நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்து மாந்தோப்பு வரை சென்று வரலாம் என்ற எண்ணத்தோடு கிளம்பினார். ஆனால் வாசலிலேயே அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சக்தியையும் மகேஷையும் மணக்கோலத்தில் பார்த்தவருக்கு கனவு காணுகிறோமோ என்ற எண்ணம் தோன்றியது.

சக்தி தன் கழுத்திலிருந்த மாலையை ஒருமுறை சரி செய்துக் கொண்டாள். மஞ்சள் கொம்போடு முடிந்த தாலி கயிறு நெஞ்சில் அழகாய் இருந்தது.

மகேஷ்க்கு பின்வாங்கி விடும் எண்ணம் வந்து போனது‌. அதை அறிந்ததாலோ என்னவோ சக்தி அவனது கையை தனது கையோடு பற்றிக் கொண்டாள். மகேஷ் அவளையும் இணைந்திருந்த கையையும் வியப்போடு பார்த்தான்.

சக்தி முத்துவின் அதிர்ச்சி பார்வையை கண்டு உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

"மாமனார் வியந்து பார்க்கறதுக்கு பதிலா அத்தைக்கிட்ட சொல்லி ஆரத்தி எடுக்க சொல்லலாமே.." என்றாள் சக்தி.. நக்கலாகதான்.

முத்துவின் முகம் ஆத்திரத்தில் சிவந்து போனது. "கண்ட கண்ட நாய்க்கெல்லாம் எங்க வீட்டுல ஆரத்தி நாங்க எடுக்கறது இல்ல.." என்றவர் மகேஷ் புறம் திரும்பினார்.

"என்ன கருமம்டா இது..? எதுக்குடா இவளை மறுபடியும் கட்டிக்கிட்டு வந்திருக்க..? இவளை மறந்துட்ட மாதிரி நடிச்சி கடைசியா என்னை இப்படி ஏமாத்திட்டியே.." காட்டு கத்தல் கத்தினார் அவர்.

மகேஷும் சக்தியும் மாலையும் கழுத்துமாக காரிலிருந்து இறங்குவதை கண்டு ஏற்கனவே அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டு வாசலில் வந்து எட்டிப் பார்க்க தொடங்கினர். இப்போது முத்து கத்தவும் அவர்கள் அனைவரும் வாசலுக்கு வந்து மணமக்களை ஆச்சரியத்தோடு பார்த்தபடி ஓரமாக நின்றனர்.

சக்தியும் மகேஷும் முதல்முறை திருமணம் செய்து வந்தபோது அவர்களை வெறுத்த அக்கம் பக்கத்தினர் இப்போது அவர்களை ஆச்சரியமாகதான் பார்த்தனர். ஏனெனில் காலம் கொஞ்சமாக மாறி விட்டிருந்தது, இப்போது இது அவர்கள் கண்ணுக்கு சாதி பிரச்சனையாக தெரியவில்லை. மாறாக இந்த வயதில் இவளுக்கு ஏன் திருமண ஆசை வந்தது என்ற சந்தேகம்தான் அவர்களுக்கு வந்தது.

முத்துவின் சத்தம் கேட்டு சந்தியாவும் பொன்னியும் வெளியே வந்து பார்த்தனர். சந்தியா கண்ணில் சந்தோசம் மின்னியது. பொன்னி பயத்தோடு தன் கணவனை பார்த்தாள்.

"அவரை ஏன் அப்படி பார்க்கறிங்க அத்தை..? எனக்கு நிறைய வேலை இருக்கு.. போய் ஆரத்தி ரெடி பண்ணி கொண்டு வாங்க.." என்றாள் சக்தி. பொன்னி முத்துவையே பயத்தோடு பார்த்து நிற்க சந்தியா உள்ளே ஓடிப் போய் ஆரத்தியோடு வெளியே வந்தாள்.

"இப்படி கிழக்க பார்த்து நில்லுங்க அத்தை.." என சந்தியா சொல்ல, "சந்தியா.." என கத்தினார் முத்து. அவள் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் புதுமண தம்பதிக்கு ஆரத்தியை சுற்றினாள். சக்தி சந்தியாவின் கன்னத்தில் செல்லமாக தட்டினாள்.

"ஸ்வீட் கேர்ள்.."

சந்தியா வெட்கத்தோடு சிரித்தாள்.

"வலது கால் எடுத்து வச்சி உள்ளே போங்க.." சந்தியா சொல்லவும் முத்துவிற்கு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது.

"இவ உள்ளே வந்தான்னா நான் அப்புறம் உங்க எல்லாரையும் வெட்டி தள்ளிடுவேன்.." என்றார் முத்து கோபமாக. இதை கேட்டு மகேஷ் சற்று தயங்கி நிற்க, சக்தி முன்னால் வந்து நின்றாள். "நீங்க ஆளை வெட்டுற அளவுக்கு இங்கே யாரும் அவ்வளவு ஏமாளியா இல்ல.. அதனால நீங்க வாழை தென்னைன்னு வேற எதையாவது வெட்ட போங்க.." என்றாள் நக்கலாக.

"இங்கேயே நிக்கலாம்ன்னு நீ முடிவு பண்ணிட்டியா..?" மகேஷை சந்தேகமாக கேட்டவள் அவனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

"விடுப்பா முத்து.. இவ்வளவு நாள்தான் அறியாமையில் இருந்துட்டோம்.. இதுக்கு மேலயாவது நாமளும் சாதாரண மனுஷங்களா வாழ்வோம்.. அவங்களும் இத்தனை வருசமா உன் சம்மதத்துக்கு காத்திருந்தாங்க இல்லையா..? இதுக்கு மேலயாவது அவங்க வழிக்கு போப்பா.. இதுக்கும் மேல நம்மளோட சட்ட திட்டம் வீட்டுல செல்லாது.. சாகப்போற காலத்துல நமக்கெதுக்கு பெத்த பசங்களோட மனகசப்பு.." வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த ஒரு கிழவன் சொல்ல அவரை முறைத்தார் முத்து.

"சாகப்போற நீ வேணா வாயை மூடிக்கிட்டு போய் கிணத்துல விழு.. என்னை ஏன் உன்னோடு சேர்த்துற..?" என்றார் கோபத்தோடு.

"நீ மட்டும் ஆயிரம் வருசம் வாழப்போறியோ..? என் பக்கத்துலதான்டி உனக்கும் மரணப்படுக்கை.." என கூறிய அந்த பெரியவர் அங்கிருந்து கிளம்பினார்.

முத்துவிற்கு ஆத்திரமாக வந்தது. தனது அறையிலிருக்கும் அருவாளை தேடி எடுத்துக் கொண்டு வந்தார். ஹாலுக்கு வந்தவரின் முன்னால் ஒய்யாரமாக நின்றாள் சக்தி.

அவர் அவளை முறைத்தார். "உன்னை நான் சாகடிக்காம விடப்போறதில்ல.." என்று அருவாளை காட்டி பேசினார்.

சக்தி சிரித்தாள். "டெக்னாலஜி முன்னேறிடுச்சி மாமனாரே.. அந்த கத்தி இன்னமுமா துரு பிடிச்சி போகாம இருக்கு..? இந்தாங்க துப்பாக்கி.. என்னோடதுதான்.." என்றபடி துப்பாக்கியை நீட்டினாள் சக்தி.

முத்துவின் அருகே வந்து நின்ற சந்தியா "சொந்த வீட்டுலயே கோமாளி ஆகாதிங்க தாத்தா.. காலத்துக்கு ஏத்தாற் போல மாற பாருங்க.." என்றாள்.

முத்து அவளை எரிச்சலோடு பார்த்தார். "சின்ன பொண்ணு உனக்கு என்ன தெரியும்? உன் மாமனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு இருந்தேன் நான்.. ஆனா என் நெனைப்பு அத்தனையையும் குட்டிச்சுவராக்கிட்டான் இவன்.."

"ஏன் தாத்தா இவ்வளவு சுயநலவாதியா இருக்கிங்க..? எனக்கு என்ன பிடிக்கும்ன்னு என்னை கேளுங்க தாத்தா.. அதை விட்டுட்டு உங்களுடைய யோசனையை திணிக்க பார்க்காதிங்க.. உங்க வாழ்க்கையை நீங்க வாழும் போது என் வாழ்க்கையை நான்தான் வாழணும்.. அதை விட்டுட்டு நீங்களே எங்க எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ நினைக்காதிங்க.." சந்தியா முதல் முறையாக முத்துவை எடுத்தெறிந்து கோபமாக பேசினாள்.

"சந்தியாம்மா.. என்னதிது..?" என்றாள் பொன்னி அதிர்ச்சியோடு.

"உங்க புருசனுக்கு வயசாகிடுச்சி பாட்டி.. ஆனா வயசுக்கு ஏத்தமாதிரி அப்டேட் ஆகல.. அதான் புத்தி சொல்றேன்.." என்ற சந்தியாவை மகேஷே வியப்போடு பார்த்தான்.

முத்து அங்கே நிற்க கூட பிடிக்கவில்லை. அவமானமாக தோன்றியது அவருக்கு. அத்தனை பேரையும் வெட்டிவிடும் அளவுக்கு கோபம் வந்தது அவருக்கு. ஆனால் மற்ற யாருமே அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.

மகேஷ் சக்தியை தனது அறைக்கு அழைத்துச் சென்றான். "இந்த ரூம்லதான் நீ தங்கப்போற.."

"ஓகோ.." என்றவளை தன் அருகே இழுத்துக் கொண்டவன் தன் ஃபோனில் புகைப்படம் எடுத்தான்.

"என்னத்துக்கு இந்த செல்ஃபி..?"

"சும்மாதான்.. மாலையும் கழுத்துமா இரண்டு பேரும் செமையா இருக்கோம் இல்லையா.. அதான்.." என்றவன் தன் மொபைலை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

சக்தி தன் கழுத்திலிருந்த மாலையை கழட்டி அவன் கையில் தந்தாள். "உன் வீட்டு நடு கூடத்துல மாட்டி வை.. புது ஜோடின்னு வீட்டுக்கு வர எல்லோருக்கும் தெரியட்டும்.."

மகேஷ் தனது மாலையையும் கழட்டி எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான். ஹாலில் இருந்த ஆணியில் இரு மாலைகளையும் மாட்டினான்.
அவனருகே வந்த பொன்னி மாலைகளையும் அவனையும் ஏக்கமாக பார்த்தாள்.

"என்னடா இது.. இந்த முறையும் இப்படி பண்ணிட்ட..?" வருத்தமாக அம்மா கேட்கவும் அவளை புரியாமல் பார்த்தான் மகேஷ்.

"ஏன் உனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா..?"

"விருப்பம்தான்.. ஆனா பெத்தவ கண் குளிர பார்க்கும்படி என் கண் முன்னால தாலி கட்டாம போயிட்டியே.."

'கண் குளிர பார்த்து.. அவ கழுத்துல அவளே தாலியை கட்டிக்கிட்டா.. இந்த கொடுமையை நீயும் பார்க்கணுமாக்கும்..?' என மனதில் நினைத்துக் கொண்டவன் அம்மாவிடம் சின்னதாக புன்னகைத்தான்.

"அவ இதுக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விசயமாச்சு.. நான் எங்கே எல்லார்க்கிட்டயும் சொல்லி எல்லார் முன்னாலயும் தாலியை கட்டுறது..?" என்று வருத்தமாக சொல்லி சமாளித்தான் அவன்.

அம்மா அவன் பக்கத்தில் வந்து அவனது கையை தொட்டாள். "அவ நல்லவடா.. ஆனா நம்ம குடும்பத்து சிறப்பை விட அவ சிறப்பு ஒரு படி மேலதான் இருக்கு.. அவ மனசு கோணாம நடந்துக்கப்பா.." அம்மா அறிவுரை சொல்லியதற்கு தலையை அசைத்தான் மகேஷ்.

சக்தி மகேஷின் அறையை அந்த புறமும் இந்த புறமும் பார்த்து விட்டு கட்டிலில் விழுந்தாள்.

'இந்த வீட்டுக்கு ஆகாத மருமகளா வேண்டாத மணமகளா வந்து சேர்ந்தாச்சி.‌. இனி எப்படித்தான் இங்கே குப்பை கொட்டுறதோ தெரியல‌‌.. இவங்க எல்லோருடைய மனசுலயும் என்னைக்கு இடம் பிடிச்சி இனியனை பத்திய உண்மைகளை சொல்லுறதோ தெரியல‌‌..? இனியனை பத்தி தெரிஞ்சா பூதம் போல மாறப்போறான் மகேஷ்.. ஆனா என்ன பண்ண..? என் மகனுக்கும் அவனோட உரிமையை இப்பவாவது நான் வாங்கி தந்தாகணுமே..' சக்தி இதற்கு மேல் என்ன செய்வதென்ற யோசனையில் மூழ்கினாள்.

மகேஷை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் சந்தியா. "வாழ்த்துக்கள் மாமா.. நீங்க இவ்வளவு சீக்கிரம் அத்தையை வீட்டுக்கு கூட்டி வருவிங்கன்னு நான் நினைச்சி கூட பார்க்கல.. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா‌‌.." குதூகலத்தோடு சொன்னவளின் தலையில் வருடி தந்தான் அவன்.

"அவ எனக்காக இந்த வீட்டுக்கு வரல.. உன்னை காப்பாத்ததான் வந்திருக்கா.." அவளுக்கு மட்டும் கேட்கும் படி ரகசியமாக சொன்னான் மகேஷ்‌. அவளுக்கு இதை கேட்டு கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "தேங்க்ஸ் மாமா.." என்றாள்.

அவளை உச்சி முகர்ந்தவன் "உனக்காக அவ எதையும் செய்வா.‌. அவளுக்கு என் மேல இருக்கற நேசத்தை விடவும் உன் மேல இருக்கற பாசம் அதிகமாம்.." என்றான் சிரித்தபடி.

"எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.." கிசுகிசுப்பாக சொன்னாள் சந்தியா.. அவனும் அதே கிசுகிசுப்போடு "எனக்கும்தான் அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றான்.

"மாமா.." என கிண்டலோடு சிரித்தபடி அவனை பின்னால் தள்ளி விட்டாள் அவள்.

அவன் அவளது தலையின் கேசத்தை கலைத்து விட்டுவிட்டு தனது அறையை நோக்கி நடந்தான்.

"மாமா.." சந்தியா செல்ல கோபத்தோடு கத்தும் சத்தம் கேட்டு சிரித்தபடியே தனது அறைக்குள் நுழைந்தான் மகேஷ்.

தலையணையில் நன்றாக தலையை பதித்த சக்தி அறைக்குள் நுழைந்த மகேஷிடம் "என் பெட்டியில் இருக்கற அத்தனையையும் எடுத்து அழகா அடுக்கி வச்சிடு.." என்றாள் கண்களை மூடியபடி.

"என்னம்மா கண்ணு ஒரு மார்க்கமா உத்தரவு போடுற..?" என சந்தேகமாக கேட்டான் மகேஷ்.

"லூஸு தனமா யோசிக்கறதை விட்டுட்டு நான் சொல்லுற வேலைகளை செய்யப்பாரு.. இந்த ரூம்க்கு வெளியே மட்டும்தான் நீயும் நானும் புருசன் பொண்டாட்டி.. இந்த ரூம்க்குள்ள நீயும் நானும் போலிஸும் ரவுடியும்.. இதை நல்லா நியாபகம் வச்சிக்க.."

"ஓகோ.. சரிதான்.. அப்புறம் இந்த ரவுடி ரவுடிதனமா எதையாவது செஞ்சா கேட்க கூடாது.." அவனின் குரலில் இருந்த தொனியை கண்டு அவளுக்கு சிரிப்புதான் வந்தது. எழுந்து அமர்ந்து அவனை பார்த்தாள்.

"அப்புறம் இந்த போலிஸும் போலிஸா எதையாவது சேதாரம் பண்ணா என்னையும் நீ கேட்க கூடாது.." அவளும் பதிலுக்கு கேட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க நட்புள்ளங்களே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top