என் நெஞ்சுநேர்பவளே -7

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
7

ரதி தன் காதலை சொன்ன கணத்தில் திகைத்துப் போய் நின்றான் ஆதிரன்.. அவன் அப்படி நின்றது சில நிமிடங்கள்தான் பின்பு சுதாரித்து அவளை ஒரு முறை பார்த்த ஆதி எதுவும் பேசாமல் திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தான்...

ரதியோ அவன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து நிற்க, அவனின் இந்த மௌனமும் புறக்கணிப்பும் வேதனையை அளித்தது..

உள்ளிருந்த வேதனையை கண்கள் தன் கண்ணீரின் மூலம் வெளிக் கொணர, இமைகளை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்து தன் வேதனையை மனதிற்குள் வைத்துக்கொண்டு சிவகாமியிடம் சென்றாள்...

"என்னாச்சு தங்கம்! தம்பி சுத்தி பாக்குறேன்னு சொல்லுச்சு... திடீர்னு வீட்டுக்கு போறேன்னு பாதியிலேயே கிளம்பிருச்சு...."

"நாளைக்கு அவங்க ஊருக்கு போகணுமாம் அம்மாச்சி.. பொருளை எல்லாம் எடுத்து வைக்கணும்ன்னு சொன்னாங்க.. அதுதான் சீக்கிரம் போய்ட்டாங்க.."

"சேரி சேரி தங்கம் ரொம்ப நல்ல தம்பி இல்ல.. "

"ஆமாம் அம்மாச்சி ரொம்ப நல்லவங்க தான்... " என்றாள் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல்

இங்கு ஆதியோ தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்தான்... அதை பார்த்த கார்த்தி

"என்னடா பண்ணிட்டு இருக்க..."

"ஏன் பார்த்தா தெரியலையாமா..."

"அதெல்லாம் தெரியுது! ஏன் இப்ப பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தான் கேக்குறேன்..? "

"நான் இப்பவே சென்னை கிளம்புறேன்.."

"ஏனாம்..? "

"காரணம் எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது... நான் கிளம்புறேன் அவ்வளவுதான்...."

"அப்படி எல்லாம் நீ சொல்ல முடியாது.. காரணம் சொல்லித்தான் ஆகனும்... ஏன்னா நீ எங்க வீட்டுக்கு வந்து இருக்க.. இப்படி பாதியிலேயே போறேன்னு சொன்னால் எனக்கு காரணம் சொல்லி தான் ஆகணும்...ஏன் இங்க யாராவது உன்னை ஏதாவது சொல்லிட்டாங்களா...? இல்லை பிடிக்காத மாதிரி ஏதாவது நடந்ததா..? "

"ப்ச்.. அதெல்லாம் யாரும் என்னை எதுவும் சொல்லல... நான் இங்க இருந்தா மென்மேலும் தேவையில்லாத பிரச்சனை வரும் அதனால தான் நான் போறேன்.. "

"என்ன ஆச்சு அந்தப் பொண்ணு ஏதாச்சும் சொல்லுச்சா" என்று கார்த்தி கேட்க ஆதி அமைதியாய் இருந்தான்...

"நீ அமைதியாய் இருக்கும் போதே தெரியுது அந்த பொண்ணு தான் உன்னோட பிரச்சனைக்கு காரணம்னு என்ன ஆச்சு சொல்லு...."

"அந்தப் பொண்ணுக்கு நானே பிரச்சனையாய் மாறி விடுவேனோங்கற பயத்தில் தான் போறேன்...."

"புரியிற மாதிரி சொல்லித் தொலை...."

சற்று நேரம் முன் நடந்ததை கூறினான் ஆதி...

"ஹே.. சூப்பர்டா..! பாரு அந்த பொண்ணே எவ்வளவு தைரியமா வந்து லவ்வ சொல்லி இருக்கு....நீயும்தான் இருக்கையே லவ்வு இருந்தும் இல்லை இல்லைனு சொல்லிட்டு திரியற..."

"சாவடிச்சிடுவேன் நாயே...! நான் எப்படா அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொன்னேன் உங்கிட்ட..."

"ஏன் சொன்னா தான் தெரியுமா...! அந்த பொண்ண பார்த்தாலே விழுந்து அடிச்சுக்கிட்டு ஓடறது என்ன... ஒளிஞ்சு பாக்குறது என்ன.. அடடா காதல் கண்ணில் தான் வழிஞ்சு ஓடுதே..! அப்புறம் என்ன எப்ப கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்லிட்டு திரியுற..." என்று சொல்லி கார்த்திக் சிரிக்கவும் தன் அருகில் இருந்த பேக்கை எடுத்து அவன் மீது வீசினான்...

"ஐயோ..! ஏன்டா எருமை மாடு... ! இப்படி இந்த பையை தூக்கி எறிஞ்சு என்னைய சாவடிக்க பாக்குற.... உண்மைய சொன்னா ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ..."

"பரதேசி பரதேசி திரும்பத்திரும்ப உண்மைனு என்னத்த நாயே சொல்ற.."

"ம்ம்.. சுரைக்காய்க்கு உப்பில்லை ன்னு சொல்றாங்க...இங்கபாரு அந்த பொண்ண நீ லவ் பண்ற தானே..! இல்லைன்னு என் மேல சத்தியம் பண்ணு... "என்று கார்த்தி சொன்னதும் வேகமாக அவன் தலை மேல் கை வைக்க வந்தான் ஆதி....

"வெயிட் ஒரு நிமிஷம் பொறு" என்று தடுத்தான் கார்த்தி

" நீ என் மேல சத்தியம் பண்ண சொன்னா, இவன் தானே செத்தால் சாகட்டும்ன்னு பொய் சத்தியம் செஞ்சாலும் செய்வ நீ.. உங்க அம்மா மேல சத்தியம் பண்ணு.. அப்ப நான் ஒத்துக்குறேன், நீ அந்த பொண்ண லவ் பண்ணலைன்னு... "என்று கார்த்தி சொல்லவும் அதுவரைக்கும் இல்லை இல்லை என்று வாதாடி கொண்டு இருந்த ஆதி அமைதியாய் கட்டிலில் அமர்ந்து விட்டான்...

"பாரேன்...!என் மேல சத்தியம் பண்ணுன்னு சொன்னவுடனே பறந்துகிட்டு ஓடி வந்தவன், உங்க அம்மா மேல சத்தியம் பண்ணுன்னு சொன்ன உடனே இப்படி உட்கார்ந்துட்ட.. அப்போ நான் செத்தா பரவாயில்லையாடா... "

"போய் எங்கேயாவது தும்பை செடியிலாச்சும் தூக்கு மாட்டி செத்து தொலைடா... பரதேசி... என்னை கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ற..."

'அதெல்லாம் விடு... நான் தும்பைச் செடிலையே கூட தூக்கு மாட்டி செத்துப் போறேன்...நீ ரூட்டை மாத்தாதே... உண்மையை சொல்லு.? அந்த பொண்ண நீ லவ் பண்றியா இல்லையா..? "

"ஹய்யோ.. அது லவ்வா இல்லையான்னு எனக்கே தெரியல டா. ஜஸ்ட் புடிச்சிருக்கு... ஒரு கிரஸ்.. அவ்வளவுதான்.. அதுக்காக நான் அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொல்லிட்டு, அந்த பொண்ணு பின்னால சுத்த முடியாது.... அதோட அந்த பொண்ணு இப்ப தான் பன்னிரண்டாவது முடிச்சிருக்கு... இன்னும் சின்ன பொண்ணுடா... அதுகிட்ட போய் நானும் உன்ன லவ் பண்றேன்னு சொல்லி அது மனச கலைக்கக் கூடாது..அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா...அதோடு அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ்வுன்னு, அதுவும் இந்த வயசுல சொல்லும்போது அதை எப்படி ஏத்துக்க முடியும்... அதுக்கும் என் மேல ஒரு இன்ஃபேக்ச்சுவேஷன் ஆகவும் இருக்கலாம்...அப்படி இருக்கும்போது அந்தப் பொண்ணும் என்ன லவ் பண்ணுதுன்னு நானும் லவ் பண்றேன்னு சொல்லிக்கிட்டு ஒன்னா சுத்த சொல்றியா...."

"இவ்ளோ நல்லவனா டா நீ...? "

"இதுல நல்லவன் கெட்டவன்னு என்னடா இருக்கு... நமக்குன்னு ஒரு மெச்சூரிட்டி வேணும் இல்லையா...அதோட எந்த ஒரு முடிவும் எடுக்கறதுக்குக்கான வயசும் இது இல்லைனு நான் நினைக்கிறேன்... அதனால தான் என்னோட விருப்பத்தை நான் மறைத்து வச்சிருக்கேன்... மொதல்ல எனக்கு என்ன பத்தி ஒரு தெளிவு வேணும்... அப்புறம் தான் நான் அந்த பொண்ண பத்தி யோசிக்க முடியும்...."

"அப்படி நீ யோசிச்சு அந்த பொண்ணு தான் வேணும்னு முடிவு எடுக்கும்போது, அந்தப் பொண்ணு உனக்காக இல்லைனா நீ என்ன செய்வ...."

"அந்தப் பொண்ணுக்கு நான் ஏத்தவன் இல்லைன்னு ஒதுங்கிப் போய்டுவேன்... "

"சொல்றது ஈசி மச்சி... ஆனால் அந்த நிலைமை உனக்கு வரும்போதுதான் தெரியும் அதோட கஷ்டம் எவ்வளவுன்னு.. "

"அதெல்லாம் வரும்போது நான் பார்த்துக்கறேன்..."

"சரி அப்புறம் உன் இஷ்டம்... அதுக்காக நீ இப்பவே போறேன்னு சொல்றதை ஒத்துக்க மாட்டேன்.... வீட்டுல கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது... ஒழுங்கா நாளைக்கு வரைக்கும் என்னோட இருந்துட்டு நைட் என்னோட கிளம்புற அவ்வளவுதான்.."

"சரி சரி இருக்கிறேன்.."
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN