என் நெஞ்சுநேர்பவளே -5

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
5


வண்ண மயில் ஒன்று அந்த காலை நேரத்தில் தன் படர்ந்த தோகை தனை விரித்து அங்கும் இங்கும் அசைந்து ஆடிக்கொண்டிருந்ததை பார்த்தவாறே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஆதிரன்.... அது தோகையை அசைக்கும் போது ஆரதி தன் உடையை பிடித்து அங்கும் இங்கும் அசைப்பது போலே தோன்றியது....

அவள் எண்ணத்தில் தன் மனதில் தோன்றிய பரவச எண்ணத்தில் இதழில் குறுநகை படர அந்த மயிலை ரசித்துக் கொண்டிருந்தான்.... அவன் ரசனைக்கு கொட்டு வைத்தது அவன் மனசாட்சி... 'வீண் எண்ணங்களை மனசுல வளர்த்துக்காதே... இது காதலிக்க வேண்டிய வயசு இல்ல.. முதலில் உன் படிப்பு பிறகு நல்ல வேலை அதுக்கு பிறகு தான் இந்த எண்ணம் எல்லாம் வரனும்... பருவ வயதில் வரும் ஆசைகள் எண்ணங்கள் குறுகிய காலம் தான் இருக்கும் '

இது போன்ற சில கொள்கைகள் அவன் எண்ணத்தை வளர விடாமல் தடுத்தது....

இங்கோ ஆரதியோ நேர்மாறாய் அவன் சிந்தனையிலேயே இருந்தாள்... அவளுக்கு அவனை பிடித்துள்ளது... அவன்தான் அவள் எதிர்காலம் என்று முடிவை எடுத்திருந்தாள்... மனம் முழுதும் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது...

திருவிழா முடிந்திருந்தது... ஆரதியின் காலும் சரியாகி இருந்தது....

அனைவரும் வெளியில் இருந்த வேப்ப மரத்தடியில் கட்டில் போட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்...

"அப்புறம் மாமா நாங்க இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு கிளம்பறோம்... நாளைக்கு டூட்டிக்கு வர சொல்லி இருக்காங்க... "

"என்ன மாப்பிளை அஞ்சு நாளு லீவுன்னு சொன்னீங்க.. இன்னும் ரெண்டு நாள் இருக்கே... "

"ஒருத்தருக்கு ஒடம்பு சரியில்லைன்னு என்னை வர சொல்லிட்டாங்க மாமா... அதான் கிளம்ப வேண்டியதா போச்சி... "

"அப்போ மீனா பாப்பா எல்லாம் ஒரு வாரம் இருந்துட்டு வரட்டுமே.... "

"அதுக்கென்ன மாமா இருந்துட்டு வரட்டும்... "

"இல்லப்பா.. நான் இல்லைனா இவருக்கு ரொம்ப சிரமம்... சுபியும் ரதியும் இருக்கட்டும்.. நான் இவரோடவே கிளம்பறேன்.. இன்னொரு நாள் லீவு கிடைக்கறப்ப வரேன்..... "

"அதுவும் சரி தான்.... பாப்பு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க தானே... "

"ஆமாம் ஆமாம்.... நீங்க வாங்கி வச்சுருக்க பஞ்சுக்கு வேலை வைக்காம இங்க இருந்து போக மாட்டேன்... ஒரு மாசத்துக்கு இங்கதான்.... "என்று சொல்லி முத்துசாமியின் கழுத்தை கட்டிக்கொண்டாள் ஆரதி...

"அப்புச்சி எனக்கு அடுத்த வாரத்துல இருந்து காலேஜ் இருக்கு... நான் அப்பா கூடயே ஊருக்கு போறேனே... இல்லைனா எனக்கோசரம் அப்பா திரும்ப இங்க வந்து கூட்டிட்டு போவணும்.... "

"எல்லாம் பெரிய மனுஷி ஆகிடீங்க..இந்த கிழவன் கிழவி கூடலாம் இருப்பீங்களா.. "என்று சிவகாமி என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவர் கன்னத்தில் செல்லமாக குத்திய ஆரதி,

"அதென்ன என்னையும் கூட்டு சேக்கற.. நான் தான் ஒரு மாசம் இருக்கேனு சொல்றேனே... உன் ரோஷத்தை எல்லாம் அவ கிட்ட காட்டு "

"அம்மாச்சி தெரியாம சொல்லிட்டேன்.. இனி சொல்லல...போறவள்க போவட்டும் என் தங்கம் இருக்கியே அது போதும்... "

"ஸ்ஸ்ஸ்ஸ்... அம்மாச்சி.. ஐஸ் வச்சது போதும்... அங்க ஒருத்திய பாரு விட்டா அழுதுருவா போல... "என்று சுபியை காட்ட,

"போறவங்க கிட்டலாம் நான் பேசுறதா இல்ல.. "

"அம்மாச்சி எனக்கு மட்டும் இருக்க ஆசை இல்லையா.. காலேஜ் இருக்கு நான் என்ன பண்ணட்டும்... "என்று கண்ணை கசக்க, அவ்வளவு தான் அவரின் கோவம் எல்லாம் பேத்தியின் கண்ணீரில் கரைந்து விட்டது...

"அட சுபிகுட்டி.. அம்மாச்சி சும்மா வம்பிழுத்தேன்... எனக்கு தெரியாத சுபிக்குட்டிக்கு இங்க இருக்க எவ்ளோ புடிக்கும்னு... "என்று அவள் கண்ணை துடைத்து விட்டார்...

"அப்பிடியே மடில தூக்கி வச்சி தாலாட்டு பாடு... ஓ பாப்பா லாலி.... ஆஆஆஆ.... "

"ஹெ ஹே.. போடி..... "

"போடி அழுமூஞ்சி... "

"போடி அரைவேக்காடு.. "

"நீதான் அரைகுறையா அவிக்க வச்ச சுறா புட்டு... "

"ஏய் சுறா புட்டுன்னு சொல்லதடி எரும "

"அப்பிடி தான் சொல்லுவே... சுறா புட்டு...."என்று அழுத்தி சொல்ல, கையில் கிடைத்த குச்சியை எடுத்துக்கொண்டு
அடிக்க துரத்தினாள் சுரபி....

"ரெண்டு பேரும் ஆளு தான் வளந்துருக்காளுக..... இன்னும் சின்ன பிள்ளைகளாட்ட எப்ப பார்த்தாலும் அடிச்சுகிட்டு திரியுதுக.... "

"விடும்மா.... இந்த வயசு தான் எந்த கஷ்டமும் இல்லாம சந்தோசமா இருக்க முடியும்... வளர வளர அவங்களுக்கு அவங்க குடும்பம் குழந்தைங்கன்னு நிறைய பொறுப்பும் கடமையும் வந்துரும்... நம்ம கிட்ட இருக்க வரைக்கும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சுதந்திரமா சந்தோசமா இருக்கட்டுமே... "என்றார் முத்துசாமி

"சரியா சொன்னீங்க மாமா... "என்று திருவும் ஆமோதித்தார்...

"எல்லாம் இப்படி செல்லம் குடுத்தா எப்படி...வீட்டு வேலை எதுவுமே இன்னும் செய்ய தெரிய மாட்டிங்குது... வீட்ல ஒரு துரும்பை கூட நகத்தி வைக்கறது இல்லை.. நாளபின்ன எல்லாரும் என்னை தான் பேசுவாங்க.. எப்படி புள்ள வளத்து வச்சுருக்கா பாருங்கன்னு... "
என்று மீனா ஆதங்கப்பட,

"நீயும் இப்படி தான மீனு இருந்த.. இப்ப பாரு எவ்ளோ பொறுப்பா குடும்பத்தை கவனிச்சுக்கற... சமையல் கூட கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடி தான் கத்துகிட்ட.. இப்ப எனக்கும் மேல நீ தான் அருமையா சமைக்கிற... "என்று சிவகாமி பெருமையாய் சொன்னார்...

என்னதான் அது உண்மை என்று மனம் ஏற்று கொண்டாலும் ஒரு தாயாய் தன் மகள்களை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது...

மாலை நேரம் திரு மீனா சுபி மூவரும் கிளம்ப தயாராகினர்... மீனா தங்கள் அறையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்... அவரிடம் வந்த திரு "மீனு நீயும் சுபியும் ரெண்டு நாள் வேணுனா இருந்துட்டு வாங்களேன்... நான் எப்படியாச்சும் சமாளிச்சுக்கறேன்.... "

"யாரு நீங்க தானே.. எங்களை விட்டு ஒரு நாள் கூட உங்களால் இருக்க முடியாது.. சரியா சாப்பிட மாட்டிங்க.. தூங்க மாட்டீங்க... உங்களை தனியா அனுப்பிட்டு எனக்கும் இங்க அல்லாடும்... "

என்ற மீனாவின் கழுத்தை சுற்றி கைகளை போட்டவர் "ஹ்ம்ம்.. அவ்ளோ பாசம்.. "

"ஆமாம்... இருக்காதா பின்ன.... இவ்ளோ பாசத்தை ஒருத்தர் கொட்டும் போதும் அதுக்கு ஈடா இல்லைனாலும் சரி பாதியாவது எங்களுக்கு காட்ட தெரியாத "என்று திருவின் கண்களை பார்த்து கூறினர் மீனா...

"சரி பாதியா... ஹ்ம்ம் ரொம்ப தன்னடக்கம் தான்... என் மீனுக்குட்டிக்கு என் மேல எவ்வளவு லவ்வுன்னு எனக்கு தான் தெரியுமே... அம்மா அப்பா இல்லாத அனாதை எனக்காக உங்க வீட்ல போராடி ஒரு வருஷம் யார் கூடையும் பேசாம இருந்து சம்மதம் வாங்கி இருக்க... கல்யாணம் நடந்து இத்தனை வருசத்துல என்னை எங்கயும் எப்பவும் விட்டு குடுத்ததில்ல... எனக்கு அம்மாவா அப்பாவா எல்லாமுமா இருக்குற... இதுக்கும் மேல ஒருத்தனுக்கு என்ன வேணும் சொல்லு.. "

அவர் பேச்சில் நெகிழ்ந்த மீனா திருவின் மார்பில் சாய்ந்து கொண்டு "நீங்க மட்டும் என்னவாம், காதலிச்சப்ப இருந்த அன்ப நாளுக்கு நாள் அதிகம் ஆச்சே தவிர எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் குறையவே இல்லையே... இதோ இத்தன வருஷம் ஆச்சு இன்னும் என் கை பிடிக்காம உங்களால் தூங்க முடியாது... "

"அதென்னவோ உண்மை தான்....குழந்தை எப்படி அவங்க அம்மா துணிய பிடிச்சுட்டே தூங்குமோ அது மாதிரி தான்... "

"போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் பண்ணி இருப்பேன் போல... அதான் இப்படி ஒரு புருஷனை கடவுள் எனக்கு குடுத்துருக்கார்.... "

"ஹப்பா இந்த டயலாக் கேட்டு கேட்டு எங்க காதுல ரத்தமே வந்துரும் போலயே "என்று அவர்களை கிண்டல் செய்து கொண்டே வந்தனர் சுபியும் ஆரதியும்...

"ஹேய் வாலுங்களா அடி வாங்க போறீங்க... சரி சுபி உன் திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டியா... "

"எல்லாம் எடுத்து வச்சுட்டேன்மா .."

"சரி வாங்க போலாம் "என்று கிளம்பிய மீனாவை தடுத்த ஆரதி....

"அம்மா இரு உன் கன்னத்துல ஏதோ இருக்கு பாரு... "என்று சொல்ல அவரும்
கண்ணாடியை பார்த்து விட்டு "ஒன்னுமில்லையேடி.. "

"இருக்கே... இதோ வெக்கத்துல ரெண்டு கன்னமும் செவந்து கிடக்கே..."என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிவிட

"அடி கழுதை.... வாய் வர வர ஓவரா போயிருச்சு... எல்லாம் நீங்க குடுக்கற செல்லம் தான்... "என்று விட்டு வெளியே சென்றார்... திருவும் சுபியும் வாய் விட்டு சிரித்தனர்....


சிவகாமி "அம்மாடி எல்லாம் எடுத்துக்கிட்டயா....."

"எடுத்துட்டேன் ம்மா... நீங்களும் அப்பாவும் உடம்ப பாத்துக்குங்க.. ரதி சும்மா ஊரு சுத்திட்டு இருக்காதா.. அம்மாச்சிக்கு கூட மாட ஒத்தாசை பண்ணு... தோட்டத்துல அப்புச்சி கூட பூப்பறிச்சு போடு... அதோட பத்து மணி வரைக்கும் இழுத்து போத்தி தூங்கிட்டு இருக்காத..நேரமே எந்திரிச்சி பழகு.... "

"சரி சரிம்மா... நீயும் அப்பா அக்காவை ரொம்ப தொல்லை பண்ணாம சமத்தா இரு.. அதிகம் சீரியல் பார்க்காத.. என்ன சரியா.... "என்றவளின் காதை பிடித்து

"வாயாடி...."என்றவர், " சரி பாத்து இரு தங்கம்... அம்மாச்சி அப்புச்சிய பாத்துக்கோ... "என்று அவள் கன்னம் தடவி சொல்ல,

"நான் பாத்துக்கறேன் ம்மா.. நீயும் நேர நேரத்துக்கு சாப்பிடு... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் "என்று சொல்லி கட்டிக் கொண்டாள்...

"சரி கிளம்பலாம் இருட்டாகுது... போய்ட்டு வரோம் மாமா அத்தை... ரதிம்மா சமத்தா இரு.. "

"சரிப்பா... "என்றவள் சுரபியிடம் "ஓய் சுறாப்புட்டு.. ஐ மிஸ் யூ.."

"நானும் தாண்டி.... லீவு கெடச்சா ஓடி வந்துறேன்.... "என்று மனமே இல்லாமல் கிளம்பி சென்றனர்....

அவர்கள் சென்றதும் முத்துசாமி "நான் ஒரு எட்டு மணியக்காரர் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.... "

அவர் மணியக்காரர் என்று சொன்னதும் ஆரதியின் மனதில் மணி அடித்தது... உடனே "அப்புச்சி நானும் வரேன்... "

"இந்நேரத்துல அங்க எதுக்கு தங்கம்.... "

"வரட்டும்ங்க.. நானும் சுந்தரிய பாக்கணும்.. நேத்து ஏதோ சுளுக்குன்னு சொன்னா.. வந்து எண்ணெய் நீவி விட்டுட்டு வரேன்... "

"சரி வாங்க வெரசா போய்ட்டு வரலாம்... "

"அப்புச்சி இருங்க வரேன்.. "என்று உள்ளே ஓடி வந்தவள் தான் போட்டிருந்த பாவாடை சட்டை மேல் ஒரு துப்பட்டாவை கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டு கண்ணாடியை பார்த்து கலைந்து இருந்த தலையை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள்....

வீட்டை பூட்டிக் கொண்டு புறப்பட்டனர்.... அவர்கள் வீடு வந்ததும் இதுவரை இருந்த குதூகலம் மாறி லேசாய் படபடப்பு தொற்றிக் கொண்டது.. நடையில் சிறு தயக்கம் வந்தது.... இருந்தாலும் அவனை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆர்வமாக உள்ளே நுழைந்தாள்....

அவர்களை வரவேற்று அமர வைத்தார் மணியக்காரர்.... முத்துசாமி அவருடன் பேசிக்கொண்டே வெளியே சென்றுவிட அவர் மனைவிக்கு சிவகாமி சுழுக்குக்கு எண்ணெய் பூசி விட்டார்.... ஆரதியின் கண்கள் ஆதிரனை தேடி அலைந்தது.... வீட்டில் அவர்களை தவிர வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை..

'எங்க போனாங்க... ப்ச் ஆசையா பாக்க வந்தா ஆளையே காணோம்.... யார் கிட்டயும் கேட்கவும் முடியாது.... என்ன பண்றது... '

அதற்கு விடையாய் சிவகாமியே ஆரம்பித்தார்.... "எங்க சுந்தரி கார்த்தியை காணோம்.... "

"அவனும் ஆதியும் நம்ம கோவிலுக்கு முன்னாடி இருக்க வீதில கிரிக்கெட் வெளையாடுறானுவ... காலைல போன ராத்திரி சாப்பிடற வரைக்கும் பொடுசுகளோட சேர்ந்து ஒரே கொட்டம் தான்... என்ன பசங்களோ... "என்ற பதிலில் அவள் வயிற்றில் பாலை வார்த்தார்...

"வயசு பசங்க அப்பிடி தான் சுந்தரி இருப்பாங்க.... எல்லாம் படிப்பு முடியற வரைக்கும் தான் பொறவு வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கனும்..... "

"அதுவும் சரிதான் அத்தை... "

சிறிது நேரத்தில் முத்துசாமியும் வந்துவிட மூவரும் அங்கிருந்து கிளம்பினார்... அவனை காண முடியாமல் ஆரதி தான் சோர்ந்து போனாள்...

நாளைக்கு கோவிலுக்கு போயே ஆகணும் என்று முடிவு செய்தாள்...

வெற்றிடமாய் இருந்து மனது
உன் நினைவில் நிறைகுடமாய்
தளும்பும் காதலில்
சுற்றும் முற்றும் நினைவு மறந்து
மூழ்கி போகுமே
உன் மீது கொண்ட நேசத்தில்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN