நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி சொன்னதை கேட்டு மகேஷ் வாயடைத்து நின்று விட்டான்.

'எங்க குழந்தை இப்போ பூமியில இல்லாம போதுக்கு நான்தான் காரணம்.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி தெரிஞ்ச என்னாலயே அந்த கஷ்டத்தை தாங்க முடியல.. இத்தனை வருசமா மனசுக்குள்ள பூட்டி வச்சி அழுறவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்..' அவன் வேதனையோடு நினைத்தான்.
சக்தி அவனை தாண்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள். மகேஷ் அவளை தடுக்க முயலவில்லை.

அந்த நாள் முடிந்த மறு நாளில் கூட சக்தியும் மகேஷும் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை.
'பைத்தியகாரன்.. அவங்க அப்பாவை நான் மயக்க டிரை பண்ண மாதிரி இல்ல என்னை பார்த்து அப்படி கேட்டு வச்சிட்டான்..' சக்திக்கு மனதுக்குள் ஆத்திரமாக வந்தது அவன் கூறிய வார்த்தைகளை நினைத்து.

'அவளுக்கு இன்னமும் என்னோடு வாழ ஆசைதான்.. இல்லன்னா குழந்தை பெத்துக்கணும்ங்கற ஆசையையும் அந்த குழந்தையை எங்க அப்பா எதுவும் செஞ்சிட கூடாதுங்கற பயத்தையும் என்கிட்ட சொல்வாளா..?' மகேஷ் தனக்குள் நினைத்து ஆர்வ கோளாறாக மாறிக் கொண்டிருந்தான்.

அன்றைய நாளில் பணி முடிந்து வீடு திரும்பியவள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு தோட்டத்தில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

"சக்தி..'' மகேஷ் தோட்டத்துக்குள் நுழைந்தபடியே அவளை அழைத்தான்.

"என்ன..?" என்றாள் திரும்பி பார்த்து.

"நான் டாக்டர்ஸ்க்கிட்ட கூட விசாரிச்சிட்டேன்.." என்றவனை புரியாமல் பார்த்தாள் சக்தி.

"என்ன விசாரிச்ச..?"

"இந்த வயசுலயும் நம்மால் ஆரோக்கியமா குழந்தை பெத்துக்க முடியுமாம்.." அவன் சொன்னதை கேட்டு இன்னும் குழம்பி போனாள் அவள்.

"என்ன உளறுற..? நாம ஏன் குழந்தை பெத்துக்கணும்..?" என்றாள்.

"நீதானே சொன்ன உனக்கு குழந்தை பெத்துக்க ஆசைன்னு.." அவன் சொன்ன பிறகும் பத்து நொடிகளுக்கு யோசித்தபிறகே அவளுக்கு அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு உரையாடிக் கொண்டது நினைவிற்கு வந்தது.

மானசீகமாக நெற்றியில் அறைந்த படி அவனை பார்த்தாள். 'என் ஆளுதான் எம்புட்டு அறிவாளி..? பைத்தியகாரன்.. நான் இனியனை மனசுல வச்சி சொன்னேன்.. இவன் இதுக்கு மேல பிறக்க போற குழந்தையை பத்தி யோசிச்சிருக்கான்.. இனியனை பத்தியும் இவன்கிட்ட சொல்ல முடியாது.. இவனோட இந்த அதிமேதாவி புத்தியையும் என்னால சமாளிக்க முடியாது.. எருமை மாடு.. எந்த டாக்டர்க்கிட்ட போய் இப்படிபட்ட சந்தேகத்தை கேட்டு என் மானத்தையும் சேர்த்து வாங்கி வச்சிட்டு வந்துச்சோ.. இவனை இவன் ரூட்டுலயே போய்தான் புரிய வைக்கணும்..'

"குழந்தை பெத்துகறது இருக்கட்டும்.. முதல்ல உன் அப்பாக்கிட்ட சம்மதம் வாங்கிட்டியா.. ஏனா நான் பாட்டுக்கு இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை பெத்து தருவோம்ன்னு ஆசைப்பட்டு குழந்தையை பெத்த பிறகு உங்க அப்பா என்னை ஏத்துக்க முடியாத கொடுமைக்கு அந்த குழந்தையை ஏதாவது செஞ்சிட்டா நான் என்ன பண்றது..?"

"என்னால் உன்னையும் நமக்கு பிறக்க போற குழந்தையையும் காப்பாத்த முடியும் சக்தி.. என்னை நம்பு.. ப்ளீஸ்.. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு.."

தன்முன் நின்று கெஞ்சிக்கொண்டிருந்தவனை கண்டு பரிதாபப்பட்டாள் சக்தி.

'காலம் மாறிட்டுச்சி.. இதுக்கு மேலயும் இவங்க அப்பாவால் என்ன செஞ்சிட முடியும்..? நமக்கு ஒரு பையன் இருக்கான்னு இவன்கிட்ட சொன்னா இவன் எவ்வளவு சந்தோசப்படுவான்..!? நான் ஏன் என் வீண்பயத்தால் இனியனுக்கு கிடைக்க வேண்டிய பாசத்தை தடுத்து வச்சிருக்கேன்..?' என நினைத்தவள் "இனி.." என்று ஆரம்பித்து அப்படியே சிலையாகி விட்டாள். அவள் கன் முன் கத்தி ஒன்று காற்றில் பறந்து வந்தது.

எங்கிருந்தோ ஒரு கூரிய கத்தி அவளின் கழுத்தை நோக்கிதான் பாய்ந்து வந்தது. சக்தி ஒரு நொடி திகைத்து நின்று விட்டாள். ஆனால் மறு நொடியே சுதாரித்து கத்தியின் பாதையை விட்டு விலக முயற்சித்தாள்.

ஆனாலும் கத்தி அவளது கழுத்தின் ஒரு ஓரத்தில் கீறி சென்றது. "அம்மா.." கத்தியபடியே தன் கழுத்தில் கையை வைத்தாள். அவளது கையின் அழுத்தத்தை மீறி ரத்தம் கொட்டியது. நொடியில் அவளது மொத்த உடையும் செக்க செவேலென ரத்த கரையாகி விட்டது.

மகேஷ் எங்கிருந்து கத்தி வந்திருக்கும் என்று சுற்றிலும் பார்த்தான். வீட்டின் காம்பவுண்ட் சுவற்றின் மீதிருந்து ஒருவன் அந்த பக்கம் குதிப்பது கண்ணில் பட்டது. அவனை பிடிக்க செல்லலாம் என முயன்றவனை சக்தியின் குரல் தடுத்து நிறுத்தியது.

"மகேஷ் எனக்கு மயக்கம் வர.." வார்த்தைகளை முடிக்காமலேயே தரையில் சாய்ந்தாள்.

"சக்தி.." அவளை தாங்கி பிடித்தவன் அவளது கன்னத்தில் தட்டினான். "சக்தி... கண்ணை திறந்து பாரு.." ஆனால் அவள் கண்களை திறக்கவே இல்லை.

"அம்மா.. அம்மா.. சந்தியா.. வீரய்யா.." உரத்த குரலில் கத்தினான். அவளது கழுத்து பகுதியில் ரத்தம் கொட்டாமல் இருக்க தன் கையை வைத்து அழுத்தி பிடித்தான். ஆனால் அவனது கையை தாண்டி ரத்தம் வழிய ஆரம்பித்த பிறகு சக்தியின் ஆபத்தான நிலையை புரிந்துக் கொண்டான்.

"அம்மா.. அம்மா.."

"மகேஷ்.." என்றபடி அங்கு முதலில் வந்து சேர்ந்தது மூர்த்திதான். சக்தியின் நிலை கண்டவன் அதிர்ச்சி அடைந்தாலும் நொடியில் சுதாரித்து அருகில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சந்தியாவின் துப்பட்டா ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான்.

"இந்தா இதை வச்சி ரத்தம் வரதை நிறுத்து.." என்றவன் துப்பட்டாவை அவனிடம் தந்துவிட்டு தன் போனை எடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பொன்னியும் சந்தியாவும் சக்தியை கண்டு அதிர்ந்தனர்.

"அத்தை.." சந்தியா அவள் அருகே அமர்ந்து அவளை அழைத்தாள். சந்தியா கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது.

"கடவுளே என் மருமளுக்கு எதுவும் ஆகிடாம பார்த்துக்கப்பா.." கண்ணீரோடு வேண்டினாள் பொன்னி.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. மகேஷ் சக்தியோடு ஆம்புலன்ஸில் ஏறினான். செவிலியர் அவளுக்கு முதல் உதவி செய்வதை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாலை நேரம்.. தொடர்வண்டி ஸ்டேசனில் நின்றது. இனியன் கருப்பு கண்ணாடி ஒன்றை மாட்டியபடி அந்த இரயில்வே ஸ்டேசன் தரையில் காலை வைத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தான். சரியான இடத்தில்தான் இறங்கியுள்ளோம் என உறுதி படுத்திக் கொண்டு ஸ்டேசனை விட்டு வெளியே நடந்தான். ஆட்டோகாரர்கள் அவர்களுக்குள் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஆட்டோ ஒன்றின் அருகில் சென்றான். ஆட்டோகாரர் உடனடியாக டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்து அவனை திரும்பி பார்த்தார். "எங்கே ஸார் போகணும்.." என கேட்டு விட்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்.

"அட்ரஸ் எக்ஸாக்டா தெரியாது.. ஆனா நான் தேடி வந்தவனோட பேரு மகேஷ்.. கட்டபஞ்சாயத்து ரவுடி மகேஷ்வரன்.."

ஆட்டோ பிரேகடித்து நின்றது. ஆட்டோகாரர் அவனை திரும்பி பார்த்தார். "உங்க முக சாயலை வச்சே தெரிஞ்சிக்கிட்டேன் ஸார் நீங்க மகேஷ் அண்ணா சொந்தகாரர்தான்னு.. ஆனா அவன் இவன்ங்கறிங்களே.. அவ்வளவு சொந்தமா உங்களுக்குள்ள..?"

இனியன் தன் முட்டாள்தனத்தை நொந்துக் கொண்டான். "அது வாய் தவறி வந்துடுச்சி.. அவரும் நானும் தூரத்து சொந்தம்.. அவர் எங்க வீட்டுக்கு வந்திருக்காரே தவிர அவர் வீட்டுக்கு நான் வந்தது இல்ல.. ஸ்டேசன்ல இறங்கிய பின்னாடி அட்ரஸ் கேட்டுக்கலாம்ன்னு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள என் போன் பேட்டரி டெட் ஆயிடுச்சி.."

ஆட்டோகாரர் புரிந்துக் கொண்டவராக தலையசைத்து விட்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்.

'ஆட்டோகாரரே என்னை மகேஷ்க்கு சொந்தகாரன்னு நினைச்சிட்டாரு.. நான் இதே முகத்தோடு அவன் எதிர்ல போய் நின்னா அது முட்டாள்தனமாயிடும்..' என நினைத்தவன் போகும் வழியில் ஆட்டோவை நிறுத்தி அருகிருந்த கடையில் நுழைந்தான். ஒரு தொப்பியையும் ஒரு கர்ச்சீப்பையும் வாங்கிக் கொண்டு ஆட்டோவிற்கு திரும்பி வந்தான்.

"மகேஷை எல்லோரும் கெட்டவர்ன்னு சொல்றாங்களே.." என்றான் இனியன் சாதாரணமாக பேச்சு கொடுத்தபடி.

"அப்படிலாம் இல்ல ஸார்.. அவர் எல்லோருக்கும் நிறைய உதவி பண்ணியிருக்காரு.. ஆனா அவர் செய்ற உதவி சட்டத்துக்கு புறம்பா இருக்கறதால் அவரை எல்லோரும் கெட்டவராவும் ரவுடியாவும் நினைச்சிக்கிறாங்க.." என்றார் அவர்.

"புரியலையே.."

"ஒருமுறை ஒரு பொண்ணை ஒருத்தன் கையை பிடிச்சி இழுத்துட்டான்.. மகேஷ் அவனோட கையை வெட்டடிட்டு கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தாரு.. அந்த கை வெட்டுபட்டவனுக்கு பெரிய நஷ்டம்தான்.. ஆனா அதுக்கப்புறம் எங்க ஊர்ல எந்த ஆம்பளையும் பொம்பள புள்ளைங்கள தப்பா பார்க்கறது கூட இல்ல.. அவர் சட்டதுக்கு முன்னாடி கெட்டவர்தான்.. ஆனா எங்க ஊர் பொண்ணுங்க முன்னாடி ஹீரோ.. சட்டத்தால செய்ய முடியாததை இவர் செய்வாரு.. அடிக்கடி ஜெயிலுக்கு போய் சட்டத்தோட விருந்தாளியாவும் இருந்துட்டு வருவாரு.."

இனியனுக்கு தன் காதை பெட்ரோல் ஊற்றி கழுவிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 'என்னா பெருமை.. கையை வெட்டியதுக்கு பதிலா அவனுக்கு புத்தி சொல்லி இருக்கலாம்.. இவன் ஏன் சட்டம் செய்ய வேண்டிய வேலையை செய்றான்..? இப்படி ஒரு ரவுடியை எதிரியா வச்சிக்கிட்டு இவ்வளவு நாள் அம்மா போலிஸா தாக்கு பிடிச்சி இருந்ததே பெரிய விசயம்தான்..' என நினைத்தவன் மகேஷை கரித்து கொட்டுவதில் தான் தன் அம்மாவை போலவே என்பதை அறிந்திருக்கவில்லை.

"இந்த ஊர் போலிஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் எப்படி..?" அம்மாவை பற்றி அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்டான்.

"அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு ஸார்.. எனக்கு நாலாம் கால் வழியில் தங்கச்சி முறையாகணும்.. அவளுக்கு இந்த ஊர்ல எந்த தப்பும் நடக்காம பார்த்துக்க ஆசை.. ஆனா என்ன பண்ண.. நல்லவங்க கையில் இருக்கற பதவி ரொம்ப ஆபத்தானதுன்னு.. அவ கெட்டவங்க யாரையாவது பிடிச்சி ஜெயில்ல போட்டா அடுத்த செகண்டே மேலிடத்துல இருந்து போன் வரும்.. இல்லன்னா ஏதாவது ஒரு வக்கீல் ஜாமினோடு வருவாரு.. அந்த கெட்டவனை கோர்ட்டுல நிறுத்தினா அவன் செஞ்ச தப்பை மறைக்க ஆயிரம் சாட்சி ரெடி பண்ணி ஒரே நாளுல அவனை வெளியே கொண்டு வந்துடுவாங்க.. அப்புறம் அவ வீட்டுல உட்கார்ந்து புலம்பிட்டு இருப்பா..''

'எங்க அம்மாவோட ப்ளஸை சொல்லுவான்னு பார்த்தா இப்படி மைனஸை மட்டும் அடுக்குறான்னே..'

"ஆனா சக்தியால முடியாதது மகேஷால முடியும்.. சக்தியோட பிடியிலிருந்து தப்பிக்கறவனுக்கு மறுநாளே நல்ல பாடம் புகட்ட மகேஷால முடியும்.. அவன் தப்பிச்ச அதே சட்டத்தை வச்சி தப்பிக்கவும் முடியும்.. அவர் எங்க ஹீரோ.." ஆட்டோகாரர் சொன்னது அவனுக்கு விஷமென இருந்தது. எரிச்சலாகவும் வந்தது.
'நல்லவனுக்கு ஏது காலம்..? எல்லோரும் கெட்டவனைதானே கொண்டாடுவிங்க..?'

ஆட்டோகாரர் மகேஷ் வீட்டின் அருகில் வாகனத்தை நிறுத்தினார். "இந்த வீடுதான் ஸார்.." என்றவர் அவன் தந்த பணத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

இனியன் தொப்பியை மாட்டிக் கொண்டு கர்ச்சீப்பை கட்டி அரை முகத்தை மறைத்தபடி அந்த வீட்டை நோக்கி நடக்க முதல் அடி எடுத்து வைத்தான். அதே நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து நின்றது.

கதை டிராஜடி கிடையாது.. எனக்கு அழுவாச்சி கதை எழுத சுத்தமா பிடிக்காது.. அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top