நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

21. என் மனதில் பூத்த பூவே..

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்னை கண்களை உருட்டி அப்பாவிதனமாகவும் பயத்தோடும் பார்த்த மைவிழியை பொங்கி வரும் சிரிப்பை அடக்கியபடி பார்த்தான் கதிர். திருதிருவென விழிக்கும் அவளது முகபாவத்திற்கு அவளை இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே ஏதேனும் சொல்லி கலங்கடிக்க வேண்டுமென தோன்றியது அவனுக்கு.

"நான் கீழ தூங்கிக்கறேன்.." என்று சொன்னாள் மைவிழி.

"அதுக்கும் மேல உன் இஷ்டம்.. நான் கட்டில்ல தான் தூங்குவேன்... நான் கீழே தூங்கி பழக்கம் இல்ல.." என்றவன் அவளது விழியசைவுகளை கவனித்து பார்த்து கொண்டிருந்தான். அவளது கண்களில் இன்னமும் அந்த பதட்டம் குறையவில்லை.

"எனக்கும் கீழே தூங்கி பழக்கம் இல்ல.. ஆனா பரவால்ல.. நான் கீழேயே தூங்கிக்கிறேன்.." என்றவள் பதட்டம் குறையாமல் தன் கையிலிருந்த கரண்டியை கீழே தவறவிட்டாள். கதிர் அந்த கரண்டியை எடுத்து அவள் கையில் தந்தான்.

"கிச்சன்ல அவங்க சமைக்கிறாங்களா..? இல்ல சடுகுடு விளையாடுறாங்களா..? எதுக்கு இப்படி சத்தம் கேட்குது..?" என்றான் அதியன் அருகிருந்த செழியனிடம்.

"தெரியலண்ணா.. நான் வேணா போய் பார்த்துட்டு வரட்டா‌‌.." என்றபடி எழுந்தான் செழியன்.

அவனை கைபிடித்து கீழே அமரவைத்தான் அதியன். "அவங்க இரண்டு பேர் மட்டும் இருக்கும் இடத்துக்கு இப்படி திடீர்னு போய் நிற்க கூடாது.. இன்னும் சின்ன பையனாவே இருக்காத.."

செழியனுக்கு நெற்றியில் அறைந்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அவனுக்குதானே தெரியும் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வெகு நேரம் இருந்தால் அவர்களுக்குள் சண்டைதான் வருமென்று‌. ஆனால் அதை எப்படி அவன் அதியனிடம் சொல்வான்..?

கதிர் மைவிழி கேட்ட உதவிகளை செய்து தந்துவிட்டு கிச்சனிலிருந்து வெளியே வந்தான். அதியன் அவன் அமரும்வரை காத்திருந்து விட்டு தனது விசாரணைகளை தொடங்கினான். கதிரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கேட்டான். கதிரும் தனது சலிப்பை வெளிக்காட்டாமல் அனைத்தையும் சொன்னான்.

"கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணது உண்டா..?"

கதிருக்கு பாலாவின் நினைவு வந்தது. மைவிழியின் அருகிலிருக்கும் நேரங்களில் அவன் பாலாவை நினைப்பதையில்லை. அது அவனுக்கு இப்போதுதான் புரிந்தது.

மைவிழியின் உடனான நட்பே இவ்வளவு மனநிம்மதியை தந்தால் அவளுடன் காதல் கொண்டால் எவ்வளவு மனம் மகிழும் என யோசித்தான். ஆனால் பெண்களின் மாயவலையில் வீழக் கூடாது என்று உடனடியாக அவனது மனதுக்குள்ளிருந்து குரல் ஒன்று கேட்டது.

"பதில் சொல்ல ஏன் தயங்கற..?" என்றான் அதியன்‌‌. கதிர் தனது சிந்தனை உலகிலிருந்து வெளிவந்தான்‌.
அவனுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. பாலாவை அவன் உண்மையாகதான் நேசித்தான். ஆனால் அவள் இவனை நேசிக்கவில்லை. இதை அவனுக்கு புரியவைப்பதற்கு பதிலாக ஒரு நொடியில் இந்த பதிலை கடந்து விட முடிவு செய்தான்.

"யாரையும் காதலிச்சது இல்ல.." என்று அவன் சொன்ன அதே நேரத்தில் அங்கு வந்தாள் மைவிழி.

"சாப்பிட வரிங்களா..? சமைச்சது ஆறிட்டா நல்லா இருக்காது.."

"இல்லன்னா மட்டும் குங்கிங் மாஸ்டர் பட்டம் வாங்கினவங்க சமைச்ச மாதிரி அவ்வளவு டேஸ்ட்டா இருக்குமா..?" என்று கிண்டலாக கேட்டான் செழியன்.

"இவ சமையல் செமயாதான இருக்கு..?" என கேட்ட கதிரை அதிர்ச்சியோடு பார்த்தான் செழியன்.

"இப்படி சொல்ல சொல்லி அவ உங்களை மிரட்டி வச்சிருக்காளா..?" என கேட்ட செழியனின் தலையில் கொட்டு வைத்தான் அதியன்.

"இன்னும் என்ன விளையாட்டு வேண்டியிருக்கு..? அவ சமைக்கறதை தினம் சாப்பிடுறவங்களுக்குதானே அதோட ருசி தெரியும்..? பைத்தியம் மாதிரி பேசி அவக்கிட்ட வாங்கி கட்டாம எழுந்து வா.. சாப்பிட போகலாம்.."
செழியன் தன் உச்சந்தலையை தேய்த்து விட்டபடியே அதியனோடு இணைந்து நடந்தான்.

அன்றைய சமையல் நன்றாகத்தான் இருந்தது. அதியன் மைவிழியை நொடிக்கொருதரம் பாராட்டினான். அதை பார்க்கும் போது செழியனுக்குதான் சுவற்றில் முட்டிக் கொள்ள தோன்றியது.

மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. அனைவரும் தொலைக்காட்சியில் கண்ணாக இருந்தனர்.

செழியன் கடிகாரத்தை பார்த்துவிட்டு எழுந்தான்.

"நான் வீட்டுக்கு கிளம்பறேன்.. வீட்டுல கேட்டா நான் என்ன சொல்லட்டும்..?" என்றான் அதியனிடம்.

"ஒன்னும் சொல்லாத.. அண்ணன் வந்திருக்கானான்னு யாராவது கேட்டா எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிடு.. ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டு போக வந்திருக்கேன்.. வீட்டு மனுசங்க யாராவது என்னை பார்க்க வந்தா நான் நாளைக்கே இங்கிருந்து கிளம்பி போயிடுவேன்.." அதியன் உறுதியாக கூறினான்.

செழியன் சரியென தலையாட்டினான். அவனுக்கு நன்றாகவே தெரியும் அதியனின் குணம். அதனால் அவனது பொறுமையை எந்த விதத்திலும் தான் சோதித்து விடக்கூடாது என தனக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டான்.

"நான் வரேன் விழி.." என்றவன் கதவு வரை சென்றுவிட்டு திரும்பி வந்தான். மைவிழியின் எதிரே வந்து நின்று அவளை குறுகுறுவென பார்த்தான்.

"எதுக்கு என்னை இப்படி பார்க்கற..? முகத்துல ஏதாவது இருக்கா..?" என்றவள் தனது முகத்தை துடைத்துக் கொண்டாள்.

"உன் முகத்துல எதுவும் இல்ல... கொஞ்சம் எழுந்து நில்லேன்.."

மைவிழி குழப்பத்தோடு எழுந்து நின்றாள். அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் செழியன்.

"ஏன் செழியா...? மனசு எதுவும் சரியில்லையா..?" அவள் பரிவோடு கேட்க இல்லையென தலையசைத்தான் அவன்.

"ஹேப்பி பர்த்டே விழி.. நீ நூறு வருசம் சந்தோசமா வாழனும்.. எப்பவும் நம்மோட நட்பு பிரியாம இருக்கணும்.."

மைவிழி ஆமெனும் விதமாக தலையசைத்தாள். அவளை விலக்கி நிறுத்தியவன் அவளது கையில் பஞ்சால் ஆன மிக சிறிய முயல் பொம்மையை தந்தான். "நான் உன்னை எப்பவும் மறக்கமாட்டேன் விழி.. காலையில் அண்ணனை கூட்டி வர ஏர்போர்ட் போயிட்டேன்.. ஆனா ஃப்ளைட் லேட்டாயிடுச்சி.. அதனாலதான் காலையில் உன்னை பார்க்க வரமுடியல.. மத்தபடி நான் உன்னை மறப்பேனா..?"

மைவிழி மொத்தமாக தலையாட்டினாள். அவனது என்றும் மாறாத பாசம் அவளின் நெஞ்சை தொட்டு விட்டது. அன்புக்கு அடிமையாக யாருக்குதான் பிடிக்காது.

"நாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்.." என்றவன் அங்கிருந்த கிளம்பி விட்டான்.

அதியன் அவளருகே எழுந்து வந்தான். "ஹேப்பி பர்த்டே விழி.. நான் கிஃப்ட் ஏதும் வாங்கிட்டு வரல.. வீக்கெண்ட் நான் உன்னை வெளியே கூட்டிப்போறேன்.. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க.. பில்லை நான் கட்டிக்கிறேன்.."

'தானா ஒரு ஆடு வலையில் வந்து சிக்குது... இவக்கிட்ட இப்படி சொன்னா மொத்த கடையையும் இல்லையா காலி பண்ணுவா..? ஒரு செடி வாங்க ஆசைப்பட்டு நான் தானா வம்புல மாட்டினேனே.. அதே மாதிரி இவனும் மாட்டப்போறான்..'

"சரி மாமா.."

"நானும் தூங்க போறேன்.. குட் நைட் விழி.. குட்நைட் மாப்பிள்ளை.‌" என்றான். இருவரும் அவனுக்கு தலையசைத்து பதில் தந்தனர்.

மைவிழிக்கு இன்று தூங்குவோம் என்ற நம்பிக்கையே இல்லை. கதிரோடு ஒரே அறையில் எப்படி தூங்க முடியும்..? என யோசித்தபடியே நின்றிருந்தவளின் தோளில் தட்டினான் கதிர்.

"என்ன யோசனை‌‌..?"

"ஒன்னுமில்ல.." என்றவள் தயக்கத்தோடு தனது அறைக்குள் நுழைந்தாள். அவள் பின்னால் வந்து கதவை பூட்டினான் கதிர்.

"கதவை ஏன் சாத்துற..?"

அவன் அவளை முறைப்பாக பார்த்தான். "நடு ராத்திரியில் உன் மாமன் தண்ணீர் குடிக்க எழுந்து வரும்போது நீ கீழே தூங்குவதை பார்த்து என்னை மிதிக்கணுமா..?"

அவள் சங்கடமாக சிரித்தாள். போர்வையை எடுத்து தரையில் விரித்தாள். தலையணையை எடுத்துப் போட்டுக்கொண்டு தலை சாய்ந்தாள். "நீ அந்த பக்கமே திரும்பி படு.." என்றவள் சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பி கொண்டு படுத்தாள்.

"அம்மணி பெரிய ஐஸ்வர்யா.. நாங்க இவங்களை பார்க்கவே அந்த பக்கம் திரும்பி படுக்கறோமாம்.." என அவன் நக்கலடிக்க விருட்டென எழுந்து அமர்ந்தாள் மைவிழி.

"நான் சொன்னேனா அந்த மாதிரி..? நீ ஏன் தூங்கும்போது கூட என்கிட்ட வம்பு பண்ற..?"

"யாரு நான் வம்பு பண்ணேன்..? நீதான் நான் என்னவோ ரேப் பண்ணதுக்காக ஆயிரம் முறை ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவனை போல பார்க்கற.. தயங்கி தயங்கி நிக்கற.. சுவத்தை பார்த்துட்டே தூங்குற.. என்னையும் அந்த பக்கம் திரும்பி படுக்க சொல்ற..?"

மைவிழி தலைகுனிந்தாள். "ஸாரி.. ஆனா இப்படி பையனோடு ஒரே ரூம்ல தூங்குறது இதான் பர்ஸ்ட் டைம்.. அதான் அந்த குழப்பத்துல.."

"நானும் நாளுக்கொரு பொண்ணு கூட தூங்குறவன் கிடையாது.. செழியன் மேல வைக்கற அதே நம்பிக்கையை நீ தாராளமா என் மேலயும் வைக்கலாம்.. நான் உன்னை எதுவும் செஞ்சிட மாட்டேன்.."

"தேங்க்ஸ்.. செழியனோடு கம்பேர் பண்ணி சொன்னதுக்கு.‌. அவன் கூட கம்பேர் பண்ணி சொன்னாலே என் மனசு சட்டுன்னு பேச்சு கேட்டுக்குது.."

"அது தெரிஞ்சிதானே நானும் அப்படி சொன்னேன்..'' என தனக்குள் முனகினான் கதிர்.

"என்ன சொன்ன..?" என கேட்டாள் அவள்.

"நான் என்ன சொன்னேன்..? தூங்கறவனை கூப்பிட்டு வம்பு வளர்க்காத.." என்றவன் விளக்கை அணைத்து விட்டு தூங்க சென்றான்.

அவன் செழியனை போல என்ற வார்த்தையை சொன்னது உண்மையிலேயே அவளது மனதை சாந்தப்படுத்தி விட்டது. அதனால் விரைவிலேயே உறங்கி விட்டாள் மைவிழி.

கதிருக்கு பத்து வயதிருக்கும். அந்த ஊருக்கு புதிதாக குடி வந்திருந்தனர் அவனது குடும்பத்தினர்.
விரைவிலேயே தான் படிக்கும் பள்ளியில் புதுப்புது நண்பர்களை பிடித்துக் கொண்டான் கதிர்.

ஒருநாள் வீட்டில் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தாள் அம்மா.

"நான் கோவிலுக்கு போறேன்.. நீயும் வரியா..?" என்று அழைத்தாள் அவனை.

கதிருக்கும் புதிது புதிதான இடத்திற்கு செல்ல ஆசைதான். அதனால் உடனே எழுந்துக் கொண்டான்.

அம்மாவும் அவனும் கோவிலுக்கு கிளம்பினர். அந்த கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது.

அம்மா பூசை கூடையை அவனிடம் தந்திருந்தாள்‌. கோவிலுக்கு ஒரு ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்து செல்ல வேண்டும். தண்டவாளத்தின் இருபுறமும் பெரிய பெரிய சவுக்கு மரம் உயரமாக வளர்ந்திருந்தது. அம்மா தண்டவாளம் ஓரம் நடந்தாள். கதிர் தண்டவாளத்தை கண்டவுடன் ஓடிப்போய் அதன் மேலே ஏறி நடந்தான்.

"அம்மா நான் இது மேலயே நடந்து வரேன்.."

"விழுந்துடாத கதிர்..." என்றாள் அம்மா.

அவன் பூசை கூடையை கையில் முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு நடந்தான். அடிக்கடி அவனுக்கு கால் இடறி விட்டது. ஆனாலும் தனது முயற்சியை கை விடாமல் கீழிலிருக்கும் ஜல்லி கற்களில் தனது கால்களை இடித்து கொள்ளாமல் கவனமாக நடக்க முயன்றான். கோவில் வரும்வரை அப்படியே நடந்துக்கொண்டிருந்தான். கோவில் வந்ததும் அம்மா பூசை கூடையை வாங்கிக்கொண்டாள்.

"நான் கோவிலுக்கு உள்ளே போறேன்.. நீயும் வரியா...?" என அவனை அழைத்தாள் அம்மா.

"நான் இங்கேயே விளையாடுறேன்.. நீங்க போய்ட்டு வாங்க.."

அம்மா சென்ற பிறகு அவன் அங்கிருந்த தண்டவாளத்தில் விளையாட ஆரம்பித்தான். அருகிருந்த ஜல்லி கற்களை எடுத்து தண்டவாளத்தின் மீது அடுக்கி வைத்து கலைத்துக்கொண்டிருந்தான்.

விளையாட்டில் தன்னை மறந்து இருந்தவன் ஒரு அழுகை குரல் கேட்கவும் தனது விளையாட்டை விட்டுவிட்டு அழுகை குரல் வந்த இடம் நோக்கி சென்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நண்பர்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க... share and follow பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top