நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வனஜா சொன்னதை கேட்டு சக்திக்கு கோபம் வந்தது. மகேஷின் மீது ஆத்திரமாக இருந்தது. ஆனாலும் அவன் சீனுவிற்கு நல்ல புத்தி புகட்டியதற்காக அவனை மனதின் ஒரு ஓரத்தில் மெச்சினாள்.

"உங்களுக்கு இதை யார் இதை சொன்னாங்க அக்கா..?"

"எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு சீனுவோட வீட்லதான் வேலை செய்றா.. அவ சொல்லிதான் எனக்கு நடந்தது தெரியும்.. சீனுவோட வீட்டுல இருந்த பொருட்களை கூட அடிச்சி நொறுக்கிட்டானாம் மகேஷ்.."

"கலையோட அப்பாவையும் அடிச்சிட்டானாக்கா..?" கவலையோடு கேட்ட சக்தியை குழப்பமாக பார்த்தார் குமரன்.

"மகேஷ் அவரை அடிக்கல சக்தி.. ஆனா சீனுவுக்கு அடி கொஞ்சம் அதிகம்தானாம்.. அவங்க எவ்வளவு அடி வாங்கினாலும் கண்டிப்பா மகேஷ் மேல கம்ப்ளைண்ட் தர மாட்டாங்க.. அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்..!"

"சரிக்கா மீதியை நேர்ல பேசிக்கலாம்.." என்றவள் தொடர்பை துண்டித்துக் கொண்டாள்.

வனஜாவுடன் பேசி முடித்து விட்டு குமரனை பார்த்தாள்.

"என்ன சக்தி ஆச்சி..?"

"மகேஷ் சீனுவை அடிச்சிட்டானாம்.."

"யார் சீனு..?"

சக்தி சீனு யாரென்றும் இதுவரை அவன் செய்த விசயங்களையும் சொன்னாள். குமரனுக்கு மகேஷ் செய்தது சரியென்றே தோன்றியது.

"நம்மால் செய்ய முடியாத ஒரு விசயத்தை அவனாவது செஞ்சிருக்கானே..!"என பெருமூச்சி விட்டபடி சாய்ந்து அமர்ந்தார் அவர். குமரன் அதைதான் சொல்வாரென ஏற்கனவே ஊகித்துதான் வைத்திருந்தாள் சக்தி. ஆனாலும் இந்த முறை அவருக்கு எதிராக அவள் எதுவும் சொல்லவில்லை. சீனுவின் கொட்டத்தை அடக்க தனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினாள்.

"எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு சக்தி.. நான் கிளம்பறேன்.. நீ ரெஸ்ட் எடு.. நான் டைம் கிடைக்கும்போது வந்து பார்க்கறேன்.." என்றவர் கிளம்பி சென்றார்.

சக்திக்கு மகேஷ் செய்தது சரியென தெரிந்தும் அதை அவனிடம் காட்டிக்கொள்ள விருப்பமில்லை. அதனால் மகேஷ் வந்த உடனே அவனிடம் தனது வழக்கமான சண்டையை ஆரம்ப்பித்துவிட்டாள்.

"உனக்கு எப்படி சீனுவை பத்தி தெரியும்..?" என்று முறைப்போடு கேட்டவளை பதிலுக்கு முறைத்தான் மகேஷ்.

"அவன் என்ன ஆப்பிரிக்காவில் இருக்கானா..? இதே ஊர்ல ஒருத்தன் உன் கண் முன்னாடி தப்பு செஞ்சிட்டு இருந்திருக்கான்.. அவனை நீயும் எதுவும் செய்யாம இருந்திருக்க.."

"அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அவனை அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு..? நீயும் ஒரு ரவுடிங்கறதை மறந்துடாத.. இன்னும் சொல்ல போனா அவனை விட நீதான் ரொம்ப கெட்டவன்.."

"சும்மா பேசணும்னு பேசாத சக்தி.. அவன் பண்ண அயோக்கிய தனத்துக்கு நான் அவனை உயிரோடு விட்டுட்டு வர ஒரே காரணம் உனக்காக மட்டும்தான்.. அவனும் நீயும் ரொம்ப உறவுன்னு கூட கேள்விப்பட்டேன்.. போய் அவன்கிட்ட சொல்லி வை.. இனி தேவையில்லாம எவக்கிட்டயாவது வம்பு வச்சிக்கிட்டான்னா அவனை பார்த்த இடத்துலயே புதைச்சிடுவேன்.. அதுமட்டுமில்ல.. தேவையில்லாம நீயும் அவனும் நெருங்கி நின்னதாக கேட்டேன்னு வச்சிக்கோ யோசிக்காம அவனை கொன்னுடுவேன்..."

சக்தி புருவம் நெரித்து அவனை பார்த்தாள். "ரியாவை உனக்கு தெரியுமா..?"

மகேஷ் அவளை ஆழமாக பார்த்தான். "உனக்கு எதுக்கு அந்த விசயம்..? நான் கேட்டேனா அந்த பொம்பள பொறுக்கி உன்னை ஏன் கட்டி அணைச்சான்னு‌‌..?"

'இவனெல்லாம் மனுச வகையறாவே கிடையாது.. நான் என்ன கேட்டேன்..? இவன் எதுக்கு அதை இ‌‌‍‌ப்படி ‍‍ திசைமாத்தி கேட்டு என்னையே குறி வைக்கிறான்..?'

"ஏன் பதில் ஏதும் பேச மாட்டேங்கற..? குற்ற உணர்வு உள்ளுக்குள்ள கொல்லுதோ..?" என கேட்டவனை நோக்கி நெருங்கி வந்து நின்றாள்.

"நீயா கற்பனை பண்ண எதுக்குமே நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.. நீ ஒரு ரவுடி.. அவன் ஒரு பொறுக்கி.. நீங்க உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டா எங்களுக்கேதும் நஷ்டம் கிடையாது.."

மகேஷ்க்கு சிரிப்பு வந்தது. தாமரை இலை கூட தண்ணீரோடு ஒட்டிவிடும்.. ஆனால் சக்தியை போல எதிலும் ஒட்டாமல் வாழ யாராலும் முடியாது என நினைத்தான்.

"உனக்கு எதுவும் நஷ்டம் கிடையாது சொல்லிட்ட இல்ல..? அதே போல‌ எப்போதும் நடந்துக்க.. எப்போதும் நீ சொல்வ.. இந்த முறை நான் சொல்றேன்.. உனக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இனி கிடையாது.." என்றவன் அந்த அறையை விட்டு சென்று விட்டான். அவனது வெற்று கோபம் விரைவில் தீர்ந்து விடும் என்பதை அறிந்திருந்தவள் கொஞ்ச நாட்களுக்காவது இவன் தொல்லையிலிருந்து சற்று தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்தபடி கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

மகேஷ் தனது வீட்டிற்கு வந்தவுடன் மூர்த்தி அவனை தேடி வந்தான். "சக்தி எப்படி இருக்கா..?"

"அவ சாகாம இருக்கான்னு கவலையா..?" என மகேஷ் கேட்க மூர்த்திக்கு முகம் வாடிவிட்டது‌.

"என்னை மன்னிச்சிடு மகேஷ்.. இவ்வளவு நாளா முட்டாள் தனமா இருந்துட்டேன்.. சக்தி என்னை செத்தாலும் மன்னிக்க மாட்டான்னு தெரியும்.. ஆனா நீயாவது என்னை மன்னிச்சிடு.." என்றவன் அதன்பிறகு அவன் கண்ணிலேயே படவில்லை.

சக்தியின் கையின் காயம் குணமாக இரு வாரங்களுக்கு மேலானது. அவளது அப்பாதான் அருகிலிருந்து அவளை கவனித்து கொண்டார்.

சக்தி தனது கையின் காயம் முழுமையாக குணமான பிறகு ஸ்டேசனுக்கு வந்தாள். அங்கு அவளுக்கு முன் மகேஷ் நின்றுக் கொண்டிருந்தான். 'அன்னைக்கு பெரிய இவனாட்டம் சொன்னவன் இன்னைக்கு எதுக்கு எனக்கு முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கான்?' என நினைத்தபடி அவனருகே சென்றாள்.

"இங்கே என்ன பண்ற..?" அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை தன்னோடு ஒரு ஓரமாக அழைத்து சென்றான் மகேஷ்.

"நான் ஒரு வேலையா வெளியூர் போறேன்.. திரும்பி வர இரண்டு வாரத்துக்கு மேல ஆகும்.. உனக்கு ஏதாவது உதவி வேணும்ன்னா மறக்காம என் செல்லுக்கு கூப்பிடு.. எங்க மாமா இதுக்கு மேல உன் பக்கத்துல கூட வர மாட்டாரு.. அதனால் நீ அவரை நினைச்சி பயப்பட வேண்டாம்.."

அவன் சொல்லிவிட்டு விலகி செல்ல அவனை கை பிடித்து நிறுத்தினாள் சக்தி. ஆயிரம் சண்டை வந்தாலும் அவன் மீது கொண்ட அக்கறை ஏன் குறைவதில்லை என அவளுக்கே தெரியவில்லை.

"எங்கே போற..?"

"சும்மா ஒரு பிரெண்டை பார்க்க.." என்றவன் அந்த நண்பன் சாமிநாதன் என்பதை அவளிடம் சொல்லவில்லை. சாமிநாதனை பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் அவனை பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பினான் மகேஷ்.

"பத்திரமா போய்ட்டு வா.." என்றவளிடம் சரியென தலையசைத்து விட்டு கிளம்பினான் மகேஷ்.

மகேஷ் சென்று இரண்டு நாட்கள் கழித்து சந்தியா சக்தியை தேடிக் கொண்டு அவளது வீட்டிற்கு வந்தாள்.

சக்தியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். வாசலருகே வந்து நின்று "அத்தை.." என சந்தியா குரல் கொடுக்க சக்தியின் அப்பா சக்தியை சந்தேகமாக பார்த்தார்.

"யார் உன்னை அத்தைன்னு கூப்பிடுறது..?"

"தெரியலப்பா.." என்றவள் வாசலுக்கு வந்து பார்த்தாள். சந்தியா தன் கால்விரலால் தரையில் கோலம் போட்டபடி சக்தியை பார்த்தாள். சக்தி தன் நெஞ்சுக்கு நேராக கையை கட்டியபடி அவளை பார்த்தாள்.
"என்னை உள்ளே கூப்பிட மாட்டிங்களா அத்தை..?" என தயக்கமாக கேட்டாள்.

சக்தி வாசற்படியிலிருந்து விலகி நின்றாள். சந்தியா ஆர்வத்தோடு சுற்றி பார்த்தபடியே உள்ளே நுழைந்தாள்.

"யார்ம்மா இந்த பொண்ணு..?" கேட்டார் அப்பா.

"மூர்த்தியோட பொண்ணுப்பா.. மகேஷ்க்கு அக்கா பொண்ணு.." அப்பா சந்தியாவை நன்றாக பார்த்தார்.

"பொண்ணு நல்ல லட்சணமா இருக்கா.. நம்ம இனியனுக்கு கூட நல்லா பொருத்தமா இருப்பா.."

சக்தி பதட்டத்தை மறைத்தபடி அப்பாவை பார்த்தாள். "தேவையில்லாம எதையும் பேசாதிங்க அப்பா.." என்றவள் சந்தியாவிடம் திரும்பினாள்.

"இங்கே எதுக்கு வந்த..?"

"சும்மாதான்.. உங்க கை குணமாகிடுச்சான்னு பார்த்துட்டு போக வந்தேன் அத்தை.."

சக்திக்கு அவள் அத்தை என கூப்பிடும் போதெல்லாம் புது மாதிரியாக இருந்தது.

