நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 47

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தன் முன் வைக்கப்பட்ட துப்பாக்கியை கையில் எடுத்தான்.

துப்பாக்கி அவன் கையில் கனமாக தெரிந்தது. தான் கொண்டு வந்த பணத்தை எடுத்து மேஜை மீது வைத்தான். அவனின் எதிரில் இருந்தவன் பண கட்டை எடுத்து மேஜை டிராயரில் வைத்துக் கொண்டான்.
"போகலாம் நீ..."

இனியன் தலை அசைத்துவிட்டு அந்த திப்பாக்கியோடு வெளியே நடந்தான். அவனோடு உடன் வந்த இளைஞன் இனியனை தொடர்ந்து பின்னால் ஓடினான்.

"இந்த துப்பாக்கி உனக்கு எதுக்கு இனியா..?" என்றான் ஆர்வத்தோடு.

"சும்மாதான்.." என்றவன் துப்பாக்கியை தன் இடுப்பில் சொருகி கொண்டு கூட்டாளியை பார்த்தான்.

"இங்கே நான் வந்த விசயமோ இல்ல இப்படி ஒரு துப்பாக்கியை வாங்கின விசயத்தையோ நீ வெளியே சொன்னன்னு தெரிஞ்சதுன்னா இந்த துப்பாக்கியோட முதல் குண்டு உன் மேலதான் பாயும்.." என சொல்லிவிட்டு அந்த கட்டிடத்தை விட்டு தூர நடந்தான். அவனோடு வந்தவன் பயத்தில் குப்பென வியர்த்து விட்ட தன் முகத்தை துடைத்துக் கொண்டே தனது வழியில் நடந்தான்.

முத்து மாந்தோப்பில் கயிற்று கட்டிலில் படுத்தபடி வானம் பார்த்து யோசனை செய்துக் கொண்டிருந்தார்.

"என் சொந்த வீட்டு ஆட்களையே எனக்கெதிரா திருப்பிட்டா சக்தி.. அவளை உயிரோடு விட்டு வச்சா எனக்கு மானம் மரியாதை இல்லாத மாதிரி ஆகிடும்.. ஆனா என் பேச்சை கேட்டு நடக்கற மூர்த்தியும் இப்ப அவ பக்கம் சேர்ந்துட்டான்.. இனி என்னதான் செய்றது..? அவளை எப்படி பழி வாங்கறது..?"

தனக்கு மூளையில் எட்டிய வரை யோசித்து பார்த்தவர் சட்டென எழுந்து அமர்ந்தார். தனது கைபேசியை எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்தார்.

"ஹலோ.." எதிர் முனையில் தூக்க கலக்கத்தோடு கேட்டது ஒரு குரல்.

"நான் முத்து பேசுறேன்.. நான் சொல்ற ஆளை போட்டு தள்ளினா உனக்கு நான் அஞ்சி லட்ச ரூபா தரேன்.."
"ஆளோட விவரம் சொல்லுங்க.. போட்டு தள்ளிட்டே வந்து பேமண்டை வாங்கிக்கறேன்.." கூலிக்கு கொலை செய்யும் எதிர் முனையிலிருந்தவன் மொத்த தூக்கமும் மறைந்து ஆர்வத்தோடு பதிலளித்தான்.

முத்து சக்தியின் தகவலை அவனுக்கு சொல்லிவிட்டு மன நிம்மதியோடு கட்டிலில் சாய்ந்தார்.

"ரொம்ப தப்பு பண்றயா.." என ஒரு குரல் வரவும் எழுந்தமர்ந்து திரும்பி பார்த்தார் முத்து. மாந்தோப்பில் விழுந்து கிடந்த இலையை மிதித்தபடி வந்து அமர்ந்தார் ஒரு கிழவர்.

"அந்த பொண்ணு உன் வீட்டுக்கு வந்துட்ட மருமக.. அவளை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது.. ஆனா நீ அவளையே கொல்ல பார்க்கற.. அந்த அஞ்சி லட்ச ரூபாயால் உனக்கு உன் கௌரவம் உசந்துர போறதில்ல.. அந்த பொண்ணை கொன்னு அவ எரியற சிதையிலிருந்து உன் வீட்டுக்கு வெளிச்சம் கிடைக்க போறதில்ல.. மனுசங்களோடு மனுசங்களா கலந்து வாழப்பாரு.. அது உன் வீடு.. அவ உன் மருமக.. அவ உன் வீட்டுக்கு வாரிசை தரக்கூடிய ஆளு.. அவளை கொன்னுட்டு நீ எந்த சந்ததிக்கு உன் கௌரவத்தை சேர்த்து வச்சி கொடுக்க போற..?"

முத்துவின் கண்களுக்கு சக்திக்கு வலுக்கட்டயாமாக விஷம் கொடுத்தது நினைவிற்கு வந்தது. மனசாட்சியை பேச விட்டு அதன் மூலம் தானொரு தவறானவன் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள அவர் தயாரில்லை. அதனாலேயே மனசாட்சி பேச ஆரம்பிக்கும் முன்னே அதை பூட்டி விட்டார்.

"நான் என்ன செய்றேன்னு எனக்கு தெரியும்.. நீ இந்த வயசான காலத்துல ஆளாளுக்கு புத்தி சொல்றதுக்கு பதிலா செத்த பின்னாடி உன்னை புதைக்க குழி தோண்டுற வழியை பாரு.." என்றார் எரிச்சலோடு.

அந்த கிழவர் சிரித்தபடியே எழுந்து நின்றார். "என் குழி பக்கத்துலயே உனக்கும் குழி தோண்டி வைக்கிறேன்.. சீக்கிரம் வந்து சேரும் வழியை பாரு... ஏனா என் சாவுக்கு எல்லோரும் வருத்தப்படுவாங்க.. ஆனா உன் சாவால சிலர் சந்தோசப்படுவாங்க.." என்றவர் முத்து தன்னை கொலைவெறியோடு முறைப்பதை கண்டு சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.

சக்தி தன் ஸ்டேசனிலிருந்து வெளியே வந்தாள். அவள் எதிரே வந்து நின்றான் மகேஷ்.

"உனக்கு என்னதான்யா பிரச்சனை.. எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி என்னை சுத்தி வர..?" என நக்கலாக கேட்டாள் சக்தி.

"எனது அருமை பொண்டாட்டியை வீட்டுக்கு கூட்டிப்போக நான் வந்திருக்கேன்.." என்றவன் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான்.

"செம அழகா இருக்க.." என்றவன் அவளை பார்வையால் கொன்றான்.

"போதும்.. நீ இப்படியே பார்த்தா உன் பார்வையாலயே நான் உருகி போயிடுவேன்.. வீட்டுக்கு போகலாம்.." என்றவள் தன் வாகனத்தை விட்டுவிட்டு மகேஷின் காரில் ஏறினாள்.

மகேஷ் அவளை பார்த்தபடியே வாகனத்தை செலுத்தினான்.

"கொஞ்சம் நேரா பார்த்து ஓட்டு.. எனக்கு அல்பாயுசுல போய் சேர ஆசை இல்ல.." என்றாள் சக்தி கோபத்தோடு.

மகேஷ் சிரித்தபடியே பார்வையை ரோட்டுக்கு திருப்பினான். "அந்த காலன் உன்னை நெருங்கனும்ன்னா அதுக்கு முதல்ல என்னை தாண்டி வரணும்.. உன் உசுருக்கு சொந்தகாரன் நான்தான்.. அப்படி இருக்கும் போது யார் அதை என்கிட்டயிருந்து எடுக்க முடியும்..?"

சக்தி ஜன்னல் கண்ணாடியில் தலையை சாய்த்தவாறு அவனை பார்த்தாள். "நல்லா பேச கத்துக்கட்ட நீ.. இந்த பேச்சுக்குதான் இந்த அப்பாவி சக்தி விழுந்துட்டேன்.."

மகேஷ் கலகலவென சிரித்தான். "நீ அப்பாவியா..? நானாவது பேசிதான் உன்னை கரெக்ட் பண்ணேன்.. ஆனா நீ என்னை உன் பார்வையாலயே கவுத்துட்டியே.. உண்மையில் இங்கே நான்தான் அப்பாவி.."

சக்தி தனக்குள் சிரித்துக் கொண்டாள். 'இவன் ஒரு சிலந்தி வலை.. உள்ளே சிக்கின பூச்சி நான்தான்..' என நினைத்துக் கொண்டவள் மகேஷ் காரை நிறுத்தியதும் கீழே இறங்கினாள்.

"மேடம் ஏன் பதில் பேசல.. ஒருவேளை உண்மையை சத்தமா சொல்ல வெட்கப்படுறிங்களா..?" என கேட்டுக் கொண்டே அவளோடு இணைந்து நடந்தான் மகேஷ்.

வீட்டிலிருந்து வெளியே வந்த பொன்னி இவர்கள் இருவரும் சிரிப்பு நிறைந்த முகத்தோடு ஒன்றாக வருவது கண்டு மனம் மகிழ்ந்தாள்.

மகேஷும் சக்தியும் அம்மாவின் முக மகிழ்ச்சியை கண்டே அவளின் அகத்தில் உள்ள நிம்மதியை தெரிந்துக் கொண்டனர். மகேஷ்க்கு சந்தோசம் இரு மடங்கானது. ஆனால் சக்திக்கு பொய் கல்யாணத்தால் அன்னையை ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணர்வாக இருந்தது.

"வாசல்ல என்ன படமா காட்டுறாங்க.. வழியை விட்டு தள்ளி நில்லுங்க.." என பின்னாலிலிருந்து முத்து கர்ஜனை குரலில் சொல்லவும் இருவரும் வேண்டா வெறுப்பாக வழியிலிருந்து விலகி நின்றனர்.
முத்து தன் மனைவியை பார்த்தார். அவள் இவரை அழையா வீட்டின் விருந்தாளியை போல ஆச்சரியமாக பார்த்தாள்.

"என்னடி அப்படி காணததை கண்டது போல வாயை திறந்து பார்த்துட்டு இருக்க..? உள்ளே போய் சூடா காப்பி போட்டு கொண்டு வா.." என்றவர் அங்கிருந்த மூவரையும் முறைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.
செல்வா தனது அலுவலக அறையில் அமர்ந்து தன் கையிலிருந்த ஒரு பைலில் தனது முழு கவனத்தையும் செலுத்தியபடி அமர்ந்திருந்தான்.

"மாமா.." கதவை தட்டியவாறே அழைத்தான் இனியன்.

செல்வா நிமிர்ந்து பார்த்ததும் ஆச்சரியத்தோடு பைலை மேஜைமீது வைத்தான்.

"வா.. இனியா.. என்ன அதிசயமா ஆபிஸ் வரைக்கும் வந்திருக்க..? குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லட்டா..?" என்றான்

"அதெல்லாம் ஏதும் வேண்டாம் மாமா.. நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்.." என்றபடி உள்ளே வந்து அமர்ந்தான் அவன்.

தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவனை கண்கள் சுருக்கி பார்த்தான் செல்வா.

"என்ன விசயம்..?"

"எங்க காலேஜ் டூருக்கு நான் போகல மாமா.." என்றவனிடம் தன் கையை நீட்டினான் செல்வா.

"நல்லது அந்த காசையாவது கொடு.. வேற ஏதாவது உருப்படியான செலவு செய்யலாம்.."

இனியன் அவனை விசித்திரமாக பார்த்தான்.

"என்னடா மாமன் இவ்வளவு அல்பமா இருக்கேன்னு நினைக்கிறியா..? சின்ன பசங்ககிட்ட காசு இருந்தா கெட்டு போயிடுவாங்க.. அதான் அந்த காசை திருப்பி கேட்கறேன்.." என விளக்கம் தந்தான் செல்வா.

"எனக்கு அந்த காசு வேணும் மாமா.. என் பிரெண்டோட அண்ணாவுக்கு கொல்கத்தாவுல கல்யாணம்.. நான் அதுக்கு வரதா சொல்லியிருக்கேன்.. எனக்கு இந்த பணமும் பத்து நாள் சுதந்திரமும் வேணும்.." என்றான் மேஜையில் இருந்த பூ ஜாடியிலிருந்த பூவை கிள்ளியபடியே.

அவனது கையை பட்டென தட்டி விட்டான் செல்வா. "அந்த பூவை ரியா எனக்கு ஆசையா பிரெசன்ட் பண்ணியிருக்கா.. அதை பறிக்காத.." என்றவன் தன் சேரில் சாய்ந்து அமர்ந்தபடி அவனை பார்த்தான்.

"பத்து நாள் விடுதலை கேட்டிருக்கியே.. நான் என்ன உன்னை ஜெயில் கஸ்டடியில் வச்சிருக்கா மாதிரி தோணுதா..?" என்றான்.

இனியன் தரையை பார்த்தான்.

"எல்லாரும் வருசா வருசம் எங்கே எங்கேயோ போறாங்க.. ஆனா நான் மட்டும் இந்த ஆக்ராவை விட்டு தாண்டியது கூட இல்ல.. எனக்கும் நாலு இடம் பார்த்து வரணும்ங்கற ஆசை இருக்காதா..? அதுவும் இல்லாம என்பிரெண்டுக்கிட்ட நான் வாக்கு தந்துட்டேன், அவங்க அண்ணாவோட கல்யாணத்துல கலந்துக்கறதா.."

"நீ பொய் ஏதும் சொல்லிட்டு உங்கப்பனை ரகசியமாக பார்க்க ஊருக்கு போகலதானே..?" சந்தேகமாக கேட்டான் செல்வா.

இனியன் இல்லையென மறுத்து தலையசைத்தான். "நான் ஏன் அவசரப்படப்போறேன் மாமா.. நீங்க ஏற்கனவே சொல்லி இருக்கிங்களே.. என் அப்பாவுக்கு என்னை பத்தி தெரிஞ்சதும் என் ரேஞ்சே வேறன்னு.. நீங்களே என்னை எங்கேயும் வெளியே அனுப்ப மாட்டேங்கிறிங்க.. நான் அவர் கஷ்டடிக்கு போயிட்டா அவர் என்னை வெளியே ரோட்டுக்கு கூட அனுப்ப மாட்டாருன்னு நினைக்கிறேன்.. அதுக்குள்ள அட்லீஸ்ட் அந்த ஒரு கல்யாணத்தையாவது நான் பார்த்துட்டு வந்திடுறேனே.. இந்த மாதிரி ஒரு வட இந்திய திருமணத்துல கலந்துக்கனும்ன்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை மாமா.. அதுவுமில்லாம என் பிரெண்ட் நான் வரலன்னா கோவிச்சிப்பாங்க.."

அவன் சொன்னதை கேட்டு சந்தேகம் தெளிந்தான் செல்வா.

"சரி கல்யாணத்துக்கு போய்ட்டுதான் வா.." என செல்வா சொன்னதும் சந்தோசத்தோடு எழுந்தான் இனியன்.

"தேங்க்ஸ் மாமா.. எங்க அப்பா என்னை வந்து கூட்டி போகும் போது நீங்க என் மேல வச்சிருக்கும் கேரிங் அன்ட் லவ்வை பத்தியும் மறக்காம அவர்க்கிட்ட சொல்றேன்.." என்றவன் கதவை நோக்கி நடந்தான்.

"இனியா..?"

இனியன் கதவருகே நின்றபடி திரும்பி பார்த்தான்.

"என்ன மாமா..?"

"அந்த பிரெண்ட் ஒரு பொண்ணா என்ன..? இவ்வளவு ஆர்வமா இருக்கியே கல்யாணத்துக்கு போக.."

இனியன் வெட்கத்தோடு தலை குனிந்தான்.

"ஆமா மாமா.. நல்ல பொண்ணு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அவளுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியல.. இந்த பத்து நாளுல அவ மனசுல இருப்பதையும் தெரிஞ்சிப்பேன்.." என்றவன் வெட்கத்தோடே அங்கிருந்து கிளம்பினான்.

"லவ்வுல அப்படியே அவங்க அப்பனை மாதிரி.." என்ற செல்வா தனது வேலைகளை பார்க்க தொடங்கினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN