நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

19. பூவே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அனைத்திலும் ஒரு செடி வேண்டும் என கேட்ட மைவிழியை சற்று சந்தேகமாக பார்த்தான் கதிர்.

"எல்லாமேவா..?"

"ஆமா.. ரகத்துக்கு ஒன்னு.. விதத்துக்கு ஒன்னு.."

அங்கு மொத்தம் முப்பது விதமான பூச்செடிகள் இருந்தது. அதில் ரோஜா மட்டும் பத்து ரகத்தில் இருந்தது.

"மொத்தம் நாற்பது செடிகள் வருது மைவிழி.." என்றான் கதிர்.

"அந்த சிவப்பு ரோஜா மட்டும் அஞ்சி செடிகள் தந்திருங்க.." என்றாள் அவள் விற்பனையாளனிடம்.

கதிர் மைவிழியின் புறங்ககையை சுரண்டினான்.

"என்ன கதிர்..?" என்றாள் தன் கையை இழுத்தபடி.

"மொத்தம் நாற்பது அஞ்சி செடிகள்.. வீட்டையே பூந்தோட்டமா மாத்த போறியா..?"

"இதெல்லாம் செடிகளாவே இருக்கும்... கொஞ்சம் இடம் இருந்தாலே போதும்.."

அவள் தனது முடிவில் உறுதியாக இருந்தாள். கதிர் தனது பாக்கெட்டிலிருந்த பணத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டான். செடிகள் வாங்கும் அளவிற்கு பணம் இருந்தது. ஆனால் ஒரே நாளில் நாற்பத்தைந்து செடிகள் வாங்கும் அளவிற்கு மனம்தான் வரவில்லை. கடைக்காரன் கதிரை பார்த்து கண்ணடித்தான்.

"பொண்டாட்டி ஆசைப்பட்டா வாங்கி கொடுங்க ஸார்.." கதிர் அவனை ஓரக்கண்ணால் முறைத்தான். "அவ கேட்ட எல்லாத்தையும் ஞாயித்து கிழமை காலையில் இந்த அட்ரஸ்ல டெலிவரி பண்ணுங்க.." என்றவன் தனது வீட்டு முகவரியை ஒரு துண்டு பேப்பரில் எழுதி தந்தான்.

"ஞாயித்து கிழமையா..?" என்றாள் மைவிழி கோபமாக.

"செடிகள் நட ஒரு ஆளாவது வேணும்.. ஞாயித்து கிழமை மட்டும்தான் எனக்கு லீவு.. உனக்கு அவ்வளவு அவசரமா இருந்தா நாளைக்கு லீவு போட்டுட்டு செடிகளை நடு.." என்றான் புருவத்தை உயர்த்தியபடி. மைவிழி சிரிப்பில் தனது அவசர புத்தியின் முட்டாள்தனத்தை மழுப்பினாள்.

"ஞாயித்து கிழமையே தந்துடுங்க.." என்றவள் கதிர் கையில் வைத்திருந்த பணத்தை பிடுங்கி கடைக்காரர் கையில் தந்தாள். கதிர் திகைத்து நிற்கும் போதே அவனை தன்னோடு இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

"அங்கே எதுக்கு பார்க்கற..? நீதானே செடிகளுக்கான காசை தரேன்னு ஒத்துக்கிட்ட..?" என்றவளோடு இணைந்து நடந்தவன் எதுவும் பதில் பேசவில்லை.

"தியேட்டர்ல நம்மளை பார்த்துட்டு இருந்தானே அவன் யாரு..?" என்றான் சிறிது தூரம் வந்தபிறகு.

"நீ எதுக்கு அந்த காயினை பத்திரமா வச்சிருக்க..?"

கதிர் பதில் சொல்லவில்லை. மைவிழி பாதையோரம் இருந்த செடி ஒன்றிருலிருந்து இலை ஒன்றை பறித்தாள். அதே நேரத்தில் கதிரும் ஒரு இலையை பறித்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சிறிது நேரம் எதுவும் பேசாமல் நடந்தனர்.

"உனக்கு எப்படி உன் மனசுல புதைச்சி வச்சிருக்கற விசயத்தை என்கிட்ட சொல்ல மனம் வரலையோ அது போலதான் எனக்கும் என் மனசுல புதைச்ச விசயத்தை உன்கிட்ட சொல்ல மனம் வரமாட்டேங்குது.. நீயும் நானும் ஒப்பந்த நண்பர்கள்... நம்ம நட்பு இன்னும் அஞ்சி மாசத்துல முடிஞ்சிடும்.. அதுக்கப்புறம் நீ யாரோ.. நான் யாரோ.. அதுவரைக்கும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டு எதிரிகளா மாறாம நண்பர்களாவே இருப்போம்.." கதிருக்கும் அவள் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது. அதனால் மறுத்து எதுவும் கூறவில்லை. ஆனால் அவளை விட்டு பிரிந்து விடுவோம் என்ற எண்ணம் அவனது இதயத்தில் சிறு வலியை தந்தது.

மைவிழி வீட்டிற்கு வந்த பிறகும் தான் இல்லாத நேரத்தில் செழியன் வந்திருப்பானோ என்ற எண்ணத்தில் சுற்றும் முற்றும் தேடினாள். ஆனால் அவன் வந்து போனதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. சோகத்தோடு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றாள். கதிரும் அவளது முகம் மாறியதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

"ஏதாவது கார்ட்டூன் பார்க்கலாமா..?" என்றான் கதிர். அவள் வேண்டாமென தலையசைத்தாள்.

அவன் சென்று சூடாக காபி வைத்து எடுத்து வந்தான். அவளிடம் ஒரு கோப்பையை தந்து விட்டு தனது கோப்பையோடு அவளெதிரே அமர்ந்தான்.

"அன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வந்தப்போ நீ ஏன் அந்த பையனை அடிச்ச..?" என்றான் அவளது சோகத்தை திசை திருப்புவதற்காக.

அவளது முகத்தில் சிறு குறும்பு சிரிப்பு பூத்தது. "சந்தரும் நானும் சின்ன வயசுல இருந்து பிரெண்ட்ஸ்.. கொஞ்சம் பெரியவங்களான பிறகு அவன் என்னை எப்பவும் உத்து உத்து பார்ப்பான். திடீர்ன்னு ஒருநாள் 'நீ அழகாயிருக்க.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு'ன்னு சொல்லிட்டான்.. நான் அன்னைக்கு செம கோபத்துல இருந்தேன்.. அதனால் நச்சுன்னு அவன் வாய் மேலயே ஒரு குத்து விட்டுட்டேன்.. அன்னைக்கு ஆரம்பிச்சது எங்க சண்டை.. இன்னைக்கு வரைக்கும் தீராம இருக்கு.." என்றவள் காபியை குடித்து முடித்து கோப்பையை கீழே வைத்தாள்.

கதிருக்கு சந்தர் மேல் ஏனோ கோபம் வந்தது. அது பொறாமை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மாலை நெருங்கி கொண்டிருந்தது. மைவிழிக்கு செழியன் நினைவு அதிகம் வந்தது. தனது கைப்பேசியை நொடிக்கொருதரம் எடுத்து பார்த்தாள். அவனது எண்ணை திரையில் பதிய விடுவாள். ஆனால் அழைப்பு விடுக்கமாட்டாள். 'அந்த நாய் லவ்வர் வந்தவுடனே என்னை மறந்துடுச்சி.. எரும கண்ணுல மாட்டட்டும்.. சாகடிச்சிறேன்.. பன்னாடை.. என் பிறந்த நாளை கூட மறந்துட்டானே.. அவன் பிறந்த நாளுக்கு வருசம் தவறாம நைட் பன்னென்டு மணிக்கெல்லாம் விஷ் பண்ணேனே.. பிசாசு சின்ன வாழ்த்து கூட சொல்லலையே..'
அவள் தனது சொந்த கற்பனை உலகில் செழியனை வசைப்பாடிக் கொண்டிருக்க அவர்களது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதிர் எழுந்து செல்ல முயலும் முன் மைவிழி எழுந்து ஓடி கதவை திறந்தாள்.

திறந்த கதவில் தாளம் போட்டபடி நின்றிருந்தான் செழியன். அவனை கண்டதும் மைவிழிக்கு கோபம்தான் முதலில் வந்தது. அவனது கண்களில் ஸ்டைலாக மாட்டியிருந்த கருப்பு கண்ணாடியை பிடித்து இழுத்து தன் கையில் வைத்துக் கொண்டாள்.

"எதுக்காக இங்க வந்த..? உன் காதலி உன்னை தேட மாட்டாளா..? நீ அவளை விட்டு வந்தா இந்த உலகம் அழிஞ்சிடும்.. அதனால் மரியாதையா இங்கிருந்து கிளம்பிடு.." என்றவள் வீட்டின் கதவை அவனது முகத்தில் அடிக்க பார்த்தாள். கதவை கையால் தாங்கி பிடித்த செழியன் அவளை குழப்பமாக பார்த்தான்.

"லவ்வரா..? அட லூஸு.. உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்காருன்னு அவரை உங்க வீட்டுக்கு கூட்டி வந்தா நீ என்னடான்னா இப்படி பேசுற..!" என்றவன் பாதையிலிருந்து விலகி நின்றான்.

மைவிழி கண்ணடித்தபடியே நகர்ந்த செழியனை குழப்பமாக பார்த்தாள். செழியனின் பின்னால் நின்றிருந்த அதியன் மைவிழியை கண்டதும் "ப்பூவ்வ்.." என விளையாட்டு காட்டினான். தன் கண்களை தேய்த்தபடி அவனை பார்த்தாள் மைவிழி.

"அதியன் மாமா.." என்று கூச்சலிட்டவளின் குரலில் கதிர் வந்து வாசலருகே நின்றான். அதியனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

"விழி.." என்று செல்லமாக அழைத்தபடி பல் தெரிய அழகாய் சிரித்தவனை நொடியில் பாய்ந்து அணைத்தாள் மைவிழி. அதியனும் அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"மாமா.. நீங்க என்னை மறந்துட்டிங்க.. என் கல்யாணத்துக்கு கூட நீங்க வரல.." என செல்லமாக கோபித்தவளை தூக்கி சுற்றியவன் "நான் உன்னை மறக்கறதா..? என் கனவுல கூட நீதான்.." என்றான்.

"அநியாயத்திற்கு ஐஸ் வைக்கற அண்ணா.." என்ற செழியனை இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்து முறைத்தனர்.

"உனக்கு பொறாமை.." என்று ஒரே நேரத்தில் சொன்னவர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு சிரித்தபடியே மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டனர். இதை பார்க்கும் போது கதிருக்கு ரத்தமெல்லாம் கொதித்தது.

'யார் இவன்..? எதுக்கு இப்படி அணைச்சிட்டு இருக்காங்க இரண்டு பேரும்..? என் பொண்டாட்டியை என் கண் முன்னாடியே கட்டிப்பிடிக்கறான்னா அவன் யாராகதான் இருப்பான்..?' கதிருக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

மைவிழியை கீழே நிறுத்தினான் அதியன். "எப்படி போகுது லைஃப்..?" என கேட்டான்.

அவள் பதில் சொல்லும் முன் அவளை தன்னருகே இழுத்து நிறுத்தினான் கதிர். "யார் இது..?" என்றான் கோபமாக கதிர்.

மைவிழி அதியனை பார்த்துவிட்டு கோபத்தோடு முறைக்கும் கதிரை குழப்பமாக பார்த்தாள். "இது எங்க மாமா அதியன்.. செழியனோட அண்ணன்.."

கதிருக்கு இப்போது அவன் யாரென புரிந்து போனது. விஷ்வா அடிக்கடி சொல்லும் அதியன் இவன்தானென புரிந்து கொண்டான்.

"உள்ளே வாங்க.." என அழைத்த கதிருக்கு அதியனை அவ்வளவாக பிடிக்கவில்லை.

அதியன் சிடுசிடுப்பை மறைத்தபடி வெறும் ஒப்புக்கு புன்னகைத்த கதிரின் முகத்தை பார்த்தப்படியே உள்ளே வந்து அமர்ந்தான். மைவிழி ஓடி சென்று குளிர்பானத்தோடு திரும்பி வந்தாள். "ஜுஸ் எடுத்துக்கங்க மாமா.." அதியன் அவள் தந்ததை வாங்கி கொண்டான். செழியனோ மைவிழியின் முகத்தை பற்றி தன் புறம் திரும்பினான்.

"நானும் இத்தனை நாளா உன் வீடு வந்தேனே.. ஒருநாள் ஒரு டீ போட்டு கொடுத்திருக்கியா..? அட்லீஸ்ட் பச்சை தண்ணி தந்திருக்கியா..?"

கதிர் அதியனின் எதிரே அமைதியாக அமர்ந்தான். அதியனை ஓரக்கண்ணால் ஆராய்ந்தான். மிகவும் எளிமையான தோற்றம்தான். எப்போதும் இறந்து கிடப்பது போல் தெரிந்த கண்களில் மைவிழியை பார்க்கும் நொடிகளில் மட்டும் உயிர் அவ்வப்போது வந்து போனது.

"பச்சை தண்ணி வேணுமா..? நீ உன் லவ்வர் வந்ததிலிருந்து என்னை கண்டுக்கறதே இல்ல.. உனக்கு நான் பச்சை தண்ணிக்கு பதில் பால்டாயல்தான் தரணும்.."

"லவ்வா..?" அதியனும் கதிரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

செழியன் இருவரிடமும் கோமாளியாக ஒரு சிரிப்பை சிரித்து விட்டு மைவிழியை தன்னோடு இழுத்துப் போனான். அதியனையும் கதிரையும் விட்டு தூரமாக வந்தபிறகு மைவிழியை கையை விட்டுவிட்டு அவளை முறைத்தான்.

"நீ என்ன லூஸா..? நானும் அந்த பொண்ணும் ஜஸ்ட் பிரெண்ட்ஸ் அவ்வளவுதான்.. அப்படி நான் லவ் பண்றதாவே இருந்தாலும் அதை இவ்வளவு சீக்கிரமா இவங்க இரண்டு பேர்க்கிட்டயும் சொன்னா என் காதல் கருவிலேயே கலைஞ்சிடாதா..? அவங்க இரண்டு பேருக்கும் விஷ்வா குளோஸ் பிரெண்ட்.. இவங்க அந்த பொண்ணையும் தங்களோட சொந்த தங்கச்சியாதான் பார்த்திருப்பாங்க.. இன்னும் ஆரம்பமே ஆகாத காதலை இவங்ககிட்ட சொன்னா இவங்க என்னை பிரிச்சி மேஞ்சிட மாட்டாங்களா..?"

"அப்படின்னா நீயும் அந்த பொண்ணும் லவ் பண்றிங்களா..? அதனாலதான் அவங்க இரண்டு பேரும் அதை தெரிஞ்சிக்க கூடாதுன்னு நினைக்கிறியா..?" என புருவம் உயர்த்தி கேட்டாள் மைவிழி.

செழியன் மைவிழியின் அறிவை எண்ணி தன் நெற்றியில் அறைந்துக் கொண்டான். "நீ லூஸா விழி..? அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. நாங்க ஜஸ்ட் பிரெண்ட்ஸ்ன்னு சொன்னதை நீ காதுலயே வாங்கலையா..?"

"அப்புறம் ஏன் லவ் பண்ணான்னு இழுத்த..?"

"அது எக்ஸக்ட்ரா.. ஒருவேளை காதலிச்சான்னுதான் சொன்னேன்.. உன் ஆர்வக் கோளாறு அறிவை வச்சி என் வாழ்க்கையில் குட்டையை குழப்பிடாதே.." என்று கெஞ்சலாக கேட்டான் செழியன். மைவிழிக்கும் அவனை பார்த்தால் பாவமாகதான் இருந்தது. அதனால் "ஓகே.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top