நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா அநியாயத்திற்கு வாயாடிக்கொண்டிருந்தாள். சக்தி அவளது செய்கைகளையும் அவளது ஓயாத பேச்சுக்களையும் பொறுத்துக் கொண்டிருக்க படாதபாடுப்பட்டாள். சக்தியின் அப்பாவிற்கு சந்தியாவை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் இருவரும் தங்களது சொந்த கதைகளை பேச ஆரம்பித்தனர். தாங்கள் இருவரும் பிறந்தது முதல் நடந்த சாதாரண விசயங்களை கூட பெரிய உலக அதிசயம் என வியந்து பேசினர்.

"இருட்டாக போகுது.. நீ வீட்டுக்கு கிளம்பு சந்தியா.." என சக்தி சொல்ல இருவரும் ஒருசேர அவளை திரும்பி பார்த்தனர்.

சந்தியா முகம் வாடியபடி எழுந்து நின்றாள். "நான் இங்கே இருப்பது அத்தைக்கு பிடிக்கல... நான் கிளம்பி போறேன் தாத்தா..." அவளது குரலில் இருந்த சோகம் கேட்டால் யாராக இருந்தாலும் ஏமாந்து போய் விடுவார்கள்.

"உனக்கு ரொம்ப கல் மனசு சக்தி.." என்றார் அப்பா. "நீ நாளைக்கு சக்தி வேலைக்கு போன பிறகு வீட்டுக்கு வாம்மா.. நாம இரண்டு பேரும் பேசிட்டு இருக்கலாம்." என்றார் சந்தியாவிடம்.

சந்தியாவின் முகம் உடனடியாக புன்னகையோடு மின்னியது. "நான் நாளைக்கே வரேன் தாத்தா.." என்றவள் சக்தியை பார்த்தாள். " நான் வாரேன் அத்தை.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு தன் அப்பாவை முறைத்தாள் சக்தி. "நீங்க ஏன் இப்படி நடந்துக்கறிங்க? அவ மூர்த்தியோட பொண்ணு.. மறந்துட்டிங்களா..? அவக்கிட்ட போய் இனியனை பத்தி சொல்றிங்க..? அந்த வீட்டுல யாருக்காவது இனியனை பத்தி தெரிஞ்சா என்னவாகும்ன்னு உங்களுக்கே தெரியும்தானே..?"

"நீ எதுக்கெடுத்தாலும் பயப்படுறத நிறுத்து சக்தி.. என் பேரன் ஒன்னும் குழந்தை இல்ல இன்னும்.. உன்னோட பாதுகாப்பு வளையத்தை விட்டு அவனை அவனோட சொந்த உலகத்துல வாழவிடு.. இவ்வளவு நாளா உன்னோட பயத்துக்காகவே நானும் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு என் பேரனை பிரிஞ்சி இருந்துட்டேன்.. ஆனா இனிமேலும் அப்படியே இருக்க முடியாது.. வயசான காலத்திலாவது என்னையும் என் பேரனையும் சேர்ந்து வாழ விடு.. அவனை ஊருக்கு வர ஆசைப்படுறான்.. அவனுக்கு சம்மதம் சொல்லு.."

சக்தி அதிர்ந்து போய் அப்பாவை பார்த்தாள்.. "நான் அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டேன்ப்பா.. நீங்க இதை இதோடு விட்டுடுங்க.." அப்பா மறுத்து பேச இடம் தராதவளாக கோபத்தோடு தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

சக்திக்கு தன் அப்பாவிடம் முகத்தை திருப்பிக்கொண்டு வந்து இப்படி கெட்ட மகளாக இருக்க விருப்பம் இல்லைதான். ஆனால் அவள் மனதில் ஏற்கனவே பல குழப்பம் இருந்தது. கோபத்தில் அப்பாவிடம் ஏதாவது வார்த்தையை விட்டுவிடுவோமோ என பயந்தே அவள் விலகி வந்துவிட்டாள்.

இவ்வளவு நாட்களாக இனியனை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதே சிறந்தது என முடிவெடுத்து அவனை மறைத்து வந்தவளுக்கு இது வரை இல்லாத அளவிற்கு இப்போதுதான் அதிக பயம் வந்து சேர்ந்தது. இனியனை பற்றி மகேஷ்க்கு தெரிந்தால் என்னவாகும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. ஜென்மத்துக்கும் தன்னை வெறுத்து விடுவான் அவன் என நினைத்து பயந்திருந்தாள் சக்தி. முத்து இன்னும் அதிகமாக தன்னையும் இனியனையும் வெறுப்பார் என கவலைப்பட்டாள். இத்தனை வருடங்கள் கழித்து தோளுக்கு மேல் வளர்ந்த மகனை ஊருக்கு வரவழைத்தால் ஊரார் என்ன சொல்வார்களோ என பயந்தாள். மகேஷை பற்றி எதுவுமே தெரியாத இனியன் நடந்ததை அறிந்தால் தன்னை வெறுத்து விடுவானோ என பயந்தாள். இது அனைத்தையும் விட மகேஷ் நடந்ததை தெரிந்துக் கொண்டால் தனது சொந்த வீட்டற்கே பகையாளி ஆகி விடுவானே என் பயந்தாள்.

சந்தியா தனது வீட்டை நெருங்கி விட்டிருந்தாள். 'சக்தி வீட்டு தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்த சாதிங்கற ஒன்னு மகேஷ் மாமா வாழ்க்கையில தடையா இல்லாம இருந்திருந்தா இந்த தாத்தா இன்னேரம் எனக்கும் தாத்தாவா இருந்திருப்பாரு.. சக்தி அத்தை கூட இருந்திருந்தா எங்க மாமாவும் ரவுடியா மாறாம சாதாரண மனுசனா இருந்திருப்பாரு..' அவள் யோசித்துக் கொண்டே நடந்ததில் அவளுக்கு பின்னால் சத்தமில்லாமல் நடந்து வந்த ரகுவை கவனிக்க மறந்து விட்டாள்.

"என்னை பத்திதான் நினைச்சிட்டு இருக்கியா..?" திடீரென யாரோ தனக்கு மிக அருகிலிருந்து கேட்கவும் துள்ளி விழுந்தாள் சந்தியா.

ரகுதான் தனக்கு பின்னால் இருந்துள்ளான் என அறிந்ததும் அவனை கோபத்தோடு பார்த்தாள் சந்தியா.
"எதுக்கு என்னை இப்படி சுத்தி வர ரகு..? எனக்குதான் உன்னை பிடிக்கலன்னு ஏற்கனவே சொல்லிட்டேன் இல்ல.. இன்னொரு தடவை என் பின்னாடி நீ வந்தா நான் என் மாமாகிட்ட உன்னை பத்தி சொல்லிடுவேன்.. அதனால மரியாதையா என் பின்னாடி சுத்துறதை இன்னையோடு விட்டுடு.." அவனை எச்சரித்துவிட்டு திரும்பி நடக்க முயன்றாள் அவள். ஆனால் அவள் அடியெடுத்து வைத்து நடக்க முயலும் முன்பே அவளது கையை பிடித்து நிறுத்தினான் ரகு.

"இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வச்சிக்க.. ஒருத்தன் ரொம்ப நாளா உன் பின்னாடி சுத்தினால் உனக்கு திமிரு அதிகம் ஆகுதோ..? உன் மாமான் பெரிய ரவுடியா வேணா இருக்கலாம்.. ஆனா நான் அவனையே கதற விடுறேன் பாரு.." என்றவன் அவளது வாயை பொத்தி தன்னோடு இழுத்தி சென்றான்.

அவனின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள் அவள். ஆனால் அவன் வலுவாக அவளை பிடித்திருந்தான். சந்தியாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது. இருளான நேரம் என்பதால் அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் ஏதுமில்லை. சந்தியாவிற்கு பயத்தில் கண்ணீர் வந்தது. ஆனால் அவன் அவளது பயத்தை பற்றியோ அவளது கண்ணீரை பற்றியோ கவலைப்படாமல் அவளை தன்னோடு இழுத்து சென்றுக் கொண்டிருந்தான்.

பொன்னி சந்தியாவை எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்தாள். அவள் ஆயிரம் முறை தடுத்து நிறுத்தியும் கூட கேட்காமல் சக்தியின் வீட்டிற்கு சென்றிருந்தாள் சந்தியா. வீட்டில் இருப்போர் அவள் வீட்டில் இல்லாததை அறியும் முன்பே திரும்பி வந்துவிடுவதாக பாட்டியிடம் சொல்லி சென்றிருந்தாள். ஆனால் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் பொன்னி கவலைப்பட ஆரம்பித்துவிட்டாள்.

நதியோர கிராமம் அது. சுற்றிலும் மலைகள் வானுயரத்திற்கு காம்பவுண்டை கட்டி வைத்திருந்தன. கிராமத்தில் மொத்த வீடுகளே பத்தே பத்துதான். ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பகலில் சூரிய வெளிச்சை சேமித்து வைத்திருந்த விளக்குகள் மொத்த கிராமத்திற்கும் வெளிச்சத்தை தந்துக் கொண்டிருந்தன.

மகேஷ் அந்த கிராமத்தின் ஒரு குடிசை வீட்டின் முன் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்து வானில் தெரிந்த நிலவை ரசித்துக் கொண்டிருந்தான் சாமிநாதன்.

"இந்த கிராமத்து வாழ்க்கையிலதான்டா சொர்க்கமே இருக்கு.."

"எனக்கு என் ஆள் சக்தி எங்கே இருக்காளோ அங்கேதான் சொர்க்கம் இருக்கு.." சாமிநாதன் அவனை திரும்பி பார்த்தான். நிலவொளியில் அவனும் நிலவைதான் ரசித்துக் கொண்டிருந்தான்.

"இங்கேயே என்னை இந்த டார்ச்சர் பண்றியே.. அங்கே அவளை எவ்வளவு டார்ச்சர் பண்றியோ..? சும்மா அவளையும் கட்டாயப்படுத்தாதடா.." என்ற சாமிநாதனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் கலை.

"நான் எங்கே அவளை கட்டாயப்படுத்துறேன்.. அவளோட சம்மதம் வேணும்தான் இவ்வளவு நாள் காத்திருக்கேனே தவிர ஒருநாள் கூட அவளை கட்டாயப்படுத்தி அவளை என் கூட வாழ வைக்கணும்ன்னு ஆசைப்படல.. அவ திமிர் பிடிச்சவ.. என்னோட காதல் எத்தனை பிடிவாதமானதுன்னு தெரிஞ்சிருந்தும் என்னை பிரிச்சி வச்சி வாழுறா.."

"அவளுக்கு திமிர் ரொம்ப அதிகம் மகேஷ்.." என்றாள் கலை.

"பிரண்டுக்கு சப்போர்ட் பண்ண பிரெண்டை பார்த்திருக்கேன்.. ஆனா உன்னை மாதிரி ஒரு பிரெண்டை பார்த்ததே இல்ல கலை.." என்றான் சாமிநாதன் கிண்டலாக.

"எனக்கும் அவளை பிடிக்கும் நாதா.. ஆனா அவ அவளுக்குன்னு தனி ரூட் போட்டு வச்சி வாழறா.. யார் சொல்றதையும் கேட்கறது இல்ல.. அவங்க அப்பாவுக்கு கூட மகேஷை ரொம்ப பிடிக்கும்.. ஆனா அவர் சொல்றதை கேட்பாளா இவ..? இதையெல்லாம் கூட விட்டுடு.. ஆனா மனுசங்க யாரையாவது புரிஞ்சிக்கறாளா..? என்னை புரிஞ்சிக்காம போய்ட்டாளே.. எனக்கு அந்த கோபம்தான் இன்னுமே தீரல.. நான் ஓடி வந்ததாலதான் எங்க அம்மா செத்துட்டதா சொல்றாளே.. அவங்களோட சாதி அந்தஸ்து வெறியில என்னை சாகடிச்சிருந்தா இதே மாதிரி எனக்கு சப்போர்ட் பண்ணி ஒரு வார்த்தை பேசியிருப்பாளா..? அவ கூடவே பழகுன நான் கெட்டவ.. காதலிச்சவன் கூடவே வாழ்ந்து சாகணும்ன்னு முடிவு பண்ணி எல்லாவித எதிர்ப்பையும் தாண்டி காதலன் கை பிடிச்ச நான் கெட்டவ.. ஆனா வெத்து கவுரவுத்துக்காக செத்துப்போன எங்க அம்மா நல்லவங்களாம்.. காதலிச்சவனை ஏமாத்திட்டு அவன் கண் முன்னாடியே அவனை விட்டு விலகி வாழும் அவ நல்லவளாம்.."

கலை சக்தி மீதிருந்த கோபத்தை வார்த்தைகளால் கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் அப்படிதான் சக்தியை கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பாள்‌. அதனால் சாமிநாதனும் மகேஷும் அவளது கோப வார்த்தைகளை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சரி விடு.. டென்ஷன் ஆகாத.. அவளுக்கு உன்னோடு நட்பு பாராட்ட கொடுத்து வைக்கல அவ்வளவுதான்.." என்று அவள் தோளில் தட்டி சமாதானம் படுத்தினான் சாமிநாதன்.

"அவ மேல இருக்கற கோபம் எத்தனை வருசமானாலும் குறையவே மாட்டேங்குது நாதா.. அவளை நேர்ல பார்க்கனும்னு எவ்வளவு ஆசை தெரியுமா எனக்கு..? ஆனா அவளோடு வெத்து வீராப்பும் அவளோட கண்ணோட்டமும் கொஞ்சம் கூட மாறவேயில்ல.‌. அதனாலயே அவளை பார்க்கனும்ங்கற ஆசையை தள்ளி வச்சிருக்கேன்.. அவ ஒவ்வொரு முறை மகேஷை வெறுத்து ஒதுக்கும் போதும் அவ என்னையும் மறைமுகமா வெறுத்து ஒதுக்கற மாதிரிதான் இருக்கு.. எல்லோரையும் ஒதுக்கி வச்சிட்டு அவ அப்படி என்ன பெருசா வாழ்ந்துட்டா..? ஒரு கஷ்டத்துல பங்கெடுத்துக்க நட்பு இல்ல.. வேதனையில தோள் சாய்து ஆறுதல் சொல்ல மகேஷ் இல்ல.. இப்படி வாழறத்துக்கு பதிலா கொஞ்சம் கெட்டவங்களா வாழறதால் ஒன்னும் குறைஞ்சிட போறதில்லையே.."

அவளது பேச்சு மகேஷுக்கு பிடித்திருந்தது. வாழ்க்கை பற்றிய கலையின் எண்ணம் அவனுக்கு பிடித்திருந்தது. சொந்த வீட்டு மனிதர்களாக இருந்தாலும் தனது காதலுக்கு எதிரியாக வந்துவிட்டால் அவர்களை எதிர்த்து போராடுவதில் தப்பில்லை என்பதுதான் மகேஷின் யோசனையும் கூட. வீட்டாட்கள் காதலுக்கு சம்மதம் சொல்ல இருபது வருடங்களாக கூட ஆகலாம்.‌. இல்லை கடைசிவரை வெறுத்து கொண்டே கூட அவர்கள் இருக்கலாம்.. ஆனால் அதற்கு பதில் காதலித்தவர்கள் திருமணத்தை முடித்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால் அந்த பெற்றோரின் வெறுப்புக்கு அவர்களின் காதல் பாதுகாப்பு போர்வையாகி விடாதா..? என எண்ணும் அவனுக்கு சக்தியின் நியாயமும் அவள் சொல்லுகிற வெற்று சாக்கும் சிறிதும் பிடிக்கவில்லை.

பொன்னா மகேஷின் கைபேசியோடு வீட்டிலிருந்து வெளியே வந்தாள். பாவாடை சட்டை, இரட்டை சடையென அவனெதிரே வந்து நின்றாள். தனது கைப்பேசிக்கு சார்ஜர் போட்டிருந்தான் மகேஷ்.

"மாமா.. உங்க ஃபோன் ரிங்காகுது.." என அவனிடம் நீட்டி விட்டு தனது பள்ளிப் பாடத்தை படிக்க சென்றாள் அவள்.

அம்மா அழைத்திருந்தாள். தனக்கு எவ்வித சூழலிலும் ஃபோன் செய்ய கூடாது என அம்மாவிடம் சொல்லி வைத்திருந்தான் மகேஷ். அம்மாவும் இத்தனை நாட்களாக அவனை போனில் அழைத்ததே இல்லை. அதனால் இந்தமுறை வந்த இந்த அழைப்பு முக்கியமானதாகதான் இருக்கும் என யூகித்து அழைப்பை ஏற்று ஃபோனை காதில் வைத்தான்.

"சந்தியா இன்னும் வீட்டுக்கு வரல மகேஷ்.." அம்மா பதட்டமாக கூற மகேஷ் பதறிப்போய் எழுந்து நின்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN