நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷின் கோப முகம் கண்டு சக்தியிடமிருந்து தள்ளி அமர்ந்தார் குமரன்.

மகேஷ் தன் கையிலிருந்த டீயை சக்தியிடம் நீட்டினான்‌. அவள் அவனை பார்த்தபடியே அதை வாங்கி கொண்டாள். மகேஷ் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

"நான் போய்ட்டு அப்புறமா வேணா வரேன்.." என்றபடி எழுந்தார் குமரன்.

"பரவால்ல மாமா... நீங்க இவளோடு பேசுங்க.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு‌‌.. நான் அதை போய் பார்த்துட்டு வந்துடுறேன்.." என்றவன் அறையை விட்டு திரும்பி செல்ல நடந்தான். இரண்டு எட்டு வைத்ததும் மீண்டும் திரும்பி இவர்களை பார்த்தான்.

"தள்ளி உட்கார்ந்து பேசுங்க.. ஒன்னும் குறைஞ்சிட மாட்டிங்க.." என்றவன் குமரன் தன்னை முறைப்பதை அறிந்தும் கூட அதை பொருட்படுத்தாமல் வெளியேறினான்.

அவன் சென்ற பிறகு சக்தியை பார்த்தவர் கலகலவென சிரித்தார். "ஏன் ஸார் சிரிக்கிறிங்க..?" என சக்தி கேட்டாள்.

"இவனுக்கு பொசஸிவ்னெஸ் அநியாயத்துக்கு அதிகமா இருக்கு.. இவன் உன்னை விட்டு விலகி இருக்கறது பெரிய அதிசயம்தான்.."

சக்தி சின்னதாக புன்னகைத்தாள். "நீ இல்லன்னு சொல்றியா‌‌..?" என கேட்டார் குமரன்.

"இல்லன்னு சொல்லல.. ஆனா அவன் கொஞ்சம் ஓவர் சீன் ஸார்.."

"அதிகமா லவ் பண்ணா ஓவர் சீனா.." அவர் சட்டென திருப்பிக் கேட்டார். அவளால் இப்போது பதில் பேச முடியவில்லை.

சக்திக்கு தெரியும் மகேஷின் காதலை பற்றி. சொந்த பந்தங்களின் எதிர்ப்பிற்கு இடையில் தன் காதலை பலியாக்கி விட பிடிக்காமல் அவளாகவே தன் கழுத்திலிருந்த தாலியை மனமே இல்லாமல் கழட்டி மகேஷிடம் தந்து விட்டு தன் தந்தையுடன் சென்று விட்டாள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மகேஷின் பெற்றோர் தன்னை மருமளாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்பினாள்.

சக்தியின் அப்பா அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. "ஸாரிப்பா.. உங்ககிட்ட சொல்லாம அவன் கூட நான் போயிருக்க கூடாது.. அவன் உங்ககிட்டயும் சம்மதம் வாங்கிட்டதா சொன்னான்.. அவன் சொன்னது முழுசா பொய்யின்னு இங்கே வந்தபிறகுதான் எனக்கு தெரியும்.. எவ்வளவு முட்டாளா அவனை நம்பியிருக்கேன்னு இப்போதான் புரியுது.. ஸாரிப்பா.." காலடியில் அமர்ந்து கண்ணீரோடு சொன்னவளின் தலையை வருடி விட்டார் அப்பா.

"மகேஷ் என்கிட்ட சொல்லிட்டுதான் உன்னை கூட்டிட்டு போனான்.." அவர் சொல்லவும் திகைத்து போய் அவரை பார்த்தாள் சக்தி.

"அவன் என்கிட்ட கெஞ்சி கேட்டான்ம்மா.. அவன் காதலிக்கறதுல என்னை மாதிரியே இருக்கான்.. அவன் என்னோட பிரதிபிம்பம் மாதிரியே இருக்கான்.. உன்னை பிரியாம இருக்கனும்ங்கற ஆசையிலதான் அவன் இப்படி ஒரு தப்பை பண்ணிட்டான்.."

சக்திக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வருவது போலிருந்தது. அப்பாவி அப்பாவும் அவனது நடிப்பிற்கு ஏமாந்து போயுள்ளாரே என நினைத்து ஆதங்கப்பட்டாள்.

சக்தி பிரிந்து சென்ற பிறகு மகேஷை அவனின் அப்பா கிட்டத்தட்ட ஒருவாரம் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார். மகேஷ் சக்தியை பார்க்க துடியாய் துடித்தான். முத்து ஏமாந்திருந்த நேரத்தில் மகேஷ் தனது வீட்டு சிறையிலிருந்து தப்பி சக்தியின் வீடு தேடி ஓடினான்.

அவனை கண்டதும் சக்திக்கு குழப்பமும் சந்தோசமும் ஒரு சேர வந்தது. ஒரு வார தாடி வளர்ந்த முகத்தோடும், இவளை காணாததால் உணவை கை விட்டிருந்ததால் உடல் மெலிந்தும், கண்களில் ஒளி இழந்தனை போலவும் இருந்தான் மகேஷ். கண்டவுடன் அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டான் அவன். சில நிமிடத்திற்கு பிறகு விலகி நின்றான் அவனாகவே. அவளது கையை இறுக்க பற்றினான்.

"வா.. நாம எங்கேயாவது போயிடலாம்.."

அவனிடமிருந்து தனது கையை விலக்கி கொண்டாள் சக்தி.

"என்னால வர முடியாது மகேஷ்.." என்றவளை குழப்பமாக பார்த்தான் அவன்.

"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. அதுக்காக என்னால தப்பு செஞ்சவங்கள போல ஓடி ஒளிஞ்சி வாழ முடியாது.. என்னைக்கு உன் பெத்தவங்க என்னை ஏத்துக்கறாங்களோ அன்னைக்கு நான் உன்னோடு வரேன்.. நீ கூப்பிடுற இடம் அடுத்த கண்டமாவே இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு உன் கையை பிடிச்சிக்கிட்டு வரேன்..."

"அவங்க உன்னை ஏத்துக்கலன்னா நீ என்னை ஏத்துக்க மாட்டியா..?" அவன் கோபமாக கேட்டான்.

"எனக்கு இந்த ஓடி போறது பிடிக்கல மகேஷ்.. அவங்களுக்கு நம்மோட காதலை பிடிக்கல.. அவங்களால என் உயிருக்கு மட்டுமில்ல உன் உயிருக்கும் ஆபத்து வரும்.. அந்த ரிஸ்க் எடுக்க நான் தயார் இல்ல.. உன் சொந்த பந்தம் என் அப்பாவை கேவலமா பேசுவாங்க.. என்னை பெத்ததுக்காக அப்படிப்பட்ட அவமானத்தை நான் என் அப்பாவுக்கு தேடி வைக்க மாட்டேன்.."

"அவங்க கடைசி வரை சம்மதிக்கலன்னா என்ன பண்றது..?" என கேட்டான்.

"நாம சேர்ந்து வாழவே முடியாது மகேஷ்.. உன்கிட்ட மனசை தந்துட்டேன்.. சாகற நாள் வரை உனக்காக காத்திருப்பேன்.. உன்னால என்னைக்கு சம்மதம் வாங்க முடியுதோ அன்னைக்கு என்னை தேடி வா.."

அவன் அவள் முன் சிலையாக நின்றிருந்தான். அவள் அடுத்து பேசும் முன் முத்து தனது ஆட்களோடு அங்கு வந்தார். சக்தியை திட்டி தீர்த்து விட்டு திமிறிய மகேஷை தங்களோடு இழுத்து சென்றார் அவர். அவனுக்கு எதுவும் ஆகி விட கூடாதென தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களையும் கும்பிட்டாள் சக்தி.

மகேஷ் அவள் வர மறுத்த பிறகும் கூட இவளை மறக்கவே இல்லை.

மகேஷ் அவளை தேடி வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. சக்திக்கு அன்று காலையில் எழுந்தபோதே மயக்கம் வருவது போலிருந்தது. பயத்தோடு நாட்காட்டி பார்த்து கணித்தவளுக்கு தான் கருவுற்றிருப்பது புரிந்து போனது. கொஞ்சம் நஞ்சம் இருந்த சந்தேகத்தையும் தீர்க்க மருத்துவமனைக்கு சென்றாள் அவள். கல்லூரி முடித்தவுடனே பலபல இண்டர்வியூற்கு சென்ற செல்வாவிற்கு ஒரு வாரம் முன்புதான் ஆக்ராவில் வேலை கிடைத்திருந்தது. தங்குவதற்கு வீடு பார்த்தவன் தனது அம்மாவை அழைத்து செல்ல ஊருக்கு வந்திருந்தான். குழப்பதோடு இருந்த சக்திக்கு துணையாக அவளோடு மருத்துவமனைக்கு சென்றான் செல்வா.

ஒரு பெண் மருத்துவர் அவள் தாயாக போவதை உறுதிப்படுத்தினாள். சக்திக்கு என்ன செய்வதென குழப்பமாக இருந்தது. கையில் மருத்துவர் தந்த ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு வராண்டாவிற்கு வந்தவள் செல்வாவை தேடினாள். அவன் அதற்குள் எங்கோ சென்று விட்டிருந்தான். குழப்பமும் பயமும் அதனோடு சிறு சந்தோசமுமாக அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.

தான் கருவுற்றிருப்பது தெரிந்தாலாவது மகேஷின் வீட்டில் தன்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற சிறு நப்பாசை அவளுக்கு வந்தது. இந்த விசயம் அறிந்தால் மகேஷ் ரொம்ப மகிழ்வான் என்பதை நினைக்கையில் அவளுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அவளது அறைகுறை சந்தோசத்திற்கும் முடிவு வந்தது விரைவில்.

அவள் மருத்துவமனை வந்த அதே நாளில் அவள் வராண்டாவில் குழப்பத்தோடு அமர்ந்திருந்த அதே நேரத்தில் மகேஷை ஸ்டெச்சர் ஒன்றில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர் அவனது குடும்பத்தினர். அவனை அப்படியொரு நிலையில் பார்த்தவுடன் பதறிப்போய் எழுந்து ஓடி வந்தாள் சக்தி. அவள் கையிலிருந்த டாக்டர் ரிப்போர்ட் அவள் அமர்ந்திருந்த இடத்திலேயே விழுந்து விட்டது.

"மகேஷ்க்கு என்ன ஆச்சி..?" குரல் நடுங்க கேட்டவளை மகேஷிடமிருந்து விலக்கி கீழே தள்ளினார் முத்து. உடன் வந்தவர்கள் ஸ்டெச்சரை தள்ளி சென்றனர். கீழே விழுந்து கிடந்தவளை முத்து ஆத்திரத்தோடு பார்த்தார்.

"உன்னால்தான் இவ்வளவும் வந்தது. என் மகனை அப்படி என்ன சொக்குபொடி போட்டு மயக்கின..? சக்தி சக்தின்னு பைத்தியமா திரியறான். என் குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு இவன்தான்... உன்னை கல்யாணம் பண்ணி உன்னோடு வாழ்ந்தா எப்படி இந்த சமுதாயத்துல இவன் கௌரவமா வாழமுடியும்..? என் மகன் வாழ்க்கையையே அழிச்சிட்டியே.." என்று திட்டி தீர்த்தார் அவர்.

அவரோடு இருந்த மகேஷின் அக்கா அவள் கைவிட்டு வந்திருந்த டாக்டர் ரிப்போர்ட்டை எடுத்துப்பார்த்தாள்.

"அப்பா.. இந்த பொண்ணு கர்ப்பமா இருக்கா.." என்றாள் அதிர்ச்சியோடு. இதை கேட்டு அவரின் கோபம் மேலும் அதிகமானது.

"என் மகன் வாழ்க்கையை மொத்தமா நாசமாக்கிட்டியே.." என்றார் அவர். சக்திக்கு திருப்பி பேசும் அளவிற்கு கோபம் வந்தது. ஆனால் தைரியம்தான் போதவில்லை. இப்படியொரு சூழ்நிலையை சந்திப்போம் என அவள் கனவில் கூட நினைத்தது இல்லை.

மகேஷை மருத்துவர் பார்வைக்கு விட்டுவிட்டு வந்த மூர்த்தியை பார்த்தார் முத்து. "இவளை நம்ம மாந்தோப்புக்கு கூட்டிப் போய் கட்டி வை.." என்றார். சக்தி மிரட்சியோடு பார்த்தாள் மூர்த்தியை. அவன் யோசிக்காமல் அவளை நெருங்கினான். சக்தி பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த வராண்டாவில் மனிதரென ஒருத்தரும் இவள் கண்களுக்கு தட்டுப்படவில்லை.

"என்னை எதுவும் பண்ணிடாதிங்க.." என்றாள் பயத்தோடு. அவள் கத்த முயலும் முன் மூர்த்தி அவளது வாயை பொத்தி அருகிருந்த ஒரு வாயில் மூலம் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றான். சக்தி வெகு விரைவில் சுயநினைவை இழந்து விட்டாள்.

சக்தி மீண்டும் கண் விழித்தபோது அவளின் கையும் காலும் கட்டப்பட்டிருந்தது. அவளின் எதிரே முத்துவும் மூர்த்தியும் கோபமாக நின்றுக் கொண்டிருந்தனர். எக்கச்சக்கமாக பயந்து போயிருந்தாள் சக்தி. கை காலெல்லாம் நடுங்கியது அவளுக்கு. இதயம் படபடவென துடித்தது. முகம் வியர்த்திருந்தது.

"மகேஷ்க்கு என்ன ஆச்சி..?" என்றாள் நினைவு வந்தவுடன்.

முத்து அவளெதிரே அமர்ந்து அவள் கன்னத்தில் ஒரு அறையை விட்டார். "உன்னாலதான் எல்லாமே ஆச்சி.. உன்னோடு வாழ நான் அவனுக்கு சம்மதம் தரலன்னு அவன் விஷம் குடிச்சிட்டான்.. ஒத்த மகன்னு பாசமா வளர்த்தினேன் நான்.. ஆனா இப்போ செத்தா சாகட்டும்ன்னு ஹாஸ்பிட்டல்ல அனாதையா விட்டுட்டு வந்திருக்கேன் உன்னால.." என அவர் சொல்ல சக்தியின் கண்களில் கண்ணீர் சிதறியது.

"தயவுசெஞ்சி அவனை காப்பாத்துங்க.." என்று கெஞ்சினாள் அவள்.

"நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்.. அவனை காப்பாத்துங்க.." அவர்களிடம் சொல்ல கூடாத இந்த வார்த்தைகளை தன் காதலன் மீது கொண்ட காதலால் சொன்னாள் சக்தி.

"நீ செத்தாதான் நான் அவனை காப்பாத்துவேன்.. அவன் பாதி வச்ச வெசம் இது.. குடிச்சிட்டு செத்து போ.. நான் அவனை காப்பாத்துறேன்.." சக்திக்கு இதயமே நின்று விட்டதை போலிருந்தது. மகேஷின் உயிர் காக்க சாகவும் விருப்பம்தான் அவளுக்கு. இன்னும் இந்த உலகத்தை பார்க்காத தன் குழந்தையை கருவிலேயே கொல்லுவதற்குதான் அவளுக்கு மனம் வரவில்லை.

"இவளை எதுக்கு மாமா கேட்கறிங்க..? நீங்க சொல்லுங்க.. நானே இவளை கொன்னுடுறேன்.." என்றவன் முத்து கையிலிருந்த விஷபாட்டிலை வாங்கினான். முத்து அவளை வெறுப்போடு பார்த்தார்.

"இவளை நான் இனி என் ஆயுசுக்கும் பார்க்க கூடாது.." என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மூர்த்தி அவளை விஷப்பாட்டிலோடு நெருங்கினான். சக்திக்கு உடம்பு வெடவெடவென நடுங்கியது"என்னை கொன்னுடாதிங்க.. ப்ளீஸ்.." என்றவளை வெறுப்போடு பார்த்தவன் யோசிக்கவும் இடம் தராமல் அவளது வாயில் விஷத்தை வலுக்கட்டாயமாக ஊற்றி விட்டான். அவள் திமிற முயன்றாள். ஆனால் வலுவான பிடியிலிருந்து அவளால் தப்ப முடியவில்லை. அவன் தந்த விஷம் கசந்தபடியே அவளின் உயிரை எடுக்க உள்ளே சென்றது.

சக்திக்கு பயத்தினாலேயே மூச்சி தடுமாறியது. இறப்பின் கடைசி நொடி இது என்ற எண்ணம் அவளது இதயத்தின் ஆழம் வரை சென்று அவளை நடுங்க வைத்தது. சற்று நேரத்திலேயே கண்கள் இருண்டு வர மயங்கி விழுந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN