நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

30.மொழியே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதிர் தன்னை குறிப்பிட்டு சொல்லவில்லை என்று முழுமையாக நம்பிய மைவிழிக்கு அவன் உன்னையில்லை என சொன்ன பதில் பெரிய ஏமாற்றத்தை தந்ததுதான் விந்தை.

உன்னை குறிப்பிடவில்லை என சொல்லிவிட்டானே தவிர அவனுக்குள்ளும் 'அந்த வார்த்தைகள் அனைத்தையும் உன்னை நினைத்தே சொன்னேன்' என சொல்ல ஆசைவந்தது.

பேய்வீட்டை விட்டு இருவரும் வெளியே வந்தனர். அவர்கள் முன்பு பேய் வீட்டில் சந்தித்த அந்த அழகு ஜோடி இப்போது அருகிலிருந்த ஐஸ்கிரீம் பார்லரில் புகுந்து அமர்ந்து ஒரே ஐஸை இரண்டு ஸ்பூன்களில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டுருந்தனர். அவர்களை கண்டதும் மைவிழி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளையே கவனித்துக் கொண்டிருந்த கதிருக்கு அவளது முக சுளிப்பு சிரிப்பைதான் தந்தது.

"ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா.." அவளை இழுத்துக் கொண்டு அந்த ஐஸ்கிரீம் ஸ்டாலுக்குள் நுழைந்தான் கதிர். இவர்களை கண்டதும் அந்த அழகு ஜோடி காணாத காண்டாமிருகத்தை கண்டது போல விதிர்த்து போய் முகம் திருப்பிக் கொண்டது.

"ஆரஞ்ச் ப்ளேவர்ல ஐஸ்கிரீம் இரண்டு.." கதிர் சொல்லவும் மைவிழி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"என்ன அவ்வளவு ஆச்சரியமா பார்க்கற..? ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்கு.. முயல் புடிக்கற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாதான்னு..? அதுமாதிரிதான் இதுவும்.. உன் டேஸ்ட் என்னன்னு கூடவா தெரிஞ்சிக்க முடியாது..? எனக்கு பிடிச்ச பல விசயம் உனக்கும் பிடிச்சிருக்கு.. எனக்கு ஆரஞ்சி ப்ளேவர்ல நிறைய புட் அயிட்டம் பிடிக்கும்.. அந்த கெஸ்லதான் உனக்கும் இதையே ஆர்டர் பண்ணேன்.." அவன் சொல்லிக் கொண்டே ஒரு நாற்காலியில் அமர்ந்தான். மைவிழி அவனது யூகிப்பு திறனை வியந்தபடியே அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.

அந்த அழகு ஜோடி அவளை பரிதாபமாக பார்த்தது. "எப்பேர்ப்பட்ட காதலனுக்கு இப்படி ஒரு தண்டம் காதலியா கிடைச்சிருக்கு..? காதலன் அவ மேல வச்ச காதல்ல ஒரு பர்செண்ட் கூட இவ வைக்கல போல.." அந்த பெண் மெல்லமாக சொன்னாலும் அது மைவிழியின் காதில் தெளிவாகவே கேட்டது.

மைவிழியின் தத்தளிப்பு கதிருக்கு சிரிப்பைதான் தந்தது. "அவங்கவங்க அவங்கவங்க வேலையை பார்க்க மாட்டாங்களா..?" என மைவிழி சலித்துக் கொண்டாள். கதிர் களுக்கென சிரித்துவிட்டு அவளை பார்த்தான்.

"என்ன..?"

"பேய் வீட்டுல நீ மட்டும் அவங்களை முதல்ல வம்புக்கு இழுக்கலன்னா நான் இன்னேரம் அவங்கக்கிட்ட உன் சார்ப்பா சண்டைக்கு போயிருப்பேன்.." கதிர் சொன்னதை கேட்டு மைவிழி அசட்டு சிரிப்பு சிரித்தாள்.
"முதல் தப்பு என் மேலன்னு நான் கவனிக்கல.." என்றவள் டேபிளுக்கு வந்து சேர்ந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

அவள் அந்த ஐஸ்கிரீமை இரண்டாவது ஸ்பூன் சாப்பிடுகையில் "விழி.." என்றபடி அங்கு வந்து சேர்ந்தான் செழியன். மைவிழி அலுத்து போன முகப்பாவத்தோடு திரும்பி பார்த்தாள். "உன் தொல்லை இங்கேயுமா..?" என்றவள் அவனின் பின்னால் சிறு கூட்டமே நிற்பதை கண்டு தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

"புது கல்யாண ஜோடியை தொல்லை பண்றதுல எங்களுக்கும் விருப்பம் இல்லைதான்.. ஆனா பாரு இங்கே இந்த ஸ்டால்ல மட்டும்தான் ஐஸ்கிரீம் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதனாலதான் வரவேண்டியதா போச்சி.. இந்த ஒரு டேபிளை தவிர மீதி எல்லா டேபிளும் ஆட்களால் நிரம்பியிருக்கு.." என்று காரணத்தை விளக்கியபடி அவளருகே அமர்ந்தான் அதியன். அதியனின் அருகே அமர்ந்த விஷ்வா கதிரை ஒரு மாதிரியாக பார்த்தபடி அமர்ந்தான். மதுபாலன் பொங்கி வரும் சிரிப்பை அடக்கியபடி மைவிழியின் மறுப்பக்கத்தில் அமர்ந்தான். அவன் மனைவி இளவரசி அவனது ரகசிய சிரிப்பு கண்டு அவனது தோளில் ஒரு அறையை விட்டுவிட்டு அவனருகே அமர்ந்தாள்.

"எனக்கு சேர் இல்ல.." என செழியன் வருத்தமாக கூற எல்லோருக்கும் அவனை நினைத்து பாவமாக இருந்தது. அதைவிட அதிகமாக சிரிப்பு வந்தது.

"என் மடி மீது உட்கார்ந்துக்கோ.." என விஷ்வா சொல்ல "உவ்வேக்.." என முகம் சுளித்தான் செழியன்.

"பெஸ்ட் ஆஃப்பர் தந்தேன்.." என கை விரித்து விஷ்வா கூற செழியனின் முகம் கோணல் மாணலாக போனது. அவனது முகம் போன போக்கை பார்த்து அடுத்த டேபிளில் இருந்தவர்கள் கூட ரகசியமாக சிரித்தனர்.

செழியனின் பரிதாப நிலைக் கண்டோ என்னவோ அருகிலிருந்த டேபிள் உடனடியாகவே காலியானது.

செழியன் அங்கிருந்து ஒரு சேரை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தான். விஷ்வாவிற்கும் கதிருக்கும் இடையில் இருந்த இடத்தில் அந்த நாற்காலியை போட்டு அமர்ந்தான். அவனது பாதி உடம்பு விஷ்வாவின் மீது இருந்தது.
"இதுக்கு நீ என் மடி மேலயே உட்கார்ந்திருக்கலாம்.." என சலிப்பாக கூறினான் விஷ்வா.

மைவிழி களுக்கென சிரித்தாள். அவளை முறைத்துப் பார்த்தான் செழியன். அவளது கையிலிருந்த ஐஸ்கிரீமை பார்த்தவன் கதிர் கையிலிருந்ததையும் பார்த்தான்.

"நீயெல்லாம் என்னை பார்த்து சிரிக்கற பார்த்தியா..?" என்றவன் தன் முன் கொண்டு வந்து வைக்கப்பட்ட சாக்லேட் பிளேவர் ஐஸ்கிரீமை எடுத்து அவள் முன் காட்டினான்.

"டேஸ்ட்ன்னா இது டேஸ்ட்.." என சொல்லிவிட்டு அதை சுவைக்க ஆரம்பித்தான். அவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டு திரும்பியவள் மதுபாலனின் கையில் ஆரஞ்ச் பிளேவர் ஐஸ்கிரீமை கண்டு அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"நீ ஆச்சரியப்பட்டு பார்க்கற மாதிரி நான் ஆரஞ்ச் பிளேவர் ரசிகன் கிடையாது.. எனக்கு ஒரு சோம்பேறி ப்ரெண்ட் இருக்கா.. அவளோடு சேர்ந்து இப்படி எல்லா பிளேவரையும் சாப்பிட்டு பழகிட்டேன்.. இன்னைக்கு ஆரஞ்ச் பிளேவர் பார்த்ததும் அவ ஞாபகம் வந்துடுச்சேன்னு வாங்கினேன்.." அவன் ஒவ்வொரு வார்த்தை சொல்லும் போதும் கதிருக்கு அடிவயிறு அனலாக எரிந்தது.

'இவனோட புராணத்தை இங்கே யார் கேட்டாங்கன்னு இவன் இங்கே தன் வரலாறை சொல்லிட்டு இருக்கான்..? தன் பொண்டாட்டியை பக்கத்துல வச்சிக்கிட்டே இப்படி அடுத்தவன் பொண்டாட்டி கூட கடலை போடறான் பைத்தியகாரன்..' அவன் மனதுக்குள் திட்டியது மதுபாலனின் உள்மனதுக்கு உரைத்து விட்டது போல. தொண்டையை பிடித்துக் கொண்டு இரும்பினான்.

கதிருக்கு இப்போதுதான் ஐஸ்கிரீமின் குளுமை இரைப்பையை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது.

"யாரோ என்னை திட்டிட்டாங்க.." என்றபடி தலையை தட்டிக் கொண்டான் மதுபாலன். அவனின் தலை மீது தன் கரத்தை வருட விட்டாள் இளவரசி.

"உன்னை யார் திட்டப்போறா டார்லிங் என் அண்ணனை தவிர..? நீ அவன் பொண்டாட்டியை சோம்பேறின்னு திட்டின.. அது அவன் உள்மனசுக்கு கேட்டிருக்கும்.. அதான் உன்னை ஏதாவது திட்டிருப்பான்.."

"இந்த பொண்ணுங்க மட்டும் எப்பவுமே பொறந்த வீட்டை விட்டு தரதே இல்ல.." என்று நக்கலாக மதுபாலன் கூற அவன் தலையை பூவாக வருடிக்கொண்டிருந்தவள் பட்டென இரு அடிகளை விட்டாள்.

"ஐயோ என் பெண்டாட்டி என்னை கொல்லுறா.. இந்த ஆண்கொடுமையை கேட்க யாருமே இல்லையா..?" என அவன் சத்தமாக கத்த அவள் மேலும் இரு அடிகளை விட்டாள்.

அவர்களது செல்ல போர் கண்டு மைவிழிக்கு சிரிப்பு வந்தது. அவளின் சிரிப்பின் காரணம் மாற்றான் என அறிகையில் கதிருக்கு ஆத்திரம்தான் வந்தது. கதிரின் இயல்பான குணமிது. தனக்கு சொந்தமான ஒன்றின் மீது மாற்று நிழல் கூட படக்கூடாது என நினைப்பது அந்த சொத்தின் மீது உள்ள அளவுக்கடந்த அக்கறையால் மட்டுமே என்பது அவனது வாதம்.

அவனது முக மாற்றத்தை அங்கே இளவரசி மட்டுமே கண்டாள். புது மணம் புரிந்த ஜோடிகளின் அளவு கடந்த காதலால் வரும் அக்கறைகளிவ் இதுவும் ஒன்றென்று எண்ணி விட்டுவிட்டாள்.

மைவிழியின் சின்ன சிரிப்பையும் தன் மூளையின் சேமிப்பகத்தில் சேமித்துக் கொண்டிருந்தான் அதியன்.

"இப்படி கலகலப்பா இருந்து ரொம்ப நாளாச்சி.." என்று வருத்தமாக சொன்னான் விஷ்வா.

"ஏன் விஷ்வாண்ணா அப்படி சொல்றிங்க..?" என்றாள் மைவிழி.

"ஏனா எனக்குன்னு இருப்பது இரண்டே இரண்டு பிரெண்ட்ஸ்.. ஒருத்தன் காதலி செத்ததுல மௌனியாகி நாட்டை விட்டே ஓடிட்டான். இன்னொருத்தன் காதலி விட்டுட்டு போனதுல ஞானியாகி வீட்டை விட்டு ஓடிட்டான்.."

கதிர் இரும்பிக் கொண்டே அவனை முறைப்போடு பார்த்தான். அதியன் அவனை வருத்தத்தோடு பார்த்தான்.

"யார் அந்த ஞானி..? எனக்கு தெரிஞ்சி உனக்கு அதியனும் கதிரும்தானே ப்ரண்ட்ஸ்..!?" என செழியன் கேட்க மைவிழியும் அவனது பதிலை எதிர்ப்பார்த்து ஆவலோடு அவனை பார்த்தாள்.

மைவிழி மட்டும் அங்கே இல்லாமல் இருந்திருந்தால் விஷ்வா கதிரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியிருப்பான். அவளும் கதிரும் என்றாவது ஒருநாள் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்த்து காத்திருப்பவனால் அவர்களின் பூக்காத காதல் மொட்டு விடும் முன்பே செத்து விட விருப்பம் இல்லை.

"அந்த ஞானி நண்பன் உங்களுக்கு அறிமுகமாகதவன்.. அந்த சைலண்ட் ப்ரண்டை நான் பார்த்தே பல வருசமாச்சி.. அந்த பாவியை என்னைக்காவது உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்.."

விஷ்வா ஏன் மாத்தி சொன்னான் என கதிருக்கு புரியவில்லை. ஆனால் விஷ்வா இப்படி மாற்றி சொன்னதில் அவன் மனம் நிம்மதி அடைந்ததுதான் வித்தியாசமான விசயமே.

அவர்கள் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து வெளியே வந்தபோது மாலை தென்றல் அவர்களை வருடி சென்றது. மைவிழியின் துப்பட்டா காற்றில் பறந்து அவளின் பின்னால் வந்த கதிரின் முகத்தில் பூந்தென்றலில் பறந்து வந்து மேனி மீது படும் மகிழம் பூவாக படர்ந்தது. துப்பட்டாவிற்கு கூட துள்ளியோடும் காட்டாற்று வெள்ளத்தில் விளையும் காட்டு மல்லிகையின் மனம் இருப்பது போல தோன்றியது அவனுக்கு.

மைவிழி பின்னால் திரும்பி பார்த்தாள். தன் துப்பட்டா கதிரின் முகத்தில் நாட்டியம் ஆடுவதை கண்டு அவசரமாக துப்பட்டாவை பின்னுக்கு இழுக்க முயன்றாள். யாரோ உயிரின் ஒரு பகுதியை உடலை விட்டு உருவி செல்வதை போல உணர்ந்து அவசரமாக அந்த துப்பட்டாவை கையில் பற்றினான் கதிர். மைவிழி விதிர்த்து போய் அவனை பார்த்தாள்.

அவனது அந்த திடீர் செய்கை அவளை சற்று பயங் கொள்ள செய்து விட்டது. காதலின் வாசற்படியில் நின்று உள்ளே செல்லலாமா என யோசித்து தயங்கி கொண்டிருப்பவள் அவள். இப்படி அவன் துப்பட்டாவை கைக் கொண்டதில் தன் கையையே காதலோடு பற்றி விட்டது போல பதறி விட்டது அவளது பார்வைக்கு இயல்பென தோன்றியிருக்கும் போல..

இருக்கும் இடம் மறந்து, வாழும் காலம் எதுவென மறந்து, தான் யார் தன் தன்னிலை மறக்க வைத்த ஆள் யார் என்பதை கூட மறந்து மைவிழியின் துப்பட்டாவில் தன் ஜீவனை தொலைத்துக் கொண்டிருந்தான் அவன்.

நடக்கும் செயல்பாடுகள் காலத்தில் பதிய வைப்பது என்னவோ சில நொடிகளைதான் என்றாலும் கதிருக்கும் மைவிழிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமென கடந்துக் கொண்டிருந்தது.

அவர்களுக்குள் சந்திக்க இருக்கும் அடுத்தடுத்த நொடிகளை அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்க்கலாம் நட்பு உள்ளங்களே...

இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா vote பண்ணுங்க.. ரொம்ப பிடிச்சிருந்தா எனக்கொரு comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top