நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியாவின் பயம் கண்டு உள்ளுக்குள் சிரித்தான் ரகு. அவனது ரகசிய சிரிப்பு கண்டு அவளுக்கு மேலும் பயமாக இருந்தது.

சக்தி மலையின் அடிவாரத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாள். நூறு படிகளை கொண்டிருந்த அந்த கோவிலை அண்ணாந்து பார்த்தாள். அரை வெளிச்சத்தில் கோவில் தெரிந்தது. கோவிலினுள் மணி சத்தம் கேட்டது. சடசடவென படிகளை ஏறினாள்.

மூர்த்தி தனது காரிலிருந்து கீழே இறங்கி சக்தியை தேடினான். சக்தி பாதி படிகள் ஏறி விட்டிருந்தாள்.

'இவ எதுக்கு இங்கே வந்திருக்கா..? சாமி தேடி வந்தியா சக்தி..? நான் உன்னை சாமிக்கிட்டயே அனுப்பி வைக்கிறேன்..' என்றெண்ணியவன் அவளை தொடர்ந்து மலைபடிகளை ஏறினான்.

கோவிலின் பின்னால் இருந்த குறுக்கு பாதை அருகே மகேஷ் தனது காரை நிறுத்தினான்.

"இதுதான் ஸார் அந்த மலை சிவன் கோவிலுக்கு போற வழி.. கோவிலுக்கு முன்னாடி ஒரு வழி இருக்கு.. ஆனா முன்பக்கம் இருக்கற பாதைக்கு போக நமக்கு லேட்டாகும்.. ஆனா இந்த குறுக்கு பாதையில் போனா கொஞ்சம் சீக்கிரம் போயிடலாம்.." தான் இழுத்து வந்த அந்த பையன் சொல்லவும் தன் காரிலிருந்து கீழே இறங்கினான் மகேஷ். அந்த பையனும் அவனோடு இறங்கினான்.

கோவிலை நோக்கி வேகமாக ஓடினான் மகேஷ். அவனை பின்தொடர்ந்து அந்த பையனும் ஓடினான்.

சந்தியாவின் இடுப்பில் இன்னும் கூட அந்த கத்தி குத்தியபடிதான் இருந்தது. அதனால் அவளால் அவனை மீறிவிட்டு எதையும் செய்ய இயலவில்லை.

கோவில் அர்ச்சகர் அவளை வருத்தமாக பார்த்தார்.

"சாமி.. அந்த தாலியை எடுத்து கொடுங்க.. டைம் ஆகுது இல்ல.." என்றான் ரகு. அவர் எதுவும் பேச முடியாமல் கடவுள் முன்னால் பூசை செய்து வைக்கப்பட்ட தட்டை எடுத்து வந்தார். தட்டிலிருந்த தாலியை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் தன் கையிலிருந்த கத்தியை தனது இடுப்பில் சொருகி கொண்டு தாலியை கையில் வாங்கினான்.

சந்தியா ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள். தனது வாயை திறந்து கத்தியழ நினைத்தாள். ஆனால் அவன் அவளை நெருங்கி அவளது காதில் "ஏதாவது சத்தம் போட்ட.. நீ பொணமாதான் இங்கிருந்து போவ.. பார்த்துக்க.." என்றான் ரகசியமாக. அவன் கண்களில் கோபம் நெருப்பாக இருந்தது. அதுவே அவளை அதிகம் பயமுறுத்தி விட்டது.

"டைம் ஆச்சிடா.. தாலியை கட்டு.." என்றனர் அவனது நண்பர்கள்.

அவன் தாலியோடு அவளை நெருங்கினான்.

"நிறுத்துப்பா.." என ஒரு குரல் கேட்டதும் சந்தியா சராலென திரும்பி பார்த்தாள். சக்தி அவர்களை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தாள்.

சந்தியா அவளை நோக்கி ஓட முயன்றாள்‌. ஆனால் அதற்குள் ரகு அவளை கை பிடித்து தன் அருகே இழுத்து அவளை தனது கையின் வளையத்திற்குள் வைத்துக் கொண்டான். அடுத்த நொடியே சந்தியாவின் முதுகில் கத்தியை பதிய வைத்தான். "என்னை விட்டு போக ட்ரை பண்ண கத்தி முதுகுக்கு உள்ளே இறங்கிடும்.."

சக்தி அவர்களை நெருங்கி வந்து நின்றாள். "சந்தியா நீ இந்த பக்கம் வா‌‌.." என்றாள். சந்தியாவின் கன்னம் தாண்டி வழிந்தது கண்ணீர். மௌனமாக முடியாதென தலையசைத்தாள்.

"இந்த பொண்ணும் நானும் காதலிக்கறோம்‌‌.. இப்போ கல்யாணம் பண்ணிக்க இங்கே வந்திருக்கோம்.. நீங்க அமைதியா திரும்பி போங்க.‌. எங்க விசயத்துல தலையிடாதிங்க.." ரகு சொன்னதை சக்தியால் நம்ப முடியவில்லை.

சந்தேகத்தோடு சந்தியாவை பார்த்தாள். அவள் எதுவும் பேசாமல் தலை குனிந்தாள். அவனது ஒரு கையின் அணைப்பை கண்ட சக்தி அவனது மறு கை செய்திருக்கும் சூழ்ச்சியை அருகிருக்கும் நிலை கண்ணாடியின் மூலம் கண்டுபிடித்து விட்டாள்.

சக்தி தன் முகத்தில் புன்னகையை வரவைத்துக் கொண்டு அவனை பார்த்தாள். "நீங்க காதலிக்கறதை என்கிட்ட சொல்லியிருக்க கூடாது..? நானே கூட கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே.. என்ன இருந்தாலும் இவ எங்க வீட்டு பொண்ணுப்பா.. எங்களுக்கு தெரியாம கல்யாணம் செய்யலாமா..? சரி விடு.. நடந்தது நடந்திருச்சி.. நீ தாலியை கட்டுப்பா.." என்றவள் அவர்களை மேலும் நெருங்கினாள்.

ரகு அவள் சொன்னதை கேட்டு ஆச்சரியத்தோடு அவளை பார்த்தான். அவள் அவனது கையிலிருந்த தாலியை கையில் வாங்கி அதை ஒரு நொடி பார்த்துவிட்டு அவனிடம் நீட்டினாள்.

"நல்ல நேரம் முடியும் முன்னால கட்டிடுப்பா.."

அவன் தன் கையிலிருந்த கத்தியை தன் இடுப்பில் சொருகி கொண்டு சந்தியாவை விட்டு சற்று விலகி நின்றான். சக்தி தந்த தாலியை கையில் வாங்க முயல சக்தி நொடியும் தாமதிக்காமல் அவனது அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டாள். அவன் இரண்டடி தள்ளி விழுந்தான். சக்தி சந்தியாவை தன் அருகே இழுத்துக் கொண்டாள். அவளை தன் முதுகின் பின்னால் தள்ளி விட்டுவிட்டு ரகுவை ஆக்ரோஷமாக பார்த்தாள். அவன் கையை துடைத்துக் கொண்டே எழுந்து நின்றான்

"ஏன்டா பன்னாடை..? பொம்பள புள்ளைங்க உன் கண்ணுக்கு அவ்வளவு இளக்காரமாவா தெரியிறாங்க..?" என்றவள் மீண்டும் அவனை நோக்கி பாய்ந்தாள்.

அவன் சற்று பின் வாங்கினான். பிறகு உடனடியாக தன் இடுப்பிலிருந்த கத்தியை கையில் எடுத்தான். அவளை நோக்கி கத்தியோடு பாய்ந்தான். இம்முறை அவள் நகர்ந்து நின்றாள்.

சக்தியை தொடர்ந்து வந்த மூர்த்தி கோவிலினுள் தன் மகளுக்கு திருமணம் நடப்பதை கண்டு அதிர்ந்து போனான். சக்தி அந்த கல்யாணத்தை தடுக்க முயலும்போதுதான் அவளின் நல்ல குணத்தை முதல் முறையாக புரிந்துக் கொண்டான் அவன். ஆனால் அவளே மறுபடி அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கையில் குழம்பி போய் விட்டான். தன் மகளின் கண்களிலிருந்து கொட்டும் கண்ணீரை கண்டு ஏதோ ஒரு வில்லங்கம் உள்ளதென்பதை புரிந்து கொண்டவன் பொறுமை காக்க முயன்றான்.

ரகு தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்த பிறகுதான் மூர்த்திக்கு விசயம் புரிந்தது. சந்தியாவை சக்தி அவளது முதுகு பின்னால் நகர வைக்கும்போது அவர்களை நோக்கி சென்றான். சக்தி ரகுவிடம் சண்டை போட மூர்த்தி தன் மகளை தன் அருகே இழுத்து வைத்து கொண்டான்.

சந்தியா அந்த இடத்தில் சக்தி வந்து காப்பாற்ற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாளே தவிர தன் தந்தை அந்த இடத்திற்கு வர வாய்ப்பு உண்டு என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ஆயிரம் இருந்தாலும் அப்பா இல்லையா..? இதுவரை தன்னை கவனித்து கொள்ளவில்லை என்றாலும் கூட இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் மூர்த்தியை பார்க்கவும் சட்டென அவனது கை அணைப்பிற்கு சென்று விட்டாள்.
சக்தி சந்தியா பாதுகாப்பாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ரகுவின் நண்பர்கள் நடப்பதை குழப்பமாக பார்த்தனர். முதலில் சக்தியின் மீது கோபம் கொண்டவர்கள் ரகுவின் கையில் கத்தியை கண்டதும் தங்களின் நண்பன் மீதுதான் ஏதோ தவறென்று புரிந்து கொண்டனர். இருந்தாலும் நடந்ததை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள ஒருவன் முன்னால் வந்து நின்றான்.

"என்ன ஆச்சி மேடம்..?" என்றான் தயக்கமாக.

"உன் பிரென்ட் எங்க வீட்டு பொண்ணை கடத்திட்டு வந்து கட்டாய தாலி கட்ட பார்க்கிறான்.." என அவள் சொல்ல நண்பர்கள் ரகுவை நம்பாமல் பார்த்தனர்.

"ரகு.. அந்தப் பொண்ணும் உன்னை லவ் பண்ணுதுன்னுதானே எங்ககிட்ட சொன்ன..?" ஒருவன் கோபமாக கேட்டான்.

"இப்ப இல்லன்னா என்னடா..? கல்யாணம் முடிஞ்ச பிறகு காதலிப்பா.. இதெல்லாம் ஒரு மேட்டரா..? நீங்க என்னோட பிரெண்ட்ஸ்தானே.. வந்து எனக்காக சப்போர்ட் பண்ணுங்க.."

அவனது நண்பர்கள் அவனை கோபம் பொங்க பார்த்தனர். "நாங்க நண்பர்கள்தான்.. ஆனா தப்புக்கு கூட துணை போற பாவிகள் இல்ல.. அந்த பொண்ணை உண்மையா காதலிக்கிறேன்னு சொன்ன.. இப்படி வலுக்கட்டாயமாக அவளை அடைய நினைக்கிறதுதான் உன் உத்தம காதலா..?" என கேட்டான் ஒருவன்.

"நான் உண்மையா காதலிக்கறதாலதான் தாலி கட்ட இங்கே கூட்டி வந்தேன்.. இல்லன்னா இவளை வேறெங்காவது கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணாமலயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருப்பேன்.."

அவன் சொன்னதை கேட்டு சக்திக்கு சிரிப்புதான் வந்தது. "நீங்களே எப்படி இப்படி நியாயம் தர்மம் வகுத்துகிறிங்க..? அவ இஷ்டம் இல்லாம நீ அவளை எந்த விதத்துல அடைய முயற்சி பண்ணாலும் அது தப்புதான்.." என்றவள் அவனது இடுப்பில் ஒரு உதை விட்டாள்.

அவளது உதையில் கீழே விழுந்தவன் உடனடியாக எழுந்து நின்றான். "நான் அவளை எவ்வளவு நேசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.." என கத்தினான் அவன்.

அவனது கத்தல் சத்தம் கேட்டு சந்தியா மூர்த்தியின் கையை இறுக்க பற்றிக் கொண்டாள். அவன் அவளது தலையில் வருடிவிட்டு அவளை இயல்பான சூழ்நிலைக்கு கொண்டு வர முயன்றான்.

"உன் காதல் பொய்யானது.. காதலை கட்டாயமா வர வைக்க கூடாது.." என சக்தி சொல்ல, அவன் தலையசைத்தான்.

"நோ.. உங்க யாருக்கும் புரியல.. அவ என் ஹார்ட் பீட்.. அவ இல்லைன்னா என்னால வாழவே முடியாது.." என கத்தி சொன்னான். சந்தியாவை தலை சாய்த்து பார்த்தான். "சந்தியா நீன்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..? உனக்கேன் அது புரியவே மாட்டேங்குது..? நீ இல்லன்னா நானும் இருக்க மாட்டேன்.. நீ என் கூடவே இருக்கணும்.. எப்போதும் என் கூடவே இருக்கணும்‌‌.. நான் செத்தா கூட என் கூடவே சேர்ந்து சாகணும்.."

சந்தியா பயத்தோடு மூர்த்தியின் நெஞ்சில் தன் முகத்தை புதைத்தாள். மூர்த்தி ரகுவை ஆத்திரத்தோடு பார்த்தான். "உனக்கு என் கையால்தான் சாவு.." என்றான் கர்ஜனையோடு. இவனது கர்ஜனை கேட்டு சந்தியா மேலும் பயந்தது அவள் உடல் நடுக்கத்தில் தெரிந்தது. அதனால் மூர்த்தி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
"அமைதியா சரணடைஞ்சிடு ரகு.. அந்த கத்தியை கீழே போட்டுட்டு கையை பின்னாடி கட்டு.. உனக்கு அதுதான் பெஸ்ட்.." என்றாள் சக்தி.

ரகு அவளை ஆச்சரியமாக பார்த்தான். "என்னோட காதல் யாருக்கும் புரியல..." என வருத்தம் நிரம்பிய குரலில் சொன்னவன் கத்தியை தூரமாக எறிந்தான்.

சக்தி அவனது அருகில் சென்றாள். அவள் அருகில் வரும்வரை பொறுத்திருந்தவன் அவள் தன் பக்கத்தில் வந்தவுடன் கண் இமைக்கும் நேரத்தில் தன் இடுப்பில் சொருகியிருந்த மற்றொரு கத்தியை எடுத்து அவளது கழுத்தில் வைத்தான்.

"நான் அவளை நேசிக்கிறேன்.. எனக்கும் அவளுக்கும் இப்பவே இங்கேயே கல்யாணம் நடந்தாகணும்.. இல்லன்னா இங்கே எத்தனை கொலை நடக்கும்ன்னு எனக்கே தெரியாது.." என மிரட்டியவன் அவளது கழுத்தில் கத்தியை சற்று பலமாக அழுத்தினான்.

சக்திக்கு அந்த நேரத்தில் சிரிப்புதான் வந்தது. முன்பு ஒருநாள் மூர்த்தியின் கத்தி அவளது கழுத்தை பதம் பார்க்க முயன்றது. இன்று அவனது மகளுக்காக போராடுகையில் ஒரு கத்தி கழுத்தை பதம் பார்க்க வந்ததை நினைத்தாள். வாழ்வில் தான் சந்திக்கும் விந்தையான விசயங்களையும் விந்தையான மனிதர்களையும் நினைத்து வியந்தாள்.

அவளின் வியப்பை இன்னும் அதிகப்படுத்துவது போல அந்த கோவிலின் உள்ளே நுழைந்தான் மகேஷ்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN