நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

33.செந்தமிழே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மைவிழியின் கைகளை தன் கைகளோடு இணைத்த கதிர் கண்களை மூடி உறங்க முயற்சித்தான்.

மைவிழிக்கு உறக்கம் வருமென்ற நம்பிக்கை இல்லை. அதனால் கண்களை கொட்ட கொட்ட விழித்தபடி அவனது கண்கள் மூடிய முகம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளது பார்வை உணர்ந்தவன் போல தன் இதழோரம் சிறு சிரிப்பை ஓட விட்டான்.

"அவ்வளவு ஹேண்டஸமா இருக்கேனா..?" என அவன் கண் விழித்து கேட்க அவள் சட்டென கண்களை மூடிக் கொண்டாள்.

அவன் கலகலவென சிரித்தான். "மேடம் வெட்கப்படுறிங்களா..? நான் உன் புருசன்ம்மா.. உனக்கு சைட் அடிக்க எல்லா உரிமையும் இருக்கு.."

அவள் கண் விழித்து அவனை சந்தேகமாக பார்த்தாள். அவன் அவள் மீது எடுத்துக் கொண்ட இந்த திடீர் உரிமை அவளுக்கு பயத்தை தந்தது. அம்மாவின் பாசத்திற்கும் அண்ணன் தங்கை பாசத்திற்கும் தினம் தினம் ஏங்கியவள் அவள். ரத்த பந்தமே அவளின் பாசத்தை புரிந்துக் கொள்ளாதபோது திடீர் மழையில் முளைத்த காளன் போல வந்தவன் இப்படி சொன்னதும் அவளுக்கு அதீத சந்தேகத்தை தந்து விட்டது.

"நேத்து வரைக்கும் நீ யாரோ.. நான் யாரோ.. இன்னைக்கு திடீர்ன்னு வந்து உன் மேல எனக்கு உரிமை இருக்குன்னு நீ சொன்னா நான் அதை எப்படி எடுத்துக்கறது..? நேத்து ஒன்னு சொன்ன.. இன்னைக்கு ஒன்னு சொன்ன.. நாளைக்கு என்ன சொல்வியோ..? திடீர்ன்னு வந்த காதல் திடீர்ன்னு போகாதுன்னு எப்படி நம்பறது..? நீ அழகா இருக்க.. நான் ஒத்துக்கறேன் நான் உன்னை சைட் அடிக்கறேன்னு.. ஆனா அதுக்காக நான் உன் மேல காதல் கொண்டிருக்கேன்னு நீயா நினைச்சிக்கிட்டா நான் என்ன பண்றது..? எனக்கு இந்த பீலிங்க்ஸ், பாசம், நேசம், காதல் மேலயெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது.. இன்னும் நாலு மாசத்துக்கு நாம இரண்டு பேரும் ஒப்பந்த நண்பர்கள்.. அவ்வளவுதான்.." என்றவள் தன் கையை உருவிக்கொண்டு அந்த புறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

கதிருக்கு இது முதல் சறுக்கல். அவள் தன் கையை உருவிக்கொண்ட போது அவளுக்கு ஏனோ தன் உயிரின் ஒரு பகுதியை அவள் உருவி செல்வது போலிருந்தது.

அவள் வார்த்தைகளில் இருந்த நியாயம் அவனுக்கும் புரிந்தது. ஆனால் தான் நாளை மாறிவிடுவேன் என அவள் சந்தேகம் கொண்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று நம்பியவனுக்கு இன்று ஒரு பெண் தன்னை நம்ப தயங்குகிறாள் என்பது பெரிய பாதிப்புதான்.

தான் பெண்கள் மீது என்ன அவநம்பிக்கை கொண்டிருக்கிறேனோ அதே அவநம்பிக்கையை தன் காதலி.. தன் மனைவி தன் மீது கொண்டிருக்கிறாள் என எண்ணும் போதுதான் அவனுக்கு தனது முட்டாள் தனம் கொஞ்சமாக புரிந்தது. உண்மை காதல் கொண்ட தன்னை தன் மனைவி சந்தேகம் கொண்டதற்கே தனக்கு இவ்வளவு மன வருத்தம் எனும் போது அன்று ருத்ரா எந்த அளவிற்கு மன வருத்தம் கொண்டிருப்பாள் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அன்று ருத்ரா அவன் முன்னால் கண்ணீர் விட்டது நினைவிற்கு வந்தது. அவளது கற்பை பற்றி தான் அப்படி பேசியது எவ்வளவு தவறென புரிந்துக் கொண்டான்.

'கூட பிறந்த அக்கா மேலயே எனக்கு நம்பிக்கை இல்லாத போது இவ எப்படி என்னை நம்புவா..? எனக்கு பெண்களை ஜட்ஜ் பண்ண உரிமை இல்லன்னு அன்னைக்கு அக்கா சொன்னப்போது புரியல.. ஆனா இன்னைக்கு என் காதல் என்னை ஜட்ஜ் பண்ணும் போதுதான் அந்த வலி புரியுது..' அவன் தன் யோசனைகளோடு இருந்தான்.

மைவிழி தனது யோசனைகளில் இருந்தாள். 'காதலாம் காதல்.. எல்லாமே பொய்.. மனுசங்க எல்லோருமே வேஷதாரிகள்தான் போல..'

மறுநாள் அதியன் ஊருக்கு கிளம்பினான். "நான் மறுபடி திரும்பி வர எவ்வளவு நாளாகும்ன்னு தெரியல.. ஆனா அடிக்கடி போன் பண்றேன்.. வீட்டுல ஏதாவது விஷேசம்ன்னா மறக்காம எனக்கு சொல்லு.." என அவன் மைவிழியிடம் சொல்ல அவள் கதிரைதான் சட்டென திரும்பி பார்த்தாள். அவனும் அவளைதான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

"பத்திரமா போய்ட்டு வாங்க மாமா.." முக மலர்வோடு அவனை வழியனுப்பி வைத்தாள்.

அதியனை செழியனும் விஷ்வாவும் வழியனுப்பி வைக்க விமான நிலையம் வரை சென்றனர். மைவிழி தனது கல்லூரிக்கு கிளம்பினாள்.

ருத்ரா தன் வீட்டில் தனது தினசரி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால் ஓயாத வேலைகள் இருந்துக் கொண்டேதான் இருக்கும். பிரசவத்திற்கு பிறந்த வீடு வந்த தன் நாத்தனாருக்கு தலை வாரிக் கொண்டிருந்தாள் அவள். அப்போதுதான் அவளின் மாமியார் "ருத்ரா இங்கே வாமா.." என அழைத்தாள்.

நாத்தனாருக்கு புன்முறுவலான புன்னகையில் பதில் சொல்லி விட்டு ஹாலுக்கு வந்தாள் ருத்ரா. "என்னங்க அத்தை..?"

"கதிர் தம்பி வந்திருக்காரு பாரு.." ருத்ரா தன் மாமியாரின் அருகே அமர்ந்திருந்த தனது தம்பியை கேள்வியாக பார்த்தாள்.

"இந்த பக்கம் வந்தேன்.. அதான் உன்னை பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.." அவன் தயக்கமாக கூறியது ருத்ராவிற்கு அதிசயமாக இருந்தது.

ருத்ராவின் மாமியார் கதிரின் தயங்கிய முகம் கண்டு "தம்பி ஆசையா பார்க்க வந்திருக்கான்.. நீ இப்படி சிலையாட்டம் நிக்கற.. அவனை கூட்டிப் போய் சாப்பாடு கொடு.. புது ஜோடியை விருந்துக்கு அழைக்க சொன்னதுக்கும் எதுவும் செய்யாம இருந்துக்கிட்ட.. உன் மனசுல என்னதான் இருக்கு..?" கேட்டாள்.

கதிர் தன்னால்தான் அக்கா திட்டு வாங்குகிறாள் புரிந்துக் கொண்டான். "நான் வீட்டுலயே சாப்பிட்டுட்டுதான் வந்தேன்.. அதுவுமில்லாம அக்கா மேல எந்த தப்பும் இல்ல அத்தம்மா.. கல்யாணமான இரண்டாம் நாளே அக்கா விருந்துக்கு கூப்பிட்டா.. எனக்கு ஆபிஸ் வேலை அதிகம் இருந்ததாலதான் விருந்துக்கு வர முடியல.."

"அப்படி இல்ல கதிர் .. முறைன்னு ஒன்னு இருக்குல்ல..? உன் பொண்டாட்டியை கல்யாணத்துல பார்த்ததோடு சரி.. நீயும் அவளை சொந்த பந்த வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போனாதானே அவளும் நாலு மனுசங்களை தெரிஞ்சிப்பா.. நம்ம வீட்டாளுங்க கூட அவளுக்கு பிடிப்பும் வரும்.. எங்க காலத்தோடு இந்த கூட்டு குடும்ப முறையும் அழிஞ்சி போச்சி.. நாளைக்கு சொந்த பந்தங்களோடு உறவு கொண்டாடுவது கூட மறைஞ்சிட போகுது.."

கதிருக்கு அத்தையின் வாயை அடைக்க வேண்டியது அவசியமாகி விட்டது. அதனால் "இந்த வாரம் நானும் என் பொண்டாட்டியும் இங்கே வரங்க அத்தம்மா.." என்றான். அவன் உடனடியாக சரணடைந்தது கண்டு ருத்ராவிற்க்கே ஆச்சரியமாக இருந்தது.

'இவன் என் தம்பிதானா..?'

"எனக்கு வேலைக்கு போற டைம் ஆச்சி.. நான் வரேன் அத்தம்மா.." என அவன் எழுந்து நின்றான். ருத்ரா அவனை வழியனுப்பி வைக்க வாசல் வரை வந்தாள்.

வாசலில் யாரும் இல்லாத இடம் வந்ததும் கதிர் ருத்ராவை பார்த்தான். "ஸாரி ருத்ரா.. அன்னைக்கு என் கல்யாணத்தன்னைக்கு நான் உன்னை அப்படி பேசியிருக்க கூடாது.."

இப்போது அவளுக்கு சந்தேகம் மேலும் அதிகமானது.

"உனக்கு என்ன ஆச்சி..? எதுக்கு இப்படி திடீர் நல்லவன் வேஷம் போடுற..?"

"வேஷமெல்லாம் கிடையாது ருத்ரா.. திடீர் ஞானோதயம்ன்னு வேணா வச்சிக்க.. உன் மனசு அன்னைக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும் ஸாரி.. பொண்ணுங்க எல்லோரும் கெட்டவங்களா இருக்கலாம்.. ஆனா நீ நல்லவ.. கூடவே பொறந்து கூடவே வளர்ந்த எனக்கு தெரியும் நீ நல்லவன்னு.. என் முட்டாள் மூளை என்னை இவ்வளவு நாள் குழப்பி வச்சிடுச்சி.. ஸாரி.. எனக்கு வேலைக்கு டைம் ஆச்சி நான் கிளம்பறேன்.. சன்டே ஈவினிங் நானும் விழியும் உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரோம்.." என்றவன் தன் பைக்கில் ஏறி சென்று விட்டான்.

'விழியா..? அதுக்குள்ள இவனுக்குள்ள அவ்வளவு மாற்றமா..? அம்மாவோட கணிப்பு கரெக்டா வேலை செய்யுது.. அவதான் இவனுக்கானவ..' என யோசித்த ருத்ரா தன் குடும்ப பொறுப்பை தொடர சென்றாள்.

அன்று முழுப்பொழுதும் கதிருக்கு மைவிழியின் நினைவுதான் வந்தது. காதலின் ஆரம்ப நிலையே அவனை பாடாய்ப்படுத்தியது. இப்பொழுதே வேலையை விட்டுவிட்டு மைவிழியை காண செல்ல சொல்லி மூளை இம்சித்தது. அவனுக்கு மைவிழி மட்டுமே தேவைப்பட்டாள். அவனின் பார்வை அவள் முகம் கேட்க அவன் செவி அவளி்ன் குரல் கேட்டது. அவனின் கை விரல்கள் அவளின் கேசம் வருடும் சுகம் கேட்டது. பல்லை கடித்துக் கொண்டு வேலையை செய்தான் அவன். மாலை வந்ததும் முதல் ஆளாக தன் அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

இரவு வீடு வந்து சேர்ந்த பிறகே கதிர் தன் வீட்டின் வெறுமையை முதன்முறையாக உணர்ந்தான். இவ்வளவு நாளாக செழியன், விஷ்வா, அதியன் ஆகியோர் வீட்டில் இருந்த காரணத்தால் அந்த வீடு எப்போதும் கலகலப்பாக இருந்தது. ஆனால் இன்று யாருமற்ற தனி வீட்டில் இருப்பது அவனுக்கே ஏதோ போல இருந்தது.
கிச்சனுக்கு சென்று சமைக்க தொடங்கினான். இந்த ஒரு வாரமும் அதியனின் சமையலால் அவன் எந்த வேலையும் செய்யாமல் இருந்தது நினைத்து இப்போது அதியன் மேல் பாசம் கொண்டான். அவனுடனான பிரிவை கதிர் இப்போது புரிந்து கொண்டான். நட்புக்களால் நிறைந்த வீட்டிற்கும் வெறும் செங்கற் கட்டிடத்திற்கும் உள்ள வித்தியாசம் இன்று புரிந்தது அவனுக்கு.

மைவிழி வழக்கம் போல பத்து மணிக்கு மேல் வந்தாள். அவளுக்கும் வீட்டில் நுழைந்த மறு நொடியே வெறுமை புரிந்து போனது. அதியன் இருந்த ஒரு வாரத்தில் அவள் வீட்டின் கதவை திறக்கும் போதே அவர்களின் கொண்டாட்டமும் கும்மாளமும் அவளை வரவேற்கும்.

அவள் உள்ளே வந்த போது கதிர் டிவியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவள் அவனை நேர் கொண்டு பார்க்கவில்லை.‌ தனது கைப்பையை தனது அறையில் வைத்து விட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தாள். அவள் சாப்பிட அமருகையில் அவள் எதிரே அமர்ந்தான் கதிர்.

"நீ இன்னும் சாப்பிடலையா..?" என்றாள் மைவிழி.

"உனக்காக காத்திருந்தேன்.."

அவள் அவனை புருவம் நெரித்து பார்த்தாள். "நாளையிலிருந்து வெயிட் பண்ணாத.. பிறகு இதே பழகிட்டா நாளைக்கு நாம விவாகரத்து வாங்கிட்டு போன பிறகு உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்.."

அவனுக்கு அவளது பதில் சற்று வலியை தந்தது. இருந்தாலும் தனது முயற்சியிலிருந்து பின்வாங்க விரும்பவில்லை அவன். தனது மனதின் வலியை வெளியே காட்டாமல் அவளை பார்த்தான்.

"இந்த வாரம் நீயும் நானும் எங்க அக்கா வீட்டுக்கு விருந்துக்கு போக போறோம்.." அவன் சொன்னதை கேட்டு அவள் குழப்பமாக அவனை பார்த்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top