ததை அறிந்தவனுக்கு அவளுக்கும் அவனுக்கும் ஏதோ ஓர் தொடர்பிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவன் யாராக இருப்பான் என்று கதிர் யோசனை செய்தான்.
அவனை அவர்களது திருமண நாளில் அவன் பார்க்கவில்லை. அதனால் அவன் மைவிழியின் சொந்தகாரனாக இருக்க வாய்ப்பில்லை என்ற அளவிற்கு அவனுக்கு புரிந்தது. ஆனால் அவன் யாராக இருப்பான்..? காதலிக்கவில்லை என பொய் சொல்லிவிட்டாளா..? என குழம்பிபோனான்.

இடைவேளை நேரம் வந்தது. "உனக்கு ஏதாவது வேணுமா..?" என கேட்டான் கதிர்.

"தலை வலிக்கற மாதிரி இருக்கு.. காஃபி வேணும்.. நானும் கூட வரேன்.." என்றவள் அவனோடு சேர்ந்து நடந்தாள்.
அவளின் தலைவலி அந்த மர்ம மனிதனோடு சம்பந்தபட்டிருப்பதை கதிர் புரிந்து கொண்டான்.

அவள் ஒருகையால் தலையை காபி பிடித்தபடியே காபியை குடித்தாள். அந்த மர்ம மனிதன் தூரமாய் இருந்தபடி இவர்களை பார்ப்பதை கதிரும் பார்த்தான். கதிர் பார்ப்பது தெரிந்ததும் கூட அவன் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.

தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொண்டு இருவரும் திரையரங்கத்திற்குள் வந்து அமர்ந்தனர். திரையில் விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த மர்ம மனிதன் தனது இருக்கையில் அமர்ந்து மீண்டும் தங்களை பார்ப்பதை கண்டு கதிருக்கு கோபம் தலைக்கேறியது.

மைவிழிக்கு ஏனோ அழுகை வரும் போல இருந்தது. அழுகையை அடக்கியதில் தொண்டை எரிந்தது.

கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீரை கடகடவென குடித்தாள். அவளது செய்கையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

"அவன் உன் லவ்வரா..?"

மைவிழிக்கு புரை ஏறியது.. இரும்பியதில் கண்களில் கண்ணீர் துளிகள் சிதறியது. கதிரை குழப்பமாக பார்த்தாள்.

"அவன் உன் லவ்வரா..?" என்றான் கதிர் பிரசாத்தை கை காட்டி. அவனுக்கு ஏன் கோபம் வந்தது என்பதை அவனே அறியவில்லை.

மைவிழி பிரசாத்தை ஒரு நொடி பார்த்து விட்டு இவனை பார்த்தாள். "இல்ல.." என்றாள் ஒற்றை வார்த்தையாக. அவனிடம் அடுத்து ஏதும் பேசாமல் திரையை பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனாலும் கதிருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. அடிக்கடி பிரசாத்தை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். மைவிழியும் அவனது அலைபாயும் கண்களை அவ்வப்போது பார்த்தாள். சற்று நேரம் பொறுத்து பார்த்தவள் அவனது கையை பற்றினாள். தனது கை விரல்களை அவனது கை விரல்கள் இடையே பின்னிக் கொண்டாள். "அவனை பார்க்காதே.. நீ சந்தேகப்பட்டு பார்க்கற அளவுக்கு அவன் ஒன்னும் அவ்வளவு முக்கியமானவன் இல்ல.." என்றவள் திரையை நோக்கி தன் பார்வையை திருப்பினாள். 'அவன்கிட்ட இதை ஏன் நான் சொல்றேன்..? இவன் என்னை தப்பா நினைக்க கூடாதுன்னு நான் ஏன் இவ்வளவு கவனமா இருக்கேன்..?'
கதிர் அவளது கையோடு இணைந்திருந்த தனது கையை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கு அவளோடு அப்படி விரல் கோர்த்து கொள்வது பிடித்திருந்தது. அவனுக்கு அவள் மீது இருந்த ஈர்ப்பு சிறு ஆசையாக மாறிக் கொண்டிருந்தது. பிரசாத்தை மறந்து மீண்டும் அவளது முகத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்திருந்தான்.

திரைப்படம் முடிந்ததும் மைவிழி எழுந்து நின்றாள். அவளது கையை பிடித்தபடியே கதிரும் எழுந்தான்.
அங்கிருந்த அனைவரும் வெளியேறும் வரை காத்திருந்து பிறகு இருவரும் வெளியேறினர்.

திரையரங்க வாயிலில் காத்திருந்தான் பிரசாத். அவனை கண்டதும் வழியில் நின்று விட்டாள் மைவிழி. "நீ முன்னாடி போ கதிர்.. நான் பின்னாடி வரேன்.." என்றவள் அவனது கையிலிருந்து தனது கையை பிரித்து கொண்டாள். அவள் பிரசாத்தை நோக்கி சென்றாள்.

கதிருக்கு ஆத்திரம் வந்தது. எவனோ ஒருவனுக்காக என்னை விட்டு செல்கிறாளே என எண்ணி கோபப்பட்டான். மைவிழி நெருங்கி வருவதை கண்டதும் பிரசாத்தின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. அதை காண்கையில் கதிருக்கு ரத்தம் கொதித்தது.

மைவிழி கோபத்தில் கை விரல்களை மடக்கியபடி அவனை நெருங்கினாள்.‌

"உனக்கு என்ன வேணும்..? என்னை தேடி வராதன்னு அன்னைக்கே சொன்னேன் இல்ல..? நான் அரைகுறை நிம்மதியா இருப்பது கூட உனக்கு பிடிக்கலையா..? நான் செத்து போனால்தான் உனக்கு நிம்மதியா.?"
பிரசாத் முகம் வாடிபோனது. அவளை தயக்கமாக பார்த்தான். "அந்த பையன் உனக்கு பொருத்தமா இருக்கான்.." மைவிழி அவன் அப்படி சொன்னதும் கதிரை திரும்பி பார்த்தாள். அவன் இவள் பார்ப்பது கண்டு முகத்தை வேறு திசைக்கு திருப்பினான்.

மைவிழி தன் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டவில்லை. கதிரை பார்த்தபடியே "இன்னும் அஞ்சி மாசத்துல பிரியபோறோம்.. இரண்டு பேருக்குமே இது பிடிக்காத கல்யாணம்தான்.." என்றாள்.

பிரசாத் அவளது கையை பற்றினான். "மைவிழி என் அண்ணன் செஞ்ச தப்புக்கு எல்லா ஆண்களையும் தப்பா பார்க்காத.. இவன் உனக்கு பொருத்தமா இருக்கான்.. ஆண்கள் மீது நீ வச்சிருக்கற தவறான கண்ணோட்டதால் இவனை நீ கை விட்டுடாத.."

மைவிழி தனது கையை பின்னால் இழுத்துக் கொண்டாள். "எனக்கு ஆண்கள் மேல தப்பான கண்ணோட்டம் இல்ல.. ஆனா எனக்கு இந்த நேசம் பாசம் காதல் இது மேல இருக்கற வலுவான வெறுப்பாலதான் இவனை நான் பிரியபோறேன்.. நீ தேவையில்லாம என்னை தேடி வராத.. உன்னை பார்க்கும் போதெல்லாம் என் மனசு ரொம்ப காயப்படுது.. உனக்கு ஏன் இது புரியல..? இப்போ கொஞ்ச நாளாதான் நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிருக்கேன்.. நீ அதையும் கெடுத்துடாத.."

பிரசாத் தலை குனிந்து நின்றான். "ஸாரி மைவிழி.. இனிமே உன்னை தேடி வரமாட்டேன்.. இன்னைக்கு உனக்கு பிறந்தநாளாச்சே.." என்றவன் தன் சட்டை பாக்கெட்டிலிருந்த ஆரஞ்சு மிட்டாய்களை அவளது கையில் தந்தான்.

"ஹேப்பி பர்த்டே.." என்றவன் அவள் மறு வார்த்தை பேசும் முன் அங்கிருந்து சென்று விட்டான்.

மைவிழி தன் கையிலிருந்த மிட்டாய்களை பார்த்தாள். தூரத்தில் செல்பவனையும் பார்த்தாள். அவளுக்கு இதயம் இரும்பாக கனத்தது. அவள் சிலையாக அவனை பார்த்து நிற்க, கதிர் அவள் அருகே வந்து நின்றான்.

"போகலாமா..?" என்றான்.

மைவிழி ஆமெனும் விதமாக தலையசைத்தாள். மைவிழி தன் கையிலிருந்த மிட்டாய்களை தன் கைப்பையில் போட்டுக் கொண்டாள்.

இருவரும் சேர்ந்து நடந்தனர். ஆனால் இருவரும் இரு வேறு உலகில் இருந்தனர். இருவரது புறங்கையும் அவ்வப்போது மோதிக் கொண்டது. ஆனால் இருவருமே அதை கண்டுக் கொள்ளவில்லை.

மைவிழிக்கு சோகம் குப்பென தாக்கியிருந்தது. ஒரு காலத்தில் உயிர் நண்பன் பிரசாத். ஆனால் இன்று அவனை சந்தோசத்தோடு பார்க்க முடியாத அளவிற்கு மாற்றி விட்டது வாழ்க்கை.

மைவிழியின் சோக முகம் கண்டு கதிருக்கும் ஏனோ சோகம் தாக்கியது. அவளது உணர்வுகளை தனது மனமும் பிரதிபிம்பமாக காட்டுவதை புரிந்து கொண்டான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் பூச்செடிகள் விற்றுக் கொண்டிருந்தனர். அதை கண்டதும் கதிர் மைவிழியின் கை பிடித்து நிறுத்தினான்.‌ "பூச்செடி வாங்கலாமா..?" என்றான்.‌

தூரத்தில் அழகழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூச்செடிகளை கண்டதும் மைவிழியின் முகம் சந்தோசத்தில் பளிச்சிட்டது. இவ்வளவு நேரம் அவளை சோகத்தில் மூழ்கடித்த விஷயங்களையே அவள் மறந்து விட்டாள். தான் இருப்பது பொது இடம் என்பதையும் மறந்து அந்த பூச்செடி கூட்டத்தை நோக்கி ஓடினாள்.

கதிரும் சிரித்தபடியே அவளை பின்தொடர்ந்தான்.

ரோஜா செடிகள் அழகாக இருந்தன. அரளி, செம்பருத்தி, மல்லிகை, முல்லை என அந்த சிறு இடமும் நந்தவனம் போல் காட்சியளித்தது.

"என்ன வாங்கலாம்..?" என்றாள் கதிரிடம். அவன் அவளையும் பூச்செடிகளையும் பார்த்தான். பூக்களுக்கும் அவளது புன்சிரிப்பு விளையாடும் முகத்திற்கும் இடையே அவனால் வேறுபாட்டை கண்டறிய முடியவில்லை.

"உனக்கு என்ன வேண்டுமோ அதையே வாங்கிக்க.. பணம் மட்டும் நான் தரேன்.. செலக்சனை பர்த்டே கேர்ளே பார்த்துக்க.."

"பேச்சு மாற கூடாது.." விரல் நீட்டி செல்ல சிரிப்போடு சிணுங்கினாள். அவளது குரலிலிருந்த சிணுங்கல் அவனது இதய துடிப்பை இரு நொடிகள் நிறுத்தி விட்டது. தான் அறியாமலேயே அவள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக மயக்கி கொண்டிருந்தாள்.

"என்ன வேண்டுமோ வாங்கிக்க.." என்று உறுதியளித்தான் கதிர்.

"அண்ணா.. இங்கே இருக்கற எல்லா வகை செடியிலிருந்தும் ஒவ்வொரு செடிகளை எனக்கு டோர் டெலிவரி பண்ணிடுங்க.."

கடைக்காரனும் கதிரும் சந்தேகத்தோடு அவளை ஒருசேர பார்த்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top