என் நெஞ்சுநேர்பவளே -9

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
9

சில வருடங்கள் கழித்து,

தன் கல்லூரி தோழியின் திருமணத்திற்கு வந்த இடத்தில் ஆதியை பார்த்த ரதிக்கு பழைய நினைவுகள் வலம் வர இருக்கையில் கண்மூடி கைகளில் தலை தாங்கியவாறு அமர்ந்திருந்தாள்...

"ஓய் ரதிப் பொண்ணு இங்க என்ன பண்ற... "என்ற குரலில் ஆவலாய் நிமிர்ந்து பார்த்தாள் ரதி... கார்த்தி நின்றிருந்தான்....

"நீங்களா!! "அவள் முகத்தில் நிச்சயம் ஏமாற்றம் இருந்தது .... "வாங்க அண்ணா... எப்படி இருக்கீங்க.... "

"நானே தான்..... நல்லா இருக்கேன்...நீ எப்படி இருக்க....? "

"நல்லா இருக்கேன் அண்ணா.... நீங்க எங்க இங்க..? மாப்பிளை பிரண்டா...? "

"ஆமாம் ரதி.... ஒரே ஆபிஸ் தான்.... "

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதி இவர்கள் அருகில் வந்தான்... அவன் வருவதை பார்த்தவள் வேறு புறம் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்...

"டேய் இங்க என்ன பண்ற...? ஆபிஸ்க்கு லேட்டாகிடுச்சு வா போகலாம்... "என்ற ஆதி கார்த்தியை இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.....

ஆதி எதாவது பேசுவான், அப்போது அவனிடம் பேசவே கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்த ரதிக்கு அவனது இந்த கண்டுகொள்ளாமை பெரும் எரிச்சலையும் கோபத்தையும் உள்ளே கொட்டி கிளறியது... மனதின் மூளையில் இருந்த வருத்தத்தை ஓரம் கட்டியது அவளது கோவம்...

வேகமாக அவன் அருகில் சென்றாள் "என்னடா ஓவரா சீன் போடற... என்னை தெரியாது உனக்கு.. என்கிட்ட நீ பேசமாட்ட...பெரிய இவனா நீ...உன்கிட்ட பேசு பேசுன்னு தொங்கணுமா.. வளர்ந்த பனைமரமே !குனிடா ! "என்று அவன் சட்டையை பிடித்து குனிய வைத்து, மண்டையில் நங்! நங்! என்று கொட்டினாள்...

"ஹய்யோ இவனை கொட்டுனா எனக்கு ஏன் கை வலிக்குது.... அடச்சீ கனவுல அவன் தலைன்னு நினச்சு இப்படி செவுத்துல கொட்டி கையை புண்ணாக்கி கிட்டயே ரதி.. "என்று வலித்த கையை தேய்த்து கொண்டாள்...

'கொட்டணும்.. இன்னும் நல்லா மாங்கு மாங்குனு கொட்டணும்.. என்ன தைரியம் இருந்திருந்தா என்னை அன்னிக்கு அவ்ளோ பேசி இருப்பான்.. இன்னைக்கும் கூட பார்த்தும் பார்க்காம போவான்.. இனி என் கண்ணு முன்னாடி வரட்டும்... வந்துட்டு இப்படி சீன் போடட்டும்... மண்டைய ஒடச்சு மாங்கா சோறு ஆக்காமா விட மாட்டேன்... "என்று நம்பியார் ஸ்டைலில் கையை பிசைந்து கொண்டிருந்தாள்...

"ஹேய் எரும...உன்னை எங்கெல்லாம் தேடுறது.. இங்க என்ன செய்யுற..." என்றபடி வந்தாள் ரஞ்சி... அவள் உயிர்த் தோழி...

