நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இணைந்து அமர்ந்திருந்த மகேஷையும் சந்தியாவையும் வெறுப்போடு பார்த்தான் இனியன்.

'என் அம்மாவையே இப்படி சுய நினைவு இல்லாம ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிட்டிங்க இல்ல.. இருங்க உங்க எல்லோரையும் நான் பைத்தியக்கார ஹாஸ்பிட்டல சேர வைக்கிறேன்..' என கடுப்போடு நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.

சந்தியா தூரத்தில் செல்லும் இனியனை கண்டு மகேஷின் கை அணைப்பிலிருந்து விலகி எழுந்தாள். மகேஷ் சக்தியின் நினைவில் மூழ்கியிருந்ததால் சந்தியாவை பற்றி கண்டுக் கொள்ளவில்லை.

இனியன் கால் போன போக்கில் நடந்தான். படியில் இறங்கி கொண்டிருந்தவன் பாதியிலேயே தலையை பிடித்தபடி படியிலேயே அமர்ந்து விட்டான்.

'இவங்களை சாதாரணமா கொல்ல கூடாது.. அப்படியே ஒவ்வொருவரும் மனசுக்குள்ளயே அணு அணுவா சாகற மாதிரி ஏதாவது செய்யணும்.. என் அம்மா கண் விழிச்சி பார்க்கும்போது அந்த வீட்டுல மனுசங்க இருக்க கூடாது.. உள்ளுக்குள்ள உடைஞ்சி போன ஜடங்கள்தான் இருக்கணும்..'

அவனது யோசனையை கலைக்கும் விதமாக அவனது தோளில் விழுந்தது ஒரு கை.

நிமிர்ந்து பார்த்தான். சந்தியா நின்றுக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் சுவர் பக்கம் முகத்தை திருப்பி கொண்டான். சந்தியா அவனருகே அமர்ந்தாள்.

"உங்க வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லையா..? அதனால்தான் இவ்வளவு சோகமா இருக்கிங்களா..?" என்றாள்.

இல்லையென தலையசைத்தவன் அவள் பக்கம் திரும்பினான். "நான் ரத்தம் தந்தேனே அவங்களுக்கு என்ன ஆச்சி..?" என்றான் அறியாதவன் போல.

"எங்க அத்தையை யாரோ கத்தியால் குத்திட்டாங்க.." என்றவள் விழியில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

'மொத்த குடும்பமும் நல்லா நடிக்குது.. அதனால்தான் எங்க அம்மா ஏமாந்து இருக்காங்க..'

"கத்தியால குத்திட்டாங்களா..? எப்படி எங்கே..?" என்றான் அதிர்ச்சியோடு.

"எங்க வீட்டு தோட்டத்தில மாமாவும் அத்தையும் பேசிட்டு இருக்கும்போது யாரோ தூரமா இருந்து கத்தி வீசிட்டாங்க.. எங்க அத்தை ரொம்ப நல்லவங்க.. அவங்களை என் மாமா ரொம்ப விரும்புறாரு.. எங்க அத்தைக்கு ஏதாவது ஆனால் மாமா உயிரோடே இருக்க மாட்டாரு.." என்றவள் விம்மி விம்மி அழுதாள்.
அவளது அழுகையை தடுக்க மனதில் கூட நினைக்கவில்லை இனியன்.

'அவன் எங்க அம்மா இல்லன்னா செத்துடுவானா..? அவன் ஒரு துரோகி.. நீ ஒரு துரோகி..'
அவளாகவே அழுது முடித்துவிட்டு முகத்தை துடைத்தபடி நிமிர்ந்தாள்.

அவளது அழுகையை கூட தடுக்க நினைக்காதவன் அவளது அழுது வீங்கிய முகத்தால் தனக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடுவதை கண்டு ஆச்சரியமடைந்தான்.

"எங்க தாத்தாதான் ஆள் வச்சிருக்காரு.." என்று விம்மியபடி சொன்னவளை கூர்ந்து பார்த்தான் இனியன்.
இந்த விசயம் அவனுக்கு புதிதான ஒன்று. அதனால் அதன் மொத்த விவரத்தையும் அறிந்து விட முடிவெடுத்தான்.

"உங்க தாத்தாவா..?"

"ஆமா.. அவருக்கு எங்க அத்தை வேற சாதி ஆளுங்கறதால் பிடிக்காது.. எங்க அத்தையை அவர் எப்பவுமே ஏத்துக்கல.. அதான் எங்க மாமா அவர் பேச்சை மீறி கல்யாணம் கட்டிக்கிட்டு வந்துட்டதால எங்க அத்தையை கொல்ல முடிவு பண்ணிருக்காரு.. ஏற்கனவே கூட நிறைய முறை அத்தையை கொல்ல முயற்சி பண்ணி இருக்காரு.. ஆனா எங்க அத்தை அத்தனை முறையும் தப்பிச்சிட்டாங்க.. இந்த முறைதான் இப்படி ஆயிடுச்சி.."

'தாத்தா.. அடேய் கிழட்டு பயலே உனக்குதான்டி நான் முதல்ல பால் ஊத்த போறேன்..'

"உங்க தாத்தா இருக்கற வீட்டுல எப்படி உங்க அத்தையும் இருந்தாங்க.. உங்க அத்தை என்ன அவ்வளவு முட்டாளா..?" எரிச்சலாக கேட்டது அவன் குரல்.

"அத்தை எங்க மாமாவுக்காகதான் எங்க வீட்டுல தங்கவே வந்தாங்க.. எங்க அத்தை வந்ததும் தாத்தா எங்க மாந்தோப்புக்கு போயிட்டாரு.. தினமும் அங்கேயேதான் தங்கி இருக்காரு..." என்றவளுக்கு கடைசி வரையிலும் கூட ஏன் இதையெல்லாம் அறியாத ஒருவனிடம் சொல்கிறோம் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

"சந்தியா.." தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்கவும் சட்டென எழுந்து நின்றாள் அவள்.

"எங்க அப்பா கூப்பிடுறாரு.. நாம அப்புறம் பார்க்கலாம்.." என்றவள் திரும்பி நின்று மேல் படியை நோக்கி அடியெடுத்து வைத்தாள். ஆனால் அந்த நொடியே கால் இடறி பின்னால் சாய்ந்தாள்.

தடுமாறி விழுந்தவளை இனியனின் கரங்கள் அனிச்சையாக தாங்கி பிடித்தது. அவனது மடியில் உடல் சாய்ந்திருந்தவளின் இடுப்பில் ஒரு கையும் அவளது பின்னந்தலையில் ஒரு கையுமாக அவளை பத்திரமாக பிடித்திருந்தான் அவன்.

அவள் விழுந்த வேகத்தில் அவன் சற்று தடுமாறி பிடித்தான். அந்த தடுமாற்றத்தில் அவனது முகத்தில் கட்டியிருந்த கர்ச்சீப் அவனது கழுத்துக்கு வந்து விட்டிருந்தது.

அருகாமையில் அவனது முகம் பார்த்தவள் "வாவ்.. செம ஹேண்ட்ஸம்.." என்றாள் தன்னையும் மறந்து.
இனியனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. "என் மேல இருந்து எழ முடியுமா..?" என்றான் தன் முகத்தில் படந்த செம்மையை மறைத்தபடியே.

அவள் சுய நினைவுக்கு வந்து சட்டென அவனை விட்டு விலகி எழுந்து நின்றாள்.

"ஸாரி.." என்றவளுக்கு சரியென தலையசைத்தபடி எழுந்தான் இனியனும்.

"எனக்கும் வேலை இருக்கு.. கிளம்பறேன்.." என்றவன் கர்ச்சீப்பை மேல் இழுத்து கட்டிக் கொண்டு படிகளின் கீழ் நடக்க ஆரம்பித்தான்.

'எங்கேயோ பார்த்த முகமா இருக்கு.. ஆனா ரொம்ப அழகா இருக்கான்.. இவன் அளவுக்கு அழகான பசங்க இந்த வட்டத்திலயே இருக்க மாட்டாங்களே.. பிறகு எங்கேதான் இவன் சாயல்ல ஒருத்தனை நான் பார்த்திருப்பேன்..?' தனக்குள் குழம்பி போய் யோசித்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

"சந்தியா.." தன் அப்பாவின் குரல் மிக அருகில் கேட்டதில் துள்ளி விழுந்து திரும்பி பார்த்தாள்.

"ஏங்க அப்பா..?" என்றாள் நெஞ்சில் கை வைத்தபடி.

"ஆளை காணமேன்னு தேடி வந்தேன்.. இங்கே என்ன பண்ணிட்டு இருக்க..?"

"சும்மாதான்.. பிரெண்ட் ஒருத்தரை பார்த்தேன்.. அவங்க கூட பேசிட்டு இருந்தேன்.." என்றவள் மூர்த்தியோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.

இனியன் மாந்தோப்பு எங்கே இருக்கிறது என விசாரித்து மாந்தோப்பின் அருகே வந்தபோது இருள் நன்றாக சூழ்ந்து விட்டது. மாந்தோப்பின் அருகே வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென சுற்று சுவர் ஏறி உள்ளே குதித்தான்.

அவனது கால் மிதி பட்டு காய்ந்த மாவிலைகள் சலசலத்தன. சுற்றும் முற்றும் பார்த்தான். தூரமாக குடோன் ஒன்றை கண்டவன் அதனருகே சென்றான். உள்ளே விளக்கொளியில் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. தனது பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து கையில் தயாராக வைத்துக் கொண்டு குடோனின் ஜன்னல் அருகே சென்றான்.

"ஹஹாஹா.." என முத்து சிரித்தார். அவரின் முகம் பார்த்த மறு கணமே அவரை அடையாளம் கண்டு கொண்டான் இனியன்.

"அந்த சக்திக்கு அவ மனசுக்குள்ள மகாராணின்னு நினைப்பு.. ஆனா நான் இருக்கும் வரை எந்த ஆட்டமா இருந்தாலும் நான்தான் ஜெயிப்பேன்.. இதோ இதே இடத்துலதான் அவளுக்கு விஷம் கொடுத்தேன்.. அவ பிழைச்சிட்டா.. ஆனா என் குடும்பத்துக்கு கரும்புள்ளியான அவ குழந்தை செத்துடுச்சி.. எனக்கு அப்போதைக்கு அந்த வெற்றியே போதும்ன்னு பெரிய மனசோடு இருந்தா இவ பெரிய இவளாட்டாம் என் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வீட்டுக்கே வாழ வரா.. விடுவேனா நான்.. எத்தனை லட்சம் செலவானாலும் சரி.. அவ மட்டும் இந்த உலகத்துல உயிரோடு இருக்க கூடாது.." என்றவர் குடிப்போதையில் பேசிக் கொண்டிருக்க இனியன் சுட்டு விரல் துப்பாக்கியின் டிரிக்கரை இழுத்து விட பரபரத்தது.

அவர் எதிரே அமர்ந்திருந்தவன் அவரது பேச்சுக்கு தலையாட்டியபடி அமர்ந்திருந்தான். ஆனாலும் அவனது முகத்தில் சிறு வெறுப்பு இருந்தது.

"என் மகனுக்கு என் பேத்தியை கட்டி வைக்கணும்ன்னு நான் கணக்கு போட்டு வச்சிருந்தா அந்த சக்தி என் மொத்த சொத்துக்கும் அதிபதி ஆகலாம்ன்னு என் மகனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. இந்த வயசுல கூட என் மகனை மயக்கி இருக்கான்னா அவளோட திறமையை எப்படி வார்த்தையால சொல்ல முடியும்..?" அவர் சொன்னதை கேட்டு இனியனின் ரத்தம் கொதித்தது.

"இவ செத்து தொலையணும்.. அப்புறம் என் பேத்தியை என் மகனுக்கு கட்டி வச்சி நான் கண் குளிர பார்ப்பேன்.. எனக்கு இருக்குற சாதி வெறி ஏன் அவனுக்கு இல்லாம போச்சி.. ஒரு வேளை அவன் அம்மா.." அவர் மேலே சொல்லும் முன் விக்கல் குறுக்கிட்டது. அவர் அருகிருந்த தண்ணீரை குடித்தார்.

இனியனுடைய கோபம் தாங்க முடியாத அளவிற்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.

அவனது கையிலிருந்த நரம்புகள் கோபத்தில் புடைத்து கொண்டிருந்தன.

"ஐயா.. காசை தந்திங்கனா நான் கிளம்பிருவேன்.. நான் கத்தி வீசினது போலிஸ் மேல.. அதனால் யாரும் சும்மா இருக்க மாட்டாங்க.. என்னை யாராவது தேடி வரும் முன்னாடி நான் இந்த ஊரை விட்டு ஓடியாகணும்.." என்றான் அவரின் எதிரில் அமர்ந்திருந்தவன்.

'நீதான் எங்க அம்மாவுக்கே கத்தி வீசியவனா..?' அவனை ஆத்திரத்தோடு பார்த்தான் இனியன்.

"அதோ அந்த பீரோவை தள்ளினா உள்ளே ஒரு கதவு இருக்கும்.. இந்தா சாவி.." என்றவர் தன் இடுப்பிலிருந்த சாவியை எடுத்து அவனிடம் நீட்டினார்.

"அந்த கதவை திறந்து உள்ளே போனால் பணம் இருக்கும்.." என்றவர் போதை தலைக்கேறி கீழே சாய்ந்தார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்தவன் சாவியோடு எழுந்தான். பீரோவை தள்ளிவிட்டு கதவை திறந்து உள்ளே சென்றான். ஜன்னல் வழியாக பார்த்தபோதே இனியனுக்கு உள்ளிருந்த பண கட்டு கோபுரம் தெரிந்தது.

'உனக்கு ஜாதி வெறி மட்டுமில்ல.. பண வெறியும் இருக்கு..' என நினைத்துக் கொண்ட இனியன் எதிர் பார்த்தது போலவே அந்த கொலைக்காரன் அங்கிருந்த எல்லா பணத்தையும் மூட்டையில் கொட்டி கட்ட தொடங்கினான்.

'உனக்கெல்லாம் இப்படிதான் நடக்கணும்.. என் அம்மா சாக போறாங்கன்னு இங்கே நீ ஜாலியா சரக்கடிக்கிறியா..? இரு கிழவா.. உன் செல்ல பேத்தியோட வாழ்க்கையை உன் கண் முன்னாடியே சீரழிச்சி காட்டுறேன்.. அவளுக்காகதானே என் அம்மாவை சாகடிக்க துடிக்கற..? உன் பேத்திக்கு நான் தர போற தண்டனையில் நீங்க எல்லோருமே செத்து போகணும்.. உன்னை கொல்லலாம்ன்னு ஆசையா வந்தேன்.. ஆனா விடு பரவால்ல.. அதை விடவும் பெரிய தண்டனையை நான் உனக்கு ஆஃபர் பண்றேன்..'

பண மூட்டையை தூக்க முடியாமல் தூக்கி வந்தவனின் எதிரே வந்து நின்றான் இனியன். இவனை கண்டதும் அவன் ஒரு நொடி பயந்து நின்று விட்டான். ஆனாலும் நொடியில் சுதாரித்து தன் இடுப்பிலிருந்த கத்தியை கையில் எடுத்து அவன் முன் நீட்டினான்.

"என் வழியை விட்டு தள்ளி நில்லு சின்ன பையா.. நான் பயங்கரமான ஆளு.. ஒரே குத்துல உன் குடலெல்லாம் வெளியே வந்துடும்.." என்றவனை பார்த்து சிரித்த இனியன் தன் கையிலிருந்த துப்பாக்கியின் முனையை அவன் நெற்றிக்கு நேராக நீட்டினான்‌.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN