நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

48. இன்னிசையே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலை பொழுது அழகாய் விடிந்து கொண்டிருந்தது. கதிர் தன் பைக்கை மலை பாதையை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தான். கிழக்கில் இருந்து வந்த சூரியனின் கதிர்கள் அவனது முகத்திற்கு தங்க முலாம் பூசியது.

மலையின் உச்சிக்கு சென்ற பிறகு பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் கதிர். மலையின் ஓரமாக ஒரு ஒத்தையடி பாதை சென்றது. அதில் இறங்கி நடந்தான். விரைவிலேயே பெரிய பாறை ஒன்றின் அருகே வந்து சேர்ந்தான். பெரிய பாறையின் ஓரம் இருந்த சிறு பாறை மீது ஏறியவன் முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்தான்.

காட்டின் வாசம், பறவைகளின் கானம், கண்ணிற்கு குளிர்ச்சி தரும் பசும் மரங்கள் என இயற்கையில் தன்னை கரைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

அவனுக்கு மைவிழி மீது கோபம் தீரவேயில்லை. நான்கு நாட்களாக எத்தனையோ முறை போனில் பேசியிருக்கிறாள். ஒருமுறையேனும் தான் எங்கு இருக்கிறோம் என சொல்ல தோன்றவிலலையே அவளுக்கு என எண்ணி இன்னும் கோபமடைந்தான்.

'இப்பவே இப்படி பொய் சொல்றா.. முதுகுக்கு பின்னாடி ஏமாத்தறா.. இவ மட்டும் நல்லவன்னு எப்படி நம்பி ஏமாந்தேன் நான்.? எல்லா பொண்ணுங்களும் ஒன்னு போலதான்.. இவ என் தேவதைன்னு நம்பியதுக்கு என்னை நானே செருப்ப கொண்டு அடிச்சிக்கணும்..' யோசித்தவன் கோபத்தை அடக்க முடியாமல் பற்களை கடித்தான்.

பாறையை சுற்றியிருந்த மரங்கள் மென்மையாக காற்றை வீசின. ஊருக்கு வரும் மகிழ்ச்சியில் விடிய விடிய கண் விழித்திருந்தவன் பாறை மீது தலையை சாய்த்தான். தலை சாய்ந்த சில நிமிடங்களிலேயே உறங்க ஆரம்பித்து விட்டான்.

மைவிழி வீட்டில் மயங்கி கிடந்தாள். அவளது இந்த நிலையை யாரும் அறியவில்லை.
கல்லூரி வந்த சந்தர் வழக்கம் போல மைவிழியை தேடினான். அவளது ஸ்கூட்டி நிற்கும் இடம் இன்று காலியாக கிடந்தது.

'இவ ஏன் இன்னும் வரல..?' யோசனையோடு செழியனை தேடி சென்றான்.

"செழியா மைவிழி ஏன் காலேஜ் வரல..?"

சந்தர் கேட்ட பிறகுதான் அவனுக்கும் மைவிழி கல்லூரி வராததே தெரிந்தது.

"தெரியல சந்தர்.. இன்னைக்கு கதிர் ஊருல இருந்து வரதா விஷ்வா விஷ்வா சொன்னான்.. அதான் மேடம் புருசனை வரவேற்க கலேஜ்க்கு லீவு போட்டுட்டாங்க போல.." என்றான்.

சந்தரும் புரிந்தவனாக சிரிப்போடு தலையை அசைத்தான்.

ருத்ரா தயாராகி ஹாலுக்கு வந்தபோது அம்மா அவளை புரியாமல் பார்த்தாள்.

"எங்க கிளம்பிட்ட..?"

"நான் அந்த வீட்டுக்கு போறேன்ம்மா.. நாத்தனார் குழந்தை கண்ணுக்குள்ளயே இருக்கு.. மைவிழியும் அவங்க வீட்டுக்கு போயிட்டா.. இங்கே போரடிக்கும்.. நான் அங்கே போனாலாவது நல்லா டைம் பாஸ் ஆகும்.."

"மைவிழி இங்கிருந்து போயிட்டாளா..? என்கிட்ட கூட சொல்லாம போயிட்டாளே..?" அம்மா மன வருத்தத்தோடு கேட்டாள்.

"கதிர் வீட்டுக்கு வந்துட்டானாம் அம்மா.. அதனாலதான் இவ யாருக்கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஓடிட்டா.. உங்க மகன் புத்திதான் உங்களுக்கே தெரியுமே.. சுத்த மோசமான ஒரு கேரக்டர்.." என்றாள்.

"அவன் என் மேல இருக்கற கோபத்துல மைவிழியை திட்டி வைக்காம இருந்தா சரிதான்.." அம்மா யோசனையோடு பெருமூச்சு விட்டாள்.

"நான் கிளம்பறேன்ம்மா.. வீட்டுக்கு போய் சேர்ந்ததும் ஃபோன் பண்றேன்.." என்றவள் புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள்.

மதுபாலன் அன்றைய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தான். மொத்த வகுப்பறையும் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தது. பாடம் நடத்தியபடியே வகுப்பு முழுவதிற்கும் பார்வை ஒன்றை ஓட விட்டவன் ஏதோ ஒன்று குறைவதை உணர்ந்தான். மீண்டும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான். மைவிழி வகுப்பில் இல்லை. எப்போதும் தன் ஆர்வ கோளாறை அடக்க முடியாமல் பாடம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் பத்து கேள்விகளை கேட்பவள் இன்று இல்லாதது ஒரு பெரிய குறையாக தோன்றியது மதுபாலனுக்கு.

"செழியன்.. மைவிழி ஏன் கிளாஸ்ல இல்ல..?"

"அவ இன்னைக்கு லீவ் ஸார்.." என்ற செழியன் அவள் லீவுக்கான காரணத்தை சொல்லாமலேயே இருந்துக் கொண்டான்.

கதிர் நான்கு நாட்களாக வீட்டில் இல்லை. அதனால் மைவிழி தன் மாமியார் வீடு சென்று விட்டதாக அவளே இவனிடம் சொல்லியிருக்கிறாள். மாமியார் வீடு சென்றவள் எதற்காக இன்று விடுப்பு எடுத்துக் கொண்டாள் என்பதைதான் அவனால் யூகிக்க முடியவில்லை.

விடியற்காலையில் பக்கத்து வீட்டிலிருந்து ஏதேதோ சத்தம் வந்ததை அறிந்தவன் அதற்கும் மைவிழியின் விடுப்புக்கான காரணத்தை பொருத்தி பார்க்க தவறிவிட்டான். அவள் மாமியார் வீட்டில் இருப்பதால் ஏதோ எலிதான் அந்த வீட்டில் உருட்டுகிறது போல என எண்ணி குப்புற படுத்து உறங்கியவன் கதிரின் கை வண்ணத்தை எப்படி அறிவான்..?

நடுப்பகல் கடந்து விட்டது. மைவிழி தான் விழுந்த இடத்திலேயே இன்னும் இருந்தாள். அனலாக கொதித்த காய்ச்சல் காரணமாக முனகியபடியே மயங்கி கிடந்தாள்.

கதிர் கன்னத்தில் நெருப்பு சுட்டதை போல உணர்ந்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தான். சூரியன் நடு உச்சியை தாண்டி விட்டிருந்தது. அவன் படுத்திருந்த இடத்திலிருந்த நிழலை மரங்கள் வேறு திசைக்கு திருப்பிக் கொண்டன. வெயிலில் காய பிடிக்காமல் எழுந்து நின்றான். கையை நீட்டி நெட்டி முறித்தான்.

'என்ன ஒரு அருமையான தூக்கம்..' கொட்டாவி விட்டவன் அப்போதுதான் தான் ஏன் இங்கு வந்து உறங்கினோம் என்பதை நினைத்து பார்த்தான்.‌ உடனடியாக மைவிழி மேல் கோபம் வந்தது.

''துரோகி.." என அவன் அவளை திட்டிய நேரத்தில் அவனது வயிறு பசி என்று கத்தியது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என தன்னை தானே சலித்து கொண்டு பாறை மீது இருந்து கீழே இறங்கினான். பாறையின் ஓரத்தில் ஓடிய சிறு ஓடையில் முகம் கழுவிக் கொண்டான். "இப்பதான் தூக்கமே தெளிஞ்ச மாதிரி இருக்கு.."

பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவன் பைக்கை மலையின் கீழே செல்ல கிளப்பினான்.
அழகு சாதன பொருட்கள் விற்கும் கடையிலிருந்து வெளியே வந்தாள் பாலா. அடுத்து எந்த கடைக்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிரிலிருந்த ஹோட்டல் ஒன்றுக்குள் கதிர் நுழைவதை கண்டு பாலாவும் அந்த திசையில் நடந்தாள்.

"புல் மீல்ஸ் கொண்டு வாங்க.. கூடவே புளிக் குழம்பும் கொண்டு வாங்க.." என்ற கதிர் எதிரிலிருந்த தண்ணீரை எடுத்து தாகம் தீர குடித்தான்.

"கதிர் இங்கே என்ன பண்ற..?" ஆச்சரிய குரலில் கேட்டுக் கொண்டே அவன் முன்னால் அமர்ந்தாள் பாலா.
"சாப்பிட வந்திருக்கேன் பாலா.." என்றவன் தயக்கமாக "ஃபோன்ல அன்னைக்கு எதுக்கு அப்படி சொன்ன..?" என்றான்.

தன் வீட்டில் நடந்த உரையாடலை ருத்ரா தன் தம்பியிடம் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டாள் பாலா.

தன் காதோரம் இருந்த கூந்தலை விரலால் சுற்றிக் கொண்டே அவனை பார்த்தாள். "என் ஹஸ்பண்ட் மேல் நான் உயிரையே வச்சிருக்கேன் கதிர்‌.. ஆனா அவர் இப்படி என்னை பாதியிலேயே விட்டுட்டு போனது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அன்னைக்கு காலையில் ரொம்ப மனசு உடைஞ்சிடுச்சி.. அதான் அப்படி ஃபோன் பண்ணிட்டேன்.. ஸாரி.." என்றாள் தரையை பார்த்தபடி.

"ஸாரியெல்லாம் வேண்டாம்.. இன்னொரு முறை இப்படி முட்டாள்தனமா எதையும் யோசிக்காம இரு அதுவே போதும்.."

"அப்படின்னா நீ இன்னும் என்னை விரும்புறியா கதிர்..?" அவளது ஒற்றை கேள்வி அவனுக்கு ஏனோ குமட்டலை தந்தது.

"அப்படிலாம் இல்ல பாலா.." என்றவனின் முன்னால் உணவு வைக்கப்பட்டது.

"நீயும் சாப்பிடுறியா..?" என கேட்டவனிடம் வேண்டாமென மறுத்தவளின் இதயம் சுக்கல் நூறாக உடைந்துக் கொண்டிருந்தது.

'கதிர் என்னை விரும்பலையா..?' என தனக்கு தானே அதிர்ச்சியோடு கேட்டு கொண்டவள் எழுந்து நின்றாள். "எனக்கு வேலை கொஞ்சம் இருக்கு.. நான் கிளம்பறேன் கதிர்.." என்றவள் அவனின் பதிலை கூட எதிர்பாராமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் ஏன் வந்தாள் எதற்கு இப்படி உடனடியாக கிளம்பினாள் என்பது எதுவும் புரியாமல் சாப்பிட ஆரம்பித்தான் கதிர். புளிக் குழம்பு சாப்பிடுகையில் மைவிழி நினைவுக்கு வந்தாள். அவளது நினைவை வலுக்கட்டாயமாக தள்ளி வைத்து விட்டு சாப்பிட்டான்.

மதுபாலன் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தான். தன் வீட்டு கேட்டை திறக்க முயன்றவன் மைவிழி வீட்டின் கேட் திறந்திருப்பதை கண்டான். 'மைவிழி வந்துட்டா போல..' என நினைத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

"மிதுன் என்ன பண்ணி வச்சிருக்க..?" சுவற்றில் பென்சிலால் ஏதேதோ வரைந்துக் கொண்டிருந்த மிதுன் தன் அம்மாவின் குரல் கேட்டு துள்ளி விழுந்தான். அம்மா இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைத்தாள்.

"இதை வீட்டு சுவருன்னு நினைச்சியா இல்ல உன் டிராயிங் நோட்டுன்னு நினைச்சியா..?" அம்மா கேட்டுக் கொண்டே அவனை அடிக்க ஏதாவது சிக்குகிறதா என தேடினாள். அவள் பிரம்பை தேடி எடுப்பதற்குள் தன் வீட்டிலிருந்து ரோட்டுக்கு ஓடி வந்து விட்டான் மிதுன்.

"மிதுன் இங்கே வா.. அம்மா அடிக்க மாட்டேன்.." என்றாள்.

மாட்டேன் என தலையசைத்த மிதுனுக்கு தெரியும் அம்மா சொன்ன வார்த்தை பொய்யென.
அம்மா அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாள். அவன் அவளுக்கு பழிப்பு காட்டியவன் அருகில் மைவிழியின் வீட்டு கேட் திறந்திருப்பதை கண்டு உள்ளே ஓடினான்.

வீட்டின் கதவை தட்டினான். "கதவை திறங்க அக்கா.. எங்க அம்மா என்னை அடிக்க வராங்க.." என கத்தியவன் திரும்பி அம்மா வருகிறாளா என பார்த்தான். ஆனால் அவள் வரவில்லை. "அப்பாடா.." என்றபடியே கதவின் மீது சாய்ந்தான். அவன் சாயவும் கதவும் நகர்ந்தது.

அந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் காலில் நறுக்கென குத்தியது ஒரு கண்ணாடி துகள். "அம்மா.." என்றபடி காலை பிடித்து தன் பாதம் பார்த்தான். ரத்தம் கசிந்தது. காயம் பட்ட பாதம் எரிந்தது. கண்ணில் நீர் தளும்ப நிமிர்ந்தவன் அந்த வீட்டின் கோரத்தை கண்டு பயந்து விட்டான்.

உடைந்து கிடந்த பொருட்களும் மயங்கி கிடந்த மைவிழியும் அவனது சிறு மூளைக்கு அதிகப்பட்ச பயத்தை தந்து விட்டன.

காலின் காயத்தை பொருட்படுத்தாமல் வெளியே ஓடினான். தன் வீட்டை நோக்கி ஓடியவன் அம்மாவின் கையில் இருக்கும் பிரம்பு நினைவிற்கு வந்ததும் பாதியிலேயே நின்றான். ஒரு நொடி நின்று யோசித்தவன் அருகிலிருந்த மதுபாலன் வீட்டிற்குள் நுழைந்தான்.

"அங்கிள்.. அங்கிள்..." அவன் கதவு தட்டிய சத்தம் கேட்டு கதவை திறந்தான் மதுபாலன்.

"மைவிழி அக்கா வீட்டுல என்னவோ ஆயிடுச்சி.. அந்த அக்கா மயங்கி கிடக்கறாங்க.. ஒருவேளை செத்துட்டாங்களோ.. நான் சரியா பார்க்கவே இல்ல.." அவன் குழப்பத்தோடு சொன்னான். ஆனால் அவன் சொல்ல வந்த விசயத்தை உடனடியாக புரிந்து கொண்டான் மதுபாலன்.

கதிர் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தான். அவனுக்கு வீட்டிற்கு வரவே துளியும் விருப்பம் இல்லை. ஆனால் இந்த வீட்டை தவிரவும் அவனுக்கு போக வேறு இடம் இல்லை எனும் காரணத்தால் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

பாதியாக திறந்திருந்த வீட்டின் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவன் ஓரடி எடுத்து வைத்ததும் நின்று விட்டான். தான் செய்த அலங்கோலம் அவன் கண்களில் படவே இல்லை. மதுபாலன் மைவிழியை நெஞ்சில் சாய்த்து வைத்தபடி ஸோபாவில் அமர்ந்திருந்ததுதான் அவனை சிலையாக நிற்க வைத்தது.

அவனுக்கு ஏற்கனவே மதுபாலனை துளியும் பிடிக்காது. அப்படி இருக்கையில் அவன் மார்பில் மைவிழி தலை வைத்திருப்பதை கண்டால் எப்படி இருக்கும்.?

"என்ன கருமம்டா இது..? மரியாதையா இந்த வீட்டை விட்டு வெளியே போங்க மதுபாலன்.." அவன் மேலும் தன் திருவாயால் நல் வார்த்தைகளை கூறும் முன் அவர்கள் வீட்டின் கிச்சனிலிருந்து வெளியே வந்தாள் இளவரசி. அவளது புடவையை பிடித்தபடி அவளுக்கு பின்னால் மறைந்து நின்றபடி கதிரை எட்டி பார்த்தான் மிதுன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top