நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தன் கையிலிருந்த போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். சக்தியும் மகேஷும் கல்யாண கோலத்தில் இருப்பது அவனுக்கு அளவில்லாத ஆத்திரத்தை தந்தது. அவனது பிடி கொஞ்சம் இறுகினாலும் அந்த போன் உடைந்துவிடும் அளவுக்கு கோபத்தோடு இருந்தான் அவன்.

'அம்மா ஏன் இந்த வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. என்னை விட அவங்களுக்கு கல்யாணம் முக்கியமா போச்சே.. பெத்த மகனை விட எவனோ ஒருத்தன் முக்கியமா போயிட்டானா..? இதனாலதான் அவங்களும் இவ்வளவு நாளா இங்கே வராம என்னையும் ஊருக்கு வர விடாம இருந்தாங்களா..?'

செல்வா சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்குள் வந்தான். இனியன் போனை பார்த்து வெறிப்பது கண்டு அவனருகே வந்து போனை வாங்கினான். போட்டோவை பார்த்தவன் சிலையாக நின்ற இனியனை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.

"உனக்கு இந்த போட்டோவை பார்த்து கோபம் வருதுல்ல..? ஆனா எனக்கு இந்த போட்டோவை பார்த்து சந்தோசமா இருக்கு.." என்றான் மென்மையாக.

"கண்டிப்பா சந்தோசமாதான் இருக்கும்.. உங்க தங்கை கல்யாணம் பண்ணிக்கிட்டதில் சந்தோசமாதான் இருக்கும்.. ஆனா எனக்குதான் வருத்தமாயிருக்கு.. ஒரு பொண்ணு இந்த வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்ல, அதுவும் தலைக்கு மேல் வளர்ந்த பையனை வச்சிக்கிட்டு புரட்சிகரமா கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்லன்னு மனசாட்சி சொல்லுது மாமா.. ஆனா அது என் அம்மா.. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.. என்னை அவங்க இதுவரைக்கும் அதிகமா கொஞ்சியதும் இல்ல.. என் மேல மத்த அம்மாக்கள் பாசம் காட்டுற மாதிரி பாசம் காட்டியதும் இல்ல.. ஆனாலும் என் அம்மாவாச்சே.. அதான் எவனையோ கட்டிக்கிட்டு போட்டோ எடுத்து இப்படி அனுப்பி வச்சது பார்த்து மனசு வலிக்குது.." என்றவன் பொங்கி வர முயலும் கண்ணீரை கோபத்தை கொண்டு கட்டுப்படுத்தினான்.

"அது எவனோ இல்ல.. உன் அப்பா.." செல்வா சொல்லவும் சிரித்தவன் "ஆமா.. என் அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்பாதானே..?" என்றான் வேதனையோடு.

செல்வா இனியனின் தலையை வருடி விட்டான்.

"அவன் உன் சொந்த அப்பா.. உன்னை பெத்தவன்.."

இனியன் அதிர்ச்சியோடு செல்வாவை பார்த்தான். 'அப்பாவா..? என் அப்பாவா..? ஆனா எப்படி.. அம்மா இவ்வளவு நாள் அப்பாவை பத்தி எதுவுமே சொல்லல.. ஆனா இன்னைக்கு ஏன் அவனையே கட்டிக்கிட்டாங்க..? அப்படின்னா இவ்வளவு நாளா அம்மா அவனுக்காகதான் அங்கேயே இருந்தாங்களா..?' அவனது மூளைக்குள் பல கேள்விகள் ஓடியது. ஆனால் அவன் எந்த கேள்வியும் கேட்கும் மன நிலையில் இல்லை.

செல்வா கையிலிருந்த போனை வாங்கி மகேஷை நன்றாக உற்று பார்த்தான். மகேஷ்க்கும் அவனுக்கும் உருவத்தில் பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தது. உற்று பார்த்தால் யாராக இருந்தாலும் சொல்லிவிடும் ஒற்றுமைதான். ஆனால் அந்த போட்டோவை பார்க்கையில் அவனுக்கு பாசம் வரவில்லை. கோபம்தான் வந்தது.

"இப்பவாவது என் அம்மா வாழ்க்கையில் என்ன நடந்துச்சின்னு சொல்றிங்களா..? என்றான் இனியன் எரிச்சலை வெளிக்காட்டாமல்.
செல்வா பெருமூச்சோடு கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தான். "உன் அம்மாவும் உன் அப்பாவும் இடையில் தீராத பகையும் அழியாத காதலும் இருக்கு.." என்றவனை புரியாமல் பார்த்தான் இனியன்.

"உன் அப்பா நிகழ்காலத்துல ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி.. உன் அம்மாவோ போலிஸ்காரி.. அவங்களுக்குள்ள உறவு எப்படி இருக்கும்ன்னு இதுல இருந்தே உன்னால புரிஞ்சிக்க முடியும்.. மத்த விசயம் சொல்லும் முன்னாடி ப்ளாஷ்பேக் முடிச்சிடலாம் இரு.." என்றவன் அவர்களின் காதல் முதல் இனியன் பிறப்பு வரை சொல்லி முடித்தான்.

"உன் தாத்தாவுக்கு சாதி வெறி.. இதுல நீயும், உன் அம்மாவும், உன் அப்பாவும் அநியாயமா பலியாகிட்டிங்க.. மகேஷ்க்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது.. சக்தி அவன்கிட்ட எதையும் சொல்லல.. இப்ப கூட அவங்க அப்பா அவனுக்கும் அவனோட அக்கா பொண்ணுக்கும் கல்யாணம்ன்னு பேசிட்டாரு.. அந்த பொண்ணு வாழ்க்கையை காப்பாத்ததான் சக்தி அத்தனை பிரச்சனையையும் கண்டுக்காம மகேஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. தீண்டாமைன்னா என்னன்னு உன்னால புரிஞ்சிக்க முடியாது.. ஆனா உன் அம்மாவும் நானும் அந்த பிரச்சனைகளை நல்லாவே சந்திச்சிருக்கோம்.. நேத்து நைட் கூட அவ சமைச்ச சாப்பாடை உன் தாத்தா சாப்பிடாம கத்திட்டு எழுந்து போயிட்டாராம்..

மகேஷ்க்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது.. ஆரம்பத்துல உன் தாத்தா மேல இருந்த பயத்துல சக்தி உன்னை பத்தி யார்க்கிட்டயும் சொல்லல.. அதுக்கப்புறம் உன் அப்பன் கொலைக்காரனாகிட கூடாதேங்கற பயத்துல சொல்லாம விட்டுட்டா.. சக்தி இத்தனை வருசம் கழிச்சி அந்த வீட்டுக்கு போனதுக்கு நீயும் ஒரு காரணம்.. அவளுக்கு உன்னோட உரிமையை வாங்கி தரணும்ன்னு ஆசை.. அவ என் தங்கை.. கண்டிப்பா தான் நினைச்ச காரியத்தை சாதிச்சி முடிப்பா.. உன் அப்பனுக்கு உன்னை பத்தி தெரிஞ்சதும் அடுத்த செகண்டே பறந்து வரப்போறான்.." செல்வா சொன்னதை கேட்ட பிறகும் கூட இனியனுக்கு மகேஷ் மேல் இருந்த கோபம் குறையவில்லை.

'கட்டிய மனைவியை காப்பாத்த துப்பிலாதவன் ரவுடியா இருக்கறதுக்கு பதிலா பரதேசம் கூட போயிருக்கலாம்.. என் அம்மாவுக்கு என்ன பைத்தியமா..? அவன் வீட்டுல யார் வாழ்க்கை நாசமா போனா என்ன..? தன்னை மதிக்காத இடத்துக்கு எதுக்கு போறாங்க..? எனக்காகவா நீங்க அவமானங்களை சகிச்சிக்கிறிங்க..? எனக்கு அப்படி ஒரு சொந்தம் தேவையில்லம்மா.. உங்க அவமானத்துக்கு பரிசாதான் என் பேருக்கு பின்னாடி நான் என் அப்பா பேரை போடணும்ன்னா எனக்கு அப்படி ஒரு அப்பாவே கூட தேவையில்ல அம்மா.. எனக்கு நீங்களும் உங்களோட கௌரவமும்தான் முக்கியம்.. அந்த, மொத்த வீட்டையும் கூண்டோட கைலாசம் அனுப்பிட்டு உங்களுக்கு புரிய வைக்கிறேன் இந்த இனியனுக்கு நீங்க மட்டும் போதுங்கறதை..'

இனியன் எழுந்து நின்றான். "எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சி மாமா.. நான் கிளம்பறேன்.." என்றான்.

"பத்திரமா போய்ட்டு வா.. உனக்கு ஏதாவதுன்னு உன் அப்பனுக்கு தெரிஞ்சா என்னை பலி போட்டுடுவான்.. உன்னை இவ்வளவு நாளா அவன் கண்ணுல காட்டாம வச்சது தெரிஞ்சாவே என்னை சாகடிக்கதான் போறான்,, இருக்கட்டும்.. நண்பன்தானே.."

இனியன் வெற்று சிரிப்பொன்றை தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

செல்வா தன் கையிலிருந்த போனில் புகைப்படத்தை பார்த்தான். 'எருமை மாடுங்க.. இப்பவும் கூட அழகாதான் பொருந்தி போகுதுங்க.. என்னவோ.. நல்லா வாழ்ந்தா சரி..' என்றவனுக்கு தெரியவில்லை இனியனும் மகேஷை போலவே முன் கோபத்தில் அனைத்தையும் முடிவெடுப்பவன் என்பது.
சக்தி ஸ்டேசனில் தனது பணியில் மும்முரமாக இருந்தாள்.

"மேடம் உள்ளே வரலாங்களா..?" என பழக்கப்பட்ட குரல் கேட்கவும் சலிப்போடு தலை நிமிர்ந்தாள் சக்தி.

"அதுக்குள்ள என்ன மகேஷ்..?"

மகேஷ் பற்களை காட்டியவாறு உள்ளே வந்தான். "ஒரு பிட்பாக்கெட் கேஸை பிடிச்சிட்டு வந்திருக்கேன்.." என்றவன் தன் பின்னால் கை கட்டி வந்தவனை காட்டினான்.

"நீயே ஒரு போர் டிவென்டி.. நீ இன்னொரு போர் டிவென்டியை பிடிச்சிட்டு வந்திருக்கியா..?" என்றவள் மகேஷின் பின்னால் இருந்தவனை ஏற இறங்க பார்த்தாள்.

"என்ன இப்படி சொல்லிட்ட..? நான் கட்டப்பஞ்சாயத்து பண்ணியிருக்கேனே தவிர திருட்டேதும் பண்ணதில்ல.. ஒருவேளை உன் மனசை கொள்ளையடிச்சதைதான் அப்படி சொல்றன்னா எனக்கொன்னும் பிரச்சனை இல்ல.." என்றவனை அலுப்போடு ஓரக்கண்ணால் பார்த்து விட்டு அவன் பிடித்து வந்த திருடன் பக்கம் திரும்பினாள்.

அப்பாவியாக கை கட்டி நின்றவன் மகேஷை நொடிக்கொருதரம் தயங்கி தயங்கி பார்த்தான். திருட்டு முழியை விட பயந்த விழிதான் அவளுக்கு தெரிந்தது.

"மிஸ்டர் திருடர் ஸார்.. எதுக்கு இப்படி அடிக்கடி மகேஷை திரும்பி பார்க்கறிங்க..? அங்கேயிருந்து வரும்போதே இப்படி பார்க்க சொல்லிதான் கூட்டி வந்தானா இவன்..?" என சக்தி கேட்டதும் அவன் சக்தியின் அருகே ஓடி வந்து நின்றான்.

"காப்பாத்துங்க மேடம் என்னை.. இந்த ஆளு ஐநூறு ரூபாயை கொடுத்து நடிக்க சொல்லி கூட்டி வந்துட்டாரு.. ஆனா எனக்கு ஜெயிலுக்கு போக ஆசையில்ல மேடம்.." என்றவன் 'ஙே' என அழ, சக்தி மகேஷை கோபத்தோடு வெறித்தாள்.

"நீ போப்பா.. அந்த ஆளை பார்த்துக்கறேன்.." சக்தி ஆறுதல் சொல்லி திருடனாக நடிக்க வந்தவனை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.
மகேஷ் பல்லை காட்டியபடி அவள் முன்னால் அமர்ந்தான்.

"ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற மகேஷ்..? எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.. இதுக்கு நடுவுல உன் லூஸுதனமான விளையாட்டுல கலந்துக்க சொல்லி ஏன் என்னை இம்சை பண்ற..?"

மகேஷ் அவளின் கன்னத்தில் செல்லமாக தட்டினான். "ஐ மிஸ் யூ.. எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கனும்.. நான் என்ன செய்ய..? அதான் இப்படி ஒரு ப்ளான் பண்ணி உன்னை பார்க்க வந்தேன்.."

சக்தி அவனை கடுப்போடு பார்த்தாள். "நான் இருக்கற வேலையை விட்டுட்டு உன்னோட இப்ப மொக்கை போடணுமா..? அப்படியே எழுந்து அமைதியா ஓடிப்போயிடு.. இல்லன்னா கல்யாணமான மறுநாளே விதவையானாலும் பரவால்லன்னு உன்னை சுட்டு தள்ளிடுவேன்,.." என்றவள் தன் வேலையில் மூழ்கினாள்.

"ஆமா பெரிய கல்யாணம்.. சின்ன குழந்தையை பார்க்க வச்சி மிட்டாய் சாப்பிடுற மாதிரி என்னை பார்க்க வச்சி நீயே உன் கழுத்துல தாலி கட்டிக்கிட்ட.. இதுல விதவை வேற.. நீயே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு நான் செத்தா நீ ஏன் விதவை ஆகப்போற..?" என்றான் எரிச்சலாக.

அவன் சொல்வதை கேட்க இயலாமல் சக்தி தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டாள். அவன் பேசி முடித்த பிறகே தன் காதுகளிலிருந்து கையை எடுத்தாள்.

"உனக்கும் எனக்கும் தெரிஞ்ச விசயத்தை நீ இப்படியே எல்லா இடத்திலயும் உளறிக்கிட்டே இருந்தான்னா அப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்சிரும் நீ என் புருசன் இல்லன்னு.. வசதி எப்படி..?" என்றாள் விழியுயர்த்தி.

மகேஷ் தன் முட்டாள்தனத்தையும் சிரித்தே மறைத்தான்.

"இப்படி என் முன்னால உட்கார்ந்து பல்லை காட்டுறதுக்கு பதிலா வேற ஏதாவது உருப்படியான வேலை இருந்தா அதை போய் செய்.." என்றவள் தன் வேலைகளில் மூழ்கினாள். மகேஷ் அவள் நிமிர்ந்து பார்த்து தன்னோடு பேசுவாள் என காத்திருந்து விட்டு அரை மணி நேரம் கழித்து தோல்வியோடு எழுந்து அங்கிருந்து சென்றான்.

அந்த கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் ஒரே இருளாய் இருந்தது. இனியன் தனக்கு முன் நடந்துக் கொண்டிருந்தவனை கை பிடித்து நிறுத்தினான்.
"இந்த இடம்தானா சகா..?" என்றான் சந்தேகமாக

"இந்த இடம்தான்.. நீ தைரியமா வா.." என்றவன் இனியனை ஏழாவது மாடியின் தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

நீண்டிருந்த மேஜைக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் இனியனை கண்டதும் கை துப்பாக்கி ஒன்றை எடுத்து மேஜை மேல் வைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

இனியனின் அவசர முடிவை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு எனக்கு சொல்லுங்கள் நட்புள்ளங்களே..
கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணிடுங்க நட்புள்ளங்களே...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top