போதை-1

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்-1

" அம்மா.... " என கத்தினாள் பாமா. என்னாச்சோ எதாச்சோ என அடித்து பிடித்து ஓடி வந்தாள் வைதேகி.
" என்னடி.. என்னாச்சு?? எதுக்கு உயிரே போற மாதிரி கத்திட்டு இருக்க..." என திட்டினாள் வைதேகி. பாமா அவளது அறையில் கபோர்டை நோக்கி கை நீட்டினாள். வைதேகி அவள் நீட்டிய புறம் திரும்பி பார்க்க, கபோர்ட் கதவுகளில் ஏதோ சத்தம் கேட்டது. "ஸ்ஸூ..." என வாயில் விரல் வைத்து காட்டியவள்,
" நீ இங்கேயே இரு.. எதாவது வெளிய வந்தா என்னை கூப்பிடு.. நான் போய் அடிக்க எதாவது கம்பெடுத்துட்டு வர்றேன்.." என சன்னக்குரலில் கூறிவிட்டு கிளம்பினாள் வைதேகி. ஐந்தே நிமிடத்தில் கையில் வீடு துடைக்கும் மாப்போடு வந்து சேர்ந்தாள் வைதேகி. " வெளிய போகலைலே.." என வைதேகி கேட்க, இல்லை என தலையாட்டினாள் பாமா. இருவரும் மெதுவாய் கபோர்ட்டை நெருங்க, சட்டென கபோர்ட்டை திறந்து கொண்டு வந்து நின்றாள் அவள்.

அவளது திடீர் செய்கையால் விக்கித்த இருவரும் இரு அடிகள் அவர்களையும் அறியாமல் பின்னோக்கி வைத்திருந்தனர். அவள் தான் அல்லி.. அல்லி ராணி‌..மையிடப்படாத வட்டமான கண்கள், உப்பிய கன்னங்கள், சிறிய மூக்கிற்கு ஏற்ப சிறிய கல் மூக்குத்தி.. சிவப்பேறிய உதடுகள், இடுப்பிற்கு கீழ் நீண்ட விரிந்த கூந்தலோடு வந்து நின்றாள்.


" ஏண்டி குறுக்க வந்து நிக்கிற... தள்ளி நில்லு.. எதாவது உள்ள இருந்தா அடிக்கனும்ல.. "என வைதேகியின் பார்வை கபோர்டிலேயே இருந்தது.
"பல்லிக்கு பயப்படுற நீயெல்லாம் பந்தாவா முன்ன வந்து நிக்குற..." என கலாய்த்தாள் பாமா. " வெவ்வவெவ்வே..." என பழிப்பு காட்டியவள், கபோர்டை திறக்க அங்கு ஒன்றும் இல்லாமல் இருந்தது.


அதை பார்த்ததும் பாமா துள்ளி குதித்து கொண்டவள்,
" ஏய்..வீட்ல இவ்வளோ இடம் இருந்தும் உக்கார இடம் இல்லாம கபோர்ட்டுக்குள்ள போய் உக்கார்ந்துக்குவியா?" என கோபத்தில் கத்தினாள் பாமா. வைதேகி தலையில் அடித்துக்கொள்ள, "அப்போவே யோசிச்சிருக்கனும்.. எனக்கு விளையாட பாப்பா வேணாம்னு சொன்னேன் கேட்டீங்களா?? குப்பையில இருந்து எடுத்திட்டு வந்து பாசமா வளத்தா புத்தி எங்க போகுது பாருங்கம்மா..குரங்கு மாதிரி கபோர்ட்ல ஏறி உட்கார்ந்திருக்குறா.." என்றாள் பாமா. முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு "க்கா.. நான் குரங்கு இல்ல... உன் தங்கச்சி அல்லி... குட்டி பாப்பா... " என அல்லி பேச, வைதேகியோ அல்லிக்கு சப்போர்ட்டாய் பாமாவை பார்த்தாள்.
"ஹான்.. உனக்கு நீயே பேர் வைக்க சொல்லி குடுக்க வேண்டியதில்லையே..." என முணுமுணுத்தாள் பாமா.


"அக்கா உனக்கும் வேணுமா??" என பின்னால் ஒளித்து வைத்திருந்த பொம்மை பல்லியை பாமா பக்கம் நீட்ட, அவளோ குதித்து வைதேகியின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
" யஹ்.... சீசீ.. என் பக்கத்துல கொண்டு வராத.." என முகத்தை சுளித்தாள் பாமா. " நீ கோச்சுக்காத பல்லிமா.. அக்கா ஏதோ விளையாட்டுக்கு சொல்றா..." என அந்த பல்லியிடம் சமாதானம் பேசினாள் அல்லி.
"ஹய்யோ அதுக்கூட எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா.. ஏம்மா இப்படி ஒரு பைத்தியத்தை என் தங்கச்சியா கூட்டிட்டு வந்தீங்க..." என தன் தாயிடம் முறையிட்டாள் பாமா.
" அல்லி.. உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. பல்லியெல்லாம் தொடாதேன்னு...." என் வைதேகி கடிந்து கொள்ள, "இது பொம்மை பல்லிம்மா..."என அல்லி நீட்ட, அப்பல்லியோ அசைவினை காட்டியது.
"ஆ....."என பாமா அலற, "ஓ...பொம்மை பல்லிக்கு பதிலா உண்மையான பல்லியை தூக்கிட்டேனோ..."என கபோர்டில் இருந்த பொம்மையையும் சாதாரணமாக கையில் எடுத்துக்கொண்டாள் அல்லி.

"அல்லி... இந்த பல்லிய வீட்டுக்கு பின்னாடி இருக்கிற காம்பவுண்ட்க்கு பின்னாடி கொண்டு போய் விடு.. போ.. நாளைக்கு உங்க பாட்டி வந்தா பல்லி இருக்குறது அபசகுனம்னு நம்ம எல்லாரையும் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவாங்க..." என கண்டிப்பாய் சிறுபிள்ளையை பயமுறுத்தும் முயற்சியில் இறங்கினாள் வைதேகி.
" நோ... நான் வரமாட்டேன்.. அந்த கிழவியை மட்டும் அந்த பூட்டி வச்ச ஜெயிலுக்கு போக சொல்லுங்க..." என தன் பல்லியை அங்கும் இங்கும் ஆட்ட, பாமா பயத்தில் கத்த, அல்லி பாதுகாப்பாய் தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டாள்.
" அப்ப என் செல்ல குட்டில்ல.. இந்த பல்லிய கொண்டு போய் வெளியே விட்டுட்டு வந்திடுறியா??" என நாடி பிடித்து கொஞ்சினாள்.
"ம்ம் ஓகே... அப்ப நாளையில் இருந்து என் பல்லிக்கு சப்பாத்தி குடுப்பீங்களா??" என டீல் பேசினாள் அல்லி. " சப்பாத்தி என்ன பரோட்டாவே தர்றேன்.." என தற்போதைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் வைதேகி. " ஆமா.. நாளைக்கு பெப்பர் சிக்கன் ஆட்டுக்கால் பாயா எல்லாமே குடுப்போம்.. ஆள பாரு ஆள.. புள்ளையை வளக்க சொன்னா மினி டார்ச்சரையே வளக்குறீங்க.." என பாமா திட்ட, அல்லியை சமாதானப்படுத்த வேண்டி வைதேகியும் பாமாவை காதை திருகி அடக்கினாள்.


" போலாமா பல்லிபேபி.. ப்ளாக்கி.. பப்ளி.. எல்லாரும் வாங்க..." என அழைத்து கொண்டே செல்ல, அவளது பின்னால் நான்கு ஐந்து பூச்சிகள் விநோத ஜந்துக்கள் என அவள் பின்னாலேயே சென்றது.
" ஐயோ அம்மா.." என மீண்டும் கட்டிலுக்கே ஏறிக் கொண்டவள் " ம்மா.. பர்ஸ்ட் எனக்கு இன்னொரு ரூம் ரெடி பண்ணி தாங்க.. இந்த டைனோசர் கூடயும் அவ நடத்துற ஷூக்கூடலாம் இருக்கவே முடியாது.." என்றாள் பாமா. வைதேகியும் புன்னகைத்து விட்டு சென்றாள். அப்போது அவர்களது அறை ஜன்னல் கதவை ஒரு வலிய கரம் வந்து பூட்டியது.


"பல்லி பேபி.. நீ இனி அந்த கருப்பு பல்லி கூடலாம் சேரக்கூடாது.. டெய்லி நீ குளிச்சன்னா நான் அம்மா கிட்ட பெர்மிஷன் வாங்கி உன்ன எங்கூடவே கபோர்ட்ல சேத்துப்பேன்
. அப்புறம் ஸ்நாக்ஸ் நிறைய போடுவேன்.." என அதனிடம் பேசிக்கொண்டே நடந்தவள் பின்னால் வந்தவனை கவனிக்கவில்லை. அதனிடம் மீண்டும் செல்லம் கொஞ்சி விட்டு அதனை வீட்டிற்கு வெளியே விட்டாள்.


அப்போது எங்கோ அவளது விருப்பமான ஏஆர்ரஹ்மான் இசை ஒலிக்க, அவளையும் மறந்து இசையை ரசித்து கொண்டிருந்தாள்.


அப்போது ஏதோ நினைவிற்கு வந்தவள் மொபைலை எடுத்து பார்த்தாள், பாட்டு ஆன் செய்யப்படவில்லை.." இந்த நைட்ல எப்படி ஏஆர்ரஹ்மான் வந்தாரு... " என நாடியில் கைவைத்து யோசித்தவள் " ஒருவேளை அம்மா சொன்ன மாதிரி.. நைட்ல மரத்துல உக்கார்ந்து சூனியகாரிங்க தான் பாடுறாங்களா.. அப்ப என்ன தூக்கிட்டு போய் கடிச்சு சாப்பிடுவாங்களா??" என மனதிற்குள் கேட்டுக்கொண்டவள் " இல்லை..." என கத்தினாள். அதன் பின் " கிருஷ்ணா... கிருஷ்ணா..." என ஜெபித்துக்கொண்டே வீட்டை நோக்கி ஓடினாள். அவள் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு, அவன் மெதுவாய் அஙகே அருகே அமர்ந்தான். கைகளை கீழே நுழைக்க, அவனது கைகளில் அவளது கொலுசின் முத்து ஒன்று கிடைத்தது.


வீட்டிற்கு வந்தவள் அவளது அறைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டாள். பாமா அமர்ந்து உறங்கி கொண்டிருந்தாள். அப்போது ஜன்னலின் கண்ணாடியில் ஒரு கைகள் தெரிய, பயந்து அரண்டவள் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

நடு இரவில்,
அந்த காட்சி மீண்டும் கண்முன் விரிய, ஜன்னலை எட்டி பார்த்தாள். அந்த கைகளும் அங்கேயே இருக்க, பதறியவள் மீண்டும் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என மனதிற்குள் ஜெபித்து கொண்டு அருகில் படுத்திருந்த பாமாவின் கைகளுக்குள் அடைகலமானாள் அல்லி.

மறுநாள் காலையில்
பாட்டி பூஜையறையில் பூஜை செய்து கொண்டிருக்க, வைதேகி தூக்க கலக்கத்தில் இருந்த அல்லியின் கைகளை பற்றியவாறு கட்டாயமாய் கீழே இழுத்து வந்தாள். அதன்பின் சமையல் வேலைகளில் கவனம் செலுத்த, அல்லி அங்கிருந்த பெஞ்சில் தலைசாய்த்து உறங்க ஆரம்பித்தாள். அப்போது மணியின் சத்தம் அதிகமாய் கேட்க, வைதேகி எட்டி பார்த்தாள். பாட்டி அல்லியை எழுப்புவதற்காக ஓசையாய் மணியை அடித்து கொண்டிருந்தாள். அல்லியோ ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முயன்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த பாமாவிடம் வைதேகி குறிப்பால் உணர்த்தினாள். பாமா அல்லியை உலுக்க, அவ்ளோ தூக்கத்தை விடுவதாய் இல்லை.. இது சரிபட்டு வராது என்ற முடிவிற்கு வந்தவள், அல்லியின் முகத்தில் தண்ணீரை தெளிக்க தொடங்கினாள். அதில் தூக்கம் கலைக்கப்பட்டு எழுந்தவள், பாமாவிற்கு தண்ணீர் அபிஷேகம் நிகழ்த்தினாள். இருவரும் ஒருவரையொருவர் தண்ணீர் ஊற்றி விளையாடினர். "க்கா.. போதும்... முடியல.. இங்கேயே குளிச்சு முடிச்சிருவோம் போல.." என முற்று புள்ளி வைத்தாள் அல்லி."இன்னைக்கு பர்ஸ்ட் டே காலேஜ்ல ஜாய்ன் பண்ண போற.. சீக்கிரம் எழுந்திருச்சா தான் என்ன?? பேசாம உன்ன ஹாஸ்டல்ல போட்டா சரியா வரும்.." என பயமுறுத்த முயன்றாள் பாமா. அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், " தோ..ஒரு அஞ்சே நிமிஷம்.. தலைக்கு குளிச்சிட்டு ரெடியாகி வந்திடுறேன்.." என கூறிவிட்டு ஓடினாள் அல்லி.
"தலைக்கா??ஒரு மணி நேரமா குளிப்பாளே...நான் தலைகீழா நின்னாலும் சீக்கிரமா வரமாட்டாளே..." என நொந்துக்கொண்டாள்.


அப்போது வீட்டின் போன் ஒலிக்க, அதை எடுத்தாள் பாமா.
"ஹலோ... " பதிலில்லை "ஹலோ.." என்றாள். மீண்டும் பதிலில்லாமல் போக, போனை கட் செய்துவிட்டு சென்றாள் பாமா.


" புள்ளைங்களுக்கு பண்பாடு பாரம்பரியம்னா என்னன்னே சொல்லி குடுத்து வளக்குறதில்லையோ வைதேகி.. காலங்காத்தாலே வீட்டுக்குள்ள இத்தனை கூச்சக்காடா இருக்கு.. நடுக்கூடத்துல தண்ணீய கொட்டி வச்சிருக்குதுங்க... என் பொண்ணு வீட்ல எவ்ளோ அமைதியா இருக்கும் தெரியுமா?? நான் பெத்த புள்ளை அல்ப ஆயுசுல செத்துட்டானே.. ஒத்த பொம்பளையா இருந்து கஷ்டபடுறியேன்னு தான் இங்க வந்திட்டு போறேன்.. என் பேத்திகளுக்காகவும் தான்.. நீ வைக்கிற இந்த கேவலமான சாப்பாட்டுக்கு இல்ல..." என்ற பங்கஜம் டைனிங் டேபிளில் இருந்த கேசரி கிண்ணத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

பங்கஜம் பாட்டிக்கு ஒரு மகன் ஒரு மகள்... மகன் விபத்தில் இறந்துவிட, அவரின் மனைவி வைதேகி தான் வைராக்கியமாய் 'என் குழந்தைகள் எனக்கு போதும்' என தனியே வாழ்ந்து வருகிறாள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் வைதேகி நடத்தும் சமையல் தொழில் இந்த ஊரில் விளம்பரமாகி அதிக அளவில் சம்பாத்தியம் கிடைத்ததால் சொந்த ஊரில் இருந்து இங்கே இடம்பெயர்ந்து வந்துள்ளனர்..அவ்வபோது பேத்திகளை பார்க்க வருகிறேன் என்ற பெயரில் பார்த்த பொருட்களையெல்லாம் அள்ளி சென்று விடுவார் பாட்டி. தேடி வரும் ஒரு சொந்தத்தையும் கெடுத்துக்கொள்ள கூடாதே என வைதேகியும் இதை பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை.. ஆனால் அல்லி தான் பொருட்களை தொலைத்து விட்டு கரைவாள்.


கல்லூரியில்,

"க்கா.." என அழைத்தவாறே பாமாவின் பின்னே நாய்க்குட்டியை போல ஓடினாள்.
" அல்லி.. இங்க எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. நான் இந்த காலேஜில ஒரு சேர்மன்... சோ எல்லார் முன்னாடியும் அக்கான்னு கூப்பிடுறத விட்டுட்டு பாமான்னே கூப்பிடு..." என கூறினாள் பாமா.
" சரி.. க்க.. இல்ல பாமா... காலேஜ் ரிஜிஸ்டர் ஃபார்ம் எங்க வாங்கணும்??..." என கேட்டாள் அல்லி.
" அதோ அங்க ஒரு லைன் தெரியுது பாரு.. அங்க தான்.. நீ போய் வாங்கி பில் பண்ணிட்டு இரு.. நான் என் ஃப்ரெண்ட்ஸ மீட் பண்ணிட்டு வர்றேன்..." என சென்றாள் பாமா. அருகே இருந்த ஃபார்மை எடுத்து நிரப்பி கொண்டிருக்கையில் வேகமாய் ஒரு ஜீப் அவளை கடந்து சென்றது. ஒரு நிமிடம் திரும்பி பார்க்க, அது சற்று தூரம் சென்று விட்டது மீண்டும் அவளது கவனத்தை ஃபார்ம் ஃபில் செய்வதில் பதிந்தது.


வேகமாக சென்ற ஜீப், செட்டின் முன்னால் சென்று நின்றது. அங்கு தான் வாங்கிய புது ஸ்கூட்டியோடு கெத்தாய் தனது நண்பர்களிடம் நின்று பேசிக்கொண்டிருந்தாள் அஷ்மா. நாகரீக அழகி அவள். அவனை கண்டதும் அனைவரும் விலகி நிற்க, அவன் நேரே சென்று அஷ்மாவின் முன்னால் நின்றான்.
" புது ஸ்கூட்டியா?? எப்ப வாங்குன??" என எகத்தாளமாய் விசாரித்தான். அவள் சற்றே தடுமாற்றமாய், " நேத்து தான் அப்பா வாங்கி தந்தார்.." என்றாள்.
" புது ஸ்கூட்டி வாங்குறது தப்பில்ல.. அது அப்பாவோட சொந்த காசுல வாங்குவதும் தப்பில்ல.. அதே காலேஜ்க்கு கொண்டுவந்ததும் தப்பில்ல..ஆனா நீ எங்க பார்க் பண்ணியிருக்கனும்??" என தன் ஒற்றை புருவம் உயர்த்தி அதட்ட, " ஸ்..ஸா... ஸாரி.." என திக்கினாள்.
" நான் ரொம்ப நாகரீகமான ஆளு.. நியாயமான ஆளும் கூட.. அப்படியிருக்கும் போது என் கறுப்புசிங்கம் நிக்க வேண்டிய இடத்துல இந்த சின்ன பட்டாம்பூச்சி நிக்கிறது தப்பில்ல..." என முகத்தை கடுமையாய் மாற்றியவனிடம் " ப்ளீஸ்.. வேணாம்.. விட்ரு.." என கெஞ்சினாள். அவனோ காதில் வாங்காமல் தன் இரும்பு கைகள் கொண்டு ஸ்கூட்டியின் தலையில் அடிக்க அத்தனை விளக்குகளின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. தன் விரல்களில் போட்டிருந்த ஐந்து சிங்க மோதிரங்களையும் கொண்டு ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தான். எந்த மாணவ மாணவிகளும் தட்டிக்கேட்பதாய் இல்லை..அஷ்மா ஏதும் இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள். அவன் ஓங்கி உதைக்க குப்புற விழுந்து தன் உயிரை விட்டது அந்த ஸ்கூட்டி. " இங்க பார்.. சிங்க குகைக்குள்ள எப்பவும் பட்டாம்பூச்சி நுழையக்கூடாது.. என்னை பத்தி பிரின்சிபாலுக்கு கம்ப்ளைண்ட் குடுக்கிறீயோ??? ஜாக்கிரதை... இல்லன்னா இந்த ஸ்கூட்டி நிலைமை தான் உனக்கும்.." என தன் வலியவிரல் கொண்டு மிரட்டினான்.


அப்போது, புதிதாய் சேர்ந்திருந்த பேராசிரியர், " இது யாரு?? ஸ்டூடண்டா இவ்வளோ அட்டூழியம் பண்றான்..." என கேட்டார். அருகில் இருந்தவர் "ஸ்டூடண்ட் இல்ல சார்.. முன்னாள் ஸ்டூடண்ட்..பேரு தஷ்வத்.. வேணும்னு ஒரு அரியர் வச்சு.. அத காரணம் காட்டி ரெண்டு வருஷமா காலேஜ்க்குள்ள வந்து இந்த அட்டூழியம் தான் பண்றான்.. கேக்க ஆளில்லாயான்னு கேட்காதீங்க மினிஸ்டர் அருணாச்சலம் பையன்.. பிரின்சிபால் கூட ஏன்னு கேக்க முடியாது.." என்றார். " இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ??" என தலையில் அடித்தவாறே சென்றார் புதிய பேராசிரியர்.


ஃபார்ம் ஃபில் செய்து கொண்டிருந்த சிலரை வரிசையில் நிற்குமாறு ஒரு மாணவன் கூறினான். அப்போது " அண்ணா.. நான் பாமாவோட சிஸ்டர்.." என்றாள் அல்லி. பாமாவும் வந்துவிட, "தெய்வம்..." என அவன் கூறியதும் சேர்மன் பாமாவே பின்வாங்கினாள். "க்கா.. நான் ஃபார்ம் ஃபில் பண்ணனும்.." என சிணுங்கினாள் அல்லி.

"குடு.. அதை நான் பாத்திக்கிறேன்.. நீ இந்த அண்ணா சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கோ..." என கூறிவிட்டு பாமா சென்றுவிட்டாள்.


கல்லூரிக்கு புதிதாய் சேர்ந்திருந்த மாணவிகள் அனைவரும் வரிசைக்கட்டி நின்றிருந்தனர். அப்போது ஒருவன் வந்து " தெய்வம் தரையிறங்கிட்டாரு.." என கூவி விட்டு பக்கவாட்டில் பாடிகாட் போல நின்று கொண்டான்.அப்போது இருபுறமும் அடியாட்கள் போல சீனியர் மாணவர்கள் நிற்க, நாற்பதுக்கு படிகளுக்கு மேலே ஒருவன் காட்சி தந்தான். சூரிய ஒளியினால் அவனது நிழலுருவம் மட்டும் தெரிய, அவனது உடல் உடற்பயிற்சிகளால் முறுக்கேறிய உடற்கட்டுகளாக காட்சியளித்தது. அவன் கீழே இறங்கி வர வர, அவனது உருவம் பயமுறுத்துவதாக இருந்தது. முறுக்கிய மீசையும் கண்களில் கர்வமும் எப்போதாவது எகத்தாள சிரிப்பை உதிர்க்கும் கடுமை ஏறிய உதடுகளும் கைகளில் தங்க சங்கிலியும் அவனது உடல் ஏற்றுக்கொள்ளாத முதல் இரண்டு பட்டன்களும் பார்ப்பதற்கு நவீன கால அரக்கன் போல இறங்கி வந்தான்.அவன் பத்து படிகளுக்கு மேலே நின்றான். அப்போது அவனருகே அடியாள் போல நின்ற ஒருவன் "ஒவ்வொரு படியா ஏறி வந்து... ஒவ்வொரு படியிலையுமே தெய்வமே துணைன்னு சத்தமா சொல்லு.. தெய்வத்துக்கு எப்போ கேக்குதோ அப்போ தான் உனக்கு விடுதலை..." என்றான்.
மூன்றாவதாய் நின்ற அல்லியோ பின்னால் நின்ற சகமாணவியிடம்," இங்க ராக்கிங் எல்லாம் நடக்குமா??" என கேட்டாள். " தெரியல.. நானும் புது ஸ்டூடன்ட் தான்.. சீனியர பகைச்சிக்கிட்டா செமஸ்டர் தாண்ட மாட்டன்னு சொல்லுவாங்க... " என் பயத்தில் ஏதோ தத்துவம் எல்லாம் பேசினாள் அவள்.


" இத எல்லாம் என்னைக்கு ராக்கிங் லிஸ்ட்ல சேத்தாங்க..." என உச்சுக்கொட்டிக்கொண்டாள் அல்லி.முதலாதவள் படியில் ஏறும் போதே மூன்றவதாய் நின்ற அல்லி அவனது கண்களுக்கு தென்பட்டு விட்டாள்.
முதல் மாணவி மேலே ஏறும் ஒவ்வொரு அடியிலும் பின்னால் இருந்த அல்லியையே நோக்கினான். வட்டமான கண்கள், உப்பிய கன்னங்கள், இரண்டு புருவங்களுக்கு இடையே கருப்பு நிற மையினால் புள்ளி வைத்த பொட்டும், காதுகளில் தொங்கிய ஜிமிக்கியும் அதனுடன் கண்ணாம்பூச்சி விளையாடிய அவளது நீண்ட விரிந்த கூந்தல் கற்றைகளும் அவன் கண்களில் சிக்கியது.


முதலவள் ஏழு படிகளில் ஏறி வர, அவளை போகசொன்னான். அடுத்தவள் இரண்டாம் படிகளில் கால்களை வைக்குமுன்னரே கையசைத்து விட்டான். அடுத்து வந்து நின்ற அல்லியை பார்வையாலேயே அளந்து கொண்டிருந்தான். அல்லியோ அதே இடத்தில் அசராமல் நிற்க, அருகில் நின்ற அடியாள் ஒருவன், "உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா?? தெய்வமே துணைன்னு சொல்லி மரியாதை பண்ணு..." என மிரட்டினான்.
"வெளியே ராக்கிங் பண்ணக்கூடாதுன்னு போர்டு பாத்துட்டு தான் வர்றேன்..." என கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்தாள்.


"இது ராக்கிங் இல்ல...தெய்வத்துக்கு மரியாதை.." என்றான் அவன்.
"தெய்வம் மனுஷனாகலாம்... மனுஷன் தெய்வமாக முடியாது..." என்றாள் ராணி.
"ஏய்.. சின்ன பொண்ணு.. இதே டயலாக்க நூறு தடவை நிறுத்தாம சொல்லு.. நான் தெய்வமில்லன்னு ஒத்துக்கிறேன்... இல்லன்னு வை.. நீ என்ன எங்க பார்த்தாலும் 'சலாம் தெய்வம்'னு சொல்லனும்..." என தன் வலிய விரல் கொண்டு எச்சரித்தான் தஷ்வத்.
" தெய்வம் மனுஷனாகலாம்... மனுஷன் தெய்வமாக முடியாது.. ஒன்னுதெய்வம் மனுஷனாகலாம்... மனுஷன் தெய்வமாக முடியாது.. ரெண்டுதெய்வம் மனுஷனாகலாம்... மனுஷன் தெய்வமாக முடியாது.. மூணு.........தெய்வம் மனுஷனாகலாம்... மனுஷன் தெய்வமாக முடியாது தொன்னூத்தி ஆறு... க்கும்.. க்கும்.."என இருமியவள், விடாது "தெய்வம் மனுஷனாகலாம்... மனுஷன் தெய்வமாக முடியாது தொன்னூத்தி ஏழு..க்கும்க்கும்க்கும்.." என பேச முடியாமல் இருமல் வந்து தொண்டையில் சதி செய்தது.
அப்போது அருகில் இருந்தவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கியவன் அவளருகே வந்தான். அவளின் மூச்சு காற்றுக்கு நெருங்கி நின்றவன் பாட்டிலை திறந்து வாயருகே கொண்டு வந்தான். அல்லியுயும் திமிராய் அவனை பார்த்து முறைத்து கொண்டு நின்றாள்."தெய்வம் தர்ற தீர்த்தத்த வேணாம்னு சொல்லக்கூடாது.." என்றவன் வலுகட்டாயமாய் அவளது கன்னத்தை அழுத்தி பிடித்து வாயை திறக்க வைத்தான். வாயில் தண்ணீரை ஊற்றியவன், அதிக அளவில் தண்ணீர் உள்ளே செல்வதை அறிந்தும் ஊற்றிக்கொண்டே இருந்தான். அல்லியோ தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரை அவன் மீதே கொப்பளித்தாள். அவன் சட்டை ஈரமாகி வலுவேறிய உடற்கட்டு அச்சாக தெரிந்தது.
ராணியோ முன்னே கிடந்த கூந்தலை பின்னால் தள்ளிவிட்டு, தன் துப்பட்டாவை தோளில் கெத்தாய் தூக்கிவிட்டவள் நடந்தாள்..


அப்போது தன் போன் ஒலிக்க, எடுத்து பேசினாள்.
" ம்மா..."
"..."
"ஜோ...." என சத்தமிட்டாள் அல்லி..

போதை தொடரும்..


 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN