நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் கோவிலுக்குள் நுழைந்ததும் அவன் கண்களில் முதலில் தெரிந்தது சக்தியின் கழுத்தில் இருந்த கத்திதான்.

"நீ ஒரு உதவாக்கரைன்னு இன்னொரு முறை நிருப்பிச்சிருக்க.." என்று சக்தியை திட்டினான் அவன்.
சக்திக்கு கோபம்தான் அதிகமானது. "எப்போதும் என்னையே குறை சொல்லிட்டு இருக்காத.. உன் வீட்டு பொண்ணை கூட்டிட்டு கிளம்பிட்டே இரு.. எனக்கு என் பிரச்சனையை சமாளிக்க தெரியும்.."

"நீ பிரச்சனையை சமாளிக்க போறியா.. அறிவுக்கெட்டவளே.. நான் பார்க்கும் போதெல்லாம் எதாவது ஒரு பிரச்சனையோடுதான் இருக்க.. உன்னை போலிஸ்ல எடுத்தவன்தான்டி உலகமகா முட்டாள்.."

"இங்கே என்ன படம் காட்டுறிங்களா இரண்டு பேரும்..?" என ரகு எரிச்சலாக கேட்டான்.

"உனக்கும் இதுக்கும் சம்மந்தம் கிடையாது.." என்ற சக்தியின் கழுத்தில் கத்தியை அழுத்தினான். ரத்தம் ஒரு துளி கசிந்தது. சக்தியின் வலி நிறைந்த முகம் காணுகையில் மகேஷிற்கு மனம் வலித்தது.

நொடி கூட யோசிக்காமல் தன் பேண்டின் பின் பக்கம் சொருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான் மகேஷ். ரகுவை பார்த்து தன் துப்பாக்கியை குறி வைத்தான்.

ரகு அவனது செயல் கண்டு பயந்து விட்டான். ஆனாலும் அதற்குள் தோற்றுவிட அவனின் வீராப்பு இடம் தரவில்லை. அதனால் சக்தியின் கழுத்தில் கத்தியை இன்னும் சற்று அழுத்தினான்.

"நான் சாகும் முன்னாடி இவங்களை கொன்னுடுவேன்.. அதனால் துப்பாக்கியை தூர எறிஞ்சிடுங்க.." என்றான் அவன்.

மகேஷ் சக்தியின் கழுத்திலிருந்து வெளியே கசியும் ஒவ்வொரு துளி ரத்தமும் தன் இதயத்திலிருந்து வழிவதை போல் உணர்ந்து நின்றான். சக்திக்கு ரகுவின் கத்தியை கண்டு பயமல்ல.. மகேஷ் தன்னை இப்படி திட்டுக்கிறானா என்ற கோபத்தில்தான் இருந்தாள். இப்போது அவன் கையில் துப்பாக்கியை எடுத்து விடவும் அவளுக்கு கோபம் இன்னும் அதிகமானது.

ரகுவின் கத்தி பிடித்த கையை தன் கையால் பற்றினாள் சக்தி. ரகு யோசிக்க கூட நொடி நேரமில்லை. அவனது கையை வளைத்து முறுக்கி அவனது கையிலிருந்த கத்தியை கீழே விழ வைத்தாள்.

ரகுவை கையை முறுக்கி அவன் முதுகுபுறம் வளைத்து அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபிறகு மகேஷை பார்த்தாள். "என்னை குறை சொல்லவே உங்க அம்மா உன்னை பெத்து விட்டுருக்காங்களா..? ரவுடி உனக்கு இருக்கற அறிவை விட போலிஸ் எனக்கு ரொம்பவே அறிவு இருக்கு.. ஒரு செகண்ட் யோசிக்க கூட இடம் தராம நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க.. ஆள பாரு.. பண்ணுற அட்டகாசத்தை பாரு.." ரகுவை விடுவித்து தூர தள்ளினாள்.

மகேஷ் அவள் திட்டியதை சட்டை செய்யாமல் ரகுவின் அருகே சென்றான். ரகு எழ நினைக்கையில் அவனை பின் முதுகில் ஒரு தட்டு தட்டி அவனை மண்டியிட வைத்தான். அவனது பின்னந்தலையில் தன் துப்பாக்கியை குறி வைத்தான்.

சக்தி தன் கையிலிருந்த கைவிலங்கை எடுத்துக் கொண்டு அவர்களின் அருகே வந்தாள்.

மகேஷின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி கொண்டு அவனது கையில் விலங்கை மாட்டினாள்.

மகேஷ் அவளை புரியாமல் பார்த்தான். "நீ லூஸா..? எதுக்கு எனக்கு விலங்கு மாட்டியிருக்க..? தப்பு செஞ்ச அவனை விட்டுட்டு என்னை ஏன் அரெஸ்ட் பண்ற..?"

அவனை அமைதியாக பார்த்தாள் சக்தி. "கையில் ஆபத்தான ஆயுதம் வச்சிருக்க.. பொது மக்களுக்கு உன்னால ஆபத்து வரலாம்.." என்றவள் அவனை எழுப்பி நிறுத்திவிட்டு ரகுவின் அருகே வந்தாள்.

"எனக்கு விலங்கு.. அவனுக்கு என்ன மாலை போட்டு மரியாதை செய்ய போறியோ..?" புருவம் உயர்த்தி கோபமாக கேட்டான் மகேஷ்.

சக்தி அவனை கிண்டலாக பார்த்தாள். "அப்படி கூட செய்வேன் உனக்கென்ன..?" மகேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. அவளை கடித்து குதறுபவனை போல பார்த்தான்.

அவள் முகத்தில் இருந்த கிண்டல் மாறாமல் ரகுவை எழுப்பி நிற்க வைத்தாள். அவன் தன் உதட்டோரம் கசிந்துக் கொண்டிருந்த ரத்தத்தை துடைத்தபடியே அவளை முறைப்போடு பார்த்தான். சக்தி அவனை பார்த்தபடியே அவனது அடி வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.

"உனக்கு பொம்பள புள்ளைங்கன்னா அவ்வளவு இளக்காரமாடா பரதேசி நாயே..?" என்றவள் அவன் உடம்பிலிருக்கும் மொத்த சக்தியும் மடியுமாறு அவனை அடித்துத் துவைத்தெடுத்தாள். அவளது அடியின் பலம் கண்டு மகேஷும் மூர்த்தியும் கூட பயந்து போயினர். ரகு மயங்கி கீழே விழுந்த பிறகே அவனை விலக்கி நிறுத்தினாள் சக்தி.

"மரியாதையா ஸ்டேசனுக்கு வாங்க.." என்றவள் ரகுவை இழுத்துபிடித்தபடி மகேஷை பார்த்தாள்.

'மரியாதையா வரணுமா..?' என அவளை மனதுக்குள் கரித்துக் கொட்டியபடியே அவளோடு நடந்தான் மகேஷ்.
சந்தியாவின் அருகே நின்றாள் சக்தி. "ஒரு கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதி தரணும்.. அப்புறமா ஸ்டேசனுக்கு வரியா..? இல்ல நீயும் உன் மாமன்கிட்ட அடி வாங்க பயந்தவங்களை போல இப்படி எதுவும் நடக்கல.. நீங்க பொய் கேஸ் போடுறிங்கன்னு சொல்ல போறியா..?" என்றாள்.

மகேஷ் அவளை உதடு சுழித்து நக்கலாக பார்த்தான். அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது சக்திக்கு. அவனது பற்கள் அனைத்தையும் தட்டியெடுத்து அவனது கையில் தர நினைத்தவளின் கையை தொட்டாள் சந்தியா. சக்தி அவளை திரும்பி பார்த்தாள்.

"என்னை சரியான நேரத்துக்கு வந்து காப்பாத்தியதற்கு தேங்க்ஸ் அத்தை.. கம்ப்ளைண்ட் தர வரேன்.. வீட்டுக்கு போய் இந்த டிரெஸ்ஸை மாத்திட்டு வரட்டுமா அத்தை..?" சந்தியா இன்னும் பயத்திலிருந்து விடுபடவில்லை. ஆனாலும் சக்திக்கு தனது நன்றியை தெரிவிக்க வேண்டுமென தனது பயத்திலிருந்து வெளிவந்து அவளிடம் பேசினாள்.

சக்திக்கும் அவளை பார்க்க பாவமாகதான் இருந்தது. அதனால் அவளது தலையை பரிவோடு வருடிவிட்டாள். "வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு கூட வா.." என்றவளை மூர்த்தி ஓர கண்களால் பார்த்தான். அவனது மனதில் ஓடுவதை சக்தியால் கணிக்க முடியவில்லை.

மகேஷ் பின்தொடர ரகுவை இழுத்துக் கொண்டு தனது வாகனத்தை நோக்கி நடந்தாள் சக்தி. மகேஷ் தனது மாமாவை திரும்பி பார்த்தான். "என் கார் கோவில் பின்னாடி இருக்கற மெயின் ரோட்டில் இருக்கு.. அதை வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுங்க.." என வேண்டா வெறுப்பு குரலில் சொல்லிவிட்டு சக்தியோடு கிளம்பினான்.

ஸ்டேசன் லாக்கப்பில் மகேஷையும் ரகுவையும் ஒன்றாக அடைத்தாள் சக்தி.

"இதெல்லாம் ரொம்ப ஓவர் சக்தி.. இவனும் நானும் ஒரே லாக்கப் ரூம்ல இருக்கணுமா..? இவன் ஒரு கடத்தல்காரன்.."

"நீ ஒரு கொலைகாரன்.. துப்பாக்கியோடு நாட்டுக்கே தீமை விளைவிக்கிற தீவிரவாதி.."

மகேஷ் ஆச்சரியத்தோடு தன் வாய் மீது கை வைத்தான். "நான்.. தீவிரவாதி..? நல்லா இருடி.. உன்னை மாதிரி நாலு போலிஸ் இருந்தா நாடும் கூட நல்லாருக்கும்.."

"டி போட்ட கொன்னுடுவேன் பார்த்துக்க.."

"என் பொண்டாட்டியை நான் டி போடுறேன்.. அதுல உனக்கென்னடி வருத்தம்..?" என அவன் கேட்க அவள் எழுந்து வந்து லாக்கப் ரூமின் கதவிலிருந்த கம்பிகளின் மீது லத்தியால் தட்டினாள்.

"இன்னொரு முறை தேவையில்லாத வார்த்தை நீ பேசினால் நான் உன்னை அந்த செகண்டே கொன்னுட்டுதான் அடுத்த வேலையை பார்க்க போவேன்.."

"பயந்துட்டேன் செல்லக்குட்டி.." என்றவன் பின்னால் நகர்ந்து ரகுவின் அருகே அமர்ந்தான். அவனின் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

"ஏன்டா எருமை எங்க சந்தியாவை கடத்திட்டு போன..?"

"கல்யாணம் பண்ண.." என்றான் அவன் முறைப்போடு.

அவன் தலையில் மீண்டும் ஒரு அடியை விட்டான் மகேஷ். "அவ சின்ன பொண்ணுடா.. அதுவும் அவ விருப்பம் இல்லாம அவளை கடத்திட்டு போயிருக்கியே.. உன்னை சாகடிக்கிற அளவுக்கு கடுப்புல இருக்கேன் நான்.. ஆனா இங்கே என் ஆளு என் மேல செம காண்டுல இருக்கா.. அவக்கிட்ட வாங்கி கட்டிக்க கூடாதுன்னு அமைதியா இருக்கேன்.."

"அவங்களை நீங்க லவ் பண்றிங்களா..? இந்த வயசிலயா..? கள்ள காதலா..?"

அவனை மீண்டும் அடித்தான் மகேஷ். "நல்ல காதல் பரதேசி.. அழியாம வாழும் காதல்.. சேராம வாழும் காதல்.."

'ஒன் சைட் லவ்வுக்கு இவ்வளவு பில்டப்பா..?' என கேட்க நினைத்த ரகு அவனது அடிக்கு பயந்து அமைதியாகவே இருந்துக் கொண்டான்.

சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வந்தான் மூர்த்தி. அவளை கண்டதும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் பொன்னி‌.

"உனக்கொன்னும் ஆகலியே.." என்றவளிடமிருந்து விலகி நின்றாள் சந்தியா.

"எனக்கொன்னும் இல்ல பாட்டி.. சரியான நேரத்துக்கு அத்தை வந்து காப்பாத்திட்டாங்க.."

"யாரு அந்த அத்தை..?" என்று கர்ஜித்த முத்து அருகிலிருந்த மரநாற்காலியை எடுத்து வீசினார். அது தரையில் மோதிய சத்தம் கேட்டு பயந்து போய் பொன்னியின் அருகே நெருங்கி நின்றாள் சந்தியா.

"நான் இத்தனை வருசமா அரும்பாடுபட்டு சேர்த்து வச்ச கௌரவத்தை அவ அழிக்க இருக்காளா..? அதுக்கு நீங்க எல்லாரும் உடந்தையோ..?"

சந்தியா பயத்தோடு முத்துவை பார்த்தாள். "அவங்கதான் என்னை காப்பாத்தினாங்க.. அவங்களும் மாமாவும் லவ் பண்றாங்க.. அவங்க சேர்ந்து வாழ கூட உரிமை இல்லையா..?"

முத்துவிற்கு ஆத்திரம்தான் அதிகமானது. "அவ போலிஸ்காரி.. அவளோட வேலை உன்னை காப்பாத்துறதுதான்.. அதுக்காக அவளை நம்ம நடுவீட்டுல உட்கார வச்சி மருமகள்ன்னு சேவை பண்ண முடியாது.."

சந்தியாவிற்கு முத்துவின் வாதம் பிடிக்கவில்லை. அவளின் மனசாட்சி அமைதியா வாயை மூடிக்கொள்ள மறுத்து விட்டது.

பொன்னியிடமிருந்து விலகி நின்றாள். "எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு.. எனக்கு அவங்கதான் அத்தை.. நான் குளிச்சிட்டு வெளியே போகப்போறேன்.. என்னை கடத்திட்டு போனவனை பத்தி கம்ப்ளைண்ட் கொடுக்க போலிஸ் ஸ்டேஷன் போகணும்.." என்றவள் தன் அறையை நோக்கி நடந்தாள்.

"உன் மானத்தை நீயே வாங்கிக்காத.. இப்படி ஒருத்தன் உன்னை ஒருநாள் முழுக்க கடத்திட்டு போய் வச்சிருந்தாங்கற விசயம் வெளி ஆளுங்க காதுக்கு போனா உன் வாழ்க்கைதான் நாசமா போகும்.." என்றார் முத்து கோபமாக.

சந்தியா அதே இடத்தில் நின்று திரும்பி பார்த்தாள். "என்ன செஞ்சா என் வாழ்க்கை நாசமா போகும்.. எதை செய்யலன்னா இந்த சமுதாயம் நாசமா போகும்ன்னு தெரியற வயசு வந்துடுச்சி தாத்தா எனக்கு.. அதனால் என் விசயத்துல இனி நீங்க எப்போதும் தலையிடாதிங்க.."

முத்து கோபமாக பொன்னியின் அருகே வந்து அவளது கன்னத்தில் பளீரென ஓர் அறையை விட்டார்.

"என்னடி வளர்த்தி விட்டுருக்க அவளை..? உன் வளர்ப்புல ஒன்னு கூட சரியில்ல.. அவன் காதலிச்சவதான் வேணும்ன்னு இன்னமும் வேற கல்யாணமும் பண்ணாம இந்த ஊருல என் பேரையும் கெடுத்துக்கிட்டு என் உயிரை வாங்குறான்.. இவ என்னடான்னா இந்த வயசுலயே அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை இவ்வளவு எதிர்த்து பேசுறா.. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படிடி இருக்கு..? ஒழுங்கா ஒரு புள்ளை வளர்க்க தெரியலன்னா நீ இந்த வீட்டுல இருந்துதான் என்ன ப்ரயோசனம்..?" என்றவர் மீண்டும் கையை ஓங்க அவரது கை அந்தரத்திலேயே தடுத்து நிறுத்த பட்டது. தன்னையே தடுத்து நிறுத்துவது யார் என திரும்பி பார்த்தார். சந்தியா அவரது கையை தடுத்து நிறுத்தியிருந்தாள்...

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN