நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 19

திருமணம் முடித்து அதை விட முக்கியமாக மூன்று மாதங்கள் குடும்பமே நடத்திவிட்டு வந்த மகேஷையும் சக்தியையும் முத்து அனல் கக்கும் கண்களோடு பார்த்தார்.

"உன்னை உயிரோடு வீட்ல விட மாட்டேன்டா.." என்று கர்ஜித்தவாறு அவர் அருகிலிருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் மகேஷை நெருங்கும் முன் அவரது சொந்தக்காரர்கள் அவரை பிடித்து நிறுத்தினர்.

"என்னயா நீ.. சுத்த மூளை கெட்டவனா இருக்க.. அவ வேஷம் போட்டு இழுத்துட்டு போனதுக்கு நம்ப பிள்ளையை வெட்டுறதா..?"

"அந்த புள்ளையோட சாதி புத்தி அப்படிப்பா.."

"மூன்று மாசமா அப்பனை கூட தனியா விட்டுட்டு நம்ம பையன் கூட இருந்திருக்கான்னா இதுலயே தெரியல.. இவ எப்படிப்பட்டவன்னு..?"

சக்திக்கு உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் நடுங்கியது. மகேஷ் தன்னை இப்படி ஏமாற்றி விட்டானே என்ற கோபம் இருந்தாலும் அவன் இப்படி யோசிக்கும் அளவிற்கு காதலித்துள்ளானே என்ற சிறு சந்தோசமும் அவள் மனதுக்குள் இருந்தது.

முத்து ஒரு புறம் வெட்டுவேன் குத்துவேன் என துள்ளினார். சொந்த பந்தங்கள் ஒரு பக்கம் சலங்கை கட்டி ஆடியது. ஒரு மூலையில் பொன்னி கண்ணீர் வடித்தாள். மகேஷ் சக்தியின் பிடித்த கையை விடாமல் நின்றான்.

சண்டையில் பங்கெடுக்க பலர் சமாதானம் செய்ய சிலர் என அங்கே கூட்டம் கூடியது. சக்தியின் அப்பாவும் அங்கு வந்து சேர்ந்தார். அவரோடு அவர்களின் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் என பெயர் எடுத்த சிலரும் வந்து சேர்ந்தனர்.

"நம்ம பொண்ணை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணியிருக்கான்... அவனை சும்மாவே விட கூடாது.. அவன் கையை காலை உடைச்சி உயிரோடு எரிக்கணும்.." சக்தியின் சமுதாய கூட்டத்தின் தலைவர் சொன்னார். சக்தி பயத்தோடு தன் கையோடு பிணைந்திருந்த மகேஷின் கையை அழுத்தமாக பற்றினாள்.

நொடி நேரத்தில் இரு கூட்டத்துக்கும் இடையில் சண்டை உண்டானது. சக்தி பொன்னியின் கண்ணீரையும் தனது தந்தையின் பரிதாப நிலையும் கண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.

"எங்களுக்காக யாரும் சண்டை போடாதிங்க.. நாங்க பிரிஞ்சிடுறோம்.." சக்தி சொன்னதை கேட்டு மகேஷிற்கு திடுக்கென ஆனது.

"சக்தி..." பேச ஆரம்பித்த மகேஷின் கையை விட்டுவிட்டு முன்னால் வந்து நின்றாள்.

"நாங்க பிரிஞ்சிடுறோம்.. என்னைக்கு நீங்க என்னை மனசார மருமகளா ஏத்துக்க நினைக்கறிங்களோ அன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு வரேன்.. அது வரைக்கும் எனக்கும் உங்க மகனுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல.." என்ற சக்தியின் கையை பற்றி தன் புறம் திரும்பினான் மகேஷ்.

"நீ என்ன சொல்ற..? நீ என்னை விட்டுட்டு போனா நான் எப்படி வாழ்வேன் சக்தி..?"

மகேஷை முறைத்து பார்த்தாள் சக்தி. "இங்கே நடக்கற எல்லா பிரச்சனைக்குமே நீதான் காரணம் மகேஷ்.. உன்னோட அவசர புத்தியால் இரண்டு ஊர்க்காரங்களை பகையாளியா மாத்திட்ட.. என்னால சுயநலமா வாழ முடியாது.. என்னைக்கு நீ உன் பெத்தவங்ககிட்ட சம்மதம் வாங்கி வரியோ அன்னைக்கு நான் உன் கூட வரேன்.." என்றவள் அவன் அதிர்ச்சியோடு நிற்கும் போதே தனது கழுத்திலிருந்த தாலியை கழட்டி அவன் கையில் தந்தாள்.

"ஸாரி மகேஷ்.. என்னால இப்போதைக்கு உன்னோடு வாழ முடியல.."

"சக்தி.." என்று கெஞ்சியவனை கண்ணீரோடு பார்த்துவிட்டு தன் தந்தையின் கரம் பற்றி கிளம்பினாள் சக்தி.
அவளை பின்தொடர்ந்து ஓட முயன்றவனை இழுத்து பிடித்த அவனது சொந்தங்கள் அவனை வீட்டிற்குள் இழுத்து சென்றது. அவர்களின் பிடியிலிருந்து திமிற முயன்றவனை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள் சக்தி.

சக்தி கேட்ட பெற்றவர்கள் சம்மதம் கடைசி வரை அவனுக்கு கிடைக்கவேயில்லை.. திடீரென சக்தி ஒருநாள் காணாமல் போய்விட்டாள். அவள் பிரிவில் பைத்தியம் பிடித்து திரிந்தான் மகேஷ். கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்து வந்தவளை தன்னோடு வாழ அழைத்தான். அவள் வர மறுத்து விட்டாள். அவன் கெஞ்சிக் கூட பார்த்தான். ஆனால் அவள் துளியும் மனமிரங்கவில்லை. அருகிலாவது இருக்கிறாளே என்ற நிம்மதியோடு இத்தனை வருடங்களை கடந்து விட்டான் மகேஷ்.

இப்போது புதிதாக எதையோ சொல்ல முயலும் மூர்த்தியை உறுத்து பார்த்தான் மகேஷ்.

"அவ உங்க அப்பாக்கிட்ட ஒரு லட்ச ரூபா காசு வாங்கியிருக்கா.." என்ற மூர்த்தியை கொலை வெறியோடு பார்த்தான் மகேஷ்.

"பொய் சொல்ல முயற்சி செய்யாத.. அடிச்சே கொன்னுடுவேன்.."

"இது பொய் இல்ல.. உனக்கு சந்தேகமா இருந்தா சக்திக்கிட்டயே கேளு.. அவ உன் காதலை உங்க அப்பா தந்த பணத்துக்கு வித்துட்டா.. பதினெட்டு வருசம் முன்னாடி ஒரு லட்ச ரூபாய்க்கு என்ன மதிப்புன்னு நீயே கணக்கு போட்டுக்கோ... அந்த பணத்தோட மதிப்புதான் உன் மதிப்பும்..."

அவனது சட்டை காலரை பிடித்த மகேஷ் "இது மட்டும் பொய்யா இருந்தது நீ செத்துடுவ.." என மிரட்டி விட்டு வெளியே நடந்தான்.

சக்தி இருளாய் இருந்த இடத்தில் எல்லாம் ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாக சோதித்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மல்லிகை புதர் திடீரென ஆடியது. டார்ச்சை அடித்தபடி அதன் அருகே அவள் செல்ல.. ஒரு கறுப்பு பூனை புதரிலிருந்து அவள் மீது குதித்து ஓடியது. பூனை குதித்ததில் நிலை தடுமாறி பின்னால் விழுந்தவள் அங்கு வந்து நின்ற மகேஷின் நெஞ்சின் மீது விழுந்தாள்.

"பூனை ஒன்னு புதருல இருந்து வந்து மேலே எகிறிடுச்சி.." என்றவளை நேராக நிறுத்தினான்.

"என்னை பிரிஞ்சி போகறதுக்காக எங்க அப்பாக்கிட்டயிருந்து ஒரு லட்ச ரூபா காசு வாங்கினாயா..?" கோபத்தோடு கேட்டவனை கசப்பாக சிரித்தபடி பார்த்தாள் சக்தி.

"ஆமாம்.. ஏன் அது இவ்வளவு நாள் உனக்கு தெரியாதா..? உங்க அப்பா அப்பவே சொல்லியிருப்பாருன்னு நினைச்சேனே..!" என்றவளை நம்ப இயலாமல் பார்த்தான்.

"சக்தி உனக்கு மனசாட்சியே இல்லையா..? என் காதலை வித்திருக்கியேடி..! என் நேசத்தை விற்பனை செய்ய உனக்கு எப்படிடி மனசு வந்துச்சி..? நீ என்ன தாசியாடி காசுக்கு..." அவன் மேலே சொல்லும் முன் அவனை கை காட்டி நிறுத்தினாள்.

"இன்னொரு வார்த்தை பேசாத... உனக்கு என்ன தெரியும்ன்னு இவ்வளவு கோபப்படுற..? நடந்தது எதுவும் உனக்கு தெரியாது.. நான் உங்க அப்பாக்கிட்ட காசு வாங்கினேன்.. ஆனா நீ நினைக்கற மாதிரி காதலை நான் விற்கல.. அப்படி காதலை வித்திருந்தா எத்தனையோ பேர் என் பின்னாடி சுத்தியும் கூட உனக்கு தந்த வாக்குக்காக இன்னும் உன்னை நினைச்சி தனி ஆளாக நான் வாழ்ந்திருக்க மாட்டேன்.." அவள் சொன்னதை கேட்டு சற்று குழம்பி போனான் மகேஷ்.

"பிறகு எதுக்காக காசு வாங்கின..?"

"அதை உனக்கு சொல்லனுங்கற அவசியம் கிடையாது மகேஷ்.." என்றவளை தள்ளி நின்று பார்த்தான்.

"எக்கச்சக்கமா பொய் சொல்ற சக்தி.. உன்னை நான் நம்பி இருந்துதான் நான் செஞ்ச மிக பெரிய தப்பு.. இனிமேலும் உன் வலையில் நான் விழமாட்டேன்..."

"நீ சீன் போடுற அளவுக்கு எந்த விசயமும் நடந்த.."

"சரிதான் நிறுத்துடி.. உன் சாகசத்தை இதுக்கும் மேலயும் என்கிட்ட காட்டாத.. இதுக்கும் மேலயும் நான் ஏமாற மாட்டேன்.." என்றவன் அவளை விட்டு திரும்பி சென்றான்.

சக்திக்கு இப்படி ஒரு நிலையில் மாட்டிக் கொண்டோமே என கவலையாக இருந்தது. அவள் ஒன்றும் வேண்டுமென்றே முத்துவிடமிருந்து பணம் வாங்கவில்லை. அது ஒரு சந்தேகம் நிறைந்த சூழல்.‌ இனியனை செல்வாவின் தாயிடம் தந்துவிட்டு மகேஷிற்காக.. மகேஷின் பைத்தியம் பிடித்த நிலைக்காக‌ திரும்பி வந்தாள் சக்தி.

அவள் ஊர் வந்து சேர்ந்த மறுநாளே முத்து அவளை பார்க்க வந்தார். அவளின் குழந்தை அழிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். அவளின் இழப்பு இவருக்கு பாவத்தை தரக் கூடாது என எண்ணி பணத்தை தந்தார் அவர். பணத்தை வாங்கிக் கொள்ளாவிட்டால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அதனால் இனியனின் உயிருக்கு ஆபத்து வரும் என எண்ணியவள் அந்த பணத்தை மனமே இல்லாமல் வாங்கிக் கொண்டாள். ஆனால் அது அப்போதே மகேஷிற்கு தெரிந்திருக்கும் என நினைத்தாள் அவள்.‌ அந்த பிரச்சனை இப்போதுதான் அவளின் வாழ்க்கையில் வந்து விளையாட வேண்டுமென விதி போலும்..

அவள் சோகத்தை தனக்குள்ளேயே வைத்து கொண்டு வீட்டிற்குள் வந்தாள். அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் புகுந்து படுக்கையில் வீழ்ந்தாள். துக்கம் அவள் நெஞ்சை அடைத்தது. சில மணி நேரங்கள் கழித்து தூக்கம் அவளை தனக்குள் இழுத்துச் சென்றது.

அடுத்த நாள் சக்திக்கு அதிக மனக்கசப்பை தந்த நாள். மகேஷ் இவளை பார்க்கும் போதெல்லாம் நெருப்பாக முறைத்தான். இவள் இருக்கும் இடத்தில் நிற்க கூட அவனுக்கு விருப்பமில்லை. முத்துவிற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

மறுநாள் மேகரீஸ் வந்தார். அவரை விமான நிலையத்திலிருந்து வரவேற்றாள் சக்தி. அவரோடு அவருக்கு துணையாக கருப்பு உடை அணிந்த பாதுகாவலர்கள் பலர் வந்தனர். சக்தி தன்னை அவரிடம் அறிமுகம் செய்துக்கொண்டாள்.

அவரும் பதிலுக்கு தன்னை அறிமுகம் செய்தார்.. "நான் மேகரீஸ்.. எனக்கு தமிழும் தெரியும்.. இங்கே கிளம்பும் முன்னாடியே உங்களை பத்தி விசாரிச்சேன்.. நீங்க மகேஷ்க்கு வேண்டபட்டவங்கன்னு தெரிஞ்சது.. நமது நட்பு இனிதாக தொடரட்டும்.." வணக்கம் வைத்தார் அவர்.

'நான் ஒரு காவல்துறை அதிகாரின்னு பாராட்ட கூடாதா..? இங்கேயும் அந்த மகேஷ் தொல்லைதானா..?' அவளும் பதிலுக்கு வணக்கம் வைத்து விட்டு அவரோடு கிளம்பினாள்.

மேகரீஸ் அவரது பணிகளை முடிக்கும்வரை அவரோடே இருந்தாள் சக்தி. அவர் தனது பணி சம்மந்தமான அனைத்தையும் முடிக்கும் நேரத்தில் சரியாக அங்கு வந்து சேர்ந்தான் மகேஷ். மகேஷை கண்டதும் அவர் அவனை தோளோடு கட்டிக்கொண்டார்.

"எப்படி இருக்க தோஸ்த்..?" என்றார் மேகரீஸ் அன்போடு.

"நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க பிரெண்ட்..?" என அவன் கேட்டான்.

'மந்திரிக்கிட்ட ஏகவசனமா பேசுற அளவுக்கு இவன் அவருக்கு பிரெண்டா..? இந்த நட்பு எப்போது உருவானது..?'
அவர்கள் இருவரும் தங்களின் கொஞ்சல்களை முடித்துக் கொண்ட பிறகு அவர்கள் அருகே வந்தாள் சக்தி.

"நாம கிளம்பலாமா ஸார்..? இந்த இடம் கொஞ்சம் பாதுகாப்பற்ற இடம்.." என்றாள் தயக்கமாக.

"உன் ஆளு நல்லாயிருக்குப்பா.." அவர் மகேஷின் காதுகளில் கிசுகிசுத்தார். மகேஷிற்கு மகிழ்ச்சியும் கோபமும் ஒன்றாக தாக்கின.

"நாம மீதியை வீட்டுல போய் பேசிக்கலாம்.." அவரை அழைத்து கொண்டு புறப்பட்டான் அவன்.

பொன்னி விதவிதமான பலகாரம் செய்து ஒரு விருந்தே தயார் செய்து வைத்திருந்தாள் மேகரீஸ்காக.

சக்தியையும் மேகரீஸின் பாதுகாப்பு படைவீரர்களையும் தவிர அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

"நீங்களும் வாங்க சக்தி.." என அழைத்தார் மேகரீஸ்.

"மேடம் எங்க வீட்டுலயெல்லாம் சாப்பிட மாட்டாங்க.." என்றார் முத்து அவளை ஓர கண்ணால் வெறுப்போடு பார்த்தபடி.

'உங்க வீட்டுல சாப்பிட்டா எனக்குத்தான் கேவலம்..' என நினைத்தாள் சக்தி முத்துவின் வெறுப்பு புரிந்தவளாக.

"நான் செக்யூரிட்டி கார்ட்ஸோட சேர்ந்து சாப்பிட்டுகிறேன் ஸார்.." என்றவள் அவர்களின் அடுத்த பதிலை எதிர்பார்க்க மனமில்லாமல் வெளியே நடந்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. மறக்காமல் vote பண்ணுங்க.. comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top