நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

27. என் கண்ணின் விழியே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவனின் பதிலை கேட்டு அவள் முகம் உடனடியாக வாடிப்போனது. அவளது வாடிய முகத்தை காணாமல் அவன் பேசிக்கொண்டிருந்தான்.

"கன்னத்துல முத்தம் கொடுக்கறது தப்புதான்.. ஸாரி.. உன் அனுமதி இல்லாம உனக்கு முத்தம் தந்துட்டேன்.. நீ அதை தப்பா எடுத்துக்காத.." அவன் சொன்னது அவளின் இதயத்திற்கு ஏன் வலியை தந்தது என அவளால் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்தில் மிகப் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

அவன் மீது அவளுக்கு காதல் துளிர்த்து விட்டதை அவள் அந்த நொடிதான் உணர்ந்தாள். தனது இந்த புரியாத காதல் கண்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரையும் காதலிக்க கூடாது என எண்ணி தனது மனதுக்குள் கட்டுப்பாடு போட்டு வைத்திருந்தவள் தனது மனம் தனக்கே துரோகம் செய்து விட்டதை எண்ணி குழம்பினாள்.
அவள் ஏதும் பேசாமல் இருப்பதைக் கண்டு அவன் திரும்பி பார்த்தான். அவளின் உள்ளத்தின் வலி அவளுடைய முகத்தில் தெரிந்ததை அப்போதுதான் பார்த்தான் அவன்.

'இவ ஏன் இவ்வளவு சோகமா இருக்கா..? ஒருவேளை நாம இவளை விரும்ப ஆரம்பிச்ச மாதிரி இவளும் நம்மள விரும்ப ஆரம்பிச்சிருப்பாளோ..!?' என எண்ணியவன் உடனே தன் யோசனையின் பைத்தியகாரதனத்தை எண்ணி தனக்குள் சிரித்தான்.

'இவ நான் முத்தம் தந்ததை நினைச்சி பீல் பண்ணுறா போல.. ஒத்தை முத்ததுக்கு எதுக்கு இவ்வளவு சோகம்..?'
"நீ இந்த அளவுக்கு பீல் பண்ணுவன்னு நான் நினைச்சி கூட பார்க்கல.. ஸாரி.. இனிமேல் இப்படி எந்த தப்பும் நடக்காது.. நீ சொன்ன வார்த்தைகளும் அதை நீ சொன்ன விதமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால் கிஸ் பண்ணிட்டேன்.."

அவள் வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். "பரவால்ல விடு.. நீ ஸாரி கேட்கற அளவுக்கெல்லாம் பெருசா ஒன்னும் நடந்துடல.. நான் போய் மத்த வேலைகளை கவனிக்கறேன்.." அவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

'எவ்வளவு முட்டாள்தனமா இருந்திருக்கோம் நாம்.. இவனுக்கும் நம்மை பிடிச்சிருக்குன்னு நம்பி நம்மளை நாமளே ஏமாத்திக்க பார்த்தோமே..'

அவள் கிச்சனுக்கு வந்த போது அங்கு அதியனும் விஷ்வாவும் சமையல் செய்துக் கொண்டிருந்தனர். மைவிழி அதியனின் அருகே இருந்த ஒரு நாற்காலியின் மீது அமர்ந்தாள்.

அதியன் அவளின் யோசனை நிறைந்த முகம் கண்டு அவள் தோளில் தட்டினான். "காலையிலேயே என்ன யோசனை..?"

"சும்மாதான் மாமா.. எதையாவது நினைச்சி குழம்பறதுதானே மனுசங்க மனசே..?"

அவளின் முதுகு புறம் இருந்து சிரித்தான் செழியன். "அது மனுசங்க படக் கூடிய கவலையாச்சே.. உனக்கென்ன வந்தது பேயே..?"

மைவிழியின் யோசனை அந்த நொடியே காற்றோடு கரைந்துப்போனது. செழியனை கடுப்போடு திரும்பி பார்த்தாள்.

"பைத்தியகாரா.. உன்னை மாதிரியே என்னையும் நினைச்சியா..? என்னை நீ கிண்டலடிக்கறியா..? விஷ்வாண்ணா உனக்கொரு விஷயம் தெரியுமா..?" என அவள் ஆரம்பிக்க அவளது வாய் மீது கையை வைத்து அவளை மேலே பேசவிடாமல் தடுத்தவன் குழப்பமாக பார்த்த விஷ்வாவிடம் ஒரு சிரிப்பை தந்துவிட்டு அவளை தன்னோடு இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

"நீ என்ன பைத்தியமா..? நீ எதுக்கு தேவையில்லாம விஷ்வாக்கிட்ட என் காதல் விசயத்தை சொல்ற..?" அவனை வியப்போடு திரும்பி பார்த்தாள் மைவிழி.

"அப்படின்னா நீ நிஜமாவே அந்த பொண்ணை விரும்பறியா..?" அவள் ஆச்சரியமாக கேட்க அவன் எங்கோ பார்த்தபடி ஆமென தலையசைத்தான்.

"அந்த பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு விழி.. ஆனா அதை நான் அவக்கிட்டயே இன்னும் சொல்லல.. அவளை பார்த்தாலே எனக்கு கை காலெல்லாம் நடுங்குற மாதிரி இருக்கு.. அவக்கிட்டயே இதை நான் எப்படி சொல்றதுன்னு குழம்பி போய் இருக்கேன்..நீ அதுக்குள்ள இதை பத்தி விஷ்வாக்கிட்ட சொல்லி இன்னும் உயிரே விடாத என் காதலுக்கு கொள்ளி வச்சிடாத.."

இதுவே வேறொரு நேரமாக இருந்திருந்தால் மைவிழி அவனது காதல் சோகம் கேட்டு சிரித்திருப்பாள். ஆனால் இன்று அவளது காதலும் உயிர் வரும் முன்பே இறந்து போன காரணத்தால் அவளால் அவனது காதலின் சிறு வலியை புரிந்துக் கொள்ள முடிந்தது.

அவனது தோளில் தட்டித்தந்தாள் மைவிழி. "காதலிச்சாவே இப்படிதான் இல்ல..?" என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு திரும்பி பார்த்தான் செழியன். அவளது முகம் வாடியிருந்ததை கண்ட பிறகே அவளுக்குள் ஏதோ ஒரு பிரச்சினை என்பதை அவனும் புரிந்து கொண்டான்.

"நீ கதிரை விரும்பறியா..?" என்றான் அவன். அவள் உடனடியாக மறுத்து தலையசைத்தாள்.

"இல்ல.. நான்தான் காதலை நம்பாதவளாச்சே.." என்றவள் அவனிடம் மேலும் எதுவும் பேச விரும்பாதவளாக தோட்டத்து பக்கம் நடந்தாள்.

'இவளுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சி..? இவளோட மனசை ஆண்டவனால கூட புரிஞ்சிக்க முடியாது போல..'

மைவிழி தோட்டத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்தாள். சுற்றியிருந்த செடிகளில் மனதை தொலைக்க முயன்றாள். அப்போதுதான் பக்கத்து வீட்டில் ஏதோ உடைந்து விழும் சத்தம் பலமாக கேட்டது. அவர்கள் வீட்டின் ஒரு பக்கம் மிதுனின் குடும்பம் குடியிருக்க மற்றொரு பக்கம் இருந்த வீடு சமீபத்தில் காலியாகி இருந்தது. அந்த காலியான வீட்டில் திடீரென ஏதோ உடைந்து விழும் சத்தம் கேட்டதும் குழம்பி போய் எழுந்து நின்று அந்த பக்கமாக எட்டிப் பார்த்தாள் மைவிழி.

"உன்னால ஒரு விசயத்தை கூட சரியா செய்ய தெரியாதா மது..?" என ஒரு நங்கை அருகிலிருந்தவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

"ஸாரி பிரின்சஸ்.. தெரியாம விழுந்துடுச்சி.." என அவன் காதை பிடித்து மன்னிப்பு கேட்டபடி இந்த பக்கம் திரும்பிய போதுதான் அது மதுபாலன் என்பதை மைவிழி பார்த்தாள்.

"நீ ஸாரி கேட்டா இது சரியாகிடுமா..? இந்த கண்ணாடி பூச்சாடி என் அண்ணா எனக்காக ஆசையா வாங்கி தந்த கல்யாண பரிசு தெரியுமா..?" சிணுங்கலாக மதுபாலனிடம் கோபித்துக் கொண்டவளை மைவிழி இங்கிருந்து பார்த்தாள். அழகாக இருந்தாள் அவள்.

"உன் அண்ணனுக்கு அவ்வளவு பாசம் இருந்தா தங்கத்துல ஜாடி வாங்கி தர வேண்டியதுதானே..? கண்ணாடி பொருள் கை தவறி விழுந்தா உடையத்தான் செய்யும்.." என சொல்லிக் கொண்டே திரும்பியவன் கண்களில் மைவிழியின் முகம் தட்டுப்படவும் நின்ற இடத்திலிருந்து கையசைத்தான் அவன்.

"ஹாய்.. மைவிழி.. இதுதான் உங்க வீடா..?" என அவன் கேட்டான். மைவிழிக்கு சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 'இப்படியா அடுத்தவங்களோட வீட்டை எட்டிப் பார்ப்ப..?' என தன்னை நொந்து கொண்டவள் அவனிடம் ஆமென தலையசைத்தாள்.

அவன் தன்னருகில் நின்றிருந்த மங்கையை இவள் புறம் திருப்பினான். "இது என் மனைவி இளவரசி.. அந்த பொண்ணு என்னோட ஸ்டூடன்ட்.." என்று இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி வைத்தான். இருவரும் சிறு புன்னகையை பறிமாறிக் கொண்டனர்.

"யார் அது..?" என கதிரின் குரல் மிக அருகில் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் மைவிழி. அவன் அவளின் அருகில் நின்றபடி அவளை கேள்வியாக பார்த்தான்.

"அவர் என் ப்ரொபசர்.. இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருப்பாங்க போல.." என மைவிழி கூறியது மதுபாலனுக்கு கேட்டது.

"அது யார் உன் அண்ணாவா..?" என அவன் கேட்கவும் மைவிழி சட்டென தலையசைத்து இல்லை என்றாள்.
"என் ஹஸ்பண்ட் ஸார்.." என அவள் சொல்ல அவன் நம்ப முடியாமல் சிரித்தான்.

"நீ நேத்து என்னை சைட் அடிச்சப்ப நீ ஒரு மேரீட் கேர்ள்ன்னு எனக்கு தெரியவே தெரியாது.." என அவன் சொல்ல கதிர் மைவிழியை தன் பக்கம் திரும்பினான்.

"நீ.. நீ அவரை சைட் அடிச்சியா..?" அவனுக்கு அந்த கேள்வியை கேட்கும் போதே மனம் வலித்தது. 'தன் மனைவி தனக்கு மட்டுமே உரிமையானவள்.. தன்னை மட்டுமே ரசிக்க உரிமை உள்ளவள்' என்ற நிதர்சனம் அவனை முதன்முறையாக சாட்டையால் வெளுத்தது.

மைவிழி உடனடியாக மறுத்து தலையசைத்தாள். இவர்கள் இருவரையும் பார்த்தபடி காம்பவுண்ட் சுவரின் அருகே வந்தாள் இளவரசி.

"வாவ்.. உங்க தோட்டம் அழகா இருக்கு.. ஆனா பாருப்பா பிரதர்.. என் ஹஸ்பண்ட் கொஞ்சம் ஓட்ட வாய்.. நீங்க அவர் சொல்ற எதையும் மனசுல வச்சிக்காதிங்க..அந்த பொண்ணு சும்மா பார்த்திருந்தா கூட என் ஆள் கண்ணுக்கு சைட் அடிச்ச மாதிரிதான் தெரிஞ்சிருக்கும்.. பிரச்சனை உன் மனைவிக்கிட்ட இல்ல.. என் ஹஸ்ஸோட கண்ணுலதான்.." என அவள் சொன்ன விதத்தில் இருந்த கிண்டலை கேட்டு மைவிழி களுக்கென சிரித்தாள்.

கதிருக்கு மைவிழியை போல சிரிப்பேதும் வரவில்லை. மதுபாலனை ஓரக்கண்ணால் முறைத்தபடி மைவிழி தன்னோடு இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

"காலங்காத்தால என் கண்ணாடி ஜாடியை உடைச்சிட்ட.. ஒரு க்யூட் ஜோடிக்குள்ள சண்டையை ஏற்படுத்தி விட்டுட்ட.. நீ திருந்தவே மாட்டியா மது..?" என இளவரசி மதுபாலனை திட்டுவது மைவிழிக்கு வீட்டிற்குள் வந்தபிறகும் கேட்டது.

மைவிழியின் கையை அறைக்குள் சென்றபிறகே விட்டான் கதிர். கதவை தாளிட்டு விட்டு அவள் எதிரே வந்து நின்றான். "நீ அவனை சைட் அடிச்சியா..?" என்றான் புருவம் நெரித்து.

அவனது இந்த திடீர் செயல் மைவிழிக்கு சிறு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. எதற்காக அவன் இப்படி திடீர் உரிமை எடுத்துக் கொள்கிறான் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.

"நான் அவரை சும்மாதான் பார்த்தேன்.. அவர் அதைதான் இப்படி கிண்டலா சொல்லியிருக்காரு.. அதுவுமில்லாம நான் அவரை சைட் அடிச்சா கூட அதுல உனக்கென்ன வந்தது.. நான் ஒன்னும் உன் காதலியோ இல்ல உண்மை மனைவியோ கிடையாதே.." என்றவள் வெளியே செல்ல நடந்தாள்.

அவளின் கை பற்றி நிறுத்தினான் கதிர். "நீ என் காதலியா வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா நீ என் பிரெண்ட்.. புரிஞ்சது இல்ல..?" என அவன் கேட்க அவள் தலையசைத்து விட்டு வெளியே நடந்தாள்.

கதிர் தன் தலையை பிடித்து கொண்டு கட்டிலில் விழுந்தான். 'எனக்கு என்ன ஆச்சி.‌? அவ யார்கிட்ட பேசினால் எனக்கென்ன வந்தது..? அவ யாரை சைட் அடிச்சா எனக்கென்ன போகுது..? அதுவும் அவன் என்ன அவ்வளவு அழகாவா இருக்கான்..? ஆளையும் அவன் மூஞ்சியும் பாரு.. இவ சும்மாதான் பார்த்திருப்பா.. அவன்தான் அதையே ஓவரா சொல்றான் போல.. அவங்களுக்கு இந்த சிட்டியில் வேற வீடா கிடைக்கல..? எதுக்கு எங்க வீட்டுக்கு பக்கத்துல குடி வந்திருக்காங்க..? மைவிழி இங்கேயும் இவனை பார்ப்பாள்.. அப்புறம் காலேஜ் போனதும் அங்கேயும் அவனை பார்ப்பாள்.. இரண்டு பேர்க்குள்ளவும் ஏதாவது சிங் ஆகிட்டா என்ன செய்றது..?' அவன் தனக்குள் பேசி குழம்பி போனான். தனது குழப்பத்தின் ஊடே தெரிந்த அவனது காதலையும் கண்டுபிடித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top