நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் என்ன செய்வதென தெரியாமல் நின்றிருந்த நேரத்தில் "நான் அவங்களை பார்த்துக்கறேன்.." என்ற பொன்னா சக்தியின் பின்னால் ஓடினாள்.

செல்வா மகேஷின் அருகே வந்தான். "எப்படி இருக்க மகேஷ்..?"

மகேஷ் அவனை திரும்பி பார்த்து முறைத்தான்.

"உன்னை மாதிரி ஒரு நண்பனும் உன் தங்கையை போல ஒரு காதலியும் கிடைச்சதுக்கு இன்னும் சாகாமதான் இருக்கேன்.."

செல்வா அவனை நக்கலாக பார்த்தான். "நிஜமாவா..?"

"எங்கடா போய் தொலைஞ்ச இவ்வளவு நாளா..? உன்னை பத்தி அவக்கிட்ட கேட்டா அவ என்னவோ நான் தீவிரவாதியோட பதுங்க குழி எங்கே இருக்குன்னு கேட்டா மாதிரி ஒத்தை வார்த்தை சொல்ல மாட்டேனுட்டா.. இன்னைக்கு நீ பெரிய இவனாட்டம் வந்து நல்லாருக்கியா மகேஷ்ன்னு கேட்டு வெறுப்பேத்துறியா..?" மகேஷ் ஏற்கனவே ரொம்ப வெறுப்பில் இருந்தான். செல்வாவின் கிண்டல் அவனை மேலும் வெறுப்பேத்தி விட்டது.

அதனால் தன் முன்னால் நின்றிருந்தவனை பிடித்து வயலில் தள்ளி விட்டான்.

சாமிநாதன் அப்போதுதான் அந்த கம்பங்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சியிருந்தான். மகேஷ் பிடித்து தள்ளி விட்டதில் செல்வா வயலின் நடு மத்தியில் விழுந்தான். உடம்பெல்லாம் சகதி பூசிய வண்ணம் எழுந்து நின்றான்.

சாமிநாதன் இருவரையும் கோபத்தோடு பார்த்தான். "எருமை மாடுகளே.. உங்களுக்கு விளையாட வேற இடம் கிடைக்கலியா..? நான் கஷ்டப்பட்டு வளர்த்து வச்ச பயிரை இப்படி நாசம் பண்ணிட்டிங்களே..?"

"அதோ அந்த குரங்கையே உனக்கு துணைக்கு வச்சி அது பண்ண நஷ்டத்தை ஈடுக்கட்டிக்க.." என்றவன் வரப்பில் அமர்ந்தான்.

சேற்றோடு வயலில் இருந்து மேல் ஏறி வந்த செல்வா அவன் அருகிலேயே அமர்ந்தான். அவன் உடையிலிருந்த மொத்த சேறும் இவன் மேலும் ஒட்டியது.

"தள்ளி உட்கார்ந்து தொலைடா.." என்றவனின் அருகே மேலும் நெருங்கி அமர்ந்தான் அவன்.
"நீதானே என்னை சேறாக்கின.. அதை நீயும் இப்ப அனுபவி.."

"இப்ப எங்கே இருக்க..?" மகேஷ் கேட்கவும் வெகுநேரம் யோசித்தான் செல்வா. பின்னர் முடிவெடுத்தவனாக "ஆக்ரா.. என் பேமிலியோடு அங்கேதான் இருக்கேன்.." என்றான்.

"வாவ்.. ஆக்ராவிலா இருக்க..? கல்யாணமாகி எத்தனை வருசமாச்சி..? எத்தனை குழந்தைங்க..?"

"கல்யாணமாகி பதினைஞ்சி வருசத்துக்கு மேல ஆச்சி.. ஒரே பொண்ணு.. ஸ்கூல் படிக்கறா.."
மகேஷ் சந்தோசமாக ஆமோதித்து தலையசைத்தான்.

சக்தி அழுதபடி சாமிநாதனின் வீட்டிற்கு வந்தபோது அவள் பின்னால் ஓடி வந்த பொன்னா "எங்கேயும் போகாதிங்க ப்ளீஸ்.. இங்கே வாங்க.. இந்த கட்டில்ல உட்காருங்க.." என கூறி சக்தியை கட்டிலில் அமரவைத்தவள் உள்ளே ஓடிச்சென்று ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு வந்து தந்தாள்.

"இதை குடிங்க.."

சக்தி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மண் பானை தண்ணீரை குடித்தவளுக்கு இப்போது சற்று மனம் ஆறுதலடைந்தது போலிருந்தது.

"மகேஷ் மாமா மேல கோபப்படாதிங்க.. அவர் ரொம்ப நல்லவர்.."

சக்திக்கு அந்த சிறுமியிடம் மறுத்து பேச மனம் வரவில்லை. அதனால் ஆமோதித்து தலையசைத்து வைத்தாள்.

"என் வேலை முடிஞ்சது.. வீட்டுக்கு வரிங்களா..? இல்லை இங்கேயே என் காட்டுக்கு காவல் இருக்கிங்களா..?" என கேட்டான் சாமிநாதன் மண்வெட்டியை தோளில் வைத்தபடியே.

மகேஷும் செல்வாவும் எழுந்து அவனோடு நடந்தனர்.

"எம்மோவ்.." என ஒரு குரல் திடீரென கேட்டது சக்திக்கு.

சக்தியும் பொன்னாவும் ஒன்றாக திரும்பி பார்த்தனர். பொன்னாவை போலவே உருவத்தில் ஒத்திருந்த செங்கா தூரத்திலிருந்தே அம்மாவிற்கு அழைப்பு விடுத்தபடி வந்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா காட்டுக்கு போயிருக்காங்க.. எதுக்கு வரும்போதே அம்மாவை ஏலம் விட்டுக்கிட்டு வர..?" என்ற பொன்னா செங்காவின் கையிலிருந்த அனைத்து பொருட்களை வாங்கி தரையில் வைத்தாள்.

"யார் இது..?" என்றாள் செங்கா.

"இவங்க சக்தி.. மகேஷ் மாமாவோட ஆள்.."

சக்திக்கு இந்த சிறு அறிமுகம் ஏன் முகம் சிவக்க வைத்தது என தெரியவில்லை.

ஒரு பெரிய குடுவையை சோதனை செய்த பொன்னா "தேன்.. நீங்க சாப்பிடுறிங்களா..? என்றாள் சக்தியிடம்.

சக்தி மறுத்து தலையசைக்கையில் அவளருகே வந்து அமர்ந்த மகேஷ் "பில்டப் பண்ண வேண்டிய அவசியம் இல்ல.. சாப்பிடு.. ஒரிஜினல் தேன் நல்லாருக்கும்.." என்றான் அவளின் தோளின் மீது கை போட்டபடி.

மகேஷ் உடையிலிருந்த கொஞ்சம் சகதி சக்தியின் உடையில் ஒட்டிக்கொண்டது. சக்தி முறைப்போடு அவனது கையை தள்ளி விட்டுவிட்டு அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

"செங்கா பாப்பா.. இந்த மாமாவை உங்களுக்காவது பிடிச்சிருக்கா..?" என மகேஷ் கேட்க அவனது கை நீட்டலுக்கு தாவி வந்து அவன் மடியில் அமர்ந்தாள் செங்கா.

அவர்களுக்கு எதிரே இருந்த கட்டிலில் அமர்ந்த செல்வா "வயசான காலத்துல கூட எலியும் பூனையுமா சண்டை போடுதுங்க இதுங்க.." என்றவன் தேன் குடுவையை தன் கையில் வாங்கிக் கொண்டான். "இதை நீயே எடுத்துட்டு வந்தியா பாப்பா..?" என்றான் ஆச்சரியத்தோடு.

"ஏன்டா கிழவா.. என்னை பார்த்தா உன் கண்ணுக்கு மீசை நரைச்சவனை போல தெரியுதா..?" என கேட்டு அவன் கையிலிருந்த தேன் குடுவையை பிடுங்கிக் கொண்டான் மகேஷ்.

கலையும் சாமிநாதனும் அதன் பிறகே அங்கு வந்து சேர்ந்தனர். அப்பாவை கண்டதும் முகம் மலர்ந்து எழுந்து நின்றாள் செங்கா. சாமிநாதனிடம் ஓடினாள்.

"என் செல்ல குட்டி.." என்றபடி தன் மகளை அன்போடு அணைத்துக் கொண்டான் சாமிநாதன்.

"என் செல்லம்பிள்ளை இந்த முறை என்னவெல்லாம் பண்ணிங்க..?"

"நான் எப்பவும் போல தேன் அழிச்சேன்.. ஒரு யானை பார்த்தேன்.. இரண்டு முள்ளம்பன்றி ஒரு காட்டு பன்றி பார்த்தேன்.. புதுசா ஒரு காட்டு ஓடை கண்டு பிடிச்சேன்.. கிழங்கு தோண்டிட்டு வந்திருக்கேன்.. பெரிய கல் மேல ஏறி போட்டோ பிடிச்சேன்.." என்றவள் தன் முதுகோடு கட்டி வைத்திருந்த கேமராவை சாமிநாதனிடம் தந்தாள்.

"சூப்பரா இருக்குமா.." என்ற சாமிநாதன் கேமராவிலிருந்த புகைப்படங்களை காணச்சொல்லி நண்பர்களிடம் தந்தான். அனைவரும் பார்த்து விட்டு "சூப்பர்ப்பா.." என்றனர்.

சக்தி அவளை வாய் திறந்து ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"ஆச்சரியமா இருக்கா..? அவளுக்கு மொத்த ட்ரெய்னிங்கும் நான்தான்.." என்றான் மகேஷ் சக்தியிடம்.
சக்தி அவனை முறைத்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"எங்களோட இந்த கயித்துக் கட்டிலை சேறால் நாசம் செய்யாம எழுந்துப் போய் குளிச்சிட்டு வாங்க.." என்றான் சாமிநாதன் செல்வாவையும் மகேஷையும் கவனித்து.

அவர்கள் இருவரும் அங்கிருந்து ஆற்றுக்கு சென்ற பிறகு சக்தியின் அருகே வந்து அமர்ந்தாள் கலை. சக்தியின் வேலையை பற்றி விசாரித்தாள். சக்தியின் தந்தையை பற்றியும் ஊரில் உள்ள மற்றவர்களை பற்றியும் விசாரித்தாள். கடமைக்கேனும் இருக்கட்டுமே என தன் வீட்டு ஆட்களை பற்றியும் கேட்டாள்.
அதன் பிறகு வெகுநேர உரையாடலுக்கு பிறகு மகேஷை பற்றி பேச்சு தந்தாள் கலை.

"அவனை நீ இன்னமும் அதே அளவுக்குதான் விரும்பற.. பிறகேன் அவன் கூட சேர்ந்து வாழ தயங்கற..? இவ்வளவு நாள்தான் அவன் உன் கண்ணுக்கு கொலைக்காரனா தெரிஞ்சான்.. இன்னைக்குதான் அவன் மேல எந்த தப்பும் இல்லன்னு புரிஞ்சிக்கிட்டியே.. இதுக்கப்புறமாவது அவனுக்கு ஒரு வாய்ப்பு தரலாமில்ல..?"

"இத்தனை நாள் அவன் என்னை ஏமாத்தினதை நான் வேணா மன்னிக்கலாம்.. ஆனா இன்னொரு யுகம் வந்தா கூட அவங்க வீட்டுல என்னை மருமகளா ஏத்துக்க மாட்டாங்க.. எனக்கு மதிப்பு தராத வீட்டுக்கு நானும் வாழ போக மாட்டேன்.."

"நீ ஒரு விசயத்தை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு சக்தி.. உன்னை வெறுக்கறவங்களுக்கு நீ ஜெயிக்க வாய்ப்பு தரதுக்கு பதிலா உன்னை நேசிக்கறவனுக்கு வாழ ஒரு வாய்ப்பு தரலாம் இல்லையா..?" என்றான் சாமிநாதன்.

"எனக்கு அவங்க வீட்டை நினைச்சாவே பயமா இருக்கு.." என்றவளுக்கு குரல் லேசாக நடுங்கியது. கலை அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். சக்திக்கு ஏனோ திடீரென அழுது தீர்க்க வேண்டும் போல இருந்தது.

"நான் அவனை ரொம்ப நேசிக்கறேன் கலை.. அவன்தான் என் வாழ்க்கையே.. ஆயிரம் கோபமும் ஆயிரம் வெறுப்பும் அவன் மேல இருந்தாலும் கூட அவன் மேல நான் வச்ச காதல் கோடி மடங்கு அதிகமாகியிருக்கே தவிர குறையல.. அந்த வீட்டுல என்னை யாருக்கும் பிடிக்கல.. அவங்க அப்பா என்னை காரணம் காட்டி அவனை கொன்னுடுவாரு.. அவரு அந்த அளவுக்கு சாதி வெறி பிடிச்ச ஆளு.. அவரோட கைல என் மகேஷ் உயிரை தர நான் தயரா இல்லை.. என்னை பார்த்தா உனக்கு ஓவரா ரியாக்ட் பண்ணுற மாதிரி தெரியும்.. ஆனா நான் சந்திச்ச சூழ்நிலைகளை உங்ககிட்ட என்னால சொல்ல முடியாது.."

கலை அவளை புரிந்துக் கொண்டவளாக அவளது கேசத்தை வருடி விட்டாள். "எதுக்கும் வருத்தபடாத சக்தி.. உனக்கு நாங்க எல்லோரும் இருக்கோம்ன்னு எப்பவுமே மறந்துடாத.."

சக்தி தலையசைத்தபடி முகத்தை துடைத்தபடி தலை நிமிர்ந்தாள். அவளெதிரே மகேஷ் ஈரத்தலையோடு நின்றுக் கொண்டிருந்தான். அவன் கையில் வைத்திருந்த துண்டு தரையில் விழுந்துக் கிடந்தது. சக்தி அவனை கண்டதும் பேயறைந்தது போலானாள்.

மகேஷ் தன் முகத்தில் எந்த வித கோபத்தையும் காட்டவில்லை. சக்தியின் பார்வை தன் பக்கம் திரும்பியதை அறிந்ததும் கீழே விழுந்து கிடந்த துண்டை கையில் எடுத்தவன் அதை உதறி தோளில் போட்டுக் கொண்டான்.
எதையும் பேசாமல் குடிசைக்குள் நுழைந்து தலை வார ஆரம்பித்தான். அவனோடு உடன் வந்த செல்வா "அவக்கிட்ட எதுவுமே சொல்லல நீ..?" என்றான்.

"என்ன சொல்ல சொல்ற..? என்னை நானே காப்பாத்திக்க முடியாத காலத்துல என்னை நம்பி வந்தவ இப்போ என்னை நம்ப மாட்டேங்கறா.. அவ நினைச்சி பயப்படுற மொத்த பேரையும் வெட்டிட்டு ஜெயிலுக்கு போய் உட்கார்ந்து இவளை நினைச்சி அழ நான் தயாரில்லை.. எனக்கு இன்னொரு வாய்ப்பு தர இவளும் தயாரில்லை.. இதுக்கு மேல அவங்கக்கிட்ட இழக்க எங்கக்கிட்ட என்ன இருக்கு..? இதுக்கும் மேலயும் அவங்களை பார்த்து பயப்பட என்ன இருக்கு..?" என மகேஷ் உள்ளே கேட்டது வெளியே இருந்த சக்தியின் காதிலும் தெளிவாக விழுந்தது.

'உனக்கென்ன தெரியும்..? நான் சொத்தா மதிக்கற நீயும் என் மகனும் என்கிட்ட இருக்கிங்க.. உங்க இரண்டு பேரையும் அவங்க அருவாளுக்கு பலி தர நான் தயாரா இல்லை..'
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளெதிரே வந்து நின்றான் மகேஷ்.

"எங்க அப்பா எனக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்காரு.. எனக்கு உன் மேல இருக்கற காதலுக்கு என் சாவு வரை கூட காத்திருக்க நான் தயார்.. ஆனா சந்தியா வாழ்க்கையை அழிக்க எனக்கு விருப்பமில்லை.. இப்ப நீயா என் பொண்டாட்டியா என்னோடு என் வீட்டுக்கு வரியா..? இல்லை நான் இதுக்கு வேற யாரையாவது பார்த்துக்கட்டுமா..?"

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top