என் நெஞ்சுநேர்பவளே -10

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
10

மலர்கள் நிறைந்திருந்த நந்தவனம் ஒன்றில் தனியாய் அமர்ந்திருந்தாள் ரதி.. மலர்கள் வண்ணத்தில் சிந்திய வாசனையில் மயங்கி மலர்ந்திருந்த வேளை வந்தான் ஆதிரன்... புன்னகை முகமாய் குறும்பு கண்களாய் இவளிடம் வந்தவனை விழி விரித்து அண்ணாந்து பார்த்திருந்தாள் ரதி..

மயக்கும் கண்ணனாய் இவளை பார்த்து கண்ணடித்தான் ஆதி.. மெதுவாய் இவள் கை பற்றி எழுப்பினான்.... ஒற்றை விரலால் இவள் நாடி பற்றி "ஆருசெல்லம் என் மேல கோவமா... " என்று காதலை குழைத்து கேட்க, இவள் பேதையாய் இல்லையென தலையசைத்தாள்..

"நான் பண்ண தப்புக்கு நீ கோவமா இல்லைனாலும் நான் மன்னிப்பு கேட்கணுமே ஆரு... "என்றவன் பிடித்திருந்த நாடியை இவன் இதழ் நோக்கி இழுக்க அதுவோ அம்சமாய் அதன் இடத்தில் பொருந்திக் கொள்ள,
வியர்க்க விறுவிறுக்க படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தந்தாள் ஆரதி...

'ஹய்யோ.... ச்ச... இப்படி ஒரு கனவா... அடியே ரதி கனவுல கூட உனக்கு கோவப் படத் தெரியாதா... அவன் பாட்டுக்கு கிட்ட வரான்.. தொட்டு பேசறான்.. முத்தம் வேற குடுக்கறான்... இப்படி மயங்கி போய் நிக்கறியே... கொஞ்சமாச்சும் சூடு சொரணை வேண்டாம்.. 'என்று புலம்பிகொண்டு லேசாய் உதட்டை தொட்டுப் பார்க்க இன்னும் ஈரம் இருப்பதாய் ஒரு உணர்வு...

தலையை சிலுப்பிக் கொண்டவள், இப்படி மட்டும் நேருல நடக்கட்டும் மண்டையை ஒடச்சறேன்.... என்று இவள் நினைக்க, மனசாட்சியோ 'ம்க்கும் இங்க அவன் பார்க்க கூட இல்லையாம்.. இதுல முத்தம் வேற குடுப்பானாம்.. இவள் அடிப்பாளாம்.. ரொம்ப கனவு காணாத' என்று நச்சென்று கொட்டு வைக்க, வலிக்காத தலையை மானசீகமாக தடவிக்கொண்டே மணியை பார்த்தாள்..
காலை ஐந்து மணி..

"ப்ச் விடிய இன்னும் வெகு நேரம் இருக்கே... "என்று மீண்டும் போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு படுத்தாள்...

கண் மூடிய மறு நிமிடம் அந்த கனவு மீண்டும் நியாபகம் வர சட்டென்று எழுந்து விட்டாள்... 'படுத்தறானே...இனி தூங்குன மாதிரி தான் ' என்று நினைத்தவள் எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்தாள்...

சமையல் அறையில் மீனா வேலையாய் இருக்க, ரதி வெளியே வராண்டாவில் அமர்ந்தாள்... போனை எடுத்து ரஞ்சிக்கு அழைத்தாள்...

விஜய் தேவர்கொண்டாவுடன் ஜாலியாய் டூயட் பாடிக் கொண்டிருந்த ரஞ்சியின் காதில் போன் அடிக்கும் சத்தம் கேட்கவே, கண்ணை திறக்காமலே அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்,

"ஹலோ இங்குட்டு ரஞ்சி... அங்குட்டு யாரு.... "

"எரும மாடே நான் ரதி பேசுறேன்... "

"ஏண்டி நாயே மிட்நைட்ல போன் பண்ணிருக்க... "

"அடியே மணி அஞ்சு ஆச்சு... இது உனக்கு மிட்நைட்டா... "

"உனக்கே எட்டு மணிக்கு தான் விடியும்.. இப்ப என்ன புதுசா வேய்க்காணம் பேசுற... "

"அதெல்லாம் அப்பிடி தான்... சரி கிளம்பி வா ஜாக்கிங் போகலாம்... "

"எது ஜாக்கிங்கா... சாவடிச்சுருவேன்... மூடிக்கிட்டு தூங்குடி.. நான் போய் என் டார்லிங்கோட டூயட் பாட போறேன்.. "

அதில் கடுப்பான ரதி "எவங்கூட எரும டூயட் ஆடப் போற.. "என்று கேட்க,

தன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிய கடுப்பில் "எல்லாம் அந்த தண்ணி பார்ட்டி கூட தான்.. "என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்... 'எருமை கனவை களைச்சு விட்டுருச்சு.. சரி திரும்ப மொதல்ல இருந்து ஆடுவோம்... 'என்று தூக்கத்தை கண்டின்யூ செய்தாள்..

இங்கு ரதி பயங்கர கடுப்பாகி தன் வீட்டிற்கு எதிர் வீட்டின் உள்ளே சென்றாள்... இவளை கண்ட ரஞ்சியின் அம்மா வேணி "என்னடி காலைலயே உங்க அக்கப்போரை ஆரம்பிச்சுடீங்களா.. "

"அத்தை அந்த பிசாசு என்னை ஓவரா கடுப்பேத்திட்டா... அவளை கவனிச்சுட்டு வரேன்.. எனக்கு ஒரு கப் டீ மட்டும் போட்டு வைங்க வந்திறேன்..." என்றுவிட்டு ரஞ்சியின் அறைக்கு சென்றுவிட்டாள்...

"ஆளு தான் வளந்துருக்காளுக.. இன்னும் சின்ன புள்ளைகளாட்டம் சேட்டை.. "என்று நினைத்தாலும் முகம் மட்டும் புன்னகையில் இருந்தது...

வேணியின் கணவர் வெற்றியும் ரதியின் அப்பா திருவும் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்... நல்ல நண்பர்கள்.. ரஞ்சி பன்னிரண்டாவது முடித்து கல்லூரி சேர இருந்த சமயம் வெற்றி மாரடைப்பில் இறந்துவிட ரொம்பவே துவண்டு போனார் வேணி... ரஞ்சியும் அவள் தம்பி அபிநவும் தந்தையின் இழப்பில் விக்கித்து போய் நின்றனர்...

அந்த நேரத்தில் துணை நின்றது திருவும் அவரது குடும்பமும் தான்.... அதில் ஆரதியின் பங்கு நிறையவே இருந்தது.. இறுகி போய் இருந்த தன்னையும் துவண்டு போய் இருந்த ரஞ்சியையும் அபியையும் தன் குறும்பால் சேட்டைகளால் சிரிக்க வைத்த ரதியின் மீது அதிக பாசம் வைத்திருந்தார் வேணி...

வெற்றி இறந்து சில மாதங்கள் கழித்து அவருடைய வேலை வேணிக்கு கிடைக்க, தன் குழந்தைகளின் நலனுக்காய் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.. இதற்கிடையில் திரு வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே தங்க வைத்து அவர்களுக்கு துணையாய் இன்றளவும் இருக்கின்றனர் திருவும் மீனாவும்...

ரதியோடு ரஞ்சியும் நல்ல நட்பாய் மாறினர்... சுபி ரதியை விட மீனாவுக்கு ரஞ்சி அபி தான் செல்லம்.... அதே போல் தான் மீனாவுக்கும்...

இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு எங்கு தன் பொறுப்பில் வந்து விடுவார்களோ என்று சொந்தங்கள் பட்டும் படாமல் விலகிக் கொள்ள திருவின் குடும்பம் மட்டுமே இன்றளவும் உற்ற துணையாய் இருந்து வருகிறார்கள்...

எப்பொழுதும் சொல்வது போல் சிறந்த நட்பை விட ஒருவருக்கு பெரிய சொத்து ஏதுமில்லை....

சரிதான் இந்த ரதி வேகமா உள்ள போனாளே அங்க என்ன ரணகளமோ...

உள்ளே ரஞ்சி நன்றாய் இழுத்து போர்த்தி உறங்கிக் கொண்டிருக்க, வேகமாய் வந்த ரதி ரஞ்சியின் மேல் பொத்தென்று அமர அலறியடித்து எழுந்தாள்...

"ஏண்டி பிசாசே... அறிவுகெட்ட முண்டமே. ஐயோ இடுப்பை ஒடச்சிட்டாளே.. ஏண்டி உனக்கு இந்த கொலைவெறி... "என்று பாய்ந்தாள் ரஞ்சி...

"பின்ன நீ பாட்டுக்கு கனவு கண்டுட்டு இருப்ப.. நான் வேடிக்கை பார்க்கணுமா..."

"பைத்தியமாடி நீயி.... என் இடுப்பை ஒடச்சதும் இல்லாம இப்படி ஒளறிக்கிட்டு இருக்க... "

"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ கனவு காணக்கூடாது... அவ்வளவுதான்."

" என் கனவு என்னோட இஷ்டம்.... நான் கனவு காண்பேன் உனக்கு என்னடி பிரச்சனை..? "

" ஒன்னும் பண்ண மாட்டேன் தூங்க விடமாட்டேன் அவ்வளவுதான்."

"இது என்னடி உன் கூட பெரிய வம்பா இருக்கு.. என்னோட விஜய் கூட நான் கனவு காண்பேன் டூயட் படுவேன்.. கட்டிப்புடிச்சு கூட தூங்குவேன்..நீ ஏன் பொங்குற... "

" யாருடி அது விஜய்???"

" மை டார்லிங் விஜய் தேவர்கொண்டா... ஏன் உனக்கு தெரியாதா..."

" அப்போ அவன்....? "

" எவன்...? "

" அதான் அந்த தண்ணி பார்ட்டி.. மண்டபத்தில் பார்த்தோமே அவன்..."

" அட ச்சீ சும்மா உன்னைய வெறுப்பேத்த சொன்னேன்... ஆமா அவனப் பத்தி சொல்லும் போதெல்லாம் உனக்கு ஏன் பொங்குது அவனை முன்னாடியே தெரியுமா..."என்று ஆராய்ச்சி பார்வை பார்த்து வைக்க, சுதாரித்த ரதி,

" ஹான்... எனக்கு ஏன் பொங்குது... எனக்கு அவன் யாருன்னே தெரியாதே... சரி சரி ஆள விடு எனக்கு தூக்கம் வருது.." என்று இழுத்துப் போர்த்தி படுத்து விட, ரஞ்சிக்குத்தான் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது...

அப்போது வேணி உள்ளே வந்தார் "என்னடி காலையிலேயே அவகிட்ட பிரச்சனை பண்ற..."

"யாரு நானு....அதும் இவகிட்ட... அடப்போமா நீ வேற... "

"சரி இன்டெர்வியூ போகணும்னு சொன்னீங்களே... என்னைக்கு போறீங்க.. "

"நாளைக்கு போகணும்மா... "

"சரி சரி.... நீயும் தூங்கு... "என்று விட்டு தன் வேலையை கவனிக்க சென்றார்... ரதியோ அதற்குள் நன்றாய் உறங்கி விட்டிருக்க,

"எருமை தூங்குறத பாரு.. சரி நாமும் விட்டத கண்டின்யூ பண்ணுவோம்... விஜய் டார்லிங்... "என்று அவளும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்...

மறுநாள் காலை....

"ரதி..... அடியே இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க... "

"ப்ச் இருடி குளிச்சுட்டு தான் இருக்கேன்.. இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறு.."என்று குளியல் அறைக்குள் இருந்து ரதி சொல்ல,

"இப்படி தாண்டி பக்கி அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்க... சீக்கிரம் வந்து தொலை.. இன்டெர்வியூக்கு லேட்டாச்சு... "என்று வெளியில் இருந்து கத்தினாள் ரஞ்சி...

"நீ என்ன காட்டு கத்து கத்தினாலும் அவ பத்து நிமிசத்துக்கு குறையாம வெளிய வர மாட்டா... நீ ஏன் உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ற ரஞ்சு.. "

"இது தெரிஞ்சு தான் சுபிக்கா பத்து மணி இன்டெர்வியூவை ஒன்பது மணிக்குன்னு சொல்லி வச்சிருக்கேன்.. "

"வெவரம் தாண்டி.... அது சரி இந்த வேலையாச்சும் கிடைக்குமா.. "என்று சந்தேகமாய் கேட்டு வைத்தாள் சுரபி..

"என்னக்கா பண்ண!!! இந்த பக்கி பண்ற கூத்துக்கு எல்லாரும் கால்ல விழுந்து கெஞ்சாத குறையா தொரத்தி விட்றானுங்க... இன்னைக்கு அப்பிடி எதும் பண்ணாதடின்னு கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வச்சிருக்கேன்.. போனா தான் தெரியும்... என்ன நடக்கும்னு... "

"ஹாஹாஹா.... ஆல் த பெஸ்ட் டி. அடி வாங்காம திரும்பி வரதுக்கு... "என்று சுபி சொல்லவும் ரதி வெளியே வரவும் சரியாக இருந்தது...

"ஓய் சுறாப்புட்டு.. கிண்டலா பண்ற.. இந்த வேலைய வாங்காம வீட்டுக்கு திரும்பி வர மாட்டேன்... "என்று வீர வசனம் பேச,

"அப்போ ரஞ்சி இன்னைக்கு நடு ரோடு தான்... "

"ஏய் சுறாபுட்டு.. "

"என்னடி வேகாத சோளக்கருதே... "

"ஏய்... "

"ஏய்...."

"ஐயோ... முடில... ரெண்டு பேரும் நிறுத்துங்க.. தயவு செஞ்சு கெளம்புடி ரதி.... "

"உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன் சுறாபுட்டு.. "என்றுவிட்டு அடுத்த பத்து நிமிசத்தில் கிளம்பி இருந்தனர்...


அரைமணி நேரத்தில் ஈரோட்டில் இருக்கும் வளர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் வாயிலில் தன் வண்டியை நிறுத்தியிருந்தாள் ரதி...

'ஆராதனை டெகரேஷன் அண்ட் வெட்டிங் பிளானர்' என்ற பெயர்பலகையுடன் சிறியதாய் இருந்தாலும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த முகப்பு பக்கத்தை ரசித்துக் கொண்டிருந்த ரஞ்சியை சுரண்டிய ரதி,

"என்னடி நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்துல கோர்த்து வுட்டுருக்க.. நாம படிச்ச பி.காமுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லையே.. அதோட நமக்கும் ரசனைக்கும் வெகு தூரம் ஆச்சே... "

"இல்லடி இங்க டேட்டா என்ட்ரிக்குத் தான் ஆள் எடுக்கறாங்க.. அதுவும் இல்லாம ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே ரொம்ப பேமஸ் ஆகிட்டாங்க இவங்க.. "

"அதெல்லாம் சரி.. உனக்கு இந்த ஜாப் பத்தி யாரு சொன்னா... "

"நம்ம அருவி கல்யாணத்துக்கு போனோம்ல.. அப்ப அருவி தான் சொன்னா... அவளுக்கு தெரிஞ்சவங்க தான் இவங்களாம்... எதுக்கும் ட்ரை பண்ணி பாருங்கன்னு சொன்னா... "என்று ரஞ்சி விவரம் சொல்ல இவள் எங்கே இதையெல்லாம் கவனித்தாள்.. ரதியின் கவனமெல்லாம் அந்த திருமணத்திலேயே நின்றுவிட்டிருந்தது.. அதோடு காலையில் வந்த கனவும்..

சிலையாய் நின்ற ரதியை "வா உள்ள போகலாம்.. "என்று இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் ரஞ்சி....

உள்ளே வரவேற்பில் இருந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு எம் டி அறைக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்... வெளியில் இருந்து பார்க்கும் போது கட்டிடம் சிறியது போல் இருந்தாலும் உள்ளே ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது ஐந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்...

ரதி"ஹே என்னடி இவ்ளோ பெரிய கம்பெனியா இருக்கு... இங்க அக்கௌன்ட் டிபார்ட்மென்ட்லாம் தனியா இருக்கே..இங்க எக்ஸ்பிரியன்ஸ் உள்ள ஆளுங்கள தானடி எடுப்பாங்க... வாடி அவங்க போக சொல்லும் முன்னாடியே வெளிய போயிரலாம்... "

ரஞ்சி "எனக்கும் டவுட்டா தான் இருக்கு.. வந்ததும் வந்துட்டோம்..... பார்த்துட்டு போயிரலாம்... "

அப்போது எம்டி அறையில் இருந்து வெளி வந்த ஒரு பெண் "சார் வர சொன்னாங்க... ரெண்டு பேரும் உள்ள போங்க.."என்று சொல்லிவிட்டு சென்றுவிட இருவரும் உள்ளே செல்ல, அங்கு இருந்தவனை பார்த்ததும் அதிர்ந்து நின்றனர் இருவரும்..

'அடிப்பாவி பக்கி மாடே யாருகிட்ட வந்து கோர்த்து விட்டிருக்க... 'ரதியின் மைண்ட் வாய்ஸ்...

'ஐயோ தண்ணி பார்ட்டி... போச்சு இன்னைக்கு எதை ஊத்தப் போறாளோ..' ரஞ்சியின் மைண்ட் வாய்ஸ்...

அப்பிடி இருவரின் பதற்றத்திற்கு காரணமான ஆதிரனோ கூலாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.. பக்கவாட்டில் கார்த்தி அமர்ந்திருந்தான்..

'ஹய்யோ இப்பவே மரண பீதியா இருக்கே... ஆதி பயத்தை காமிச்சுக்காதே... ஸ்டெடி ஸ்டெடி...'என்று மனதில் சொல்லிக்கொண்டாலும் வெளியில் கெத்தாக "எஸ் என்ன வேணும்? "என்று ரதியை பார்த்து கேட்க அவள் அவனை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டு நின்றாள்...

இது சரி வராது என்று நினைத்த ரஞ்சி "சார் இங்க ஜாப் வேகண்ட் இருக்குன்னு சொன்னாங்க.. அதனால் தான் இன்டெர்வியூக்கு வந்தோம்.. "

"ஓ... சரி உக்காருங்க.... "

விறைத்துகொண்டு நின்ற ரதியையும் இழுத்துக் கொண்டு தங்கள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ரஞ்சி...

"ஓகே உங்களை இண்ட்ரட்யூஸ் பண்ணிக்குங்க.. "என்று ஆதி சொல்ல ரதி கார்த்தியை முறைத்தாள்...

"டேய் ஏன்டா "என்பது போல் ஆதியை பார்த்தான்.. அவன் அசராமல் ரஞ்சியிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டான்..

"அபரஞ்சி..பிகாம் சார்... "

"ஓகே.. மிஸ் உங்க பெரு... "என்று ரதியை பார்த்து கேட்க,

"ம்ம்ம்... குப்பாத்தா... "என்றாள் ஏக கடுப்பில்..

"நைஸ் நேம் "விடாமல் இவனும் சிக்ஸர் அடித்தான்..

"என்ன படிச்சிருக்கீங்க... "

"ஒண்ணாவது பெயிலு... "

இப்போது சட்டென சிரித்து விட்டிருந்தான் கார்த்தி... ரதி முறைப்பதைக் கண்டு வாயை இருக மூடிக் கொண்டான்...

ரஞ்சியோ "என்னடா நடக்குது இங்க.." பார்வை தான்...

"சாரி கேர்ள்ஸ்.. இப்போ தான் அக்கௌன்ட் டிபார்ட்மென்ட்க்கு ஆள் எடுத்து முடிச்சோம்.. அதனால் "

"ரொம்ப சந்தோசம்... ஏய் வாடி இங்க வேலை இல்லையாம்... "என்று ரதி எழுந்து விட்டிருக்க,

"மிஸ் பொறுமை.... அக்கௌன்ட் டிபார்ட்மென்ட்ல தான் வேலை இல்லைனு சொன்னோம்.. பட் ஈவென்ட் ஆர்கனைசிங்ல வேகன்ட் இருக்கு.. நீங்க நாளைல இருந்து ஜாயின் பண்ணிக்குங்க.... "

ஏதோ மறுத்து சொல்ல முயன்ற ரதியை தடுத்த ரஞ்சி "தேங்க்யூ சார்... "

"இட்ஸ் ஓகே ரஞ்சி...உங்க டீடெயில்ஸ் இவர் கிட்ட குடுத்துருங்க... "என்று கார்த்தியை காட்டியவன், ஆரதியின் அருகில் வந்து "ஆரு "என்றழைத்து அவளை நோக்கி குனிய, அருகில் இருந்த பூச்சாடியை எடுத்து அடித்திருந்தாள் ஆதியின் தலையில்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN