நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

25. என் வானத்து வெண்ணிலவே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மைவிழியை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க அவள் கன்னத்தில் சிறு வெட்க சிவப்பு படர்ந்தது. 'கொஞ்சம் ஓவரா கவிதை மாதிரி சொல்லிட்டமோ..? அதுக்கு எதுக்கு இப்படி பார்க்கறாங்க..?'

கதிரால் அவள் சொன்னதை கேட்டு நொடி வரையிலும் வியப்பிலிருந்து வெளிவர முடியவில்லை.

"இன்னொரு முறை அதை திருப்பி சொல்லு.." என்றான் கதிர். நிஜமாகவே கேட்கிறானா என அவனை பார்த்தாள் மைவிழி. அவன் கண்கள் மின்ன அவளின் பதிலுக்கு காத்திருந்தான். அவள் மறுத்து சொல்ல முடியாதபடி அதியன் அவளையே குறும்பு சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது கன்னங்கள் மேலும் சிவந்தது. "ஆ... ஆ..‌ ஆச்சரியத்தின் ஒவ்வொரு நொடியாக நீ.. உ.. உன் பாதம் தொடும் மண்ணிற்கும் பூஜை செய்யும் அடிமையென.. நா.. நான்.." திக்கி திணறி ஒரு வழியாக அவள் சொல்லி முடித்தாள். கதிர் ஒரு நொடி அவளது கன்னத்தில் தன் இதழ் பதித்தான்.

மைவிழிக்கு ஆச்சரியமாக இருந்தது. வெட்கமும் அவளை கொன்றது. இதயம் படபடக்க தன் தலையை குனிந்து கொண்டாள்.

கதிர் தனது தனி உலகில் இருந்தபடி அவளின் உள்ளத்தில் ஓடும் நினைவுகளை தெரிந்துக் கொள்ள ஆசை கொண்டான். பாலா எப்போதும் அவனைத்தான் அடிமை போல நினைத்துள்ளாள். காதலில் அடிமையாக இருப்பதில் தவறில்லை என்பதை அவனும் அறிவான். ஆனால் பாலா அவளின் காதலுக்கு அவனை அடிமையாக்க நினைக்கவில்லை அவளுக்குதான் அடிமையாக்க முயன்றாள் என்பது இப்போதுதான் அவனுக்கு புரிந்தது. மைவிழி மீது அவனுக்கு ஏற்கனவே இருந்த ஈர்ப்பு தினம் தினம் வளர்ந்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் இப்போது அவன் தந்த முத்தம் அவளின் மீது உள்ள ஈர்ப்பிற்காக அல்ல.. அவளது வார்த்தைகளுக்காக மட்டும்தான்.

வார்த்தையில் சொன்னபடியே உள்ளத்திலும் காதலுக்கு மரியாதை தருவாளோ என தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருந்தது அவனுக்கு. தன்னை போலவே இவளும் காதலில் உண்மையாக இருப்பதாக இருந்தால் ஏன் இருவரும் காதலிக்க கூடாது என எண்ணினான்.

செழியனும் விஷ்வாவும் அவர்கள் இருவரையும் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரது உள்ளத்திலும் ஒரு விசயம்தான் ஓடியது.. தங்களின் கண் முன் நடந்துக் கொண்டிருப்பது நாடகமா அல்லது நிஜமா என்று.

அதியன் விஷ்வாவின் பின் மண்டையில் ஒரு அடியை விட்டான். அவன் தலையை தேய்த்து கொண்டே அதியனை பார்த்தான். "ஏன்டா..?"

அதியன் செழியனின் தலையிலும் ஒரு கொட்டு வைத்தான். "அப்படி எதுக்காக ஆச்சரியப்பட்டு வாய் திறந்து பார்க்கறிங்க..? புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படிதான் இருப்பாங்க.. நீங்கதான் புரிஞ்சிக்கிட்டு அடிக்கடி இந்த வீட்டு கதவை வந்து தட்டாம இருக்கணும்.."

செழியனும் விஷ்வாவும் ஒரு சேர தலையசைத்தனர்.

"அடுத்த மேட்ச் விளையாடலாம்.." என்றான் அதியன். மற்றவர்கள் தலையசைத்து விட்டு விளையாட்டை தொடர ஆயத்தமாயினர்.

மைவிழி தன் நினைவுலகில் இருந்தாள். 'எதுக்காக இவன் என்னை கிஸ் பண்ணான்..? மாமா முன்னாடி நடிப்புக்காக இப்படி செஞ்சானா.. இல்லை நிஜமாவே முத்தம் தந்தானா..? ஹார்ட்ல பூகம்பம் வர மாதிரியே இருக்கே.. உள்ளங்கையில் வியர்க்கிறது என கதையில் படிச்சது இப்போ எனக்கும் நடக்குதே..! டென்சனா இருக்கே.. எருமை மாடு என்னை இப்படி நொடி நேரத்தில பைத்தியமாக்கிட்டானே..!'

அவர்கள் தங்களது விளையாட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மைவிழி அவர்களது விளையாட்டை கவனித்தபடி அமர்ந்திருந்தாள். நேரம் கடந்து கொண்டிருந்தது. அவர்கள் மீண்டும் மீண்டும் விளையாடினார்கள். தோத்தவர்கள் நாங்களும் ஜெயிப்போம் என வம்பிழுத்து விளையாட்டை தொடர்ந்து கொண்டே இருந்தனர். மைவிழிக்கு கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டன.

"அம்மா உன்னை வீட்டுக்கு கூட்டி வர சொன்னாங்க அண்ணா.." என்றான் செழியன் விளையாடிக் கொண்டே.

"நான் வரமாட்டேன்னு சொன்னதா போய் சொல்லு.." என்றான் அதியனும் விளையாடிக் கொண்டே.

"என்னை அப்பா திட்டுவார்.."

"அந்த ஆள் ஒரு மனுசன்னு அந்த ஆளுக்கு நீ பயப்படுறியா..? நான் அங்கே வந்தா அவரை எதையாவது சொல்லி வச்சிருவேன்.. அதனால அந்த ஆளை அவரோட வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு என்னை நோண்டாம இருக்க சொல்லு.."

செழியனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியவில்லை‌. வீட்டில் அம்மாவும் அப்பாவும் அவனை வறுத்தெடுப்பார்கள். ஆனால் அண்ணனும் வீட்டுக்கு வர மாட்டான். என்ன செய்வதென குழம்பினான் அவன்.

"என் கூட வந்து தங்கியிருடா.. அது உன் வீடுதானே..!" என்றான் விஷ்வா. அதியன் இவ்வளவு நாள் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருந்த வீட்டில்தான் விஷ்வா குடியிருந்தான்.

"வேணாம் விஷ்வா.. அங்கே உன் பேமிலியும் இருக்கும்.. அதுக்காக வரலன்னு சொல்லல.. எனக்கு இந்த வீட்டுல இருக்க பிடிச்சிருக்கு.. இன்னும் கொஞ்ச நாளுல கிளம்பிடுவேன்.. அதுவரைக்கும் விழி பக்கத்துல இருந்தாலாவது என் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.."

"ஓவரா பண்ணாதடா அதியா.. முடிஞ்சி போன விசயத்துக்காக இன்னும் சீன் போடாத.." என்றான் விஷ்வா கோபமாக.

ஆனால் அதியனுக்கு கோபம் வரவில்லை. கீழ் உதட்டை கடித்தபடி அவனை பார்த்தான். கண்களில் கண்ணீர் மின்னியது. அவனது இதயத்தின் வலி மட்டும்தான் வெளிப்படையாக தெரியவில்லை. "நான் உண்மையை சொல்றேன் விஷ்வா.." என்றவன் மைவிழியை திரும்பி பார்த்தான். அவள் கதிரின் தோளில் தலை சாய்த்து உறங்கி போய் விட்டிருந்தாள். அதியன் பார்ப்பதை கண்டபிறகே கதிரும் அவளை திரும்பி பார்த்தான். மைவிழியின் உறங்கும் முகம் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டே அவளை சுற்றி கைகளை போட்டு அவளை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டான்.

"தினம் தினம் என் இரவெல்லாம் சித்ராதான்டா கொள்ளையடிச்சி வச்சிருக்கா.. ஒருநாள் நிம்மதியா தூங்க முடியலடா.. கண் மூடினாலே அவதான் வரா.. இப்பவும் என் கையை அவ பிடிச்சிட்டு இருக்கற மாதிரியே இருக்குடா.. இன்னும் கூட சூடான ரத்தம் என் கையில் பிசுபிசுக்குதுடா.." அவன் அப்படி சொல்லவும் செழியனும் விஷ்வாவும் அவனது தோளில் தட்டிக் கொடுத்தனர்.

கதிருக்கு அவர்களது உரையாடல் அவ்வளவாக புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அதியன் மைவிழியின் அக்காவை விரும்பியுள்ளான் என்பது.

"நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. டைம் ஆச்சி.." என்றான் அதியன் மற்ற இருவரிடமும்.
இருவரும் கடிகாரத்தை பார்த்தனர். மணி நடு ராத்திரியை நெருங்கி கொண்டிருந்தது.

"எனக்கு ரொம்ப தூக்கம் வருது அண்ணா.." என்றான் செழியன் கொட்டாவி விட்டபடியே.

"நீங்க இங்கேயே தூங்குங்க.." என்ற கதிர் எழுந்தான்.

மைவிழி அவனது கையின் அணைப்பிலேயே இன்னும் இருந்தாள். அவளை எழுப்புவதற்காக கையை நீட்டினான் செழியன்.

"என்ன பண்ற..?" என்றான் கதிர்.

"அவளை எழுப்ப போறேன்.. எழுந்து போய் ரூம்ல தூங்கட்டும்.."

"அவ எழ மாட்டா.." என்றான் கதிர் உதட்டை பிதுக்கி.

செழியன் கலகலவென சிரித்தான். "இவ நான் சும்மா அசைச்சாவே எழுந்துடுவா.." என்றபடியே அவளது தோளை பற்றி உலுக்கினான். ஆனால் மைவிழி ஒரு முறை தன் கைகளை மட்டும் வீசினாள். வேறு எந்த அசைவும் இல்லை. அவளது கை செழியனின் கண்களின் மீது பட்டதில் அவனது இடது கண்ணுக்கு அடிதான் பட்டது.

தன் கண்ணை பிடித்தபடி கதிரை பார்த்தான். "இது எங்க விழி இல்ல.. யார் இவ..?" என்றான். அதியன் சிரித்தபடியே அவனது முதுகில் அறைந்தான். செழியன் தன் முதுகை நெளித்தபடி அண்ணனை பார்த்தான்.

"ஏன் இப்படி என்னை அடிச்சி சாகடிக்கற..?" என்றான் மூக்கு சிவக்க.

"அவ இப்போதான் அவளா வாழறா செழியா.. சிலருக்கு தனக்கானவங்க கூட இருக்கும்போது மட்டும்தான் இப்படி சுதந்திரமா தூங்க மனசு ஒத்துக்கும்.. இவளை எழுப்புற வேலையை விட்டுட்டு இந்த கேரம் போர்டை எடுத்து வச்சிட்டு வந்து தூங்கு.." என்றவன் தூங்க கிளம்பினான்.

"இவளை என்ன பண்ண போறிங்க..?" என்றான் செழியன் யோசனையோடு தன் கன்னத்தில் கை வைத்தபடி.
கதிர் அவனை பார்த்து கண்ணடித்தான். செழியன் புரியாமல் குழப்பமாக அவனை பார்த்தான். கதிர் மைவிழியை தன் கைகளில் தூக்கிகொள்ள, செழியனின் கண்கள் விரிய அவனை பார்த்தான். கதிர் புருவம் உயர்த்தி எப்படி என கண்களால் கேட்டான்.

அதியன் அறைக்குள் சென்று விட்டதை கண்டுவிட்டு செழியன் கதிரின் அருகே வந்தான். "நடிப்புக்கே இவ்வளவு ரொமான்ஸா.‌.? முடியல சாமி உங்க லவ்.. ஒரிஜினல் புருசன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிக்கும் போது முன்னாடியே சொல்லிடுங்க.. இந்த கன்றாவியெல்லாம் கண்ணுல பார்க்காம வாசலிலேயே நின்னு பேசிட்டு போயிடுறேன்.." என அவன் சலித்துக் கொள்ள விஷ்வா கலகலவென சிரித்தான்.

"நான் சொல்ல நினைச்சதை நீ சொல்லிட்ட செழியா.. அநியாயத்துக்கு லவ்வை பீல் பண்றாங்கப்பா.. நான் விக்கல் எடுத்து சாகும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டா கூட எடுத்து தரமாட்ட.. இப்போ பொண்டாட்டின்னு வந்தவுடனே செகண்ட் கூட யோசிக்காம தூக்கற.. பேச்சிலர்ஸ் முன்னாடி லவ்வர் பாயா சீன் போடுறியா..? மகனே உனக்கெல்லாம் நரகம்தான்டி.." அவன் கரித்து கொட்டிவிட்டு செழியனை தன்னோடு இழுத்துக் கொண்டு சென்றான்.

கதிர் அவர்களை புரியாமல் பார்த்தான். 'பொண்டாட்டியை தூக்கியது ஒரு குத்தமாடா சாமி..? நீ ஒருத்தியை லவ் பண்ணும்போது என்ன லூஸு தனமெல்லாம் பண்ணுவன்னு பார்க்கதானே போறேன்..' நினைத்தபடியே அறைக்குள் நுழைந்து ஒரு கையால் கதவை சாத்த முயன்றான்.

"கருமம் பிடிச்சவனே.. அவளை கட்டில்ல விட்டு வந்து கதவை சாத்தி தொலைடா.. ஜிம் பாடின்னு சீன் போட்டு சாகாதடா.." என எதிர் அறையிலிருந்து திட்டினான் விஷ்வா. ஆனால் அதியன் அவனை மீண்டும் பின் மண்டையில் அடித்தான்.

"உனக்கு என்னடா வந்துச்சி..? எதுக்குடா இப்படி டொப்பு டொப்புன்னு அடிக்கற..?" என்றான் விஷ்வா அவனிடம்.

"நீ என்னத்துக்கு அவங்களை பார்க்கற..? அந்த பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குடா.." அதியன் அவனை திட்டுவதை சிரிப்போடு பார்த்தபடியே கதவை சாத்தி தாளிட்டான் கதிர்.

மைவிழி கட்டிலின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்து விட்டு மறு ஓரத்தில் வந்து அமர்ந்தான். இருவருக்கும் இடையில் தலையணைகளை வைத்தான்.

"நீயும் பாவம் நானும் பாவம்.. அதனால் இரண்டு பேரும் கீழே தூங்க வேணாம்.. இந்த தலையணை சுவத்தை தாண்டி நீயும் வரக் கூடாது.. நானும் வரமாட்டேன்.." என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உறக்கத்தை வரவேற்க சென்றான்.

கதிரின் இன்றைய இரவையும் அந்த குட்டிப் பெண்ணே களவாட ஆரம்பித்து விட்டாள்.

இறந்தகால நினைவிலிருந்து..

கதிர் மறுநாள் பள்ளி விட்டு வந்தவுடன் அம்மாவை தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டான். "நேத்து போன அதே கோவிலுக்கு இன்னைக்கும் போகலாம் அம்மா.." என சிணுங்கினான்.

அம்மாவும் அவனது தொல்லை தாங்க முடியாமல் அவனோடு கிளம்பினாள். கதிர் தனது புது தோழியை சந்திக்கும் உற்சாகத்தில் துள்ளி குதித்தோடினான்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top