நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் பதட்டமாக அம்மாவை கேட்டான். "சந்தியா வீடு வரலன்னா என்ன அர்த்தம்..?"

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம சக்தி வீட்டுக்கு போறேன்னு போனா மகேஷ்.. ஆனா இன்னும் வீடு வந்து சேரல.. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்ப்பா.. என்ன பண்றதுன்னே தெரியல.. நீ சக்திக்கு போன் பண்ணி சீக்கிரம் அவளை அனுப்பி வைக்க சொல்லுப்பா.."

அம்மா சக்தியை வெறுக்கவில்லை என்பதை மகேஷ் இன்றுதான் புரிந்து கொண்டான். எப்போதும் அப்பாவுக்கு பரிந்து பேசுபவள் இன்று சந்தியாவை சக்தி வீடு வரை அனுப்பியதிலிருந்தே அவனுக்கு புரிந்து போனது அம்மாவின் குணம்.‌

"நான் அவளுக்கு போன் பண்றேன் அம்மா.." அவன் அழைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு சாமிநாதன் அவனின் தோளை தொட்டான். "என்னடா ஆச்சி..?''

"சந்தியா சக்தி வீட்டுக்கு போயிருக்காளாம்.. இன்னும் வீடு வந்து சேரலன்னு அம்மா சொல்றாங்க.."

"சக்தி வீட்டுக்கா..? சந்தியாவுக்கு அவளை பிடிச்சிருக்கு போல..''

மகேஷ் முகத்தில் புன்னகை அரும்பியது. "சக்தி எங்க வீட்டுக்கு வந்த போது அவளை அத்தைன்னு கூப்பிட்டா சந்தியா.."

''அப்படின்னா உங்க வீட்டுல உன் பக்கமும் ஒரு ஆள் இருக்கு.."

"ம்.. சந்தியா எப்போதும் என் பக்கம்தான்.." என்றவன் சக்திக்கு ஃபோன் செய்தான்.

சக்தி ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்ததில் தலைவலிதான் கடைசியாக மிஞ்சியது. தலைவலிக்கு மாத்திரை ஒன்றை தேடி எடுத்து விழுங்கி விட்டு தனது அறைக்குள் வந்தாள். ஃபோன் சத்தமிட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என நினைத்தபடி ஃபோனை எடுத்தாள். மகேஷின் அழைப்பை கண்டதும் குழப்பமாகவே அதை ஏற்று காதில் வைத்தாள்.

"ஹலோ.. மகேஷ்.. " என்றாள் தயக்கமாக.

"நானேதான்.. அங்கே சந்தியா வந்திருக்காளா.‌.? அவளை சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி போக சொல்லு.. அங்கே எங்க அம்மா அவளை காணோம்ன்னு பயந்துட்டு இருக்காங்க.."

"அது.. சந்தியா ரொம்ப நேரம் முன்னாடியே இங்கிருந்து கிளம்பி போய்ட்டாளே.."

''ஆனா அவ இன்னும் வீடு போய் சேரல சக்தி.."

''அவ கிளம்பின நேரத்துக்கு எப்பவோ வீடு போய் சேர்ந்திருக்கலாம்.. ஒருவேளை பிரண்ட்ஸ் யாரையாவது பார்க்க போய்ட்டாளோ என்னவோ..?"

"அவ அப்படி எங்கேயும் சொல்லாம போகமாட்ட.. நான் வேற எங்கேயாவது விசாரிக்கறேன்.." என்றவன் தொடர்பை துண்டித்து கொள்ள சக்தி தன் தலைவலி இன்னும் அதிகமானதை உணர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.
'எங்கே போயிருப்பா இவ..'

மகேஷ் சந்தியாவின் தோழிகளுக்கு ஃபோன் செய்து அவள் அங்கு வந்துள்ளாளா என விசாரித்தான். ஆனால் எங்குமே அவள் சென்றதற்கான தடம் தெரியவில்லை.

பொன்னி பதட்டம் குறையாமல் சந்தியாவை எதிர்பார்த்து வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அந்த பக்கம் வந்த முத்து அவளை கவனித்து விட்டார்.

"இங்கே என்ன பண்ற..? எதுக்கு இப்படி வாசலையே பார்த்துட்டு இருக்க..?" என்றார் சந்தேகமாக.

"சும்மாதான்.." என்றவளின் குரலை வைத்தே அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் முத்து. என்னவாக இருக்கும் என யோசித்தார். மாலையிலிருந்தே சந்தியா கண்களில் தென்படாததுதான் உடனடியாக நினைவிற்கு வந்தது.

"சந்தியா எங்கே..?" பொன்னியின் கைகால்கள் அனிச்சையாக நடுங்கின. முத்துடன் அவள் வாழும் வாழ்க்கை சர்க்கஸில் உயரத்தில் கட்டிய கயிற்றில் நடப்பது போல என்பதை அறிவாள். கரணம் தப்பினால் மரணம் என்ற வாழ்விது. அதனால் நெஞ்சுக்குள் வருடக்கணக்கில் ஊறிவிட்ட பயம் இன்று வரையிலும் வளர்ந்துக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை.

"சந்தியா எங்கேன்னு கேட்கிறேன் இல்ல.." அவர் அதட்டிய அதட்டலில் பொன்னிக்கு மொத்த உடம்பும் சிலிர்த்து விட்டது.

"ச..சக்தி வீட்டுக்கு போயிருக்கா..." அவள் சொன்னதை புரிந்து கொள்ள முத்துவிற்கு சில நொடிகள் பிடித்தது. அதை அவர் புரிந்து கொண்ட மறு வினாடி பொன்னியின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விழுந்தது. பொன்னி கண்ணீர் தழும்பும் கண்ணீரோடு அவரை பயந்து பார்த்தாள்.

"அவ எதுக்கு அங்கே போயிருக்கா..? அவளா போனாளா..? இல்ல நீ அனுப்பி வச்சியா..?"

"அவ.. அவளேதான் போனா.. நான் வேணாம்ன்னுதான் சொன்னேன்.. ஆனா அவதான் என் பேச்சை கேட்காம போயிட்டா.."

முத்து மீண்டும் கோபத்தோடு தன் கையை ஓங்கினார். அதற்குள் பொன்னி கையிலிருந்த ஃபோன் ஒலிக்கவும் அந்த போனை பிடிங்கி அழைப்பை ஏற்று பேசினார்.

"அம்மா.. சந்தியா அங்கிருந்து கிளம்பி ரொம்ப நேரம் ஆயிருச்சாம்.. அவளோட பிரண்ட்ஸ்க்கு ஃபோன் பண்ணி கேட்டுட்டேன்.. அவ அங்கே எங்கேயும் வரலன்னு சொல்லிட்டாங்க.. நீங்க பக்கத்துல விசாரிச்சி பாருங்களேன்.." மகேஷ் சொல்ல சொல்ல முத்துவிற்கு இங்கே கோபம் அதிகமாகி கொண்டிருந்தது. எங்கோ இருக்கும் அவனுக்கு தெரிந்தது கூட வீட்டில் உள்ள தனக்கு சொல்லாமல் விட்டுவிட்டாளே என மனைவி மீது ஆத்திரம் கொண்டார்.

"அம்மா.. அம்மா.." பொன்னி பதில் ஏதும் பேசாததால் மகேஷ் மறுமுனையில் கத்தினான்.

"என் முதுகுக்கு பின்னாடி எனக்கு தெரியாம எல்லோரும் அந்த சக்தியோடு உறவு கொண்டாடிட்டு இருக்கிங்களா..?" என்று கர்ஜித்தார் முத்து.

மகேஷ்கும் கோபம் வந்தது. "நீங்க மனுசனா இருந்தா உங்ககிட்ட நான் பதில் பேச முடியும்.. உங்க சம்மதம் இல்லாம என்னோடு வாழ வரமாட்டேன்னுட்டா அவ.. அவ கூட கொஞ்சுரியா..? கெஞ்சுரியான்னு நீங்க வேற அப்பப்ப கடுப்பேத்துறிங்க.. நான் என்ன மனுசனை மாதிரி தெரியறனா இல்ல மாடு மாதிரி தெரியறனா..?"

"இந்த உதவாத பேச்செல்லாம் என்கிட்ட நீ பேசாத.. என் பேத்தி எங்கன்னு சொல்லு.. அவ மட்டும் பத்திரமா எனக்கு கிடைக்கல உங்க எல்லோரையும் வெட்டி கொன்னுடுவேன்.." அவர் இப்படி சொல்லவும் மகேஷ் கோபத்தோடு அழைப்பை துண்டித்துக் கொண்டு நெற்றியை பிடித்தபடி அருகிருந்த கட்டிலில் அமர்ந்தான்.
"என்ன ஆச்சி மகேஷ்..?" கவலையோடு கேட்டாள் கலை.

"சந்தியா காணாம போயிட்டா.. எங்க அப்பா கத்துறாரு.. பிரச்சனை பெருசாகும்ன்னு மனசு சொல்லுது.." என சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் அவன்.

"கவலைபடாம இருடா.. பிரண்ட்ஸ் வீட்டுக்கு எங்கேயாவது போயிருப்பா.. வீட்டுக்கு வந்துடுவா.." என்று ஆறுதல் கூறினான் சாமிநாதன்.

இல்லையென தலையசைத்தபடி எழுந்தான் மகேஷ்.‌ "ஏதோ சரியில்லன்னு மனசு சொல்லுது.. நான் இப்பவே ஊருக்கு கிளம்பறேன்.." என்றவன் மறுநொடியே வீட்டிற்குள் நுழைந்து தனது பயண பேக்கை தேடி எடுத்தான்.

"அதுக்குள்ள ஊருக்கு கிளம்பறிங்களா மாமா..? ஆனா இன்னும் செங்காவை நீங்க பார்க்கவே இல்லையே..!?" என்றாள் பொன்னா.

"நான் இன்னொரு நாள் வரேன்.. மாமாவுக்கு அவசர வேலை வந்துடுச்சி.. செங்கா வந்தா சொல்லிடு.." என்றவன் வெளியே வந்தான்.

"இந்த இருட்டுல ஊருக்கு கிளம்பறியா..? காட்டு பாதையில் நிறைய மிருகம் வரும்டா.." என்று எச்சரித்தான் சாமிநாதன்.

"நான் பார்த்துக்கறேன்.. நான் ஊருக்கு போய் ஃபோன் பண்றேன்.. வரேன்டா.‌.. வரேன் கலை.." என்றவன் தனது வாகனம் நின்றிருந்த இடம் நோக்கி ஓடினான். வாகனத்தின் பின் இருக்கையில் பேக்கை வீசியவன் வண்டியை இயக்கி கிளம்பினான்.

காட்டு பாதை வளைந்து நெளிந்து சென்றது. பாதையின் இருபுறமும் இருந்த மரங்களில் சில்வண்டுகள் "ங்கொய்" என சத்தமிட்டுக் கொண்டிருந்தன. இந்த பாதையில் நிறைய முறை அவன் யானைகளையும் மலைப்பாம்புகளையும் மற்ற விலங்குகளையும் பார்த்து கடந்து சென்றிருக்கிறான். அவற்றை போல இன்று எதுவும் குறுக்காக வந்து தனது பயணத்தை தாமதப்படுத்தி கூடாதென வேண்டிக்கொண்டு வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் சென்றான். இதே வேகத்தில் சென்றால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஊருக்கு சென்று விடலாம் என உணர்ந்து ஆக்ஸிலேட்டர் மீதிருந்த காலை எடுக்காமல் சென்றான்.

வெகுநேரம் மகேஷ் ஃபோன் செய்வானோ என காத்திருந்தாள் சக்தி. ஆனால் அவன் ஃபோன் செய்யவே இல்லை. 'அந்த பெண் வீடு வந்திருப்பாள்.. அதனால்தான் அவன் ஃபோன் பண்ணல.. கொஞ்சம் எனக்கும் தகவல் சொன்னா குறைஞ்சா போயிடுவான்..?' மகேஷை திட்டிவிட்டு உறங்கி போனாள் சக்தி.

நடுஇரவில் வீட்டின் கதவை யாரோ ஓங்கி தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்தாள் சக்தி. வெளியே முத்து எரிமலையை போல கொதித்து போய் நின்றிருந்தார். அவர் சந்தியாவின் தோழிகள் வீடுகளுக்கு சென்று அவளை பற்றி விசாரித்து விட்டுதான் இங்கு வந்திருந்தார். அவசரத்தில் இங்குதான் முதலில் வர நினைத்தார். ஆனால் சக்தியை குறை சொல்ல வலுவான ஆதாரம் தேவைப்பட்டது அவருக்கு. ஒருவேளை சந்தியா அவளது தோழிகளின் வீட்டிலிருந்து இவர் இங்கு வந்து தனது வீரத்தை காட்டிய பிறகு அவரது முடிவு தவறானது என சக்தி சொல்லி காட்டிவிட கூடாதென கவனமாக இருந்தார். அதனால்தான் அவர் இங்கே வர நடுநிசி ஆகிவிட்டது.

முத்துவின் பின்னால் நான்கைந்து ஆட்கள் கையில் உருட்டு கட்டைகளோடு நின்றிருந்தனர். சக்திக்கு இப்படி இவர்களை எதிர்கொள்வது சலிப்பை தந்து விட்டது.

"உங்களுக்கு என்ன வேணும்..?" என்றாள் அதிகார குரலில். அவளின் குரல் கேட்டு பின்னால் நின்றிருந்தவர்களின் முகத்தில் சிறு தயக்கம் தோன்றியது. ஆனால் முத்து அப்படியே நின்றிருந்தார்.

"என் பேத்தி சந்தியா எங்கே..? அவளை நீ எங்கே மறைச்சி வச்சிருக்க..?"

"அவளை மறைச்சி வச்சி நான் என்ன பண்றேன்..? அவ அப்பவே கிளம்பி போயிட்டா.."

தான் அழைத்து வந்த ஆட்களை பார்த்தார் முத்து.

"இவ வீட்டுக்குள்ள போய் தேடி பாருங்கடா.."

சக்தி வாசற்படியை மறித்து நின்றபடி முத்துவை முறைத்தாள். "உங்க கண்ணுக்கு நான் விளையாட்டு பிள்ளையா தெரியறனா..? இந்த வீட்டுல உங்க பேத்தி கிடையாது.. அவளை மறைச்சி வைக்கிறதால எனக்கு எந்த லாபமும் கிடையாது.. அதனால் அந்த பொண்ணை எங்கே தேடணுமோ அங்கே போய் தேடுங்க.. ஊருல உங்க பையனை மாதிரி வேற யாராவது ரவுடித்தனம் பண்ண நினைச்சி அந்த பொண்ணை கூட்டிட்டு போயிட்டாங்களோ என்னவோ..!?"

"உன் திமிர் எப்பவுமே குறையாது இல்ல..? சந்தியாவை நீதான் கடத்தி வச்சிருக்க.. நாங்க அவளுக்கும் மகேஷ்க்கும் கல்யாணம் செய்ய முடிவு பண்ணது தெரிஞ்சிதான் நீ அவளை கடத்திருக்க.."

மகேஷ் தன் ஊருக்குள் நுழையாமல் நேராக சக்தியின் வீடு நோக்கிதான் தனது வாகனத்தை ஓட்டினான்.
சக்தியின் வீடு கண்களில் பட்டதும் வாகனத்தின் வேகத்தை குறைத்தவன் அவள் வீட்டின் முன்னால் தனது தந்தை ஆட்களோடு நிற்பது கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு கோபத்தோடு இறங்கினான்.

சக்திக்கு முத்து சொன்ன இந்த தகவல் சற்று தடுமாற்றத்தை தந்து விட்டது. 'மகேஷ்கும் சந்தியாவுக்கும் கல்யாண செய்ய முடிவு பண்ணியிருக்காங்களா‌‌..? ஆனா இதை ஏன் மகேஷ் என்கிட்ட சொல்ல..? அந்த பொண்ணு சந்தியா கூட என்னை அத்தைன்னுதானே கூப்பிட்டா..!?' சக்தி குழம்பி போய் நின்றாள்.

"மரியாதையா தள்ளி நின்னுடு.‌. நான் என் பேத்தியை கூட்டிப் போறேன்.."

சக்திக்கு கோபம் எல்லை மீறி விட்டது. "யோவ்.. என்னை பார்த்தா உனக்கு ரவுடி மாதிரியும் கடத்தல்காரி மாதிரியும் தெரியுதா..? பைத்தியாமாயா நீ..? அந்த பொண்ணை எங்கே போய் தேடணுமோ அந்த இடத்துல தேடி கண்டுபிடின்னா இங்கே வந்து இந்த நேரத்துக்கு வம்பு பண்ணிட்டு இருக்க.. உன் மிரட்டலை கண்டு பயப்பட நான் ஒன்னும் பழைய சக்தி கிடையாது.‌. நீ தர விஷத்தை குடிச்சிட்டு பயந்து போய் விலகி நிற்க நான் அந்த அப்பாவி சக்தி கிடையாது.."

ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார் முத்து. அவர் அழைத்து வந்த ஆட்களின் பின்னால் அதிர்ந்து போய் நின்றிருந்தான் மகேஷ். அவன் காலடியில் அவனது செல்போன் விழுந்து கிடந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top