நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மூர்த்தி வானம் பார்த்து அமர்ந்திருந்தான். அவனருகே அமைதியாக வந்து அமர்ந்தார் முத்து. "மகேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துடுவான்.. அவனுக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் முதல்ல குதிப்பான்.. ஆனா அவனை அடக்கற வழி எனக்கு தெரியும்.. இதுல நீ ஏதாவது குழப்பம் பண்ண நினைச்ச அப்புறம் நானே உனக்கு கொள்ளி வச்சிடுவேன்.. நீ நான் சொல்வதை மட்டும் கேட்டு நட.. இல்லன்னா நீதான் சக்தியோட குழந்தைக்கு எமனானன்னு மகேஷ்கிட்ட சொல்லிடுவேன்.."

மூர்த்திக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு அவரை பார்த்தான். "நீங்க அதை சொல்லும் முன்பே அத்தை இதை அவன்கிட்ட சொல்லிடுவாங்க மாமா.."

முத்து தன் மீசையை நீவி விட்டபடி அவனை பார்த்தார். "அப்பாவும் மகனும் சண்டை போட்டுக் கூடாதுன்னு நினைக்கிறதுதான் தாய் உள்ளம்.. அவ இதை அவன்கிட்ட சொல்ல மாட்டா.. ஆனா நீ ஏதாவது எனக்கு கட்டுப்படலன்னு தெரிஞ்சதுன்னு வை.. நான் அந்த பரிதாபமெல்லாம் பார்க்க மாட்டேன்.."

'அந்த விசயம் எனக்கு தெரியும்.. ஆனா என் பொண்ணோட வாழ்க்கையை நீங்க அழிக்க நினைக்கும்போது நான் அமைதியா இருப்பேன்னு நினைக்கிறிங்களே.. அதை நினைச்சாதான் எனக்கு சிரிப்பு வருது.. இந்த மூர்த்தியோட சுய ரூபத்தை இனிதான் நீங்க பார்க்க போறிங்க..' அவன் எடுத்த முடிவு தெரியாமல் ரொம்பவும் நம்பிக்கையோடு இருந்தார் முத்து.

சக்தி யோசனையோடு அமர்ந்திருந்தாள். அவளின் முடிவுக்கு காத்திருந்தார் குமரன்.

"ஸார் நான் அந்த பையனை வெளியே விட்டா என்ன நடக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்.. மகேஷோட அப்பா அவனை ஆள் வச்சி அடிச்சி கொன்னுடுவாரு.."

"அது எனக்கும் தெரியும் சக்தி.. ஆனா நமக்கு வேற வழி கிடையாது.. அவங்க வலுவான சாட்சியை ரெடி பண்ணி வச்சிருக்காங்க.."

சக்தி தலையை பிடித்தபடி அவரை பார்த்தாள். மகேஷ்க்கு தனது அப்பாவின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை. எதற்காக அவர் இப்படி இந்த விசயத்தில் மூக்கை நுழைத்தார் என அவனுக்கு கோபம் வந்தது.

"சக்தி நீ கவலைப்படாதே.. என்னை வெளியே விடு.. நான் இந்த கேஸ் ஸ்ட்ராங்கா நிக்கற மாதிரி சாட்சி ரெடி பண்றேன்.. எங்க அப்பாவையும் இந்த கேஸ்ல தலையிடாத மாதிரி பண்றேன்.."

சக்தி இருந்த இடத்திலிருந்து அவனை புருவம் உயர்த்தி பார்த்தாள். அவளது பார்வையில் 'இது உண்மைன்னு நம்பட்டா?' என்ற கேள்வி இருந்தது. மகேஷ் இரு கைகளையும் விரித்து உதடு பிதுக்கினான். "நீ என்னை நம்பலன்னா நான் என்ன பண்வேன்..? எனக்கும் வாய்ப்பு தந்து பாரேன்.."

சக்தி எழுந்து அவனருகே வந்தாள். இடுப்பில் கை வைத்தபடி அவனை பார்த்தாள். "உனக்கு எதிராக நீயே சாட்சி ரெடி பண்ண போறேன்னு சொல்லுவதை நம்ப சொல்றியா..?"

"இதை நான் உனக்காக செய்றேன் சக்தி.. அழியாத நம்ம காதலுக்காக.." அவன் மேலே பேசும் முன் அவனை கை காட்டி நிறுத்தினாள்.

"உங்க அப்பா பண்ணதே போதும்.. இதுக்கு மேல நீ எதுவும் செஞ்சி அந்த ஆளோட கோபத்துக்கு பலியாக வேண்டாம்.." என்றவள் லாக்அப்பை திறந்து விட்டாள்.

"இரண்டு பேரும் கிளம்பலாம்.. ஆனா ரகு பாரு உனக்கு ஒரு விசயம் சொல்றேன்.. நீ கெட்டவன்தான்.. ஆனா பாரு உனக்கு தண்டனையை சட்டபடி தண்டனை வாங்கி தர நினைச்சேன் நான்.. இப்போ நீ மகேஷோட அப்பாக்கிட்ட சிக்கினா உன்னை கொன்னுடுவாங்க அவங்க.. அதனால் நீதான் பத்திரமா இருந்துக்கணும்..."

மகேஷ் சக்தியின் கன்னத்தை கிள்ளினான். "முன்ன பின்ன தெரியாதவங்க மேல கூட உனக்குத்தான் எவ்வளவு பாசம்..? அவன் செஞ்ச தப்புக்கு சட்டபடி தண்டனை வாங்கி தர நினைக்கிற பார்த்தியா..? அங்கே தெரியுது உன் நல்ல மனசு.."

சக்தி அவனது கையை தட்டி விட்டாள். "எப்படி மகேஷ் கொஞ்சம் கூட வெட்கம் மானமே இல்லாம இப்படி சொல்ற.. இவனை நான் காப்பாத்த போராடுவது உங்க அப்பாக்கிட்டயிருந்து.. அதை மறந்துட்டு பேசாத நீ.."

மகேஷ் சிறு சிரிப்போடு அவளை தாண்டி நடந்தான். "எங்க அப்பாவோட கௌரவம் உன்னை என்கிட்ட வரவிடாம தடுத்த போது கூடத்தான் நான் வெட்கம் மானம் இல்லாம இருந்தேன்.. இதெல்லாம் பெரிய விசயமா விடு.. நான் வீட்டுக்கு போய் அங்கே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிட்டு உனக்கு போன் பண்றேன்.."

அவள் சரியென தலையசைத்தாள். அவன் வெளியே செல்ல முயலும் முன் அவனை தன்னோடு இழுத்து கொண்டு ஓரமாக சென்றார் குமரன்.

"ஏன் மாமா..?"

"விசயம் ஏதோ பெருசுன்னு நினைக்கிறேன்.. மூர்த்தி எனக்கு போன் பண்ணான்.." மகேஷ் அவர் சொன்னதை கேட்டு சிரித்தான். "நடக்கற உண்மை எதையாவது சொல்லுங்க மாமா.. அவருக்கும் உங்களுக்கும் ஜென்மத்துக்கும் ஒத்து வராதுன்னு தெரியாதா எனக்கு..?"

அவனை ஆழமாக அவர் பார்த்தார். அவர் சொன்னது உண்மை என்று இப்போதும் கூட அவனால் நம்ப முடியவில்லை. "நிஜமாவா..? ஆனா அவர் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணாரு..?"

"நான் இந்த வீட்டை விட்டு வரேன்.. எனக்கும் என் பொண்ணுக்கும் உன் வீட்டுல இடம் தருவியான்னு சோகமா கேட்டான்.. ரொம்ப நாள் கழிச்சு பேசினாலும் கூட பொறந்த பாசம் சட்டுன்னு வந்து ஒட்டிக்கிச்சி.. அதனால நானும் என்ன பண்றதுன்னு புரியாம 'சரி வா'ன்னு சொன்னேன்.. அவன் வருவான்னு நான் காத்திட்டு இருந்தா அவனுக்கு பதிலா உங்க அப்பா சக்திக்கு எதிரா புகார் கொடுக்க வந்தாரு.. எனக்கு அவர்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல.. அதனால் அமைதியா அவர் சொன்னதுக்கு தலையாட்டிட்டு கிளம்பி வந்துட்டேன்.. மூர்த்தி மேல எனக்கு கோபம் வேணாலும் இருக்கலாம்.. ஆனா சந்தியா எங்க வீட்டோட ஒரே பெண் வாரிசு.. அவ விசயத்துல நான் அலட்சியமா இருக்க முடியாது.. வீட்டுக்கு போனதும் உடனே எனக்கு போன் பண்ணுப்பா.."
மகேஷ்க்கு மூர்த்தியின் இந்த திடீர் முடிவு பல சந்தேகத்தை தந்தது. ஆனாலும் இங்கு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் குமரனிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சந்தியா தனது அறைக்குள் அமர்ந்திருந்தாள். அவளது கண்ணில் கண்ணீர் முத்து முத்தாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அப்பா கடைசி நேரத்தில் இப்படி ஏமாற்றி விட்டாரே என மனம் நொந்துப் போய் இருந்தாள். மாமாவுடன் திருமண ஏற்பாடு செய்ய முடிவெடுத்த தாத்தாவின் மீது கொலைவெறியோடு இருந்தாள். அவர் அடித்த இடம் இன்னும் கூட வலித்தது. கன்னத்தை தொட்டு பார்த்தாள். அதிகம் வலித்தது. இதுவரை அவளை இந்த வீட்டில் யாருமே அடித்ததில்லை. அதிலும் மகேஷ் காட்டி வரும் அன்பின் முன்னால் இந்த ஒரு அறை ஆயிரம் பூகம்பத்திற்கு சமமானது.

அறை கதவை படீரென திறந்தது. சந்தியா நிமிர்ந்து பார்த்தாள். மகேஷ் உள்ளே வந்தான். அவளின் கண்ணீர் அவனது இதயத்தை ஒரு நொடியில் உடைத்து விட்டது என்னவோ உண்மைதான்.

"என்னாச்சி சந்தியா..?" அமைதியான குரலில் கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.

"மாமா.. தாத்தா உங்களுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்காரு.." என்றவள் வேண்டுமென்றேதான் தேமிபியழுதாள். அவளின் சிறு பிள்ளை இதயத்தை முத்து மிகவும் கஷ்டபடுத்தி விட்டார். அதனால் அவளின் அதிக கண்ணீர் அவருக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவாள் அவள்.

மகேஷிற்கு இந்த விசயம் சிறு தடுமாற்றை தந்ததுதான். ஆனால் இது ஒன்னும் கை மீறி செல்லப் போகும் விசயமில்லையே என உணர்ந்தவனுக்கு அதிக குழப்பம் உண்டாகவில்லை. அவனது குழப்பம் சந்தியாவின் அடங்கவியலா கண்ணீர்தான்.

"சரி விடுமா.. மாமா இதை கவனிச்சிக்கிறேன்.. அவர் சொன்னதும் நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேனா என்ன..?"

சந்தியா மகேஷை நிமிர்ந்து பார்த்தாள். கண்களை துடைத்துக் கொள்ள முயற்சிப்பது போல் கையை கன்னத்தின் மீது வைத்தாள். "ஸ்ஸ்ஸ்.. அப்பா.." என்று முனங்கி கொண்டே கையை தூரம் எடுத்துக் கொண்டாள்.

மகேஷ் அவளது கையை ஒதுக்கி விட்டு அவளது கன்னத்தை பார்த்தான். கைரேகைகள் பதிந்திருந்த கன்னத்தை பார்த்ததும் அவனுக்கு கண்கள் சிவந்தது.

"என்னாச்சிம்மா..?" பரிவோடு அவன் கேட்க அவள் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் கொட்டியது.

"தாத்தா அடிச்சிட்டாரு.." என்றாள் தலை குனிந்தபடி.

மகேஷ் ஆத்திரத்துடன் கையை மடக்கினான். "அவருக்கு இந்த உரிமையை யார் தந்தது..? நான் கஷ்டப்பட்டு வளர்த்த பொண்ணை அடிக்க அவருக்கென்ன உரிமை இருக்கு..?" கோபத்தோடு எழுந்தவனை கையை பிடித்து நிறுத்தினாள் சந்தியா.

"இங்கே உங்களுக்கு தெரியாத பல விசயம் நடந்துருக்கு மாமா.. எனக்கு இன்னைக்குதான் தெரியும்.." என்றவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள். மகேஷ் திகைத்து போய் அவளது அருகே அமர்ந்து அவளது முதுகை வருடி விட்டான்.

"என்னாச்சிம்மா..? மாமாட்ட சொல்லு.. எது நடந்திருந்தாலும் நான் சரி செய்றேன்.. இப்படி நீ அழுதா நான் என்னன்னு புரிஞ்சிக்கட்டும்..?" அவன் கேட்க அவள் தலையசைத்தபடி நிமிர்ந்தாள். கண்களை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

"உங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல சக்தி அத்தை பிரகனென்டா இருந்திருக்காங்க.. அந்த விசயம் தெரிஞ்சி தாத்தா சக்தி அத்தைக்கு விஷம் கொடுத்துருக்காரு.. ஆனா அவங்க சாகல.. அவங்க வயித்துல இருந்த குழந்தை செத்துடுச்சி.." அவள் அவனது கண்களை பார்த்து சொன்னாள். ஆனால் அவனால்தான் நம்ப முடியவில்லை. சிரித்தபடியே எழுந்து நின்றான். பெருமூச்சு விட்டபடி அறையை சுற்றினான். சந்தியாவை நான்கைந்து முறை திரும்பி திரும்பி பார்த்தான். ஆனால் அவள் முகம் மாறாமல் அவனின் விசித்திர நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்தாள்.

"பொய் சொல்ற.." என்றான் திடீரென.

அவள் இல்லையென தலையசைத்தாள். அவன் தலையை பிடித்தபடி கண்களை மூடினான். நின்ற இடத்திலேயே மண்டியிட்டான். பற்களை அவன் கடிக்கும் சத்தம் சந்தியாவிற்கே கேட்டது.
"மாமா.." என எழுந்தவளை கை காட்டி நிறுத்தினான்.

வராதே என சைகை காட்டினான். அவன் தனது மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் புது உண்மையை ஜீரணிக்க போராடிக் கொண்டிருந்தான்.

சக்தி மீது அளவு கடந்த காதலை கொண்டிருந்தான் அவன். அவளது வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை அறியாமல் இருந்ததற்காக அவனுக்கே அவனை நினைத்து ஆத்திரமாக வந்தது.

"விஷம்.. விஷம் கொடுத்துருக்காங்க என் மனைவிக்கு.. இது இந்த பரதேசிக்கு இவ்வளவு நாளா தெரியல.. விட்டுட்டு போயிட்டா விட்டுட்டு போயிட்டான்னு தினம் தினம் திட்டினேனே.. பாவி ஒருநாள் இந்த உண்மையை என்கிட்ட சொல்லியிருக்க கூடாதா..? என்னை கல்யாணம் செஞ்ச பாவத்துக்கு இத்தனை வருசமா தனி வாழ்க்கை வாழுறான்னு நினைச்சேன்.. என் குழந்தையை வயித்துல சுமந்த பாவத்துக்கு விஷமெல்லும் குடிச்சிருக்கான்னு தெரியாம போச்சே.." பைத்தியம் போல பிதற்றிக் கொண்டிருந்தவனை பயத்தோடு பார்த்தாள் சந்தியா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN