நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

32. தமிழே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மைவிழி பதட்டப்படுவது அவளின் கண்களில் நன்றாக தெரிந்தது. "என்ன உளறுற..?" என கேட்டவளின் குரல் மிக மிக மெல்லியதாக இருந்தது. காற்றின் சத்தம் போல் ஒலித்த அவளின் குரலை அவன் செவிகள் அறிந்ததே பெரிய விசயம்.

"நான் உளறல.. நீதான் நடுங்கற.. ஒருவேளை என் மேல காதல் ரொம்ப முத்தி போச்சா..?" காதோடு உதடு பதித்து கேட்டவனை கொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் அவனது நெருக்கம் அவளை நாணத்தில் மூழ்கடித்திருந்தது.

"நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்ல.. நமக்குள்ள காதல் வரக்கூடாதுன்னு நாம ஒப்பந்தம் போட்டிருக்கோம் மறந்துட்டியா..?" யோசித்து கேட்டாள் அவள். அது ஒன்றுதான் அவளுக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது.

"ஒப்பந்தத்தை ரத்து பண்ணிட்டா நீ என்னை காதலிப்பியா..?" என்றவனை கண்கள் விரிய பார்த்தாள் அவள்.

"என்ன.. என்ன சொல்ற நீ..? உனக்கும் என்னை பிடிக்காது.. எனக்கும் உன்னை பிடிக்காது.. நமக்குள்ள எப்படி ஒத்து வரும்..?"

"உன்னை பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன்..?"

"அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்ப.." அவள் புருவம் உயர்த்தி கேட்க அவளின் மூக்கின் மீது தன் சுண்டுவிரலை வருட விட்டவன் "எனக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலன்னுதான் சொன்னேன்.." என்றான்.
அவனது பதில் அவளை வாயடைக்க செய்து விட்டது.

"எ.. எனக்கு உன்னை பிடிக்கலன்னு சொல்லியிருக்கேன் இல்ல.." யோசனையோடு கேட்டாள் அவள்.

"எங்கே இந்த அழகான என் முகத்தை பார்த்து அதே வார்த்தையை மறுபடியும் சொல்லு பார்க்கலாம்.. கதிர் எனக்கு உன்னை பிடிக்கலன்னு சொல்ல உன்னால முடியுமா..?"

மைவிழி அவனிடமிருந்து சற்று விலகி நின்று அவனை பார்த்தாள். அவனது முகத்தை பார்த்தாள். அழகாய்தான் இருந்தான் அவன். சற்று முன்புவரை அவளது கன்னம் குத்திக் கொண்டிருந்த மீசை.. அடர்ந்த கருவிழிகளை கொண்டு அவளை ஆழமாக பார்க்கும் கண்கள்.. முன் நெற்றியை முழுதாக மறைத்தும் அவனது அழகை குறைக்காமல் மிகைப்படுத்திய தலை கேசம்.. சிறு வியர்வை துளிகள் அரும்பி அழகு சேர்த்த அவனது கூரான மூக்கு.. அந்த உதடுகள்.. அதற்கும் மேல் பார்க்க இயலாமல் கண்களை மூடி கொண்டாள் மைவிழி.

'எனக்கென்ன ஆச்சி..? எதுக்காக அவனை இப்படி ரசிக்கறேன்..?' யோசித்து விட்டு கண்கள் திறந்தவளின் முன்னால் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் கதிர்.

"என்னை பிடிக்கலையா..?" அவன் மீண்டும் கேட்டான் காந்த குரலில். அவனது முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவள் அவனது கண்களின் அழகில் தன்னை தொலைத்து கொண்டிருந்தாள். அப்படி இருக்கையில் எப்படி சொல்வாள் அவனை பிடிக்கவில்லையென.?

அவனின் நெஞ்சில் கை வைத்து அவனை தூர தள்ளினாள். "நா.." வார்த்தை வர மறுத்து தொண்டைக் குழிக்குள் சிக்கி கொண்டது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு "நான் இந்த பூந்தொட்டிகளை அடுக்கி வைக்க போறேன்.." என்றாள். உடனடியாகவே தரையில் இருந்த ஒரு ரோஜா பூந்தொட்டியை கையில் எடுத்து கொண்டு வாசல் பக்கம் சென்றாள்.

கதிர் தன்னிடமிருந்து தப்பி செல்லும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். அவனது தோளில் தட்டினான் விஷ்வா. திரும்பி பார்த்தவன் "என்ன..?" என்றான்.

"விழியோட விழியோரத்துல மயங்கி விழுந்துட்டியா..?"

"அடுத்தவங்க பர்சனல் லைஃப் பத்தியெல்லாம் கேட்க கூடாது விஷ்வா.." கதிர் பூந்தொட்டியை எடுத்துக் கொண்டு நடக்க விஷ்வா ஆச்சரியத்தில் தன் வாய் மீது கை வைத்தபடி அவனை பார்த்தான்.

"அட கொலைகார பாவி.. நேத்து வரைக்கும்.. இல்ல இல்ல.. இன்னைக்கு சாயங்காலம் பொருட்காட்சியில் கூட எதுவுமே இல்லன்னு சொன்னானே.. உங்க கூடவேதான்டா நாங்க எல்லோரும் இருந்தோம்.. எந்த மைக்ரோ செகண்ட்லடா அவளோடு நீ காதல்ல விழுந்த..?" விஷ்வா பேசியதை அவன் முன்னால் வீசிக் கொண்டிருந்த காற்று மட்டும்தான் கேட்டது.

மைவிழி கேட்டோரம் இருந்த வழிப்பாதையில் தன் கையிலிருந்த பூந்தொட்டியை வைத்தாள். கதிர் அவளருகே வந்து தனது கையிலிருந்த பூந்தொட்டியை வைத்தான். "சரியான இடத்துல வச்சிருக்கனா..?" என கேட்டான். அவள் பார்த்து விட்டு மொத்தமாக தலையசைத்தாள்.

அவள் அடுத்த செடியை எடுத்து வர கிளம்பினாள். அவளது கையை பற்றி நிறுத்தினான் கதிர். "நீ எதுவும் சொல்லல.. உனக்கு என்னை பிடிக்கலையா..? ஒன்னும் அவசரம் இல்ல.. மெதுவா யோசிச்சி ஒரு வாரம் கழிச்சி கூட சொல்லேன்.." என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு மைவிழி.. மலையிலிருந்து கீழே குதிக்கற அளவுக்கு இல்லதான்.. ஆனா நீ மலையிலிருந்து விழுந்தா கூட உன்னை பத்திரமா தாங்கி பிடிக்கிற அளவுக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.. உன் கூட இருக்க எனக்கு பிடிச்சிருக்கு.. உன்னோடு பேசவும் நீ பேசுவதை நாள் முழுக்க உட்கார்ந்து கேட்கவும் பிடிச்சிருக்கு.. வாழ்க்கை பயணத்தின் கடைசி வரைக்கும் உன்னோடு கூடவே வர ஆசையா இருக்கு.. உனக்கும் எனக்கும் நிறைய விசயம் ஒத்து போறது உனக்கே தெரியும்.. நாம சேர்ந்து வாழ்ந்தா நல்லாத்தானே இருக்கும்..?"

அவனது கேள்வி அவளை தடுமாற வைத்தது. அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. மலை மீதிருந்து கீழே குதிக்கும் அளவுக்கு இல்லைதான்.. ஆனால் யாரும் ஏற இயலா மலையிலும் அவனது கை பிடித்து நம்பிக்கையோடு ஏறி செல்லும் அளவிற்கு அவனை பிடித்திருந்தது. ஆனால் அதை எப்படி அவள் ஒத்துக் கொள்வாள்..? அவனை சந்திக்கும் முன்னால் வரை வாழ்க்கையையே வெறுத்துக் கொண்டிருந்தாள் அவள். அவனுடனான சந்திப்பு அவளை நிறைய மாற்றி விட்டது. அவனுடன் இணைந்து வாழும் வாழ்க்கை அவளுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் இது நிரந்தரமா என யோசித்தாள் அவள். இவன் இன்று கொண்ட காதல் நாளை மாறலாம் என எண்ணினாள். அன்று அவனது காதல் மாறும் பொழுது தன்னால் அதை தாங்கிக்கொள்ள இயலுமா என எண்ணி இப்போதே பயந்தாள்.

கதிர் அவளையேதான் இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி அவளை கவனித்து கொண்டிருந்தவனுக்கு அவளது பயந்த முகம் குழப்பத்தை தந்தது.

'எதற்காக இவள் பயப்படுகிறாள்..?'

"இந்த மருதாணியை எங்கே வைக்கிறது..?" செழியன் கேட்கவும் கதிரை விட்டுவிட்டு அவனருகே ஓடி வந்தாள் மைவிழி.

"அதோ அந்த கிச்சன் ஜன்னல் பக்கத்துல வை.." என்றவளுக்கு லேசாக மூச்சிரைத்தது.

"நீ என்ன ஓட்ட பந்தயத்துல இருந்து ஓடி வந்துட்டியா..? எதுக்கு இப்படி உனக்கு மூச்சி வாங்குது..?"

மைவிழி அவனுக்கு பதிலை சொல்லவில்லை. மாறாக அவனது தோளில் ஓங்கி அடித்தாள். "அப்பா.." என்றபடி அவள் அடித்த இடத்தை தேய்த்தவன் "நீ ஒரு எருமை மாடு.." என்றான்.

"அதையெல்லாம் காண்டாமிருகம் நீ சொல்லாத.." என உதடு சுழித்தவளை தூரத்தில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவளது ஒவ்வொரு செய்கையும் அவனை ரசிக்க வைத்தது. கார்முகில் கூந்தலிலிருந்து விடுபட்டு அவளின் காதோரம் கவி பாடும் கற்றை முடி கூட அவனை ரசிகனாக்கி கொண்டிருந்தது‌.

'இதுதான் அந்த பிரம்மனின் கவி புத்தகத்தில் வர்ணிக்கப்பட்ட அழகா..? இவள்தான் இந்த பேரண்டத்திலேயே பேரழகா..? கற்பனைகளை மிஞ்சிய கண்களை கொண்டவள் இவள்... ரசனைகள் புத்துயிர்ப்பெடுக்கும் புதுமை இவள்..'

அவன் அவளை அணு அணுவாய் ரசித்தான். அவளோ அவனது திடீர் காதலால் தனக்குள் பயந்து கிடந்தாள்.

அன்று இரவு மைவிழி யாருடனும் அதிகம் பேசாமல் தனது அறைக்கு சென்று உறங்க முயன்றாள். கதிர் கதவை தாளிட்டு விட்டு அறைக்குள் வந்தான். மைவிழி அந்த புறம் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். நடுவில் வரிசைக்கட்டி வைக்கப்பட்டிருந்த தலையணைகள் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதை பார்க்கும் போது அவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவன் அமைதியாக உறங்கினாலும் தினமும் அவள்தான் எல்லை தாண்டி வந்து அவன் மீது கையையும் காலையும் தூக்கிப் போட்டு அவன் உறக்கத்தில் ஏதோ ஒரு மலைப்பாம்பு தன்னை சுற்றி வளைப்பதாக உணரும் அளவுக்கு பாடாய் படுத்துவாள். இப்படி இருக்கையில் தலையணை தடுப்புச்சுவர் எதற்கு என எண்ணினான் அவன்.

குளியலறைக்குள் நுழைந்து இரவு உடையை மாற்றிக் கொண்டு வந்து கட்டிலின் மறு ஓரத்தில் ஓரமாகவே படுத்தான் கதிர். விட்டம் பார்த்து படுத்திருந்தவனுக்கு பலவித யோசனை வந்தது.

பாலாவுடன் தான் கொண்டிருந்தது வெறும் ஈர்ப்புதான் என புரிந்தது. அவளை காதலித்தான் அவன். ஆனால் இப்படி அவனை யோசனையிலேயே கொல்லும் அளவிற்கு இருந்ததில்லை அவளுடனான காதல். இப்படி அவனை பைத்தியமாக்கும் அளவிற்கு ரசிக்க வைத்ததில்லை அவளது தோற்றம்.

அழகில் ஒப்பிட்டால் பாலாதான் வெல்வாள் என அறிவான். ஆனால் மைவிழியின் அழகை போல் அவனை ஏங்க வைத்ததில்லை பாலாவின் அழகு. சிலைகளுக்கு இல்லாத அழகு கூட உயிர்ப்போடு இருக்கும் ஒரு பூவிற்கு உண்டு. அது போலதான் அழகில் மிஞ்சிய அவளை விட செயலில் தன் மனம் விஞ்சிய மைவிழியை அதிகம் பிடித்திருந்தது கதிருக்கு.

வேறு பக்கம் பார்த்தபடி படுத்திருந்த மைவிழி உறங்கவே இல்லை. உறக்கம் வரவும் இல்லை. அவளது எண்ணத்தை முழுமையாக களவாடியிருந்தான் கதிர். அவள் கண்களை மூடினாலும் கூட அவனது பல் இளித்த முகமே முன்னால் வந்து நின்றது.

அவள் தன் வாழ்வில் சந்தித்த பலரும் வெறுப்பால் அவளது மனதை கொன்று இருக்கிறார்கள். ஆனால் இந்த பாவி மட்டும்தான் அவளை தன் சிரிப்பால் உயிர் கொன்றுக் கொண்டிருந்தான்.

அவள் தூங்க வேண்டுமென வெகுநேரம் போராடினாள். ஆனால் துளி தூக்கம் வரவில்லை. பெருமூச்சோடு மறுபக்கம் திரும்பி படுத்தாள். கதிர் கண்களை கொட்ட கொட்ட விழித்தபடி தன்னை பார்ப்பது இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளுக்கு தெரிந்தது. விதிர்த்து போய் மீண்டும் அந்த பக்கமே திரும்பி கொண்டாள். கதிர் களுக்கென சிரித்தான். அவளுக்கு அவனை ஏதாவது மலையுச்சிக்கு அழைத்து சென்று கீழே தள்ளி விட வேண்டும் போல இருந்தது.

"இன்னும் தூக்கம் வரலையா விழி..?" என கிசுகிசுப்பாக கேட்டான் கதிர்.

அவள் மானசீகமாக நெற்றியில் அறைந்தபடி அவன் பக்கம் திரும்பினாள். மொத்தமாக அவள் சிரித்து வைத்தது கண்டு அவனும் புன்னகைத்தான். தனது வலக்கரத்தை அவள் பக்கம் நீட்டினான். அவள் அவனையும் அவனது கையையும் புரியாமல் பார்த்தாள்.

"உன் கையை கொடு.. இரண்டு பேரும் கை கோர்த்தப்படி தூங்கலாம்.."

அவள் முடியாதென தலையசைத்தாள். "உன் கையை என் கையோடு கோர்த்தப்பிறகு பார்.. உனக்கே தூக்கம் சொக்கும்.." அவன் சொன்னதை நம்ப மறுத்தாள் அவள். ஆனால் வெறுமனே முயற்சி செய்து பார்ப்பதில் என்ன குறைந்து விட போகிறது என எண்ணி தன் கையை நீட்டினாள்.

அவன் தனது கரத்தை அவளது கரத்தோடு கோர்த்தான். அவளின் விரல்களோடு விரல்கள் பின்னிக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பற்றிய தங்களது கருத்துகளை மறவாமல் சொல்லி செல்லுங்கள் நட்புக்களே.. ஏனெனில் எனது கதைகள் எப்படி வாசகர்களின் சொந்தமோ அதுபோல இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம்..😉
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top