நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்து வீட்டிற்கு வந்ததும் தூக்கமில்லாமல் கவலையோடு காத்திருந்த பொன்னி எழுந்து ஓடி வந்தாள்.

"என் பேத்தி கிடைச்சாளா..?" என்றாள் கண்ணீரை துடைத்துக் கொண்டே‌.

"நான் அந்த சக்தியை விசாரிக்கும் முன்னாடி உன் பையன் வந்துட்டான்.. அவன்தான் சந்தியாவை தேடி போயிருக்கான்.." என்றவர் அசதியோடு அமர்ந்தார். இவர்கள் பேசிய அரவம் கேட்டு அரை தூக்கத்தோடு எழுந்து வந்தான் மூர்த்தி.

"இந்த நேரத்துக்கு ஏன் நீங்க இரண்டு பேரும் விழிச்சிட்டு இருக்கிங்க..?" என அவன் கேட்க, தன் அருகேயிருந்த பூ ஜாடியை எடுத்து அவன் மீது வீசினார் முத்து. அரைதூக்கம் நொடியில் தெளிந்ததில் நகர்ந்து நின்றான் மூர்த்தி. பூ ஜாடி அவனை உரசியபடி சென்று அவன் பின்னாலிருந்த சுவற்றில் மோதி சுக்கல் நூறாய் உடைந்தது.

"நீ பெத்த பொண்ணு நேத்து ராத்திரியில் இருந்து காணாம போயிட்டா.. ஆனா நீ எதுவும் தெரிஞ்சிக்காம நிம்மதியா படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க.. நீயெல்லாம் ஒரு அப்பன்..!?"

மூர்த்தியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. "சந்தியா எங்கே..?'' என்றான் அவசரம்.

"நேத்து சாயங்காலம் சக்தி வீட்டுக்கு போனவ அதுக்கப்புறம் வீடு வந்து சேரல.."

மூர்த்தி வியர்த்த தன் முகத்தை துடைத்துக் கொண்டான்.

"அவ ஏன் சக்தி வீட்டுக்கு போனா‌‌..? ஏன் திரும்பி வராம போனா..?" அவன் குழப்பமாக கேட்டான்.

"உன் மகளுக்கு அந்த சக்தியை ரொம்ப பிடிச்சி போச்சாம்.. அதான் உறவு கொண்டாட அவ வீடு வரைக்கும் போயிருக்கா.. ஆனா போனவ திரும்பி வரல.. அவளை கேட்டா அந்த பொண்ணு எப்பவோ திரும்பி போயிட்டான்னு சொல்றா‌‌.. அவளை நல்லா மிரட்டி கேட்கும் முன்னாடி உன் மச்சான்காரன் வந்து சேர்ந்துட்டான்.. எங்கயோ நாசமா போகட்டும்ன்னு நான் வீடு வந்து சேர்ந்துட்டேன்..''

மூர்த்தி தனது சட்டையில் அவிழ்ந்திருந்த பட்டன்களை போட்டுக் கொண்டு கிளம்பினான். வாசலில் சென்று செருப்பு போட்டவனை பின்னால் சென்று கை பிடித்து நிறுத்தினார் முத்து.

"எங்கே போற..?"

"அந்த சக்தியை கொன்னுட்டு என் பொண்ணை கூட்டி வர போறேன்.. அவதான் என் மேல் இருக்கற பழைய பகையை ஞாபகம் வச்சி இன்னைக்கு என் பொண்ணை பழி வாங்க பார்க்கறா.. அவளை கொல்லாம என் ஆத்திரம் தீராது.."

"நீ அன்னைக்கே அவளை கொன்னிருந்தா நமக்கு ஏன் இன்னைக்கு இந்த நிலமை வர போகுது..? இந்த லட்சணத்துல நாம அவளுக்கு விஷம் தந்ததை மகேஷ் முன்னாடியே சொல்லிட்டா.. அவனை இனி எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல.."

முத்து சொன்னதை கேட்டு பொன்னி அதிர்ந்து போய் அவரை பார்த்தாள்‌. 'அந்த பொண்ணுக்கு விஷம் தந்தாங்களா..?'

"நீங்க எதுக்கும் கவலை படாதிங்க மாமா.‌‌. அவளை இன்னைக்கு இரண்டு கூறாக்காம விட மாட்டேன்.." என்றவன் அங்கிருந்து வேகமாக கிளம்பினான்.

முத்து உள்ளே வந்து அமர்ந்தார். பொன்னி அவரருகே வந்து நின்றாள். "சக்தியை நீங்க கொல்ல பார்த்திங்களா..?" என்றாள் இன்னமும் கூட தன் காதில் விழுந்ததை நம்ப முடியாதவளாக.

முத்து அவளை இளக்காரமாக பார்த்தார். "ஆமா.‌. அதுக்கு இப்ப என்னங்கற..?" பொன்னிக்கு அவர் மீது ஆத்திரமாக வந்தது. ஆனாலும் வாழ்நாளெல்லாம் அடக்கி வைக்கப்பட்ட மனதின் தைரியம் இன்று ஒரு நொடி கோபத்திற்காக வெளி வர தயங்கியது. அவளது இயலாமையை நன்கு புரிந்து வைத்திருந்த முத்து அவளை மேலும் இளக்காரமாக பார்த்து விட்டு உறங்க சென்றார்.

"சந்தியாவை கண்டு பிடிக்க போகலையா..?" என்றாள் தயக்கமாக பொன்னி.

"அதான் என் பையன் போயிருக்கானே.‌. கண்டிப்பா அவளை கூட்டி வந்துடுவான்.‌. நீ போய் தூங்கு.." அவரது சமாதான வார்த்தைகளை கேட்கையில் பொன்னிக்கு சிரிப்புதான் வந்தது.

மகேஷ் அந்த வாட்ச்மேனை சந்தேகமாக பார்த்தான்.

"என்ன சொன்ன..?"

"விடியற்காலையில ரகுவுக்கு கல்யாணம்ன்னு அவங்க பேசிக்கிட்டத கேட்டேன் தம்பி.. மத்தபடி சத்தியமா வேறெதுவும் எனக்கு தெரியாது.." என்று பயத்தோடு கூறினார் அவர்.

மகேஷ்க்கு கோபம் எல்லை மீறி விட்டது. அவன் அழைத்து வந்திருந்த அந்த பையன் பயத்தோடு அவனருகே வந்தான்.

"அந்த கோவில் இங்கே பக்கத்துலதான் இருக்கு.. உடனே கிளம்பினால் அவன் கல்யாணத்தை தடுத்து நிறுத்திடலாம்.."

அவனை இழுத்துக் கொண்டு கிளம்பினான் மகேஷ்.

சக்தி அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தாள். அவளது மனம் சந்தியாவை நினைத்து கவலை கொண்டிருந்தது.

மணி நான்கை கடந்துக் கொண்டிருக்கையில் சக்தியின் போனுக்கு அழைத்தாள் வனஜா.

"சொல்லுங்க அக்கா..''

"அந்த பொண்ணை ரகுன்னு அவளோடு படிக்கிற ஒருத்தன் கடத்திட்டு போயிருக்கான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த பொண்ணு கழுத்துல அவன் கட்டாய தாலி கட்டப் போறதா தகவல் வந்திருக்கு.. அவன் கல்யாணம் பண்ணிக்க இருக்கற கோவிலோட பூசாரி மூலமா தகவல் கிடைச்சிருக்கு.. நீ உடனடியாக போனா அந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்‌‌.."

"நன்றிக்கா..'' என்றவள் தன் வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

மூர்த்தி சக்தியின் வீட்டருகே தனது காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். அதே நேரத்தில் சக்தி தனது வீட்டிலிருந்து வெளியே வந்து தனது வாகனத்தில் ஏறி கிளம்பினாள்‌.

'இந்த நேரத்துக்கு எங்கே போறா இவ..? நீ எங்கே போனாலும் உனக்கு சாவு என் கையில்தான் இன்னைக்கு..' மூர்த்தியும் தனது காரில் ஏறி புறப்பட்டான்.

சந்தியா தனது கைகள் வலிப்பதை உணர்ந்து கண்களை திறந்தாள். அவளது கைகள் முதுகு பின்னால் கட்டப்பட்டிருந்ததால்தான் இப்படி வலிக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு அப்போதுதான் முழு அதிர்ச்சியாக இருந்தது. கத்த நினைத்தவள் தன் வாயை கட்டியுள்ளதை அப்போதுதான் கண்டாள்‌.

சந்தியா தான் எங்கிருக்கிறோம் என புரிந்துக் கொள்ள முயன்றாள். தன்னை சுற்றி இருந்த நான்கு சுவரையும் பயத்தோடு பார்த்தாள்‌. அறையின் கூரையில் எறிந்துக் கொண்டிருந்த விளக்கு அவளை மேலும் பயமுறுத்தியது‌. அறையின் வெளியே யாரோ பேசும் குரல் கேட்டு தன் செவிகளை கூர்மை படுத்தினாள் சந்தியா.

"அந்த பொண்ணு உன் கூட விரும்பிதானே வந்திருக்கா..?"

"ஆமாண்டா.. இதையே எத்தனை முறைதான் சொல்றது..? அவளும் நானும் உயிருக்குயிரா நேசிக்கறோம்.. அவளோட மாமனுக்கு பயந்துதான் இப்படி திருட்டுதனமா கல்யாணம் பண்ண வேண்டியதிருக்கு.." இப்போது பேசுவது ரகு என புரிந்து கொண்டவளுக்கு அவன் சொன்ன திருமணம் என்ற சொல் அவளது வயிற்றில் புளியை கரைத்தது.

"முகூர்த்த நேரம் வர போகுது ரகு.."

அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் ரகு. இவள் மிரண்டு போய் பார்ப்பது கண்டு சிரிப்போடு அவளருகே வந்தான்.

"இன்னைக்கு நமக்கு கல்யாணம்.." என்றவன் கிண்டலாக சிரித்தான். "காதலுக்கே ஓகே சொல்ல மாட்டேன்னல்ல இப்போ பாரு நேரா கல்யாணத்துக்கே கழுத்தை நீட்ட போற.. இப்போ கை கட்டை அவிழ்த்து விட போறேன்.. வாய் கட்டையும்தான்.. ஏதாவது சத்தம் நினைச்ச இதோ பார் கையிலேயே வச்சிருக்கேன் கத்தியை ஒரே குத்தா குத்திடுவேன் பார்த்துக்க.."

அவளது கையின் கட்டை அவிழ்த்து விட்டான். அவள் கண்ணீரை சிரித்தபடியே துடைத்து விட்டவன் அவளது வாய் கட்டையும் அவிழ்த்து விட்டான்.

சந்தியா பயத்தோடு பின்னால் நகர்ந்து அமர்ந்தாள். "என்னை எதுவும் பண்ணிடாத.. விட்டுடு.. ப்ளீஸ்.. எங்க மாமாவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவாரு.."

அவன் இதை கேட்டு பைத்தியக்காரன் போல சிரித்தான். "உன் மாமன் ஊர்ல இல்லன்னு தெரிஞ்சிதான் நான் இந்த ஏற்பாடே செஞ்சேன்.. இன்னைக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சபிறகு நீயே என்கிட்ட சரணடைய போற.. இன்னைக்கு ஊரை விட்டு இப்படியே ஓட போற நாம ஆறு மாசம் கழிச்சிதான் ஊர் திரும்ப போறோம்.. அப்போ நீயே என் உயிருக்காக உன் மாமன்கிட்ட கெஞ்சுவ.. லாஜிக் இல்லாம பேசுறனேன்னு நினைக்கற இல்ல..? பாரம்பரியமும் மாங்கல்யமும் உனக்கு அந்த பக்குவத்தை தந்திடும் பாரேன்.‌."

சந்தியாவிற்கு இன்னும் அதிகம் பயமாக இருந்தது. அவனது கண்களிலிருந்த பயம் அவனுக்கு சந்தோசத்தை தந்தது.

"இதோ இந்த புடவையை கட்டிக்கிட்டு தலை சீவி பூ பொட்டோடு வெளியே வா‌‌.. கல்யாண முகூர்த்ததுக்கு நேரமாச்சாம்..!"

சந்தியா முடியாதென தலையசைத்தாள். "நானே உனக்கு புடவை கட்டி விடட்டா..?" சந்தியா மறு நொடியே அவன் கையிலிருந்த புடவையை வாங்கிக் கொண்டாள்.

ரகு சிரித்தபடியே எழுந்து வெளியே சென்றான். சந்தியா கையிலிருந்த புடவையை கண்ணீரோடு பார்த்தாள்‌.

'என்னை யாராவது காப்பாத்துங்களேன்.. மாமா.. அத்தை..' என உள்ளுக்குள் வேண்டியவளுக்கு கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.

கை நடுங்க புடவையை கட்டிக் கொண்டவள் தலை சீவி பூ முடிந்துக் கொண்டாள்.

கதவு படீரென திறந்தது. ரகு பட்டு வேட்டி சட்டையோடு உள்ளே வந்தான்.

"ஏன் இன்னும் பொட்டு வைக்கல.." என்றவன் அருகிருந்த பொட்டை எடுத்து அவளுக்கு வைத்து விட்டான்.

"என்னை விட்டுடேன் ரகு.." என்று கெஞ்சினாள் அவள்.

அவளது கண்ணீர் வடிந்த கன்னங்களை துடைத்து விட்டவன் அவளது முன்னால் தன் இடையிலிருந்து உருவிய கத்தியை காண்பித்தான். "நீ தேவையில்லாம பேசினால் இந்த கத்தி தேவையோடு உன்னை குத்திடும்.. கருத்தா பொழைச்சிக்க பாரு.. கத்தி வச்சி என் கத்திக்கு வேலை வச்சிடாத.. என்ன புரிஞ்சதா..?" சந்தியா பயத்தோடு தலையசைத்தாள்.

அவளது கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் ரகு. வானம் கொஞ்சமாக வெளுக்க தொடங்கியிருந்தது. மங்கல் வெளிச்சத்தில் தன் முன் நின்றிருந்த ரகுவின் நண்பர்களை பார்த்தாள். ஒரு முகம் கூட அவளுக்கு தெரிந்த முகமாக இருக்கவில்லை.

"ஏன்டா அந்த பொண்ணு முகம் வாடியிருக்கு..?" என்று கேட்டான் அவன் நண்பன் ஒருவன்.
"அவங்க அப்பா நினைவு வந்துடுச்சாம்ப்பா.." என உச்சு கொட்டினான் ரகு.

"கவலைபடாத பாப்பா.. கொஞ்ச நாள் கழிச்சு எல்லோரும் சமாதானம் ஆகிருவாங்க.." என ஆறுதல் சொன்னான் ஒருவன்.

ரகு அவளின் தோளில் கை போட்டபடி அவளின் பின்னால் நின்றான். அவளது இடுப்போரத்தில் ஏதோ ஒன்று கூராக குத்தியது. அது அவன் கையிலிருக்கும் கத்தி என்பதை உணர்ந்தவளுக்கு கண்கள் தாண்டி வர முயன்ற கண்ணீர் பயத்தில் அப்படியே உறைந்து போனது.

"முகூர்த்த நேரத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம் வாங்க.."

அருகிலிருந்த கோவிலை நோக்கி நடந்தனர் அவனின் நண்பர்கள். அவன் சந்தியாவை நடத்தி கூட்டிச் சென்றான்.

கோவில் சன்னதிக்குள் நுழைந்தவளுக்கு ஏனோ ஜெயிலுக்குள் நுழைவதை போல் பயமாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top