நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி குமரனின் முன் தலை குனிந்து நின்றாள். குமரன் தனது மொத்த கோபத்தையும் அவள் மீது காட்டிக் கொண்டிருந்தார்.

"ஒத்த மனுசனை சமாளிக்காத உன்னை நம்பி அரசாங்கம் எத்தனை பேரோட பாதுகாப்பை கொடுத்துருக்கு தெரியுமா..?"

"ஸாரி ஸார்.. இனிமேல் இந்த மாதிரி எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கிறேன்.."

"இதை நீ ஆயிரத்து இரண்டாவது முறை சொல்ற.. உனக்கு அறிவுரை சொல்ல கூட எனக்கு பிடிக்கல.. அந்த அளவுக்கு உன் மேல நான் வச்சிருந்த நம்பிக்கையை நீ உடைச்சிருக்க.."

"ஸாரி ஸார்.."

"உன் ஸாரி எனக்கு தேவையில்லை.. மூர்த்தி.. அந்த மூர்த்திக்கிட்ட போய் தோத்துட்டு வந்திருக்க.. இதை நினைக்கும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..? அவனை நீ தற்காப்புக்காக கொன்னிருந்தா கூட நான் உனக்கு என் முழு சப்போர்டையும் தந்திருப்பேன்.."

சக்தி தனக்குள் எதையோ முனகினாள். "என்ன முணுமுணுக்கற..?" என்றார் குமரன்.

"என்கிட்ட மட்டும் சொந்த விசயத்தை டிபார்ட்மெண்ட் டியூட்டிக்குள்ள கொண்டு வர கூடாதுன்னு சொல்விங்களே.." என்று இழுத்தவளை முறைப்போடு பார்த்தார் அவர்.

அவர் இவ்வளவு நேரம் அவளை திட்ட காரணமே அவள் மீது அவர் கொண்ட பாசம்தான். மூர்த்தியோடு நடந்த சண்டையில் சக்தி தன்னால் முடிந்தவரை போராடியிருப்பாள் என்பதை அறிவார் அவர். ஆனால் அந்த சண்டையில் இவளுக்கு ஏதாவது ஆகிவிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற பயம்தான் அவளிடம் இந்த அளவிற்கு அவரை கத்த வைத்திருந்தது. ஆனால் அவளுடைய இந்த கேள்வி அவரது கோபத்தை குறைத்து விட்டது.

"இது சொந்த பகை கிடையாது சக்தி. சொந்த பகைக்காக மூர்த்தியை கொல்லுறதா இருந்திருந்தா அவனை என்னைக்கோ பொய் கேஸ் போட்டு கூட அவன் லைப்பையே முழுசா நாசமாக்கி இருப்பேன்.. அவன் எனக்கு செஞ்ச துரோகத்தை விட உனக்கு செஞ்ச பாவம் அதிகம்.. அவன் மனுச சாதியிலயே சேர மாட்டான்.. சந்தர்ப்பம் கிடைச்சும் அவனை சும்மா விட்டுட்டு வந்திருக்கியேன்னுதான் கோபம்.."

சக்தி மெதுவாக சென்று கட்டிலில் அமர்ந்தாள். "தப்பு மூர்த்தி மேல கிடையாது ஸார்.. மூர்த்தி வெறும் அம்புதான்.. மகேஷோட அப்பா என்ன சொல்றாரோ அதைதான் மூர்த்தி சென்றான்.. மகேஷ் மேலயே ஆயிரத்தெட்டு தப்பு இருக்கும் போது அடுத்தவங்களை குறை சொல்லி என்னவாக போகுது.."

அவள் அருகே வந்து அமர்ந்தார் குமரன். "மகேஷ் மேல் எந்த தப்பும் கிடையாது சக்தி.. உனக்கு தெரியாதுங்க காரணத்துக்காக அவன் தப்பை மட்டுமே செய்யுறான்னு நினைக்காத.."

"உங்களுக்கு ஏன் ஸார் புரிய மாட்டேங்குது..? அவன் செய்ற தவறுகள் உங்க கண்ணுக்கு மட்டும் ஏன் தெரியவே மாட்டேங்குது..?" என்று கோபமாக கேட்டாள் சக்தி.

குமரன் திட்டிவிட்டு சென்றவுடன் மகேஷ் தலையை பிடித்தபடி அருகிலிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான். தன்னால்தான் சக்திக்கு இப்படி ஆகி விட்டது என நினைத்து தன்னையே நொந்தபடி அமர்ந்திருந்தான்.

'ஒருநாள் கூட பாதுகாப்பு இல்லாத இந்த வீட்டில இத்தனை வருசமா அவ வாழ வரலன்னு இவ்வளவு நாள் திட்டிட்டு இருந்தேன்.. ஆனா இப்போதான் புரியுது.. தப்பு அவ மேல இல்ல.. எல்லாமே என் தப்பு.. என்னை சுத்தி இருப்பவங்களுக்கு சக்தியை பிடிக்கலன்னு தெரியும்.. ஆனா அவளை கொல்ல போற அளவுக்கு அவங்க தங்களுக்குள்ள வெறுப்பை வளர்த்து வச்சிருப்பாங்கன்னு நான் நினைக்கவேயில்ல..'

"மகேஷ் ஸார்.." யாரோ அழைக்கவும் தலை நிமிர்ந்து பார்த்தான் மகேஷ். எதிரில் ரியா நின்றுக் கொண்டிருந்தாள். தனது குழப்பங்களையும் சோகங்களையும் மனதில் வைத்துக் கொண்டு அவளை வெறுமையாக பார்த்தான் மகேஷ்.

"நான் ரியா ஸார்.. அன்புசெல்வியோட பிரெண்ட்.." என்றபடி அவனருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ரியா.

"உங்களை பத்தி அன்பு நிறைய சொல்லியிருக்கா ஸார்.. கொஞ்ச நாள் முன்னாடி நான் கூட காதலுக்காக பெத்தவங்களை எதிர்த்தவதான்.." என்று அவள் ஆரம்பிக்க, அவளை திரும்பி பார்த்து சின்னதாக புன்னகைத்தான் மகேஷ்.

"தெரியும்மா.. உன் காதல் சேராம போக காரணம் சக்தின்னு கூட தெரியும்.."

அவள் மறுத்து தலையசைத்தாள். "நீங்க இப்படிதான் அன்புக்கிட்ட சொன்னிங்கன்னு அவ சொன்னாள்.. உங்களுக்கு முழு உண்மையும் தெரியாது ஸார்.. நான் காதலிச்சது ரொம்ப தப்பான ஒருத்தனை.. சக்தி மேடம் இல்லன்னா இன்னேரம் என் வாழ்க்கை என்னவாகியிருக்கும்ன்னு யோசிச்சாலே பயமா இருக்கு.."

மகேஷ் சட்டென நேராக அமர்ந்தான். "என்ன சொன்ன..? தப்பான ஒருத்தனை காதலிச்சிட்டியா..?"

அவள் நடந்தது முழுக்க சொல்லி முடித்தாள். அதை கேட்ட பிறகு மகேஷிற்கு கோபத்தில் நரம்புகள் முறுக்கேறியது.

"சக்தி அவனை எதுவும் செய்யாம சும்மா விட்டுட்டாளா..?" குழப்பமாக கேட்டான் மகேஷ்.

"அவன் அவங்க தோழி கலையோட அண்ணன் மகன்தானாம்.. அவன் மேல கேஸ் போட முடியலன்னு அவங்க சொன்னாங்க.. ஆனா எனக்கு தெரியும் அவங்களால முடியாதது உங்களால் முடியும்ன்னு.. எனக்கு அவன் கையையும் காலையும் உடைக்கணும் ஸார்.."

சக்தியால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது என மகேஷிற்கு இப்போது புரிந்து போனது. . அந்த வீட்டு மனிதர்கள் தங்களிடமிருந்த பணத்தால் புகார் கொடுக்க நினைப்பவர்களையே விலைக்கு வாங்குபவர்கள் என்பதை மகேஷ் நன்றாக அறிவான். கலையின் வீடு ஒரு காட்டு பங்களாவை போல் என்பதை மகேஷ் நன்றாக அறிவான். அதனால்தான் அங்கு நடந்த இந்த தவறை அவன் இவ்வளவு நாள் அறியவேயில்லை.
ரியா தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி அவனிடம் நீட்டினாள்.

"உடம்பு சரியில்லாத என் மாமியார் இந்த ஹாஸ்பிட்டலதான் அட்மிட் ஆகியிருக்காங்க.. அவங்களுக்கு துணையா இருந்தேன் நான்.. அதனால் என்கிட்ட காசு எதுவும் இல்ல.. இதை வச்சிக்கிட்டு அவனை அடிங்க.." என்றாள்.

மகேஷ் அந்த மோதிரத்தை கையில் எடுத்து பார்த்தான். அவளை சிரிப்போடு பார்த்தான். "அவன் கையையும் காலையும் உடைக்கிறது என் கடமைம்மா.. அதனால் இந்த மோதிரம் எனக்கு வேண்டாம்.. அவங்க குடும்பத்து மேல் எனக்கு ரொம்ப வருசமா கொலவெறி இருக்கு.. இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.. நான் அவனை கவனிச்சிக்கிறேன்.. நீ பத்திரமா போம்மா.."

அவள் தலையசைத்து விட்டு எழுந்தாள். ஆனால் உடனே அமர்ந்தாள். "நீங்களும் சக்தி மேடமும் காதலிக்கிறிங்கன்னு அன்பு சொன்னா.. சக்தி மேடம்.." அவளை இடை நிறுத்தினான் மகேஷ்.

"நான் மட்டும்தான் அவளை நேசிக்கிறேன்.. அவ என் நேசத்தை வித்துட்டா.." என்றவன் சொன்ன பிறகே தனது தவறை உணர்ந்தான். இதையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று அவன் மனது அவனிடம் கேட்டது.

ரியா குழப்பமாக பார்த்தாள் அவனை. ஆனால் சீக்கிரமே அவளுக்கு விசயம்‌ அரைகுறையாக புரிந்து போனது.

"ஒரு பக்கம் மட்டுமே பார்த்தா எல்லாமே தப்பாதான் தெரியும் ஸார்.. உங்களுக்கு தெரியாத நிறைய விசயம் அவங்க வாழ்க்கையில் நடந்திருக்கலாம்.. இத்தனை வருசமா வேறு ஒரு ஆணை திரும்பி பார்க்காம தனியா வாழும் போதே தெரியலயா நீங்கதான் அவங்க வாழ்க்கையேன்னு.. அவங்க அன்னைக்கு ஒரு டயலாக் சொன்னாங்க.. 'காதலர்கள் பிரிஞ்சி வாழுறதால் அவங்க காதல் ஒன்னும் செத்துட போறதில்ல.. அவங்க உயிரோடு இருந்து புத்திசாலித்தனமான செயல்பட்டா பத்து வருசத்துக்கு பிறகும் கூட அவங்க காதல் ஒன்னு சேரலாம்'ன்னு.. அவங்களும் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கலாம் இல்லையா..? நீங்க அடுத்தவங்க காதலுக்காக செய்ற உதவியை பார்த்ததிலிருந்து என் பிரெண்டுக்கு உங்க லவ்வை சேர்த்து வைக்கணும்ன்னு ஆசை.. அதனால்தான் நான் இதை உங்களுக்கு சொன்னேன்.. காரணமில்லாம யாரும் காதலரை பிரிஞ்சி வாழ மாட்டாங்க.." என்றவள் தூரத்தில் தன் கணவன் வருவது தெரிந்ததும் எழுந்து நின்றாள்.

"என் வீட்டுக்காரர் வந்துட்டார் ஸார்.. நாம அப்புறம் பார்க்கலாம்.." என்றவள் தன் கணவனை நோக்கி நடந்தாள்.

"ஏன் இவ்வளவு லேட்..? வர வழியில எவளையாவது பார்த்துட்டு நின்னுட்டியா..?" அவள் பொய் கோபத்தோடு தன் கணவனை கேட்பது மகேஷிற்கு இங்கு கேட்டது.

குமரன் சக்தியின் கையை பிடித்து தனது இரு கரங்களுக்கு இடையில் வைத்துக்கொண்டார் குமரன். "உன் வாழ்க்கையில் நடந்த சில விசயங்களை என்னால அவன்கிட்ட சொல்ல முடியாது.. அவன் செய்ற சில விசயங்களை பத்தி நான் உன்கிட்ட சொல்ல முடியாது.. ஏனா நீங்களே நீங்க செய்ற விசயம் உங்க ஒருத்தருக்கொருத்தர் தெரியக் கூடாதுன்னு மறைச்சிதான் செய்றிங்க.. உங்க இரண்டு பேர் வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்ட ஒரே காரணத்துக்காக நான் நீங்க போட்டுக்கிட்டு இருக்கற வேலிகளையும் வேசங்களையும் கலைச்சிட முடியாது.. நீ என்னைக்கு அவனை நம்புறியோ அன்னைக்குதான் இனியனை பத்தி நீ அவன்கிட்ட சொல்வ.. அது போலதான் அவனும்.. நீங்களே உங்களுக்குள்ள நம்பிக்கை இல்லாம இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்..?"

சக்திக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது. "உங்களுக்கு தெரியாது ஸார் ஒரு விசயம்.. நானும் ஒவ்வொரு முறையும் மகேஷோடு சேர்ந்து வாழணும்ன்னு ஆசைப்படும் போதெல்லாம் ஒரு தடங்கல் வந்திருது.. அன்னைக்கு ஒருநாள் நைட் மூர்த்தி எங்க தெருவுக்கே வந்து என் கழுத்துல கத்தி வச்சிட்டான்.. ஆனா நான் அவனோட பிடியிலிருந்து தப்பிச்சி அவனை அங்கிருந்து போக விட்டுட்டேன்.. அன்னைக்கு நைட் எனக்கு என் மேல புது நம்பிக்கை வந்திருச்சி.. எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும் நான் என்னையும் காப்பாத்திக்கிட்டு இனியனையும் இந்த கொலைகார கூட்டம் மத்தியில் காப்பாத்த முடியும்ன்னு நம்பிக்கை வந்துருச்சு.. இனியனை பத்தி மகேஷ்கிட்ட சொல்லனும்ன்னு ஆசையா இருந்தது. ஆனா அவன் இன்னைக்கு பழைய மகேஷா இல்லையே.. ஒரு ரவுடி.. ஒரு கொலைகாரன்.. அவன்கிட்ட நான் எப்படி சொல்வேன்... 'நமக்கு ஒரு மகன் இருக்கான்.. இவ்வளவு நாள் பயத்துல அவனை மறைச்சி வச்சிருந்தேன்.. ஆனா இன்னைக்கு புது நம்பிக்கை வந்திருச்சி... வா.. சேர்ந்து வாழலாம்'ன்னு..? இல்ல இனியன்கிட்டதான் எப்படி சொல்வேன் 'உங்க அப்பா ஒரு கொலைகாரன்'ன்னு..?"

குமரன் உண்மையை சொல்ல முடிவு செய்து விட்டார். மகேஷ் காதலர்கள் யாரையும் கொல்லவில்லை என்பதை இவளிடம் சொல்லலாம் என அவர் வாய் திறந்த நேரம் சக்தியே மீண்டும் தொடர்ந்தாள்.
"அவனோட ரவுடித்தனம் ஒரு தடை இல்லன்னு சொல்ல நினைக்கிறிங்களா ஸார்..? அவன் செஞ்ச கொலைகளுக்கு ஆதி காரணம் அந்த காதலர்களோட பெத்தவங்கதான்னு சமாதானம் செய்ய முயற்சிக்கிறிங்களா ஸார்..?என்னைக்காவது ஒருநாள் என் மனசை கூட நீங்க மாத்திடலாம்.. ஆனா இனியனை பத்தி அவனுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்ன்னு தெரியுமா ஸார்..? அவன் தன் வீட்டு ஆட்களையே கொன்னுடுவான் ஸார்.. தன்னோட அப்பாவையே கொன்னுடுவான்.. தன் மாமாவையே கொன்னுடுவான்.. இந்த பாவத்துக்கு நான் எப்படி ஸார் ஆரம்ப புள்ளி வைப்பேன்..?" என்று கேட்டவளின் கண்களில் ஓரம் கண்ணீர் துளிர்த்தது.

அவள் தன் கண்களை துடைக்க துடைக்க மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.

"ஸாரி ஸார்.. ஒரு போலிஸா எனக்கு போதுமான மன கட்டுப்பாடு இல்ல.." என்றவளுக்கு குரல் உடைந்திருந்ததை உணர்ந்தவர் அவளை தன் தோளோடு சாய்த்து கொண்டார்.

"இதுக்கும் நாம் செய்யுற வேலைக்கும் என்னம்மா சம்பந்தம்..? மனுசங்க எல்லோருக்கும் மைனஸ் பாயிண்ட் இருக்கறது சகஜம்தான்.. உனக்கு காதல் மைனஸ் பாயிண்ட்.. அதுக்காக நீ ஒன்னும் பணிக்கு தகுதியில்லாதவன்னு அர்த்தம் கிடையாது.. தப்பு செய்யுறது காதலன்னு தெரிஞ்சும் அவனை உடனுக்குடனே அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போடுறியே.. அதுலயே தெரியலையா உன் மன உறுதி..?" என அவர் சிரிப்போடு கேட்டார்.

ஆனால் அவரின் சிரிப்பு அறை கதவை திறந்து உள்ளே வந்த மகேஷை கண்டதும் மறைந்து போனது.

"அவளை விட்டு தள்ளி உட்காருங்க மாமா.." என்றவனின் குரலில் இருந்தது எக்கச்சக்கமான கோபம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top