நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சீனு தலையில் கொட்டிய ரத்தத்தோடு அங்கேயே விழுந்தான். கலையின் அப்பா மகேஷை பின்தொடர்ந்தது வந்திருந்தார். சீனுவின் நிலை கண்டு அவனருகே ஓடினார்.

"எதுக்குடா இப்படி என் பேரனை கொல்ல பார்க்கற..?"

மகேஷ் அவர் சொல்வதை கேட்காதவனாக சீனுவை நெருங்கினான். கலை அப்பாவை தூரம் தள்ளிவிட்டு அவனை தூக்கினான்.

"ஏன்டா நாயே.. உன்கிட்ட பணம் இருந்தா உனக்கு மசியற ஆயிரம் பேரை தாலிகட்டி வப்பாட்டியா கூட வச்சிக்க.. எதுக்குடா அநியாயமா ஒரு அப்பாவி பொண்ணை உன் காதல் வலையில் விழ வச்சி அவ வாழ்க்கையை நாசகதி பண்ண பார்க்கற..?" என்றவன் அவனது முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். சீனுவின் மூக்கு உடைந்தது. ரத்தம் கொடகொடவென கொட்டியது.

"பாவி பயலே.. எதுக்குடா இப்படி என் பேரனை அடிக்கற..? ஏற்கனவே உன்னால்தான் என் பொண்டாட்டி செத்துபோனா.. இப்போ என் பேரனையும் கொல்ல பார்க்கறியேடா.." என்றவரை திரும்பி பார்த்து முறைத்தான் மகேஷ்.

அவரை நெருங்கி வந்தவன் அவரின் காலின் கீழே கிடந்த உருட்டு கட்டையை கையில் எடுத்து தன் கண்களில் பட்ட பொருட்கள் அனைத்தையும் உடைத்து தள்ளினான். கண்ணாடி பொருட்கள் சில்லுசில்லாக உடைந்து சிதறியது.

"உன் பொண்டாட்டியை நான் கொன்னேனா..?" என்றான் மீண்டும் சீனுவை நெருங்கி அவனை ஒற்றை கையால் சுவற்றில் அடித்தபடி. சீனுவின் முதுகு சுவரில் மோதவும் அவன் "அம்மா.."என கதறினான். அதை கண்டு கலை அப்பாவிற்கு கால் நடுங்க ஆரம்பித்து விட்டது.

"அந்த கழுதை அவ காதலிச்சவனை இழுத்துட்டு போக நீதானடா முக்கிய காரணம்..? அவளால்தான்டா எங்க வீட்டோட மொத்த மான மரியாதையும் போச்சி.. அவளாலதான்டா என் பொண்டாட்டி செத்து போனா.." என்றார் அவர் தனது குரலிலிருந்த நடுக்கத்தை மறைத்தபடியே.

மகேஷ் சீனுவை மற்றொரு முறை சுவற்றில் ஓங்கி அடித்தவன் மறுநொடி கலை அப்பாவின் எதிரில் நின்றான். தனக்கு முன்னால் எரிமலையாக நின்றவனை கண்டு பயத்தில் ஒரு அடி பின்னால் நகர்ந்தார் அவர்.

"இந்த நாய் பணத்தை வச்சிக்கிட்டு அப்பாவி பெண்களை ஏமாத்தி தன் வலையில் விழ வைக்கிறான்.. உனக்கு இந்த கருமத்தால போகாத மான மரியாதை கலை காதலிச்சதால போயிடுச்சா..?"

"என் பேரனை தேடி அவளுகளாதான் வராளுங்க.. இதுல அவன் மேல் என்ன தப்பிருக்கு..?" என்றவரை நோக்கி தன் மடக்கிய விரல்களை நீட்டினான். அவர் பயந்து கண்களை மூடவும் அவனது கை அவருக்கு பின்னாலிருந்த சுவற்றில் மோதியது.

அவர் சில நொடிகள் கழித்து கண்களை திறந்தார். அவனது கை தன் முகத்தை உரசியபடி சுவரில் மோதியிருப்பதை பார்த்தார். அவனை பயம் நிறைந்த கண்களோடு பார்த்தார்.

"கலைக்கு நீதானே அப்பா..? இத்தனை வருசத்துல நீ பெத்த பொண்ணு செத்துட்டாளேன்னு ஒரு செகண்டாவது வருத்தப்பட்டிருப்பியா..? அவ எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா..? அவளை கொல்ல ஆள் அனுப்பி வச்சியே.. நீயெல்லாம் மனுசன்தானா..?"

"அவளாலதான் என் பொண்டாட்டி செத்து போனா.. அவ என் குடும்ப கௌரவத்தை கெடுத்தவ.. அவளை நீ கொன்னுட்டங்கற ஒரே காரணத்துக்காகதான் நான் உன்னை இவ்வளவு நாள் சும்மா விட்டு வச்சிருக்கேன்.. இல்லைன்னா அந்த நாதாரிங்களுக்கு தங்க இடம் தந்ததுக்காகவே உன்னையும் கொல்ல சொல்லி ஆள் வச்சிருப்பேன்.."

மகேஷ் அவரை பார்த்து கிண்டலாக சிரித்தான். அவரை விட்டு விலகி நின்றான். "உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது.. என்னை கொல்ல எவனும் இங்கே பிறக்கல.." என்றவன் அருகே அரை மயக்கத்தில் விழுந்து கிடந்த சீனுவின் கழுத்தில் தன் காலை வைத்து மிதித்தான். சீனு வலியில் துடியாய் துடித்தான். கலை அப்பா அவனருகே ஓடி வந்தார்.

"என் பேரனை விட்டுடா பாவி.." என்றார்.

"உன் பேரன் இதுக்கும் மேலயும் பொம்பள புள்ளைங்ககிட்ட அவனோட பண பலத்தை காட்டி ஏமாத்தி மயக்கினான்னு தெரிஞ்சது நீயே இவனுக்கு கொள்ளி வைக்க வேண்டி வரும்.. நான் ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்ல மாட்டேன்.. அதனால் இவனை கட்டிப்போட்டு வைப்பியோ.. கையையும் காலையும் உடைச்சி வைப்பியோ தெரியாது.. ஆனா இவன் இதுக்கும் மேல ஒரு பொண்ணுக்கிட்ட கூட தன்னோட முகத்தை காட்ட கூடாது.." என்றவன் தனது காலை சீனுவின் கழுத்திலிருந்து எடுத்தான்.

அங்கிருந்து வெளியேற நடந்தான் மகேஷ். அவனெதிரே அழகான நான்கு பெண்கள் வந்தனர். சீனுவை கண்டதும் அதிர்ச்சியோடு தங்களது வாய் மீது கை வைத்தனர். அவர்களை மேலும் கீழும் பார்த்தான் மகேஷ்.

"உங்களை விமர்ச்சிக்க வேணா எனக்கு உரிமையோ தகுதியோ இல்லாம இருக்கலாம்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் கேளுங்க.. வெளியே நடமாடுற பெண்கள் அனைவரும் எனக்கு சகோதரிகள் மாதிரி.. எனக்கு பிறவாத பெண் குழந்தைகள் மாதிரி.. அவங்களை யாராவது ஒருத்தரை உங்க காதலன் திரும்பி பார்த்தாலும் அடுத்த செகண்டே நான் இவனை கொன்னுடுவேன்.. அதுக்கு எனக்கு உரிமையும் தகுதியும் இருக்கு.." என்றவன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தான். அந்த வீட்டில் வேலை பார்ப்பவர்கள் அவனை வாய் திறந்து பார்த்தனர். அவன் அவர்களை கண்டுக் கொள்ளாமல் வெளியே நடந்தான்.

அந்த வீட்டை தூரமாக வந்த பிறகு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். தனது அலைபேசியில் சாமிநாதனை அழைத்தான். சாமிநாதன் ஒரு மலை கிராமத்தில் தன் குடும்பத்தோடு இருக்கிறான். மின்சார வசதி இல்லாத அந்த கிராமத்தில் விவசாயம் மூலம் சம்பாதித்து ஊருக்கே சூரிய ஒளி மின்சாரம் அமைத்து தந்திருக்கிறான் சாமிநாதன். சாமிநாதனுக்கு இரட்டை பெண் குழந்தைகள். ஒருத்தி பொன்னா.. மற்றொருத்தி செங்கா.. கிராமத்து வாழ்க்கையில் ஊறி போயிருந்தான் சாமிநாதன். அவனது சொர்க்கமே அந்த கிராமத்து குடிசை வீட்டில்தான் இருக்கிறது.

"மகேஷ் நல்லாருக்கியாடா..? ஏன்டா ஒரு வாரமா ஃபோன் பண்ணல..? செங்கா கூட உன்னை ரொம்ப கேட்டா தெரியுமா..?"

மகேஷ் கலகலவென சிரித்தான். "செங்கா என்னை கேட்டா.. இதை நான் நம்பணும்..? அந்த ஆதிவாசி பொண்ணுக்கு நான் கூட நினைவில இருக்கேனா..?" என்றான் கிண்டலாக. பொன்னா தினம் இரண்டு மைல் கரட்டு வழி பாதையில் நடந்து சென்று பள்ளி பேருந்து ஏறிக் கொண்டிருக்காள்‌. ஆனால் செங்காவிற்கு காடும் மலையும்தான் பள்ளிக்கூடம். கட்டுச்சோறு கட்டிக் கொண்டு காட்டிற்குள் அவள் சென்றால் மீண்டும் வீடு திரும்ப ஒரு வாரம் ஆகும். அவளை தனது வழிக்கு கொண்டுவர முயன்ற கலை தனது முயற்சியில் தோற்றதால் கடைசியில் அவள் வழிக்கே சென்று விட்டாள். செங்கா காட்டின் மீது கொண்ட காதலால் மகேஷ் அவளை காட்டுவாசி, ஆதிவாசி என கிண்டலாக அழைப்பான்.

"என் பொண்ண ஆதிவாசின்னு சொல்லாத.." என்றான் சாமிநாதன். அவனது குரலில் உரிமையுடனான கோபம் இருந்தது.

மகேஷ் அதிகமாக சிரித்தான் இப்போது. "உன் மாமனார் வீடு வரைக்கும் வந்தேன்டா.. உனக்கு மாப்பிள்ளை முறையாக வேண்டிய சீனு ஆறு கல்யாணம் பண்ணியிருக்கான்.. அவனுக்கு செங்கா நல்லா செட் ஆவா.. ஏழாம் தாரமா கட்டி வைக்கிறியா..?"

"நாசமா போனவனே வாயில அடிடா.. என் பொண்ணுங்க மகாராணி வாழ்க்கை வாழ பொறந்தவங்கடா.." என்ற சாமிநாதன் சட்டென தனது பேச்சை நிப்பாட்டினான்.

"என்ன சொன்ன..? கலை வீட்டுக்கு போயிருந்தியா..?" என்றான் தயக்கமாக. மகேஷ் நடந்தது அனைத்தையும் சொன்னான். இவன் சொன்னதை கேட்டு விட்டு சாமிநாதன் பெருமூச்சு விட்டான்.

"இதை கலைக்கு சொல்ல வேண்டாம்.. தேவையில்லாம மனசை கஷ்டபடுத்திப்பா.." என்றான் மகேஷ். சாமிநாதன் யோசனை செய்துவிட்டு "சரி.." என்றான்.

"சக்தி எப்படி இருக்கா..? கலை நேத்து ராத்திரி கெட்ட கனவு கண்டு எழுந்தா.. சக்திக்கு என்னவோ கெட்டது நடக்க போகுதுன்னு உளருனா.. நீ சக்தியை எதுக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்க.." இந்த முறை மகேஷ் கவலையோடு பெருமூச்சு விட்டான். அவர்களது நட்பிற்கு இடையே இருந்த பாசம் கண்டு சற்று ஆச்சரியமாகவும் இருந்தது அவனுக்கு.

"நேத்து நைட் அவளை கத்தியால் வெட்டிடாங்க.. கையில் பெரிய வெட்டா விழுந்துடுச்சி.."

"எப்படிடா..?" அதிர்ச்சியோடு கேட்டவனிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான் மகேஷ். அதை கேட்டு கவலை கொண்டான் சாமிநாதன்.

"இதுக்கும் மேலயாவது அவளை பத்திரமா பார்த்துக்கடா.. அவளுக்கு அவ அப்பாவையும் உன்னையும் விட்டா வேற யாருமே கிடையாது.."

"இதுக்கும் மேல இப்படி நடக்காதுடா.." என உறுதி அளித்தான் மகேஷ். சற்று நேரம் தாங்கள் பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்து விட்டனர் இருவரும்.

மருத்துவமனை அறையில் சக்தியும் குமரனும் பொதுவான பல விசயங்களை பேசியபடி அமர்ந்திருந்தனர். சக்தி தயக்கமாக குமரனை பார்த்தாள்.

"ஸார்.. மூர்த்தி உங்களுக்கு நிச்சயம் பண்ண பெண்ணை கட்டிக்கிட்டதால்தான் உங்களுக்கு இவ்வளவு கோபமா..?"

குமரன் அவளை பார்த்தார். அவரது கண்களில் வலி தெரிந்தது. "நானும் மூர்த்தியும் ஒரே வயிற்றில்தான் பிறந்தோம்.. எங்க மாமா மகளான மகேஷோட அக்காவை எங்க அம்மா எனக்கு நிச்சயம் பண்ணாங்க.. ஆனா அவங்க இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலிச்சதை அதுக்கப்புறம்தான் சொன்னாங்க... எங்க அம்மா நிச்சயம் பண்ணதை மாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. ஆனா மூர்த்தி மகேஷோட அப்பாவுக்கு வலது கையா இருந்தான். அதனால் அவரு எங்களுக்கு சொல்லாம அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு.. காதலிப்பவங்களை பிரிக்க நமக்கென்ன உரிமை இருக்குன்னு நானும் அதை அப்பவே மறந்துட்டேன்.. ஆனா மூர்த்தி எங்க அம்மா மேல பகையோடு இருந்திருக்கான்.. நான் போலிஸ் டிரெயின்க்காக வெளியூர் போயிருந்தபோது எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சி.. ஆனா அவன் எங்க அம்மாவை கண்டுக்காம விட்டுட்டான்.. சொந்த மகன் உள்ளூர்ல இருந்தும் தன் வீட்டுல பார்த்துக்க கூட ஆள் இல்லாம அனாதையா செத்துட்டாங்க என் அம்மா.."என்றவர் தன் கண்களோரம் துளிர்த்த நீர் துளியை இவள் காணாதவாறு துடைத்துக் கொண்டார்.

சக்தி என்ன சொல்வதென தெரியவில்லை. "ஸாரி ஸார்.." என்றாள் யோசித்து விட்டு.

அவர் தலையசைத்தபடி நிமிர்ந்தார். "அவனுக்கு கடவுள் தண்டனை தருவார் சக்தி.. அவன் தன் வாழ்க்கையில் நிறைய தப்பு பண்ணிட்டான்.. உன்னை விஷம் கொடுத்து கொல்ல பார்த்தானே அந்த ஒரு தப்பே அவனை ஒருநாள் இல்லன்னா ஒருநாள் கொல்ல போகுது.."

சக்தி தனது வெட்டு விழுந்த கையை பார்த்தாள். காயம் பட்ட இடம் சுரீர் சுரீர்ரென வலித்தது. அவளது பார்வை குடிக் கொண்ட இடத்தை பார்த்த குமரன் அவளது தோளில் அன்பாக தட்டி தந்தார். "வீரர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜம்.. எனக்கெல்லாம் வீர தழும்பு எத்தனை இருக்கு தெரியுமா..?" என்றார் சிரிப்பு நிறைந்த குரலில். சக்தியும் நிமிர்ந்து பாரத்து கண்களால் சிரித்தாள்.

"நானும் வீரமானவன்னு இப்போதாவது ஒத்துக்கிட்டிங்களே.."

"நீ வீரமான பொண்ணுதான்.. ஆனா அவசர புத்தி அதிகமாச்சே.." என்று அவர் சொல்ல சக்தி சிரிப்போடு உங்களை திருத்தவே முடியாது என நினைத்தபடி தனது தலையை ஆட்டினாள்.

சக்தியின் அலைபேசி ஒலித்தது. அவள் எடுத்து பார்த்தாள். வனஜா அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"சக்தி.. உன் ஆளு மகேஷ் அந்த பெரிய வீட்டு சீனுவை அடிபின்னி எடுத்துட்டானாம்.."

சக்தியின் முகத்தில் உடனே கவலை குடி கொண்டது. 'இவன் ஒருநாள் கூட என்னை நிம்மதியா வாழ விடமாட்டானா..?'

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top