நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் கலையின் வீட்டின் முன் தனது வாகனத்தை நிறுத்தினான். அந்த வீட்டின் மீதும் அந்த வீட்டு மனிதர்கள் மீதும் அவனுக்கு இருந்த கோபத்தை இன்று தணித்துக் கொள்வது என முடிவோடு இருந்தான்.

அவன் காம்பவுண்ட் கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல அவனை கண்டதும் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் சிறு பயத்தோடு அவனை பார்த்தனர்.

கலையின் தந்தை இவன் வருவதை பார்த்தவுடன் பற்களை கடித்தபடி அவனை நோக்கி வந்தார்.
"நீ ஏன்டா இங்கே வந்த..?" என்றபடி பாய்ந்து வந்தவரை அலட்சியமாக பார்த்தவன் வழியோரம் இருந்த ஒரு உருட்டு கட்டையை குனிந்து எடுத்தான். அவன் உருட்டு கட்டையை சுற்றியபடியே அவர் அருகே நெருங்கவும் அவர் பயந்து போய் ஓரடி பின்னால் நகர்ந்தார். அவன் அவரை கண்டுக் கொள்ளாமல் அவரை தாண்டிக் கொண்டு வீட்டினுள் புகுந்தான். கலையின் அப்பாவிற்கு கை கால்கள் நடுங்கியது. இவன் சீனுவிற்காக வந்துள்ளான் என்பதை அறிந்துக் கொண்டவருக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.

மகேஷ் வீட்டிற்குள் நுழைந்து சீனுவை தேடினான். சுவற்றில் இருந்த குடும்ப புகைப்படத்தில் கலை சிரித்தபடி நடுவில் நின்றுக் கொண்டிருந்தாள்.

மகேஷ் தன் வீட்டாரிடம் தன் திருமணத்திற்கு சம்மதம் வாங்க போராடினான். கடைசி முயற்சியாக முட்டாள் போல விஷத்தை கையில் எடுத்தான். அவன் மருத்துவமனையில் குணமாகி கண் விழித்தபோது அவனது குடும்பம் மட்டும்தான் அவனோடு இருந்தது. அவனது காதலுக்கு அதன் பின்னரும் கூட அவர்கள் சம்மதிக்கவில்லை. சக்தி அவனை பார்க்க கூட வரவில்லை. குணமாகியவுடன் தனது வீட்டாருக்கு தெரியாமல் சக்தியை தேடி ஓடினான் மகேஷ். ஆனால் அவள் வீட்டில் இல்லை. அவளது அப்பா தனக்கு எதுவும் தெரியாது என சொல்லி தனது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டார்.

அதன்பிறகு மகேஷை அவர்கள் வீட்டில் யாரும் பூட்டி வைக்கவில்லை. ஆனால் அவன் சக்தியை காணாமல் அரை பைத்தியமாகி போனான். தினமும் சக்தியின் வீட்டு வாசலில் தவம் கிடப்பவன் போல ஏக்கத்தோடு அமர்ந்திருந்தான். அவன் புத்தி தெளிந்து வந்து விடுவான் என முத்து நம்பினார்.

சோகமும் வேதனையுமாக இருந்த அவனுக்கு அந்த நாட்களில் ஒரே துணை சாமிநாதன் மட்டும்தான். இவன் விழுந்து கிடக்கும் இடம் தேடி வந்து இவனை வீட்டிற்கு அழைத்து செல்வான் அவன். மகேஷை சாப்பிட வைப்பான். மகேஷ் தூங்கும் போது அருகில் இருந்து அவனை கவனமாக கவனிப்பான். சக்தி திரும்பி வந்து விடுவாள் என தினம் தினம் நம்பிக்கை தந்துக்கொண்டிருந்தான். சாமிநாதனது உதவி இல்லாவிட்டால் தான் அந்த நாட்களை கடந்து வந்திருக்கவே மாட்டோம் என்பதை மகேஷ் நன்றாகவே அறிவான்.

சக்தி ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்தாள். மகேஷ் இவள் வந்தது அறிந்து உடனடியாக பார்க்க ஓடி வந்தான். "எங்க போன இவ்வளவு நாள்..?" என கோபமாக கேட்டான்.

"அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மகேஷ்.." என்றவளின் கை பிடித்தான்.
"சரி வா.. என்னோடு சேர்ந்து வாழ வா.." என்றான்.

அவனது கையை தட்டி விட்டாள் சக்தி. "நீ என்ன பைத்தியமா..? உன் பெத்தவங்க சம்மதம் இல்லம்மா நான் உன்னோடு வர மாட்டேன்.. இதுதான் என் ஒரே முடிவு.."

"நீ இல்லன்னா நான் செத்துடுவேன் சக்தி.." என்றவனை முறைத்தாள்.

"செத்துப்போ.. அன்னைக்கு அப்படி நீ விஷம் குடிச்சதாலதான் இன்னைக்கு நான் இந்த நிலையில் இருக்கேன்.. நீ செத்தா மறுநாளே நானும் கூட செத்துப்போறேன்.. ஆனா உன் பெத்தவங்க சம்மதம் இல்லாம உன்னோடு வாழ வர மாட்டேன்.. உன் காதல்தான் உயர்ந்தது ஆச்சே.. பிரிஞ்சி வாழுறதால் நம்ம காதல் செத்துப் போகாது.. உன் காதல் உண்மைன்னா இனி என்னை பார்க்க வராத.. சேர்ந்து வாழ சொல்லி கட்டாய படுத்தாத.. உன்னை நினைச்சி நான் இங்கே வாழுறேன்.. உனக்கு இஷ்டமா இருந்தா என்னை நினைச்சி நீயும் தனியாவே வாழு.." என்றவள் அவனுக்கும் தனக்குமான முடிவை சொல்லி விட்டாள்.

மகேஷ் அதன்பிறகும் கூட அவளை அவ்வப்போது தேடி வந்தான். சக்திதான் தனது முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை.

மகேஷ் தனது வாழ்வை எண்ணி கவலை கொண்டிருந்த நேரத்தில்தான் சாமிநாதன் கலைக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறார்கள் என்பதை சோகமாக கூறினான்.

"நீ ஏன்டா இதை இவ்வளவு சோகமா சொல்ற..?"

"நானும் கலையும் காதலிக்கிறோம்.." என அவன் சொல்ல மகேஷ் ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் அவனை பார்த்தான்.

"அவ இல்லாம நான் எப்படிடா வாழ்வேன்..?" என புலம்பிக் கொண்டிருந்தவன் மறுநாளே கலையை அவனோடு கூட்டி வந்து விட்டான். மகேஷ் அவர்களை தங்களது மாந்தோப்பில் தங்க வைத்தான். இவர்கள் ஓடி சென்றதை அறிந்ததும் அவள் தன் குடும்பத்திற்கே பெரிய அவமானத்தை தந்துவிட்டாள் என்று எண்ணி கலையின் அம்மா தற்கொலை செய்துக் கொண்டாள். சாமிநாதன் குடும்பம் அவனை வாயில் வந்தபடி திட்டியது.

சக்தி கலை இருக்கும் இடத்தை எப்படியோ அறிந்து அவளை தேடி வந்தாள். கலையை நெருங்கிய மறு நொடியே அவள் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டாள். "உன் அவசர புத்தியால் உங்க அம்மா இறந்துட்டாங்க.. நீ ஏன் பூமிக்கு பாரமா இருக்க.. நீயும் போய் செத்துடு.." என்று கரித்துக் கொட்டினாள் சக்தி.

கலையின் கண்களில் சோகமே தென்படவில்லை. அதுதான் சக்திக்கு இன்னும் அதிக கோபத்தை தந்தது. கலை கசப்பாக சிரித்தாள்.

"என் அண்ணன் ஒருத்தியை அவ விருப்பம் இல்லாமலேயே கெடுத்துட்டான்... அன்னைக்கு எங்க அம்மா அந்த பொண்ணுதான் அவனை மயக்கியிருக்கான்னு அந்த பொண்ணை திட்டினாங்க.. அந்த நாய் ஒருத்தியை கெடுத்திட்டு வந்தப்ப அவனுக்கு சப்போர்ட் பண்ண எங்க அம்மா இன்னைக்கு நான் என்னை நேசிக்கறவனோடு ஓடி வந்ததும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. அவன் பண்ணதுல போகாத குடும்ப கௌரவம் நான் பண்ணதுல போயிடுச்சா..? இதுக்கெல்லாம் நீ வருத்தப்பட்டா நீதான் பைத்தியகாரி. ஆனா நான் வருத்தப்பட மாட்டேன்.." என்றவள் கல்லாக நின்றாள்.

அவள் அனுபவித்த ஓரவஞ்சனையும் ஆணாதிக்கம் தந்த வலியும் மகேஷிற்கு புரிந்தது. ஆனால் இதை சக்தி புரிந்துக் கொள்ள முயலவில்லை. தாய் இல்லாமல் வளர்ந்த சக்திக்கு மகளின் பிரிவால் இறந்து போன கலையின் அம்மாதான் உயர்வாக தெரிந்தாள்.

சக்தி கலையை வீட்டிற்கு போக சொல்லி கட்டாயப்படுத்தினாள். ஆனால் கலை தன் முடிவிலிருந்து மாறவில்லை. கலையோடு சண்டை போட்டு கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பி விட்டாள் சக்தி.

சாமிநாதனையும் கலையையும் பார்த்த இடத்தில் கொன்று விட சொல்லி ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார் கலையின் அப்பா. அவர்கள் இவர்கள் இருவரையும் தேடி அலைந்தனர்.

அன்று மாலை மகேஷ் அவர்களை வெளியூர் அனுப்புவதற்கு தேவையான பணத்தை கொண்டுவர தன் வீட்டிற்கு சென்றிருந்தான்.

கலையின் கை பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் சாமிநாதன். அப்போது அங்கு திடீரென வந்து சேர்ந்தனர் கலையின் தந்தை ஏற்பாடு செய்த கூலியாட்கள். சாமிநாதன் நடப்பதை உணரும் முன்னரே அவனது கையில் விழுந்தது ஒரு வெட்டு. அவன் கலையின் கையை பிடித்துக் கொண்டு ஓடினான். அவர்களை துரத்தினர் கூலியாட்கள். பறந்து வந்த கத்தி ஒன்று கலையின் முதுகில் விழுந்தது. அவள் வலி தாங்கமுடியாமல் அங்கேயே விழுந்து விட்டாள். சாமிநாதனும் காயம்பட்ட கையோடு அவளருகிலேயே மண்டியிட்டு விட்டான். அவர்களை கொல்ல வந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு கத்தியை பிடித்தபடி அவர்களை நெருங்கினர்.

கலையும் சாமிநாதனும் இதுதான் தங்களின் இறுதிநாள் என நினைத்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் மகேஷ். நண்பர்களின் நிலை கண்டதும் அவனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. அங்கிருந்த அனைவரையும் ஒற்றை ஆளாக எதிர்த்தான். அவனது பலம் அன்றுதான் அவனுக்கே புரிந்தது. அவனது ஒரு அடிக்கே ஒவ்வொருத்தனும் தங்கள் கையிலிருந்த ஆயுதங்களை கைவிட்டனர். சற்று நேரத்திலேயே அங்கிருந்தவர்களை அடி பின்னி எடுத்து விட்டான். அவர்களை விரட்டி விரட்டி அடித்தான். அடி வாங்கியவர்கள் சிதறி ஓடி விட்டனர்.

கலையும் சாமிநாதனும் சிரமப்பட்டு எழுந்து நின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக மகேஷ் அவர்களை குமரனின் வீட்டிற்கு அழைத்து சென்றான். குமரன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டார்.
அவர்கள் இருவரின் காயத்திற்கும் கட்டிட்டு அவர்களை ரகசியமாக வெளியூருக்கு அனுப்பி வைத்தார்.
இதில் நான் கதையை மிகைப்படுத்தி எழுதியுள்ளதாக நினைத்தால் ஒரு நிமிடம் ஆணவ கொலைகள் என்று இணையத்தில் தேடுங்கள். இது வரை ஆணவ கொலைகளால் இறந்த காதலர்களின் செய்திகள் அங்கே எத்தனை உள்ளன என்பதை நீங்களே அறிவீர்கள்..

மறுநாள் மகேஷ் தன் மாந்தோப்பிற்கு வந்து சேர்ந்த அதே நேரத்தில் சக்தியும் தோழியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்திருந்தாள். ஆனால் அங்கு அவள் கண்டது ரத்தத்தால் உறைந்து கிடந்த வெட்டுக் கத்தியைதான். சக்தி நடுங்கும் விரலோடு அதை கையில் எடுத்தபோது அவள் முன் வந்து நின்றான் மகேஷ்.
"கலைக்கும் சாமிநாதனுக்கும் என்ன ஆச்சி..?" கோபத்தோடு அவனது சட்டையை பிடித்து கேட்டாள். மகேஷ் உண்மையை அவளிடம் சொல்ல நினைத்த நேரத்தில் அவளுக்கு பின்னால் வந்து நின்றனர் கலையின் சொந்தபந்தமும் சாமிநாதனின் சொந்தபந்தமும்.

மகேஷ் சக்தி கையிலிருந்த கத்தியை வாங்கினான். "நான் அவங்களை கொன்னுட்டேன்.." என்றான் சக்தியிடம்.

சக்தி அவனை நம்ப மறுத்தாள். "பொய் சொல்லாத.. நீ எதுக்கு அவங்களை கொல்லனும்..? அவங்க நம்மோட பிரண்ட்ஸ்.." அவளது கையை தன் சட்டையிலிருந்து விலக்கி விட்டான் மகேஷ்.

"உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன..? நீ ஒன்னும் என் காதலியோ இல்ல என் மனைவியோ கிடையாதே.. நான்தான் அவங்களை கொன்னேன்.. கொன்னு இதே மாந்தோப்புலதான் புதைச்சிருக்கேன்.. இவங்க அவங்களை ஜோடியா சேர்ந்து வாழவிடல.. நான் ஜோடியா சொர்க்கத்துக்கு அனுப்பிட்டேன்.." சக்தியின் கண்களில் கண்ணீர் கொட்டியது.. முகத்தை மூடி தேம்பியழுதபடியே அதே இடத்தில் மண்டியிட்டு விட்டாள்.

கலையின் சொந்தப் பந்தம் எதுவும் சொல்லாமல் திரும்பி சென்றனர். சாமிநாதனின் சொந்தம் அவனுக்காக கண்ணீர் விட்டனர். மகேஷை திட்டி தீர்த்தனர். சாமிநாதனின் அம்மா மகேஷிற்கு சாபமிட்டாள். சாதி மாறி காதலித்த காரணத்தால் அவர்களுக்கும் சாமிநாதன் மீது வெறுப்புதான். அதனாலேயே அதிகம் இதை பெரிது பண்ணாமல் அவர்களும் கிளம்பி விட்டனர்.

அவர்களும் அங்கிருந்து சென்ற பிறகு மகேஷ் சக்தியை பார்த்தான். அவள் இன்னும் அழுதுக் கொண்டிருந்தாள். மகேஷ் அவளருகே சென்று அவளது தோளை உலுக்கினான். சக்தி நெருப்பு பட்டவளை போல அவனிடமிருந்து விலகினாள்.

"என்னை தொடாத.. நம்மோட பிரண்ட்ஸையே கொன்னுட்ட இல்ல.. இனி செத்தாலும் நீ என்கிட்ட பேசாத.. நான் உன்னை அடியோடு வெறுக்கிறேன்.. உன் முகத்தில விழிக்க கூட எனக்கு பிடிக்கல.." என அழுதபடியே அன்று அங்கிருந்து சென்றாள் சக்தி.

அதன்பிறகு மகேஷ் சின்ன சின்ன கட்டப் பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்தான். நல்லவர்களுக்கு மட்டும்தான் உதவி செய்தான். தவறுகளை தனது பாணியில் தட்டிக் கேட்டான். இன்று அனைவரும் பயம் கொள்ளும்படியான ரவுடியாகி விட்டான். ஆனால் அன்று அவனது நண்பர்களுக்கு விழுந்த அரிவாள் வெட்டிற்கு பழி வாங்கும் சந்தர்ப்பம் அவனுக்கு இன்றுதான் கிடைத்துள்ளது.

தனது கையிலிருந்த உருட்டு கட்டையோடு ஒவ்வொரு அறையாக சோதித்தான். கடைசியாக இருந்த அறையிலிருந்து சீனு தனது சட்டை காலரை சரி செய்தபடியே வெளியே வந்தான். மகேஷ் தன் கையிலிருந்த உருட்டு கட்டையை சீனுவின் திசையில் எறிந்தான். உருட்டு கட்டை சீனுவின் தலையில் படாரென மோதியது. உடனடியாக அவனது நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top