நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி பொன்னாவின் நம்பிக்கையை பெற போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவளது போனுக்கு அழைத்தான் மகேஷ்.

"இவன் ஒருத்தன்.. நேரம் கெட்ட நேரத்துக்கு ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்றான்.." புலம்பலாக. எரிச்சலோடு அவனது அழைப்பை துண்டித்தாள்.

சக்தியை இவ்வளவு நேரம் பயத்தோடு பார்த்த பொன்னா இப்போது தயக்கமாக பார்த்தாள்.
"உங்களுக்கு மகேஷ் மாமாவை தெரியுமா..?"

பொன்னா இப்படி கேட்கவும் சக்தியின் முகத்திலும் செல்வா முகத்திலும் வெளிச்சம் பிறந்தது.

சக்தி தனது ஃபோனில் சேமிக்கப்படிருந்த மகேஷின் புகைப்படங்களை அவள் முன் காட்டினாள்.

"நானும் மகேஷும் பிரெண்ட்ஸ்.." என்றாள். செல்வா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"எங்க வீடு மகேஷ் மாமாவுக்கு தெரியுமே.. அவர்கிட்டயே நீங்க கேட்கலாமில்ல..?"

பொன்னாவின் குறுக்கு கேள்வி சக்தியை சற்று இடறி விட்டது.

"அது.. அது வந்து.. எனக்கும் அவனுக்கும் சண்டை.. உங்க அம்மா இருக்கற இடத்தை அவன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டான்.. அதனால் நான் அவன் கூட பேசுறது இல்ல.. இப்ப கூட பார்த்த இல்ல.. அவன்தான் எனக்கு போன் பண்ணான்.. எனக்கு அவன் மேல் இருக்கற கோபம் தீரல.. அதனால்தான் அவன் ஃபோனை கூட நான் அட்டென்ட் பண்ணல.."

சக்தி சொன்னதை கேட்டு பொன்னாவின் முகம் வாடி போனது‌. "எங்க மகேஷ் மாமா ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட ஏன் பேசாம இருக்கிங்க..? அவர் பாவம்..!"

சக்தி தனது முயற்சி வேலை செய்வதை புரிந்து கொண்டாள்.

"நானும் உன் அம்மாவும் உயிருக்கு உயிரான தோழிகள்.. எனக்கு தெரியாம உன் அம்மாவும் அப்பாவும் ஊரை விட்டு வந்துட்டாங்க.. நான் அவங்களை எங்கங்கயோ தேடினேன்.. கடைசி வரை என்னால் கண்டு பிடிக்க முடியல.. ஆனா அவங்க இருக்கற இடம் மகேஷ்க்கு தெரியும்.. ஆனாலும் என்கிட்ட சொல்ல மாட்டேன்டான்.. அதனால் நான் அவனோடு பேசுவதை விட்டுட்டேன்.." சக்தி சொல்ல சொல்ல பொன்னாவின் முகம் சோகமானது.

"இன்னைக்கு நைட் நாங்க திரும்பி போக போறோம்.. நீங்களும் எங்க கூட வாங்க.." என்றாள் பொன்னா. சக்தி தன் திட்டம் வென்று விட்டதை அறிந்து உள்ளூர நிம்மதியானாள்.

மகேஷ் தன் கையிலிருந்த போனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அவ்வப்போது ஒவ்வொரு தூறல் விழுந்துக் கொண்டிருந்தது. அந்த தூறல் தன் மீது விழுவதை பொருட்படுத்தாமல் நடந்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தது.

'சக்தி ஏன் என் ஃபோனை எடுக்க மாட்டேங்கறா..? நமக்கே இப்படின்னா அவளோட மனசுல எவ்வளவு வலி இருக்கணும்..? அவளுடைய தாய்மையையே கொன்னுட்டாங்களே பாவிங்க.. சக்தி அந்த நேரத்தில நீ எப்படியெல்லாம் துடிச்சியோ..? எப்படியெல்லாம் அழுதியோ..? எல்லாமே என்னால் வந்ததுதான்.. அவசர குடுக்கை போல அன்னைக்கு நான் விஷத்தை குடிச்சதால்தான் என் சக்திக்கு இவ்வளவு பெரிய கஷ்டம்... அப்பா நிஜமாவே மனிதர்தானா..? அவ ஒரு கர்ப்பவதின்னு தெரிஞ்சும் எப்படி அவரால் இப்படி செய்ய முடிஞ்சது..? அவ வயித்துல இருந்த என் குழந்தை அவரோட வாரிசுன்னு தெரிஞ்சும் எப்படி இப்படி செய்ய முடிஞ்சது..?' அவன் தனக்கு தானே கேட்டு கொண்டான்.

வழியிலிருந்த ஒரு கோவிலை பார்த்தவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான். தனது போனிலிருக்கும் சக்தியின் புகைப்படத்தை பரிதாபமாக பார்த்தான். அவளது புகைப்படம் காணும் போதே அவனது இதயம் விம்மி அழுதது.

'என் சக்திக்கா இப்படி நடக்கணும்..? அவளை வாழ்க்கை முழுக்க சந்தோசமா பார்த்துக்கவே காதலிச்சேன்.. ஆனா என் காதல்தான் அவளுக்கு மிக பெரிய துயரத்தையே தந்திருக்கு..'

அவன் சக்தியை எண்ணி சோகமாக இருக்க அவனது போனுக்கு சாமிநாதன் அழைப்பு விடுத்தான். கீழே விழுந்து முட்டியில் காயம் பட்டுக் கொண்ட குழந்தை அம்மாவை கண்டதும் ஓடி சென்று கட்டி அணைத்து அழுவதை போல சாமிநாதனின் அழைப்பை கண்டதும் தன் துயரத்தை நீக்க கிடைத்த தூணாக நினைத்து அழைப்பை ஏற்றான்.

"மகேஷ் என்னடா பண்ற..?" சாமிநாதனின் குரல் கேட்டதும் மகேஷின் கடைசி தடையும் தகர்ந்து விட்டது.

"சா..சாமிநாதா.." என்றவனின் குரல் துக்கத்தில் அடைத்துக் கொண்டது. அவனது கண்களிலிருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தது. உடனுக்குடன் கண்ணீரை துடைத்து கொண்டாலும் கூட கண்ணீர் நிற்கவே இல்லை. இவனது குரலில் இருந்த துக்கம் சாமிநாதனுக்கு உடனடியாகவே புரிந்து போனது. நண்பன் அழுகிறான் என அறிந்ததும் அவனது மனமும் துடியாய் துடித்து பதறி போனது.

"என்னடா ஆச்சி மகேஷ்..? ஏன்டா அழற..?" பதட்டமாக கேட்டான் அவன். ஆனால் இதனால்தான் சட்டென அவனுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இன்னும் அழுகை அதிகமாகத்தான் வந்தது. மௌனமாக அழுதாலும் கூட இவன் அவ்வப்போது பெருமூச்சு விடுவதையும் மூக்கை உறிஞ்சுவதையும் கொண்டே அவன் இவனது கண்ணீரை அறிந்துக் கொண்டான்.

"என்ன ஆச்சின்னு சொல்லாம இப்படி அழுது தொலைஞ்சா நான் என்னன்னு கண்டு பிடிக்கட்டும்டா..? எந்த பிரச்சனையா இருந்தாலும் சரியாயிடும்டா.. ஆமா சக்திக்கு ஒன்னும் இல்லதானே..?" நண்பனின் நிலை அறிந்து அவசரமாக கேட்டான்.

மகேஷ்க்கு அழுகை இன்னும் அதிகமானது. "என்ன கருமம்ன்னு எனக்கும் சொன்னாதானடா தெரியும்..? நீ பாட்டுக்கு அங்கே அழுதா எனக்கு இங்கே கை காலெல்லாம் வெடவெடன்னு நடுங்குது.."

"ச..சக்தி.. சக்தி வயித்துல இருந்த எங்க குழந்தை செத்து போச்சி.." என சொல்லி விட்டு மீண்டும் இவன் கண்ணீரை தொடர்ந்தான். ஆனால் சாமிநாதன்தான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பி நின்றான்.

'சக்தி வயித்துல இருந்த குழந்தையா..? ஆனா எப்படி..? இரண்டு பேரும் எலியும் பூனையுமா வெறுத்துக்கறாங்களே.. பிறகெப்படி இது சாத்தியம்..?'

"என்னடா சொல்ற நீ..? எப்படா அவ ப்ரகெனன்ட் ஆனா..? எப்படிடா குழந்தை செத்துச்சி..? இரண்டு நாளைக்கு முன்னாடி நீ இங்கே வந்தப்ப கூட அவ உன்னோடு பேச கூட மாட்டேங்கறான்னு புலம்பினாயே.. அப்புறம் எப்படிடா இதெல்லாம் நடந்துச்சி..?" மகேஷ் சோகமாக கண்ணீர் வடிக்க அவனோ குழப்பமாக தலையை பிய்த்துக் கொண்டான்.

மகேஷ் தன் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி எழுந்தமர்ந்தான்.

"நாங்க இரண்டு பேரும் கல்யாணம் முடிஞ்சி மூணு மாசம் கழிச்சு ஊர் வந்து சேர்ந்தோமே ஞாபகம் இருக்கா..?"

"இருக்கு.."

"அப்ப சக்தி பிரகனன்டா இருந்திருக்கா.. அவ பிரெகனன்டா இருந்தது எனக்கு அப்போது தெரியாது.." என்றவன் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்ட பொழுது சாமிநாதனுக்கும் தன் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது.

"உங்க அப்பா ஏன்டா இப்படி இருக்காரு..? நீங்க கல்யாணம் முடிச்சி ஊருக்கு திரும்பியே வந்திருக்க கூடாதுடா.. அப்படியே கண்ணுக்கு தெரியாத ஊர்லயே வாழ்ந்துட்டு வயசாகி செத்திருக்கணும்டா.. உறவுகள் வேணும்ன்னு நீ திரும்பி வந்த.. ஆனா அந்த உறவுகளே உன்னோட வருங்காலத்தை அழிச்சிட்டாங்க.."

மகேஷ் பெருமூச்சோடு அருகிருந்த தூணில் தலையை சாய்த்தான். வானை பார்த்தபடி ஃபோனை காதில் வைத்திருந்தவன் "உங்களை போலவே எல்லா பந்த பாசத்தையும் அறுத்தெரிஞ்சிட்டு அங்கேயே இருந்திருக்கணும்டா.. அவதான் பைத்தியம் போல என்னை நச்சரிச்சி திருப்பி கூட்டி வந்தா.. அவளோட பிடிவாதமே கடைசியா அவளை பழிவாங்கிடுச்சி.. ஆனா நான் என்னடா பாவம் பண்ணேன்..? ஏன்டா என் வாழ்க்கையை இவங்க இப்படி நாசகதி செஞ்சாங்க..? நான் அவரோட பையன்தானடா.. சொந்த பையனோட வாழ்க்கையை அழிக்க அவங்களுக்கு எப்படிடா மனசு வந்துச்சி..?"

இவன் இப்படி போனில் புலம்பி கொண்டிருந்ததை கோவிலில் இருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்து விட்டு சென்றனர்.

"அவங்களுக்கு புள்ளைங்களா பொறந்ததே நம்ம தப்புதான்டா.. இவங்களுக்கு நாம பொறந்த பாவத்துக்கு நமக்கு பொறந்த குழந்தைங்க கூட தண்டனையை அனுபவிக்கறாங்க.. சக்திக்கிட்ட இதை பத்தி கேட்டியாடா..? என்ன சொன்னா அந்த மகராசி..? இப்படி உன் வாரிசை அவங்க கொன்னிருக்காங்க ஆனா அவ மூச்சு விடாம இருந்திருக்கா பார்த்தியா.. இதுதான்டா கல்நெஞ்சுங்கறது.."

"இன்னும் நான் அவக்கிட்ட இதை பத்தி கேட்கலடா சாமிநாதா.. அவ வேலை விசயமா வெளியூர் போயிட்டா.. அவ திரும்பி வந்த பிறகுதான் அவக்கிட்ட இதை கேட்கணும்.."

"நீ எதையும் அவக்கிட்ட கேட்காத.." சாமிநாதனிடமிருந்து ஃபோனை பிடுங்கி கலை சொன்னாள்.

"ஆனா ஏன் கேட்கக் கூடாது..?" தயக்கமாக கேட்டான் மகேஷ்.

"அவளோட வேதனையை அவளை மாதிரி பெண்ணான என்னால்தான் புரிஞ்சிக்க முடியும்.. அவ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்னு நாம கொஞ்ச நேரம் யோசிச்சாலே புரிஞ்சிக்கலாம்.. அவளுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் கூட அவளோட வேதனையை அவ தனக்குள்ள மறைச்சி வச்ச காரணமே அந்த சோகம் உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னுதான்.. இப்போ போய் அவக்கிட்ட சொல்ல போறியா.. நம்ம குழந்தை செத்து போன செய்தி தெரிஞ்சி நான் மனமுடைஞ்சி போயிருக்கேன்னு..? அவ தனக்குள்ள இவ்வளவு நாள் இதை மறைச்சி வச்சத்தை நீயாவது புரிஞ்சிக்க.. அவ தன் சோகத்தை விட உன் சோகத்தால்தான் அதிகமா கஷ்டபடுவா.. அவளே இன்னேரம் அதையெல்லாம் மறந்திருப்பா.. அவக்கிட்ட போய் ஆறின காயத்தை வெட்டி மறுபடியும் அவளை கதற வைக்க போறியா..?" என கலை கேட்க மகேஷ்க்கு அவள் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தது.

"நான் என்ன செய்யட்டும் கலை..?" சோக குரலில் கேட்டான் மகேஷ்.

"இந்த விசயத்தை பத்தி அவக்கிட்ட எதையும் கேட்காத.. இந்த விசயம் உனக்கு தெரிஞ்சதா அவக்கிட்ட காட்டிக்காத.. அவளோட இந்த இழப்புக்கு ஈடா நீ தரப்போறது உன் காதலை மட்டும்தான்.. எப்பவும் பைத்தியம் போல அவ பின்னாடி சுத்துவ இல்ல.. இப்பவும் அதை மட்டுமே செய்.. ஆனா கொஞ்சம் மெச்சூரிட்டியோடு அவளை காதலிக்க பழகு.. கட்டப்பஞ்சாயத்து பண்ணி அவக்கிட்ட கைதியாக போறதுக்கு பதிலா அவ விரும்புற ஒரு கேரக்டரா அவளை நெருங்கு.." கலை தனது எண்ணத்தை அவனிடம் சொன்னாள். அவனுக்கும் அவளது அறிவுரையில் இருந்த நன்மை புரிந்தது.

'நீ ரவுடி‌.. நான் போலிஸ்.. நமக்குள்ள ஒத்து வராது..' அவள் அடிக்கடி சொல்லும் வாசகம் மனதில் வந்து போனது.
அவன் இதுவரை செய்த தவறுகளை மாற்ற இயலாது என்றாலும் இனி தவறுகள் செய்யாமல் இருக்க இயலும் என புரிந்து கொண்டான்.

"நீ சொன்ன மாதிரியே இனி நடந்துக்கறேன் கலை.‌. அவளே தானாவே வந்து என்கிட்ட சரணடையற மாதிரி நடந்துக்கறேன்.." உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகேஷ்.

கலைக்கு அதன்பிறகு மனதின் பாரம் சற்று குறைந்தது. தனது கையிலிருந்த போனை சாமிநாதனிடம் தந்துவிட்டு தனது அன்றாட வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.

ஆனால் அவள் மறுநாள் காலையில் சக்தியை தன் வீட்டு வாசலில் பார்ப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

Vote and comment பண்ணுங்க கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top