நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் ஆம்புலன்ஸை எதார்த்தமாக கவனித்து விட்டு காம்பவுண்டு சுவற்றின் அருகே நின்றான். தன் முகத்தில் இருக்கும் கர்ச்சீப்பை நன்றாக ஒருமுறை இழுத்துக் கட்டிக் கொண்டான்.

தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை ஒருதரம் தொட்டுப் பார்த்துக் கொண்டான். 'என் அம்மாவுக்கு நீங்க பண்ண துரோகத்துக்கு இன்னைக்கு எல்லோரும் எனக்கு பதில் சொல்ல போறிங்க..'

ஆம்புலன்ஸிலிருந்து இறங்கி உள்ளே சென்றவர்கள் ஸ்டெச்சரில் சக்தியை படுக்க வைத்து எடுத்து வர இனியனின் முகத்திலிருந்த ரத்த ஓட்டம் சட்டென நின்று போனது.

"அம்மா.." அவனது குரல் ஆம்புலன்ஸின் சைரன் சத்தத்தில் அமிழ்ந்து போனது.

'அம்மாவுக்கு என்ன ஆச்சி..?' அவன் புலம்பிக் கொண்டு ஆம்புலன்ஸ் அருகே செல்ல முயன்றான். ஆனால் ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தில் அங்கு சட்டென கூடி விட்ட கூட்டம் அவனது பாதையை தடுத்து விட்டது.
சக்தியோடு மகேஷும் ஆம்புலன்ஸில் ஏறினான். அவனை கண்டதும் இனியனின் ரத்தம் கொதித்தது. நொடியில் சக்தியின் நிலையை கூட மறந்து விட்டான். அவன் மகேஷ் மேல் அவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தான். தன் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை அவன் கையில் எடுக்க முயலும் முன்பே அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து விர்ரென சென்று விட்டது.

"என்னம்மா ஆச்சி..?" கூட்டத்திலிருந்த ஒருவன் வாசலுக்கு வந்த சந்தியாவிடம் கேட்டான்.

"அத்தையை யாரோ கத்தியால குத்திட்டாங்க.." என்றவள் ஆறாக கண்ணீர் வடித்தாள்.

"கார்ல வந்து ஏறும்மா.." என்றான் காரை ஓட்டி வந்த மூர்த்தி. சந்தியா அழுதபடியே காரில் ஏறினாள்.
இனியனின் கண்ணுக்கு காரின் பின் சீட்டில் அழுதபடி அமர்ந்திருந்த பொன்னியும் தெரிந்தாள்.

'இந்த கொலைக்கார குடும்பம்தான் என் அம்மாவோட வாழ்க்கையையே அழிச்சவங்களா..? உங்க ஒருத்தரை கூட நான் சும்மா விட போறதில்ல..' என தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டான்.

அங்கிருந்த கூட்டம் சிறிது நேரத்தில் கலைந்து போனது. இனியன் மட்டும் அங்கேயே சிலையாக நின்று விட்டான்.

சற்று நேரத்திலேயே அவனுக்கு சக்தியின் அபாய நிலை புத்தியில் வந்து உரைத்தது. ஒருபுறம் கோபமும் மறுபுறம் அம்மாவின் நிலையால் உருவான பயமும் அவனை சரியாக யோசிக்க கூட விடவில்லை 'அம்மாவுக்கு ஒன்னும் ஆக கூடாது..' குழப்பத்திலிருந்து அவன் வெளிவரவே வெகுநேரம் ஆனது. அடுத்து என்ன செய்வதென யோசித்தான். அம்மாவை பார்க்க அவன் மனம் துடித்தது. ஆனால் எந்த மருத்துவமனைக்கு அம்மாவை கொண்டு சென்றார்கள் என அவனுக்கு தெரியவில்லை. அறியாத ஊரில் மருத்துவமனைகள் எங்கிருக்கும் என்றும் அவனுக்கு தெரியவில்லை.

ஆனால் அவன் துடித்த துடிப்பை பார்க்க இயலாத விதியே நேரில் வந்தது போல அங்கு ஸ்கூட்டியில் வந்தாள் வனஜா. அவளோடு நிறைய முறை வீடியோ கால் பேசியுள்ளான் இனியன். அதனால் சட்டென தன் தொப்பியை முன்பக்கம் நன்றாக இழுத்து விட்டுக் கொண்டான். சுவற்று பக்கம் திரும்பி நின்று கொண்டான்.

வனஜா வீட்டு கேட்டின் முன் தன் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி கேட்டின் அருகே இருந்த காலிங்பெல்லை பலமுறை ஒலித்தாள். உள்ளிருந்து வீரய்யா ஓடி வந்தான்.

"இந்த பைலை சக்திக்கிட்ட கொடுத்திடுங்க வீரய்யா.. ஸ்டேசன்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டா.. என் வேலையே எனக்கு தலைக்கு மேல இருக்கு.. இதுல சக்தி வேற எனக்கு இன்னும் வேலைகளை அதிகமா வைக்கிறா.." வனஜா புலம்பிக் கொண்டே பைலை நீட்டினாள்.

"சக்தி அம்மாவை யாரோ கத்தியால குத்திட்டாங்க.. அவங்களை ஜி.எச் க்கு கூட்டிப் போயிருக்காங்க.." வீரய்யா கண்களில் கசிந்த ஈரத்தை துடைத்துக் கொண்டே சொன்னான். வனஜா பேயறைந்தார் போல் ஆகி விட்டாள்.

"சக்தியையா..? யார் அந்த பரதேசி..?" என கோபமாக கேட்டாள் வனஜா.

"எனக்கும் தெரியாதும்மா.. மகேஷும் சக்தியும் தோட்டத்துல பேசிட்டுதான் இருந்தாங்க.. திடீர்ன்னு மகேஷ் எங்க எல்லோரையும் சத்தம் போட்டு கூப்பிட்டாரு.. போய் பார்த்தா சக்தியோட கழுத்துல கத்தி பட்ட காயம் இருந்தது.. ரத்தம் நிறைய போயிடுச்சி.. அதனால்தான் எனக்கும் ரொம்ப பயமா இருக்கு.."

அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டு இனியனின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. 'அம்மாவோட கழுத்துல எப்படி கத்தி குத்திருக்கும்.. கண்டிப்பா இது மகேஷ் பண்ண வேலையாதான் இருக்கும்.. அவன்தான் அம்மாவை கொல்ல முயற்சி பண்ணிருக்கான்.. அவனை இதுக்கு மேலயும் உயிரோடு விட்டு வச்சா அது அம்மாவுக்கு பெரிய ஆபத்தா முடிஞ்சிடும்..'

"நான் சக்தியை போய் பார்க்கறேன் வீரய்யா.." என்ற வனஜா தன் ஸ்கூட்டியை வேகமாக கிளப்பி சென்றாள்.
இனியன் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். என்ன செய்வதென தெரியவில்லை. ஆனால் மகேஷை கொல்ல வேண்டும் என்பது மட்டும் நன்றாக புரிந்தது. அம்மாவை பார்க்க செல்ல வேண்டுமென மனம் கூப்பாடு போட்டது. ஆனால் அவளை அந்த ஒரு நிலையில் எப்படி பார்க்க முடியும் என மனம் தவிக்கவும் செய்தது.

அவன் வெகுதூரம் வந்தபிறகு ஒரு ஆட்டோ அவனை கடந்து சென்றது. அனிச்சையாக கையை நீட்டி ஆட்டோவை நிறுத்தியவன் ஆட்டோ நின்றபிறகே கவனித்தான் ஆட்டோவில் அவனது தாத்தா அமர்ந்திருந்ததை.

"எங்கே போகணும்ப்பா..?" என்றார் ஆட்டோகாரர்.

"என் பொண்ணு ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிட்டு இருக்காப்பா.. நீ என்னன்னா சவாரி பிடிக்கற.. நான் உனக்கு வேண்டிய பணத்தை தரேன்.. சீக்கிரம் கிளம்புப்பா.." என்றார் சக்தி அப்பா.

"என்னை ஜி.எச்ல இறக்கி விட்டுடுங்க.." என மெல்லிய குரலில் கூறியவன் சட்டென ஏறி ஆட்டோவில் அமர்ந்தான்.

சக்தி அப்பா பதட்டத்தில் இருந்தார். அதனால் முகம் மறைத்து தொப்பி அணிந்து தன் அருகே தன் பேரன் அமர்ந்திருப்பதை கவனிக்காமல் விட்டு விட்டார். இனியனும் அவரிடம் தன்னை காட்டிக் கொள்ள விரும்பவில்லை. இங்கு அவன் வந்த விசயத்திற்கு எந்த ஒரு உறவும் தடையாக இருக்க கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.

மருத்துவமனை அருகே ஆட்டோ நின்றதும் சக்தி அப்பா இறங்கி வேகமாக மருத்துவமனை நோக்கி நடந்தார்.
"யோவ் பெரிசு.. காசை கொடுத்துட்டு போயா.." என கத்தினார் ஆட்டோகாரர்.

ஆனால் அவர் அதற்குள் மருத்துவ மனைக்குள் நுழைந்து விட்டார். அவரை பின் தொடர முயன்ற ஆட்டோகாரரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் இனியன். அவர் கையில் காசை வைத்தவன் "இதுல இரண்டு பேருக்கும் இருக்கு.." என்றான்.

ஆட்டோகாரர் பணத்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கிளம்ப இனியன் மருத்துவமனைக்குள் நுழைந்தான். எங்கே சென்று விசாரிப்பது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவன் கண்களில் சந்தியா தூரத்திலிருந்து வருவது தெரிந்தது.

"இவ அந்த வீட்டு பொண்ணுதானே.. இவளை பாலோவ் பண்ணா அம்மா இருக்கற இடம் தெரிஞ்சிடும்.."
சந்தியா அவனை தாண்டிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள். "இங்கே எங்க போறா..?" குழப்பத்தோடு பின் தொடர்ந்தான்.

வாசலில் நின்று மருத்துவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த மூர்த்தியிடம் ஓடினாள் சந்தியா. "அப்பா உங்க பிரெண்ட்ஸ் யாருக்காவது ஏ நெகடிவ் இருந்தா உடனே இங்கே வர சொல்லுங்க.. அத்தைக்கு ப்ளட் நிறைய போயிடுச்சி.. இங்கே ஸ்டாக்குல இருந்த ப்ளட்டும் காலியாம்.." என்றாள் மூச்சிறைக்க.

அவர் சரியென தலையசைத்து விட்டு தன் போனை எடுத்தார்.

சந்தியா மீண்டும் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தாள். சக்தியின் அறையை நோக்கி நடந்தவளை "மேடம்.." என்ற ஒரு குரல் தடுத்தது. குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். முகத்தில் கர்ச்சீப் கட்டி தொப்பி அணிந்திருந்தவனை இதற்கு முன் பார்த்ததாக அவள் நினைவில் இல்லை. அதனால் குழப்பத்தோடே அவனருகே வந்தாள்.

"என்னோடதும் ஏ நெகடிவ்தான்.. நான் வேணா அவங்களுக்கு ப்ளட் டொனேட் பண்ணட்டா..?" என்றான் இனியன்.

"ப்ளீஸ்.. இந்த உதவியை செஞ்சா எங்க மொத்த குடும்பமும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கும்.." என கையெடுத்து கும்பிட்டவளை நம்பமுடியாமல் பார்த்தான் இனியன்.

'மொத்த பேமிலியும் நடிப்புல ஆஸ்கார் வாங்கிடுவாங்க போல..' என நினைத்தவன் அம்மாவின் உயிரை கருத்தில் கொண்டு அவளோடு இணைந்து நடந்தான்.

ஐ.சி.யூ வின் வெளியே மகேஷ் பைத்தியம் போல உலாவிக் கொண்டிருந்தான். உள்ளிருந்து ஒரு செவிலியை வெளியே வந்தாள். "ப்ளட்டுக்கு ஏற்பாடு பண்ணிங்களா இல்லையா..?" என்றாள் அவசரமாக.

மகேஷ் பேச முயலும்முன் "இதோ இவருக்கும் அதே குரூப்தான்.." என்றபடி அங்கு வந்தாள் சந்தியா.

நர்ஸ் இனியனை அழைத்து சென்றாள். "யார் அது..?" என்றான் மகேஷ்.

"தெரியல மாமா.. அத்தைக்கு ப்ளட் தேவைன்னு தெரிஞ்சி டொனேட் பண்ண வந்திருக்காரு.." என்றாள் சந்தியா.
பொன்னி இருக்கை ஒன்றில் அமர்ந்து அழுதுக் கொண்டே இருந்தாள். அவளருகே அமர்ந்து கூரையை பார்த்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் சக்தி அப்பா.

"இதுக்கு கண்டிப்பா உங்க அப்பாதான் காரணம்.." என்ற பொன்னி அதிகமாக அழ ஆரம்பித்தாள்.
"அழாதிங்க பாட்டி.." அவளை தேற்ற முயன்றாள் சந்தியா.

மகேஷ்க்கும் அதே சந்தேகம்தான். அப்பாவை தவிர இந்த வேலையை யாரும் செய்திருக்க முடியாது என அவன் மனம் அடித்து சொன்னது.

'இவரெல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா வாழுறாரோ தெரில..அவரும் நிம்மதியா இருக்க மாட்டாரு.. மத்தவங்க நிம்மதியா இருந்தாலும் பிடிக்காது.. என் தலைவிதி இவருக்கு மகனா பிறக்கணும்ன்னு.. அவக்கிட்ட பெரிய இவனாட்டம் சொன்னேன் 'நம்ம புள்ளையை காப்பாத்துவேன்'னு.. ஆனா அவளுக்கே என் சொந்த வீட்டுல பாதுகாப்பு தர முடியாத அளவுக்கு இருந்திருக்கேன் நான்.. இதோட இரண்டாவது.. இல்ல மூணாவது முறையா என் இடத்துலயே என் பொண்டாட்டிக்கு பாதுகாப்பு இல்லாம போயிருக்கு.. ஊருக்கே ரவுடி.. ஆனா பொண்டாட்டியை காப்பாத்தவே துப்பில்ல.. கண்ணை முழிச்சி பார்த்ததும் என் மூஞ்சி மேலயே துப்ப போறா.. இதுதான் நீ பாதுகாக்குற லட்சணமான்னு..?'

தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவனின் அருகே வந்து அமர்ந்தாள் சந்தியா. "பயப்படாதிங்க மாமா.. அத்தைக்கு ஒன்னும் ஆகாது.." என்றவளுக்கு மகேஷின் நிலை கண்டு கண்களில் கண்ணீர் வந்தது.

அவளை திரும்பி பார்த்தான் மகேஷ். அவளது கண்ணீர் கண்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். "நீ பயப்படாம இரும்மா.. அவளுக்கு ஒன்னும் ஆகாது.. எந்த எமனாலும் என்னை தாண்டி அவளை கொண்டு போயிட முடியாது.." என்றவன் அவளது கேசத்தை வருடி தந்தான்.

இனியன் ரத்தத்தை தந்து விட்டு வெளியே வந்தான். மறக்காமல் கர்ச்சீப்பை நன்றாக கட்டிக் கொண்டான். வெளியே வந்தவனின் கண்களில் மகேஷும் சந்தியாவும் இணைந்து அமர்ந்திருப்பது தெரிந்தது.

ஆகாத பெண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்ற கணக்காக மகேஷ் மேல் வெறுப்பில் இருந்த இனியனுக்கு மகேஷ் வேதனையோடு அமர்ந்திருப்பது கூட சந்தியாவோடு காதல் செய்து கொண்டு அமர்ந்திருப்பது போல தோன்றியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top