"எதுக்கு என்னை அத்தை அத்தைன்னு கூப்பிடுற..?" என அதட்டலாக கேட்டாள்.

"நீங்க என் மாமாவோட ஆள்தானே..!? அதனால்தான்.."

"உன் மாமனை போலவே நீயும் வில்லங்கம் பிடிச்ச ஆள் போலிருக்கு.." என சலித்துக் கொண்டாள் சக்தி.

"விடும்மா.. கூப்பிட்டுட்டு போகட்டும்.. இனியனுக்கு இந்த பொண்ணை கட்டி வச்சா.." அப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை இடை நிறுத்தினாள் சக்தி.

"அப்பா.. நீங்களும் உங்க பங்குக்கு என்னை பழிவாங்காதிங்க.."

"யார் அத்தை அந்த இனியன்..?" என கேட்டவளை கை சைகை காட்டி அமர சொன்னாள் சக்தி.

"உட்காரு.‌‌. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்.. நீயெல்லாம் இங்கே சாப்பிடுவியா‌‌..? இல்ல உங்க தாத்தா மாதிரி தீட்டு பார்ப்பியா..?"

"நான் உங்க வீட்டுல சாப்பிடுவேன் அத்தை.. நீங்களும் நாங்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு‌‌.. நமக்கென்ன தீட்டு..?" என அவள் கேட்க சக்திக்கு நெற்றியில் அறைந்துக் கொள்ள தோன்றியது. 'அவங்க மாமனை போல அதே ஆளை மயக்கற பேச்சு..'

சக்திக்கு சமையலறைக்கு சென்று அன்று இரவுக்கான உணவை எடுத்து வந்து சாப்பிடும் மேஜை மீது வைத்தாள்.

சந்தியா முதல் ஆளாக சாப்பிட எழுந்து வந்தாள். அப்பா சந்தியாவின் அருகே அமர்ந்தார். அவளை தலை முதல் கால் வரை ஐம்பதாவது முறையாக பார்த்தார்.

"வேணும்ங்கற அளவுக்கு நீயே போட்டு சாப்பிடு.." என்றவள் தட்டு ஒன்றில் தனக்கான உணவை பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சந்தியா உணவை ஒரு வாய் உண்டு விட்டு ஆச்சரியத்தோடு உச்சுக் கொட்டினாள்.

"அத்தை.. சாப்பாடு சூப்பரா இருக்கு.. உங்க‌ கைமணம் செம.. உங்க சமையலோட ருசிக்காகவே நான் எங்க மாமாக்கிட்ட அடம் பிடிச்சி உங்களை உடனே கல்யாணம் பண்ணிட்டு வர சொல்ல போறேன்.."
சக்தியின் அப்பா பொங்கி வந்த சிரிப்பை அடக்க தண்ணீரை குடித்தார்.

"இது எங்க அப்பா செஞ்சது.. எனக்கு சமைக்க அவ்வளவா தெரியாது.." சக்தி சொன்னதை கேட்டு அவளை ஆச்சரியமாக பார்த்தாள் சந்தியா.

"பரவால்ல அத்தை.‌. நான் உங்களுக்கு சமைக்க கத்து தரேன்‌.."

"உனக்கொரு விசயம் தெரியுமா..?"

"என்ன அத்தை..?"

"உனக்கு உன் மாமனை விடவும் வாய்க்கொழுப்பு அதிகம்.." சக்தி இப்படி சொல்லவும் சந்தியாவிற்கு முகம் வாடி விட்டது. ஆனால் அதுவும் ஒரு நொடிதான்.. மறு நொடியே அவளுக்கு பழிப்பை காட்டி விட்டு சக்தியின் அப்பாவிடம் திரும்பினாள்.

"தாத்தா சமையல் சூப்பர்.. நான் உங்ககிட்ட ஜூனியரா சேர்ந்துக்கட்டா..?"

அப்பா சக்தியின் முகம் கோபத்தில் சிவப்பதை கண்டு சிரித்தபடியே சந்தியாவிடம் சரியென தலையாட்டினார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN