நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷின் அருகே வந்து மண்டியிட்டாள் சந்தியா.

"மாமா.. சக்தி அத்தைக்கு தாத்தா ரொம்ப அநியாயம் பண்ணிட்டாரு.. இப்பவும் கூட திருந்தாம உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காரு..அவர் இப்பவும் கூட சக்தி அத்தைக்கு துரோகம் செய்யதான் நினைக்கிறாரு.. சக்தி அத்தை மனமுடையறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. நீங்க அவங்களை கல்யாணம் கட்டிட்டு வந்தாதான் இந்த பிரச்சனை முடியும்.."

மகேஷ் அவளை சந்தேகமாக பார்த்தான். "உனக்கேன் அவ மேல இந்த திடீர் பாசம்..? நியாயமா பார்த்தா நீ உன் தாத்தாவுக்கும் உன் அப்பாவுக்கும்தானே சப்போர்ட் பண்ணனும்..?" இப்படி சந்தேகம் கொண்டதில் அவன் மீது எந்த தப்பும் இல்லை. அவன் இப்போதுதான் தன் வாழ்வில் நடந்த மிகப்பெரும் உண்மையை அறிந்துள்ளான். அவனது நிலையில் யார் இருந்தாலும் இப்படிதான் வாழ்க்கையின் மீதே சந்தேகம் கொள்வர்.

அவன் சக்தி மீது கொண்ட காதல் அவன் உயிருக்கும் மேலானது. ஆனால் அந்த காதலியின் வாழ்வில் தன்னை காரணமென காட்டி ஒரு பெரும் தீங்கு நடந்துள்ளதை அவனால் எப்படி சுலபமாக ஜீரணித்துக் கொள்ள முடியும்..? அதையும் கூட இத்தனை வருடமாக அறியாமல் இருந்துள்ளோமே என்ற எண்ணம்தான் அவனை அதிகமாக வாட்டி வதைத்தது.

"மாமா.. உங்களுக்கு இப்ப இப்படி பல சந்தேகம் வருவது இயல்புதான்.. ஆனா நீங்க ஒன்னை மறந்துட்டிங்க.. நான் உங்க சந்தியா.. நமக்குள்ள இருப்பது அப்பா மகள் உறவா வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா நம்முடைய உறவு அதுக்கும் மேல.. சக்தி அத்தையும் நீங்களும் காதலிக்கறது தெரிஞ்ச அந்த செகண்டல இருந்து நான் அவங்களை உங்க மனைவியாதான் பார்க்கிறேன்.. எனக்கு இந்த காதலை பத்தி அதிகம் தெரியாது மாமா.. ஆனா உங்க வாழ்க்கையில் சக்தி அத்தை இருந்திருந்தா நீங்க இன்னைக்கு கட்டப்பஞ்சாயத்து ரவுடியா இல்லாம சமுதாயம் பாராட்டுற அளவுக்கு ஒரு நல்ல மனுசனா இருந்திருப்பிங்கன்னு தெரியும்..

நான் தாத்தா செஞ்ச தவறுகளை உங்கக்கிட்ட சொன்னதுல 'எனக்கு கல்யாணம் நடக்க கூடாதுங்கற சிறு சுயநலம் இருக்குன்னு ஒத்துக்குறேன்.. ஆனா அதை விட அதிகமா உங்க மேலயும் உங்க வாழ்க்கை மேலயும் எனக்கும் அக்கறை இருக்கு.." சந்தியா அருகிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து சொன்னாள்.

மகேஷ் அவள் சொன்னது அனைத்தையும் கேட்ட பிறகு சற்று சந்தேகம் தீர்ந்து நேராக அமர்ந்தான்.

"மாமா.." என்று தயக்கமாக அழைத்தாள் சந்தியா.

"என்னம்மா..?"

"சக்தி அத்தைக்கு நடந்த துரோகம் எப்படிப்பட்ட பாவம்ன்னு எனக்கும் தெரியும்.. ஆனா இதுல ஏதாவது எங்க அப்பா சம்மந்த பட்டிருந்தா அதுக்கு மூலக்காரணம் தாத்தா மட்டும்தானே..? எங்க அப்பா பண்ணது எல்லாமே தப்புதான்.. ஆனா ப்ளீஸ் அவரை எதுவும் செஞ்சிடாதிங்க.. அவருக்கு பதிலா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. எனக்காக என் அப்பாவை மன்னிச்சிடுங்களேன்.." கண் கலங்க கெஞ்சியவளை அமைதியாக பார்த்தான்.

"ஆயிரம் தப்பு செஞ்சிருந்தாலும் உன் அப்பா உனக்கு முக்கியமா போயிட்டார் இல்ல..? இதைதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்ன்னு சொல்றதா..? ஆனா பாரு.. ஆயிரம் தப்பு செஞ்ச உன் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ண அவரோட மக நீ இருக்க.. என் வாரிசு ஆணா பெண்ணான்னு கூட தெரியும் முன்னாடியே அழிக்க பட்டிருச்சி.. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சந்தியா.. என்னால எதையும் சரியா யோசிக்க முடியல.. நாம மீதியை அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் எழுந்து நின்றான்.

அவன் அந்த அறையை விட்டு செல்வதை கண்ணீரோடு பார்த்தாள் சந்தியா.

சக்தி தனது மற்ற அலுவலக பணியில் மும்முரமா ஈடுப்பட்டிருந்த போது செல்வா அவளது போனுக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்று அவள் காதில் வைத்த மறு நொடியே "நீ உடனே கிளம்பி இங்கே வா.." என்று போனில் கத்தினான் செல்வா.

"எதுக்கு இப்படி பறக்கற..? ஆக்ரா என்ன அரை கிலோ மீட்டர்லயா இருக்கு நீ கூப்பிட்ட உடனே வர..? முதல்ல விசயம் என்னன்னு சொல்லு.."

"இதை போன்ல சொன்னா உனக்கு புரியாது.. நீ உடனே கிளம்பி வா.. அவ்வளவுதான் நான் சொல்வேன்.."

"லூஸா நீ..? எதையும் சொல்லாம உடனே கிளம்பி வான்னு கத்தினா எப்படி நான் வருவது..? றெக்கை கட்டிக்கிட்டா வர முடியும்..?"

"ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. நீ டக்குன்னு கிளம்பி வா.."

சக்திக்கு அவனது அவசரம் ஆச்சரியத்தை தந்தது. இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட அவன் இப்படி அவசரப்படுத்தியது இல்லை. 'ஒருவேளை இனியனுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போயிடுச்சா..' நினைக்கும் போதே அவளுக்கு பக்கென இருந்தது.

"இனியன் நல்லாருக்கானா..?" என்றாள் அவசரமாக.

"அவன் நல்லாதான் இருக்கான்.. நீ கேள்வி மேல கேள்வியா கேட்காம கிளம்பி வா.. என்னால இதுக்கு மேல உன்கிட்ட போன்ல எதுவும் சொல்ல முடியாது.." என்றவன் போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

சக்தி குழப்பத்தோடே எழுந்து நின்றாள். அவள் பெயரில் ப்ளைட் டிக்கெட் புக் செய்யப்பட்டதாக போனுக்கு மெஸேஜ் வந்து சேர்ந்தது. "என்னதுக்கு இவன் இவ்வளவு அவசரப்படுறானோ..?" என புலம்பியபடி தனது அலுவல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

வனஜா அவளை எதிர்க்கொண்டு வந்தாள். "சக்தி நான் நேத்து எடுத்த செல்பிய பாரேன்.." என்று தனது போனை அவளின் கண்களுக்கு நேராக காட்டினாள். அவளும் மகேஷும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அந்த போனில் வரிசை கட்டியது.

சக்தி நெற்றியில் அறைந்துக் கொண்டாள். "லாக்கப்ல இருக்கற குற்றவாளியோடு போலிஸே செல்பி எடுக்கற காலம் இருக்கும்போது இந்த நாடு எப்படி உருப்படும்..?"

"போலிஸ் நீ அவனை காதலிச்சா கரெக்டு.. ஆனா நான் அவனோடு ஒரு செல்பி எடுத்தா தப்பா..? உன்னால எடுக்க முடியாத போட்டோவை நான் எடுத்துட்டனேன்னு உனக்கு பொறாமை.."

"அக்கா.. உங்க அலப்பரை அவன் அலப்பரையை விட அதிகமா இருக்கு.. இது ஒன்னும் ஒத்தை செல்பி கிடையாது.. நீங்க எடுத்த போட்டோவை வச்சி ஒரு கண்காட்சியே நடத்தலாம்.. அப்புறம் இன்னொன்னு சொன்னிங்களே பொறாமைன்னு.. பேய் பிசாசுதான் அவனோடு போட்டோ எடுக்க ஆசைப்படும்.. நான் இல்ல.." அவள் அதை சொன்ன பிறகே தன் வார்த்தையிலிருந்த கிண்டல் உரைக்கும் பிழையை உணர்ந்தாள். வனஜாவை நாக்கை கடித்தபடி ஓரக்கண்ணால் பார்த்தாள்.

"நான் உன் கண்ணுக்கு பேய் பிசாசு மாதிரி தெரியறேன்..!?" வனஜா புருவம் உயர்த்தி கேட்டாள்.

"ஸாரி அக்கா டங்க் ஸ்லிப் ஆகிடுச்சி.." என்றவளை இதை நான் நம்பணுமா என்ற அர்த்ததோடு பார்த்தாள் வனஜா.

"அக்கா நான் அர்ஜென்டா ஆக்ரா வரைக்கும் போறேன்.. குமரன் ஸார்கிட்ட நான் போன் பண்ணி சொல்லிக்கிறேன்.. நான் வரும் வரைக்கும் நீங்க ஸ்டேஷனை கொஞ்சம் அதிக கவனத்தோடு பார்த்துக்கங்க.."

"என்ன நீ பாட்டுக்கு திடீர்ன்னு கிளம்பிட்ட..? அங்கே ஏதாவது பிரச்சனையா..?"

"எனக்கும் எதுவும் தெரியாது அக்கா.. திடீர்ன்னு செல்வா போன் பண்ணி வர சொல்லிட்டான்.. அதனாலதான் இப்படி அவசரமா கிளம்பறேன்.. அங்கே போய் போன் பண்ணி மீதியை சொல்றேன்.. செல்வா மட்டும் ஏதாவது உதவாத விசயத்துக்கு இப்படி என்னை அலைக்கழிச்சான்னு தெரியட்டும்.. அவனை அங்கேயே மண்டையை பேத்துடுறேன்.." அவள் அங்கிருந்து வேகமாக கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்ததும் அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு அப்பாவிடம் வந்தாள். "அப்பா நான் ஆக்ரா போறேன்.. சீக்கிரம் திரும்பி வந்துடுவேன்.. வனஜாக்காட்ட சொல்லியிருக்கேன்.. அவங்க சாப்பாடு கொண்டு வந்து தந்திருவாங்க.. நீங்க நைட்ல கதவை தாள் போட்டுட்டு தூங்குங்க.." அவர் அவளது அவசரம் கண்டு எதிர் கேள்வி ஏதும் கேட்காமல் சரியென மட்டும் தலையசைத்தார்.

விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகும் கூட செல்வா எதற்காக வரச்சொன்னான் என்ற காரணத்தை யோசித்து குழப்பாமல் இருக்க முடியவில்லை சக்தியால்.

மகேஷ் சந்தியாவின் அறையை விட்டு வெளியே வந்தவுடனே அவன் கண்களில் முதலில் பட்டது மூர்த்திதான். மகேஷை கண்டவுடன் அவனை தன்னோடு இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான்.

"என் கையை விடுங்க மாமா.." கோபத்தோடு தன் கையை உருவினான் மகேஷ். "எதுக்காக என்னை இங்கே கூட்டி வந்திங்க..?"

மூர்த்தி அவனின் முன் தலை குனிந்து நின்றான். "நான் பெரிய பாவம் பண்ணிட்டேன் மகேஷ்.. அந்த பாவத்துக்கு தண்டனையாதான் என் மனைவி இப்படி அல்பாயுசுல செத்துட்டா போல.. இப்பவும் கூட அந்த பாவம் முடியாம என் பொண்ணோட வாழ்க்கையை கூட அழிக்க பார்க்குது.. நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.. என் பொண்ணு வாழ்க்கையை மட்டும் நாசம் பண்ணிடாத.. அம்பு நான்.. ஏவியது உங்க அப்பா.. பழிக்கு பாவம் சுமக்கிறது என் பொண்ணா..? வேண்டாம் மகேஷ்.." அவனின் கையை பிடித்து கெஞ்சினான்.

மகேஷ் அவனை உறுத்து பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் மூர்த்தி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

"உங்க பொண்ணு மேல நீங்க வச்ச பாசத்தை விட ஆயிரம் மடங்கு நேசத்தை நான் சக்தி மேல வச்சிருக்கேன்... அவ வாழ்க்கையை இப்படி நாசம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி..? நான்தானே உங்களுக்கு பிரச்சனை.. அவளுக்கு ஏன் விசம் தந்திங்க..? அதுவும் இவ்வளவு நாளா தெரியாம இருந்தேனே.. நான்தான் எவ்வளவு பெரிய முட்டாள்..?"

மூர்த்தி அவனை சிறு பயத்தோடு பார்த்தான். "உனக்கெப்படி தெரியும்..?"

"சந்தியா எல்லாத்தையும் சொல்லிட்டா.." என்றபடி சுவரை பார்த்தவனை கை பிடித்து தன் பக்கமாக திரும்பினான் மூர்த்தி.

"உங்க அப்பா சொல்லிதான் நான் எல்லாத்தையும் செஞ்சேன்.. நீ எதுவாயிருந்தாலும் எவ்வளவு கோபமா இருந்தாலும் அதை உங்க அப்பா மேல காட்டு.. வீணா என் பொண்ணை இதுல பலிகடா ஆக்காத.."

"நான் என்ன செய்யப் போறேங்கறதை அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல நீங்க செஞ்ச அக்கிரமத்தை சொல்லுங்க.." மகேஷ் உறுமலாக கேட்டான்.

மூர்த்திக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. "அ.. அது வந்து.. சக்தி உன்னை விட்டு பிரிஞ்சி போன கொஞ்ச நாள் கழிச்சி நீ விஷம் குடிச்சியே நியாபகம் இருக்கா..?"

மகேஷ் ஆமோதித்து தலையசைத்தான்.

"அன்னைக்கு நாங்க உன்னை ஹாஸ்பிடல் சேர்க்க போன இடத்துலதான் சக்தி கர்ப்பமா இருந்த விசயம் தெரிய வந்தது. உங்க அப்பா அவளை மாந்தோப்புல கட்டி வச்சி நீ மீதி வச்ச பாதி விஷத்தை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்.. அவ குடிக்க மறுத்தப்போது நான்தான் வலுக்கட்டாயமா அவளுக்கு அந்த விஷத்தை கொடுத்தேன்.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top