"ஹ்ம்ம்... புல்லு மேஞ்சுட்டு இருக்கேன்.. கொஞ்சம் புண்ணாக்கு இருந்தா கொண்டு வரியா... "

"புண்ணாக்கு எதுக்கு மச்சி... அங்க சமையல் கூட்டத்துல கழுநீர் தண்ணி வச்சிருக்காங்க... இரு கொண்டாறேன்..." என்று அங்கிருந்து நகர்ந்தவளை பார்த்து தன் தலையில் அடித்து கொண்ட ரதி "பிசாசு.... டைம் பார்த்து கவுண்ட்டர் குடுக்கறாளே... எனக்கு வேற இப்ப பதிலுக்கு ஒன்னும் தோன மாட்டிங்குதே... ஹய்யோ எங்க இவளை காணோம்.. அதுக்குள்ள கழுநீர் தண்ணி கொண்டு வர போய்ட்டா போலயே.. எல்லாம் எனக்குன்னு வந்து அமையதுங்க... "என்று புலம்பிக் கொண்டே அவள் பின்னாடியே சென்றாள் ரதி...

ரதி எப்பொழுதும் தன் வருத்தங்களை வெளிப்படையாய் காட்டியதே இல்லை.. இன்னும் சொல்ல போனால் ஆதி இவள் காதலை மறுத்து சென்ற பின்னர் தான் இன்னும் குறும்பாய் மாறிப் போனாள்.. இது ஒருவித தப்பித்துக் கொள்ளல்... தன் உயிர் தின்னும் நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளவே கொஞ்சம் கொஞ்சமாய் இப்படி மாறிப் போனாள்.. மற்றபடி இவள் ரணங்கள் இன்னும் ஆழ் மனதில் இருந்துகொண்டு தான் இருக்கிறது.... ஆதி மீதான காதலும் தான்.. ஆனால் அவள் தான் ஒத்துக்கொள்ள தயாராக இல்லை..

இன்றும் அப்படி தான்... தன்னை ஆதி யாரோ போல் கடந்து சென்றதை கண்டு இவள் மனம் வலித்தது தான்.. ஆனால் அதையே கோவமாய் எரிச்சலாய் மாற்றியும் கொண்டாள்....ரதிக்கு ஆதியின் மீதான இந்த காதலை இதுவரை யாரும் அறிந்துகொள்ளவே இல்லை.... காரணம் இவள் யாரிடமும் வெளிப்படுத்தவே இல்லை..

ரஞ்சியை தேடிக்கொண்டு சென்ற ரதி அவளைக் கண்டது பந்தி நடக்கும் இடத்தில்...

"ஏன்டி பிசாசே.. என்னை விட்டுட்டு நீ மட்டும் கொட்டிக்க உக்காந்துட்ட..."என்று திட்டிக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தாள் ரதி..

"நீ இதெல்லாம் சாப்பிடுவியா.. வைக்கப்பில்லும் புண்ணாக்கும் தான சாப்பிடுவ... அதான் நான் மட்டும் வந்தேன்..... "என்று ரஞ்சி சொல்ல அவள் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள் ரதி

"ஹய்யோ அம்மா.. அடிக்காதடி சனியனே.. சரி சரி ஒத்துக்கறேன்.. நீ மனுஷி தான்.. போதுமா... "

"ச்சி ப்பே... "என்றவள் ரஞ்சியின் இலையில் இருந்த கேசரியை எடுத்து தன் இலையில் வைத்தவள் "இதுதான் உனக்கு தண்டனை" என்று ரசித்து சாப்பிட ஆரம்பித்தாள்...

"கிராதாகி.... நான்லாம் கல்யாணத்துக்கு வரதே சாப்பிடறதுக்கு தான்டி எரும... இப்படி என் சோத்துல கை வச்சுட்டியே.. "

"அதெல்லாம் என்னை புண்ணாக்கு திங்க சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... "என்றவள் நன்கு மூச்சிழுத்து வாசம் பிடித்து "மச்சி பிரியாணி வருதுடி.... "

ரஞ்சி "சிறப்பு மிக சிறப்பு..."

இருவருக்கும் காளான் பிரியாணியை வைத்து விட்டு பரிமாறுபவர் நகர்ந்த பின் ஆவலாய் வாசம் பிடித்து நிமிர்ந்த ரதியின் முகம் இஞ்சி தின்ற மந்தியை போல் ஆகி விட்டது...

ஏனென்றால் அவளுக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்திருந்தான் ஆதி கார்த்தியுடன்...

'இன்னும் இவன் போகலையா...'என்று எரிச்சல் கொண்டு எழ முயல பார்வை மீண்டும் பிரியாணியின் மீது படிய, தலையை சிலுப்பியவள் 'இவனுக்காக நாம பிரியாணியை விடணுமா..நெவர்' என்று யோசித்து தன் முடிவை மாற்றிக் கொண்டாள்...

அமைதியாய் அமர்ந்து சாப்பிடஆரம்பித்தாள்.. சிறிது நேரம் கழித்து மெதுவாய் நிமிர்ந்து ஆதியை பார்த்தாள்.. அவனோ கார்த்தியிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்...

கார்த்தி "டேய் ரொம்ப பண்ணிட்டு இருக்க... இவ்ளோ நாள் கழிச்சு ரதியை பாக்குற.. ஏன்டா பேசல... "

ஆதி "இன்னும் கொஞ்ச நாள் தான.. பிறகு சேர்த்து வச்சு பேசிக்கறேன்... "

"எனக்கு நம்பிக்கை இல்லை... அந்த புள்ள கைல மாட்டி கைமா ஆக போற பாரு.... "

"என் செல்லம் கையால கைமா என்ன கஞ்சியா கூட ஆவேன்... "

"ஹாஹா.. ஆவலுடன் காத்திருக்கேன் மச்சான்.. "

"நானும் தான்... " 'என் செல்லக்குட்டியை ரொம்ப படுத்திட்டேன்.. எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்கணும்.... செல்லக்குட்டி நல்லா வளர்ந்துட்டா... அழகு தங்கம்.. 'என்று மனதுக்குள் கொஞ்சி எதிரில் இருந்தவளை அவளை அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி... ரதி நிமிர்ந்து பார்க்கவும் குனிந்து கொண்டான்..

இங்கு ரதிக்கோ காதில் புகை வராத குறை.. 'இவனை எப்படியாவது பார்க்க வைக்கணுமே... என்னசெய்வது என்று யோசித்தவள் தன் இலையில் இருந்த பருப்பு வடையை எடுத்தாள்... ஆதியை நோக்கி குறி வைத்து வீசினாள்.. அந்தோ பரிதாபம் அவள் குறி ஜஸ்ட் மிஸ் ஆகி (அப்பிடி தான் சொல்லிக்கணும்) கார்த்தியின் தலையில் விழுந்தது...

"அச்சோ மச்சான்.. எவனோ என் தலையில் கல்லை தூக்கி போட்டுட்டான்டா.... "என்று தலையை பிடித்துக்கொண்டான் கார்த்தி..

"டேய் அது வடை தான்... உசுரு போன மாதிரி கத்தாதே... "என்றான் நிமிர்ந்து பார்க்காமல்...

"எவண்டா வடையை வெப்பனா யூஸ் பண்ணது... "

"எல்லாம் உனதருமை தங்கை தான்... "

"சர்தான்.... இது உன் தலையில விழ வேண்டியதா... "

"ஆமாம்... அவளை தெரியாத மாதிரி நடந்துக்கறேன்ல.. அதுல கடுப்பா இருக்கா... "

இங்கு இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க ரதி இன்னும் கடுப்பாகி போனாள்.. ஆனால் எடுத்து எரிய வெறும் இலை மட்டும் மிச்சம் இருந்ததால் அதை மூடி வைத்துவிட்டு கையில் தண்ணீர் இருந்த கப்பை மட்டும் எடுத்துக்கொண்டாள்... அதைப் பார்த்த ரஞ்சி,

"இதை எதுக்குடி எடுத்துட்டு வர... "

"ஷ்... சும்மா வாடி... "என்றவாறு ஆதி அமர்ந்திருந்த வழியாக வந்தவள் ஆதியின் மேல் அதை தூக்கி போட்டு விட்டு திரும்பியும் பார்க்காமல் வெளியே வந்து விட்டாள்... இவளுடன் வந்த ரஞ்சி தான் அவள் செயலில் பதறிப் போனாள்...

'அடிப்பாவி.. என்ன பண்ணி வச்சுருக்க'
"அச்சோ சாரி சார்... அவ தெரியாம விழுந்து இல்ல கல் தடுக்கி ச்சி கால் தடுக்கி கை தவறி...ஹய்யோ உளர்ரேனே..... சாரி சார் வெரி சாரி என்றுவிட்டு ஓடி வந்துவிட்டாள்....

அவள் சென்றபின் வாய் விட்டு சிரித்த கார்த்தி "நெனச்சேன்.. இப்படி ஒரு சம்பவம் இருக்குன்னு கண்டிப்பா நினச்சேன்.... இதுக்கே இப்படி... நீ இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இனி பண்ணப்போற வேலைக்கு இன்னும் தரமான சம்பவங்கள் காத்திருக்குன்னு என் உள்மனசு சொல்லுது மச்சான்... "

"நீ வேற பயமுறுத்தாதடா..ஆல்ரெடி மரண பீதியில் இருக்கேன்... "

"விடு மச்சி.. காதலில் இதெல்லாம் சகஜம்.... "

"நீயும் என்னைப்போலவே மாட்டிக்கொள்ள வரம் அளிக்குறேன் மச்சான்... "

"எது !!இது வரமா... சாபம் மச்சான் சாபம்.. நானெல்லாம் யார் தலைகீழா நின்னாலும் இப்படி மாட்டிக்க மாட்டேன் மச்சான்... "(விதி வலியது கார்த்தி.... )


"ஐயோ விடுடி ... பிசாசே வலிக்குதுடி விட்டுத் தொலை..... "என்று ரதி கத்த, அப்போது தான் ரஞ்சி அவளை அடிப்பதை நிறுத்தினாள்....

"ஏண்டி எரும அவர் மேல தண்ணி டம்ளரை தூக்கி போட்டுட்டு வந்த.... "

"ம்ம்ம்... போர் அடிச்சுது.. அதான் சும்மா விளையாண்டேன்... "

"அடிப்பாவி இது விளையாட்டா.. அவர் ஏதோ பெருசா எடுத்துக்கலை... இல்லைனா என்ன ஆகியிருக்கும்... "

"அதான் ஒன்னும் ஆகலையே... வா போகலாம்... "என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியில் வந்து தன் ஸ்கூட்டியை எடுத்தாள்...பின்னால் அமர்ந்த ரஞ்சி "ஆனாலும் சும்மா சொல்ல கூடாதுடி... அந்த தண்ணி பார்ட்டி செமயா இருந்தான்... முன்னாடியே பார்த்திருந்தா நல்லா சைட் அடிச்சிருக்கலாம்... என்ன பண்ண!!! சாப்பாடு கண்ணு முன்னாடி இருந்தா இடியே விழுந்தாலும் தெரிய மாட்டிங்குது... "

அவள் பேச்சில் கடுப்பாகி போன ரதி "ஏய் மரியாதையா வாயை மூடிட்டு வா.. "

"நீ தான் ஒருத்தன் பக்கமும் திரும்ப மாட்ட...நான்லாம் நல்லா சைட்டடிப்பேன் பா.. அதும் அவன் வேற ஹைட்டா சூப்பரா இருக்கான்... "என்று சொல்ல, ரதி கோவத்தில் ஸ்கூட்டியை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டே ஓட்ட ஆரம்பித்தாள்... அதில் பதறிய ரஞ்சி,

"அடியே என்ன பண்ற... ஏன் இப்படி வண்டியை ஆட்டுற.. அம்மா ஐயோ என்னை சாவடிக்க பாக்குறாளே... ஏய் ஒழுங்கா போய்த் தொலை எருமை.. "

"அப்பனா வாயை மூடிக்கிட்டு வா.. வாயை திறந்த!! எங்கயாவது சாக்கடையா பார்த்து தள்ளி விட்டு போயிருவேன்... "என்று சொல்லவும் வாயில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் ரஞ்சி ..

ரதியோ மனதில் 'பக்கி எருமை... இவ்ளோ நாள் என் கண்ணுல படாம இருந்தான்.. நான் நிம்மதியா இருந்தேன்.... இவனை பார்த்ததும் திரும்ப என்னை பைத்தியக்காரி மாதிரி ஆக்கறான்... கடவுளே இனி அவனை எப்பவும் என் கண்ணுல காட்டாத.. அப்புறம் நடக்கற விஷயத்துக்கு நான் பொறுப்பில்லை "என்று மனதில் வேண்டிக் கொண்டாள் ..

ஆனால் அடுத்த வாரமே அவன் மண்டையை உடைக்கும் வேலையை பார்த்திருந்தாள் அவனின் காதல் ரதி....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN